Dec 29, 2012

நான் எழுத்தாளனான கதை-பிரமிள்

திரு.வெங்கட் சாமிநாதன் பிரமிள் எழுதி இதுவரை வெளியாகாதிருந்ததொரு கட்டுரையின் கைப்பிரதியை சொல்வனத்தில் வெளியிடுவதற்காகக் கொடுத்தார். இக்கட்டுரையில் தனக்கு இலக்கியத்தில் ரசனையும், ஆர்வமும் ஏற்பட்டதன் பின்னணியை விவரிக்கிறார் பிரமிள். அவர் எழுத்தாளரான நிகழ்வையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ன் தகப்பனார், தாயார் இருவருக்குமே சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைவிட அதீதமான உணர்ச்சி இருந்திருக்கிறது. தகப்பனாரின் நேர்மை, தாயாரின் பெண்மைக்கும் கற்பனைக்கும் உரிய இயற்கையான சாகஸங்களை இது விரூபமாகத்தான் காண அவரைத் தூண்டியிருக்கிறது. இதன் விளைவாக அவர்கள் பெரும்பாலும் சண்டையிட்டே வாழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சண்டைகளின்போது என் தகப்பானாரின் நேர்மை அவரை எவ்வளவு குருட்டுத்தனமாக்கியது என்பதையும், தாயாரிடம் தற்காப்பு இல்லாது போனாலும் சொல்லாடல் மூலம் தப்பனாருக்கு பதில் பிறக்க இடமில்லாமல் ஆக்குவதையும் விளைprameel2வு தாயாருக்கு சரீரபூர்வமான ஆபத்தாவதையும் இன்று நினைக்க ஒருவகையில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் தமக்குக் கிடைக்கக்கூடிய சரீரார்த்தமான துர்ப்பலன்களினூடேயும், தாயார் தமது புத்தி வன்மைக்கு, புத்திபூர்வமாகத் தகப்பனார் ஈடுகட்ட இயலவில்லை என்ற அளவில் திருப்தியடைவதை உணர இயலும்.

உண்மையில் என் தகப்பாரின் நேர்மை வியாபார உலகில்தான் என்பதையும் தாம்பத்ய வாழ்வில், உறவில், அவர் தாயாரை பயங்கரமாக ஏமாற்றியவர் என்பதையும் பின்னாடி உணர முடிந்தது. பார்க்கப்போனால் வியாபாரத்தில் காட்டிய நேர்மை அவருக்கு ஒரு போர்வையாகத்தான் இருந்திருக்கிறது.

இதற்கும் மேல், தகப்பானாரின் ‘நேர்மை’, அவரைப் பழிவாங்கும் மனோபாவமுள்ளவராக்கிற்று. என் தாயாரின் ‘நேர்மையின்மை’, அவரை தகப்பனார் உட்பட எவர் இழைத்த தீங்கையும் மறக்கக்கூடியவராயிற்று. முக்கியமாக நோய்வாய்ப்பட்டுள்ளவர் எவராயினும் அவருக்கு யாவற்றையும் மறந்து சிசுருஷை செய்ய தாயார் முன்வந்துவிடுவார். ஒரு சமயம் அவரது முதல்தர வைரிகளது பசுமாடு ‘ரப்பர் மர’ இலைகளைத் தின்று தொண்டையில் பால் சிக்கி சாகக்கிடந்தபோது தமது ‘குழந்தைகள்’ என்று அவர் வளர்த்த வாழைமரங்களின் குழாய்வடிவான குருத்துக்களை, மரத்தின் அழிவையும் பொருட்படுத்தாது வெட்டிக்கொண்டு சென்று பசுவின் தொண்டையிலிருந்த பாலை அவற்றின்மூலம் வெளிக்கொண்டுவர அவர் உதவியதும், அதற்காக வைரிகளுக்கு அதுவும் பணக்கார வைரிகளுக்கு, (பிராமணக் குருக்கள் வகுப்பினரான இவர்கள் தாயாருக்கு இருந்த ஒரே நிலபுலத்தில் தமக்கு பாத்தியதை வைத்து வழக்காடியபடி இருந்தனர்.) உதவியதற்காக அயலார் தாயாரைப் பரிகசித்ததும் அவர் பொருட்படுத்தாததும் என் மனதில் ஆழப்பதிந்த விஷயம்.

இது போன்றவற்றால் ஆரம்பத்தில் என் தகப்பனாரின் ‘நேர்மை’யை கெளரவித்த என் மனம் தாயாரின் அன்பைத்தான் நிச்சயமானது என்று கொள்ள ஆரம்பித்திருக்கிறது போகப்போக.

ஆனால், என் தகப்பனாரின் நேர்மையிலிருந்த போலித்தனத்தை, கொடுக்கல் வாங்கல் தனத்தையே இங்கே உணர்ந்து தெளிகிறேன் என்பதையும், ‘நேர்மை’யை கெளரவிப்பதிலிருந்து விலகியவதாகாது இது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பொதுவான வாழ்விலும், ஆழமான மனோதர்மங்களிலும், கருத்துலகிலும் நான் சந்தித்த பிரச்சினைகளிடையில் இந்தப் பின்னணி இயங்கி இருக்கக்கூடும்.

எனது பெற்றோர் கல்வியறிவற்ற ஏழ்மையானவர்களாயினும் தாய்வழி மூதாதைகள் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும், ‘புலமை’ வாய்ந்தவர்களகாவும் இருந்திருக்கின்றனர். ஒருபுறத்தில் இவர்கள் கண்மூடித்தனமான செலவாளிகளாகவும் கோயில் முதலியவற்றுக்கு தானம் செய்பவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள். ஒரு ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்காக (இங்கேதான் என் பூர்த்தியாகாத ஆரம்ப, ஹைஸ்கூல் படிப்பு) தமது நிலத்தை இவர்கள் வழங்கியதைத்தான் கெளரவத்துக்கு உரியதாக நான் கருதினேன்.

ஜாதீயம் வெறுப்பையே ஊட்டிற்று. கோவில் பிராமணக் குருக்கள் சிறுவர்களுடனும், மேளகார (இசை வேளாளர்கள் என்று தங்களை இன்று அழைத்துக்கொள்ளும் வகுப்பு) சிறுவர்களுடனும்தான் விபரம் தெரியும் வயதுகளில் விளையாடியிருக்கிறேன். தாயார் எங்கள் வீட்டுக்காலனியில், அயல் அபிப்ராயங்களைப் பொருட்படுத்தாமல் மேளகாரர்களுக்கு வாடகை அறைகள் தந்திருந்தார். இவர்களை, ‘சேவகத்துக்கு’ அழைத்துப்போக வருகிறவர்கள் இவர்களை நடத்தும் முறையும், அதற்கு இவர்கள் உடன்படும் கீழ்மையும் அதற்கேற்ற வகையான இவர்களது நடைமுறை வாழ்வின் குடிபோதை சச்சரவுகள் முதலியனவும் அருவருப்பாக இருந்தாலும், எனது ரஸனைக்கு ஆரம்பக்கல்வி இவர்களிடமிருந்தே எனக்குக் கிடைத்துள்ளதை உணர்கிறேன்.

இந்த ‘மேளகாரர்கள்’ உண்மையில் சங்கீதத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்த இசைஞர்கள் மூலம் நான் பயின்ற ஆரம்ப ரஸனைக் கல்வியே முதல்படி ஆயிற்று. சங்கீதத்தில் உயர்ந்த சங்கீதம், மட்டம் என்பவற்றை இவர்களது சகவாசம் எனக்கு இயல்பான சுரணையாக்கிற்று. இதன் வளர்ச்சியாக என் எந்தப் பருவத்திலும் மட்டமான சங்கீத, கலை வகைகள் எதனிடமும் நான் ஈர்க்கப்படவில்லை, இவ்வளவுக்கும் இசை இவர்களுக்கு வெறும் தொழில்.

இவர்களில் பலர் பின்னாடி துறைமுகத் தொழிலாளிகளாகவும் போயிருக்கிறார்கள். இருந்தும் பிழைப்புக்காக தாங்கள் சினிமா பாட்டுகளை வாசிக்க வற்புறுத்தப்படுவதை இவர்கள் வெறுத்தனர். கலைத்திறன் மூலமும், பொருளாதார உயர்வுகளின் மூலமும் ஜாதீயம் போன்றவற்றில் உயர்வான வகுப்பினரை சில இசைஞர்கள் எடுத்தெறிந்து நடந்து கொள்வது சகலவிதத்திலும் கீழ்மையாக இருந்த என் நண்பர்களுக்குத் திருப்தியாக இருக்கும். அப்படி ஏதும் அவர்கள் எடுத்தெறிந்து நடக்காதிருந்தாலும் நடந்தமாதிரி கதைகளை இவர்கள் கட்டி இருக்கலாம். பெரும்பாலும், பணத்தைக் காட்டி பெரிய இசைக்கலைஞர்களை வாங்க முயற்சிப்பவர்களைப் பற்றியும் பணத்தை அலட்சியப்படுத்த இவர்கள் நடந்ததைப் பற்றியுமே பெருமைக்குரிய விஷயமாக இவர்களது கதைகள் கூறும். இக்கதைகளின் அடிப்படைச் செய்தி என் மனசில் ஆழப்பதிந்தது என்று சொல்லலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரிய நாதஸ்வர வித்வானை ஒரு கோயில் திருவிழாவுக்கு வரவழைத்திருந்தார்கள். பூசகர் அர்ச்சனையை ஆரம்பிப்பதற்காக நாதஸ்வரத்தை நிறுத்தும்படி சமிக்ஞை கொடுத்தார். நீலாம்பரி அடங்க ஒரு சில நிமிஷங்கள் ஆயிற்று. மற்றபடி ஐயரின் சமிக்ஞையில் யந்திரமாகப் பிறந்து இறக்கும் இசை இந்தக் கலைஞரின் நாதஸ்வரத்தில், தனது இயல்பின் கதியைத்தவிர எதற்கும் இணங்க மறுத்ததாகத் தோன்றிற்று. ஐயரும் ‘ஞானம்’ உள்ளவர். புன்னகையோடு சங்கீதம் வடியும்வரை காந்திருந்தார். ‘பக்தர்’களும் கூட ஒருவகையில் திருக்கிட்டு, இந்த ‘அசம்பாவிதத்தின்’ விளைவாக சங்கீதம் என்ற ஒன்றுக்கு ஒரு இயல்பும்கூட இருக்கிறது என்பதை உணர தாங்கள் படும் சிரமத்துடன் காத்து நின்றனர். இந்த நிகழ்ச்சி சிறுவனாயினும் என்னூடே ஒரு பரம திருப்தியாகச் சென்றடைந்தது.

னது நண்பர்களான இசைஞர்களது ரஸனைத் தெளிவு சங்கீதத்தோடு நின்றுவிட்ட ஒன்றுதான். வாசகர்கள் என்ற வகையில் அவர்கள் கல்கி வகையறாவைத் தாண்டாதவர்கள்.

பழந்தமிழ் இலக்கியம் என்பதே தமிழ் இலக்கியம் என்ற எண்ணம், சத்ய யுகாத்தோடு கடவுளுக்கும் உலகுக்குமிடையே இருந்த உறவு தீர்ந்துவிட்டது என்ற வைதீகத்தனத்தப் போல் பள்ளியில் எனக்குப் புகட்டப்பட்டது. பாரதி கவிதைகளைப் பற்றி நிதானகிக்குமளவு ‘சிந்தனை’ எகிறவுமில்லை. ஆனால் வாராவாரம் கல்கியைப் படித்தேன். சினிமா ரகமான தீரச்செயல் கதை என்ற அளவுக்குமேல் அந்த வாசிப்பைப் பற்றி கணித்துப் பார்க்கும் வில்லங்கம் தோன்றவில்லை. 1950-இல் என்று ஞாபகம். கல்கி, புதுமைப்பித்தன் மறைவை ஒட்டி ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற கதையை மறுபிரசுரம் செய்தது. ‘கதை’ இலக்கியமாகுமா என்ற ஸ்மரணையே இல்லாதிருந்த எனக்கு இக்கதையை 1954 வாக்கில் படித்தபோது அது ஒரு புதிரான புதுவித அநுபவமாயிற்று. புதுமைப்பித்தன் என்ற பெயரும் மனசில் ஆழப்பதிருந்தது. சுமார் 1955, 56 வாக்கில்தான் புதுமைப்பித்தன் கதைகள் கையில் கிடைத்தது. ஆனால் அதற்குள் எனது ஆங்கில வாசிப்பு ஆர்.எஸ்.ஸ்டீவன்ஸனின் A Treasure Island, Kidnapped, Rider Haggard எழுதிய King Solomon’s Mines என்று வந்துவிட்டதோடு பழந்தமிழ் இலக்கியம், யாப்புப்பயிற்சி என்றெல்லாம் சிறுசிறு தேற்றங்கள் உண்டாகிவிட்டன. இவற்றின் பின்னணியைத்தான் புதுமைப்பித்தன் கதைகள் சந்தித்தன. விளைவு ‘இது இலக்கியம்’ என்ற தீவிரமான தெளிவு. புதுமைப்பித்தனை இலக்கியாசிரியர் என்று எவ்வித புற உந்துதலுமின்றி நிதானித்த என் நிலை உண்மையில் எனது சின்னஞ்சிறு சமூகவட்டத்தில் என்னை ஒரு புரட்சிக்காரனாகவே ஆக்கிற்று.

துப்பறியும் கதைகளையும் தொடர்கதைகளையும் படித்துவிட்டு அவற்றை நண்பர்களுக்குத் திருப்பிச் சொல்லும் பழக்கமும், சுவரெல்லாம், அகப்பட்ட காகிதங்களெல்லாம் படங்கள் போடும் பழக்கமும் எனக்கு ஏற்கனவே இருந்ததால், எனது குட்டிச் சமுதாயத்தில் எனக்கு ஏற்கனவே ஒரு கெளரவம் ஏற்பட்டிருந்தது. எனவே நான் புரட்சிக்காரனாகியது என்னோடு நின்றுவிடவில்லை. நாங்கள் சிலர் ‘நவீன’ தமிழ் இலக்கியத்தில் இறங்கிவிட்டோம். ஒரு தமிழ் வாத்தியார் ‘சிறுகதையா? சிறு கதைதானே அது,’ என்று சிறுகதைகளின் சிறுமையை விளக்கினார். இதற்குள் 1957 வாக்கில் என் பள்ளிப்படிப்பு நின்றுவிட்டது.

பாரதியை ஒரு இலக்கியாசிரியனாகக் காண உதவியது புதுமைப்பித்தனின் வசன இலக்கியம்தான்.

ஆனால் இலக்கியக் கட்டுரைகளையோ, முன்னுரைகளையோ ருசித்துப் படிக்கும் பழக்கம் ஏற்படாத நிலைதான். புதுமைப்பித்தனுக்கு முன்னுரையாக ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதியிருந்ததை, முன்னுரைகளுக்கு ஒரு இளம் வாசகன் காட்டும் வெறுப்புடன் படிக்காமலே அப்போது விட்டுவிட்டேன். அதைப் படித்தது வெகு பின்னாடிதான்.

இது என் ஸ்மரணையை சாந்நித்தியமானதாக்க சொல்லப்படுவதல்ல. பாரதி இலக்கியத்தை விட்டு தீவிரமாக புதுமைப்பித்தனது எழுத்தே என்னை இலக்கியபூர்வமாகத் தொற்றியது என்பதைத் தெளிவாக்கவே இது. இது புதுமைப்பித்தனது கலையின், தீவிரமான எழுத்தின் சாந்நித்தியத்தையே காட்டும்.

இதன்பின்பு 1959-இல் ‘சரஸ்வதி’ பத்திரிகை இதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். க.நா.சுப்பிரமணியம், அ.தைரியநாதன் என்ற புனைபெயரில் கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் வகையறாக்களை காரசாரமாகத் தாக்கிய கட்டுரைகள் தென்பட்டன. “ஒழிந்த நேரத்தில் விபச்சாரம் செய்தால் உப்பு புளிக்காச்சுது என்று ஒரு ‘தினுசான’ குடும்பஸ்த்ரீ சொல்வதைப் போல இருக்கிறது” என்று வியாபார எழுத்தாளர்களது ‘இலக்கிய’ வாதத்தை க.நா.சு விபரிக்கும் வரிகளுடன் அக்கட்டுரைகளுள் ஒன்று ஆரம்பிக்கிறது. அந்தச் சமயத்தில் க.நா.சுவின் கட்டுரைகள் சரஸ்வதியில் பெரும்பாலும் இந்தத் தொனியிலேயே இருந்தன என்பதை இன்று பூர்ஷ்வாத்தனமாக ‘கற்புள்ள இலக்கிய சர்ச்சை வேண்டும்’ என்று முன்வைக்கும் நபர்களில் பலர் அறிவார்களா என்பது சந்தேகமே.

அப்போது க.நா.சு நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தபோதே ரஷ்யாவில் போரிஸ் பாஸ்டர்நாக் தாக்குதலுக்கு உள்ளாகி சோவியத் முறை ஒரு நவீன ஜாரிஸம்தான் என உலகுக்குத் தெரியவந்த விபரம் பற்றி க.நா.சு அப்போது ஒரு வரியும் எழுதவில்லை என்பதை வெகு பின்னாடி அத்தகைய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கும்போதுதான் உணர்ந்தேன். இது பற்றி சில மாதங்களின் முன் ஒரு முக்யமான மலையாள எழுத்தாளர் கூறியது இது:

“பாஸ்டர்நாக் பிரச்சினையின்போது சென்னையில் எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் சமயம். க.நா.சு வேறொருவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். க.நா.சுவுக்கு கம்யூனிஸ எழுத்தாளர்களின் வோட்டுகள் அவசியமாயிருந்தன என்பதையும், இதற்கேற்ப பாஸ்டர்நாக் பிரச்சினை பற்றி அவர் மூச்சுக்காட்டவில்லை என்பதையும் நேரடியாக அறிந்தேன்.”

