Showing posts with label திலீப் குமார். Show all posts
Showing posts with label திலீப் குமார். Show all posts

Dec 1, 2013

மௌனியின் கதையுலகம் – திலீப்குமார் – பகுதி 2

மௌனியின் கதையுலகம் – பகுதி 1 படிக்க

மௌனியுடன் கொஞ்ச தூரம் - நூலிலிருந்து…

மௌனியின் கதையுலகம் – பகுதி 2 

தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப்பரிமாணம் உண்டு. மற்றவற்றை விட இலக்கியத்திற்கும்dileepe_thumb[1] தத்துவத்திற்கும் உள்ள சமூகப்பரிமாணம் அதிகமானது. மேலும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப்பார்வை என்பதைவிட மௌனியின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு  ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது – நிகழ்கிறது என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம்பார்க்கலாம். மௌனியின் எழுத்துக்கள் உள்ளார்ந்தமனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன. புதுமைப்பித்தன் தன் எழுத்துக்களின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது அல்ல என்றுகூட ஒரு மார்ஸியவாதி கருதக்கூடும். ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல் மௌனி தன் எழுத்துக்கள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா அல்லவா என்று பரிசீலிக்கப்பட வேண்டும். குறிப்பாக மார்க்ஸீயவாதிகள் அவர் சமூகப்பார்வையற்றவர் என்று ஒரேடியாக அவரைப் பகிஷ்கரித்துள்ளனர்.

மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைதத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை நாம் அவரது கதைகளில் காண முடியும். சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்ளை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசகங்கள் ஒரு பிரக்ஞை பூர்வமாக திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களின் வெளிப்பாட்டின்போது தெறித்து விழும் பார்வைத் துணுக்குகளவை! உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட் தத்துவப்போக்கிலும் ஐக்கியம்கொள்ள வைக்கமுடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்வது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்து கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகைாயன தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியிடிக்க நினைத்தார். தவிர அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில எழுந்தவை. தம் சிறுகதைகளின் வடித்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுதத்துகின்றன. மௌனி முதன்மையாக ஒரு கலைஞர்.

மேலும் மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காணமுடியும். மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப் பரிச்சயமோ படிப்பே இல்லாத போதும்கூட. மரணம் காதல் போதை போன்ற உளவியல் விளைவுகள் பரிமாணங்கள் மிகுந்த அனுவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும்போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது.

மௌனியின் பாத்திரங்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவு்ம் இத்தைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏற்கெனவே கூறியது போல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உளவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம்,          ஆண்-பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே. மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. ஒரு அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியில் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகப் பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள் அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக்கூடியவை. “எங்கிருந்தோ வந்தான்“ என்ற கதையில் காணப்படும் பின்வரும் வரிகள் –

“.... நடுஇரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே படுத்திருந்தேனோ என்னவோ? பக்கத்து அறையிலிருந்து கேட்டதும் கேட்காததுமாக அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துக்சென்றது போலும்... என்னையே என்னுடைய சவத்தையே நான வெகுதூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு வருத்தம் ஆத்திரம், ஒரு அருவருப்பு ஒருங்கு கூடின…. ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது. மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இறப்பு....? இறப்பு....? அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வர்தை எட்டி எட்டி பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம் அவன் பாடிக்கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லாம் பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை..? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லைக் கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக்கொண்டிருப்பதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?“.

மௌனி மனித அனுபவங்களை அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும் உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்நத உளவியல் தளத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும் போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்தையும் மற்ற சமயங்களில் மங்கலாகிப் போவதையும் காணலாம். இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின் உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப் பார்க்கும் போது மௌனி அனுபவங்களின் புறத்தோற்றத்தில் இறுகிய தன்மையை தகர்த்துவிடுகிறார். தவிர தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழத்துகிறார்.

மௌனி இயற்கையின் பிரும்மாண்டத்திற்கும் மனித வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் வெகுவாக ஆட்பட்டிருந்தார். இரண்டுமே அவரை தீவிரமாக அச்சுறுத்தியிருக்கின்றன. மௌனி தன் அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைக் காண்பதற்கும் விளக்குவதற்கும் உந்துதலாக இயற்கையின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்கொள்கிறார். இயற்கை நிச்சயத்தின் குறியீடாக இருந்தாலும் தன்னளவில் இது பொருளற்றது. மனிதனுடன் உறவு கொள்ளும்போதே அது உயிர்கொள்கிறது. இயற்கையின் நிச்சயமான இருப்பு மனிதன் அல்லாதபோது பொருளற்றுப் போய்விடும் அதன் நிலை. இவற்றை மனித வாழ்வின் நிச்சயமின்மையோடு சேர்த்துப் பார்க்கும்போது மனித வாழ்வின் சிறுமை நமக்குப் புலப்படும். இந்தச் சிறுமையின் பிரக்ஞை நம்மையும் அச்சுறுத்துவது நமக்குப் புரியும்.

இருள், வானம், நட்சத்திரங்கள், மரங்கள், மலைகள், காற்று, வெயில், நிழல் போன்ற இயற்கையின் அம்சங்கள் மௌனியிடம் அலாதியாக உருக்கொள்கின்றன. இவற்றை உள்ளடக்கி மௌனி எழுதியிருக்கும பகுதிகள் விசேஷ அழகுடன் திகழ்கின்றன. சூழ்நிலை உருவாக்கத்திற்காக மட்டுமல்லாது இந்த அம்சங்களை மௌனி வாழ்க்கை பற்றிய தன் தயக்கங்களின் தனது சோகங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் பிரயோகிக்கிறார். விவரங்களின் தொகுப்பில் காணப்படும் நேர்த்தி மௌனியின் குரலை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. உதாரணமாக பிரபஞ்சகானம் என்ற அவரது கதையில் வரும கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம்.

சிற்சில சமயம் இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது தன்னை மறந்து அவன் மனம் ஆனந்தம் அடைவதுண்டு மற்றும் சிற்சில சமயம் தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது தன்னைவிட காற்று அழுத்தமாகத் தாங்கும் என்றெண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று அவை காற்றில் மிதந்து பிரிந்து உலகையே கவலை மயமாக்கிவிடும். எட்டாத தூரத்தில வானில் புதைந்து கேலிக்கண் சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவனது பாழ்பட்ட பழைய வாழ்க்கை நினைவு எழும். கோபித்து வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகும் என்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும் அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று அவனுக்கு தோன்றும்“.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மௌனி ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை சார்ந்திருக்கவில்லை என்பது தெரியும். அவரது கதைகளில் துலங்கும் தத்துவம் ஒரு தத்துவ மரபுக் கூற்றின் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் செல்வாக்கின் அடிப்படையிலோ எழவில்லை. இலக்கியப் படைப்புகளில் இது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. தவிர இப்படியொன்று படைப்புக்கு பாதகமாகவும் முடியலாம்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் பார்க்கவேண்டும். மௌனியின் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாக கொண்டவை. காதல் என்பது குடும்பம் திருமணம் போன்ற அமைப்புகளை ஏற்காதவராகவே மௌனி நம் கதைகளில பெரும்பாலும் வெளிப்படுகிறார். (குடும்பத்தேர் என்ற ஒரு கதையில் மட்டும் குடும்பத்தைப பற்றி அவர் கொஞ்சம் ஆர்வத்துடன் பேசுகிறார். ஆனால் இந்த ஒரு கதை அவரது மற்ற கதைகளின் தரத்தை நிர்ணயிக்க போதுமானதல்ல). மௌனியின் முக்கிய அக்கறை வாழ்க்கையின் நிச்சயமின்மையின் பின்னணியில் மனித உறவுகளின் நிலை என்பதாகப் படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனித உறவுகள் ஒரு இலட்சிய நிலையில் இயங்க அல்லது அதை அடைய முடியாது என்பது போன்ற தோற்றத்தைத்தான் மௌனி முன்வைக்கிறார். மனித உறவுகளுக்குரிய இலட்சிய சூழ்நிலையைப் பற்றிய கற்பனை ஏதும்கூட அவரிடம் கிடையாது.

மௌனி ஒரு சநாதனியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு ஆதிக்க வர்கத்தின் அலங்கோலமான பிரதிநிதியாகவே திகழ்ந்தார் என்றும் நமக்கு ஒரு சமயத்தில் தோன்றக்கூடும்.

சமூக சூழ்நிலைகளிலும் மதிப்பீடுகளிலும் விசேஷமான மாற்றங்களை காணாத வரலாற்றுக் கட்டங்களில் சுயமுனைப்போடு மாற்றங்களை வலியுறுத்தும் கலைஞர்கள் தென்படுவதில்லை. அச்சமயத்தில ஒரு கலாச்சாரத்தின் கலைகளை (வெகு சாதாரண மாற்றங்களைக் கண்டாலும்) ஒரு தேக்க நிலையிலேயே பிழைத்திருக்க நேரிடுகிறது. அரசியல் உள்ளடங்கிய புறச்சூழ்நிலைகள் மாறி அதுவரையிருந்த மதிப்பீடுகளுடனும் ரசனை உணர்வுகளுடனும் கூர்மையாக மோதும்போதுதான் ஒரு கலாச்சாரம் துடிப்பான மாற்றங்களை விளைவிக்கிறது. மாறிய நிலைகளின் தாக்கல்களுக்கு கலைகளும் ஆளாக அக்காலத்து பிரச்சனைகளையும் ரசனைகளையும தம் போக்கில் குறைவாகவோ நிறைவாகவோ பிரதிபலிக்கின்றன.

தமிழ் இலக்கிய படைப்புகளில் அரசியல் சிந்தனைகள் கொண்ட பரிமாணங்கள் மிக அழுத்தமாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்ற ஆரம்பித்தன. மௌனி எழுதிய காலத்தில் அரசியல் சமூக வாழ்க்கை துடிப்பற்றதாக இருந்தது என்று 14_mouni2_thumb கூறமுடியுமா என்று தெரியவில்லை. மௌனியின் காலப்பகுதிகளில் செயல்பட்ட பு துமைப்பித்தனின் படைப்புகளைப் பார்க்கும்போது அவர் அரசியலை நேரடியாக பிரதிபலிக்காவிட்டாலும் அரசியல் உணர்வுகள் ரீதியான இலட்சியங்களுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடிய சமூக சித்திரங்களை அவர் படைத்துள்ளார் என்பது புலப்படும். எனவே மௌனிக்கும் அவர் காலத்தில் அரசியல் சமூக நிலைகள் உயிரோட்டமாக இருக்கவில்லை என்ற அடிப்படையில சலுகைகள் ஏதும் தரமுடியாது. ஆனால் கூடவே இன்னும் பாரதியார் புதுமைப்பித்தன் ஆகியோரின் அரசியல தத்துவ நிலைபாடுகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்தவண்ணமே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இது இந்த நூற்றாண்டின் முற்பகுதி துல்லியமான நிலைபாடுகளை கலைஞர்கள் எடுத்துக்கொள்ள முடியாத ஒரு காலமாகவே இருந்த்து என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அரசியல் யதார்த்தங்கள் வாழ்க்கைக்கு தரும் உடனடியான நடைமுறை சமூக அறிவின் ஒளியில் இலக்கியம் படைக்க வேண்டும் என்று மார்க்சிய ஜனநாயக கருத்துகளின் செல்வாக்கின் காரணமாக கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாகத்தான் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வளவையும் கூறிய பின்பும் மௌனி, புதுமைபித்தன் பாரதியைப்போல சமூக உணர்வுகளை ஓரளவாவது பிரதிபலித்திருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் இத்தகைய ஒரு சர்ச்சைக்கு முடிவே இல்லை. கலை படைப்புகளிடம் நமக்கிருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளுக்கும் கலைஞனின் தனித்துவமான இயல்புக்கும் உள்ள முரண் இது. இந்த முரணை கலைஞனுக்கு சாதகமாகவோ அல்லது நமக்கு சாதகமாகவோ நாம் நம் நிலைபாட்டிற்கு ஏற்ப விளக்கிக்கொள்ள முடியும்.

மௌனியின் கதையுலகம் காதல் வயப்பட்ட ஒருவனின் குறுகிய உலகம். நேரடியான கமூக பரிமாணங்களை கொண்டிராத மாயத்தோற்றம் அது. காதல வயப்பட்ட ஒருவனின் பார்வையில் உலகம் கொள்ளும் மாயத்தோற்றம் நேரடியான பரத்யட்சமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த தோற்றம் உருவான கற்பனையின் ஊற்றோடு மனித அனுபவம் ஒன்று சம்மந்தப்பட்டுள்ளது என்ற வகையில் அதுவும் பிரத்யட்சத்தின் ஒரு அங்கம்தான் என்று சொல்ல முடியும்.

மௌனியின் கதையுலகத்திற்குரிய நியாயம் இதுதான்.

******

மௌனியுடன் கொஞ்ச தூரம் – வானதி பதிப்பகம் முதல் பதிப்பு-  ஏப்ரல் 1992…

தட்டச்சு.: ரமேஷ் கல்யாண்.

தொடர்புள்ள பதிவு:

Oct 28, 2013

மௌனியின் கதையுலகம் – திலீப்குமார்

மௌனியுடன் கொஞ்ச தூரம் - நூலிலிருந்து…

மௌனியின் கதையுலகம் – பகுதி 1

1936-ம் ஆண்டுவாக்கில் மணிக்கொடியில் மௌனி முதன் முதலாகச் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் கு.ப.ரா ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள. தமிழ்ச் சிறுகதைத் துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் mowni வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத் துறைக்கு வந்த்து ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற இயக்கத்தின் படிம்த்தோடு இனம் காணப்படக் கூடாதவர் எனவும் வலியுறுத்தப்படுகிறது. மௌனிக்குத் தமிழில் முன்னோடிகள் யாருமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஒருவகையில் கலைக்கும் மரபுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. கலைகளின் மீது மரபின் பாதிப்பு ஒரே சீராகவும் முற்றாகவும் என்றும் இருந்ததில்லை. ஆண்டுகளின் வரிசைக்கிரமப்படியும் அடியொற்றி அமைந்ததில்லை. விளைவாக கலை வரலாறுகளை நாம் பார்க்கும் பொழுது புதுமையான கலை வடிவங்களுக்கு ஒரே மரபான மரபையொட்டிய முன் முயற்சிகள் எல்லாச் சந்தர்பங்களிலும் காணக் கிடைப்பதில்லை. அதே மாதிரி எந்தப் புதுமையான கலைப் படைப்பும் முற்றாக மரபிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இருந்ததில்லை.அதில் மரபின் பல்வேறு காலப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட கலைஞனின் பக்குவத்திற்கும் அவனது சமகால வெளிப்பாட்டுத் தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு கோணங்களில் பிரயோகப்படுத்தப் பட்டிருப்பதை பல சந்தர்பங்களில் காணலாம்.

