Showing posts with label சா.கந்தசாமி. Show all posts
Showing posts with label சா.கந்தசாமி. Show all posts

Sep 4, 2012

ஒரு வருடம் சென்றது - சா. கந்தசாமி

நான்கு எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலாகிய ‘கோணல்கள்’ மூலம் பரவலான இலக்கிய ரசிகர்களின் கவனத்துக்கு வந்த சா. கந்தசாமி மாயவரத்தில் பிறந்தவர் (23-7-1940). தற்போது சென்னைத் துறைமுகத்தில் பணி புரிகிறார். இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படும் ‘கசடதபற’ இலக்கிய இதழில் இவர் பெரும் பொறுப்பு வகித்தவர். தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காகச் சிறிய வனம் ஒன்று அழிக்கப்படுவது பற்றிய ‘சாயா வனம்’ (1969) என்ற நாவல் இவருடைய முக்கியமான நூல். ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ (சிறுகதைகள், 1974), ‘அவன் ஆனது’ (நாவல், 1981) ஆகியவை நூல் வடிவில் வந்துள்ள இவருடைய பிற படைப்புகள். படைப்பிலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 100-00-0000-100-9_b

 

 

 

 

 

 

 

 

ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்புக்குள் நுழைந்தான் ராஜா.

நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதிக் கொண் டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற் போல எழுதிக்கொண்டு வந்துவிட்டான்.

மணியடித்துப் பிரேயர் முடிந்த பின் வகுப்புத் தொடங்கும். அதற்கு இன்னும் நேரமிருந்தது. ராஜா வகுப்பின் நடுவில் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தான். பிறகு சற்றே குனிந்து சிலேட் டைப் பலகைக்குக் கீழே வைத்துவிட்டு, நழுவும் சட்டையை இழுத்துக் கட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான்.

அவன் மேல்சட்டை கால்சட்டை எல்லாம் காக்கி. அதைத்தான் எப்போதும் போட்டுக்கொண் டிருப்பான். ராணுவத்தில் கொடுக்கப்படும் காக்கி அது. பிரித்துச் சிறியதாகச் சட்டை தைத்ததின் அடையாளங்கள் எப்போதும் அதில் தெரியும்! சண்டை வந்தால் சக மாணவர்கள் அவனிடம் அதைச் சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். அவர்கள் குரல் ஓங்க ஓங்க அவனுக்கு ஆத்திரம் வரும்; கோப‌ம் வ‌ந்தால் முக‌ம் வீங்கும்.வ‌ல‌ப்ப‌க்க‌த்திலிருந்து இட‌ப் ப‌க்க‌த்துக்கு வாய் கோண‌க் கோண‌ இழுக்கும்.ஏற்க‌ன‌வே அவ‌ன் தெற்றுவாய்.இப்போது சுத்த‌மா‌க‌ ஒரு வார்த்தையும் வ‌ராது.

"தெத்துவாயா"என்றுதான் சார் கூப்பிடுவார்.

சாருக்கும் அவ‌னுக்கும் ஒரு ராசி,கெட்ட‌ ராசி, ஒருத்தரை ஒருத்த‌ருக்குப் பிடிக்காது. ஆசிரிய‌ரைப் பார்க்கும் போதெல்லாம் த‌ன் த‌கப்ப‌னாரைப் பார்ப்ப‌து போல‌ இருக்கும் அவ‌னுக்கு. உறுமு வான். 'சாரைக் கொன்னு போடணும். நாற்காலியிலே முள்ளு வைக்க‌ணும். ந‌ல்ல‌ க‌ருவேல‌ முள்ளா,ச‌ப்பாத்தி முள்ளா கொண்டாந்து வைக்க‌ணும்.' என்று சொல்லிக் கொள்ளுவான்.இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் அவ‌ன் ந‌ட‌த்தை விப‌ரீத‌மாக‌ மாறும்.

சிலேட்டை எடுத்துத் த‌ரையில் அடிப்பான்.ப‌க்க‌த்தில் இருக்கிற‌ ‌வ‌ன் தொடையில் ந‌றுக்கென்று கிள்ளுவான். திடீரென்று பாய்ந்து ஒரு மாண‌வ‌ன் முக‌த்தில் பிராண்டுவான். ச‌ற்றைக்கெல்லாம் வ‌குப்பில் க‌ல‌வ‌ர‌ம் மூளும். மாண‌வ‌ர்க‌ளும் மாண‌விக‌ளும் ப‌ய‌ந்து மூலைக் கொருவ‌ராக‌ ஓடுவார்க‌ள்.

ஆசிரிய‌ர் பாய்ந்து வ‌ந்து ராஜா காதைப் பிடித்து முறுக்கி அடிப் பார். க‌ன்ன‌த்தில் கிள்ளுவார். பிர‌ம்பு ப‌ளீர் ப‌ளீரென்று த‌லையிலும் முதுகிலும் பாயும். அவ‌னோ வ‌லியையும் துய‌ர‌த்தையும் பொறுத்துக் கொண்டு மௌன‌மாக‌ இருப்பான். உட‌ல் அப்ப‌டியும் இப்ப‌டியும் நெளியும். ஆனால் க‌ண்களிருந்து ஒரு சொட்டு நீரும் பெருகாது. அதைப் பார்த்த‌தும் சாருக்குக் கோப‌ம் வ‌ரும். "பாரு,கொற‌ப்ப‌ய‌ அழ‌றானா?" என்று ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு த‌லையைப் பிடித்து ம‌டாரென்று சுவ‌ற்றில் மோதுவார்.

இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ ராஜா அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வ‌ருகிறான். அவ‌ன் நினைவெல்லாம் மூன்றாம் வ‌குப்பிலிருந்து நான்காம் வ‌குப்புக்கு வ‌ந்த‌திலிருந்துதான் தொட‌ங்குகிற‌து.ம‌ற்ற‌தையெல்லாம் அவ‌ன் ம‌ற‌ந்துவிட்டான். ஓரோர் ச‌ம‌ய‌ம் கீழ் வ‌குப்புப் பிள்ளை க‌ளைப் பார்க்கும்போது,அந்த‌ வ‌குப்பெல்ல‌ம் தான் ப‌டிக்க‌வில்லை போலும் என்ற‌ உண‌ர்வு தோன்றும்.

நான்காம் வ‌குப்புக்கு வ‌ந்த‌துமே அவ‌னுக்கு அடி விழுந்த‌து. பிரேய‌ருக்கு நிற்கையில் பின்னாலிருந்து யாரோ நெறுக்கினார்க‌ள். வ‌ரிசை திடீரென்று உடைந்த‌து. நான்கு பேர் 'கேர்ள்ஸ்'மீது போய் விழுந்தார்க‌ள். பெண்க‌ள் 'ஓ'வென்று க‌த்தினார்க‌ள். ஆனால், உடைந்த‌ வ‌ரிசை ம‌றுக‌ண‌த்திலேயே ஒன்றாக‌க் கூடிய‌து. காலைச் சாய்த்து வைத்து நின்றுகொண் டிருந்த‌ எம்.ராமானுஜ‌த்தின் ச‌ட்டை யைப் பிடித்து,'ச‌ரியா‌ நில்லு' என்றான் ராஜா.அப்போதுதான் த‌லையில் ஓர் அடி விழுந்த‌து.த‌லை வேக‌மாக‌ப் பின்னுக்குப் போவ‌து மாதிரி இருந்தது. காது, கண், நெஞ்சு - எல்லாம் பற்றி எரிந்தன. காகை இருகப் பொத்தினான். பிரேயர் வரிசை, டீச்சர், பள்ளிக்கூடம், பிள்ளையார் கோவில் அவனைச் சூழ்ந்த ஒவ்வொன்றும் கிர்கிர்ரென்று வேகமாகச் சுற்றின.

ஆசிரியர் கையைப் பிடித்திழுத்து, "ஒழுங்கா நில்லு" என்று உறுமினார். அந்தக் குரல் தன் அப்பாவின் குரல் மாதிரியே இருந்தது. அவனுக்கு நெஞ்சு அடைத்தது.

எல்லா மாணவர்களும் அவனுக்கு இடம் விட்டு ஒதுங்கினார்கள். இரண்டு பேர் மூன்று பேர் நிற்கவேண்டிய இடத்தில் அவன் ஒடுங்கி நின்றான். கீச்சுக் குரலில் நான்கு பெண்கள், "உலகெல்லாம் உணர்ந்து" - என்ற பாட்டை இழுத்து இழுத்துப் பாடினார்கள். தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் சிறு பிரசங்கம் செய்தார்.

