Dec 13, 2012

'எதற்காக எழுதுகிறேன்' - தி.ஜானகிராமன்

சென்னையில் 08.04.1962ல், 'எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. – எழுத்து - மே 1962

ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகி றாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடு கிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகி றோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத் துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகி றோம். சில பேர் சாப்பிடுவதாற்காகவே சாப் பிடுகிறார்கள். ருசி, மணத்தைக் கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூத ராலய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடுthija-logo மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு - அதாவது நான் எழுதுகிறதற்கு.

*

பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக் கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் - இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சம யம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார் - ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக் குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல் கிறேன். கடைசியில் பாக்கும்பொ ழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்துவிடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் - இந்த மூன்று தினுசு தான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற் போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான். உண்மையில்லை.

*

இரவு எட்டு மணிக்குக் காய்கறி வாங்கும்பொழுது, நேற்றுமாலையில் வந்தது, இன்று காலையில் வந்து இன்று முழுவதும் வெயிலில் காய்ந்தது, இன்று மாலை வந்தது மூன்றும் ஒரே குவியலாகக் கிடக்கும். ஆனால் சற்று உற்றுப் பார்த்து, தொடாமல்கூட, கலந்துகட்டி என்று கண்டுபிடித்து விடலாம்.

*

எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போ தல், வேதனை - எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு - எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலை யில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள், - இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறு கிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் - எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டு நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.

*

சரி எனக்கே எனக்காக எழுதும்பொழுது என்ன எழுதுகிறேன்? எப்படி எழுதுகிறேன்? என்ன எழுத வேண்டும் என்று எனக்கு நானே உபதேசம் செய்து கொள்கிறேனோ? பசியே தொழிலாகக் கொண்டிருக்கிற ஏழைகளைப் பற்றி, பிச்சைக்காரர்களைப் பற்றி, பாட்டாளிகளைப் பற்றி, விருப்பமில்லாமல் வழுக்கி விழுந்த பெண்களைப் பற்றி, பள்ளிக்கூடம் போக முடியாமல், பிண ஊர்வலத்தில் நடனம் ஆடிக்கொண்டு போகிற குழந்தைகளைப் பற்றி, விருப்பமில்லாமல் திருட நேர்ந்தவர்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று வகுத்துக் கொள்கிறேனா? இதையெல்லாம் எழுதி, உன்னைச்சுற்றி சாக்கடை தேங்கிக்கிடக்கிறது... ஏன் பார்க்கவில்லையென்று சமுதாயத்தைப் பார்த்துக் கோபித்துக் கொள்ள சங்கற்பிக்கிறேனா? அல்லது குடும்ப உறவுகள், உணர்ச்சிகள், கலைஞர்கள், பெரிய உத்தியோஸ்தர்கள், நடுவகுப்பு, உயர்வகுப்பு மனிதர்கள், அவர்களுடைய ஆச்சாரங்கள், சீலங்கள், புருவம் தூக்கும் பாங்கு, கண்ணிய வரம்புகள், மேல்பூச்சுகள், உள்நச்சுகள் இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொள்கிறேனா? அல்லது சிம்ம விஸ்ணு, கரிகாலன், ராணாப் பிரதாப், வல்லவ சேனன், அலெக்ஸாண்டர் - இவர்க ளைப் பற்றி எழுதி பழையகாலத்தை மீண்டும் படைக்க வேண்டும், இன்றைய மனிதனின் மூதாதையரின் நற்குண, துர்குணங்கள், இவற்றையெல்லாம் எழுதி சரித்திரக் கொள்கைகளையோ சித்தாந்தங்களையோ வகுத்து நிலைநாட்ட வேண்டும் என்று எழுதும்பொழுது திட்டம் போட்டுக் கொள்கிறேனா?

*

எனக்கே எனக்காக எழுதும் பொழுது இந்தப் பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் இத்தனை பெயரைப் பற்றியும் எழுதினாலும் எழுதுவேன், எழுதாமலும் இருப்பேன். யாரைத்தெரியுமோ அவர்களைப்பற்றி எழுதுவேன். அதாவது அவர்கள் அல்லது அதுகள் என்மனதில் புகுந்து, தங்கி, அமர்ந்து என்னைத் தொந்தரவு பண்ணினால் எழுதுவேன். தொந்தரவு தாங்க முடியாமல் போனால்தான் எழுதுவேன். நானாகத் தேடிக் கொண்டு போய் 'உன்னைப் பற்றி எழுதுவதாக உத்தேசம்' என்று பேட்டி காணமாட்டேன் - அப்ஸர்வ் பண்ணமாட்டேன். அவர்களாக, அதுகளாக வந்து என்னைத் தாங்கினால்தான் உண்டு. அதனால்தான் எனக்கு எழுதுவதற்காக யாத்திரை பயணங்கள் செய்வதில் உற்சாவம் கிடையாது. அதைவிட காதல் செய்து பொழுதைப்போக்கலாம்.(என்ன காதல் என்று நிர்ணயித்துக் கொள்வது என்னுடைய இஷ்டம், வசதியைப் பொறுத்தது.)