கலைகள் மீது மரவின் செல்வாக்கு ஒருபுறமிருக்க அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மரபென எஞ்சி நிற்கும் ஒன்றேகூட தீவிரமான பல மாறுதல்களுக்கு ஆளாகிவிட நேர்வதுண்டு. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நம் வாழ்க்கைப் போக்குகளிலும் கலைத்துறைகளிலும் கணிசமான மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதேபோல மொகலாயர்கள் ஆண்ட காலத்திலும் பல அம்சங்கள் நம் மரபோடு வந்து ஒட்டிக்கொண்டுவிட்டன என்பதை நாமறிவோம். நீடித்த ஆங்கிலேய அட்சி நம்மை மேற்குடன் நெருக்கம் காண வைத்தது. ஆங்கிலக் கல்வி தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த இடைத் தொடர்பைத் துரிதப்படுத்தின. இதன் நேரடியான / மறைமுகமான விளைவாகத் தமிழ் இலக்கிய மரபு மேற்கிலிருந்து சிறுகதை நாவல் ஆகிய புதிய இலக்கிய வடிவங்களைச் சுவீகரித்துக்கொண்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமாக புதுமைப்பித்தன் மௌனி இருவரும் மேலை இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள். மௌனி காப்காவின் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராகத் தெரிகிறது. காப்காவி்ன கதைகளைப் படித்த மௌனி அவை பிரத்யேகமாகத் தனக்காகவே எழுதப்பட்டவை எனக் கூறுமளவிற்கு உணர்ந்தார். இருப்பினும் காப்காவுக்கும் மௌனிக்கும் பல்வேறு தீர்மானவான வித்தியாசங்கள் உள்ளன. அவரை காப்காவுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் மேற்கின் சிறுகதைத் துறையிலிருந்து அதன் நவீன வடிவத்தையும் வடிவம் சார்ந்த அதன் சிறப்பான பல கூறுகளையும் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். கதையம்சத்திலும் மொழிப் பிரயோகத்திலும் அவர்கள் தம் இந்திய வாழ்க்கை மற்றும் மரபிலிருந்தே பல அம்சங்களை எடுத்துக்கொண்டார்கள். இதில் மௌனி புதுமைப்பித்தன் கு.ப.ரா மற்றவர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான் வெற்றி பெற்றார்கள் என்றே கூறலாம். இந்திய இலக்கிய தத்துவ மரபின் பல அம்சங்க்ளைத் தம் தனித்துவமான பார்வை கோணங்களுக்கு ஏற்ப வடிவ நுட்பத்தோடு அவர்கள் வெளிப்படுத்திய விதமே அவர்களது எழுத்துக்களுக்கு “நவீன”த் தன்மையை வழங்கியது. மௌனி தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அலசிப் பார்க்காத உணராத இந்திய வாழ்க்கையின் பல உள் மன பரிமாணங்களை முன்வைத்தார். புதுமைப்பித்தன் தமிழ் மொழிக்கு புதியவீச்சும் தமிழ் சிறுகதைக்கு ஒரு கலக பண்பையும் வழங்கினார். குபரா ஆண்-பெண் உறவில் உறைந்துகிடந்த குரூரத்தை மிக மென்மையான குரலில் வெளிப்படுத்தினார்.

ஒருவகையில் மௌனி முன்னோடியற்றவர்தான். ஆனால் மௌனிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் பெரிதும் அவர் தமிழ் சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயல்பட நேர்ந்த்தால்தான். மௌனியைப் பொறுத்தவரை, மௌனிக்கு அவர் முன்னோடியற்றவர் என்ற பெருமையைவிட அவர் பின்னோடியற்றவர் என்ற உண்மைதான் நமக்கு முக்கியமானது. புதுமைப்பித்தனுக்கு ஒரு சுந்தரராமசாமி ஒரு ஜெயகாந்தன் போல குபரா வுக்கு ஒரு தி.ஜானகிராமன் போல மௌனிக்கென்று ஒருவரை நம்மால் கூறமுடியாது. மௌனியின் சாதனையும் தோல்வியும் இந்த பண்பில்தான் உள்ளது. புதுமைப்பித்தன் குபரா ஆகியோர்களது இயக்கம் ஒரு வாசகர் கூட்டத்தைத தவிர ஒரு சுந்தர ராமசாமியையும் ஒரு ஜெயகாந்தனையும் ஒரு ஜானகிராமனையும் உருவாக்கியது. ஆனால மௌனியின் இயக்கம் தன் குறுகிய அளவிலேயே முழுமை கண்டு பின்னால் வந்த பலருக்கும ஒரு ஆய்வுப் பொருளாக ஒரு புதிராக மட்டுமே முடிவடைந்த்து. பின்பற்றமுடியாத கலைச் செயல்பாட்டில் சம்மான அளவு பாதகங்களும் சாதகங்களும் உள்ளன. அதன் விளைவுகளைத்தான் மௌனி இன்னும் அனுபவித்து வருகிறார். இந்த அடிப்படையில் மௌனியைப் பற்றி புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற திருமூலர் ஒப்புமைக்கூற்றுக்கு சாதகமாகவும் பாதகமாகவும விளக்கம் கூறலாம். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் நமக்கு இந்த சந்தர்ப்த்தில் முடிவான பயன்களை தரக்கூடியவை அல்ல. ஒருவகையில் மௌனி சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்கமுடியாத்தாகி விடும் என்றே தோன்றுகிறது.

மௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித்தன்மைகளும அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி தோல்வி மரணம் பயணம் ஆகியவை. இந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண் பெண் உறவு என்ற அடித்தளத்தின் மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்படுபவை. அநேகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற நுண்ணுணர்வு மிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்க முடியும். கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் உந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும விகசிப்பு ஒரு குறிப்பிட்ட உணர்வுத் தளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பிரச்சினைகளையும நிலைகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீரவேண்டியுள்ளது.

தன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கொள்ளலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி மௌனியின் தத்துவார்த்த விளக்கங்கள் எந்தவிதமான பொதுத்தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனில் அவரது அனுபவங்களின் தன்மைகள் அவற்றின் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும் அவரது பக்குவம் அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள அவை தோற்றம் கொள்ளும் மனநிலை காலம் இவ்வெண்ணங்களை வெளிப்படுத்த அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கியவடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர் மனம் நொடிந்துபோகும்படியாகவும் குதர்க்கமாகவும் விசித்திரமான மனக்கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்றுவதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடை பெறமுடியும்.

முதலில வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் நாம் நம் சார்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். பின் அச்சார்புகளிலிருந்து மீண்டும் வாழ்க்கை அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். அனுபவங்களுக்கு இன்னின்ன சார்புகளை நாம் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறோம். அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனிடையேயும் ஏற்படுத்தும் வெவ்வேறு dileepe_thumb[1]விதமான விளைவுகளை நாம் கருத்தில் கொண்டாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் ஒரு பொதுவான நியதிக்குள்ளேயே வாழ்க்கையைச் சார்புபடுத்தவும் வகைப்படுத்தவும் முயல்கிறோம். கலைஞர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை சார்புப்படுத்துவதை வகைப்படுத்துவதை விடவும் வாழ்க்கை அனுபவங்கள் மனிதரிடையே உண்டாக்கும் வெவ்வேறுவிதமான விளைவுகளை விசாரிப்பதற்கும் விவரிப்பதற்குமே அதிக அழுத்தம் தருகின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்கு கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க –ஒழுங்கும் இலக்கியத்தில் காணக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அருவமான இரு உலகங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வவும் வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.

****

மௌனியுடன் கொஞ்ச தூரம் – வானதி பதிப்பகம் முதல் பதிப்பு-  ஏப்ரல் 1992…

தட்டச்சு.: ரமேஷ் கல்யாண்.

தொடர்புள்ள பதிவு:

Aug 13, 2013

தீர்வு - திலீப் குமார்

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும்.

வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளி607030110cல் இந்தத் தங்கச்சாலைத் தெரு மட்டும்தான் கொஞ்சம் அகலமாகவும், நடக்கச் சௌகரியமாகவும் இருப்பது. இது வடஇந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் அதிகமாக வாழ்கிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும், அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. மற்றபடி அசிங்கம் என்றது, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும் வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் இந்தக் குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள். மேலும், அழுக்கான சூழ்நிலைகளுக்குத் தங்கள் மனத்தையும், மூக்குகளையும் பழக்கப்படுத்திக் கொள்வதில் இணையற்றவர்கள்.

மணி 8-45. கடைகளும் ஆபிஸ்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடக் குழந்தைகள் விரைந்து கொண்டிருந்தனர். ஜனங்கள் ‘பளிச்’சென்று சுத்தமாகக் காட்சி அளித்தனர். காந்திக்குல்லாய் சேட்ஜிக்களும், நாகரீகமாக உடுத்திக்கொண்ட அவர்களது மக்குப் பிள்ளைகளும் நிறையவே குழுமத் தொடங்கிவிட்டனர். பரவலாக, வெளிநாட்டுக் கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து நின்றன.

நிச்சயமாக இந்தக் குஜராத்திகள் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்!

புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்தத் தங்க சாலைத் தெருவில்தான் இருக்கிறது. தெப்பக்குளம் உள்ள பெரிய கோவில் இது. இந்தக் கோவிலின் பிரதானப் பிரகாரம் அளவில் மிகப் பிரமாண்டமானது. சிலைகளுடன், பெரிய பெரிய ஸ்தூபிகளுடனும், அவைகளில் அழகான சிற்பக் கலைகளுடனும் மிகக் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். நகரத்தில் உள்ள மற்ற எல்லாப் புகழ்பெற்ற கோவில்களைப்போல் இதுவும் வழக்கமாகப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யமற்றதாகவும், போகாதவர்களுக்குப் பேரழகாயும் காட்சியளிக்கும். கோவில் வாசலில், இடப்பக்கம் பலகாரம் விற்கிற ஒரு சேட்ஜிக்கும் வடப்பக்கம் தேங்காய் விற்கிற செட்டியாருக்கும், பூ விற்கிற பட்டிணத்துக் கவுண்டச்சிக்கும், வளையல் விற்கிற ஒரு சேட்டுக்கும், விற்றாலும் தீராத கொள்முதலாகிய வியாதிகளைக் கடை விரித்த சில பிச்சைக்காரர்களுக்கும் புகலிடம் கொடுத்திருந்த ஏகாம்பரேஸ்வரர் அமைதியாய் உள்ளே உட்கார்ந்தார். இந்தக் கோவிலைச் சுற்றிப் ‘ப’ வடிவில் நெளிகிற மூன்று சின்னச்சந்துகளின் ஒட்டுமொத்தமான பெயர்: ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம். என் மாமா வீடும், நான் சொல்லப்போகிற கதையின் களமும் இங்குதான்.

நான் இடது பக்கம் திரும்பி அந்தப் ‘ப’வில் நுழைந்தேன். இந்தச் சின்னச் சந்தின் மூலையில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே திணறி, ஒளிந்துகொண்டிருக்கும் என் மாமா வீடு. ஒரு பக்கம் கோவில் சுவர். மறுபக்கம் வீடுகள்.

ஒன்றிரண்டதைத் தவிர எல்லாம் திண்ணைகளற்ற பெரிய வீடுகள். இங்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் ஒரு ஆரம்பப்பள்ளியும் உண்டு. அதனால் தெருவில் இப்போது நிறையச் சிறுவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். இன்றியமையாத ஐஸ்காரனுடன்.

நான் மனத்தில் எதையும் வாங்கிக்கொள்ளாமல், வேகமாக நடந்தேன். மாமா வீட்டுவாசல் தெரிந்தது. ஏனோ அவர் முகம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவர் குடும்பத்தினர் முகங்கள் அனைத்தும் மனத்தில் தோன்றி மறைந்தன. வாசலில் சில குஜராத்தி இளம்பெண்கள் குழாயுடன் மல்லாடிக்கொண்டிருந்தார்கள். எனது வரவை அவர்கள் கடுமையான மௌனத்தை அனுஷ்டித்துக் கொண்டாடினார்கள். நான் அவர்கள் அனைவரையுமே பார்த்தேன். எல்லா முகங்களும் சுமாராகவே இருந்தன. இத்தனைக்கும், அந்தக் கட்டிடத்தில் மட்டுமே முப்பது குடும்பங்கள் இருந்தன. இருந்தும் மருந்துக்குக்கூட ஒரு அழகி இல்லை. மேல்மாடியில் வசிக்கிற ஊர்மிளாவைத்… நிற்க. முதலில் இந்தக் கட்டிடத்தின் பூகோள ரீதியான அமைப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குமேல் இருக்கிற வானத்தைச் சதுரமாக வெட்டிக் காட்டும் இது. மாடிகளில் வசிக்கிறவர்கள் கல்கத்தா பீடாக்களைக் குதப்பி உமிழ்வதற்காகவும் மற்றபடி வருணனுக்காகவும், சூர்யனுக்காகவும் கட்டப்பட்டது! இந்த முற்றத்தைச் சுற்றி எதிரும் எதிருமாக, எதிரும் புதிருமாக, புதிரும் புதிருமாக ஆறு வீடுகள். முற்றத்தின் நடுவே நடந்தால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிறு முற்றங்கள். இடதுபக்க முற்றத்தின் கடைசியில் இரண்டு கழிவறைகள்; வலதுபக்க முற்றத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதை அடுத்து, இன்னும் இரண்டு வீடுகள். இன்னும் சற்று நகர்ந்தால், மேலே செல்லும் அழுக்கான மாடிப்படிகள். இதே மாதிரி மேல்மாடியிலும். மொத்தம் முப்பது குஜராத்தி குடும்பங்கள் வாழ்கின்ற அழுக்கான கட்டிடம் இது.

அந்த முற்றத்தையும், அந்த ஆறு வீடுகளையும் பிரித்து, 21 அடி அகலமுள்ள ஒரு நடைவெளி சுற்றி ஓடும். அநேகமாக இந்த நேரத்தில் அந்த ஆறு வீட்டுக் கதவருகேயும் பெண்கள் உட்கார்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு பெண் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருப்பாள். இன்னொருத்தி துணிகளைத் துவைத்துகொண்டிருப்பாள். மற்றவர்கள் அரிசியையோ, கோதுமையையோ சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கமாக, திருமணத்திற்குப் பின் ஊதிப்போகிற உடல்வாகு உடையவர்களாக இருந்தாலும், இந்தப் பெண்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் அறிவற்றவர்களும் அடங்காப்பிடாரிகளும்கூட. எல்லாப் பெண்களையும்போல் இவர்களும் சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடையவர்கள். மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும், உணவு வகைகளிலும், அழகிய உடைகளிலும் தங்கள் உலகை அடக்கிக்கொண்டவர்கள். இதைத் தவிர, பிரக்ஞையே இல்லாமல் இனத்தைப் பெருக்குகிற பழக்கமும் உண்டு. இந்தக் கட்டிடத்தில் உள்ள முப்பது குடும்பத் தலைவிகளுக்குத் தலா ஒவ்வொருத்திக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாரிசுகளாவது இருக்கும். (என் மாமாவுக்குக்கூட 5தான்.) முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்கிற இங்கே இந்த ஜனத்தொகைப் பெருக்கம் இயல்பான ஒன்று. தவிர்க்க முடியாததும்கூட.

இங்கு வாழ்கிற ஆண்கள், மிக சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்துகொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவி வருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள். சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி, வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர, நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே!

பொதுவாக, இந்த குஜராத்திகள் தமிழர்களைப்பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயங்கள் உடையவர்கள்.

உள்ளே நுழைந்ததும் என்ன ஆச்சரியம்! முற்றம் வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்தது. நடைவெளியும் சுத்தமாக இருந்தது. ஓரங்களில் பிளாஸ்டிக் கம்பிகளில் நேற்று உலரப்போட்ட துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ரொம்பவும் அமைதியாய் இருந்தது. நான் முற்றத்தைத் தாண்டி மாடிப்பக்கம் பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஒரே கும்பல். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தனர். என் மாமா அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிக சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கியதும் ஒரு கணம் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மாமாவும் என்னைப் பார்த்து முதலில் ஒரு கணம் வியப்படைந்து பின் லேசாக முறுவலித்தார்.

“நீ மேலே போயிரு, நான் இதோ வந்துவிட்டேன்” என்று குஜராத்தியில் கூறினார்.

ஆவலை அடக்கியபடி மேலே போக மாடிப்படிகளை அடைந்தேன். எதிரில்ன் இறங்கி வந்த கோபால் பாயிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.” என்று குஜராத்தியில் சொல்லி வருத்தப்பட்டார், வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பின் நகர்ந்துபோய் கும்பலுடன் ஐக்கியமானார் அவர்.