பிரேயர் முடிந்தது; அவன் வரிசை நகர்ந்தது. வகுப்புக்குள் காலடி வைத்ததுமே மாணவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடி இடம் பிடித்துக்கொண்டார்கள். ஆனணால் ராஜாவோ எல்லாருக்கும் வழிவிட்டுக் கடைசியாகப் போய்ச் சுற்றுமுற்றும் பார்த்தான். முன் வரிசைகள் நான்கு நிறைந்துவிட்டன. ஆனாலும் மூன்றாவது வரிசை யில் அவனுக்கொரு இடம் வைத்துக்கொண்டு சங்கரன், "ராஜா, இங்க வா!" என்று அழைத்தான். அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டுப் பின்னால் போய் உட்கார்ந்தான் ராஜா.

பிரேயரில் வாங்கிய அடியில் தலையும் காதும் இன்னும் எரிந்து கொண்டிருந்தன. காதை மெல்ல இழுத்துத் தடவிவிட்டுக் கொண் டான். அப்பா அடிக்கும்போதெல்லாம் அம்மா இப்படித்தான் செய் வாள் என்ற நினைப்பு வந்தது.

"ரொம்ப வலிக்குதாடா, ராஜா?" சங்கரன் அவன் அருகே வந்து குனிந்து கேட்டான்.

"இல்லே."

"அப்பவே பிடிச்சு காதைத் தடவிக்கிட்டே இருக்கிறியே!"

ராஜா, சங்கரனைக் கூர்ந்து பார்த்தான்.

"சார் வராங்க" என்று கத்திக்கொண்டு பின்னே இருந்து முன்னே ஓடினார்கள் சிலர். முன்னே இருந்து பின்னே சென்றார்கள் சிலர். சங்கரன் முன்னே போக ஒரு காலை எடுத்து வெத்தான். சார் நீண்ட பிரம்பைக் கதவில் தட்டிக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார். சங்கரன் ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். ஆனால், எட்டாம் நாள், "அந்த முரடன்கிட்ட குந்தாதே: என்று சார் அவனைப் பிரித்துக்கொண்டுபோய் முன்வரிசையில் உட்காரவைத்தார்.

"நான் ஒண்ணும் முரடனில்லே; நீதான் முரடன்; முழு முரடன்" என்று முணுமுணுத்தான் ராஜா. "சார் தலையில் சிலேட்டால் படீர் ப‌டீரென்று அடிக்க‌னும், காஞ்சொறி கொண்டாந்து அழ‌ அழ‌ தேய்க்கணும்' என்ற‌ உண‌ர்வு தோன்றிய‌து. ப‌ர‌ப‌ர‌க்க‌ச் சிலேட்டை யெடுத்துப் பெரிதாக‌ ஒரு ப‌ட‌ம் போட்டான். சாருக்கு இருப்ப‌து மாதிரி சிறிதாக‌ மீசை வைத்தான். மீசை வைத்த‌வுட‌னே கோப‌ம் வ‌ந்த‌து. குச்சியால் த‌லையில் அழுத்திய‌ழுத்திக் குத்தினான். க‌ண் க‌ளைத் தோண்டினான். கண்ணை மூடிக் கொண்டு கீர்கீர்ரென்று ப‌ட‌ம் முழுவ‌தும் கோடுக‌ள் கிழித்தான். குறுக்கும் நெடுக்குமாக‌க் கோடு க‌ள் விழும்போது ம‌ன‌தில் இன்னொரு காட்சி ப‌ட‌ர்ந்த‌து.

வீட்டில்,சாந்தா ப‌க்க‌த்தில் உட்கார்ந்திருந்தால் அப்பா வீட் டுக்குள் வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாக‌,'அந்த‌ முர‌ட‌ங்கிட்டே குந்தாதே அம்மா,இங்கே வா' என்று அவ‌ளைத் தூக்கி அணைத்துக் கொள் வார். ராஜா கீழ்க் க‌ண்ணால் த‌ங்கையையும் அவ‌ள் க‌ன்ன‌த்தில் குனிந்து முத்த‌மிடும் த‌க‌ப்ப‌னாரையும் பார்ப்பான். நெஞ்சில் என் ன‌வோ இட‌றுவ‌துபோல் இருக்கும். புத்த‌க‌த்தை அப்ப‌டியே போட்டுவிட்டு,"அம்மா"என்று உள்ளே ஓடுவாள்.அம்மா அவ‌னை அணைத்துக்கொண்டு கொஞ்சுவாள். அவ‌ன் தங்கையை நோக்கிப் 'ப‌ழிப்புக்' காட்டுவான்.

ராஜா சிலேட்டைத் திருப்பிப் பார்த்தான். சார் ப‌ட‌ம் கிறுக்க‌ லில் ம‌றைந்து போய்விட்ட‌து. ம‌ன‌த்தில் ஒருவித‌மான‌ ச‌ந்தோஷ‌ம் தோன்றிய‌து. சிலேட்டை ஒரு குத்துக் குத்திப் ப‌ல‌கைக்க‌டியில் வைத்துவிட்டு.'சார் நாற்காலியில் ஒரு நாளைக்கு முள்ளு வைக்க‌ ணும்' என்று த‌ன‌க்குத்தானே சொல்லிக்கொண்டு எழுந்தான்.

நாட்க‌ள் போக‌ப் போகத் த‌ன் த‌னிமையை அவன் அதிக‌மாக‌ உண‌ர்ந்தான்.அது துக்க‌த்தைக் கொடுத்த‌து. தெரியாத‌ க‌ண‌க்கைச் சொல்லித்த‌ர‌ ஆள் இல்லை; ம‌ன‌க்க‌ண‌க்குப் போடும்போது சிலேட்டை லேசாக‌த் திருப்பிக் காட்ட‌ ஆள்இல்லை. அவ‌ன் எழுதும் த‌மிழ்ப் பாட‌த்தைப் பார்த்தெழுத‌ யாரும் இல்லை. கைக‌ளை முறுக்கிச் சுவ‌ரில் குத்தினான் ராஜா.

ஆர‌ம்பிச்சுட்டியா?" என்று பிரம்பைக் காட்டி ஆசிரிய‌ர் உறுமி னார். அவ‌ன் க‌ண்க‌ளைத் தாழ்த்திக் கொண்டான்.

சார் ப‌த்து ம‌ன‌க்க‌ண‌க்குக் கொடுத்தார்.அவ‌னுக்கு எட்டுத் த‌ப்பு. அவ‌ன்தான் வ‌குப்பிலேயே ரொம்ப‌ த‌ப்புப் போட்டான்.

ஆசிரிய‌ர் அவ‌னைக் கூப்பிட்டு "எத்த‌னை த‌ப்பு?"என்று வின‌வினார்.

அவ‌ன் "ரெண்டு ரைட்."என்றான்.

சார் ஒரு சிரிப்புச் சிரித்தார்; கை காதைப் ப‌ற்றிய‌து.

"எத்த‌னை த‌ப்பு?"

"ரெண்டு ரைட் சார்."

"யாரைப் பார்த்து எழுதினே?"

"நானே போட்டேன் சார்!"

சார் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

"யாரைப் பார்த்துக் காப்பி அடிச்சே?"

"நான் தனியாப் போட்டேன்,சார்."

"எனக்குத் தெரியும்! நிஜத்தைச் சொல்லு."

"நாந்தான் சார் போட்டேன்!"

"ஏலே, மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா?"

சார் பிரம்பு அவன் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தது. துள்ளிக் குதித்துக்கொண்டு பின்னுக்கு ஓடினான். அவன் காலடியில் இரண்டு சிலேட்டுக்கள் மிதிபட்டு உடைந்தன. சார் அவன் பின்னே ஓடிச் சட்டையைப் பிடித்து நிறுத்தினார்.

"உண்மையை உன் வாயாலேயே வரவழைக்காட்டா பார்" என்று கூவினார்.

"இன்னமெ ஓடுவியா?"

"......."

"வாயைத் திற!"முட்டிக் காலுக்குக் கீழே பிரம்பு சாடியது.

அவன் நெளிந்தான்.

"ஓடினா உடம்புத் தோலை உறிச்சுப்புடுவேன்."