*

அப்படியென்றால் நீர் எழுதுவதற்காகப் பயணம் செய்வதில்லையா என்று யாராவது கேட்டால்? ம்....செய்கிறதுண்டு. அது உங்களுக்காக, உங்களுக்கும் எனக்குமாக எழுதும்பொழுதுதான். அதனால் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம், ஏமாளிகளைப் பிரமிக்க அடிக்கலாம் என்று தோன்றினால் செய்வதுண்டு. நடுநடுவே அல்ப சந்தோசங்கள் படுவதில் தப்பொன்றுமில்லை.

*

ஆக, எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன்.... அல்லது என் கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுதுகிறேன். சிலசமயம் என்ன அம்மாமி பாஷையாக இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாகத் தெரியும். ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரி யும். தெரிந்த விகிதத்துக்குத்தான் எழுத்தும் வரும்.

*

எதற்கு எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, என்ன எழுதுகிறேன் என்று சொல்வ தா பதில் என்று யாராவதுகேட்கலாம். எனக்காக என்று சொல்லும் பொழுது, என்ன, எப்படி இரண்டும் சொல்லத்தான் வேண்டும் என்று முன்னாலேயே சொல்லிவிட்டேன். மறு படியும் சந்தேகம் வரப்போகிறதே என்பதற்காக ஞாபக மூட்டினேன்.

*

எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதுகூட அவ்வளவு கடினமில்லை, ஏனெனில் எனக்காக எழுதுவது சொல்பம்தான். எழுதுகிறது என்னமோ அதிகம் தான். கூலிக்கு மாரடிப்பதும், கோயில் மேளம் வாசிப்பதும் நிறைய உண்டு. ஆனால் அது என்றும் சொந்தத்திற்கு என்று எழுகிற எழுத்தைப் பாதிப்பதில் லை என்று நிச்சயமான உணர்வு இருக்கிறது. கூலிக்கு மாரடித்தால், மார்வலி யோ சோர்வோ இருந்தால்; வலியடங்கிக் சோர்வகன்ற பிறகு அதுவும் அவசியமானால் முடிந்தால் எழுதுகிறதே தவிர, வலியோடும் சோர்வோடும் எழுதுகிறது கிடையாது. எவனாவது எழுதுவானோ அந்த மாதிரி! எழுதத்தான் முடியுமா? திரானி எங்கே இருக்கும்?

*

எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும் நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை மென்றுகொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற, வழிகாணாமல் தவிக்கிற, வழி காணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே உட்காந்திருக்கிறேன். சாப்பிடும் பொழுது வேறுவேலைசெய்யும் பொழுது, வேறுஏதோ எழுதும்பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும் தவிர்ப்பும் நடந்துகொண்டுதானிருக் கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுதமுடிகிறது. அவ்வளவுக்கு மேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை.

*

கலை வடிவத்துக்கும் எனக்காக எழுதுவதற்கும் என்ன சம்பந்தம்? எனக்காக எழுதுவது எல்லாம் கடைசல்பிடித்த கலைவடிவம் கொண்டிருக்க வேண்டுமா? அவசியம் இல்லை. கலைவடிவம் என்பது தவத்தையும், அதன் தீவிரத்தையும் பொறுத்தது. அந்த முனைப்பு சிறு நொடியிலோ, பல வருடங்களிலோ சாத்தியமாகலாம். காலம் முக்கியம் என்றாலும் அவ்வளவு முக்கியமில்லை. உணர்வின் அனுபூதியின், அமுங்கி முழுகுவதின் தீவிரத் தன்மைதான் முக்கியமானது. இது எனக்காக எழுதும் எழுத்திலும் சாத்தியம். உங்களுக்காக எழுதும் எழுத்திலும் சாத்தியம். எனக்காக எழுதும் எழுத்தில் கலைவடிவம் சில சமயம் மூளியாகவோ, முழுமை பெறாமலோ, நகாசு பெறாமலோ இருக்கலாம். ஆனால் அதுதான் அதன் வடிவம். அதாவது மூளியும் முழுமையில்லாததும் அதனுடைய ஒரு அம்சம்.