நான் மேல்மாடியை அடைத்து வீட்டுக்குள் நுழைவதற்கும், சந்திரா, என் மாமாவின் மூத்த மகள், பெருக்கி முடித்து நிமிர்ந்து என்னைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் மகிழ்ச்சியுடன் சிரித்து என்னை உபசரித்தாள். மாமி

சமையல்கட்டிலிருந்து வந்து, “வா, வீட்டாரின் ஷேம நலத்தை விசாரித்தாள். நான் பதில் கூறிவிட்டு, ரெயிலின் தாமதமான வரவைப் பொதுவாக முறையிட்டுக்கொண்டேன். எனக்காக அவள் ‘டீ’ போட உள்ளே சென்றாள். என் மாமா வீடு ரொம்பவும் கச்சிதமான, ஆனால் சிறிய வீடு. ஒரு பெரிய ஹால். அதன் கோடியில் இடப்பக்கம் ஒரு அறையும், வலப்பக்கம் ஒரு அறையும் இருக்கும். இடப்பக்க அறை சமையலறை. வலப்பக்க அறை, குளியலறை, சயன அறை, ஸ்டோர் ரூம், எல்லாம் அதுதான். ஆண் குழந்தைகள் விளையாடச் சென்றிருக்க வேண்டும். மாமாவுக்கு இரண்டு பெண்கள் (பூர்ணா சமையல்கட்டில் இருந்தாள்) மூன்று பையன்கள். கனு, வ்ரஜேஷ், தீபக். பாட்டி கோயிலுக்குப் போய்விட்டிருந்தாள். காலை ஐந்து மணிக்குப் போய் 10 1/2 அல்லது 11 மணிக்குத்தான் வருவாள். பாட்டி ரொம்பவும் மடி, ஆசாரம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவள். ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது எனது உயரத்தை உத்தேசித்து இவள் செய்கிற முதல் காரியம், மடிகோலால் மேலே உலர்த்தி இருக்கும் துணிகளை, ஓரங்களுக்கு நகர்த்துவதுதான். அப்படியும் தப்பித்தவறி, அவளது ஆடைகளை நான் தொட்டுவிட்டால் அவைகளை மீண்டும் துவைக்கச் சென்று விடுவாள். இந்தக் கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவலாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

நான் கழிவறைப்பக்கம் பார்த்தேன். என்ன அதிசயம், காலியாகக் காத்திருந்தது. பொதுவாக, இந்த மேல்மாடியில் வாழ்கிற அறுபது ஜீவன்களின் உபயோகத்திற்காகக் கட்டப்பட்ட இரண்டே இரண்டு கழிவறைகள் இந்த ஒன்பதேகால் மணி உச்சகட்டத்தில் இப்படிக் காலியாய் இருப்பது ரொம்பவும் அரிது.

ஆசாரம் மிகுந்த என் மாமா வீட்டு நியதிப்படி இந்தக் கழிவறையை உபயோகிக்கச் சில கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கழிவறைப் பிரயாணம், வெகு நேர்த்தியான ஒரு அனுபவம்.

முதலில், தண்ணீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் செம்பில் உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து எடுத்து தண்ணீர் வராத ஒரு குழாயடியின் சின்னச் சுற்றுச் சுவர் மேல் வைத்துவிட வேண்டும். மாடியின் ஓரச் சுவரின் மூலையில் ஒரு நாலு கிலோ டால்டா டின் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை இடது கையால் எடுத்துக் கொண்டு சென்று கழிவறைக்குப் போகிற ஒரு சின்ன நடைவெளியின் முகட்டில் வைத்துவிட்டு, வலது கையால் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மீண்டும், உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு அந்த டின்னை நிறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த டின்னை இடது கையால் சுமந்து அந்த நடைவெளியெங்கும் அந்த மேல்மாடிக் குழந்தைகள் கழித்து உண்டாக்கிய சிறுநீர்த் தீவுகளை லாவகமாகத் தாண்டி, முதலில் தென்படுகிற – கழிவால் நிறைந்து வழிகிற, ஒரு மாதத்திற்கு அருவருப்பு ஊட்டவல்ல – கழிவறையைத் தவிர்த்து, அடுத்ததில் வழுக்காமல் உட்கார்ந்து, (என்னை மாதிரி) ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ, டி.எஸ். எலியட்டையோ நினைத்து லயித்துவிட வேண்டும். அதாவது, அடுத்த வீட்டுப் பெண், தவிப்பும் வேதனையும் தொனிக்கிற குஜராத்தியில், “அந்தர் கோன் ச்சே? ஜல்தி நிக்ளோ!” (உள்ளே யார் இருக்கிறீர்கள்? சீக்கிரம் வெளியேறுங்கள்!) என்ரு கெஞ்சி எழுப்பிவிடுகிறவரை.

தலையைக் குனிந்து வெளியே வந்து நடைவெளியைக் கடந்து, காத்திருக்கிற பெண்ணைத் தவிர்த்து, நேரே சென்று டால்டா டின்னை இருந்த இடத்தில் இருந்த மாதிரி வைத்து, அதன் அருகில் இருக்கும் தேய்ந்துபோன 501ஐயோ, ரெக்ஸோனாவையோ, லைஃப்பாயையோ எடுத்து குழாயடி சுற்றுச் சுவரில் நிறைத்து வைத்த பிளாஸ்டிக் செம்பை இரண்டு மணிக்கட்டுகளினாலும் இறுக்கி, லேசாகக் கவிழ்த்து, கைகளைக் கழுவிக்கொண்டுவிட வேண்டும். பிறகு செம்பைச்  சாதாரணமாக எடுத்துச் சென்று கால்களைக் கழுவிக்கொள்ளலாம். நான் இந்தச் சடங்குகளை மிக அலட்சியமாகச் செய்து முடித்துவிட்டு வந்தேன். மாமி எனக்காக ‘டீ’ தயாராக வைத்திருந்தாள். அவள் வெளிறிப்போன நீலப் புடவை உடுத்தியிருந்தாள். மாமியின் சிவந்த மேனிக்குப் பிரகாசமான நிறங்கள் எடுப்பாக இருக்கும். ஆனால் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரி ஏதோ ஒரு வெளிறிப்போன நிறத்தில் உடுத்திக்கொண்டிருப்பாள். நான் மனதுக்குள் மாமாவின் புடவை ரசனையைச் சபித்துக்கொண்டேன்.

கிணற்றடியில் இப்போது கூட்டம் குறைந்து காணப்பட்டது. பெண்கள் போய்விட்டிருந்தனர். ஆண்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் ஒரு சில குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் அனைவரும் பாக்கெட் வைத்த, லாங்கிளாத் பனியன்களும், வெள்ளை பைஜாமாக்களையும் அணிந்திருந்தனர். மாமா மட்டும் ஒரு நைந்துபோன, கையில்லாத ஸ்வெட்டரும், வேட்டியும், அதைப் பிடித்து நிறுத்த ஒரு மட்டமான தோல் பெல்ட்டையும் அணிந்திருந்தார்.

மாமா எல்.ஐ.சி.யில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்கிறவர். இந்தக் கட்டிடத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மோகத்தில் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர். குறிப்பாக, இங்கே இவருடைய ஜம்பம் நூற்றுக்கு நூறு பலிக்கிறது.

இப்போது அவர் கிணற்றில் லயித்திருந்தார். கிணற்றுக்கு மேலே ஒரு தகரக் கூரை போடப்பட்டிருந்தது. அதனால் கிணற்றுக்கு வெளிச்சம் வராமல் மிக இருட்டாக இருந்தது. ஒரு இளைஞன் டார்ச் விளக்கால் கிணற்றுக்குள் ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். கிணற்றில் கருப்பாக ஏதோ மிதந்துகொண்டிருந்தது. அதை எலி எண்று ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

இறந்துபோன எலியை எடுக்கத் தங்களுடைய வாளிகளைத் தர யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் ஒரு பழக்கூடையைக் கயிற்றில் கட்டி கீழே இறக்கியிருந்தார்கள். கூடையின் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டிருந்ததால், கூடை ஒரு பக்கமாக சாய்ந்துவிடப்பத்திருந்தது. நீரின் அழுத்தத்தால் அது மேலும் கதகதப்பாகிப்போனது. என்றாலும், எலியை எடுக்கும்போது தண்ணீர் கூடையில் இருந்தது, எலி மட்டும் சிக்கிவிடும். என்று இவர்கள் கூறினார்கள், இதில் இருக்கும்

சௌகரியத்திற்குப் பின்னால் ஒரு சாமார்த்தியமும் ஒளிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக இது மாமாவின் யோசனையாகத்தான் இருக்கவேண்டும். சுயநலத்திற்காக மனிதன் கையாளும் சாம்ர்த்தியம் சில சமயம் இந்த மாதிரி சுவாரஸ்யமாகவும் இருப்பது உண்டு.

எலி இப்போது கிணற்றின் ஓரத்தில் மிதந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரமாக இது அங்கேயே இருப்பதாகக் கூறினார்கள். இந்த விஷயத்தை மற்றவர்கள் என்னிடம் கூறும்போது மாமாவுக்குத் தனது திறமையை மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற கற்பனை வந்து, கூடவே கோபமும் வந்தது. என்றாலும், அவர் மிகப் பொறுமையாகச் செயல்பட்டார். அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

காந்திலாலும் சந்திரகாந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். இடையிடையே இவர்கள் ஷு(த்) தயூ(ந்) பாபு பாய்? ஷு(த்) தயூ(ந்) என்று குஜராத்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் கேட்கிற ஒவ்வொரு முறையும் மாமா தனது கண்களையும் புருவங்களையும் சுருக்கி, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபட்டார்.

போராட்டம் நீண்டது.

கடைசியில் அவர் பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக ஆனால் வெகு நேர்த்தியான சில சேஷ்டைகளைச் செய்தார். உலக்கையால் இடிக்கிற மாதிரியும், மாவை ஆட்டுகிற மாதிரியும், பட்டம் விடுகிற மாதிரியும், கடைசியாக ஒரு மாலுமியைப்போலவும் பல வித்தைகள் செய்தார்.

வித்தை பலித்தது.

எலி கிணற்றின் மையத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அதை வெளியே எடுப்பது சுலபம் என்று எல்லோருக்கும் பட்டது. எல்லோருக்கும் மனதுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. மாமா ஒரு கப்பற்படை அதிகாரியைப் போல் விளக்கு பிடிப்பவனுக்கு ஆணைகள் பிறப்பித்தார். அலட்சியமாக அருகில் நின்றவர்களை விலகச் சொன்னார். பிறகு, கயிற்றைக் கீழே இறக்கினார், மிக நிதானமாக. பின் மெல்ல, மிக நயமாகக் கயிற்றைச் சரியாக எலிக்கு அருகே கொண்டு வந்தார். மறுகணம்! ஒரு அசாத்திய வேகத்துடன் கயிற்றை மேலே இழுத்தார்.

எல்லோரும் ஆர்வமாய்க் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து ஏமார்ந்தார்கள். கூடை காலியாகவே மேலே வந்திருந்தது. எலியோ மீண்டும் கிணற்றின் ஓரத்திற்கே போய்த் தேங்கிவிட்டது. மாமா அசடு வழிந்தார். எலியின் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

மாமா மீண்டும் மீண்டும் அசடு வழிந்தார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான்.

மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார். தொடர்ந்து, அவர் தன்னைச் சுற்றியிருந்த ஏழெட்டு குஜராத்தி இளைஞர்களுக்குத்தான் அந்த எலியை வெளியே எடுத்த விதத்தைப் பற்றி, ஒரு அரசியல்வாதியின் சொல்லாடம்பரத்துடனும், ஒரு கட்டிட இயல் நிபுணரின் அபிநயங்களுடனும், பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கினார்.

மாமாவின் விரிவுரை முடிந்த பின், காந்திலாலும் ஜெயந்திலாலும் மற்ற சிலரும், இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கலக்கத்துடன் கேட்டார்கள். இதுவரை இதைப்பற்றிச் சிந்திக்காத மாமாவோ சற்று அதிர்ந்துபோனார். அவரது மனத்தின் பின்னணியில் வேகமாகப் பாய்ந்த பயங்கள் அவர் முகத்தில் நன்கு தெரிந்தன. என்றாலும், உடனே சமாளித்துக்கொண்டார். தனது தயக்கம் இந்த சிஷ்யர்களிடையே தனக்கிருக்கும் குரு ஸ்தானத்திற்கு ஊறு விளைவித்துவிடும் என்று கருதிய அவர் உடனே “இல்லை, இல்லை, அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும்.” என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார். எல்லோரும் தலைகளை ஆட்டி அதை ஆமோதித்தாலும் அவர்கள் முகத்தில் கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன.

தஞ்சாவூர் குஜராத்தியான சந்திரகாந்த், மாமாவிடம், “ஹெல்த் பீஸ் மா தமே ஜஷோ? அம்நே கா(ந்)ய் ஆமா சமஜ் ஞ படே பாபு பாய் (ஹெல்த் ஆபீஸுக்கு நீங்கள் செல்வீர்களா? எங்களுக்கு இதில் ஒன்றும் புரியாது பாபு பாய்) என்று கெஞ்சல் குரலில் கேட்டார். மாமா அதில் தனக்குச் சிரமம் ஏதும் இல்லை என்றாலும் தனக்கு அந்த வட்டத்து ஹெல்த் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும், மேலும் தனக்கு ஆபீஸ் செல்ல ஏற்கனவே தாமதமாகிவிட்டிருந்ததாகவும் கூறி நழுவிவிட்டார். தனது வீட்டிலும் குடிக்கத் தண்ணீர் அரைக் குடம்தான் இருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் இந்தக் காரியத்தை செய்யத் தனக்கு அவகாசம் இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார். மாமா என்று மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லோரும் இதே மாதிரி ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி ஹெல்த் ஆபீஸுக்குப் போவதையும், அங்கு இருக்கப்போகிற அதிகாரியை எதிர்கொள்வதையும் தவித்தார்கள்.

தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.

இதர்கிடையில், மேலே இருந்து கீழே வந்த கோவிந்த்ஜி சேட் என்கிற பணக்கார, T.V.வைத்திருக்கிற கிழவர், மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து  பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனை கூறி, அதை மற்றவர்கள் மூலம் செயல்படுத்தவும் செய்தார். மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது பெரிய முதிர்ந்த சரீரத்தைச் சுமந்துகொண்டு, கைத்தடியுடன் பாட்டி வாசல் பக்கமாக வருவது தெரிந்தது. வெள்ளையில், சிறிய கருப்புப் பூக்கள் நெருக்கமாக அச்சிட்ட சேலையை உடுத்தியிருந்தாள். கழுத்தில் துளசி மாலையுடனும், முகத்தில் தெளிவோடும் வந்துகொண்டிருந்தாள். இந்த களோபரத்தில் யாரும் பாட்டியைக் கவனிக்கவில்லை. அருகில் வந்த பின், அவளாகவே விஷயத்தை விசாரித்தாள். விஷயமும் பிரச்சனையும் அவள் முன் வைக்கப்பட்டன. பாட்டி சிறிது யோசித்தாள். பிறகு ச்சாலோஹு(ந்) தம்னே ஏக் ரஸ்த்தோ பதாவூ(ந்) (வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்) என்று கூறினாள். எல்லோரும் அவளைப் பிந்தொடர்ந்து, மேலே வந்தனர்.

ஹாலில் கனுவும் வ்ரஜேஷும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த பாட்டி சாதகமான கோணத்தில் இருந்த கனுவின் புட்டத்தில் லேசாக, ஆனால் வலிக்கிற மாதிரி கைத்தடியால் அடித்து ஏசிவிட்டு சமையலறைக் கதவருகே  இருந்த ஒரு தேக்குப் பீரோவின் முன் உட்கார்ந்துகொண்டாள். பிறகு அதை மெதுவாகவே திறக்க ஆரம்பித்தாள். பீரோவினுள் சின்னச் சின்ன விக்ரஹ்ங்கள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின்
மேல் உட்கார்ந்திருந்தன. ஒரு மூளையில் காவித் துணியில் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருந்தது. பாட்டி அதை நிதானமாக எடுத்து அவிழ்த்தாள். அதனுள் மிகச் சிறிய மண்குடம் இருந்தது. அதன் வாய் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. பாட்டி ‘பூர்னாவுக்கு குரல் கொடுத்து ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது. எல்லோரும் அவளையே பொறுமையின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டியோ சிறிதும் அவசரமில்லாமல் அந்த பீரோவை நன்றாக மூடிவிட்டுத் திரும்பினாள்.