"....."

"ஓடுவியா?"

"மாட்டேஞ் சார்!"

"கையை நீட்டு....நல்ல.."

உள்ளங்கையை விரிய நீட்டினான் ராஜா.

"முட்டிப் போடு."

அவன் முழங்காலிட்டு அவருக்கு நேரே கையை நீட்டினான். சார் அவனைக் குத்திட்டு நோக்கினார்.

"இப்ப நிஜத்தைச் சொல்லு,அந்த ரெண்டையும் யாரைப் பார்த்துப் போட்டே?"

"நானே போட்டேஞ் சார்!"

"சுவாமிநாத‌னைப் பாத்துத்தானே?"

"நானே சார்."

"நிஜ‌த்தைச் சொல்ல‌மாட்டே?" பிர‌ம்பு உள்ள‌ங்கையில் குறுக் காக‌ப் பாய்ந்த‌து.

அவ‌ன்,'நான்'என்று ஆர‌ம்பித்தான்.வாய் கோண‌க் கோண‌ இழுத்த‌து. அந்த‌ வாக்கிய‌ம் முழுதாக‌ வ‌ர‌வில்லை. முகம் வீங்க, ம‌ண்டியிட்ட‌ப‌டியே இருந்தான். சார் அடித்துக் க‌ளைத்துப் போனார். பிர‌ம்பைப் பின்னால் வீசியெறிந்துவிட்டு, "இரு,உன்னை ஒழிச்சிடுறேன்!" என்று பிட‌ரியைப் பிடித்து அவ‌னைத் த‌ள்ளினார்.

அவ‌ன் த‌ப்புச் செய்யும்போதெல்லாம் சிலேட்டைப் பிடுங்கி எறிவார். ச‌லிப்புற்று,"உன‌க்குப் ப‌டிப்பு வ‌ராது: மாடு மேய்க்க‌த் தான் போக‌ணும்"என்கிற‌போது,அவ‌ன் மௌன‌மாக‌த் த‌லை குனிந்த‌ப‌டியே நிற்பான். சார் நிமிர்ந்து பார்ப்பார். ம‌னத்தில் திடீரென்று எரிச்ச‌ல் மூண்டெழும்: "எதுக்கு நிக்க‌றே?போய்ஒழி" என்று க‌த்துவார்.

ஜூலை மாத‌ம் தொட‌ங்கிய‌திலிருந்து சார் பாட‌ம் ந‌ட‌த்துவ‌து குறைந்துகொண்டே வ‌ந்த‌து.ஒரு நாள்,ஐந்து க‌ண‌க்குக‌ள் கொடுத்துவிட்டுச் சென்ற‌வ‌ர் ம‌றுநாள் திரும்பி வ‌ந்தார். எல்லாரும் சிலேட்டை எடுத்துக்கொண்டு கூட்ட‌மாக‌ ஓடினார்க‌ள். ஆனால், சாரோ,புதிதாக‌ ஒன்ப‌து க‌ண‌க்குக‌ள் கொடுத்தார். "சிலேட்டிலே இட‌ம் இருக்காது சார்!"என்று ஒருவ‌ன் க‌த்தினான்.

"இருக்கிற‌ வ‌ரைக்கும் போடு" என்று வேக‌மாக‌ வெளியே சென்றார்.

ஐந்தாம் வ‌குப்பில் அவ‌ர் ப‌ட‌ம் போட்டுக்கொண் டிருப்ப‌தாக‌ மூன்றாம் நாள் வி.ஆர்.பாப்பா வ‌ந்து சொன்னாள்.அதை யாரும் ந‌ம்ப‌வில்லை. "கேர்ல்‌ஸ்" ப‌க்க‌த்திலிருந்து வ‌ந்த‌ த‌க‌வ‌லைப் "பாய்ஸ்" பொருட்ப‌டுத்த‌வில்லை.

ஆனால்,ம‌றுநாளும் ம‌றுநாளும் அதே செய்தி திரும்ப‌‌த் திரும்ப‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌து. ச‌ங்க‌ர‌னும் வேணுகோபால‌னும் ஐந்தாம் வ‌குப்பு ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌மாக‌ப் போய்ப் பார்த்துவிட்டு வ‌ந்தார்க‌ள். அப்புற‌ம் தான் அது நிஜ‌மென்று ஊர்ஜித‌மாயிற்று.சார் ப‌ட‌ம் போட்டுக் கொண்டிருப்ப‌து தெரிந்த‌வுட‌னே பாட‌ம் எழுதுவ‌தையும் க‌ண‌க்குப் போடுவ‌தையும் விட்டுவிட்டார்க‌ள்.

ராஜா ஐந்தாம் வ‌குப்பு ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌மாக‌ச் சென்று பார்த்தான். சார்,மேசைமீது நின்றுகொண்டு உய‌ர்ந்த‌ வெள்ளைச் சுவ‌ரில் பெரிதாக‌ ம‌ர‌ம் போட்டுக் கொண்டிருந்தார்.ம‌ர‌த்துக்கு அப்பால் இன்னொரு ம‌ர‌ம்;ச‌ற்றுச் சிறிய‌து.இப்ப‌டியேஒரு ப‌த்துநூறு ம‌ர‌ங்க‌ள். ஒரு பெரிய‌ வ‌ன‌ம்.வ‌ன‌த்தின் ஒரு ப‌க்க‌த்திலிருந்து பைச‌ன் எருமை உட‌ம்பைக் குலுக்கிக்கொண்டு த‌லை குனிந்த‌வாறு சீறிக்கொண்டு வ‌ந்த‌து. ராஜா க‌ண்க‌ளைத் தாழ்த்திப் பார்த்தான். அவ‌னுக்குப் ப‌ட‌ம் ரொம்ப‌ப் பிடித்திருந்த‌து.முத‌ல் முறையாக‌ த‌ன்னுடைய‌ ஆசிரிய‌ரைக் கொஞ்ச‌ம் சிர‌த்தையோடு க‌வ‌னித்தான்.அவ‌ர் கை வேக‌மாக‌ உய‌ர்ந்து தாழ்ந்துகொண் டிருந்த‌து. பெருங் கிளைக‌ளி லிருந்து சிறு கிளைக‌ளும்,சிறு கிளைகளிலிருந்து த‌ழைக‌ளும் தோன்றின‌.

இந்த விந்தையைக் காண ராஜா ஒவ்வொரு நாளும் ஐந்தாம் வகுப்பு ஜன்னலோரம் சென்றுகொண் டிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு, ஐந்தாம் வகுப்பு முழுவதும் பெரிய பெரிய படங்கள் வரைந்துவிட்டுச் சார் தன் வகுப்புக்கு வந்தார். வகுப்பு அலங்கோலமாகவும் ஒழுங்கற்றும் இருந்தது. ஆனால், அவர் இதையெல்லாம் கவனிக்கவில்லை.வெள்ளைச் சுவரை அங்குமிங்கும் தொட்டும் தட்டியும் பார்த்தார். திருப்தியாக இருந்தது.

ராஜா உட்காருகிற இடத்துக்கு மேலே பெரிதாகச் சுவரை அடைத்துக்கொண்டு காந்தியின் படத்தை வரைந்தார். பொக்கை வாய்க் காந்தி; அதில் லேசான சிரிப்பு; சற்றே மேல் தூக்கிய கை; அறையில் சிறு துண்டு; இடுப்பிலிருந்து ஒரு கடிகாரம் செயினோடு தொங்கியது. இவ்வளவையும் ரொம்பப் பொறுமையாக மெல்ல மெல்ல வரைந்துகொண்டு வந்தார்.

சார் படம் வரைய ஆரம்பித்தவுடனே வகுப்பில் பாடம் நடப்பது நின்று போயிற்று. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவிக்கொண் டிருந்தார்கள். கூச்சல் பொறுக்க முடியாமல் போகும்போது, "வரணுமா?"என்று கத்துவார். இரைச்சல் திடீரென்று அடங்கி அமைதியுறும்.

காந்தியின் படத்தை முடித்துவிட்டு,சார் ஒரு கொடி வரைந்தார். மூவர்ணக்கொடி; காந்தி படத்தைவிடக் கொஞ்சம் சிறியது; ஆனால் உயரமானது. காற்றில் படபடத்துப் பறப்பது மாதிரி ஒரு தோற்றம். கொடியில் முதலில் ஆரஞ்சு;அப்புறம் வெள்ளை,நடுவில் நீல நிறத்தில் சக்கரம். இவையெல்லாம் பூர்த்தியான மூன்று நாள் கழித்து,கொடியின் கீழே பச்சை வர்ணம் தீட்டப்பட்டது.சக்கரம் போடும்போது தலைமையாசிரியர் ராமசாமி ஐயரும் கமலம் டீச்சரும் வந்தார்கள்.