*

கூலிக்காக நான் எழுதும் எழுத்திலும் அல்லது உங்கள் சந்தோஷத்துக்காக நான் எழுதும் எழுத்திலும் கலைவடிவம் என்ற ஒன் றைக் கொண்டுவந்துவிட முடியும். இங்கு கலை வடிவம் என்பது பயிற்சியின், சாதகத்தின் ஒரு விளை வாகப் பரிணமித்து விடுகிறது. இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான வேற்றுமை தோன்றுகிறது. கலைக்கும் நுண் தொழிலுக்கும் உள்ள வேற்றுமை அது. சில சமயம் நான் செய்கிற நுண் தொழிலைக் கண்டு கலைவடிவம் என்று தப்பாகப் புரிந்து கொண்டு விடுபவர்கள் உண்டு. அப்படிச் சொல்லி என்னையே ஏமாற்றப் பார்ப்பார்கள்.

*

ஆனால் எனக்குத் தெரியும் எது கொம்பில் பழுத்தது, எதை நான் தடியால் அடித்து குடாப்பில் ஊதிப்பழுக்க வைத்திருக்கிறேன் என்று. எனக்காக நான் எழு தும் போது, கொம்பில் பழுத்த பழம். நான் பண்ணிய தவத்தின் முனைப்பில் பழுத்த பழம் அது. என் தவம் எத்தனைக்கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும் கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சிலசமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்புநிலையில் பூவில் இட்ட முட்டை வண்டாக வளர்கிறமாதிரி, அதை நான் தடுத்திருக்கமுடியாது. அந்த ஒரு கறுப்பு, கசப்பு எல்லாம் அதன் அம்சம். தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான், இந்த தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது. என்னுடைய உள்பிரபஞ்சத்தில் உள்ளதெல்லாம் மேலே மேலே இருள் நீங்கி என் சிந்தைக்கும் உணர்விற்கும் புலனாகிறது. என் தவம் மிக மிக, மேலும் மேலும் என் சுயரூ பம் எனக்குத் தெரியும். அதற்கு வளர்ச்சி என்றோ மாறுதல் என்றோ பெயர்களிட நான் விரும்பவில்லை.

*

இந்தக் கலைவடிவம்தான் வடிவம். இதை ஒரு மரச்சட்டமாகச் செய்து இறுகச் செய்துவிடுகிறார்கள் இலக்கியச் சட்டம் சேர்க்கிற தச்சர்கள். அதை வைத்துக் கொண்டு பிறகு வரும் கலைவடிவங்களையும் பிறருடையவற்றையும் அதிலே பொருத்திப் பார்க்கிறார்கள். தானே வடித்த வடிவத்தை, சட்டத்தில், திருவாசியில் அடைக்க முடியாது. இப்படி அடைத்து, சமஸ்கிருத நாடகத்தை வளரவிடாமல் அடித்த ஒரே பெருமை தச்சர்களுக்கு உண்டு. சமஸ்கிருத நாடகம் சூம்பிப் போனதற்கு, பல காரணங்களில் இதுவும் ஒன்று.

*

அதற்காகத்தான் மீண்டும் சொல்கிறேன். கலைவடிவம் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொருத்தது. மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னைப் பயமுறுத்தாதீர்கள் என்று. நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்தத் தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்பட வில்லை. வாலைப் போட்டுவிட்டு பல்லியைப் போல் தப்பிவிடுவேன்.

*

நன்றி: தி.ஜானகிராமன்/ நினைவோடை - சுந்தரராமசாமி.

தட்டச்சு & வடிவம்: தாஜ்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

R. Jagannathan on December 13, 2012 at 8:04 PM said...

What a self-analysis! Fluid writing style! - R. J.

நிலாமகள் on December 14, 2012 at 6:49 AM said...

இப்படியான சுய அலசலும் உறுதியான நிலைப்பாடும் தெளிவும் தான் படைப்பை படைப்பாளியை கால ஓட்டத்தில் நிலைக்கச் செய்யும் காரணியோ...!

வல்லிசிம்ஹன் on December 14, 2012 at 8:15 AM said...

அருமை. இதைவிட ஒருவர் தன்னை அலசிக்க் கொண்டு இருக்க முடியாது. இவரது ஒவ்வொரு வார்த்தையிலும் மூழ்கி எழும்பொழுது நன் அடைவது பிரமிப்பே.
தி.ஜா சார் இன்னும் கொஞ்சநாட்கள் எங்களுக்கக நீங்கள் இருந்திருக்கலாம்.

K.Ramaswamy on January 2, 2013 at 3:26 PM said...

Janakiramans writings are kadavul thantha bhikshai

what more can we tell he richly deserved noble prize for litterature. am longing to see whether any more writer will emerge in the forseeable futureequal to hisw calibre

ramaswamy1940@rediffmail.com

Unknown on February 6, 2013 at 6:51 AM said...

ஒரு படைப்பாளிக்கு சுயவிமர்சனம் தேவை; அதைவிட ஒருவித அகோர பசியும் இருந்துவிட்டால் ஹ.. ஹா.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்