சி.சு.செல்லப்பாவும் கூடத்தான் பாஸ்டர்நாக் பிரச்சினை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இது பற்றி சி.சு.செ, “இந்த விவகாரம் ‘சுத்த’ இலக்கியபூர்வமானது அல்ல” என்றே கூறியிருப்பார் என நினைக்கிறேன்.

ஆக, ‘சுத்த இலக்கியத்தன்மை’ எவ்வகையில் கம்யூனிஸ்டுகளுக்கு செளகரியமாக இருந்திருக்கிறது!

எனது சிறு சமூகவட்டத்தில் பாஸ்டர்நாக் ஏற்கனவே தீரபுருஷனாகிவிட்டான். ஒரு குறிப்பிட்ட சலவைத்தொழிலாளியின் முகம் பாஸ்டர்நாக் முகத்தின் சாயலில் இருந்ததைக் கண்டு நாங்கள் ஓரிருவர் அந்த ஆளின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்ற நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது.

இவ்வளவுக்கும் நானோ, நான் எழுத ஆரம்பித்த பின்பும்கூட இன்றுவரை எனது நெருங்கிய நண்பர்களோ எழுத்தாளர்களாக வேண்டும் என்ற அபிலாஷையுடன் வாசகர்களானவர்கள் அல்ல. மெளனியை எழுத்தாளர்கள் மட்டுமே படிக்கிறார்கள். அல்லது எழுதும் ‘ஆசை உள்ளவர்கள்’ என்கிறார் சுந்தர ராமசாமி. எனது அனுபவம் அத்தகையதல்ல. எனது நண்பர்களுக்கு எழுதும் ஆசை இல்லாதிருந்தும் மெளனி என்ன, டாஸ்டாய்வ்ஸ்கி என்ன, படித்து அநுபவிப்பதே நோக்கமாக இருந்திருக்கிறது. எழுதும் ஆசை மட்டும் இருந்து உயர்ந்த இலக்கியங்களை இனம் காண இலயலாதவர்கள் போலித்தனமாக மெளனி போன்றவர்களை ரசிக்க முடிவதாகக் காட்டுவதைத்தான் சுந்தர ராமசாமியின் சித்தாந்தம் காட்டுகிறது. இந்த ரகத்தினர் எழுத்தாளார்களுமல்ல, தகுதியான வாசகர்களுமல்ல என்பதே என் அபிப்ராயம். இவர்கள் இலக்கியப்பத்திரிகை நடத்தினார்களே, கதை கவிதை கட்டுரைகள் எழுதினார்களே என்பது எதுவும் இவர்களை எழுத்தாளர்களாக்கிவிடும் என நான் கருதவிலை.

மெளனியும் தமது அநுவபத்தில் வேற்றூர் ஒன்றில் தாம் சந்தித்த ஒரு வெற்றிலை பாக்குக்கடைக்காரர் தமது ரசிகர் என்று அறிந்த நிகழ்ச்சி பற்றி எனக்குக் கூறி இருக்கிறார்.

எனது ‘ஆசை’ ஓவியத்துறையையே சார்ந்திருந்தது. ஆனால் ஒரு தமிழ் வாத்தியாரின் தூண்டுதலில் நாங்கள் அழ.வள்ளியப்பாவின் ‘பூந்தோட்டம்’ என்ற கவிதையைப் பின்பற்றி ஒவ்வொருவரும் பாடல்கள் எழுதினோம். நான் ஓரிரு நண்பர்களுக்கும் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்டு எழுதவேண்டியவனானேன். இது சுமார் 1956 வாக்கில் என ஞாபகம்.

இதற்குள் நாங்கள் சிலர் ஏற்கனவே கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். அதில் நான் ஓவியனாகவே இருந்தாலும் கதைகளையும் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கிறது.

சரஸ்வதியை அடுத்து இந்த கையெழுத்துப் பத்திரிகையின் ‘ஆசிரியர்’ தாம் வாசிக்காமல் வெறுமே சேர்க்கும் பத்திரிகை, புத்தகங்களின் வரிசையில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையையும் 1959-இன் பின்பகுதியில் சேர்க்க ஆரம்பித்தார். பத்திரிகையின் அமைப்பு, ‘கவர்ச்சி’த்தன்மையை மேற்கொள்ள மறுத்தத்தால் விளைந்த ஒரு வீர்யம் தெளிவாக என் உணர்வைத் தாக்கிற்று. ஓவியத்தை, படத்தை நீக்கி தமிழ்ப்பத்திரிகை எதையும் காணப்பழகியிராத கண்களுக்கு ‘எழுத்து’ தந்த தோற்றம் ஒரு அறைகூவல். விஷயகனத்தைத்தவிர வேறு எதையும் நம்பாமல் வெளிவருகிறது என்ற அடிப்படை ‘எழுத்து’வின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திற்று. இந்த மதிப்பின் விளைவாகத்தான் 1959 டிஸம்பர் இதழில் வெளியான நான் என்ற கவிதையை எழுத்துக்கு அனுப்பிவைத்தேன்.

இலக்கியக் கருத்துலகில் நன்கு ஈடுபட்டுப் பழகி அதில் உள்ள அனுபவங்களைக் காணும் வரை எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவுக்கு நான் எழுதிய கடிதங்கள் பவ்யமானவை.

ஏற்கனவே தனித்தமிழ், தூயதமிழ் போன்றவற்றைப் பற்றியும், உரைநடை பற்றியும், அச்சமயத்தில் பரவலாக இருந்த கருத்துகள் பற்றி எனக்கு அபிப்ராயங்கள் உருவாகியிருந்தன. அழ.வள்ளியப்பாவின் ‘பூந்தோட்டத்தை’ப் பின்பற்றி என்னோடு ‘பாட்டு’ எழுத ஆரம்பித்த, விவாதப்பிரியரான ஒரு நண்பரது தூயத்தமிழ்வாதத்திற்கு பிரதிவாதங்கள் பலவற்றைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ‘நான்’ வெளியான சமயத்தில் ஏற்பட்டிருந்தது. நண்பர் நான் சொன்னவற்றை இரசித்ததாகவோ, கிரகித்திருந்தால் அதற்கு ‘மசிபவ’ராகவோ தெரியவில்லை. வியர்த்த உணர்வுடன் அவ்வுணர்விலிருந்து விடுதலை வேண்டி அன்று அந்த நண்பரிடம் கூறியவற்றை எழுதி சி.சு.செல்லப்பாவுக்கு அனுப்பிவிட்டேன். அவர் இக்கட்டுரையை இரண்டாகப் பிரித்து முதல் பகுதிக்கு ‘சொல்லும், நடையும்’ என்று தலைப்பிட்டு 1960 ஜனவரி பிரசுரித்தார். இதைப்படித்ததும் வெங்கட் சாமிநாதன் அப்போதே சி.சு.செல்லப்பாவுக்கு என் உரைநடையின் சிந்தனையின் கனத்தைக் குறிப்பிட்டு ‘சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை’ என்று எல்லாம் பெயர் வாங்கியவர்களின் சிந்தனை அம்சமே அற்ற எழுத்துடன் ஒப்பிட்டு தாம் கடிதம் எழுதியதை சமீபத்தில்தான் ஒரு சம்பாஷனையில் குறிப்பிட்டார்.

நான் ‘எழுத்தாளன்’ ஆகிய கதை இதுதான்.

நன்றி: சொல்வனம்

Dec 27, 2012

ஆறில் ஒரு பங்கு- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

முகவுரை

ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.

இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய பந்தா bharathiar1வர்த்ததே அயநாய” வேறு வழியில்லை.

இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

- ஆசிரியன்.

அத்தியாயம் 1

மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள். புரசைவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களிலெல்லாம் மேல மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காகக் காலி செய்து விட்டு விடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரையில், அவள் தனது அறையில் இருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். அறைக்கு அடுத்த வெளிப்புறத்திலே பந்தலில், அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு கட்டிலின்மீது படுத்துக் கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக் கொண்டிருந்து, சீக்கிரத்தில் குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார். ஆனால், மகாராஜன் குறட்டைச் சத்தத்தால் வீணை சத்தம் கேளாதபடி செய்து விடமாட்டார்; இலேசான குறட்டைதான். வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது ‘பிரம்மசாரி’ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை, என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்ட மாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளூம் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய்விடுவாள். கீழே எனது தாயார், தமையனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கி விடுவார்கள். எனது தமையனார் மனைவி, வயிற்றிலே சோற்றைப் போட்டுக் கைகழுவிக் கொண்டிருக்கும்போதே, குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும். தமையனாருக்குக் கோட்டையில் ரெவினியூ போர்டு ஆபீஸிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ‘ப்ரமோஷன்’.

வஸந்த காலம், நிலாப் பொழுது, நள்ளிரவு நேரம், புரசைவாக்கம் முழுதும் நித்திரையிலிருந்தது. இரண்டு ஜீவன்கள்தான் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்றொன்று அவள்.

கந்தர்வ ஸ்திரீகள் ‘வீணை’ வாசிப்பதுபோல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறு இருக்கும். கதையை வளர்த்துக் கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தி எடுத்துக் கொண்டு போய் அவள் வசம ஒப்புவித்து விட்டான். அடடா! அவளது இசை, எவ்வளவு நேரம் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்தில். அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் ‘ராவ் பகதூர்’ என்ற பட்டம் பெற்றவர். சுதேசியம் தொடங்கும் முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டார். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறேன் என்றால் அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசியத் தலைவர்கள்மீது ‘ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினாற் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ்விக்கினங்களில் பெரும்பானமையானவை என்னாலேயே உண்டாயின.

நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். “வேத கால முதலாக இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகள் எல்லாரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாஸனும், சக்ராசாரியரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்று வரையில் இருந்த பாரத தேசத்தார் அனவைரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூடபக்திகள்” என்பது முதலான ஆங்கிலேயே ‘சத்தியங்கள்’ எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்து விட்டன. ஆனால் கிறிஸ்துவ பாதிரி ஒரு வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக் கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து விடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விஷயங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப் போவதில்லை. சுருக்கம் : நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி ‘ஞானஸ்நானம்’ பெறவில்லை. பிரம்மா ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.

சிறிது காலத்திற்கு அப்பால், பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் பொய், அங்கே பிரம ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலையொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன். பிரம ஸமாஜத்தாரின் ‘உபதேசி’களில் ஒருவனாக வெளியேற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப் ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாக சென்னப் பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி, எனது ஜாதியார் என்னைப் பலவிதங்களில் இம்சை செய்தார்கள். இந்த இம்சைகளினால் எனது சித்த உறுதி நாளுக்கு நாள் பலம் அடைந்ததேயல்லாமல், எனக்கு மனச்சோர்வு உண்டாகவில்லை. எனது தகப்பனார் - இவர் பெயர் துபாஷ் ராமச்சந்திர நாயுடு - வெளிவேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தார்; எனினும், உள்ளத்தில் பிரம்ம ஸமாஜப் பற்று உடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாஸமும, எப்போதும் உபநிஷத்துக்கள் படிப்பதில் சிரத்தைக் கொண்டிருப்பது கண்டு, அவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகையுண்டாயிற்று. வெளி நடப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரேயன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸௌகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்பு பாராட்டினான். நான் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக் கொள்வது வழக்கம். ‘15 ரூபாய்’க் குமாஸ்தாக்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக் கொள்ளுவதில்லை. இது கூடத் தமையனுக்குக் கோபம உண்டாகும். “ராஜ புத்ருடு வீடு, தொங்க விதவா! தலலோ மகா ஆடம்பரமுக பகடி வீடிகி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான். இப்படியிருக்க ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக் குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டும் என்றான். பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்த பிறகு மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் முடித்த பின்பு நான் எனது கொள்கைப்படி பிரம்மா ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ் பகதூர் சுந்தரராஜுலு நாயுடுக்கு என் மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்து விட்டது. ஆதலால் விவாகம் தடைபட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை எப்படியேனும் சீர்திருத்தி, எனக்கே தனது மகளைப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய இச்சை.

வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என் உள்ளத்திலோ, இரண்டு எரிமலைகள் ஒன்றையொன்று சீரியெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே, ஒன்று காதல், மற்றோன்று - பின்பு தெரிய வரும். வீணைத்தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில், எனது பின்புறத்தில் ஒரு ஆள் வந்து நிற்பது உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன், மீனாம்பாள்!

இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோமென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமேன்ரும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பலமுறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் மஞ்சத்தின் மீது உட்கார்ந்தாள்.

“மீனா! இன்று உன்னிடத்திலே ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்’ என்றேன். ‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.

‘என்னது? சொல்லு.”

‘நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்து கொள்ளப் போகிறாய் என்ற விசேஷம்.’

‘ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்?” என்று கேட்டேன்.

‘வந்தே மாதரம்’ என்றாள்.

மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமே தெரியுமாதலால், அவள் சொல்லியதிலிருந்து அதிக வியப்பு உண்டாகவில்லை.

அதன்பின், நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்: “ஆம், பாரத தேசத்தை இப்போது பிரம்மசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை இருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைய ஒரு பாழுங்காடு இருப்பது போலாகிவிட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வௌவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதை பிரமச்சாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமசாமி முதலியார் மகனாகவேனும் பிறவாமல் நம் போன்ற சாதாரண குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்து கொண்டால், இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிக் போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பது போல, இந்த நரிக் கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது, அவனுக்குக் கண் பிதுங்கிப் போய்விடுகிறது. அவனவனுடைய அற்ப காரியங்கள் முடிவு பெறுவதே பகீரத ப்ரயத்தனம் ஆய்விடுகிறது. தேச காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரம்மச்சாரிகள் வேண்டும்; ஆத்ம ஞானிகள் வேண்டும்; தம பொருட்டு உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்தச் சுதேசியம் கேவலம் ஒரு லௌகீக காரியமன்று. இது ஒரு கர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மதியாகித் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரம்மசரிய விரதத்தை கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்”

மீனா: “ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறாய்!”

‘பார்த்தாயா, பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய்? நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை ஏற்பட்டிருக்கிறது. அவ்விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றேன். அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற்புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

‘நாயன்னா வந்து விட்டார். நான் போகிறேன்’ என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள்.

குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளையெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரை நாழிகைக்கெல்லாம் தமது தொழிலை ஆரம்பித்து விட்டார். இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; மற்றொன்று அவள்.

அத்தியாயம் - 2

மேல் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி வந்ததற்கு அப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்திற் பல மாறுபாடுகள் உண்டாயிருந்தன. ‘வந்தே மாதரம்’ மார்க்கத்தில் நான் பற்றுடையவன் என்பதை அறிந்த ராவ் பகதூர் எனக்குத் தமது கன்னிகையை மணஞ் செய்து கொடுப்பது என்ற சிந்தனையை அறவே ஒழித்துவிட்டார். சில மாதங்களில் அவர் தமது சாஸ்வத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசைவாக்கத்துக்கு வருவதை முழுவதும் நிறுத்தி விட்டார். இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரன்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் ஏற்பட்டது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை. ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளோ? பெண்களே வஞ்சனையின் வடிவம் என்று சொல்லுகிறார்களோ, அது மெய்தானா? “பெண்ணெனப்படுவகேண்மோ உள நிறைவுடைய வல்ல, ஓராயிர மனத்தவாகும்” என்று நான் சீவக சிந்தாமணியிலே படித்தபோது, அதை எழுதியவர் மீனாம்பாளைப் போன்ற ஸ்திரீயைக் கண்டு அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே. இப்போது, அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால், அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!

‘அடா மூடா! எனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரம்மசரிய விரதத்திலே ஆயுளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வளர்த்து வருகின்றாய். மீனா மற்றொருவனை மணஞ் செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண் மீது இவ்வாழ்க்கையில் மையல் கொள்ளப் போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு அவன் மனைவியை விடுவாளாயின் உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ என்று சில சமயங்களில் என்னுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.

மீண்டும், வேறொரு விதமான சிந்தை தோன்றும்: “அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ் செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராணனோடு ஒன்றுபட்டவளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி அந்தத் தர்மத்திற்கு இடையூறு உண்டாகும் என்று அஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாமலிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? எது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?”

அப்பால் ஒரு உள்ளம்… “அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்றோ பிள்ளைகள் வேண்டும்? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே! அமிருத வெல்லத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம சேவை பெரிதா, ஸ்திரீ சேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”

பிறகு வேறொரு சிந்தனை: “எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக்கும். ‘நீ தர்ம பரிபாலனம் செய். என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸீகத் தலைவனாகக் கொண்டு நோன்புகள் இழைத்துக் காலம் கழிப்பேன். ஸ்வர்க்கத்திலே நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அவள் உறுதி தருவாளானால், இந்த் ஜன்மத்தில் ஜீவியம் வெகு சுலபமாய் இருக்கும்.”

அப்பால்: “ஒரேயடியாக, இவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்துவிட்டது என்ற செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத்தொடர் ஒன்றுமேயில்லாமல், தர்ம சேவையே தொழிலாக நின்று விடலாம்.”

பின் மற்றொரு சிந்தை: - “ஆ! அப்படி ஒரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரியதாய்விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டது என்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கையுண்டா?”

அப்பால் பிறிதொரு சிந்தை: “அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பு என்றதோர் நிலையும் உண்டா? வஞ்சனை கோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.’

இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி எனது அறிவைக் கலக்கின. ஆன்ம உறுதியில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக்கின்றவர், ஒரு கணம் சாக்ஷி போல் நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பாராயின், மிகுந்த வியப்பு உண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏன் உண்டாகின்றன?

“மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி”

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்குத் தருகின்றேன். அஹ்டைப் படித்துப் பார்த்த பொழுது என்னுள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

ஓம்.

தஞ்சாவூர்
உடையாய்,

இக்கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்தில் பார்க்கப் போவதில்லை.