கதவருகேயும், கதவுக்கு வெளியேயும் குழுமி நின்றவர்களில் முன்னால் இருந்த பிரான்ஜிவன்லாலை சமிக்ஞையால் அழைத்தாள் பாட்டி. சிறிது நேரமாகத் தலையைக் குனிந்திருந்ததால் பாட்டியின் மூக்கு கண்ணாடி மூக்கின் மையத்திற்கு நழுவிவிட்டிருந்தது. அவள் கிண்ணத்தைச் சிறிது முன்னால் நகர்த்தி, தலையை லேசாக உயர்த்தி, விழிகளை இன்னும் சற்று உயர்த்தி மூக்குக் கண்ணாடிக்கப்பால் பார்வையைச் செலுத்திப் பேசினாள், “ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.

பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யானி’ல்* லயிக்கத் துவங்கினாள்.

***
*ஜன் கல்யான் – தெய்வீகமான விஷயங்கள் தாங்கி வருகிற குஜராத்தி மாத சஞ்சிகை.
***
நன்றி: திலீப் குமார் (மூங்கில் குருத்து/ க்ரியா), தாஜ் – ஆபிதீன் பக்கங்கள்

Aug 18, 2012

கானல் - திலீப்குமார்

மெல்ல மெல்ல, அந்த அறையின் புழுக்கத்தையும் அங்கு திடீரென்று படிந்து விட்ட நிசப்தத்தையும் அவர்கள் உணரத் துவங்கினார்கள். அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்த நீல நிற சிறிய விளக்கின் மங்கிய ஒளியில் அவர்கள் கரிய நிழல்கள் போல் உறைந்து கிடந்தார்கள். அவர்களது நிர்வாணமான சிவந்த உடல்கள் ஒரு வகையில் பிணங்கள் போன்றும் தெரிகின்றன. அதிருப்தியால் வதங்கிய மலர்களுடன் அவர்கள் கிடந்தார்கள். உடல்களிலிருந்து வீசிய வியர்வையின் நெடியும், படுக்கையில் படிந்த லேசான ஈரமும் பொறுக்க முடியாததாக இருந்தது. என்றாலும், அங்கு நிலவிய மௌனம் கலைக்கப்படாமல் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஏமாற்றத்தின் கொந்தளிdileepe ப்பு மிகுந்த வெறுமையை அந்த அறையின் இருளிலும், நிசப்தத்திலும் கரைத்துவிட முயன்றார்கள் போலும். அவள், கால்கள் ஒன்றின் மேல் மற்றது கிடக்க உத்திரத்தை வெறித்தபடி நேராகக் கிடந்தாள். மூச்சு விட அவளது ஸ்தனங்கள் சீராய் மெல்ல அசைந்ததைத் தவிர சலனமற்றுக் கிடந்தாள். இவன் பக்கவாட்டில் சாய்ந்து முகத்தை அவளது தோள்களில் புதைந்தபடி இருந்தான். அந்நிலையிலிருந்தே இவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படுத்திருந்த விதமும், அவளது அதிருப்தியுற்ற நிர்வாணமும் இவன் மனதைத் தொட்டது. அவள் கண்கள் பனித்திருந்தன என்றும் இவனுக்குப்பட்டது.

இந்த இடத்தின் தனிமை அவர்களுக்கு அன்று மதியம் தான் ஊர்ஜிதமாயிற்று. இவன் அவளிடம் அதை தெரிவித்த போது எவ்வித தயக்கமுமின்றி ஒப்புக் கொண்டாள். இருவருக்குமிடைய ஆழ்ந்த கவர்ச்சி என்றும் இருந்ததில்லை. என்றாலும், கிடைத்தால் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்கிற அளவு சஞ்சலம் இருந்தது இருவருக்கும். எப்படியோ ஒருவர் மனதை மற்றவர் அறிந்து வைத்திருந்தார்கள். சற்றுக் கழித்து, அவள் எதையோ லேசாக தீர்மனித்துக் கொண்டவள் போல் சிறிது நகர்ந்து கொண்டாள். இவனும் மௌனமாக விலகி படுத்தான். இவனுக்கு ஏதாவது பேசலாம் என்று தோன்றியது. ஆனால் பேசவில்லை. பேசுவதா அல்லது பேசாமலிருப்பதா அச்சந்தர்ப்பத்தில் எது உசிதம் என்று இவனால் நிச்சயிக்க முடியவில்லை. அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று இவன் நினைத்துப் பார்த்தான். குழப்பமாக இருந்தது. இவனுக்கு முன்பாகவே, அவள் இந்த இடத்தை வந்து அடைந்திருந்தாள். இவன் கதவை தட்டியபோது தளர்த்திக்கட்டிய கேசத்துடன், வெளிர் நீல புடவையில் பவுடர் மணக்க இவன் முன் தோன்றினாள். இவன் உள்ளே வந்ததும், கதவை தாழிட்டு விட்டு இவனை பார்த்துக் கண்களில் அர்த்தம் தொனிக்க முகம் மலர சிரித்தாள்.

அவள் உடல் முழுவதிலுமிருந்து ஒரு வினோத ஆவல் வெளிப்பட்டது போல் தோன்றியது. அவளது விழிகளின் கருமணிகளில் படர்ந்திருந்த பளபளப்பு நிலவின் விரக ஒளிபோல் தாக்கியது. அவர்கள் ஒன்றும் பேசாமல் இறுகத் தழுவிக் கொண்டார்கள். இவன் அவளது தலையை வருடியபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒரு அழகிய விலங்கைப் போல் இவனது கைகளில் தகித்து உருகினாள். சிறு குழந்தைகள் போல் அலங்கோலமாக உடைகளைக் களைந்து கொண்டே படுக்கையை அடைந்தார்கள்.

அவள் ஒரு உலர்ந்த மரத்துண்டைப்போல் கிடந்தாள். இவன் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளே முதலில் பேசினாள். “நாம் எழுந்து கொள்வோம். நேரமாகி விட்டது என்று நினைக்கிறேன்.” தொடர்ந்து “விளக்கைப் போடலாமா” என்று கேட்டாள். இவன் வேண்டாம் என்று பதில் சொன்னான். பின் மெல்ல இருவரும் எழுந்து கொண்டார்கள். இவன் அவளைப் பார்த்தான். அவளது அழகிய உடல் ஓர் அற்புத சிற்பம் போல் தோன்றியது. இவன், திடீரென்று அவளை அணைக்க விரும்பி தாபத்துடன் அவளது தோள்களைத் தொட்டான். சட்டென்று அவள் இவன் கைகளை விலக்கி விட்டுக் கொண்டே “போதும்” என்று நிராசை மிகுந்த குரலில் சொன்னாள். இவன் பின்வாங்கி, ஒன்றும் பேசாமல் அவளைக் கடந்து முன்னறைக்குச் சென்றான். இவன் உடைகள் அணிந்து, அவளுக்காகக் காத்திருந்தான். முன்னறையில் தனக்கு வீட்டை உபயோகிக்க கொடுத்த, நண்பனின் மனைவியுடன் கூடிய புகைப்படம் முன்னறையில் மாட்டப்பட்டிருந்தது. இருவரும் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் தன் நண்பனின் மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அந்த பெண்முகம் தன் எளிய புன்னகைக்குப் பின்னாலிருந்து இவனைப் பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது. இவன் குழப்பத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான். மூடிய கண்களுக்குள் மீண்டும், சற்றுமுன் அவளது வாளிப்பான உடல் தன் மீது சரிந்திருந்த காட்சி தெரிந்தது. அன்றைய கூடலில் பிசகு ஏதும் ஏற்படாது என்றே இவன் நினைத்திருந்தான். அவளது அழகான சிறிய மார்பகங்களை முத்தமிட துவங்கிய போது அவள் இவனை இறுக அணைத்துக் கொண்டாள். மூச்சுக் காற்றின் மயக்கும் ஆவேசம் ஜ்வாலையாக எங்கும் படர அவர்கள் கரைந்து அழிந்து கொண்டிருந்தார்கள். மெல்ல, மெல்ல, நிறைவேற்றத்தை நோக்கிய மென்மையான பாய்ச்சல்கள் துவங்கியபோது உலகமே சுற்றியது. இதோ இதோ என்று உச்சத்தை நோக்கிய கடைசி துடிப்புகளின் போது தான் எல்லாமே திடீரென்று மாறியது. அலைகள் பின் வாங்க இவன் விழுந்து நொறுங்கினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாதவளாக முகமும் உடலும் பதற பயங்கரமாக அசைந்து புரண்டாள். இவன் குற்ற உணர்வுடனும், வாஞ்சையுடனும் அவளைத் தாங்கிக் கொண்டான். நீரிலிருந்து திடீரென்று வெளியே எடுக்கப்பட்ட மீன் போல சிறு துடிப்புகளுக்குப் பின் அடங்கிப் போனாள் அவள். இவன் அவளை விட்டு மெதுவாக விலகினான். எல்லாமே கணங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. அவள் திடீரென்று விசும்பல்களுடன் அழத் துவங்கினாள். இவன் பேசாமல் கிடந்தான். அவள் முன்னறைக்கு வந்தவுடன், இவன் கிளம்ப ஆயத்த மானான். அவள் முகம் தெளிவாக இருந்தது. கண்களில் அதிருப்தியின் தீவிரம் குறைந்திருந்தது. அவள் இவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

வீட்டைப் பூட்டி விட்டு இருவரும் தெருவுக்கு வந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. வானத்தில் நிலவு மிதந்து கொண்டிருந்தது. இருவரும் பஸ் நிறுத்தத்தை நோக்கி மெல்ல நடந்தார்கள். சாலை மரங்களின் இலைகள் சலசலக்க காற்று வீசிய போது இவனுக்கு ஒரு அலாதியான விடுதலையுணர்வு ஏற்பட்டது. மனதின் இறுக்கம் குறைந்தது.

இவன் : என்னை மன்னித்து விடு.
அவள் : எதற்காக?
இவன் : ……இல்லை…. என்றுமே இப்படி நடந்ததில்லை. நீ எப்படி உணர்ந்து கொண்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.
அவள் : பரவாயில்லை. எனக்கு ஒன்றுமே வருத்தமில்லை.
இவன் :நான் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை என்றாலும் சொல்கிறேன் இப்படி நடப்பது இது தான் முதல் முறை
அவள் : பரவாயில்லை.
இவன் : ஒரு வேளை, இன்று நான் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனா
அவள் : சரி பரவாயில்லை விடு.
இவன் : இல்லை. இந்த வாய்ப்பின் திடீர்தன்மைதான் என்னை தேவைக்கதிகமான பரவசத்திற்குள்ளாக்கி விட்டது.
அவள் : சரி விடு.
இவன் : உன் துணிகரத்திற்கு பயனில்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.
அவள் : போதும், பேசாதே.
இவன் : உனக்கு என் மீது ஒரே வெறுப்பாக இருக்கிறது இல்லையா?
அவள் : இல்லை.
இவன் : என் உடலின் ஆற்றல் குறித்தும் உனக்கு சந்தேகம் வந்து விட்டிருக்கும்.
அவள் : இல்லை.
இவன் : நீ பொய் சொல்கிறாய்.
அவள் : போதும் நிறுத்து.
இவன் : தயவு செய்து, நீ என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே- குறிப்பாக உன் கணவரோடு.
அவள் :………………
இவன் : அடுத்த முறை………….
அவள் : போதும் உன் உளறல்.

அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். பஸ் நிறுத்தம் இருந்த பெரிய சாலையை அடைய இன்னும் சில நிமிடங்கள் நடக்க வேண்டியிருக்கும். இவன் வானத்தை பார்த்தபடி நடந்து வந்தான். அவள், தெருவில் விழுந்த தன் நீண்ட நிழலை கவனித்துக் கொண்டே வந்தாள். திடீரென்று இவன் மீண்டும் பேசினான்.

இவன் : நாம் இன்று சந்தித்திருக்கவே கூடாது.
அவள் : நாம் என்றுமே சந்தித்திருக்கவே கூடாது.

பஸ் நிறுத்தம் காலியாக இருந்தது. அவர்கள் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள்.

***

நன்றி : திலீப்குமார் ‘ஆபிதீன் பக்கங்கள்’