சார் மேசையிலிருந்து கீழே இற‌ங்கினார்.

"சாப்பாட்டுக்குக் கூடப் போகல போல இருக்கே,சந்தானம்?" என்று கேட்டார் தலைமையாசிரியர்.

"ரெண்டு ஆரம் இருக்கு.அதை முடிச்சிட்டுப் போகலாம்னு இருக்கேன்"

தலைமையாசிரியர் திருப்தியுற்றார்."எட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டேன்.நமபளதுதான் முதல்லே நிக்குது.இதுக்குக் காரணம் நீங்கதான்.

சார்,கமலம் டீச்சர் பக்கம் சற்றே திரும்பினார்.

"இது என் டியூட்டி சார்"

"சார்,நம்ப கிளாசைத்தான் கவனிக்கிறது இல்லை"என்றாள் கமலம் டீச்சர்.

"எனக்கு எங்கே நேரம் இருக்கு டீச்சர்?"

ராமசாமி ஐயர் தலையசைத்தார்.

"அவருக்கு நேரமே இல்லே அம்மா."

கமலம் டீச்சர் சிரித்துக் கொண்டே படி இறங்கினாள்.

ஒரு நாள், படமெல்லாம் போட்டு முடித்த பிறகு எல்லா மாணவர் களையும் அருகே கூட்டிவைத்துக் கொண்டு, "நமக்குச் சுதந்திரம் வருகுது, தெரியுமா?"என்று கேட்டார் ஆசிரியர். அவ‌ர் குரலில் தென்படும் உணர்ச்சி பாவத்தைக் கண்டு எல்லோரும் த‌லையை அசைத்தார்கள்.

"நமக்குச் சுதந்திரம் பதினைந்தாம் தேதி வருகுது. இதுதான் முதல் சுதந்திரதினக் கொண்டாட்டம். ரொம்ப விமரிசையாக் கொண்டாடணும். ஆளுக்கு ஒரு ரூபா கொண்டாங்க."என்றார் ஆசிரியர்.

அடுத்த நாளிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் பேர்கள் கூடிக் கொண்டே வந்தன. ராஜா ஐந்தாவதாகப் பணம் கொடுத்தான். தெத்துவாய் என்றெழுதிய சார், சட்டென்று அதனை அடித்துவிட்டு ஆர்.ராஜா என்றெழுதினார். பின்னால் ஒருநாள் மாலையில் எல்லா மானவர்களையும் அருகே உட்கார வைத்துக்கொண்டு,"ஆளுக் கொரு கொடி கொண்டு வரவேணும்" என்றார். அதோடுகூடக் கொடியின் நிறங்கள்,அதன் வரிசை,நீள அகலங்களைப் பற்றி விவரித்தார்.உள்ளே இருக்கும் சக்கரத்தின் ஆரங்கள் இருபத்து நான்காக இருக்கவேணும் என்றார்.

"துணிக்கொடி கொண்டாரலாமா சார்?"என்று கேட்டான் சங்கரன்.

ஆசிரியர் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு"இல்லே,காகிதக் கொடிதான்"என்றார்.

வகுப்பை ஜோடிக்கும் வேலை சங்கரனோடு ராஜாவுக்கும் கிடைத்தது.அதை மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டான். பனை-தென்னங்குருத்துக்கள் வெட்டித் தோரணங்கள் முடைந்து குவித்தான்.பதினான்காம் தேதி மாலை வெகுநேரம் வரையில் அவனுக்கு வேலை இருந்தது.கமலம் டீச்சரோடு சேர்ந்துகொண்டு கலர்க் காகிதங்கள்,ஜிகினாக் காகிதங்கள் எல்லாம் ஒட்டினான்.அவன் வேலை செய்த பரபர‌ப்பையும், சாதுரியத்தையும் கண்ட கமலம் டீச்சர்,"உன் பெயரென்ன?"என்று வினவினாள்.அவன் வேலையில் ஆழ்ந்தபடியே,"ஆர்.ராஜா"என்றான்.

மறுநாள் பொழுது விடிந்தது.ராஜா புத்தாடை அணிந்துகொண்டு மொட மொடக்கும் கொடியைக் கவனமாகத் தூக்கிப் பிடித்தவாறு பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றான். வடக்குத் தெருவைத் தாண்டும்போது வாத்தியார் வருவது தெரிந்தது. அவன் சற்றே பின்வாங்கிக் குறுக்கு வழியில் சென்றான். பள்ளிக்கூடம் பிரமாதமாக இருந்தது. இது தான் படிக்கும் பள்ளிக்கூடந்தானா என்றுகூட ஆச்சரியமுற்றான்.

பெரிய காரிலிருந்து ஒருவர் இறங்கி வந்து மெல்ல கொடியேற்றி னார். கொடி மேலே சென்றதும் தலைமை ஆசிரியர் கயிற்றை அசைத்தார்.ஏற்கனவே கொடியில் முடிந்திருந்த ரோஜா இதழ்கள் சிதறிப் பரவின. எல்லாப் பிள்ளைகளும் உற்சாகமாக‌க் கைதட்டி னார்கள்.

'தாயின் மனிக்கொடி பாரீர்'என்று கமலம் டீச்சர் உச்ச ஸ்தாயில் பாடினாள். அவள் குரல் கணீரென்று வெகு தூரம் வரை யில் கேட்டது. ராஜா விரலை ஊன்றி எழும்பி நின்று இசையைக் கேட்டான். விழா முடிந்ததும் அவளிடம் ஓடிப்போய்."டீச்சர், உங்க பாட்டு ரொம்ப நல்லா இருந்திச்சு டீச்சர்" என்றான்.

கமலம் டீச்சர் வியப்போடு கண்களைத் தாழ்த்தி அவனைப் பார்த்தாள்.

"நீ எந்த வகுப்பு?"

"ஃபோர்த் பி"

"அடுத்த வாரம் என் கிளாஸ்க்கு வந்துடுவே."

அவனுக்கு அது தெரியாது.மௌனமாக இருந்தான்.ஆனால் அடுத்த வாரம் அவன் சார் மாற்ற‌லாகிப் போனார்.நான்காம் வகுப்பு "பி"."ஏ"யுக்குச் சென்றது. அவன் வகுப்புக்குள் நுழைந்த போது கமலம் டீச்சர் என்னவோ எழுதிக்கொண் டிருந்தாள்.

முதல் இரண்டு நாட்களிலும் டீச்சர் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் நாள் வீட்டுப் பாடத்தைக் கொண்டுபோய்க் காட்டியபோது குண்டுகுண்டான எழுத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்த டீச்சர் சற்றுத் தயங்கினாள். நினைவைக் கூட்டினாள்.அப்புறம் புன்சிரிப்புடன், "ராஜாதானே?"என்று கேட்டாள்.

"ஆமாம்.டீச்சர்."

"அன்னிக்கு என் பாட்டைப்பத்திச் சொன்னது நீதானே?"

அவன் தலையசைத்தான்.

டீச்சர் அவன் சிலேட்டை வாங்கி எல்லாருக்கும் காட்டினாள். "கையெழுத்தென்றால், இப்படித்தான் முத்து முத்தா யிருக்கணும். நீங்களும் எழுதுறீங்களே?"என்று பெண்கள் மீது பாய்ந்தாள். அவன் சிலேட்டை வாங்கிக் கொண்டு பின்னால் சென்றபோது,"ராஜா,எங்கே போறே?இங்கே வா!" என்று அழைத்து, முதல் வரிசையில் அவனுக்கு இடம் ஒதுக்கினாள்.