‘நாயன்னா’ வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னார் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்து விட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து, காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து விட்டிருக்கிறார். நீ ஒருவேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாய் என்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வர முடியாமல் செய்ய, இவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் ‘நாயன்னா’வின் பணத்தின்மீது கண் வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான். எனது உள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும், அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணைப் பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிருக்காது என்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு அந்த மிருகம், “எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக்ஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கேட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்” என்று மறுமொழி கொடுத்தனுப்பி விட்டது.

அநேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின்மீது கண் மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாதபோது, கனவு எப்படி வரும்? அஃது காணவுமில்லை, நினைவுமில்லை; ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும் கரிய மேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும் கையில் சூலமுமாகக் காளிதேவி வந்து தோன்றினாள். நான் நடுங்கிப் போய், ‘மாதா என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்’ என்று கூறி வணங்கினேன். உடனே திடீரென்று அவளுடைய உருவம் மிக அழகியதாக மாறுபட்டது. அந்த ஸௌந்தர்யத்தை என்னால் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூரியப் பிரகாசம் போன்ற தேஜோ மண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்போது தேவி எனக்கு அபயப்பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: “குழந்தாய் உனது அத்தான் கோவிந்தராஜனை எனது சேவையின் பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெற முடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில், வடமேற்கு மூலையில், தனியாக ஒரு பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நானம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே!” மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.

காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்தில் இருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டுவிழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்கு திருப்தி செய்வித்த பிறகு அவள் உன்னை நான் இருக்குமிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்.”

இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.

அத்தியாயம் 3

மீனாம்பாளுடைய ‘மரண ஓலை’ கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கமாகச் சொல்லுகிறேன். அந்த ஆற்றாமையால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக் கொண்டு துறவியாக வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். ‘வந்தே மாதரம்’ தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால் என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிலிடும்படியான முயற்சிகளிலே நான் கலங்கவுமில்லை; ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்தினால், ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை. அங்கங்கே சில சில பிரசாரங்கள் செய்ததுண்டு. இது பற்றிச் சில இடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள். இதனால், நான் ஜனங்களிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்திலும் பிரதிகூலமே அதிகமாக விளங்கலாயிற்று. இதையும் தவிர எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.

“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன, மூடன் ‘நான் செய்கின்றேன்’ என்று கருதுகின்றான்” என்ற பகவத்கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண் கர்வம், நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்திற்கும் பயன்படாமற் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டு இழைப்பதற்கு என்னை மாயா வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.

எனவே பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால் எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் நின்று போய் விட்டன. பாதசாரியாகவே பல இடங்களில் சுற்றி விட்டு, பாதசாரியாகவே லாஹூர் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கே லாலா லஜபதி ராய் போன்ற பலரைப் பார்க்கவேண்டும் என்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகிக் கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்களுக்குச் சோறு, துணி கொடுக்கவேண்டுமமென்ற கருத்துடன் தான் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு ‘நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை செய்யக் கூடாத?’ என்று கேட்டார்.

ஆ! ராமச்சந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு, ஜனங்கள் துணியும் சோறுமில்லாமல்,, பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதையுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்? லாலா விடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய் சிறிது காலம் அந்தக் கடமையைச் செய்துகொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன். கவனி. தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. நரகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. தேவலோகம் நரகலோகமாக மாறியிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது. பகவான் ராமச்சந்திரன் ஆண்ட பூமி, நான் அங்கிருந்த கோரங்களையெல்லாம் உங்களிடம் விவரித்துச் சொல்ல வேண்டும். புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை ஒரு சிறிது பாவம் உண்டாகக் கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது? உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம், எத்தனை நாள் உறங்கி இப்படி அழியப் போகிறீர்களோ? அட பாப ஜாதியே, பாப ஜாதியே! இது நிற்க. ஓரிரண்டு மாதங்களுக்கு அப்பால், லாலா லஜபதிராய் எங்களுக்குக் கடிதம் எழுதி, இனி அந்த வேலை போதும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.

கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கனவே என் மனதில் நெடுங்காலமாய் வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின், நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினர் என்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்திலே மிகுந்த தளர்ச்சி உண்டாயிற்று. தென்னாட்டைப் போலவே வட நாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாகச் சிலர் கருதப்படுகின்றனர். தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும். ஆனால் இவர்களிலேயே பலர் மாட்டிறைச்சி தின்பது போன்ற அனாசாரங்கள் வைத்துக் கொண்டிருபதால், ஹிந்து ஜாதி இவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசுமாடு பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் ஹிந்துக்கள் புராதனகால முதலாகவே கோ மாம்ஸத்தை வர்ஜனம் செய்துவிட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிபொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகின்றது. இது முற்றிலும் நியாயம். ஆனால் பஞ்சம், நோய் முதலியப் பொதுப்பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். “ஹிருதயமறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமே!”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” நாம் பள்ளர் பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். ஸாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா ஆட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர் மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.”

1200 வருஷங்களுக்கு முன்பு வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இம்ஸை பொறுக்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப் பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து, நூற்றுக்கணக்கான மனிதர்களையும் முக்கியமாக – திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸன்னிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் – ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் _ ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.

கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுகிறார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்றவரை முயற்சிகள் செய்யவேண்டும் என்ற அவா எனது உள்ளத்தில் வளரலாயிற்று. வங்க நாட்டில் அசுவினி குமார தத்தர் என்ற தேசபக்தர் ஒருவர் இருப்பதாகவும், அவர் இந்த பிரதேசங்களில் ‘நாம் சூத்திரர்’ (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வுபடுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க ஆசை உண்டாயிற்று.

அத்தியாயம் 4

கலகத்தாவுக்கு வந்து சில தினங்கள் இருந்துவிட்டு பாரிஸாலுக்கு போய்ச் ஏர்ந்தேன். அங்குப் போய் வழி விசாரணை செய்துகொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாசலில் ஒரு தக்காளி பாபு நின்று கொண்டிருந்தார். அவரிடம் ‘அசுவினி பாபு இருக்கிறாரா?’ என்று கேட்டேன். “இல்லை, நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்” என்றார். ‘அடடா’ என்று சொல்லித் திகைத்து நின்றேன். காஷாய உடைகளைக் கண்ட அந்தப் பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய் தாகசாந்தி செய்வித்து விட்டு, ‘யார், எவ்விடம்’ என்பதையெல்லாம் விசாரணை செய்தார்.

நான் எனது விருத்தமெல்லாம் தெரிவித்துவிட்டு என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும் பாபு, நம்மில் ஆரில் ஒரு பங்கு ஜனக்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமேயானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?” என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பிவிடும் போலிருந்தது. தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாபமடைகிறார் போலும் என்று நான் நினைத்து “ஐயா உம்முடைய நெஞ்சு போல் இன்னும் நூறு பேருடைய நெஞ்சு இருக்குமானால் நமது நாடு செம்மைப்பட்டு விடும்” என்றேன்.

“ஸ்வாமி, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணையுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை. ஹீன ஜாதியாரைக் காக்க வேண்டும் என்கிற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை உண்டு என்பது மெய்யே., அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத்திருக்கிறென். ஆயினும், என் முகத்தில் தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே என்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன் இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி * அம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரக் கேட்டிருக்கிறேன். தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து வருத்தமுண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!” என்று சொல்லி திடுக்கென்று பேச்சை நிறுத்தி விட்டார். அப்பால் என் முகத்தை ஓரிரண்டு தடவை நன்றாய் உற்று நோக்கினார். அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

“ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்.

“ஸ்வாமிஜீ, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாசி. எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது, அதில் எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது.. உங்களிருவருடைய முகமும் ஒன்று போலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.

மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒரு விதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு, அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்தப் பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?

“மீனாம்பா – அட, போ! மீனாம்பாள் இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே! ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இருந்தாள்!” என்பதாக மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடியது.

“ஸதீச பாபு! நானும் மதராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லிய யுவதியைப் பற்றிக் கேட்கும்போது, எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியை குறித்து உமக்கு வருத்தமுண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்” என்றேன்.

கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு. ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்தீக் கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்ரையெல்லாம் இடையீட்டுக் கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விர்ஸமாயிருக்கும் என்று அஞ்சி, இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊகத்தாற் கண்டுகொள்ள வேண்டும், ஸதீச பாபு சொல்லலானார்:

“அந்த யுவதிக்குத் ‘தாஞ்சோர்’. அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளைத் ‘தீன மாதா’ என்று பெயர் சொல்லி அழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால் அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவ்ள் ஒரு போளீஸ் பென்ஷன் உத்தியோகஸ்தருடைய குமாரியாம். அவளது அத்தை மகனாகிய ஒரு மந்த்ராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டிருந்ததாம். அவ்வாலிபன் ’வந்தே மாதரம்’ கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து அவள் தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று ஒரு பச்சிலையைத் தின்று விடவே, அவளுக்கு பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப் போய்விட்டது. அப்பால் தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத்தாலோ, அவள் இறந்து விட்டதாக எண்ணி, ஸன்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்.

“ஏழை மனமே, வெடித்துப் போய் விடாதே. சற்றுப் பொறு ” என்று என்னால் கூடியவரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. “ஐயோ, மீனா, மீனா!” என்று கூவினேன். பிறகு ’ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும், சொல்லும்’ என்று நெரித்தேன்.

ஸதீச சந்திரனுக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. “இப்போது ஒன்றுமில்லை. சௌக்கியமாகத்தானிருக்கிறாள்” என்றார்.
“இல்லையில்லை. என்னிடம் நீர் உண்மை பேசத் தயங்குகிறீர். உண்மை தெரிந்தால் நான் மிகத் துன்பப்படுவேன் என்று எண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரக வேதனைக்கு உட்படுத்துகிறது. சொல்லிவிடும்” என்று வற்புறுத்தினேன்.

மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
“பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத்கீதையின் மீதும் ஆணையிட்டிருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளீயாமல் சொல்லும்” என்றேன். இந்த ஸத்தியம் நவீன வங்காளத்தினரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் எனொஅது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டாயிற்று.

“போமையா, மூட ஸந்யாஸி, என்ன வார்த்தை சொல்லி விட்டீர்! இதோ, உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக் கொள்ளும். அந்தப் பெண், இங்கு நாம சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில், தீராத குளிர் ஜ்வரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாள் என்று சொல்லி விட்டனர். அதற்கு மேல் அவள் காசியில் போய் இறக்க விரும்பியது பற்றி, அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார், உண்மை சொல்லி விட்டேன், போம்” என்றார்.

“காசிக்கா?”
“ஆம்.”
“காசியில் எங்கே?”
“அஸீ கட்டத்தில்.”
“அஸீ கட்டத்தில் எந்த இடம்?”
“அஸீக்குத் தெற்கே ‘நர்வா’ என்ற இடம் இருக்கிறது. அதில் பல தோட்டங்களும் பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கியிருக்கிறார்.”
“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து வீசியெறிந்தார். மானத்தைக் கண்டதார், மரியாதையைக் கண்டதார்?அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறிவிட்டேன். வழியெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய் காசிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அத்தியாயம் – 5

காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எனது நன்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசஞ் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்பதுண்டானால், நான் சொல்லப் போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்கள் எல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போய் இறங்குவதுண்டு. அங்குக் கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிறதல்லவா? அங்கு கீழ் மேற்கு மூலையிலிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்கு சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள். சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்டபிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தைப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்து, பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந்தறுவாயில் இருந்தது. வண்டியின் மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு வங்காளி உட்கார்ந்து கோண்டிருந்தார். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் படத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால், அந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதரை நோக்கி, “யாரோ ஒரு ஸன்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் வரச்சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த நாற்காலியில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள் இருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.

அசுவினி பாபு: “டாக்டர் ஸாஹப்! நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?”
டாக்டர்: ‘மிகவும் துர்ப்பல நிலையிலேதான் இருக்கிறாள். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால் பிறகு விபத்தில்லை” என்றார்.

காதில் விஷந்தடவிய தீயம்பு போல இந்த வார்த்தை கேட்டது. “மீனா! மீனா! மீனா!” என்று அலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் என்னை மீறி அலறிய சத்தம் கேட்டு, அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நான் இருந்த பாரிசமாக விரைந்து வந்தார்கள். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறூ தேற்றிக் கொண்டு எழுந்து நின்று வணங்கினேன். அவர், ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன? ஏன் சத்தம் போட்டீர்கள்?” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
“பாபு, நான் ஸன்யாஸியல்ல. நான் திருடன். மஹா நிர்ப்பாக்கியமுள்ள பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பாளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.

உடனே அவர் என்னை மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, “நேற்றெல்லாம் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடும் என்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது” என்றார்.

பிறகு என்னிடம் ‘கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்’ என்றார். அப்படியே உட்கார்ந்தேன். ‘கண்ணை மூடிக் கொள்ளும்’ என்றார். இரண்டு கண்களையும் மூடிக் கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையாலே தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போல் இருந்தது. ‘அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினுமினியாள் மரணாவஸ்தையிலிருக்கிறாள். அவளைப் பார்க்கும் முன்பாக உறக்கம் வருகிறதே! இவர் என்னை ஏதோ மாயமந்திரத்துக்கு உட்படுத்துகிறார். எனது பிராண ரத்தினத்தைப் பார்க்காதபடி கெடுத்துவிட முயலுகிறார். இந்த மாயைக்கு உட்படலாகாது. கண் விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்துகொண்டு, எழுந்து நிற்க முயன்றேன். ‘ஹும்’ என்றொரு சத்தம் கேட்டது. விழித்து விழித்துப் பார்க்கிறேன். கண்ணைத் திறக்க முடியவில்லை. மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.

விழித்த பிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். “மீனா எங்கே? மீனா சௌக்கியமாயிருக்கிறளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன். ‘எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று மறுமொழி கூறினான். சாதாரணமாக எப்போதும்போல் இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டு மீனா இருக்குமிடம் ஓடிப்போய் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும், அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரமும் நீங்கிப் போயிருந்தது. ‘பாரிஸால் கிழவன்’ செய்த சூது என்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக்கெல்லாம் அசுவினி பாபு, தாமே நானிருந்த அறைக்குள் வந்து, என் எதிரே ஒரு நாற்காலியின் மீது வீற்றிருந்தார். அன்னை அறியாமல், எனது இரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.

’ஓம்’ என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். “பால ஸந்நியாசி, கபட ஸந்நியாசி, அர்ஜுன ஸந்நியாசி, உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார். மீனா பிழைத்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.

“முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?” என்று கேட்டேன்.

“பூரணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்குச் சமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது” என்றார்.

அப்படியானால் நான் போகிறென். அவள் இறந்து போகப் போகிறாள் என்ற எண்ணத்திலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் போய் வருகிறென்” என்று சொன்னேன்.

அசுவினி பாபு கடகடவென்று சிரித்து விட்டு,பக்கத்திலிருந்த சேவகனை நோக்கி, “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு” என்று ஏவினார். அவன் முகம் கழுவ நீரும் அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நானம் செய்து முடிந்ததுபோல, எனது உடலிலிருந்து அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும் சௌக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.

“இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?” என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்.

“அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அவளிடம் விடை பெற்றுக் கொண்டு செல்கிறேன்” என்றேன்.

திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தா ரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷிபத்தினியுமாக வேத யக்ஞம் செய்தது போல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவின் ப்ரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்” என்றார்.

”காளிதேவியின் கட்டளை என்னாகிறது?” என்று கேட்டேன். இந்த ஜன்மத்தில் நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாது என்று காளீ தேவி மீனாளுக்குக் கூறி அவளை விஷம் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன்.

அதற்கு அவர், ‘அந்த செய்தியையெல்லாம் நான் அறிவேன். மஹாஸக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டுமென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது மீனாம்பாளுக்கு ஜ்வரமுண்டாய் தந்தை எண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே. அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினாள். ஆனால், மீனாம்பாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிறது என்ற தாபத்தால் படபடப்புண்டாகி உனக்கு ஏதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு, காஷாயம் தரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு ஸன்னியாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும் இதுவெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப்பிரிவு அவசியமாயிருந்தது. இப்போது நான் போகிறேன்.இன்று மாலை நான்கு மணிக்கு பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

மாலைப் பொழுதாயிற்று. நான் ஸன்யாசி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர், ஸ்த்ரீ ரூபங் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது.

வந்தே மாதரம்

*மந்த்ராஜியம்மாள் என்பது மதராஸ் பிரதேசத்து ஸ்த்ரீ என்று பொருள்படும். ’மதராஸ்’ என்பதற்கு வடநாட்டார் ’மந்த்ராஜ்’ என்பார்கள்.

நன்றி: சொல்வனம்

Dec 26, 2012

மகான்கள் – கோபி கிருஷ்ணன்

    நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.

    இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள்     எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் gopiபாட்டி வீட்டில்     புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன     என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த     அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க     விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த     என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது.     சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு     நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு     நினைத்தது கிடையாது.

    விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க     சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’     என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும்     முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து     விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு     அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு     திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி,     மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.

    மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத்     திருப்புவோம்.

    வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன்     சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர்     சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று     போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு     சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக     ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்”     என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர     பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர்     உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு     பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு     உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.

    ” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.

    ” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.

    ” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.

    ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க்     கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம்.     ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச்     சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட்.     மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக்     கொண்டிருந்தோம்.

    ” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி     பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன்     தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை     வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

    ” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

    வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.