Nov 15, 2011

மூங்கில் குருத்து - திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான்.
வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்dilipkumar5க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு கிருஷ்ணாஜிராவ் கடையில்.
தறிநெய்கிற தேவாங்கச் செட்டிமார்கள் அதிகமாகப் புழங்குகிற தியாகராஜ புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைச் செட்டிச்சியின் வீடு. கட்டடவியலுக்குக் களங்கம் கற்பிக்கிற ஒரு வினோதமான கர்ப்பக்ரஹம் அது. இருளைக் கிழித்து உள்ளே நுழைந்தால், இருபத்தி நாலு வயதில் அப்பாவை இழந்த அம்மா வெள்ளையணிந்து கோட்டுருவமாய்ச் சமைந்து காணப்படுவாள். ஆஜானுபாகுவாயிருந்த அப்பா மூல வியாதி முற்றி ஆசனவாயிலிருந்து ரத்தம் கசியக்கசியக் கதறிய அந்தக் கடைசிக் கதறல் என் நாலு வயது மனத்தில் வடுவாய்ப் பதிந்துவிட்டது. அந்த நாட்களில் அம்மாவின் அழுகுரல் கூரையிலிருந்து அடிபட்டுச் சரியும் காகத்தின் மழுங்கின கரைதலைப் போல் இருக்கும். இன்றும் அக இரைச்சலற்ற அமைதியான இரவுகளில் அந்தக் குரல் எப்போதாவது உயிர்த்தெழும்.
திரு கிருஷ்ணராஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே வெள்ளைக்கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன் கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத் தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர் காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.
அந்த நாட்களில் இவர் சம்பாதித்த பணம் ஏராளம்! சினிமா எடுத்துத் தோற்றுப்போனது போக மிச்சத்தைப் போத்தனூரின் ஆங்கிலோ - இந்தியப் பரத்தைகளிடம் கரைத்துவிட்டார். இப்போது, காலேஜ் காண்ட்ராக்டிலும், கிழடாய்ப் போய்விட்ட இவரது இளம் வாடிக்கையாளர்களின் தயவிலும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
சுபிட்சத்திலிருந்து தரித்திரத்திற்குச் சரிந்த திரு ராவின் வீடு, தையற்கடை, நவாப் ஹகீம் ரோடின் கோடியில் ஒரு சினிமாக் கொட்டகைக்கு எதிரில் இருந்தது. மேஜை, நாற்காலிகள், ‘கௌண்டர்கள்’, தையல் இயந்திரங்கள் அனைத்துமே நவீனமற்றுச் சிதைந்து பழமை பகரும். ஒரு கம்மிய இருள் கடைக்குள், எப்போதும்.
செவ்வகமாயிருந்த கடையின் பின்பகுதியை வீடாக உபயோகித்துக் கொண்டிருந்தார் திரு,ராவ். ஒரு குமாரனையும் மூன்று குமாரத்திகளையும் திரு ராவுக்காகப் பெற்றுத்தந்த திருமதி லக்‌ஷ்மிபாய் கொள்ளை அழகாக இல்லாவிட்டாலும் தளராத உடம்புக்காரி. நல்ல உடம்பு. நாற்பத்து மூன்று வருஷங்களை விழுங்கிவிட்டு முப்பதாய் காட்டுகிற வசீகரம். திரு ராவ் குடித்து விட்டு இவளை அறைந்தும் குத்தியும் அவள் இடது காது செவிடாகி இருந்தது. மூத்த பெண் சுமித்ரா பியுசி படித்துக்கொண்டு, ‘சிமெண்ட்டா’ல் மெழுகின, ‘பாவ’மில்லாத முகத்துடன், மதிய வேளைகளில் பாவாடை விலகி, கால்கள் தெரியக் கிடப்பாள். (வீட்டுக்குள்ளிருந்த தொலைபேசி, திரு.ராவ் இல்லாத சமயமொன்றில் கிணுகிணுத்ததனால் கிட்டிய தரிசனம்). இரண்டாவது பெண் கௌரிக்கு வயது பதின்மூன்று. நீண்ட பெரிய கண்கள். நீண்ட நாக்கு. அடுத்தது பையன். எட்டு வயதில் சொத்தைப் பற்களுடன் எல்லோரையும் திட்டிக் கொண்டுத் தாவும் வானரம். கடைசியாய் ’லட்டு’ என்ற சுலோச்சனா. மூணு வயது.ஒரு நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பவளாக இருந்தாள்.
கோபிநாத்ராவ், பத்மநாத் ராவ் , கோவிந்த ராவ், தேஷ் பாண்டே, ரகுநாத் ராவ், பாண்டுரங்க ராவ், மல்லிகார்ஜுன ராவ் என்று ஒரு ஏழை மராட்டியர் பட்டாளத்தையே வேலைக்கு அமர்த்தியிருந்தார் ராவ். சில்லரை பண்ணுகிற சுகுமாரன் (வயது 10) மலையாளி. கணக்குப் பார்க்கிற நான் குஜராத்தி. கணக்கு என்றால் ஏதோ பெரியபெரிய பேரேடுகளைப் புரட்டிப் புரட்டி எழுதுகிற வேலை இல்லை. திரு. ராவ் இல்லாத சமயங்களில் வசூலாகும் பணத்தைக் கணக்கு வைத்து, அவர் வந்து வெற்றுடம்போடு அமர்ந்து ‘கத்திரி’ மார்க்கைச் சப்தத்துடன் உறிஞ்சி ஊதிக்கொண்டிருக்கிற சுமுகமான மனநிலையில் விவேகத்துடன் கொடுத்துவிட வேண்டும். என் சக ராவ்கள் தினம் ஒன்று இரண்டு என்று வாங்கும் முன்பணத்தைப் பற்று எழுத வேண்டும். அளவு எடுக்கும் போது குறித்துக்கொள்ள வேண்டும். குறித்ததைத் துணியுடன் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி கட்டிங் மாஸ்டர் கோபிநாத் ராவிடம் கொடுக்க வேண்டும். (கோபிநாத் ராவ் 50 களின் இந்திப்பட வில்லன்களைப் போல மங்கிய முகத்தில் அம்மைத் தழும்புகளோடு கண்கள் ஜ்வலிக்க, பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துகிற மனிதன். திரு ராவுக்கும் இவனுக்கும் ஏற்படும் சச்சரவுகளின் போது 32ஐ 22 ஆக வெட்டித் தள்ளிவிடுவான். தான் எழுதித் தரும் துண்டுச் சீட்டிலும் மாற்றிவிட்டு என்னையும் மாட்டிவிடுவான். பிறகு என் கற்பும், என் அம்மாவின் கற்பும் திரு ராவின் நாக்கில் துவண்டு சிதைந்து பறிபோகும்),
கடையில், எத்தனை முறை தட்டினாலும் போகாத தூசியைத் தட்ட வேண்டும். கௌரிக்கு லீவ் லெட்டர் மற்றும் ‘எக்ஸ்கர்ஷன்” பற்றிய காம்போசிசன் எழுதித்தர வேண்டும். ‘லட்டு’வைக் கொஞ்ச வேண்டும். மிச்சமிருக்கிற நேரத்தில் ஒரு கணக்குப் புத்தகத்தை முன்னால் பிரித்துப் போட்டுவிட்டு மேஜைக்கு மேலே தொங்கும் மங்கிப் போன கண்ணாடியில் கணக்குப் பார்க்கிற பாவனையில், முகத்தை வெறித்துக் கொண்டிருக்கலாம்.
அன்று சனிக்கிழமை.
திரு ராவ் காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டிருந்தார். எதிர்க் கொட்டகையில் திலகங்களில் ஒருவர் நடித்த புதிய திரைப்படம். இரண்டரை மணிக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மாலைக் காட்சிக்கு இப்போதே நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.
இரட்டை வேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும், கந்தல் துணியுமாக வெறிக்க, இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில் கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள்போல் பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில் காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு, அவள் நிஜ மூக்கை விட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் - தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும், தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக இருக்கக் கூடாது என்று அறிந்த - புத்திசாலி, மூக்கில் கோட்டை விட்டதை முலையில் சரிக்கட்டி இருந்தான்.
கோபிநாத்ராவ் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கடைக்குள் அமைதியாக இருந்தது.
பொதுவாக இந்த நேரத்தில் ‘ராவ்’கள் எல்லோரும் உற்சாகமாகப் பேசிக்கொள்வார்கள். தையலைப் பற்றி, தையல் இயந்திரங்களைப் பற்றி, அங்கே இல்லாத ‘காஜா’ எடுக்கும் இயந்திரங்களைப் பற்றி... இந்தப் பேச்சுகள் எங்கிருந்து துவங்கினாலும் அநேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே சென்று முற்றுப்பெறும். - எல்லா இந்திய சர்ச்சைகளையும் போல். அன்று அது பற்றிக்கூட பேச ஒன்றுமில்லாததுபோல மௌனமாக இருந்தார்கள் எல்லோரும்.
அன்று வசூல் பிரமாதம் இல்லை. பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட வரவில்லை. இதற்குள் எல்லோரும் என்னிடம் ஓரிரு முறை வசூல் எவ்வளவு என்று தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார்கள். மாலைக்குள் இருநூறு ரூபாயாவது ஆனால்தான் அனைவருக்கும் கூலி தர முடியும். ஆகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
திரு ராவின் ஊழியர்களுக்கு இம்மாதிரியான இக்கட்டுகள் புதியவை அல்ல. மாதத்தின் கடைசி வாரத்தில், அநேகமாக எல்லா மாதங்களிலும், இப்படி நடந்துவிடும். சென்ற மாதம் திரு ராவ் பெங்களூர் சென்றிருந்தபோது வசூலே ஆகாத ஒரு சனிக்கிழமையன்று திருமதி லக்ஷ்மிபாய் எல்லோருக்கும் இரண்டுலிட்டர் அரிசி கொடுத்தனுப்பினாள். ஆனால் திரு ராவ் இம்மாதிரியான அதீதச் செயல்களில் இறங்கமாட்டார். இன்று பணம் வராவிட்டால் அரிசி கூட இல்லாமல் வெறும் கையோடு செல்லவேண்டியது நிச்சயம்.
எல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
புதிதாய்க் கல்யாணமானவன் பத்மநாத் ராவ், தாய்வீட்டிலிருந்த தன் மனைவியை அழைத்து வர, கூலியைத் தவிர இருபது ரூபாயை முன்பணமாக எதிர்பார்த்தவன். உற்சாகம் குன்றி அடிக்கடி எழுந்துசென்று பீடிகுடித்துக்கொண்டிருந்தான்.
எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அவள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். இன்றோடு அரிசி தீர்ந்தது என்று மதியமே அறிக்கைவிட்டிருந்தாள். மறுநாள் அப்பாவின் ’திவசம்’ வேறு.திவசத்தன்று பிராமணனுக்குப் போடுகிற சாப்பாடு அப்பாவைச் சென்றடைகிறதோ இல்லையோ, இப்படி மாதக் கடைசியில் செத்துப் போய் கழுத்தறுத்திற்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். பின் அதற்காக வருத்தப்பட்டேன். தொடர்ந்து, நான் பெரியவனான பின் அப்பாவின் திவசத்திற்கு ஊரையே கூட்டி சாப்பாடு போடவேண்டும் என்று லஜ்ஜையன்று மனது உறுதி பூண்டது.
அண்ணாவும் கருணாநிதியும் கொடி கட்டி ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழக லாட்டரிக்கு மக்கள் நாயாக அலைந்துகொண்டிருந்தார்கள். அரிசி மட்டும் மலிவாய்க் கிடைத்தது. வாடையடிக்கிற பழுப்பு நிறத்தில், ரூபாய்க்கு இரண்டு படி!. அம்மா அதற்குச் செல்லமாக பெயர் கூடச் சூட்டியிருந்தாள், ‘ரப்பர் சம்பா’ என்று. இல்லாத வேலைக்காரியையும் சேர்த்து நாலு பேருக்கு 12 கிலோ, கோதுமை 4 கிலோ, எல்லாம் சேர்த்து பதின்மூன்று ரூபாய் சொச்சம். தம்பியின் முதலாளி முன்பணம் தராத ராட்சசன். என் வாரக்கூலியில் ரேஷன் வாங்க வேண்டும் என்பது தான் வழக்கமான திட்டம். நான் வாசலைநோக்கியபடியே அமர்ந்திருந்தேன் நிறைவேற.
பாண்டுரங்கராவ் சுகுமாரோடு பேச ஆரம்பித்தான்.
எதிர்த் திசையிலிருந்து தெருவைக் கடந்து திரு ராவ் வருவது தெரிந்தது. நன்றாக வெயிலில் அலைந்ததால் முகம் கிழடு தட்டிய ஆப்பிள் பழம் போல் சிவந்திருந்தது. அவர் ஒவ்வொரு அடியை வைத்த போதும் அவர் தொந்தி குலுங்கி குலுங்கி ஆடியது. திரு ராவின் தொந்தியானது மற்றெல்லா தொந்திகளைவிடவும் பிரத்தியேகமானது.
ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய் முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின் ‘வெடுக்’கென்று இறங்கிச் சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக் குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை. இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக் குலுங்கிக் கொண்டிருந்தது.
மற்ற ராவ்கள் கவனிக்கும் முன் திரு ராவ் கையிலிருந்த துணிப்பொட்டலத்தை மேஜைமேல் போட்டபடி உள்ளே நுழைந்தார். நான் ஏற்கனவே எழுந்துவிட்டிருந்தேன்.
திரு ராவ் வந்ததை அறியாத பாண்டுரங்க ராவ் தனக்குத் தெரிந்த ஒரு மலையாளக் கெட்ட வார்த்தைக்குச் சுகுமாரிடம் அர்த்தம் கேட்டு அவனைச் சீண்டிக்கொண்டிருந்தான். திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார்.
மற்ற ராவ்கள் எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள்.
நாணிச் சிணுங்கிச் சிரித்தபடித் தலைநிமிர்ந்த சுகுமாரன் திரு ராவைக் கண்டதும் திகைத்து மிரண்டு போனான். திரு ராவுக்குக் கோபம் பீறிட்டது. மேஜைமேல் வைத்த துணிப் பொட்டலத்தை அவன் முகத்தை நோக்கி வீசிக் கொண்டே “என்னடா லௌடே கா பால் சிரிக்கிறே?” என்று பாய்ந்தார். துணிப் பொட்டலம் சுகுமாரனின் பிடரியில் பட்டு சிதறியது. அவன் நடுங்கிக் குனிந்தபோது அவன் காதில் பாதியும் கன்னத்தில் பாதியும் சேர்த்து ஒரு அறை விழுந்தது. “மாதர் சோத்! வேலையெ பாப்பானா சிரிச்சிட்டிருக்கான்... லௌடே கா பால்” தொடர்ந்து திட்டியபடி திரு ராவ், பாண்டுரங்க ராவ் பக்கம் திரும்பினார். அவர் திரும்புவதற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்றுத் தலையைக் கவிழ்த்து வேலையில் ஆழ்கிற பாவனை செய்தான் இவன். இப்படிச் செய்ததும் திரு ராவுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
“ஏய் காய் கொஸ்டியே, புத்தி நஹி பெஹ்ன் சோத்” (ஏய் என்ன பேச்சு இது! புத்தி இல்லையா பெஹ்ன் சோத்) என்று உரத்த குரலில் சத்தம் போட்டார் திரு ராவ். பாண்டுரங்கராவ் ஏதோ சமாதானம் சொல்ல வாயெடுத்தான். உடனே திரு ராவ் அவனை மறித்து, “அமி விட்சார்த்தோ (த்) கசாலா? கசாலா ரே மா....தர் சோத்?” (நான் கேட்கிறேன் எதற்கு? எதற்கடா மாதர்சோத்?) என்று முன்பை விட வேகமாகக் கத்தினார். பின் ஓரிரு வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் முனகிவிட்டு மீண்டும் குரலை உயர்த்தி “புட்டா மாதர் சோத்!... புட்டா மாதர் சோத்!” (கிழட்டு மாதர் சோத்! கிழட்டு மாதர் சோத்) என்று தீர்மானமான குரலில் கூறிவிட்டு வேகமாகத் தன் நாற்காலியை அடைந்து அமர்ந்தார்.
பாண்டுரங்க ராவ் குறுகி, மடியிலிருந்த கோட்டின் கைக்குப் பட்டன் வைக்க ஆரம்பித்தான். பாண்டுரங்கராவுக்கு அறுபது வயதிருக்கும், வழுக்கைத் தலை. சென்ற மாதம் தான் பருவமடைந்த அவன் பேத்தி இறந்துபோயிருந்தாள்.
திரு ராவ் கோபம் தணியாமல் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
கௌரி, அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சூப்பியிடமிருந்து அந்த வாரத்து ‘ராணி’யை இரவல் வாங்கிக்கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தன் மகளைப் பார்த்ததும் திரு ராவின் கோபம் சட்டென்று அவள் பக்கம் திரும்பியது. கடுமையான மராத்தியில் அவளை அழைத்தார். திரு ராவ் வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம் தயங்கி நின்றாள். பின், மெல்ல, பயந்துகொண்டே அவரருகில் சென்றாள். காட்டமான ஐந்து மராத்திக் கேள்விகளுக்கு அச்சம் கலந்த நான்கு பதில்களே வந்தன. பின் திடீரென்று ஐந்தாம் கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவள் அழுதுகொண்டே விலகினாள். திரு ராவ் அவளைப் பிடிக்க முயன்றார். கௌரியின் பின்னல் திரு ராவின் கையில் சிக்கி நழுவியது. கௌரி உள்ளே ஓடினாள். திரு ராவும் அவளைத் துரத்திக்கொண்டு உள்ளே சென்றார். தொடர்ந்து கௌரியின் கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம் கேட்டது.
ஒன்றுமே நடக்காதது போல் உள்ளே வந்தான் கோபிநாத்ராவ். தன் மேஜையின் மையத்திலிருந்த கத்தரிக் கோலை ஓசைபட நகர்த்தி வைத்துவிட்டு, அடுத்து வெட்ட வேண்டிய துணியை விரித்துக்கொண்டான்.
சிறிது நேரம் கழித்து ஃபோன் கிணுகிணுத்தது.
ஃபோன் செய்தவரோடு நெடுநேரம் ஒருமையில் சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்தபோது திரு ராவின் கோபம் கணிசமாய் மறைந்துவிட்டிருந்தது.
இயங்கிக் கொண்டிருந்த தையல் இயந்திரங்களைத் தாண்டி அங்கொரு நிசப்தம் நிலவியது.
நான் தயங்கித் தயங்கி திரு ராவிடம் டீ குடிக்க வெளியே செல்ல அனுமதி கேட்பதற்கு மணி ஏழாகிவிட்டது. இரவுக் காட்சிக்காக நின்ற கும்பலை விலக்கித் தெருவுக்குள் இறங்கியதும் திடீரென்று ஒரு விடுதலையுணர்வு ஏற்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் இஸ்திரி போடுகிற நடராஜன் தலைப்பாகையோடு எதிர்ப்பட்டான். நடராஜன் படுசோம்பேறி. மனைவி, பகலெல்லாம் தோள்கள் வலிக்கத் துவைத்து சம்பாதிக்கிற பணத்தை மாலையில் இவன் குடித்துத் தீர்த்துவிடுவான். என்னைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே அருகே வந்து, “ராவ் இருக்கானா?”என்று கேட்டான். திரு ராவ் எதிரில் இல்லாத சமயங்களில் அவரை ஒருமையில் அழைப்பது தான் வழக்கம். பதிலாக, நான் தலையை ஆட்டியதும் உற்சாகத்துடன் “வரட்டுமா” என்று வேகத்தைக் கூட்டி நடந்து சென்றான்.
நம்பியார் கடை ரேடியோ விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது. சுவையில்லாத ஆனால் சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் சிறிது தெம்பாக இருந்தது. கடைக்குள் நிறைய பேர்களிருந்தனர். சிக்கனம் பார்க்கிற பதினெட்டு வயதுட்குட்பட்ட கடைப்பையன்களும், ஐம்பதைத் தாண்டிய கஞ்சத்தனம் பிடித்த ஜவுளிக் கடை குமாஸ்தாக்களுமே அதிகம் இருந்தனர். காரணம், மற்ற இடங்களில் பதினைந்து காசுக்கு விற்கும் டீ நம்பியார் கடையில் பன்னிரெண்டு காசு!
டீக் கடையிலிருந்து வெளியே வந்து ‘டவுன் ஹால்’ பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். டவுன் ஹால் அருகே ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பது தெரிந்தது. கூட்டத்தின் நடுவிலிருந்து அடர்த்தியான கரிய புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது. நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும் துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன். வழக்கம்போல், நரிக்குறவர்கள் டயர் துண்டுகளை எரித்துச் சோறு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அரை வட்டமாகச் சுற்றி நின்ற கூட்டத்தின் நடுவே இரண்டு போலிஸ்காரர்கள் குறவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பிரம்பால் அடித்துக்கொண்டிருந்தார்கள். குறவர்கள் அடிக்குப் பயந்து பதறிப் பதறி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சாக்கடை விளிம்பிலிருந்து சற்று விலகி, காய்ந்த மலங்களினூடே மூன்று கற்களாலான அடுப்புகளின் மேல் சிறிய சிறிய சட்டிகளில் சோறு வெந்துகொண்டிருந்தது. இதுவரை எப்படியோ அவற்றைக் கவனிக்கத் தவறிய போலிஸ்காரன் ஒருவன் அதைக் கவனித்துவிட்டான். மறுகணம் சட்டிகளை எட்டி உதைத்தான் அவன். ஒரு குரூரமான உற்சாகத்துடன் அவன் அதைச் செய்தான். சட்டிகள் உருண்டு சாக்கடைகளில் விழுந்தன. உடைந்த ஒரு சட்டியின் பகுதி மட்டும், சோறு வழிய சாக்கடை விளிம்பிலேயே நின்றுவிட்டது. அதைக் கண்ட மற்றவன் அதையும் எட்டி உதைத்துச் சாக்கடையில் தள்ளினான். கூட்டம் நிதானமாக வேடிக்கை பார்த்தது.
குறவர்களைக் குறித்த சில அடிகள் தப்பி அவர்களின் சிறிய குழந்தைகளின் மீதும் விழுந்துகொண்டிருந்தன. கதறிக்கொண்டிருந்த குழந்தைகளுடன் குறத்திப் பெண்களும் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பின் சட்டிகளை எட்டி உதைத்தவன் எதையோ சாதித்து விட்ட களைப்பில் திரும்பினான். கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் கோபம் வர ஆரம்பித்தது. அவன் திட்ட ஆரம்பிப்பதற்கு முன் நான் விலகி நடந்தேன்.
கடைக்குத் திரும்பியபோது திரு ராவ் உற்சாகமாக ஒரு வாடிக்கையாளரிடம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். தவிர, இன்னும் பல வாடிக்கையாளர்கள் வந்து போனதற்கான தடயங்கள் காணப்பட்டன. பத்மநாத் ராவ் ஒரு சட்டை காலரின் உட்பக்க தையலை முடித்து விட்டு அதை வெளிப்பக்கம் உதறலுடன் திருப்பி நிமிர்ந்தான். என்னைப்பார்த்ததும் பற்களைக் காட்டிச் சிரித்தான். கூலிக்கான பணம் வசூலியாகியிருக்க வேண்டும்.
எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