கணக்கில் அவன் தப்புப் போடும்போதெல்லாம்,"இங்க வா ராஜா!"என்று அருகே கூப்பிட்டு,"மத்த பாடமெல்லாம் நல்லா படிக்கிற நீ இதுலே மட்டும் ஏன் தப்புப் பண்ணுறே?" என்று கேட்டு,ஒவ்வொரு கணக்காகச் சொல்லித் தருவாள். சில சமயங் களில் அவனுக்கு அவள் வீட்டிலும் கணக்குப் பாடம் நடை பெறும். மூன்று மாதத்தில் அவனுக்குக் கணக்கில் குறிப்பிடத் தக்க அபிவிருத்தி ஏற்பட்டது. கொடுத்த எட்டுக் கணக்கையும் சரியாகப் போட்டதும் கமலம் டீச்சர் பூரித்துப் போனாள். தலையசைத்துச் சிரித்துக்கொண்டே நூற்றுக்கு நூறு போட்டாள்.

கமலம் டீச்சரோடு சிநேகிதம் கூடக்கூட,அவன் நட‌த்தையில் மாறுதல் ஏற்பட்டது.இப்போதெல்லாம், சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பதில்லை; பக்கத்தில் இருக்கிறவன் தொடையில் கிள்ளுவதில்லை. வாத்தியார் படம் போட்டுக் கண்ணைத் தோண்டுவ தில்லை. இதற்கெல்லாம் நேரம் இல்லாதவன் போல் கமலம் டீச்சரோடு சுற்றிக்கொண் டிருந்தான் அவன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் வீட்டிலிருந்து கமலம் டீச்சருக்குத் தாழம்பூப் போகும். தாழம்பூவைப் பார்த்ததும், "எனக்கு இதுன்னா ஆசைன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவனைத் தன்னோடு அணைத்துக் கொள்வாள். இதமான கதகதப்பில் அவன் மருகிப் போவான். இதற்காகவே தின‌ந்தோறும் டீச்சர் வீட்டிற்குப் போகவேண்டும் போல் இருக்கும் அவனுக்கு.

ஒரு நாள், மாடியில் உட்கார்ந்திருந்தபோது நீண்ட சடையைப் பிரித்துவிட்டுக்கொண்டே கமலம் டீச்சர்,"எனக்குக் கல்யாணம் ஆகப்போவுது" என்றாள்.

அவன் மெல்ல டீச்சரை ஏறிட்டுப் பார்த்தான்.

"அதுக்கு இன்னங் கொஞ்ச நாள் இருக்கு"என்று சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கீழே இறங்கி வீட்டுக்கு ஓடினான். ஆனால் அன்று மாலையே தயங்கித் தயங்கிக்கொண்டு திரும்பி வந்தான். அவன் வருகை கமலத்துக்கு ஆச்சரியம் அளித்தது. வாசலுக்கு வந்து "வா ராஜா"என்று கரம்பற்றி அவனை வரவேற்றாள்.

ஒரு சனிக்கிழமை கமலம் டீச்சர் நிறையப் பூவைத்துத் தலை பின்னிக்கொண்டு பள்ளிக்கூடம் வந்திருந்தாள்.இன்னும் பள்ளிக் கூடம் தொடங்கவில்லை.

தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் பரபரப்போடு மூன்றாம் வகுப்புக்குச் சென்றார். ஆசியர்களெல்லாம் ஒன்றுகூடித் தணிந்த குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள். மாணவர்கள் பிரேயருக்குக் கூடியதும் தேசீயக் கொடி அரைக் கம்பத்தில் தாழப் பறந்தது.

ராமசாமி ஐயர் முன்னே வந்து,"மகாத்மா காந்தி நேற்றுக் காலமாகிவிட்டார்.யாரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள்"என்றார். அவர் கண்களில் நீர் பெருகியது.பேச முடியவில்லை. துயரத்தோடு பின்னுக்குச் சென்றார்.

ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி நிலவியது.

"வாழ்க நீ எம்மான் காந்தி...." என்று கமலம் டீச்சர் உருக்க மாக மெல்லிய குரலில் பாடினாள். பாட்டு முடிந்ததும் தேசப் பிதா வுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பள்ளிக்கூடம் இல்லையென்று அறிவிக்கப்பட்டது. ராஜா தயங்கிய வாறு டீச்சரிடம் சென்றான்."கொஞ்சம் இரு"என்று சொல்லிவிட்டு ராமசாமி ஐயரோடு உள்ளே சென்றாள். எட்டு வாத்தியார்களும் தேசத்துக்கு நேர்ந்த துர்ப்பாக்கிய சம்பவத்தைப் பற்றி வெகுநேரம் பேசிவிட்டுக் கலைந்தார்கள்.

கமலம் வெளியே வந்த‌ததும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.

வழிநெடுகக் கொடிகள் தாழப் பறந்துகொண் டிருந்தன. திறந்த கடைகளை அவசர அவ‌சரமாக மூடிக்கொண் டிருந்தார்கள். ஹர்த்தால் போலும்.

வீடு போய்ச் சேர்ந்ததும் அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள் கமலம் டீச்சர்.

"அடுத்த வாரத்திலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன்."

"ஏங்க டீச்சர்?"

"எனக்குக் கல்யாணம்."

"எப்பங்க டீச்சர்?"

"இன்னும் ஒரு மாசம் இருக்கு."

டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து அவனை வெறித்துப் பார்த் தாள்.அவன் வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டான்.

"இங்கே பாரு ராஜா."

அன்று வெகுநேரத்துக்குப் பிறகு ராஜா வீடு திரும்பினான். அம்மா கோபித்துக் கொண்டாள்;திட்டினாள்.ஆனால்,அவன் பதிலே சொல்லவில்லை. களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. திண்ணையில் போய்ப் படுத்தான்.

ராஜா சேர்ந்தாற்போல ஒரு வாரம் பள்ளிக்கூடம் போகவில்லை. அம்மா அவனைச் சீர்காழிக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.

அவன் பள்ளிக்கூடம் போனபோது கமலம் இல்லை.

"டீச்சர் புதன்கிழமையே போயிட்டாங்க" என்றான் சங்கரன்.

"உம்...."

"ஒன்னப்பத்தி டீச்சர் என்னை ரெண்டு வாட்டி கேட்டாங்க."

அவன் எரிச்சலோடு "சரி" என்றான்.

சில நாட்கள் சென்றன.வகுப்புப் பிரிந்தது.ஒரு செவிட்டு வாத்தியார் வந்தார்.ராஜா பின்வரிசைக்குச் செண்றான். கணக்கில் மீண்டும் பல தவறுகள் போட்டான்.

முழுப்பரிட்சை வந்தது.ராஜா எல்லோரையும் போலக் காப்பி அடித்தான்.கணக்கில் ஒன்பதாவதாகவந்தான்.

----------------------------

புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

Dec 20, 2010

வாள்-சா.கந்தசாமி

மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது நன்றாகத் தெரிந்தது. மறுபடியும் ஒருமுறை பெரும் காற்று வீசப் போகிறது என்று தனக்குத் தானே தீர்மானம் பண்ணிக் கொண்டார். விட்டு வீசும் காற்று வேலைக்கு ஓர் அறைகூவல் போல் அவருக்குத் தோன்றியது. இடதுகாலை நன்றாக மரத்தில் அழுத்திக் கொண்டு கையிலிருந்த வாளைக் கீழே sa kanthasamy விட்டார். வாள் மரத்தில் கரகரவென்று இழைந்து கொண்டு சென்றது. அறுபட்ட மரத்தின் தூள்கள் சீராகக் கீழே குவிந்தன.

குவிந்த தூள்களில் கால் புதைய நின்று கொண்டிருந்த முருகேசன் இழுத்த வேகத் தோடே வாளை மேலே விட்டான். பக்கிரி ஒருவித அவசரமும் இல்லாதவர் போல, மேற்குப் பக்கத்தைப் பார்த்துக் கொண்டே நிதானமாக வாளை மேலே இழுத்தார். இவன் அவசரம் அவருக்கு எரிச்சலூட்டுவது போல இருந்தது.

ஒன்றாகிக் கொண்டிருந்த மேகங்கள் சிதைந்தோட காற்று வேகமாகத் திடீரென்று வீச ஆரம்பிததது. சுழன்று செல்லும் காற்று மணலையும் சருகுகளையும் அள்ளிக் கொண்டு சென்றது. கண்களை சுருக்கிக் கொண்டு முகத்தை இடதுபுறம் திருப்பிய வாறு வாளைக் கீழே விட்டார்.

நிதானமின்றி இறங்கும் வாளைப் பற்றிக் கொண்டு முருகேசன் ''என்னங்க மாமா?'' என்று கேட்டான்.