***

நன்றி : தமிழினி, வாசன்,ஆப்தீன்

Dec 25, 2012

கு. அழகிரிசாமியின் அரிய புகைப்படங்கள்

எழுத்து வேலையில்

ku2

சீதாவுடன் - 19 Jan 1956

gA WITH SITA

பேச்சு

PHOTO-4 (3)

நவசக்தியில்

At Navasakthi

பம்பாய்த் தமிழ் சங்கத்தில் - Dec 1, 1963

download

Sri Lanka, Hakkalai Gardens, Sep 15, 1967

Sri Lanka, Hakkalai Gardens, Sep 15, 1967

நன்றி : sarangarajan alagiriswamy

Dec 22, 2012

கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா

தங்கள் தங்களுக்கென அவர்களாலேயே உருவாக்கப்பட்ட சட்டப் புத்தகங்களுடன் ஒவ்வொருவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். வீடு, கடை, வீதி, மலசலகூடம், குளியலறை, குசினி, வேலைத்தளம் என எல்லா இடங்களிலும் சட்டப் புத்தகங்களை இறுக்கி அணைத்தபடி இருந்தார்கள். அதில் இடப்பட்டிருந்த ஓட்டையினூடு எதிர்ப்படுவோரை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இயல்பாகிப் போன நடையும், அசைவுகளும் சட்டப்படி இருக்கும் போது மட்டுமே அவர்களது இதயம் சாதாரண வேகத்துடன் துடிப்பதுடன், உணவு ஜீரணிக்கும், கால்கள் நிலம்பட நடக்கும்.

மீறிய நடை பாவனையைக் காணும்போது தண்டனை வழங்க முடியாத கையாலாகாதா தனம் மேலோங்கும். ஏனைய நீதிபதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் புத்தகங்களின் படியும் இது குற்றமாகுமோ? என விசாரித்து, அது பற்றிய குறிப்பு இல்லாத பட்சத்திலும், in_the_beginning_modern_art_painting_pablo_Saborio2012நடத்தை சரியானது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்திலும் விவாதித்துக் கொள்வார்கள். அவனும், அவனது புத்தகமும் அநீதியானதென நிராகரிக்கப்படும் வரை விவாதம் தொடரும். பின் தன் சட்டங்களுக்கு ஒப்பான புத்தகத்தைக் கொண்டிருப்பவனை நெருங்கி அவனது நடை பாவனை சட்டத்தை மீறியதென அறிக்கை விடுவார்கள். அது பறக்கும் காற்றுப் போகும் திசையெங்கும் செய்திபரப்பும் மரம் - தூண் - கம்பி - வேலி - வாகனம் - கட்டிடம் எல்லாவற்றிலும் மோதிக் கிழிந்து துண்டு துண்டாகும் வரை அல்லது காய்ந்து முறுகி சருகாக நுண்ணிப்போகும் வரை பறக்கும்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நீதிபதிகள்தான், தாங்களே சட்டங்களை வரையறுத்துக் கொண்டு சம்பளமில்லா கடமையிலீடுபட்டிருந்தார்கள். ஏனைய தொழிலை விட நீதிபதி பதவி இலகுவானதாகவும் பகுதி - முழு நேரக்கடைமைக்குரியதாகவும் இருந்தது. வைத்தியனாக - கைமருந்துகளுடன், பொறியியலாளனாக - அளவுத்திட்டத்துடனும், உயிரியலாளனாக - மரக்கன்றுடனும், ஆசிரியனாக - பேனையுடனும், வியாபாரியாக - தொந்தியுடனும், அரசியல்வாதியாக - பொய்யுடனும் அலைந்து திரிந்தாலும், நீதிபதிகளாக தங்கள் தங்கள் சட்டப்புத்தகங்களைப் புரட்டி மற்றவர்களினுடைய வாழ்க்கையைத் தோண்டிக் கிளறி கூறுபோட்டு குறைகளைக் கண்டுபிடித்து குற்றப்பத்திரிகை அனுப்புவது போல இலகுவான, சுவாரசியமான தொழில் எதுவுமில்லை.

தனக்கென உரித்தான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியாமல் நீதிபதிகளாக ஆசைப்பட்டவர்கள், கற்காலம் முதல் வழங்கிய மதப்புத்தகங்களையும், அட்டவணைகளையும் தங்கள் தங்கள் சட்டப்புத்தகங்களாக பிரகடனப்படுத்தி அதில் ஓட்டை இட்டு எல்லோரையும் கவனித்தார்கள். சட்டப்புத்தகங்களில் இடப்பட்டிருந்த ஓட்டை அவர்கள் மட்டும் நுழைந்து கொள்வதற்குப் பயன்பட்டது.

நீதிபதிகள் பலரினால் குற்றமாகக் குறிப்பிடப்படும் சட்டத்தை சமூகச் சட்டமாக அமுல்படுத்தினார்கள். அதனூடாகத் தண்டனை வழங்கி விட எத்தனித்ததுடன் அவர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்பினார்கள்.

முடி நரைத்து, பற்கள் காவியேறிய கிழட்டு நீதிபதிகள் சிலர் தூசு படிந்து, கறையான் அரித்துக் கிடந்த தங்கள் சட்டப்புத்தகங்களைத் தட்டி, பகல் நீண்டிருந்த அந்தப் பின்னிரவுக் காலமொன்றில் அறிக்கையொன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். தூசுகள், மூக்குள் நுழைந்து பிசிர்களை ஆட்டி தும்மலை உண்டு பண்ணி சட்டப்புத்தகங்கள் மீது எச்சிலைத் தெளித்து ஈரப்படுத்தினாலும், குற்றப்பத்திரத்தைத் தயார் பண்ணி முடிப்பதில் மும்முரமாய் இருந்தார்கள். களைப்பு, வேலைக்காலங்களைத் தின்றுவிடக் கூடாது என்பதில் விழிப்பாய் இருந்த, தலைமயிர் பழுத்துப்போன கிழவிகள் இஞ்சி கலந்த சாயத்தைப் பகிர்ந்து கொண்டோ, சிறிய உரல்களில் வெற்றிலையை இடித்துக் கொண்டோ இருந்தார்கள். அவர்களில் பலருக்கு பொக்கைவாய் - கன்னங்கள் உட்குழிந்து போயிருந்தது. அவர்களெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகக் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களாம். அக்கிழட்டு நீதிபதிகளின் பின்னால் பதவி உயர்வில் ஆசைகொண்டு காத்துக்கிடந்த இளைய நீதிபதியின் வால்களைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் அனைவரதும் அயராத உழைப்பினால் இரவு பகலாகத் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரம் இரு இடங்களுக்கு அதிகாலையிலேயே அஞ்சல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரம்

இந்து, சமூக, நீதி, நிருவாக வலயத்தின் சமூக நீதிமன்றம், சட்டமா அதிபர் இலக்கம்: டிகே 77-15-01

சமூக நீதிமன்றத்தின் குற்றவழக்கு

இலக்கம் 0027 - 74320

இந்து சனநாயக சோசலிகக் குடியரசு எதிர்

பழனியான்டி சுகுமார்:

சற்குணம் சதீஸ்குமார்:

இந்து சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டமா அதிபர் கதிவேல் கணபதி அவர்களின் கட்டளைப்படி உங்களுக்கெதிராகக் குற்றப்பகர்வு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கெதிரானக் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:-

1) இந்த நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிறப்பு - இறப்பு - திருமணப் பதிவாளர் காரியாலயம் இருந்தும், ஆலயங்கள் இருந்தும் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணமோ, சங்கு முறையான திருமணத்தையோ நிகழ்த்திக் கொள்ளாமல், 2001ஆம் ஆண்டு மாசி மாதம் 08ம் திகதி முதல் இருவரும் இணைந்து, இந்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தங்கள் குடியிருப்பையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் இருவரும் ஆண்களாக இருந்தும் கூட்டாக ஒத்தியைந்து சமூகக் கட்டுமானத்தை உடைப்பதுடன் எதிர்கால சந்ததியினரிடையே கண்ணியம் தொடர்பான எண்ணக் கருவில் விரிசலை ஏற்படுத்த முனைவதாகவும் உள்ளது. இவைகள் பெண்கள் மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வாத்சாயனரையும் அவமதிப்புக்குள்ளாக்குவதாகக் கருதப்படுகின்றது. இதன் காரணமாக ஒத்தியைந்த எங்கள் சட்டப்புத்தகத்தின் 5(1) (ஆ) பிரிவின் கீழ் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள்.

2) இந் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிறப்பு - இறப்பு - திருமணப் பதிவாளர் காரியாலயம் இருந்தும், ஆலயங்கள் இருந்தும் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணமோ, சடங்கு முறையான திருமணத்தையோ நிகழ்த்திக் கொள்ளாமல், 2001ம் ஆண்டு மாசி மாதம் 08ம் திகதி முதல், இணைந்து வாழ்கின்றீர்கள். நீர் இருவரும் இரு வேறுபட்ட சாதியினராகக் காணப்பட்ட போதிலும் ஒருவரை ஒருவர் மணம் புரிந்துள்ளீர்கள். இது இரு இனக்கூட்டத்தாரிடையே ஒற்றுமையின்மையை, அல்லது காழ்ப்புணர்ச்சியை, அல்லது வெறுப்பை ஏற்படுத்துவதற்காக எத்தனிக்கப்பட்ட முயற்சியாகும். இது இருக்குவேதம் 10ம் மண்டலம் புருஷ சூக்தத்துக்கு அமையவும், மனுதர்மச் சட்டத்தின் படியும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சட்டப்புத்தகத்தின் 2(1) பிரிவின் கீழ் நீங்கள் இருவரும் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள்.

கையொப்பம்

சமூக கூட்டவாதி

2002ஆம் ஆண்டு 01ம் மாதம் 10ம் திகதி.

குறிப்பு:-

இக்குற்றப் பத்திரத்திலடங்கும் குற்றச் சாட்டுகளுக்காக இந்து, சமூக, நீதி, நிருவாக வலயத்தின் சமூக நீதிமன்றத்தால் குற்றவாளிக்கெதிராக வழங்கப்படவுள்ள தண்டனைக்கு உதவும் முகமாக கீழ்வரும் தண்டனைகளைப் பரிந்துரை செய்கின்றோம்.

1) மொட்டையடிக்கப்பட்டு, கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி, செருப்பு மாலை அணிவித்து, கழுதை மீது ஊரை வலம் வரச் செய்தபின் முச்சந்தியில் கல்லால் அடித்துக் கொல்லப்படுதல்.

2) கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மக்கள் கூட்டத்தின் முன், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தள்ளுதல், அல்லது இவர்களின் தலை மட்டும் தெரியும் வண்ணம் டயர்களுள் இட்டு பெற்றோல் ஊற்றி எரியூட்டல்.

3) மக்கள் குழுமி இருக்கும் போது குற்றத்தை உணரும்வரை முகமூடி இடப்படாமல் சாகும்வரை தூக்கிலிடப்படல்.

மேற்படி இரு நபர்களுக்கும் எவ்வித காரணங்கொண்டும் மன்னிப்போ, அல்லது தண்டனைக் குறைப்போ மேற்கொள்ளக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளோம். தவறும் பட்சத்தில் இது போன்ற ஓரினச் சேர்க்கையாளர்கள், அல்லது சாதியை மீறுபவர்கள் சமூகத்தில் அதிகரித்து விடுவார்கள் என்பதையும், சமூகக் கட்டமைப்பு சிதைவுறும் என்பதையும் தங்கள் கவனத்தின் கீழ் கொண்டு வர விரும்புகின்றோம்.

உண்மையுள்ள,

சமூக நீதிபதிகள்

1..........................

2..........................

3..........................

மூலப்பிரதி - உயர்நீதிமன்றம்

பிரதி - எதிராளிகள்.

*****

”இன்று அவனால் எப்படியும் வேலை செய்யமுடியாது. காலையில் போக விருப்பமில்லாதவனை தள்ளி அனுப்பவேண்டி இருந்தது. சிலவேளைகளில் திரும்பி வந்துவிடுவானோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வரவில்லை. ஆனாலும் வழமையைப் போல படிப்பிக்க முடியாது. இருப்பினும் சமாளிப்பான். எப்போதும் இப்படித்தான் குழந்தைத்தனம். எனக்குத் தடிமன் என்றால் கூட பக்கத்திலேயே இருந்து கொண்டிருப்பான். யாரைக் காட்டிலும் அன்புடையவன்.

இரண்டு நாள் காய்ச்சல், நேற்று ஞாயிற்றுக்கிழமையாயிருந்தால் எனை எழும்ப விடவில்லை. இன்று கூட சமைக்கவோ, தேனீர் ஊற்றவோ வேண்டாமென உனை அனுபுவதாகக் கூறினான். எனை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில் அவனுக்கு எப்போதும் அக்கறையுண்டு.”

“எங்கள் வாரிசு பற்றிக் கதைத்தோம். வெள்ளி இரவு தொடங்கியது. சனி இரவு வரை தொடர்ந்தது. இருவரும் பெண்களாய் இருந்திருப்பின் ஆணின் அணுக்களைப் பெற்றுக் கொண்டு ஒருவரின் கர்ப்பப்பையில் வளர்த்து பிரசவித்திருக்கலாம் என நினைத்தோம். இக்கதை ஆரம்பமானது முதல் என் முகம் மாறி, உடல் சூடாகி இருந்ததை அவதானித்தானாம். “காய்ச்சலா...” இல்லை. அந்த ஏக்கமும், சிந்தனையும் தான் எனது காய்ச்சலுக்கு மூலக்காரணம் எனக் கூறினான். என்னால் அதை வரையறுக்க முடியவில்லை.”

குழந்தை எங்களில் ஒருவரின் இரத்தத்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதில் இருவருக்கும் உடன்பாடிருந்தது. கர்ப்பப்பையை யாரு வைத்துக்கொள்வதென்பதில் இன்னமும் சிக்கலுண்டு. அதிலுள்ள நடைமுறைச் சிக்கலை உணராமலேயே வாதிட்டோம். அவன் குழந்தைத்தனமானவன் என்பதும், எதையும் தாங்கிக் கொள்ள முடியாதவன் என்பதையும் நான் அறிந்திருந்ததனால் அதை நான் பொருந்திக் கொள்கின்றேன் என வாதிட்டேன். அவனது சிந்தனை கூரானது எனப்தனால் ஆண் அணுக்கள் அவனுடையதாக இருக்கட்டும் எனக் கூறினேன். அதைப் பற்றிய முடிவினை எடுத்துக் கொள்ளாமல் ”முதலில் வைத்தியரை அணுகி வசதி - செலவீனம் பற்றிக் கதைத்துக் கொள்வோம்.” கண்களை மூடி மௌனமானவன்.

”எங்கள் இருவரின்  - ஒருவரினுடைய விந்தைக் கொடுத்து பெண் ஒருத்தியை அணுகி அதைக் கருவாக்கி - குழந்தையாக்கித் தரும்படி கேட்கலாம். இதுபற்றியும் வைத்தியரும் ஆராய்ந்தபின் முடிவெடுக்கலாம். எதற்கும் முதலில் வைத்தியரை....” மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். உடன் உறங்கிப் போய்விட மாட்டான். குறைந்தது அரை மணி நேரம் புரண்டபின்பே தூக்கம் தளுவும். அவனால் தூக்கத்தை விரட்டியடிக்க முடியாது. உறக்கத்தில் கனவு காண்பதென்றால் சரியான பிரியன். அதனால் உறக்கத்தில் ஆழ்ந்து போகவிட்டு தொல்லை பண்ணாமல் நானும் உறங்கிப் போனேன்.

ஞாயிறு பகலில் இது பற்றிக் கதைக்கவில்லை. காலையில் என் நெற்றியில் முத்தமிடும்போது உடல் சூடு அதிகரித்திருந்தது கண்டு காய்ச்சல் என்பதைக்கூட அவன் தான் உறுதியுடன் கூறினான். காலை உணவு விருப்பமில்லாமல் இருந்தது. காய்ச்சலினால் சுவை அரும்புகளையும், நுகர் அரும்புகளையும் சளியடைத்திருப்பதனால் உனக்கு உணவு விருப்பமில்லாமல் போய் இருக்கின்றது. நாக்குக்கு உணர்ச்சியைக் கொண்டுவரக் காரமாகக் கறியும், மூலிகை ரசமும் வைத்துத் தருவதாயும் கூறி சமயலறையுள் மூழ்கிப் போனான். எனது காய்ச்சல் பற்றிக் கதைத்துக் கொண்டு பாடக்குறிப்பு எழுதுவதில் பின்னேரம் ஓடிப்போனதால் இது பற்றிக் கதைக்க முடியாமல் போனது. இன்று எப்படியும் இதுபற்றிக் கதைக்க வேண்டும் என நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதனுள் நுழைய அவனால் முடியாதிருக்கும். எனைப்பற்றி அதாவது உடல்நலக்குறைவைப் பற்றியே இன்று சிந்தித்துக் கொண்டிருந்திருப்பான் என்பதும் எனக்குத் தெரியும். குழந்தை பற்றிச் சிந்திக்க நேரம் இருந்திருக்காது. வேலைகளும் தலைக்கு மேலாக இருந்திருக்கும். ”சுகு அண்ணன் நீங்கள் ஏன் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது.”

“எங்கள் ஒருவரின் இரத்த வாரிசை விரும்புகின்றோம். முடியாமல் போனால் இது பற்றி யோசிக்கலாம் என்றிருக்கின்றோம்.”