மணி ஒன்பதரை.
தரையில் அமர்ந்து வேலை செய்வதற்காக காலையில் விரித்த ‘காடா’ துணியை பாண்டுரங்க ராவ் உதறி மடிக்க ஆரம்பித்தான். நான் என் மேஜைக்குச் சென்றமர்ந்து ஒவ்வொருவார் கணக்கையும் சரிபார்த்து வைத்துக் கொண்டேன். பின் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கம் போல கூலி பட்டுவாடா நடைபெற்றது.
திரு ராவ் ஒவ்வொரு முறையும் பாக்கெட்டிலிருந்துப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தன் பாக்கெட்டில் எத்தனை ரூபாய் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிக நாட்டம். அனாவசியமாக இக்கூலிப்பட்டாளத்தின் முன்னே பணத்தைப் பிரஸ்தாபித்து அதன் விளைவாக இவர்கள் முன்பணம் கேட்கத்தூண்டப்பட்டு, கேட்டுப் பின் ஏமாந்து, (தன்னை) சபித்துச் சோர்ந்து திரும்புகிற அவஸ்தையில் ஆழ்வதைத் திரு ராவ் என்றுமே விரும்புவதில்லை.
ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் கூலியைப் பெற்று கிளம்பினார்கள். அதிர்ஷ்டவசமாக பத்மநாத் ராவ் மட்டும் இருபது ரூபாய் முன்பணத்தை எப்படியோ பெற்றுக் கொண்டான்.
நானும் திரு ராவும் தனிமையில் விடப்பட்டோம்.
ஒரு சில கணங்களின் யோசனைக்குப் பின் திரு ராவ் என்னைப் பார்த்து “நீ திங்கட்கிழமை வாங்கிக் கொள்கிறாயா?” என்று இந்தியில் கேட்டார். அம்மாவின் சிவந்த மூக்கு ஞாபகம் வர எனக்கு வயிற்றைக் கலக்கியது. நான் தாழ்ந்த குரலில் ”நாளை ரேஷன் வாங்க வேண்டும்” என்றேன். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார் திரு ராவ். சிறிது நேரத்துக்குப் பின் தன் பாக்கெட்டிலிருந்த மொத்தப் பணத்தை வெளியே எடுத்தபடியே கறாரும் அலட்சியமும் கலந்த குரலில் “வீட்டில் ஏதாவது பணம் தேவையா என்று கேட்கிறேன். தேவையில்லை என்றால் உனக்குத் தருகிறேன். அல்லது நீ திங்கட்கிழமைதான் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறி லக்ஷ்மிபாய்க்குக் குரல் கொடுத்தார்.
லக்ஷ்மிபாய்க்கு நூறு ரூபாய் தேவைப்பட்டது. திரு ராவ் பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் எழுபத்தைந்துரூபாய்தான் இருந்தது. அறுபது ரூபாயை லக்ஷ்மிபாயிடம் கொடுத்து பின் மராத்தியில் ஏதோ கூறினார். “பதினைந்து ரூபாய் தான் இருக்கிறது. நாளை எனக்கு செலவுக்கு வேண்டும். நீ திங்கட்கிழமை வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறிவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்தார். நான் நிராசையுடன், கடைசியாக மூட வேண்டிய கதவை மூட முனைந்தேன்.
என்னையே வெறித்துக்கொண்டிருந்த திரு ராவுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “நாளைக் காலை ஏன் நீ காலேஜுக்குச் சென்று கோட்டுகளை டெலிவரி செய்து விட்டு வரக்கூடாது? பணம் வந்தால் நீயும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கும் உபயோகமாக இருக்கும்”. இதைக் கூறியவுடன் என் மனத்திற்குள் நம்பிக்கை, பொறியாய்த் துவங்கித் தீயாய் வியாபித்தது. நான் ஆர்வத்துடன் பலமாகத் தலை ஆட்டி அதை ஏற்றுக் கொண்டேன். “நேரமாகிவிட்டது. கோட்டுகளை நாளைக் காலை வந்து ‘பாக்’ செய்துகொள்ளலாம்” என்று திரு ராவ் கூறிக்கொண்டிருக்கும்போது “என்னா.....ராவ்” என்று உற்சாகத்துடன் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார் எதிர்க் கொட்டகை மானேஜர் ராமநாதன். ராமநாதன் வந்தால் அன்று விசேஷம் தான்.
விரல்களிலிருந்த மோதிரம் மின்ன வெள்ளை வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்த கொட்டகை மானேஜர் ராமநாதன் சொகுசு மாப்பிள்ளை! கொட்டகை, நகைக்கடை வைத்திருக்கும் அவர் மாமனாருக்குச் சொந்தமானது. தன் சொத்தை முழுவதும் கிண்டியில் ஓடிய நத்தைகளாய்ப்பார்த்து பந்தயம் கட்டித் தீர்த்துவிட்டு, இருபது வருஷமாய் இந்தப் புளியங்கொம்பைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் ராமநாதன். அவர் மனைவிக்கு உடம்பெல்லாம் வெண்குஷ்டம்.
திரு ராவும் ராமநாதனும் நெடுநாள் ஸ்நேகம். ஒரே தம்ளரில் பட்டை அடிப்பார்கள். ஒரே பொம்பளையுடன் படுத்துக் கொள்வார்கள். கொட்டகையில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சந்தர்ப்பங்களில், திரு ராவ் கடையில் தொழில் மந்தமாக இருந்தால் முதல் வாரம் முழுதும் காட்சிக்கு 25 டிக்கெட்டுகளைத் தந்துவிடுவார் ராமநாதன். நானும் நடராஜனும்தான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, ஒன்று தொண்ணூறை ஒன்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு வருவோம். நடராஜன் எம்டன்! அடிக்கிற சுங்கிடியைத் தவிர திரு ராவிடம் டிக்கெட் ஒன்றுக்கு எட்டணா வாங்கிவிடுவான்.
விடைபெற்றுக்கொள்ள திரு ராவின் முன் சென்று நின்ற போது ராமநாதன் என்னைப் பார்த்து லேசாக முறுவலித்தார்.
“போகிற வழியில் அப்படியே கொஞ்சம் நடராஜனை வரச் சொல்லிவிட்டுப் போ” என்று கூறிய திரு ராவ் “மாணவர்கள் சினிமா பார்க்க, அங்கே இங்கே கிளம்பிவிடுவார்கள். காலை ஆறு மணிக்கே புறப்பட்டால்தான் அவர்களைப் பிடிக்க முடியும்” என்று எச்சரித்தார். நான் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.
நடராஜனின் வீடு டோபி-கானாவில் இருந்தது. சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது சிம்னி விளக்கின் ஒளியில் பெரிய நிழலோடு கிடந்தான் அவன். என்னைப் பார்த்ததும் எழுந்து வரவேற்றான். நல்ல வேளை! சுவாதீனமாகவே இருந்தான். நான் விஷயத்தைக் கூறிவிட்டுத் திரும்பி நடந்தேன்.
தியாகராஜ புதுவீதியை அடைந்ததும் “பாவா கெண்ட என்த்த” என்ற தெலுங்குக் குரல் வரவேற்றது. யாருக்காகவோ தெருவில் காத்திருந்த பெண்தான் யாரிடமோ கேட்டாள். மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது.
கதவு வெறுமனே சாத்திக் கிடந்தது. அம்மா ‘அகண்ட் ஆனந்த்’ (மத சம்பந்தமான குஜராத்திப் பத்திரிக்கை) படித்தபடியே கண்ணாடியுடன் உறங்கிப் போயிருந்தாள். நான் குனிந்து கண்ணாடியைக் கழற்றி ஓரமாக வைத்தேன். அம்மா குழந்தையைப் போல் படுத்துக் கிடந்தாள். கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப் போய், சதை தளர்ந்து சிதைவுற்றுப் போயிருந்தது முகம். நெற்றியில் மெலிதான ரேகைகளாய்ச் சுருக்கங்கள் விழுந்துகொண்டிருந்தன. இளம் வயதில் அடர்த்தியாய் சுருள்சுருளாய்த் ததும்பி வழிந்த கேசம், இப்போது களைத்துப் படிந்துவிட்டிருந்தது. காதோரங்களில் நரை கண்டுவிட்டது. வயதாகிவிட்டது. ஆமாம். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எத்தனை நாட்கள்; எத்தனை வருடங்கள். வருடங்களை அவள் தின்றுவிட்டிருந்தாள்; வருடங்கள் அவளைத் தின்றுவிட்டன.
முகம் கழுவிவிட்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்தபோது ஆவேசமாய், திரு ராவின் குடும்பத்திற்கே சாபம் கொடுத்தாள் அம்மா. பின் குழம்பிப் போய் மௌனமானாள்.
அம்மாவின் சீற்றம் இப்படி ஒரே வரியில் வெளிப்பட்டு அடங்கிவிட்டது எனக்கு நிம்மதியாயிருந்தது. ஓரிரு கணங்கள் நிசப்தத்தில் கழிந்தன. ஒருவேளை விஷயம் இன்னும் உறைக்கத் துவங்கவில்லையோ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே “ராஸ்கல், நாளை உன் அப்பாவுக்கு திவசத்தை வைத்துக் கொண்டு வெறும் கையோடு வந்திருக்கிறாயே! வெட்கமாக இல்லையா நாயே” என்று நான் கூறிய செய்தியை நம்ப மாட்டாவளாய் பரபரப்போடு எழுந்து கையை ஓங்கிக் கொண்டே என்னை நோக்கி திடீரென்று ஓடி வந்தாள் அம்மா. பிறகு, ஓங்கிய கையை மடக்க மறந்து தமிழும் குஜராத்தியும் கலந்த மணிப்பிரவாளத்தில் திட்ட ஆரம்பித்தாள். ஒவ்வொரு வாக்கியத்திற்குமிடையே ஓரிரு கணங்கள் இடைவெளி விட்டு விட்டுக் குரலை உயர்த்தி உயர்த்தித் திட்டினாள்.
வசவுகளை மட்டுமே மனத்தில் கொண்டு ஆத்திரத்தில் ஆரம்பித்துவிட்ட அநேக வாக்கியங்களை முடிக்க முடியாமல் திணறிய போதெல்லாம் என்னையும் சபித்தாள். நான் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் வசைப்பாட்டில் உள்ளடக்கமாய்த் திரு ராவ் இருந்தாலும் உருவாக நாளை வர இருந்த பிராமணரே திகழ்ந்தார். பிராமணர் தமிழர்தான். குஜராத்தி பிராமணர்களை அழைப்பது கைக்கு மீறிய காரியம். சோறு போட்டு ரூ 5.25 தட்சிணை தவிர ஒரு மேல் துண்டாவது தர வேண்டும். சலவன் வீதியில் வியர்வை வழியும் கறுத்த வெற்றுடம்புடன் திண்ணையில் அமர்ந்து மலிவான பேச்சுப்பேசி மகிழும் தரித்திரம் பிடித்த தமிழ் பிராமணனே போதும் என்று முடிவுசெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த வீட்டில். வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த பிராமணர் நாளை வந்து எப்படி இந்த நிலைமையை எதிர்கொள்வார் என்று கற்பனை செய்த போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருந்தது.
ஒரு சில நிமிடங்களுக்குப் பின் கடை சைக்கிளை ஓசைப்படாமல் சாத்தி வைத்துவிட்டுத் திடீரென்று உள்ளே நுழைந்தான் தம்பி. அவன் வந்ததும் ஒரு கணம் மௌனமாய் இருந்துவிட்டு, அவனுக்கும் விஷயம் தெரியட்டும் என்று, கோபத்துடன் “நாளைக்கு நீங்களும் மண்ணைத் தின்னுங்கள்! வருகிறவனுக்கும் மண்ணைப் போடுங்கள்” என்றாள்.
தம்பியின் முகத்தில் திடீரென்று படர்ந்த திகைப்பையும் உற்சாகமின்மையையும் பார்த்த அம்மா தனது ஆற்றாமை குறைந்தவளாய் சீரான மூச்சு விட்டுக் கொண்டு, அர்த்த புஷ்டியான மௌனம் அனுஷ்டித்துக் காத்திருந்தாள்.
விஷயத்தை ஓரளவு புரிந்துகொண்ட தம்பி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள என்னைக் கலவரத்துடன் பார்த்தான். பின் தயங்கி “உன் முதலாளி பணம் தரவில்லையா?” என்று கேட்டான். நான் தலையை ஆட்டிப் பதிலைச் சொன்னதும் அவன் முகம் வாட ஆரம்பித்தது. அம்மா தன் கோபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நியாயப்படுத்தவும் இன்னுமொரு ஆள் கிடைத்தான் என்று சில கணங்களாகத் தேக்கி வைத்த குரோதத்துடன் மீண்டும் வெளிப்பட்டாள். “அவன் எப்படி வாங்கிக்கொண்டு வருவான்? அந்த பாழாய்ப்போன ராவுக்குப் பாடை கட்டிய பிறகுதான் வாங்கிக்கொண்டு வருவான். சூதாடி நாய்! குடிகார நாய்!” அம்மா பேசிக்கொண்டே இருந்தாள்.
அவனையே உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த தம்பி திடீரென்று, “லெக்சர் போதும், நிறுத்து இனி” என்று உறக்கக் கத்தி அவளை அடக்க முயன்றான். அம்மா அடங்கவில்லை. மாறாக, “நான் பேசுவதை லெக்சர் என்றா சொல்கிறாய் நாயே” என்று அவன் பக்கம் பாய்ந்தாள். தம்பி சும்மா இருக்கப் பழகி இருந்தான்.
ஒருவாறாக அம்மாவின் ஓலம் அடங்கி கீழ்ஸ்தாயியில் அவள் பொரும ஆரம்பித்த பிறகுதான் வெகுநேரமாய் ஒரே இடத்தில் நின்றுவிட்டிருந்ததை நான் உணர்ந்தேன்.
லுங்கியை உடுத்திக்கொண்டு சமையற்கட்டின் விளக்கைப் போட்டான் தம்பி.
அப்போது ஏறக்குறைய தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த அம்மா பேச்சோடு பேச்சாகக் குரலை உயர்த்தி, “இந்த லட்சணத்தில் உன் அக்கா மூங்கில் குருத்தையும் வாங்கிக்கொண்டு வந்து போட்டு விட்டாள், நாளை குழம்பு வைக்க!” என்ற செய்தியையும் சொல்லி வைத்தாள்.
சட்டென்று எங்கள் இருவரின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த பைக்குள் ஒளிந்துகொண்டிருந்த மூங்கில் குருத்துகளின் மேல் விழுந்தது. நான் உடனே போய் அதை எடுத்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தன. பசுமையாய்!.
மூங்கில் குருத்துகள் அப்பாவின் நண்பர் நாயகத்தின் எஸ்டேட்டில் நிறைய விளைந்தன. கத்தரிக்காயின் மழமழப்போடு, வாழைக்காயின் மதர்ப்போடு, தாவரங்களின் முரட்டு மனம் கமழ, ஊறிய குழம்பு பீறிட்டு, அவை மொளுக் மொளுக் என்று தொண்டைக்குள் இறங்கும் போகமே அலாதி தான். பருப்புச் செலவு இல்லாமல் குழம்பு வைத்துவிடலாம் என்பதோடு சாப்பிடும்போது ஏதோ ஒரு வித்தியாசமான உணவைச் சாப்பிடுகிறோம் என்கிற பெருமிதம் உபரி. மூங்கி குருத்துக் குழம்பு எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும். எதேச்சையாக அப்பா இறந்த தினத்தன்றும் அம்மா மூங்கில் குருத்தையே சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாட்களில் அம்மா அதைச் சாப்பிட மாட்டாள்.
அம்மா சுவரையே வெறித்துக் கொண்டிருந்தால். அவளது மூக்கிலும் காதுகளிலும் லேசாகச் செம்மை படர்ந்திருந்தது. அவள் மூச்சிலும் ஒரு தீவிரம் தலைப்பட்டது. இன்னும் ஓரிரு கணங்களில் அவள் அழக்கூடும். அம்மா செருமி, திடீரென்று அதிகம் சப்திக்காத, வதைக்கும் விசும்பல்களுடன் அழுதாள்.
மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிட மாட்டாள் என்று நினைத்தபோது ரொம்பவும் அபத்தமாகப் பட்டது.
சிறிதுநேரம் அழுதபின்பு சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தீர்மானமாக எழுந்தாள். முகத்தில் படிந்த கலவரத்தை விழுங்கித் தின்றுவிட்டு, கண்களில் ஒரு விவேகமிக்க சோகத்தைத் தேக்கிக்கொண்டிருந்தாள் அவள்.
நான் பையை மாட்டிவிட்டுச் சமையல் கட்டிற்குள் நுழைந்தேன். அம்மா அந்த வாரத்தின் கடைசிச் சோற்றைப் பரிமாறினாள்.
இரவு வெகுநேரம் கழித்துத் தம்பி இருட்டிலிருந்து ஏதோ பேசினான். அம்மா தூக்கமும் களைப்பும் பாரித்த குரலில், “வீட்டுக்காரியிடம் இரண்டு ரூபாய் கைமாத்து வாங்கித் தருகிறேன். காலையில் பிராமணன் வந்ததும் ‘கிருஷ்ணா மந்தி’ரில் அளவுச் சாப்பாடும் ஒரு ஸ்வீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்துவிடு, அடுத்த வருஷம் வீட்டிலேயே சாப்பிட வைக்கலாம்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
தெருவில் இருளையும் அமைதியையும் நேர்க் கோட்டில் கிழிக்கிற மாதிரி நீளமாய் ‘விசில்’ ஊதிச் சென்றான் பாராக்காரன்.
மறுநாள் காலை வீட்டைவிட்டுக் கிளம்பிய போதே ஆறேகால் ஆகிவிட்டது. வீட்டுக்காரச் செட்டிச்சி மஹா கறார்க்காரி! வாங்கப் போகும் இரண்டு ரூபாயை மதியம் வந்ததும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஷரத்து விதித்து அனுப்பினாள் அம்மா.