''காத்து கிளம்பிடுச்சு'' என்று சொல்லிக் கொண்டே வலது கண்ணைக் கசக்கிக் கொண்டு வெற்றிலை எச்சிலைக் கீழே உமிழ்ந்தார்.

''ரெண்டு நாளா கொஞ்சம் காத்துதான் மாமா''

''தண்ணி வர்ற காலமெல்ல'' கோவணமாக இருந்த வேட்டியை அவிழ்த்து உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டே, ''மேக் கித்து காத்து கிளம்பிட்டா, மண்ண வாரிக்கிட்டு வந்துடும்'' என்றார்.

''வாள செத்த பிடிங்க மாமா''

''ஏல செத்த இருலே''

வேட்டியை உதறிக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு இலுப்ப மரத்தடிக்குச் சென்றார். படபடவென்ற காற்றில் பறக்கும் வேட்டியை வெகு சிரமத்தோடு உருண்டையாகச் சுற்றி இலுப்பை மர வேரில் வைத்து அதன்மேல் கீழே கிடந்த அரைச் செங்கல்லை எடுத்து வைத்தார். கண்களுக்கு மேலே கையைக் குவித்து, மேற்குத் திக்கை நோட்டமிட்டதில் காற்றின் சப்தம் அடங்கிக் கொண்டு வருவதுபோல இவருக்குத் தோன்றியது. தன்னையும் மீறிப் பெரிதாகச் சிரித்துக் கொண்டார்.

''காத்தவராயன் பொண்டாட்டியை அடிக்கிறான் காத்தோ காத்தோ''

கீழே குனிந்து இரண்டு கையாலும் மணலை அள்ளிப் பறக்கவிட்டு, ஒரு குழந்தையைப் போல மணலில் கால்களால் நீளமாகக் கிழித்துக் கொண்டு திரும்பி வந்து மரத்தின் மேல் நின்று கொண்டு அரைநாண் கொடியை தளர்த்திக் கொண்டார் பக்கிரி.

மரத்தூள்களின் மேல் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த முருகேசன் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான்.
இவர் இன்னும் கொஞ்சம் கோவணத்தைத் தளர்த்தி இழுத்துவிட்டுக் கொண்டு, ''என்னடா, என்னத்தக் கண்டுட்டுச் சிரிக்கற'' என்று கேட்டார்.

முழங்காலைச் சுற்றி இருந்த கைகளைப் பிரித்து திமிர் முறித்துக் கொண்டு சொன்னன்:

''சும்மாதாங்க மாமா''

''ஒக்கா, எதுக்கு நீ சிரிக்கறண்ணு எனக்குத் தெரியாதாடா?''

அவன் மறுபடியும் சிரித்தான்.

''மாமாவுக்குத் தெரியாதது உண்டா?''

குனிந்து மரப்பட்டையை எடுத்து அவன் மேலே வீசினார். அவன் குனிந்து மரத்தூள் களில் கையூன்றி நகர்ந்து கொண்டான். இவர் அவனை அடிக்க மரப்பட்டை தேடுவது போல ஒருமுறை அறுமரத்தின் மேல் கையை அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு நடந்து சென்றார். இவர் அப்படிச் சென்றது, கோமாளி ஆடுவது போல இவனுக்குத் தோன்றியது. ஒரு முனையில் நிற்கும் அவரை, ஆழ்ந்த படியே பார்த்துக் கொண்டிருந்தான். இவரும் நின்று இவன் என்ன செய்கிறான் என்று பார்க்காதது போல் பார்க்கத் தொடங்கினார்.

இவன் வாளை ஒருமுறை ஆட்டினான்.

பக்கிரி அதைக் கவனிக்காதது மாதிரி மீசையை மேல் நோக்கித் தள்ளி உருட்டிக் கொண்டிருந்தார். இனி வேலை ஓடாது என்று தன்னுள் சொல்லிக் கொண்டான். 'கரையேறலாமா?' என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனாலும், அதை அடக்கிக் கொண்டு மரத்தூளில் ஒரு காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். பீடி கருகிப் புகையாகும் வரையில் பக்கிரியிடமிருந்து குரல் ஏதும் வரவில்லை. இவனுக்கு எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருந்தது. வாள் கட்டையை வேகத்துடன் பிடுங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கரையேறினான்.

''என்னால கிளம்பிட்ட''

பக்கிரியின் பார்வை இவன் மேல் இறங்கியது.

முருகேசன் எரிச்சலுடன் வேகமாகத் திரும்பினான்:

''பொழுது சாயுதுல்லீங்க மாமா''

பக்கிரி இருகையும் கொட்டிச் சிரித்தார்.

''இந்த வயசுலியே இம்மாம் நெளிவு எடுக்க ஆரம்பிச்சிட்டா''

''இருந்தாலும் மாமா மாதிரி ஆக முடியுமா?''

பக்கிரி இவனை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார்.

''மாப்பிள, உன் சாமர்த்தியத்துக்கு எங்கயும் பொழச்சுக்குவ''

முருகேசன் எரிச்சலுடன் வேகமாகத் திரும்பினான். இவன் பார்வை அவர் மேல் இறங்கியது. வார்த்தையெதும் ஆடாமல் வாளை உருவி, மார்பில் சாய்த்துக் கொண்டு மணலில் பாதம் அழுந்தி சுவடுகள் பதிய நடந்தான். இவன் செல்வதை ஒருவிதமான ஏளனத்துடனும் புன்சிரிப்பு டனும் பார்த்துக் கொண்டே நின்றார் பக்கிரி. இவன் கொஞ்ச தூரம் சென்றதும், வேட்டியைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு, அவன் விட்டுச் செல்லும் சுவட்டில் வெகு கவனமாகக் கால் பதித்துச் சென்றார். இப்படிச் செய்வது இயல்பை இழந்து தாவிச் செல்வது போல இருந்தது. நடைபின்னியது.

''போடா போ'' என்று கீழே குனிந்து, கிளிஞ்சலை எடுத்து வீசினார். அது இவன்மேல் படாமல் மணலில் விழுந்தது. இப்படி விழுந்ததில் களிப்புற்றவர் போலத் தலையை அசைத்துக் கொண்டார்.

இம்மாதிரியான வறண்ட ஒரு கோடையில் மாலைப் பொழுதொன்றில் காவிரிக் கரையில் முருகேசன் வந்து சேர்ந்தது இவர் நினைவில் படர்ந்தது. அவன் வெகு தூரத்திலிருந்து நடந்து வருவது போலக் களைப்புடன் வந்தான். அவனைப் பார்த்ததுமே, லேசான பிடிமானம் விழுந்தது. அவனுடைய பெரிய தலை, ஒழுங்காகக் கத்தரித்து விடப்பட்ட கிராப்பு. சிறிய மீசை, மார்பு கொள்ளாமல் சுற்றிப் படர்ந்திருக்கும் மயிர்.

''ஆம்பளைன்னா இப்படித்தான் இருக்கணும்'' என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டே அவன் தோள்மீது கை வைத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டார். அவனைப் பற்றி விசாரித்தறிய வேண்டும் என்ற நினைப்பே இவருக்குத் தோன்றவில்லை. அவனுடைய தோற்றமும் தோரணையும் தன்னோடு சரியாக நின்று வாளிழுக்க இவன் தகுதி யானவன் என்ற எண்ணத்தை இவருக்குத் தந்தது. தன்னுடைய தேர்வு சரியானது என்ற திருப்தி ஏற்பட்டபோதும் அவன் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தந்தபோதும் பக்கிரி தன்னைத் தானே ரொம்பவும் வியந்து மூன்றாம் மனுஷனைப் பாராட்டுவது போல வாய்விட்டுப் பாராட்டிக் கொள்வார்.

''முருகேசு''

வாளைக் கொட்டகையின் முன்னே சுற்றி விட்டு, வெள்ளை நாயைத் தட்டித் தடவிக் கொண்டிருந்தவன் லேசாகத் திரும்பினான்.

''ஏங்க தம்பி, குளிக்கப் போறீங்களா?''

''ஆமாங்க மாமா''

''குளிச்சிட்டு சுருக்கா வாங்க, ஒரு விசயம் பேசணும்''

''சரிங்க''

அவன் துண்டை எடுத்து உதறி காது மறைய முண்டாசு கட்டிக் கொண்டு சீட்டியடித்தவாறு, இறக்கத்தில் இறங்கிக் குளிக்கச் சென்றான்.
அவன் பார்வையிலிருந்து மறையும் வரையில் அப்படியே நின்று கொண்டிருந்த பக்கிரி மெல்ல நடந்து சென்று, எதிரே கிடந்த மரத்துண்டில் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து, எலே, தங்கராசு, செத்த வெத்தல எடுத்தாடா என்றார்.