“நீங்களே இன்னமும் ஏற்றுக்கொள்ளப் படாமல் தள்ளப்பட்டிருக்கும் போது ....., நீங்கள் கல்வெட்டுக்காரர்கள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது. - முன்னர் எனக்கும் கூட -” “உண்மை, காலம் யாருக்காகவும் எதையும் தருவதில்லை பெற்றுக் கொள்ள இடம் கொடுக்கும் அவ்வளவுதான். ஓட்டைப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரம் வந்துள்ளது. அதுபற்றி அலட்டிக்கொள்ள எதுவுமில்லையாம். அதற்கெதிராக எங்களினால் மனுவொன்றும் தயாரிக்கப்பட்டாயிற்று. அதன் பிரதியொன்று சட்டத்தரணியிடம் கேட்டு ஆலோசனை பெறுவதற்காக அவனிடமுண்டு - பையினுள் இருப்பதைக் கூட மறந்து போயிருப்பான். - எதற்கும் ஆரம்பம் தடையாய்த்தான் இருக்கும். பின்னர் தானே வெளிக்கும்.” “இது எங்களின் மனு” -

சுய உரிமை - மேன் முறையீடு

ஐயா,

இந்த சனநாயக சோசலிசக் குடியரசு எங்களுக்கெதிராக அனுப்பிய குற்றப்பத்திரம் தொடர்பாக (டி.கே. 77-05-01) எங்கள் இணைவின் அடிப்படை அம்சங்களை விளக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாவன,

1) ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் (5(1) (அ))

2) வேறுபட்ட சாதியினர் (2(1))

என்ற வகையில் இருவரும் தண்டனைக்குரிய குற்றத்தை ஆற்றியுள்ளதாகவும், இதனால் சமூகக் கட்டுமானம் உடைந்து போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

திருமணம் என்பது புரிந்துகொண்ட இருவரின் இணைவு என்பது எங்களின் கருத்து. ஆனால் பெண்ணை ஆண் அடக்கியாள்வதற்காக வழங்கப்படும் அனுமதி என்றோ சந்ததியை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்றோ சமூக நீதிபதிகளால் கருதப்படுகின்றது.

ஒத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்துகொள்வது எந்தவகையிலும் பெண்களை அவமதிப்பதாக அமையாது. பெண்களைக் கட்டிலில் கிடத்தி கவிழ்ந்து கொள்வதாலோ, குழந்தையை - குடும்பப் பாரத்தை அவளுக்கென ஒதுக்கிக் கொடுத்து விடுவதாலோ அவர்கள் போற்றப் படுகிறார்கள் எனக்கருதிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் ஆணுக்குப் பின்னானவள் என்ற அவமதிப்பை சடங்குகள் நடத்திக் காட்டுகின்றன என்பதை சமூக நீதிபதிகள் மறந்தது எங்ஙனம் என விளங்கவில்லை.

ஆண் - பெண் காம உணர்வைப் பகிர்ந்து கொள்வதற்காக, அல்லது ஆணின் காமவுணர்வைத் தனித்துக் கொள்வதற்காகவென மட்டுமே திருமணங்கள் உள்ளன என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே வாத்சாயனரை அவமதிப்பாகக் கூறப்பட்டுள்ளது.

வேறுபட்ட சாதியினர் என்று, பிற்ப்பை வைத்துக் கொண்டு மனுவைத் துணைக்கழைத்தவர்களுக்கு, அதிலுள்ள குறிப்பின்படி சாதிகள் பிறப்பை கொண்டோ, தொழிலைக் கொண்டோ தீர்மானிக்கப்படுவதில்லை - ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும், கூட்டு சமபந்தி பற்றியும், அனுலோமம் - பிரதிலோமம் என்ற திருமணமுறைகளையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

இருப்பினும், எங்கள் கருத்தின்படி ஆண் - பெண் - அலி என்ற மூன்று சாதியினரைத் தவிர வேறு சாதியினர் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு இது கூட உடலில் அடிப்படையில் காட்டப்படும் வேறுபாடுகளே எனக் கருதுவதாலும், எண்ணங்கள் செய்கைகளெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் - இருக்கும் என்பதாலும், சாதியின் கொடுமைக்குள் எங்கள் இருவரையும் தள்ளி தீ மூட்டிவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

கறையான் அரித்த, ஓட்டைப் புத்தகங்களின் அடிப்படையில் மனிதாபிமானமற்ற நீதிபதிகள், குற்றப்பத்திரத்திலேயே - விசாரணை எதுவுமின்றி தண்டனையை சிபாரிசு செய்தது, எந்தவிதத்திலும் நியாயமாக இருக்கமுடியாது என்பதைத் தாங்களும் அறிவீர்கள். குற்றமே இல்லாத குற்றப்பத்திரத்திலும், எங்களின் தாழ்வான மேன்முறையீட்டையிட்டும் தங்களின் மேலான கவனத்தைச் செலுத்தி நியாயமான தீர்ப்பை வழங்குவீர்களென நிம்மதியடைகின்றோம்.

இவ்வண்ணம்,

உண்மையுள்ள,

(ஒப்பம்)

பழனியாண்டி சுகுமார்

(ஒப்பம்)

சற்குணம் சதீஸ்குமார்.

***

அவன் போய்விட்டான். சுகு மட்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு காலை நீட்டி கதிரையில் சாய்ந்திருந்தான். மூடிய கண்ணுள் பின்புற இருளில் தோன்றிய ஒளி நிறைந்த மனிதன் முன்னோக்கிக் கிடந்த இருளுக்குள் மங்கலாய் ஒளி வீசிக்கொண்டிருந்தான். அவன் நெருங்க ஒளி பரப்பை விரித்துக்கொண்டே போனது. ஒளிமனிதனுக்கு அருகில் சுகு நடந்து வந்து கொண்டிருந்தான். பின் - வலது - இடது இருளுக்குள் இருந்து கற்கள் வந்து தாக்கியது.

ஒளி மனிதன் - சதீசின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. பச்சை இரத்தம். அவன் வேற்றுச் சாதி என்பதால் பச்சை நிற இரத்தம் வடிந்தது.  - வடிவமில்லாத கற்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தது. இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றார்கள். ஆட்களில்லாத வெறுமைக்குள் - காற்றை இருபுறமும் தள்ளி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். காற்றுச் சிரித்தது - “கல்வெட்டுக்காரர்கள்” பலமாய்ச் சத்தமிடுகிறது - சிரிக்கிறது. சுகு வாய்விட்டுக் கத்துகிறான். “எங்களைப் பிரித்து விடாதீர்கள் - எனக்கு இவன் வேண்டும்.” அழுகிறான். ஓட்டத்தில் கலங்கிய குரல் காற்றில் கலந்து அழிவுறுகிறது. ஓட முடியாமல் ஓடுகிறார்கள்.

கதவு தட்டப்படும் ஓசை, சுகு எழுந்து கதவைத் திறக்கிறான். தலையில் காயத்துடன் சதீஸ் சிரிக்கிறான். தலை வெடிப்பிலிருந்து கண்ணுக்கும், காதுக்கும் நடுவால் சிவப்பு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

- பங்குனி 2002

தட்டச்சு : சென்ஷி    ஓவியம் : Pablo Saborio

Dec 19, 2012

நீர்மை - ந. முத்துசாமி

மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் nMUTHUபோல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய  இருந்திருக்கும்.

அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல். அப்போது எனக்குப் பதினைந்து வயது. அவளை அறியாத ஒரு தலைமுறை பிறந்து முழுப் பிராயத்திற்கு வந்துவிட்டது. இப்போது அவளைப் பார்க்காத நாள் நினைவிலில்லாமல் தினம் பார்த்து வந்திருப்பதாகவே தோன்றுகிறது.

தெரு தோன்றிய நாளிலிருந்து வண்டி அறைந்த புழுதியைக் காலால் உழுது விளையாடிக் கொண்டிருந்தபோது அவள் கரையேறிக் கிழவியாக வரும் தோற்றம் முகத்தைக் குளத்தில் மிதக்கவிட்டு வந்தது போலிருக்கிறது. அது நீருக்குள் கற்பித்திருந்த உடம்புக்கு இணங்காத எல்லோருக்குமான நார் மடிப்புடவையின் தோற்றம்.

சில வருஷங்கள் கழித்து என் தம்பியும் என்னுடன் விளையாட்டில் கலந்து கொண்டான். அடுப்பங்கரை தயிர் கடையும் தூணில் முடிந்திருக்கும் மத்து இழுக்கும் கயிற்றை நாங்கள் அம்மாவுக்குத் தெரியாமல் விளையாட அவிழ்த்துக் கொண்டு வந்துவிடுவோம். அது நாள்பட்டு, இழுபட்டு, வெண்ணைக் கைபட்டு, திரித்தது என்பதைவிட, பயிரானது என்று இருக்கும். அதை இவன் கழுத்தில் போட்டு அக்குளுக்கடியில் முதுகுப்புறம் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவனை வண்டி மாடாக ஓட்டுவது எங்கள் விளையாட்டு. அவன் எட்டுக் குளம்புப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடுவான். முடிவில் மாடாகிக் களைத்துப் போவான். எனக்குக் கூடுதலாகச் சவாரிச்சுகம் கிடைத்திருக்கும்.

அவள் என்னைக் ‘கண்டாமணி’ என்பாள், நாங்கள் கால்சட்டை போடாமல் ஓடுவோம். எனக்கு இயற்கையாகவே கொஞ்சம் பெரிதாகத் தொங்கிற்று. வெகுநாள் கழித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் பருவ இயல்புக்குச் சுருங்கிற்று. இதே சொல்லை, வாக்கியமாக்காமல், ஓடும்போது அவளைச் சந்திப்பது ஒத்துக்கொண்டபோதெல்லாம் சொல்லி வந்தாள். அப்போது அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். சிரித்துக்கூட இருக்கலாம். ஓடி மேலக் கோடித் திருப்பத்தில், அவள் கவனமின்றி சொல் காதில் விழுகிறது. சிரிப்பு அவளிடம் பொருந்த முடியாமல் வேறு எம்முகத்திலோ போய் ஒட்டிக் கொள்கிறது;

சிறுகச் சிறுக மாறிவந்த அவள் முகத் தோற்றத்தை ஊர் காண முடியாமல் போய் விட்டது. நினைவில் இருப்பது எந்த வயதின் சாயலென்றும் தெரியவில்லை. பிறர் நினைவில் எந்தச் சாயலில் இருக்கிறாள் என்பதை எப்படி ஒத்துப் பார்ப்பது? அவள் பொதுவில் பெயராக மிஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

நாங்கள் கால் சட்டை போட ஆரம்பித்த பிறகு கண்டாமணி என்று சொல்வதை நிறுத்திவிட்டாள். அதற்குப் பிறகு அவளோடு பேசியதில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு ஒருமுறை என்னை வேறு யாரோவாக நினைத்துப் பேசினாள்.

எனக்கு வினவு தெரிந்தபோது அவள் பலருக்கும் ஆச்சரியமற்றவளாக மாறியிருந்தாள். என் வயதுக் குழந்தைகளும் எங்களுக்குள் விநோதமாக உணர்ந்து பேசிக்கொண்டதில்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் ஆச்சரியப் பட்டிருக்கலாம். பெரியவர்களைப் பார்த்து விநோதமில்லையென்றும் மறத்திருக்கலாம். சாதாரணமானவற்றில் அநேக விநோதங்களைக் கண்டு நாங்கள் கூட்டாக ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் எங்கள் அப்பாவிடம் தினம் நச்சரித்துக் கொண்டிருந்தேன். பிறகு எனக்கு அலுத்துவிட்டது அவருக்கு அவளுடைய இளமையைப் பற்றிய கதை என்னைவிட அதிகம் தெரியவில்லை. அவள் அவருக்கும் சாலைக் குளத்தில்தான் அறிமுகமானாள். அவருக்கு அவள் தலை மிதந்து கருப்புப் பனங்காயாகத் தோன்றியிருக்க வேண்டும்.

எங்கள் கிழப்பாட்டி மட்டும் பேரனிடம் காட்டும் தனி அபிமானத்துடன் பழமை தோன்ற அவள் கதையைச் சொல்லுவாள். அவள் வயதில், குழந்தைகளுக்குத் தேவையில்லாதவை என நினைப்பவைகளை ஒதுக்கி விடுவாள். இதனால் அவள் கதைகள் சில விநோத குணங்களை இழந்திருக்கலாம். ஆனால், குழந்தை ஆர்வத்தில் புதுத் தகவல்களின் விநோதங்களுடன் அவள் கதை இருந்திருக்கிறது. நிலா உள்ள முன்னிரவுகளில் நாங்கள் தெருவில் கூட்டமாக விளையாடிக் கொண்டிருப்போம். பாட்டி ரா ஆகாரத்தை முடித்துக் கொண்டு காற்றாட திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதும் விளையாட்டு ஆர்வம் குன்றிவிடும். கதை கேட்கத் திண்ணைக்கு ஓடிவருவோம். கால்களை நீட்டி முழங்கால்களைத் தடவி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பாள் பாட்டி. பாட்டியுள்ள ஒவ்வொரு பேரன்களும் இவ்விதம் திண்ணைக்கு ஓடிவிட, விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். அவள் தொடையில் தலைவைத்துப் பக்கத்துக்கொருவராகப் படுத்து கதை கேட்க ஆரம்பிப்போம். பாட்டி சொல்லும் கதை பகல் போல் இருட்டை நீக்கித் தெரியப்படுத்த முடியாத நிலா வெளிச்சம் போலவே இருக்கும். கதையைத் தவிர்க்க நினைக்கும் அவள் குதற்கங்களாலும், ஆரம்பிக்கும் ஆயத்தங்களாலும், குழந்தை அறிவுக்கு எட்டாதவைகளாலும் கதையில் ஆர்வம் கூடுதலாகும். பாட்டியின் மேல் அனுதாபமும் அபிமானமும் உண்டாகும்.

‘நான் பொறந்த கதையேச் சொல்லவா? வாழ்ந்த கதையேச் சொல்லவா? வாழ்ந்து அறுத்த கதையேச் சொல்லவா?’  என்று ஆரம்பித்து தன்னையும் சேர்த்து தன் கண்ணால் பார்த்த மனிதர்களின் மூன்று தலைமுறைக் கதைகளைச் சொல்லி விடுவாள் பாட்டி. முந்தின தலைமுறையைப் பற்றிக் கேட்டவைகளும் நடுவில் விளக்கக் குட்டிக் கதைகளாக வரும்.

எங்கள் பாட்டி உள்ளூரிலேயே வாக்கப்பட்டு ஊர்க் கண் முன் வாழ்ந்து கிழவியானவள்.

அவளுக்கும் புஞ்சைதான் பிறந்த வீடு. அவளும் புகுந்த ஊரில் வாந்த அனுபவம் இல்லாமல் பிறந்த வீட்டிலேயே வயதாகிக் கிழவியானவள். ஆனால் பாட்டிக்கும் அவளுக்கும் சமவயது. ஆனால், அவள் வீணானவுடன் பாட்டிக்கு அவளுடன் தொடர்பு விட்டுப் போயிற்று. கணவனின் அந்திமக் கிரியைகளுக்கு அப்பாவுடன் போயிருந்துவிட்டு காரியங்களை முடித்துக்கொண்டு வந்தவள்தான். அவ்வயதில் ஒரு ஆயுட்காலம் அவ்வூரில் வாழ்ந்தவளென்ற அதிர்ச்சியுடன் திரும்பியவள் போலும். பிறகு அவள் வெளியில் வரவேயில்லை. ஜனன மரணங்களைச் செய்தியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாள். இப்படி முப்பது வருஷங்கள் உள்ளிருந்து விட்டு தன் நாற்பதாவது வயதில் அவளா இவளென வெளியில் வந்தாள். ஊர் அவளுக்குத் தெரிவிக்கப்பட்ட பெயர்களின் நிஜத் தோற்றங்களால் நிறைந்திருந்தது. அவளால் யாரையும் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. பிறர் அவளை நிஜமாகக் கண்டார்கள். அவள் ஒருவளானதால் அறிமுகம் சுலபம் போல் ஆயிற்று. அவள் செய்தி கேட்ட நாளின் கற்பனைத் தோற்றங்கள் தங்க இருந்து விட்டாள். அவற்றுள் ஒற்றுமை காண முடியாமல் வெளி உலகம் வயதடைந்து புஞ்சை அன்னியக் குடியேற்றத்திற்கு ஆளானது போலாயிற்று.

அவள் வெளியில் வந்ததும் தவிர்க்க முடியாமல் நேர்ந்ததுதான். அவளுடைய தந்தை இறந்த தினத்தன்று அவள் வெளியில் வந்தாள். பிரேதம் எடுத்துக்கொண்டு போனபிறகு கூட்டத்திலிருந்து மிரண்டு பயந்து அழுது ஓடிப்போய்ச் சாலைக் குளத்தில் விழுந்தாள். அவளைக் கரையேற்றி காவிரிக் கரைக்குக் கொண்டு போக பெரும்பாடு பட்டார்களாம். தூக்கிக்கொண்டு போவதாகவே காண இருந்ததாம். அவளை அணைத்து அழைத்துப் போனவர்களில் எங்கள் பாட்டி ஒருத்தி. துக்கத்தினால் அன்றி தொடு உணர்ச்சிக்கே அஞ்சியவளாகப் பாட்டியை அடையாளம் காணாதவளாக மிரண்டு பார்த்திருக்கிறாள் அவள். அவள் கையில் புல் வாங்கிக்கொண்டு தயாதிகளுள் ஒருவன் அவள் தகப்பனுக்கு நெருப்பு போட்டான். இத்துடன் அவளுக்கு நெருக்கமாய் இருந்த ஒரு பிரஜையையும் புஞ்சை இழந்தது.

“நம்மாத்துக்குக் கெழக்கே அவபோய்ப் பாத்திருக்கியோ?” என்று பாட்டி ஒரு கதை நாளில் கேட்டாள். உதடுகளை மடித்து ஈரப்படுத்திக் கொண்டாள் பாட்டி. இப்படி அவளுக்குப் பழக்கமாகியிருந்தது.

கால் கடுக்க அவளைத் தெருவில் பலமுறை நடத்திப் பார்க்கவேண்டியிருந்தது எனக்கு. பாட்டியின் மந்திரத்தில் அவள் கட்டுண்டவள் போலத் தோன்றினாள்.

“இல்லை”

பாட்டியின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த உதடுகளில்தான் கற்பனைகள் எல்லாம் இருப்பதாகத் தோன்றிற்று.