நவாப் ஹகீம் ரோடு வழக்கத்தை விட ரொம்பவும் அமைதியாய் இருந்தது. ‘முபாரக் டீ ஸ்டாலி’ன் முன்பெஞ்சில் அமர்ந்து ‘டீ’யைச் சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த தாடிக்கார சாயபுகள், டீக்கடை ரேடியோவின் சன்னமான நாதஸ்வர முனகல், பின்னால் குறுகி நீள்கிற தெரு, மூடிய கடைகள், அப்பால் கிழக்கில் உதித்த சூரியனின் சாயலில் நீலம் மின்ன ஆரம்பித்திருந்த வானம். வெண்மையான மேகங்கள். ஒலியெழுப்பி மறையும் காகங்கள், குருவிகள். எல்லாம் ரம்மியமாகத்தான் இருந்தன. இரைச்சல் மிக்க கசப்பான யதார்த்தங்களிலிருந்து இன்று தெருவுக்கே விடுமுறை.
டீக்கடையைப் பார்த்ததும் டீ குடிக்கவேண்டும் போல தோன்றியது. பாக்கெட்டிலிருந்த பதினைந்து பைசாவுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு சிகரெட்டா அல்லது சிங்கிள் டீயா என்ற சின்ன மனப் போராட்டத்தில் ஈடுபட்டு, கடைசியில், ஜெயித்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு நகர்ந்தேன்.
‘ஐந்துமுக்கு’ சந்திப்பை அடைந்தபோது ஓரிரு கசாப்புக் கடைகள் திறந்திருந்தன. உயிரும் தோலும் உரிக்கப்பட்ட ஆடுகள் மாமிசப் பிண்டங்களாகக் கால்களுடன் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. உள்ளே சிறிய சிவப்பு விளக்கு பதிக்கப் பெற்ற கடவுள் படத்தின் கீழ் ஊதுபத்திகள் எரிந்துகொண்டிருந்தன. குருதியின் பச்சை நெடி அந்த இடமெங்கும் படர்ந்திருந்தது.
கொட்டகை வாசலில் தரை, பெஞ்சு டிக்கட்களுக்காக இப்போதே மனிதர்கள் குழுமிவிட்டார்கள். அநேகமாக எல்லோரும், கண் விழித்துக் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு வரிசைகளாகத் தவளைகள் போல் நெருக்கமாக அணிவகுத்து அமர்ந்திருந்தார்கள்.
தெருஇவிலிருந்து பார்த்தபோது கடையின் ஒரு கதவு திறந்திருப்பது தெரிந்தது. லக்‌ஷ்மிபாய் விழித்திருக்க வேண்டும். நான் அவசர அவசரமாக மாடிப்படிகளில் ஏறினேன். இரண்டாவது படியில் வலது காலை வைத்ததும் பாதத்தில் ஏதோ குறுகுறுத்துக் குழைவது போல் தோன்றியது. மலம்! நான் உணர்ந்து குனிவதற்குள் விரலிடுக்களிலிருந்து பிதுங்கி காலெங்கும் அசிங்கமாகிவிட்டது. ஒரு கணம் தயங்கி, பின் மேலே ஏறினேன். மற்ற படிகளும் அசிங்கமாவதைத் தவிர்க்க முன்பாதத்தைத் தரையில் படாமல் உயர்த்திக் குதியை மட்டும் பதித்துப் பதித்து நடந்து கதவை அடைந்தேன். உள்ளே “லட்டு” வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தாள். மலம் கழித்ததற்கான அடையாளங்கள் அவள் புட்டத்தில் இருக்கின்றனவா என்று தேடினேன். நிறைய இருந்தன.
லக்‌ஷ்மிபாய் உள்ளே உட்கார்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருந்தாள். மலம் அப்பிய என் காலைப் பார்த்துக்கொண்டே அவளை அழைத்தேன். அவள் காதில் அது விழவில்லை. நான் மீண்டும் அழைத்தேன். அதுவும் அவள் காதில் விழவில்லை. நான்காவது முறை அவளைக் கூவி அழைத்தபோது தான் அவள் ஒருபக்கச் செவிடு என்பது எனக்கே ஞாபகம் வந்தது. உடனே எனக்கு திரு ராவின் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் தோன்றியது.
எதற்காகவோ கதவுப் பக்கம் திரும்பிய லக்‌ஷ்மிபாய் என்னைப் பார்த்ததும் தலையை ஆட்டி பற்கள் தெரிய சிரித்தாள். பின் மீண்டும் அடுப்பு ஊத திரும்பிக்கொண்டாள். ‘லட்டு’ என்னையும் தன் தாயாரையும் மாறிமாறிப் பார்த்து வியந்து சிரித்துக்கொண்டு நின்றாள். நான் காலைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஒருவாறாக விறகு எடுக்க வெளியே வந்தபோது லக்‌ஷ்மிபாய் கால் கழுவ தண்ணீர் கொடுத்தாள். ‘லட்டு’வை ஒரு கிள்ளும் கிள்ளி வைத்தாள் கோபத்துடன்.
திரு ராவ் ‘கட்டிங் டேபி’ளின் மேல் உறங்கிப் போய்விட்டிருந்தார். அருகே பட்டை அடித்ததின் ருசுக்களாக சோடா பாட்டில்கள் இருந்தன.
நான் வேகமாகக் கோட்டுகளை மடித்துக் காகித உறைகளில் போட்டுக்கொண்டேன். மொத்தம் ஒன்பது தேறின. எல்லாம் கம்பெனிக் கோட்டுகள். அதிகம் இல்லாவிட்டாலும் நல்ல கணம். லக்‌ஷ்மிபாயிடம் ஒரு ரூபாயை பஸ்ஸூக்காக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன். நான் வாசற்படிகளைக் கடந்ததும் அவள் கழுவ ஆரம்பித்தாள்.
வழக்கமாக இந்தக் கோட்டுகளுக்கான முழுப் பணத்தைக் கல்லூரி நிர்வாகமே வசூலித்துவிடும். ஆனால் இந்தத் தொகைக்கு ஏற்றார்போல் தையல் தரமும் சுமாராகவே இருக்கும். கோட்டுகளின் உள்ளே இடப்படும் உள்துணி மலிவானதாய் இருக்கும். இதை விரும்பாத மாணவர்கள் தனியே பத்து ரூபாய் கொடுத்து உயர்ந்த ரக உள்-துணையைப் போட்டுக்கொள்ளலாம். இந்தக் கோட்டுகள் அனைத்தும் ‘சாட்டினை’ உள்-துணியாகக் கொண்டவை. மொத்தம் தொண்ணூறு ரூபாய் வசூலாகும். நான் எனது பதினைந்து ரூபாயை அசைபோட்டுக்கொண்டு நடந்தேன்.
கல்லூரி, நகரத்திலிருந்து சுமார் நான்கு மைல்கள் தள்ளியிருந்தது. ஊரின் மையத்தைக் கடந்ததும் சாலையோரங்களில் பசுமை காண ஆரம்பித்தது. பசுக்கள் பின் தொடர வெற்றுடம்போடு நடந்த பால்காரர்கள், சிறுவர்கள், வயலில் வேலை செய்த பெண்கள்... எல்லாம் ரொம்பவும் இயல்பாக இயங்குவது போல் இருந்தது. பஸ்ஸில் டிரைவரும் கண்டக்டரும் கூட பரபரப்பற்று நிதானமாகவே காணப்பட்டார்கள். முழுதாய் விடிந்துவிட்டால் எல்லோரும் மாறிவிடுவார்கள்!
அந்தப் பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதி. பின் கட்டில் இருந்தது. கல்லூரியின் முன்புறக் கட்டடத்தை ஒட்டி நீண்ட பாதை தெருவிலிருந்து சுமார் இரண்டு பர்லாங்கு இருக்கும். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நான் பாக்கெட்டிலிருந்த மற்ற சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கல்லூரி அரவமற்று அமைதியாய்க் கிடந்தது.
பாதித்தூரம் சென்றபின் காக்கிச் சட்டையணிந்த தோட்டக்காரன் பதறியபடி “சிகரெட்டைக் கீழே போடுய்யா” என்று கோபமாக என்னை நோக்கி சிறிய அடிகள் எடுத்து ஓடிவந்தான். நான் பயந்து போய் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன். நான் கடந்து செல்லும் வரை இடையில் கைகளை வைத்து என்னையே வெறித்துக்கொண்டு அசையாமல் நின்றான் அவன். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவன் மீண்டும் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான்.
விடுதி, ஒரு பெரிய மைதானத்தைச் சுற்றி, நான்கு பிரம்மாண்டமான கட்டடங்களாக நின்றது. ஒவ்வொரு கட்டடத்திலும் நூற்றியெண்பது விசாலமான அறைகள் இருந்தன. மைதானத்தின் மையத்தில் நாலைந்து மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்ததால் அவர்கள் கீழ்ஸ்தாயியில் பேசுவதைக் கூட கேட்க முடிந்தது. வேறு சில மாணவர்கள் மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் மட்டும் ஆழ்ந்த சுயபிரக்ஞையோடு, கோபித்துக்கொண்டு ஓடிப்போன நாயகியைத் துரத்தி ஓடும் தமிழ்ப் படக் கதாநாயகனைப் போல் கால்களை உதறி உதறி ஓடிக்கொண்டிருந்தான்.
‘ஏ’ ப்ளாக்கில் சீதாராமனும் ஹரிஹர கிருஷ்ணனும் இருந்தார்கள். சீதாராமன் அறை பூட்டி இருந்தது. இரண்டாவது மாடியிலிருந்த 132இல் இருந்த ஹரிஹர கிருஷ்ணனுக்குப் பதிலாக, கண்ணாடியுடன் பனியன் வேட்டி அணிந்துகொண்டு ஒரு மாணவன் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். ஹரிஹர கிருஷ்ணன் ஊருக்குப் போயிருந்தான்.
‘சி’யில் யாருமில்லை. ‘டி’யில் மூன்று பேர். ‘பி’யில் கிருஷ்ணகிரி என்ற ஒருவன், மற்றவர்கள் இந்தக் கட்டடங்களுக்குப் பின்னாலிருந்த ‘பழைய விடுதி’யில் இருந்தார்கள். ‘டி’ பிளாக் சலனமற்று இருந்தது. இரண்டு மாடிகளை ஏறி இறங்கியதுதான் மிச்சம். எல்லோரும் டவுனுக்குப் போய்விட்டிருந்தார்கள். படிகளில் இறங்கும்போது இரண்டு மாணவர்கள் கையில் ‘குமுதம்’ சகிதமாக எதிர்ப்பட்டார்கள். என் கையிலிருந்த பாக்கெட்டுகளைப் பார்த்து ஒருவன், “என்னப்பா டிரை கிளீனர்ஸா” என்று அசிரத்தையாய்க் கேட்டான். நான் பதில் சொன்னதும், மற்றவன் சம்பந்தமில்லாமல் விசில் அடிக்க, இருவரும் என்னைக் கடந்து சென்றார்கள்.
கிருஷ்ணகிரியின் அறையில் நாலைந்து மாணவர்கள் லுங்கி அணிந்து கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை இருமுறை தட்டி உள்ளே நுழைந்ததும் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நான் சுபாவமாகத் தோன்றிய ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து விஷயத்தைக் கூறினேன். அவன் நான் சொல்லி முடித்ததும் ஒரு கணம் யோசித்தான். பின், “அவன் தூங்கறாம்பா” என்று தயங்கினான். நான் அப்போது தான் கவனித்தேன். கட்டிலின் சுவரோரப் பகுதியில் நீள மூட்டையாய் உறங்கிக்கொண்டிருந்தான் கிருஷ்ணகிரி. ஒரு மாணவன் கிருஷ்ணகிரியை எழுப்ப யோசனை கூறினான். மற்றவன் அதை மறுத்தான். நான் அமைதியாக யோசித்துக்கொண்டு நின்றேன். அதற்குள் ஒருவன் கிருஷ்ணகிரியை இடைக்குக் கீழே பக்கவாட்டில் அடித்து எழுப்பினான். கிருஷ்ணகிரி முனகிக்கொண்டு திரும்பிப் படுக்க ஆரம்பித்தான். எழுப்பிக்கொண்டிருந்தவனோடு மற்ற இரண்டு பேர்களும் சேர்ந்து உற்சாகத்துடன் கிருஷ்ணகிரியின் துயில் கலைப்பதில் முனைந்தார்கள்.
இவர்கள் அவனது போர்வையை இழுத்தவுடன் கிருஷ்ணகிரி பதறிக்கொண்டு எழுந்தான். நழுவியிருந்த லுங்கியைக் கட்டிக்கொண்டே மற்றவர்களைத் திட்ட வாயெடுத்தவன் என்னைப் பார்த்ததும் மௌனமாகித் திகைத்தான். கிருஷ்ணகிரி ரொம்பவும் மெலிந்து காணப்பட்டான். முதல் சவரம்கூடப் பண்ணாத முகத்துடன், ஒரு குழந்தையைப் போல இருந்தான். துறுதுறுவென்று நேசிக்கும் சிறிய கண்கள். நான் ‘குட்மார்னிங் சார்’ என்று பேச்சைத் துவங்கினேன். நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன்னிடம் பணம் இல்லை என்றும் புதன்கிழமை தானே வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறினான்.
பழைய விடுதியின் முற்றத்திலேயே பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள், குருமூர்த்தியும் கருணாகரனும். நான் தனித்தனியாய் அவர்களை அணுகிக் கேட்டபோது, இரண்டு வித்தியாசமான பற்பசைகளின் மணங்கள் கமழ கிருஷ்ணகிரி சொன்ன பதிலையே அவர்களும் சொன்னார்கள். கடைசியாய், நான் ரமேஷ்பாபுவின் அறைக்கு நடந்தேன்.
ரமேஷ்பாபு என்ற பெயர் அவன் வட இந்தியனாக இருக்கக் கூடும் என்பதாகப் பட்டது. அப்படியிருந்தால் அவனிடம் இந்தியிலேயே பேசலாம் என்று தீர்மானித்தேன். என் கொச்சையான இந்தியைத் தவிர்த்து எவ்வாறு செறிவாகப் பேசலாம் என்ற என் வார்த்தை வாக்கியங்களை மனதிற்குள் அமைத்துக்கொண்டே சென்றேன். அறைக்கதவு பாதி மூடியிருந்தது. நான் தட்டித் திறந்தேன்.
யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்தது போல் தோன்றிய ரமேஷ்பாபு, தாடியும் கண்ணாடியும் அணிந்து என் கற்பனை வரம்பிற்குள் அடங்காத அளவு அகலமாகவும் உயரமாகவும் இருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு கணம் பயமாகக் கூட இருந்தது. என்னைக் கண்டதும் ‘விருட்’டென்று எழுந்துகொண்டான். பின் பரபரப்புடன் என்னை நோக்கி வந்தான். ஒரு கணம் அப்படியே நின்றவன் நெற்றியின் நரம்புகள் புடைக்கக் கண்களாலேயே அலட்சியமாக என்னை விசாரித்தான். நான் தடுமாறித் தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் அவனிடம் விஷயத்தைக் கூறி முடித்தேன். அடுத்த கணம் அவனை ரௌத்ரம் கொண்டாண்டது. “நான் உன்னைக் கொண்டுவரச் சொன்னேனா?” என்று கோபத்துடன் துண்டாகக் கேட்டான். நான் மீண்டும் தயங்கி “இல்லை” என்றேன். “பின் போ! வந்து வாங்கிக்கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுக் கதவைப் படாரென்று சாத்திக் கொண்டான்.
நான் அசடு வழிய கோட்டுகளைச் சுமந்து வெளியே வந்தேன்.
விடுதியின் பிரதான வாசலைக் கடக்கும்போது சுமார் இருபது இருபத்தைந்து ஆட்டுக்குட்டிகள் அன்றைய மதியப் புலால் உணவுக்காக உள்ளே இழுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்தன. சில சின்னக் குட்டிகள் உற்சாகத்துடன் கத்தியும் துள்ளியும் ஓடின.
கடையில், திரு ராவ் இல்லை என்பதை உணர்ந்தேன். கோட்டுகளைத் திரும்பவும் மாட்டி வைத்துவிட்டு லக்‌ஷ்மிபாயிடம் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.
வழக்கம்போல் கொட்டகைவாசலில் கூட்டம். குறவர்கள் மறுபடியும் பாதையோரத்தில் கிளைத்துவிட்டிருந்தார்கள். வெள்ளைப் பூண்டையும், பின்னூசிகளையும் வினோதக் கலவையாக வைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு குறத்தி குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு குறவன் தலையைக் குனிந்து காது குடைவதில் முனைந்திருந்தான். அவர்களருகே நேற்று சிதறிய சோற்றுப்பருக்கைகள் மண்ணில் தோய்ந்து இறைந்துகிடந்தன. நல்ல வெயில். நல்ல பசி. நான் நடையைத் தளர்த்திக் கொண்டு நடக்கத் துவங்கினேன்.
வீட்டுக்குள் தம்பி ‘மதர்-இந்தியா’வின் பழைய இதழ் ஒன்றிலிருந்து கேள்வி-பதில் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தான். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள். உடையை மாற்றிக்கொண்டு நானும் ஒரு பாயை விரித்துக்கொண்டேன். யாருமே பேசவில்லை.
மறுநாள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அம்மா என்னையே வெறித்துக்கொண்டிருந்தாள். சுத்தமாகக் குளித்துவிட்டுப் பளிச்சென்று காணப்பட்டாலும் அவள் முகம் பட்டினியால் வாடித்தான் போயிருந்தது. நான் தலைவாரிக் கொண்டிருந்தேன். தலைவார நேரம் பிடித்தது. அம்மா கவனித்துக் கொண்டிருந்ததால் ஒரு வேளை நானே வேண்டுமென்று அதிக நேரம் எடுத்துக்கொண்டேனோ!
நான் வாசற்கதவை அடைந்ததும் தன்னருகே இதற்காகவே வைத்திருந்த பையை, “இதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ” என்று வன்மத்துடன் என்னை நோக்கி வீசி எறிந்தாள் அம்மா. பை என் காலில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்த மூங்கில் குருத்துகள் தரையெங்கும் சிதறின. அவை வாடிப்போயிருந்தன.
நான் அம்மாவுக்கு முதுகைக்காட்டியவாறே ஒரு கணம் நின்றேன். திரும்பி அவளை நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை. மனம் குழம்பி, நிறையக் கோபம் எங்கிருந்துமில்லாமல் வந்தது. “நீயே போய்ப் போட்டுக்கொள்” என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது.
தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய் ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.
வெயில் அறைந்து தாக்கியது.
******
1980  - 1/4  
Kadavu-fullநன்றி: கடவு தொகுப்பு –க்ரியா வெளியீடு, 
பிரதி உதவி: அஜய்  தட்டச்சு உதவி:  சுபைர்