தங்கராசு பனைவோலையிலான வெற்றி லைப் பெட்டியைக் கொண்டு போய் வைத்தான். ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து, பாக்கு வெட்டியில் வைத்து நறுக்கிக் கொண்டே, ''எலே, என்ன கொளம்பு'' என்றார்.

''கொக்குங்க தாத்தா''

''கொக்கா, ஏதுலே'' பாக்கு வெட்டியி லிருந்து பாக்கு நழுவியது.

''நம்ப கண்ணியில உழுந்துச்சுத் தாத்தா''

''உன் கண்ணிலியா?''

அவன் கண்கன் பரக்க விரிய கைகளை வேகமாக அசைத்து கொண்டு ''ரெண்டு உழுந்துச்சீங்க தாத்தா, எடுக்கப் போறச்ச ஒண்ணு கண்ணியை அறுத்துக்கிட்டு போயிடுச்சுங்க தாத்தா.''

''இங்க வாடேல''

பக்கிரி அவன் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டார்.

''தேவல, உனக்கு ஒண்ணு அம்புட்டுச்சு, நான் உன்னாட்டம் இருக்கச்சே மூணு கண்ணி போட்டேன். மூணுத்தியும் கொக்கு அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு.''
கைகொட்டிப் பெரிதாகச் சிரித்தார். சிரிப்பில் எச்சில் இவன் முகத்தில் தெறித்தது. புறங்கையால் துடைத்துக் கொண்டு இவர் பக்கம் திரும்பி ஆச்சரியத் தோடு, ''நிஜமா தாத்தா?'' என்று கேட்டான்.

இவனைத் தொடை இடுக்கில் அரவ ணைத்துக் கொண்டு ''நிஜமாகத்தான்'' என்று இன்னும் கால்களைக் குறுக்குகிறார். இவன் வியப்புற்று நம்ப மறுப்பது போல் பேச்சு ஏதுமின்றி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். இவர் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டார். இவன் குறுஞ் சிரிப்புடன் அவர் மார்பில் மோதி எச்சலைத் துடைத்துக் கொண்டான்.

''எலே, ஒரு சுருட்டுக் கொண்டா''

இவன் நொண்டியடித்துக் கொண்டு சென்றான். நாய், எங்கிருந்தோ ஒரு எலும்பைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தது. இவன் வெறும் கையால், அதை விரட்டிக் கொண்டு குடிசைக்குள் சென்று சுருட்டை எடுத்து வந்து தந்தான்.

பக்கிரி சுருட்டைக் கையால் உருட்டிக் கொண்டே பார்வையைத் திருப்பினார். மாலைப் பொழுது மெல்ல அடங்க, மையிருள் கவிந்து கொண்டிருந்தது. சீரான காற்று, காற்று அடங்குகிறது என்று நினைத்துக் கொண்டார்.

துண்டையெடுத்து நன்றாக முறுக்கி முண்டாசு கட்டிக் கொண்டு, மீசையைத் திருகி சீட்டியடித்துக் கொண்டு தொடையில் தாளம் போட்டுக் கொண்டு திரும்புகையில்
முருகேசன் வேட்டியும் சட்டையும் துண்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.

பக்கிரி அவனை ஆழ்ந்து நோக்கினார்.

அவன் ஊர் நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான். தாளம் நிற்க, மிகவும் சோகமான புன்சிரிப்பு இவரிடமிருந்து வெளிப்பட்டது. வேகமாகத் தலையசைத்துக் கொண்டார்.

''எங்க மாப்ள பயணம்'' குழைவுடனும் எரிச்சலுடனும் இவர் குரல் ஒலித்தது.

முருகேசன் தலையை உயர்த்தி இவரைப் பார்த்தான். சட்டையின் நுனியைப் பிடித்து கீழே இழுத்துவிட்டுக் கொண்டான். வலது பக்க முடியை ஒரு பக்கமாகக் கை தள்ளியது.

''சும்மாங்க மாமா, வைத்தீஸ்வரன் கோயிலு வரைக்கும்.''

''வைத்தீஸ்வரன் கோயிலுக்கா!'' எரிச்சல் உற்றவர்போல இவனைப் பார்த்தார். தலையை மேலும் கீழுமாகச் சிலுப்பிக் கொண்டு, குத்த வைத்திருந்த ஒரு காலைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு, ''இங்க செத்த வா'' என்றார்.

இவனுக்குக் கமலத்தின் நினைவு வந்தது. நான்கு நாட்களாக பயணப்பட்டு, தவறிப் போய்க் கொண்டே வந்தது. இன்றும் அது போலவே நடந்து போகுமா? தான் உண்மை யைச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தன்னையே கேட்டுக் கொண்டு இவர் பக்கமாக வந்தான்.

''இப்படி மரத்துல குந்து''

இவன் அவருக்கு நேர் எதிரே மாமரத் துண்டில் இரண்டு கால்களையும் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.

''என்ன வைத்தனாங் கோயில்ல?'' இவர் ஏளனமாகச் சிரிப்பதை இவன் மிகவும் எரிச்சலுடன் கண்டு கொண்டான்.

''ஒண்ணுமில்ல..''

''வைத்தனாங் கோயில்லியா?''

இவன் தலையசைத்தான். ''கிழத்துக்கு எல்லாம் தெரிகிறது'' என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டான்.

பக்கிரி சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டு புகையை இவன் மூஞ்சிக்கு நேரே ஊதி விட்டு உடல் குலுங்க நகைத்தார். மரம் அறுக்கும் வாளால் கபடம் நிறைந்த இவர் கழுத்தை மெல்ல மெல்ல அறுக்க வேண்டும் போல இவனுக்குத் தோன்றியது. வலது காலைத் தூக்கி மரத்தின் மேல் வைத்துக் கொண்டு, இடது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு கொஞ்சம் போலப் பின்னுக்கு நகர்ந்து உட்கார்ந்து கொண்டு, ''தங்கராசு கள்ளெ இங்க கொண்டா'' என்றார்.

மரத்துண்டின் மேல் அவன் வெகு கவனத்தோடு கள்ளையும் கறியையும் கொண்டு வந்து வைத்தான். கள்ளிலிருந்து திடீரென்று மொச்சை நொடி கிளம்பியது. பக்கிரி ஒரு முறை சுருட்டை நன்றாக தம் இழுத்து, நெருப்பை மரத்துண்டில் உதிர்த்து, ''எலே, நீ சாப்பிட்டாச்சா'' என்று கேட்டார்.

''சாப்பிடணும்''

''போய் நெறையத் தின்னு'' என்று சொல்லி அவனைப் பார்த்துப் பல்லெல்லாம் வெளி யில் தெரியும்படியாகச் சிரித்தார். அவனோ, பொங்கி வரும் சிரிப்பைக் கைகளால் மறைத்து அடக்கிக் கொண்டு நிலவொளி யில் நொண்டியடித்துக் கொண்டு தன் நிழலைப் பிடிக்கத் தாவித் தாவிச் சென்றான்.

பக்கிரி கள் சட்டியை எடுத்து எதிரே வைத்துக் கொண்டார். கள்ளின் மேலிருந்த பன்னாடையைக் கவனத்தோடு எடுத்து உதறி ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு கள் சட்டியைத் தூக்கி கண்களின் அருகே கொண்டு வந்து பார்த்தார். ஈயா, பெரும் எறும்பா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் என்னவோ மிதப்பது தெரிந்தது. பன்னாடையை எடுத்து, இரண்டாக மடித்துக் கள்ளினுள் அமிழ்த்தி ஒட்டி மேலே தூக்கினார். பன்னாடை தூசிகளையும் பூச்சிகளையும் அரித்துக் கொண்டு வந்தது. அதை ஒரு பக்கமாக வீசிப் போட்டுவிட்டு முருகேசனைப் பார்த்துக் கொண்டு ''மாப்ள, பூச்சி பொட்டெல்லாம் கள்ள ஒண்ணும் பண்ணாது'' என்றார்...

அவன் அதை ஏற்றுக் கொள்வது மாதிரி தலையசைத்தான்.