எங்கள் வீட்டிற்குக் கீழ்க் கையில் தெருவை இரண்டாகத் தடுத்து குறுக்கே மண் சுவர் ஒன்று தடையாக எழும்பியிருந்தது. அது முப்பத்தைந்து நாற்பது வருஷங்களாக மழையில் கரைந்துக் குட்டிச் சுவராக நின்றது. கீழே நாய்க்கடுகு முளைத்து கொடிப்பூண்டுகள் அடர்ந்திருந்தன. குழந்தைகள் கழுதை மேல் எறிந்த கற்கள் சிதறிக் கிடந்தன. கிழக்கே விளையாடிவிட்டு நேரங்கழித்து வீடு திரும்பும்போது குட்டிச்சுவரில் மோதிக் கொண்டுவிடுவேனென்றுத் தயங்கித் தயங்கி கடந்து வர வேண்டியிருக்கும். இருளில் வழியைத் தடவி வரும்போது உயர்ந்து வளர்ந்த செடிகள் குத்திவிடுமென்ற பயத்தில் இமைகள் நடுங்கும். நான் பட்ட காயங்களில் பல அங்கு தடுக்கி விழுந்து ஏற்பட்டவை.

தினமும் ஒருமுறையாவது அவளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எங்கள் வீட்டிலேயே இருந்தது. பால், தயிர் வாங்குவதற்கு அவள் வருவாள். ஒரு தேவையில் இது அவளுக்குப் பழக்கமாகியிருந்தது. தினமும் அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போதே வருவாள். நான் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து மோரில் மத்து துள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இடை, இடையில் அம்மாவுக்கு அடுப்பில் வேலை இருக்கும். காலையில் கறந்த பால் பொறை ஊற்ற வரட்டி வைத்து கணப்பு போல் எரியும் அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும். தூசி தட்டிய வரட்டியாலேயே பாலை மூடியிருப்பாள். அதிகம் எரியும்போது பாலில் ஆடை கெடாமலிருக்க அடுப்பைத் தணிக்கவும், அணையும் போது வரட்டியைத் திணித்துத் தூண்டவும் மத்தைக் கட்சட்டியில் சாத்தி வைத்துவிட்டு எழுந்து போவாள் அம்மா.

கயிறு ஓடித் தேய்ந்த மத்தின் பள்ளங்களில் கயிற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும் எனக்கு. அம்மாவைப் போல், மத்து மோரின் மேலே மிதந்து சிலுப்பாமலும் அமிழ்ந்து கச்சட்டியின் அடியில் இடிக்காமலும் கயிற்றின் மேல் கயிறு ஏறிக்கொள்ளாமலும் கடையும் வித்தையைச் செய்து பார்க்க வேண்டும். என்னை அறைந்து விலக்க அம்மா திரும்பி வருவள். அந்தத் தூணடியிலேயே நான் சண்டியாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். உடம்பை வளைத்து அம்மாவின் அடியை வாங்கிக் கொள்வேன்.

அம்மாவுக்கோ தயிர் கடைந்துவிட்டுக் குளிக்கப் போகவேண்டும். சமையலுக்கு ஆரம்பிக்க வேண்டும். நேரமானால் ‘ஒருவேளைப் பிண்டத்துக்கு தவங்கிடக்க வேண்டியிருக்கு இந்த வீட்டிலே’ என்பாள் பாட்டி. அவசர அவசரமாகத் தயிர் கடைய வேண்டியிருக்கும். அது அவசரத்திற்குக் கட்டுப் படாது. விட்டு விட்டுக் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரம் விடுபடும் என்று அம்மா இதர வேலைகளுக்கு ஓடுவாள். சுற்றுவட்டக்காரியங்கள் ஆகும் போது தயிர் கடைவது கவனத்தில் இருந்து பரக்கடிக்கும்.

”அம்மோவ்” என்று மாட்டுக்காரப் பையன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போக வந்து கொல்லைப் படலுக்கு அப்பால் நின்று குரல் கொடுப்பான். படலைத் திறந்து வைத்துத் திரும்பி மாடுகளை அவிழ்த்து விட வேண்டும் அவனுக்கு. அவனைக் காக்க வைக்க முடியாது. மாடுகள் ஒவ்வொன்றாக வயிற்றை எக்கிக் குனிந்து ’அம்மா, அம்மா’ என்று அழைக்க ஆரம்பித்துவிடும். கொட்டாய்த் தரை அதிரும்படி அவை கூப்பிடும். அந்நேரம் ‘யாராத்து மாடு’ இப்படிக் கூப்பிடறது’ என்று தெருவில், குரல் கேட்ட ஒவ்வொருவரும் மனதிலாவது நினைத்துக் கொள்வார்கள்.

கொட்டாயிலிருந்து அம்மா திரும்பும்போது என் தம்பி அடுப்படியில் இருப்பான். காய்ந்த அவரைச் சுள்ளிகளைக் கையில் அடுக்கிக் கொண்டு ஒவ்வொன்றாய்த் தணலில் திணித்து அவை பின்னால் புகை விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். திரும்பிய வேகத்தில் அவன் முதுகில் ஒன்று வைப்பாள். கைச்சுள்ளிகளைப் பிடுங்கி அடுப்பங்கரைத் தொட்டி முற்றத்தில் எறிந்து விடுவாள். பாலைத் திறந்து பார்த்துவிட்டு மூடுவாள். அவன் அழமாட்டான். சுள்ளிகளைப் பொறுக்க ஓடுவான். அடுப்பங்கரையில் மூன்றில் ஒரு பங்கு தொட்டி முற்றம் எங்கள் வீட்டில்.

இதற்கும் ‘அம்பே’ என்று மாடுகளுடன் ஓடி விடாமல் பிடித்துக் கட்டிய பசுங்கன்றுகள் கொட்டாயிலிருந்து குரல் கொடுக்கும். கொட்டாய் பெருக்குபவள் வர நேரமாயிற்று என்ற எச்சரிக்கை இது. தாய்கள் மேயப் போன தனிமையை வைக்கோல் போரில் அசை போட்டுத் தணிக்க அவற்றுக்குப் பழக்கப் படுத்தப்பட்டிருந்தது. கொட்டாய் பெருக்குபவளைத் திட்டிக்கொண்டு அவற்றை அவிழ்த்து வைக்கோல் போர்க்கொல்லையில் விரட்டிவிட்டு உட்கொல்லை படலைச் சாத்திக் கொண்டு வருவாள் அம்மா. திரும்புகாலில் தம்பி கிணற்றுத் தலையீட்டில் குனிந்து தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காண வேண்டியிருக்கும். அவன் தண்ணீரில் பூச்சிகள் கோலமிட்டு ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆர்வத்தில் அவன் பூச்சிகளோடு பேச ஆரம்பித்து விடுவான். எந்த நிமிஷமும் அவன் குப்புறக் கவிழ்ந்து விழுந்து விடலாம் என இருக்கும். “சனியனே, என்ன அவப்பேரை வாங்கி வைக்கக் காத்திண்டிருக்கே” என்று அவனை இழுத்துக்கொண்டு வருவாள். அவன் நடக்காமல் அம்மாவின் இழுப்புக்குக் காத்து. கால்களைப் பதித்துக் கொள்வான். குளிப்பாட்ட தண்ணீரைத் துறையில் இழுபடும் கன்றுக்குட்டியைப் போல நிற்பான். அவன் இதை ரசித்து அனுபவிப்பான்.

இன்னும் தயிர் கடைந்த பாடில்லையே என்று அம்மா தினம் அலுத்துக் கொள்வாள். “சனியன்களே பாட்டிண்டே போய்த் திண்ணையிலே ஒக்காந்திண்டிருங்களேன், சனியன்களே. ஒரு எடத்திலே இருப்புக் கொள்ளாத சந்தம்” என்று வைவாள் அம்மா. இது பாட்டியின் காதுக்கு எட்டினால் “ஏண்டி கொழந்தைகளே கரிக்கறே” என்பாள்.

நான் இழுத்துச் சிலுப்பிய தயிர், கச்சட்டிக்குப் பக்கங்களில் சிந்தியிருக்கும். இப்போது அம்மாவைக் கண்டதும் ஓடத்தோன்றும். அம்மா இப்போது அடித்தால் அழுவேன். சிந்திய தயிரைத் துடைத்துவிட்டுக் கை கழுவப் போகும்போது தொட்டியில் தண்ணீர் இருக்காது. குளிக்கப் போகுமுன் கொல்லைக் கிணற்றிலிருந்து அடுப்பங்கரைத் தொட்டிக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொட்ட வேண்டும். எச்சில் கை கழுவும் இரண்டாம் கட்டுத் தொட்டிக்கும் நிரப்ப வேண்டும். முன்பே அவற்றைக் கழுவிக் கொட்டிவிட்டதை அம்மா மறந்து போயிருப்பாள். அநேகமாக தினம் எங்கள் இருப்பு இட்ம் மாறியிருப்பதைத் தவிர அவள் காரியங்கள் இவ்விதமாகவே சற்று முன்னும் பின்னுமாய் இருந்து கொண்டிருக்கும். இந்நேரங்களில் தினமும் ஒருமுறையேனும் அலுப்பின் உச்சத்தில் “புஞ்சையான் குடும்பத்துக்கு ஒழைக்கறாத்துக்கின்னே பொறப்பெடுத்தாச்சு” என்று நொந்து கொள்வாள் அம்மா.

அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போதோ, கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கும்போதோ தாழ்வாரத்திலிருந்து ‘பட்டு’ என்று குரல் வரும். இது அம்மாவுக்கு நேரம் காட்டும் குரல். அது அவளுடைய குரல். அம்மாவுக்கு எட்டியிருக்காது என்ற அனுமானத்தில் ‘பட்டு’ என்று இன்னொரு முறை கேட்கலாம். அப்படியானால் இது எங்கள் பாட்டியின் குரலாக இருக்கும். இது அவசியத்தைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் கேட்கும். ஒரு கடமையாகப் பாட்டி இதைச் செய்வாள். நாங்கள் வெளியில் இருந்தால் “அம்மாவ்.... அம்மாவ்” என்போம்.

கிணற்றங்கரையிலிருந்து கொட்டாய் வாசற்படையைத் தாண்டி வரும்போது அவள் தாழ்வாரத்துச் சின்னத்திண்ணை ஓரமாய் நின்ரு கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தயிர் கடைந்து கொண்டிருந்தால் அடுப்பங்கரையை ஒட்டிய தாழ்வாரத்து நெரைச்சல் மறைப்பில் பிய்ந்த கீற்று ஓட்டை வழியாக அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளுள்ள எவ் வீடுகளும் இதே அமைப்பில் நெரைச்சலில் தாழ்வாரத்தைக் காண துவாரம் செய்யப்பட்டிருக்கும். அவள் உருவைக் கிரகிக்க இரண்டு கோணங்கள் போதாதென ஓர் அரூபச் சாயலில் அவள் உயிர் கொண்டிருப்பதாகத் தோன்றும். அவள் குரலுக்கு எந்த இடத்திலிருந்தும் அம்மா “இதோ வந்துட்டேன்” என்பாள். குளத்தில் இருப்பவளுக்குக் கேட்கச் சொல்வதாய் இரைந்தே சொல்வாள். பால் கணக்குச் சொல்வதைத் தவிர அழைப்பிற்கு இருப்பைக் காட்டிக் கொள்வதல்லாமல் அம்மாவுக்கு அவளுடன் வேறு பேச்சில்லை.

இது காலைக் காரியங்கள் ஆகி எல்லோரும் குளிக்கக் கிளம்புகிற நேரம். ஒவ்வொருவரும் தயிர் கடைந்து விட்டுப் போக வேண்டும். வற்றாத நாளில் காவிரிக்கும், மற்ற நாளில் குளத்திற்கும் அக்ரகாரப் பெண்கள் குளிக்கப் போக வேண்டும். குளத்தில் கோடையில்  மீன் பிடித்த பிறகு கொல்லைக் கிணற்றங் கரையில் தண்ணீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளிப்பார்கள். நேரம் தப்பிப் போய் பெயர் வாங்கிக் கொள்ளாமல் எல்லோருக்கும் நேரம் ஒத்துக் கொண்டுவிடும். இதில் ஒத்துக் கொள்ளாமல் தூரத்திற்கு ஒதுங்காதவர்களென ஓரிருவரும் இருந்தார்கள்.

தினம் இந்த நேரம்தான் அம்மாவின் பரபரப்பில் பால்வாங்க  வர அவளுக்கு ஒத்துக் கொண்டது. நேர உணர்வு துல்லியமாக மிருகத்துடையதைப் போல அவளுக்கு இருந்திருக்கிறது.

அவள் சாலைக் குளத்திலிருந்து கரையேறிய வேகத்தில் வந்திருப்பாள். ரேழிவாயிற் படியைத் தாண்டி தாழ்வாரத்தின் முனையில் சின்னத் திண்ணையின் ஓரமாய் நிலைப்படியில் சாய்ந்துகொண்டு காத்து நிற்பாள். காத்திருத்தல் அவளுக்கு அலுப்புத் தருவதாகத் தோன்றாது. ‘பட்டு’ என்ற ஒரு அழைப்பே காத்திருத்தலுக்கு அவளுக்குப் போதுமானது போலிருக்கும். இதில் நின்ற இடத்தை மறந்தவளாகத் தோன்றுவாள். உடல் பாரத்தைக் கால்களில் ஓரிருமுறை மாற்றிக் கொள்வாள்.

அவள் நிற்கும் இடம் தண்ணீரும் தெருமணலும் சேர்ந்து குழம்பிப் போயிருக்கும். எண்ணெய்ப் பிசுக்கும் நீர்க்காவியும் ஏறிய பழைய நார்மடிப்புடவையோடு தவிர்க்க முடியாமல் தெருமண்ணையும் பாதங்களில் அப்பிக் கொண்டு வந்திருப்பாள். நின்ற சந்தர்ப்பத்தில் புடவையின் நீர் வடிந்து கால் மண்ணைக் கழுவி விடும். மண் சிமெண்டுத் தரையில் தங்கி நீர் பிரிந்து முற்றத்திற்கு ஓடும்.

அம்மா தயிரையும் பாலையும் அவளுடைய பாத்திரங்களில் மாற்றும் போது ‘இன்னியோட ஒம்பதே காலணா ஆச்சு’ என்பாள். நின்ற நேரத்தில் வேறு இடத்தில் வாழ்ந்தவளாகத் தோன்றியவள் நிலைக்குத் திரும்பிய இடறல் இல்லாமல் இயல்பாகப் பாத்திரங்களில் ஏந்திக் கொள்வாள். இதில் அவள் நின்ற இடத்தை மறந்திருந்தாள் என எப்படிச் சொல்வது? கால அளவும் அவளுக்கு வேறுபட்டிருக்கும் போலிருக்கிறது.

பதினைந்தே முக்காலணாவுக்கு மேல் ஒரு ரூபாய் என்று அம்மா சொல்லக் கேட்டதில்லை. அவள் கையிலிருந்த சில்லறை அம்மாவின் கைக்கு மாறியதையும் பார்த்ததில்லை. கணக்குச் சொல்லி பாத்திரங்களில் மாற்றும்போது அவள் சம்மதத்தின் அறிகுறியும் தென்படாது. தகராறு நேராததிலிருந்து வியாபாரம் நாணயமாய் நடந்து வந்திருக்கிறதென்று ஊகிக்க்க இருந்தது. அவளுக்குப் பால் கொடுப்பதால் புண்யமுண்டு என்றும் அம்மா சொல்லுவாள்.

இடையில் தயிர் வாங்க வருவதை இரண்டொரு மாதங்கள் நிறுத்தி விடுவாள். அப்போது யாரிடம் வாங்கினாள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அக்கறை இருந்ததில்லை. ஏன் அப்படி இடம் மாற்றினாள் என்பதும் தெரியவில்லை. மறதியில் ஒரே வீடு என்று வாங்கி வந்திருப்பாளோ? என்னவோ? மேற்கேதான் எங்காவது வாங்கியிருப்பாள். கிழக்கு மேற்கான தெருவில் சாரியைப் பொறுத்து தெற்குப் பார்த்தோ வடக்குப் பார்த்தோ ஒரு தாழ்வாரத்துச் சின்னத் திண்ணையருகில் நின்று ஒரு பையன் நெரைச்சல் இடுக்கு வழியாகப் பார்க்க வாங்கி வந்திருப்பாள். மேலண்டைச் சுவர் வீட்டின் தாய்ச் சுவராக இரண்டு சாரி அமைப்பில் எதிரெதிராக வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும்போது கொல்லைத் தலைமாடுகளிலிருந்து பார்க்க நேர்ந்தால் நடுவில் தெரு மறைந்து ஒரே வீட்டின் பல நிலைப்படிகளாகத் தோன்றும். ஒரு பயணியைக் கொண்டு ஞாபகம் வரலாம். தெரு தாழ்ந்திருப்பதில் தாழ்வாரத்தில் நடப்பவரென்று கொள்ளமுடியாது. ஒரு சாரியின் கொல்லைச் சந்திலிருந்து எதிர்ச்சாரியின் கொல்லைச் சந்துக்குப் போக எல்லோருக்கும் குறுக்குப் பாதை வீடு. அவள் ஒரே இடத்தில் நின்று பழக்கமானதில் பார்க்கும் திசையைக் கொண்டு எச்சாரி என தீர்மானிக்க இருக்கலாம். அநேகக் குறுக்குப் பாதைகள் ஒன்றில் கடந்து போகும் ஒருவரென்று மறதியில் தோன்றினாலும் சாரிப்பிரிவினை சாத்யமற்றுப் போகும். இப்பொதுத் தன்மைகளில் வேறுபட்ட வீடுகள் ஒருவரை விநோதம் ஏதுமற்றவராகக் காட்டலாம்.

அங்கும் அவள் ‘பட்டு’ எனக் கூப்பிட்டிருக்கக்கூடும். இப்பெயர் கொண்ட இன்னும் சிலர் இருந்தார்கள். பாட்டி சொன்னதைப் போல அவள் பிழியாத ஈரப் புடவையில் ‘அவ ஆம்படையான் இன்னிக்கித்தான் செத்தான்’ என்று அவர்களுக்கும் தோன்றியிருக்கலாம்.