Jan 18, 2011

மெளனியுடன் கொஞ்ச தூரம் திலீப்குமார்

திலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே ….

தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி dilipkவரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக   வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான விமர்சனங்கள் மிகச் சொற்பமானவையே வெளிவந்துள்ளன. இந்நிலையில் மௌனியைப் பற்றிய அபிப்பிராயங்களை நான் மிகுந்த தயக்கத்துடனேயே முன்வைக்கிறேன். இவற்றில் முழுமை, தெளிவு ஆகிய அம்சங்கள் சற்றுக் குறைவாகவும் இருக்கக்கூடும். என்னளவில், எத்தகைய இலக்கிய விசாரமும் ஒரு வகையில், இலக்கியங்களை முழுமையாக நாம் அனுபவிக்க மேற்கொள்ளப்படும் ‘பயிற்சி’யே. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும், நான் முதன்மையாக இந்தப் பயிற்சியின் ஒரு அம்சமாகவே கருதுகின்றேன்.

மௌனியை நான் முதன் முதலாக 1974ஆம் ஆண்டு படிக்க நேர்ந்தது. தமிழில் முறையான பயிற்சியற்ற நான் நவீனத் தமிழிலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளத் துவங்கியிருந்த நாட்களவை. அச்சமயத்தில் மௌனியின் கதைகள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு, நான் அதை அப்போது அபிப்ராயங்களாக தொகுத்துக் கொள்ள இயலாமற்போயிருப்பினும் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. அது மௌனியின் தேர்ந்த வாசகர்கள் பலரின் அனுபவங்களையே ஒத்திருந்தது என்பதை நான் பின்னால் தெரிந்துகொண்டேன். அதைப்போல், மௌனியை அலட்சியப்படுத்த நேர்ந்த வாசகர்கள் அவரது எழுத்துக்களில் கண்ட குறைகளையும் நான் சந்திக்கவில்லை.

1974 -க்குப் பின் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனியைப் படித்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில், மௌனியுடனே தங்கியிருந்து, அவரது எல்லாக் கதைகளையும் நானும் அவரும் சேர்ந்து வாசித்து அவற்றை விவாதித்த அனுபவமும் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் என் வளர்ச்சிக்கேற்ப மௌனியின் எழுத்துக்களின் பல சிறப்புகளையும், குறைகளையும் நான் கண்டிருக்கிறேன். இப் புத்தகத்திற்காக அவரது கதைகளை நான் மீண்டும் வாசித்த போதும் இப்படியே உணர்ந்தேன்.

மௌனியைப் பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாக தூஷிக்கவும் சாரிகள் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், அவரைப் பாராட்டுபவர்களும் ரொம்பவும் தீவிரமான சொற்களைக் கொண்டு பாராட்டுகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்களில் பாரபட்சங்களை நாம் ஒதுக்கியே விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இவை அவரவர் தம்தம் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வரித்துக்கொண்ட தீவிரமான எண்ணங்களைச் சார்ந்தவை. இவற்ரை நாம் முழுதாக ஏற்கவேண்டியதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக அவர் இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன். என்னதான் படப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவர் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோ விடமாட்டான். அவர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படப்பாளியின்) அவனது கலமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான். இன்று நம்மிடையே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கந்தசாமி, நகுலன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற பல எழுத்தாளர்கள் இயங்குவதைப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளை நாம் அணுகும்போதும் வெவ்வேறு விதமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. நாம் அவ்வாறே அணுகிக் கொண்டிருக்கிறோம். வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பலவிதமான எதிரெதிர் பரிமாணங்களைக் காட்டும் எழுத்தாளர்களை வெகுஇயல்பாகவே உலகெங்கும் வாசகர்கள் ஏற்று வந்திருக்கிறார்கள். ஜி. நாகராஜன் போன்ற ஒரு எழுத்தாளரையும், அசோகமித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரையும் நம்மால் சிரமமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்பளிக்கவும் முடிகிறது. இதேபோல், ஒரே தத்துவ சார்புள்ள இரு எழுத்தாளர்களிடையும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை நாம் அறிவோம். மார்க்ஸியவாதிகள் மதிக்கும் இரு எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ், மார்க்ஸிம் கோர்க்கி ஆகிய இருவரின் எழுத்துக்களில் காணப்படும் வித்தியாசங்களும் அழகுகளும் ரொம்பவும் நுட்பமானவை. இவற்றையும் நாம் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறோம்.

தத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம். உதாரணமாக - மேற்கத்திய மார்க்ஸிஸ்டுகள் பலராலும், எக்ஸிண்டன்ஷியலிஸவாதிகளாலும் மிகவும் மதிக்கப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளரான சாச்த் - எக்சூ பெரியை சமீபத்தில் ஒரு ரஷிய விமரிசகர் உலகில் தலைசிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் போன்ற பல உதாரணங்களை நம்மால் பார்க்கமுடியும்.

இவ்வகையில் பார்க்கும்போது, பல்வேறு தத்துவச் சார்புடைய பல்வேறு எழுத்தாளர்களிடையே - இவர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறி - ஒற்றுமைக்கான ஏதோவொரு அம்சம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒற்றுமைக்கான அம்சம் என்ன? கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன? தஸ்தா வொஸ்கி, கோர்க்கி, டால்ஸ்டாய், செக்காவ், காஃப்கா, காம்யு, ஜேக்லணன், மார்க்வெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன? இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா? இல்லை என்றே தோன்றுகிறது. இதையும் மீறிய ‘ஏதோவொன்று’ இருக்கவேண்டும். வாழ்க்கையின் மீmowni4து தீவிரமான அக்கறை என்பதைத் தவிர இவர்களது இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பின்னிருந்து இயக்கிய ஒரு ‘அற இயல்பு’ என்ற விஷயமும் இருந்திருக்கவேண்டும் என்று நான் கொள்கிறேன். இந்த ‘அற இயல்பு ’ தான் இவர்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான முதன்மையான அம்சம். தன்மையிலும் தத்துவச் சார்புகளிலும் மிகவும் மாறுபட்ட பல எழுத்தாளர்களிடையே காணப்படும் ஒற்றுமை இந்த ‘அற இயல்பு’ தான். மேலும் இந்த ‘அற இயல்பு’ தன்னளவில் தன்மையற்றதே என்றும் நான் கூறுவேன். இது ஒவ்வொரு படைப்பாளியிடமும் அவனது கலை இயபுக்கும், திறமைக்கும், அவன் செயல்பட்ட கால, சமூக, அரசியல், இலக்கிய பின்னணிக்கும் ஏற்ப அவனுள் விகசிக்கிறது. எழுத்தாளர்கள் பலராகவும் பல பார்வை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஒரு சில பரிமாணங்களிலேயே கவனம் செலுத்தியவர்களாக இருந்திருப்பினும், இந்த ‘அற இயல்பை’ இந்த ஒற்றுமைக்கான அம்சத்தை நாம் எல்லோரிடமும் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில், அவன் காட்டும் வாழ்க்கைப் பரிமாணங்களில் அவனது சார்பு நிலைகளில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் ஆவல் உண்மையில் நான் மேலே சொன்ன ‘அற இயல்பின்’ மீது ஏற்படும் மதிப்புதான். இந்த அற இயபு அதுவே ஒரு பண்பு எனவும், அது சார்ந்திருக்கும் ஏனைய விஷயங்கள் இரண்டாம் பட்சமானவையே என்றும் நான் கொள்கிறேன். இவ்வகையில் ஒரு மார்க்ஸிய எழுத்தாளன் முதன்மையாக மார்க்ஸியவாதியல்ல. அதேபோல், ஒரு சோஷலிஸ எழுத்தாளன் முதன்மையில் ஒரு சோஷலிஸவாதியல்ல. இப்படி அணுகுவதன் மூலமே, இலக்கிய வரலாற்றின் பல்வேறு போக்குகளையும், அதில் செல்வாக்கு செலுத்திய பல்வேரு தத்துவ நிலைகளையும் என்னால் சரியாக விளங்கிக்கொள்ள இயலும்.. இப்படிப் பார்ப்பதன் மூலமே ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும், அப்படியில்லாத ஒரு எழுத்தாளனும் என்னை ஒரேயளவில் வசீகரிப்பதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்

மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றை கணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த ‘அற இயல்பின்’ உந்துதலைக் காண்கிறேன். மேலெழுந்தவாரியான தத்துவச் சார்புகளையும், மேலெழுந்தவாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்து நாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்கமுடியும்.

மெளனியுடன் கொஞ்ச தூரம் : திலீப்குமார் : வானதி பதிப்பகம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்