இப்படி ஒருவரின் நினைப்பாக இல்லாமல் அவளைத் தண்ணீர்ப் பிசாசு என்று எல்லோரும் சொல்வார்கள். இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிசாசாகப் பிறந்து வந்தவளாகக் கண்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அவளைக் கண்டு யாரும் பயந்து கொண்டதில்லை. அவள் தன் இருப்பைத் தூக்கலாய் உணர்த்தியும் பழக்கத்தில் மறந்து விட்டார்கள்.

அவளுடைய சாலைக் குளம் வீட்டு விலக்கான பெண்கள் குளிக்க வசதியாக இருந்தது. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஆண் பார்வை படுமுன் திரும்பிவிடலாம். கணவன் கண்ணில் படாமல் உப்பும் அரிசியும் போட்டுக்கொண்டு விடலாம். ஒரு பெண் துணையுடன் குளிக்கப் போகும்போதும் அவள் குளத்தில் இருப்பாள். கண்களில் படாமல், இருட்டில் அலைந்து எழுப்பும் சலசலப்பு நிசப்தத்தில் பயமூட்டுவதாக இருக்கும். ஒருவருக்கொருவர் பேசும் ஒலிக்கும் பயந்து மௌனமாய் இருக்கும் நேரம் இது. தங்கள் நினைப்பே பயமுறுத்துவதாக இருக்கும். கண்களில் தென்படாமல் மரக்கிளையை ஆட்டிச் சலசலக்க வைக்கும் நிறையப் பிசாசுக் கதைகள் தெரியும். சுவாரஸ்யத்தில் கதை கேட்டு விடுவார்கள். பின்னால் நினைத்துப் பயந்து கொண்டிருப்பார்கள். இப்போது அக்கதைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வரும்.

ஏதோ ஒரு தலைமுறையில் வீட்டு விலக்கானவளை துணையாக வந்து குளிக்க இதே குளத்திற்கு அழைத்துக் கொண்டு போன பிசாசுக் கதை வீட்டு விலக்காகும் பெண்களுக்கெல்லாம் தெரியும். இந் நாட்களில் தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கைகளில் ஒன்றாக புஞ்சைப் பெண்களுக்கு மரபாகச் சொல்லப்பட்டு வந்தது இது. மற்ற நாட்களில் மறந்திருப்பவள் இதை வீட்டு விலக்கு நாட்களில் நினைவுபடுத்திக் கொண்டு விடுவாள்.

விலக்காகி மாட்டுக் கொட்டாயில் ஒதுங்கியிருந்தவளைக் காமமுற்று மூன்று நாட்களும் கொல்லைப் புளிய மரத்திலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததாம் பிசாசு. மூன்றாம் நாள், குளிக்கக் கிளம்ப வேண்டுமென்று அரைத் தூக்கத்தில் இருந்தவளைப் பக்கத்து வீட்டில் விலக்கானவள் வேஷத்தில் வந்து வாசல் கதவைத் தட்டி எழுப்பிக் கொண்டு போயிற்று. முதல்நாள் அவர்கள் கொல்லையில் ஒருவருக்கொருவர் துணையாகப் போக வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது அது. முதலில் அவளைக் குளத்தில் குளிக்க விட்டு, இவளை வந்து அழைத்துக் கொண்டு போயிற்று. பக்கத்தில் துணையாக வந்தவள் முன்பே குளத்தில் குளித்துக் கொண்டிருப்பது கண்டு இவள் திரும்பிப் பார்க்க, வந்தவளைக் காணவில்லை. தன்னோடு குளிக்க இறங்கியவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வரும் கோலத்தில், முழுகி எழுந்தவள் பார்த்துத் தன்னோடு குளிக்க இறங்கியவள் எங்கே எனத் தேடிக் கு ழம்பி விட்டாள். உண்மையான இருவரும் ஒருவரை ஒருவர் பிசாசு என்று பயந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்து வீட்டுக் கதவை இடித்து வாய் குழறி நின்றார்கள். பிறகு விடிந்து கொல்லைக் கிணற்றடியில் தண்ணீர் இழுத்துக் கொட்டக் குளித்துவிட்டு வந்து படுத்தவர்கள்தான். பேய் விரட்டிய பிறகே இருவருக்கும் ஜுரம் தணிந்தது. இருவரும் அடுத்தமாதம் விலக்காகவில்லை. அவர்கள் வயிற்றில் பிசாசு கரு வளர்கிறது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீண்டும் இரண்டு பேரும் பேயாட ஆரம்பித்தார்கள். ‘பிசாசுக்கு வாக்குப்பட்டா புளியமரத்திலே குடும்பம் நடத்தணும்’ என்ற பழமொழிக்கு எல்லோருக்கும் இப்போதுதான் உண்மையான அர்த்தம் தெரிந்ததாம். கருத்தரிக்காத நாட்கள், கருத்தரிக்கும் நாட்கள் என்ற விவரமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பிசாசுக் கருவைச் சிதைத்துப் பேய் விரட்டிய பிறகே அவர்கள் தன் நிலைக்குத் திரும்பினார்கள். ஊரிலும் குடும்பத்திலும் நிம்மதி ஏற்பட்டது. எப்படி பிசாசைப் பெற்று வளர்ப்பது? ஊர் குழந்தைகளை விளையாடப் போகாமல் கட்டுப் படுத்தி வைக்க முடியுமா?

வீட்டு விலக்கானவர்கள் குடும்பத்தில் ஒருவர் வீட்டிலிருந்தே தூங்கி எழுந்து வருகிறவர் என்ற நிச்சயமான துணையுடன் தான் குளிக்கப் போவார்கள். மாற்றி மாற்றி ஒருவர்காலை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். பார்வையில் தாங்களே பிசாசாகும் பயமும் இருக்கும். ஆனால், முன்பே அவள் குளத்தில் அலைந்து கொண்டிருப்பதில் யாரும் பயந்து கொண்டதில்லை. அது பிசாசாகவே இருந்தால்கூட பயந்திருக்க மாட்டார்கள். அவள் இறக்கும்வரை மற்றொரு துணையாகவே இருந்து கொண்டிருந்தாள்.

குளத்திலும் ஊரிலும் அவள் இல்லாத சமயங்களும் இருந்திருக்கின்றன. இதை யாரும் உணர்ந்ததில்லை. நினைவில் உறுத்துகிற முந்தானை முடிச்சைப் போன்ற இதை யாரும் உணராதது முடிச்சை மீறிய மறதி போலிருக்கிறது. ஒரு முறை நான் அவளை முற்றிலும் அன்னியச் சூழ்நிலையில் கண்டேன். ஒரு நாள் சாயங்காலம் செம்பனார் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது அவள் எதிரில் வந்து கொண்டிருந்தாள்.  இப்போது குளத்தில் கண்டு கொண்டிருக்கக் கூடுமென்று தோன்றிற்று. நான் பார்த்ததும் ஒரு உருவெளித் தோற்றமோ என்று இருந்தது. அவள் கையில் ஒரு பொட்டலத்துடன் தோற்றத்தில் பொருந்தாமல் வந்து கொண்டிருந்தாள். ஜவுளிக் கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருப்பவளாக இருக்கலாம். பொட்டலம் கட்டப்பட்டிருந்த தோரணை அவ்விதம் நினைக்க இருந்தது. ஒருவன் அவளைக் குளத்தில் பார்த்த நேரத்தில் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களில் ஒருவராகப் பலர் கண்டிருப்பார்கள்.

இன்னொரு முறை அவளை நாங்கள் அவள் வீட்டிலேயே கண்டோம். ஒரு கிருஷ்ண ஜயந்திக்கு குழந்தைகள் நாங்கள் எண்ணெய் தண்ட கிண்ணங்களை எடுத்துக் கொண்டு ‘சீசந்தி அம்பாரம், சிவராத்திரி அம்பாரம்’ என்று பாடிக் கொண்டு போனோம். அவள் வீட்டுக் கதவும் திறந்திருந்தது. அவளும் வீட்டிலிருந்தாள்.

அவள் வீடு நூறு வருஷத்திற்கு முந்தியது. என்றாலும் குடுமியுள்ள ஒற்றைக் கதவில்லை. இரட்டைக் கதவுகள்.அவை சித்ர வேலைப்பாடுகள் செய்த நிலைப்படியும் கதவுகளும். சட்டம் சட்டமாக இழைத்து அலுத்து தச்சன் கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் சொந்தத் திருப்திக்காகச் செய்தவை போலிருக்கும் அவை. இடப்புறக் கதவு கிராமப் பழக்கம் போல மேலும் கீழும் தாழிட்டு எப்போதும் போல் சாத்தப்பட்டிருந்தது. வலக்கதவு திறந்திருக்கும்போது ஒருக்களித்திருப்பது போல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. மூடிய கதவின் ஓரங்களைச் சுவரோடு வைத்துத் தைத்து விட்டது போல சிலந்தி வலை பின்னியிருந்தது. நிலைப்படியின் மேல் சிற்ப இடுக்குகளில் வெள்ளை வட்டங்களாகத் தம்படி அளவில் பூச்சிக் கூடுகள் இருந்தன. அவற்றை காயம்படும்போது காயத்தில் ஒட்டிக் கொள்ள எடுக்கப் போவதுதான் அவள் வீட்டுடன் எங்களுக்குப் பரிச்சயம். அங்குதான் கிடைக்கும் அவை. காயத்திற்கான அரிய மருந்து எங்களுக்கு.

ஒருக்களித்திருந்த கதவை முழுதாகத் திறந்து வைத்துவிட்டு நாங்கள் உள்ளே போனோம். அப்போது என் மூக்கில் சிலந்தி இழை ஒன்று ஒட்டிக் கொண்டு மூக்கணாங் கயிறு போல் காதுகளில் மாட்டி பாதி ரேழி வரையில் வந்தது நினைவிருக்கிறது. கையில் பற்ற முடியாமல் அதை எடுப்பதற்குத் தடுமாறித் தயங்கி நடு ரேழியில் நான் தாமதிக்க வேண்டியிருந்தது. மற்றவர்கள் எனக்கு முன்னதாக அவள் வீட்டின் உட்புறத்தைக் கண்டார்கள்.

சாதாரண நாளில் ஒற்றைக் கதவும் திறந்திருந்து முற்றம் தெரிந்து தெருவில் போவார் யாரும் பார்த்ததில்லை. குத்தகைக் காரன் நெல் கொண்டு வந்து போடும்போது கதவுகள் இரண்டும் திறக்கப்படும். அவன் வீட்டின் எதிர்ப்புற காலிமனையில் நின்று கொள்வான். குடியானவன் ஒருவன் வண்டி மூட்டைகளை முதுகில் புரட்டி உள்ளே கொண்டுபோய் போடுவான். இந்நேரங்களில் பார்வைக்கு மூட்டைகள்தான் தென்படும். முற்றம் தென்படுவதில்லை.

ரேழியில் வௌவால் புழுக்கையின் நாற்றமடித்தது. இது கிராமத்தில் தொன்மையின் நெடியாக சுவாசிக்க அனுபவமாகியிருப்பது. அரவம் கேட்டவுடன் உத்திரத்திலும் சரத்திலும் தொங்கித் தரையைக் கூரையாகப் பார்த்து எங்களைத் தொங்குவதாகக் கண்டு வௌவால்கள் அச்சத்துடன் சிதறிப் பறக்க ஆரம்பித்தன. காக்கைகள் அடங்கும் மரத்தில் இரவில் கல்லெறிந்தது போலாயிற்று. காக்கைகள் போல கூச்சலிடாமல் இறக்கைகளைப் புடைத்துக் கொண்டு பறந்தன. அவற்றின் உயிர்ப்பை அகாலமாய் அவற்றுக்கு நினைவூட்டியது போலாயிற்று.

முற்றத்தில் வேலைக்காரி அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அவள் அசை போட்டுக் கொண்டிருந்த அரிசி கடைவாயில் வெள்ளையாயிருந்தது. பூந் தவிடு படிந்து மீசையிருப்பது தெரிந்தது.

நாங்கள் முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் ஏறியபோது அவள் பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அழுக்குப் பிடித்த பழந்திரியை நிமிண்டிவிட்டு விளக்கை ஏற்றினாள். சுடர் பிடிக்க ஆரம்பித்தது. தலையிலோ, புடவையிலோ எண்ணெய்க் கையைத் துடைத்துக் கொள்ளும் கிராமப் பொம்மனாட்டிகளின் வழக்கம்போல அவள் கை எண்ணெய்க் கரியைப் புடவையில் துடைத்துக் கொண்டாள்.

விளக்கு, சரத்திலிருந்து தொங்கிய சங்கிலியின் முனைக் கொக்கியில் மாட்டப் பட்டிருந்தது. துருப்பிடித்தும் அங்கு மாட்டியவரை நினைக்கத் தூண்டுவதாகவும் இருந்தது. சங்கிலி ஆடிக் கொண்டிருந்ததில் விளக்கின் நிழல் சுவரிலும் தரையிலுமாக ஆடிக் கொண்டிருந்தது. அறையின் பொருள்களும் அவளும் நிழலோடு பெயர்ந்து ஆடினார்கள். தரையில் கிடந்து சுவரில் ஏறி ஆடும் நிழல்கள் திரிந்து பூச்சாண்டி காட்டின. அவை இவற்றின் நிழல்கள் என வேர்பிடித்துத் தெரிந்தன. அவற்றில் அவள் நிழல் பூதாகரமாய் ஆடிற்று. போதை போல் தணிந்து ஆட்டம் நிலைக்கு வர நேரம் பிடித்தது.

விளக்கின் எண்ணெய் தங்கும் குழிவு நீலமாய், பாசி படிந்து எரிந்த திரித்துண்டுகளோடும் ஒட்டடைத் தூசியோடுமிருந்தது. கூரையின் சாத்துகளை இணைத்து சாம்பல் தூவிய பாத்தியைக் கவிழ்த்து, விதானம் கட்டியதுபோல் எங்கும் ஒட்டடை. விளக்குச் சரம் அதில் பயிரான கொடி போலிருந்தது. ஓடுமாற்ற அவள் வீட்டுக்கூரையில் ஆள் ஏறிக் கண்டதில்லை நாங்கள். அவள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தது. அவள் செத்த மறு வருஷம் பெருங்காற்று மழையில் சிரமத்துடன் முனகிக் கொண்டு கூரை கூடத்தில் உட்கார்ந்து விட்டது.

தரை முழுவதும் காற்றுச் சலித்த புழுதி படிந்ததிருந்தது. பாதம்பட்ட புதிய சுவடுகளும் பழைய சுவடுகளில் புழுதி படிந்து மறைவதும் பூச்சிகள் ஓடிய கோலங்களுமாய் இருந்தது தரை. அவள் காலத்தில் வம்சாவளியாய் பூச்சிகள் கோலமிட்டு வந்திருக்க வேண்டும். அவற்றின் சுவடுகள் மறைந்தும் தோன்றிக் கொண்டுமிருந்தன. அவள் பாதத்தின் பரிணாமச் சுவடுகள் அறையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றிருந்தது.

விளக்கின் அடிவிளிம்பில் எண்ணெய்ச் சொட்டுக்கள் வரிசையாக கீழே விழ கசிந்து வரும் கனத்திற்குக் காத்துக் கொண்டிருந்தன. விளக்கு ஓட்டையை எண்ணெய்க் களிம்பு அடைத்துக் கொண்டிருக்கலாம். சுடர்க்கசிவும் நல்ல விளக்கை ஓட்டையாகக் காட்டியிருக்கலாம். சொட்டிய எண்ணெய்த் தரையில் சுவறியிருந்தது. பழைய பிசுக்கில் புழுதி படிந்து மீண்டும் சொட்டி விளக்கின் அடித்தரை அங்கு மேடிட்டிருந்தது. ஆடி விலகிச் சொட்டியவை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தோன்றின.

எங்கள் வருகை அவள் கவனத்தைக் கவரவில்லை. விளக்கேற்றிவிட்டு மேற்புறச் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். அவள் பார்த்து நின்ற சுவரிலிருந்த படங்கள் புழுதி படிந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தோன்றின. நம் பார்வைக்குத் தோன்ற அவற்றில் ஒன்றுமில்லை. படங்களின் கீழிக் கஸ்தூரிக் கட்டைகளில் பாராயண புத்தகங்கள் போலும் ஓலைச்சுவடிகள் போலும் புழுதி படிந்த குப்பல்களிருந்தன. எல்லாம், அன்னியக் கைபடாமல் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற நிலையில் காப்பாற்ற இயலாதென இருந்தன. அவற்றிலிருந்தவை அவள் நினைவிலிருக்கலாம். அவள் இப்போது விமோசனம் இல்லாத சாபம் போலத் தோன்றினாள்.

ஒருவன் ‘பாட்டி’ என்றான். இதுவரை அவளை யாரும் இவ்விதம் கூப்பிட்டதில்லை. கூப்பிட்டவன் ஒருமாதிரியாக உச்சரித்தான். அவன் கூப்பிட்டதற்கு மற்றக் குழந்தைகள் வெட்கப்பட்டார்கள் போலிருந்தது.

இன்னொருவன் ஓரடி உள்ளே எடுத்து வைத்தான். சுவர்ப்புறம் பார்த்துக்கொண்டிருந்தவள் கையை நீட்டி அவனைத் தடுத்தாள். அவன் நிழலும் விளக்கு வெளிச்சத்தில் அறைக்கு வெளியில்தான் விழுந்திருக்க முடியும். நிழலைக் காண்பிக்க வெளியில் இருட்டவில்லை. அவள் ஒரு உள்ளுணர்வில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க வேண்டும். இப்போதும் அவள் எங்கள் பக்கம் திரும்ப வில்லை. அறைக்கு வெளியில் உள்ள எதுவும் அவள் கவனத்தைக் கவர முடியாது போலிருக்கிறது.

“கொஞ்சம் எண்ணெய் ஊத்தரேளா?” என்று யாசித்தாள் எங்களில் ஒரு பெண்.

அவள் கேட்டது, ஒலி வெளியைக் கடந்து அவள் காதுக்குப் போய்ச்சேர முடியும் என நம்புவதாக இருந்தது. பேச்சுக் காற்று பட்டு ஒட்டடை சல்லாத் துணியாய் ஆடிற்று. அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

விளக்கு வெளிச்சத்தில் பெரிய சிலந்திகள் மின்னின. புதிதாக நூலிழுத்து ஓடி நெய்து கொண்டிருந்தன. புதிய இழைகளும் மின்னின.

நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

‘சீசந்தி அம்பாரம்... சிவராத்திரி அம்பாரம் பட்டினி அம்பாரம் பாரணை அம்பாரம்’ என்று திடீரென்று ஒருமித்துணர்ந்து பாடினோம். சப்தம் இங்கு விகாரமாய் ஒலித்தது.

”ஏன் சும்மா நின்னுக்கிட்டு, அது எங்கே ஊத்தப்போவுது” என்றாள் அரிசி புடைத்துக் கொண்டிருந்தவள்.

பூஜை அறையிலிருந்து கிளம்பி அவள் வாசலுக்குப் போக ஆரம்பித்தாள். களவுக்கு வீட்டில் எதுவும் இல்லையென நம்புபவள் போலத் தோன்றினாள்.

“அந்த எண்ணெயே வாங்கினாக்கூட ஒரே வெஷம்டா, எண்ணேய்ச் சொம்பேப் பாரேன். ஒரே கரும்புளிச்சிருக்கு” என்று ஒருவன் சொல்ல நாங்கள் திரும்பினோம்.

அவள் மேற்கே குளத்திற்குப் போய்க் கொண்டிருந்தாள். இருட்டுவதற்கு இன்னும் நேரமிருந்தது. எண்ணெய் தண்ட இன்னொரு வீடு மேற்கே பாக்கியிருந்தது. ஒவ்வொருவனும் ஒரு நோக்கில் புழுதியை உழுது கொண்டு போனான். பெண்கள் சிணுங்கினார்கள்.

“மாட்டுக்காரப் பசங்க வெசவு அவளுக்கு வேணும்” என்றான் ஒருவன். மந்தையிலிருந்து ஒரு பசு மாடு தவறி வாயிற் புறமாய் வந்து கொண்டிருந்தது. வாசலாலும் வீட்டை அடையாளம் காணத் தெரிந்தது போலிருக்கிறது அது.

குளத்தின் மேல்கையில் இலுப்பைத் தோப்பில் பையன்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவளைப் பார்த்துப் பாடுவார்கள். ‘அக்ரகாரப் பாப்பானுவோ சாவக்கூடாதா? ஆத்தங்கரை ஓரத்திலே வேவக்கூடாதா?’ என்று. அவளிடமிருந்து எதிர்ப்பில்லாமல் ஏமாந்து ‘ஏ பாப்பாத்தி காது ஓட்டையா பூடிச்சா?’ என்று கத்துவார்கள்.

“தண்ணிப் பிசாசு” என்று ஒருவன் திட்டினான்.

”அவ செவிடுன்னே நெனெக்கிறேன்” என்றான் இன்னொருவன்.

“செவிடுன்னா என்ன? கைக் கிண்ணத்தைப் பாத்தே ஊத்தலாமே” என்று அடுத்தவன் சொன்னான்.

“அவ நம்மே பாக்கவே இல்லை. பொட்டையும் போலிருக்கு” என்று பின்னால் ஒருவன் சொன்னான்.

“அவ கண்ணுலே பாப்பா இருக்காண்ணு பாக்கணும்” என்று ஒருத்தி சிரித்தாள்.

“அவ ஒரு நிதானத்லே நடக்கறா போலேருக்கு” என்று மற்றொருவன் சொன்னான்.

“மாட்டுக்காரப் பசங்க வெசவு அவளுக்கு நன்னா வேணும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் இதை முதலில் சொன்னவன். அவளை நாங்கள் கூட்டமாய்ச் சேர்ந்து வெறுத்தது இதுதான். இதற்கு முன்னாலும் பின்னாலும் இன்னொரு சந்தர்ப்பம் இல்லை. நான் அவளைத் தனியாக வெறுக்க நேர்ந்திருக்கிறது. இது பின்னால் சுதந்திரத்திற்கு முன்பு நடந்தது. இடுப்பில் குடத்தோடு குளத்திலிருந்து அவள் வந்து கொண்டிருந்தாள். நான் மேற்கே போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து கல்லடிக்குப் பயந்து ஓரத்தில் கூனிக் குறுகி அடியைத் தவிர்த்து விடலாம் என்ற நம்பிக்கையோடு ஒடுங்கும் வெற்றுத் தெரு நாயைப் போல ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டு “யாருடா?” என்றாள். கையைக் குவித்துப் பார்வைக்குக் குடை பிடித்துக் கொண்டாள்.

“நாந்தான்”

“இம்” உன்னிப்பான பார்வையை ஆள் மேல் தடுத்து நிறுத்தச் சிரமப்படுபவள் போல இருந்தாள்.

“நாந்தான் கண்ணன்”

“யாரு, வெட்டியாரக் கோவிந்தன் மக்னா?” கையை எடுத்துவிட்டு, ஆள் மேல் பார்வையை நிறுத்திவிட்டவளாகக் கேட்டாள்.

”நாந்தான் கண்ணன். கண்ணன். நடேசய்யர் பையன். நீங்க தயிர் வாங்கவல்லே? கண்ணன்... கண்ணன்” செவிடும் குருடுமென்று அருகில் போய்க் குரலை உயர்த்திச் சொன்னேன். இன்னும் விலகிச் சுவரோடு ஒண்டிக்கொண்டாள். குடத்துத் தண்ணீரை அங்கேயே கொட்டிவிட்டு குளத்திற்குத் திரும்பி விட்டாள். உடனே வெறுக்கத் தோன்றிற்று. என் மேலும் வெறுப்பாய் இருந்தது. பிறகு மாட்டுக்காரப் பசங்க வெசவு நியாயம் என்று தோன்றிற்று.

வெட்டியாரக் கோவிந்தன் அவள் குத்தகைக்காரன் வரதராசுவின் பாட்டன் என்றும், தான் குழந்தையாக இருக்கும் போதே கிழவனாகச் செத்து விட்டான் என்றும் பாட்டி பிறகு சொன்னாள்.

முதல் சுதந்திர தினத்தன்று பள்ளிக்கூட வாத்தியார்கள் சேர்ந்து சேரிக்காரர்களை ஊர்வலமாக அக்ரகாரத்திற்குள் அழைத்து வந்தார்கள். கொட்டு மேளத்துடன் ஊர்வலம் கிழக்கிலிருந்து மேற்கே வ்நது அவள் வீட்டைக் கடக்கும்போது அவள் தண்ணீர்க்குடத்துடன் குளத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

அக்ரகார வாத்தியார் விகண்டையாகச் சொன்னார் “ஏலே ஒங்களுக்குத்தாண்டா... அம்மா பூரணக்கும்பம் எடுத்தாரங்கடா” என்று அவர் தானே சிரிக்க வேண்டியிருந்தது. பிறகு அவர்கள் சிரித்தார்கள்.

இப்போது அவள் எப்படி நடந்து கொள்ளப் போகிறாள் என்று எனக்குத் தோன்றிற்று. குடத்துத் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றிக் கொள்ளப் போகிறாளா? சுவரோரம் ஒதுங்கிக் கொள்ளப் போகிறாளா? ஒருவருக்கானால் அவள் ஒதுங்கிக் கொள்ளலாம். பலருக்கானால் அவள் சுவருக்குள்ளேயே போக வேண்டுமென்று தோன்றிற்று. கல் சுவர், ஈர மண் சுவரைப் போல அவளுக்கு வழிவிட வேண்டும். ஈர உடலோடு மன், உடலில் ஒட்டாமல் அவள் மண்ணில் புதைந்து புறப்பட வேண்டும். அவள் போன இடம் ஆள் வடிவில் ஓட்டை விழுந்திருக்க வேண்டும். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டேன். எல்லோரும் சிரித்து முடித்த பிறகு நான் சிரித்திருந்தேன்.

“என்ன கண்ணா நான் சொல்றது” என்றார் வாத்தியார். இரண்டாம் முறை அவர் சிரித்தார். மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள். அவர் மிகவும் சந்தோஷமாய்ச் சிரித்தார்.

ஊர்வலத்தில் வரதராசு இருந்தான். சந்தோஷத்துடனும், கூச்சத்துடனும், ஆச்சரியத்துடனும் இரண்டு சாரி வீடுகளாலும் நெருக்கப்படுவது போல நிதானமில்லாமலும் நெளிந்து ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.

இவளைக் கண்ட வரதராசு “டேலி, ஒத்திக்கிங்கடா... அம்மா வராங்கடா” என்று ஒதுங்கினான். எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள். வரதராசுவும் சிரித்தான். ஊர்வலத்தில் தான் விட்டுச் சென்ற பொக்கையை திரும்பி வந்து நிரப்பினான். நாதசுரக்காரன் கெட்டி மேளம் கொட்டினான்.

அவள் ஊர்வலத்தைக் கண்டவளாகத் தோன்றவில்லை. வரதராசுவை அவள் அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம். இடுப்பில் குடத்துடன் வீட்டுக்குள் போய்விட்டாள். அவள் காந்தி கட்சியில் சேர்ந்து விட்டாளென்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அக்ரகார வாத்தியார் கொஞ்ச நாட்கள், ஊர்வல தினத்தன்று தான் சந்தைக்குப் போய் வந்தவன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவள் உயிருடன் இருந்த மூன்று வருஷமும் வரதராசு குத்தகை நெல்லை, வண்டியை வாசலையொட்டி ஓட்டி நிறுத்திக் கொண்டு மூட்டைகளை முதுகில் புரட்டி ரேழியில் உருட்டிவிடுவான். ஆடாதொடைத் தழையால் பூச்சிக்கூடுகளைத் தட்டுவான். குடியானவன் அங்கிருந்து உள்ளே கொண்டுபோய் போடுவான்.

இந்த மூன்று வருஷங்களில் ஒழுங்காகத் தயிர் வாங்க வருவதை அவள் நிறுத்தி விட்டாள். நேர்ந்த சமயங்களில் வந்து சின்னத் திண்ணையில் உட்கார்ந்து யாராவது பார்க்கும் வரை காத்துக் கொண்டிருந்து வாங்கிக் கொண்டு போவாள். விலைக்கு வாங்குபவளாகத் தோன்றாது. யாசித்து நிற்பவளாகத் தோன்றும். சில நாட்கள் விடுபட்டுப் போகும். முன்பு சில சொற்களில் முடிந்தது இப்போது மௌனமாகவே சாத்யமாயிற்று. ஆனால், அவள் மௌனமாக இருந்ததில்லை. அருகில் போனால் லேசான முனகல் கேட்கும். பெரிதாகச் சத்தம் போட்டு தொண்டைகட்டி சப்தம் வராமல் முனகலானது போலிருக்கும். இனிமேல் அதிக நாட்கள் தாங்க மாட்டாளென்று தோன்ற ஆரம்பித்தது. அவள் சீக்கிரம் சாகக் காரணம் அந்த ஊர்வலம் தான் என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலை அவளைக் காணவில்லை. அதிசயமாய் உணர்ந்து வீட்டைப் பார்த்தவருக்கு வீட்டில் பூட்டுத்ட் ஹொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் சாக்காட்டை முன்னதாய் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் செத்து, குளத்தில் மிதக்கப் போகிறாள்; அல்லது வீட்டில் செத்து நாறியபிறகுதான் அவள் சாவு தெருவில் தெரியப் போகிறது என்றுதான் நாங்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இவ்வளவு விரைவிலென்று எதிர்பாராத அவள் சாக்காட்டுச்  செய்தியை வரதராசு கொண்டுவந்து விட்டான்.

மூச்சு இறைக்க, வியர்வைத் துளித்துளியாய் சேர்ந்து கோடிட்டு மார்பில் ஓட, முகத்தில் வழியும் வியர்வை, கடைவாயில் வழிய அக்ரகாரத்தில் துப்பத் தயங்கி, ”அம்மா எறந்து பூட்டாங்க” என்று இறைக்க இறைக்கச் சொன்னான். ஊரைத் தகித்துக் கொண்டிருந்த வெயிலில் ஓடிவந்திருந்தான். கோடைப் பந்தலில் தண்ணீர் தெளித்துவிட்டு நாங்கள் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் பேசிக் கொண்டிருந்தோம்.

“வண்டியே... கட்டுங்க வண்டியே கட்டுங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே தயாராக எழுந்து கொண்டார் அவர்.

நாங்கள் மூலைக்கொருவராக ஓடி, அவன் வண்டி; இவன் மாடு; இவன் பூட்டணாங்கயிறு; இவன் முளைக்கழி; இவன் தார்க்கழி என்று கொண்டுவந்து சேர்ந்துவிட்டோம். அவர் ஆளவடியில் கிழிந்த ஜமக்காளத்தை உதறிக் கொண்டு நின்றார். இரட்டிப்பான சாமான்களை அவர் வீட்டுத் திண்ணையிலேயே போட்டு விட்டு நொடியில் வண்டியைப் பூட்டினோம்.

தலைக்கயிற்றை அவர் தன் கையில் வாங்கிக் கொண்டார். நாங்கள் தொத்திக் கொண்டோம். அதற்கு முன்பே வண்டி புறப்பட்டு விட்டது. மாடுகள் பாய்ச்சலில் போயின. வரதராசு பின்னால் ஓடிவந்தான்.

அவள் காலையில் கீழப்பாளையத்தைத் தாண்டி வரப்பில் நடப்பதை எவனோ கண்டானாம். அவள் போன திக்கிலிருந்து அவள் தன் தாயாதிக்காரனைத் தேடிக் கொண்டு போயிருக்க வேண்டுமென்று தோன்றிற்று. அங்கிருந்து அவள் அதிக தூரம் போகவில்லை. களைத்து ஒரு களத்தின் ஆலங்கிளை நிழலில் போய் உட்கார்ந்து விட்டாள். வெயிலுக்கு அஞ்சியவன் எவனோ வைத்துச் சில வருஷங்களே ஆன ஆலங்கிளை கொஞ்சம் தழையை பூ போல் வைத்துக் கொண்டு நின்றது. நரிப்பயறில் மேயும் மாடுகளை விரட்டிக் கொண்டு போன வரதராசு அவளைக் கண்டிருக்கிறான்.

“ஏம்மா இந்த வெயில்லே பொறப்பட்டு வந்தீங்க” என்றிருந்திருக்கிறான் அவன். அவள் பதில் சொல்லவில்லை. விழிகள், மேல் இமையில் சொருகலிட்டிருந்திருக்கின்றன. வாய் பிளந்து ஆகாசத்திற்கு உயர்ந்து விட்டிருந்திருக்கிறது.

வண்டி கீழப்பாளையத்தைத் தாண்டி எருவடிக்க பாரவண்டிகள் போன சோடையில் இறங்கி ஓடிற்று. சோடை நரிப்பயறுக்கு அடியில் புகுந்து கண்ணுக்கு எட்டும் தூரத்தைத் தாண்டி முடிவற்றுப் போயிற்று. நரிப்பயறு சூடேறி வெப்பம் அடித்துக் கொண்டிருந்தது. துவண்டு தாகத்தைத் தூண்ட இருந்தது. அடிநிலம் தாறுமாறாய் வெடிப்போடியிருந்தது. கானல் பேரோடையாக எங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஆயிரம் வாய் பிளந்த நிலம் எங்கும் கானல் நீரைக் குடித்துக் கொண்டிருப்பதாய் இருந்தது.

”இங்கேதாங்க” என்றான் வரதராசு.

அவன் சொல்லுமுன்பே இடம் தெரிய இருந்தது. சூழ்ந்து பார்த்துக் கொண்டும், பார்த்துத் திரும்பிக் கொண்டும், பார்க்கப் போய்க் கொண்டும் இருந்தவர்கள் வண்டிச் சப்தத்தை தூரத்தில் கேட்கும்போதே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டியைக் களத்தருகில் திருப்பி நிறுத்தி விட்டுக் களத்தில் ஏறினோம். நிழலில் கிடந்தவள் இப்போது சுற்றி நின்று பார்த்தவர்களின் நிழலில் கிடந்தாள். முக்காட்டை முகத்தில் இழுத்து விட்டிருந்தார்கள். இதற்கு முன் யாரும் அவளை இவ்வளவு நெருக்கமாய்ப் பார்த்திருக்க முடியாது. முக்காட்டை விலக்கி முகத்தைப் பார்க்க வேண்டுமென்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. அவள் சாக்காட்டைத் தீர்மானிக்கும் ஆவலும் இல்லை. வரதராசுவின் செய்தியும், பார்த்து நின்றவர்களின் தீர்மானமும் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம் போலிருக்கிறது. தாயாதிக்காரனுக்கு சாவுச் செய்தி சொல்ல வரதராசுவை அனுப்பினோம். பிணத்தை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் காட்டும் ஆர்வத்துடன் போன வேகத்திலேயே திரும்பினோம்.

அவளைப் பார்க்க எல்லோரும் வந்தார்கள். சாவுக்குத் துக்கம் விசாரிப்பவர்களாக இல்லை. அவள் சாவுக்கு யாரிடம் போய் துக்கம் விசாரிப்பது? அவள் இருக்கும்போதே எல்லோரும் வந்துவிட்டார்கள். ரேழியில் கிடத்தப்பட்டிருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் பலரும் அவளைக் குளத்தில் கண்டதாகச் சொன்னார்கள். வெகுநாள் வரையில் அவளைக் குளத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அவளைக் குளத்தில் பார்க்காத நாள் என்று ஆரம்பமாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அதில் நானும் ஒருவன்.

நன்றி: கசடதபற, ஜூலை 1972 இதழ்

தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்