''இப்படி வந்து பக்கத்துல குந்து மாப்ள''
இவர் கொக்குக்கறி குழம்புச் சட்டியை எடுத்து நடுவில் வைத்துக் கொண்டு ஒரு கிண்ணியில் கள் ஊற்றி அவன் பக்கம் நீட்டினார். பவ்வியமாகக் குனிந்து அதை வாங்கிக் கொண்டு இவர் பக்கம் நெருங்கிய மர்ந்தான்.

''குடிங்க மாப்ள''

இவர் தண்ணீர் குடிப்பது மாதிரி கிண்ணியின் விளிம்பில் உதடுகளைக் குவித்து உறிஞ்சிக் குடித்தார். இவன் ஒரு மிடறு குடித்துவிட்டு இவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். இவன் மனம் கமலத்தை இன்று காண முடியாது போனது பற்றி வருந்திக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் சென்று வீணில் திரும்பினான். இன்று கட்டாயம் வரச்சொல்லி இருந்தாள். உவப்பாகக் கழிய வேண்டிய இரவு, வெறும் குடியில் ஒரு கிழத்துடன் முடிவதில் இவன் எரிச்சலுற்றான். கிண்ணியை ஒரு கையி லிருந்து இன்னொரு கைக்கு மாற்றி கொண்டான்.

''ஆச்சா'' இன்னொரு கிண்ணி நிரப்பிக் கொண்டு கேட்டார்.

''கொஞ்சம் இருக்கு''.

''ஒரு கிண்ணிக்கு இம்மாம் நேரமா?''
கிண்ணியைக் கையில் எடுத்துக் கொண்டு மரத்திலிருந்து கீழே இறங்கித் தரையில் நின்று கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்து...

''கையில கள்ளிருக்கு
வானத்துல நெலவுயிருக்கு
கொக்குக் கறியிருக்கு
- குட்டி
கொக்குக் கறியிருக்கு''.

என்று ராகம் இழுத்துப் பாடிக் கொண்டு குடித்துக் கொண்டு இவனைப் பார்த்துச் சிரித்தார். அவர் ஆட்டத்தையும் பாட்டையும் ரொம்பவும் ரசித்தான். கிழம் ரொம்பவும் விசித்திரமானதுதான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

''கள்ளு எப்படி மாப்ள?''

இவன் பெருந்தொடையில் தட்டினார்.

''அமிர்தங்க மாமா''.

''தென்பாதி கள்ளுக்குத் தனி ருசி''

ஒரு காலைத் தரையில் நன்றாகப் பதித்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றினார். இன்றிரவு, வேடிக்கையாகக் கழியுமென்று இவனுக்குத் தோன்றியது. அவசரம் ஏதுமில்லாமல் நிதானமாகக் கள்ளைக் குடித்து விட்டு, கிண்ணியைக் கீழே வைத்தான்...

''கள்ளுக்குக் கறி கொண்டாட்டம்
கறிக்குக் கள்ளு கொண்டாட்டம்
ராமு மவன் பக்கிரிக்கு
ரெண்டுங் கொண்டாட்டம்
ரெண்டுங் கொண்டாட்டம்''.

கையைத் தரையில் ஊன்றிக் குனிந்து குட்டிக்கரணம் போட்டார். இவர் குரல் தனியாக வெகுதூரம் வரையில் கேட்கும் படியாக ஒலித்தது. முருகேசன் மரத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

நாய் இவன் தலைக்கருகில் வந்து குரைத் தது. இவன் படுத்தபடியே ஒரு கல்லை யெடுத்துப் போட்டான். நாய் பின் வாங்கிக் குரைத்துக் கொண்டே சென்றது. அதன் குரல் அமுங்கி அடங்கியது.

தங்கராசு எழுந்து வந்து ''கருப்பா இங்க வா'' என்று நாயை அழைத்துக் கொண்டு சென்றான்.

பக்கிரி மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்னொரு கிண்ணி கள் ஊற்றிக் கொண்டார். மீசையைத் திருகி மேலே விட்டுக் கொண்டு யோசிக்கையில், குடிப்பது ஒரு சுகானுபவமாகவே இருந்து வருவதாகத் தோன்றியது. நிலவொளியில் பேசிக் கொண்டு பாடிக் கொண்டு ஆடிக் கொண்டு குடிப்பது நேர்த்தியான செய லாகவே பட்டது.

குடித்து, ஒருநாள் சின்னச் சண்டை யொன்று போட்டது தெளிவில்லாமல் நினைவில் படர்ந்தது. அதுவும் இது போலவே நிலவொளியில் நடந்திருக்கலாமோ என்பதும் தீர்மானிக்கமுடியாத நிலையில் இருந்தது.

''அப்போது தனக்கு இருபது இருப்தோரு வயசு இருக்குமோ? மீசை லேசாக அரும்பிக் கொண்டு வந்தது. உதடுகளுக்கு மேல் வளரும் மயிரை கை அடிக்கடி வருடிக் கொண்டிருந்த காலம் அது. ஏதோ ஒரு காரியமாக வடகரைக்குப் போய்விட்டு இரவில் திரும்ப வேண்டியிருந்தது. கூட ராமு வந்தான். மொடாக்குடியன், நிறைய குடித்துக் கொண்டே இருப்பான். அவன்தான் கள் வாங்கிக் கொடுத்தான். குடிக்க குடிக்க இன்னும் ஊற்றினான். பட்டாளக்காரன், நிதானம் இழக்காமல் பேசிக் கொண்டு குடித்தான். இவனை மிஞ்சவேண்டுமென்று ஒரு எண்ணம் தோன்றியது.

''மாப்ள போதும்''

கிண்ணியை வாங்கிக் கீழே வைத்தான் ராமு.

''நீங்க''

''நான் இன்னும் ரெண்டு போடுவேன்''

''நானுந்தா''

அவன் விசித்திரமாகப் பார்த்தான்.

''அப்பப் போடு''

மேலும் இரண்டு கிண்ணி இறங்கியது.

ராமு மேல் கை வந்து ''பக்கிரி படுத்துட்டு காலையில போவோம்..''

''நான் நடப்பேன்''

அவன் பெரிதாக நடந்து கொண்டு எழுந்தான், நடக்க நடக்க வேகம் கூடியது. இரண்டு மைல் தூரம் வந்ததும், கால் தரையில் பாவாமல் துவளுவது போலத் தோன்றியது. ராமு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு முண்டாசை அவிழ்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். கொஞ்சம் போலத் திரும்பி ''குந்து பக்கிரி' என்று கையைப் பிடித்திழுத்து உட்கார வைத்தான்.

பக்கிரியின் மனம் திடீரென்று முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. அவர் கையை உதறினார்.

''அட குந்து மாப்ள'' பக்கிரி சிவப்புப் பட்டுத்துண்டை விரித்தார்.

பக்கிரி அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார். என்ன பதில் இதற்கு உரைப்பது என்று தெரியவில்லை. இவனும் என்னைப் போலவே நிறையக் குடித்திருக்கிறான். வெறி ஏறிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னும் நிதானம் இழக்கவில்லை. நிதானம் இழந்து கொண்டு வருகிறான் போலும்.

இவன் அழைப்புக்கு என்ன பதில்?

குடியில் தன்னை இழந்து நிற்கிறானா?

இல்லை பட்டாளக்காரன் என்ற கோதாவில்
சண்டைக்கு அழைக்கிறானா?

தீர்மானிக்கவியலாத நிலையில் கண் களைத் தாழ்த்தி, கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். மணலில் நீண்டு கிடந்த பட்டுத் துண்டைக் காலால் எட்டித் தள்ளினான் ராமு. பக்கிரி அவசரமே இல்லாதவர் போல, ஓரடி முன்னே எடுத்து வைத்து ''எங்க இன்னொரு வாட்டித் தள்ளு''

''மாட்டனா?''

''தள்ளேன், பார்ப்போம்''

இடது காலால் துண்டை மணலில் ஒரு அறக்கு அறக்கினார் ராமு. இவர் மயிர் கால்கள் குத்திட்டன. இரண்டடி பின்னுக்கு நகர்ந்து, திடீரென்று அவர் வயிற்றில் தலை முட்டித் தரையில் வீசிப் போட்டார்.

அவர் கைகளையும் கால்களையும் உதறிக் கொண்டு பெரிதாகக் கத்திக் கொண்டு மணலில் விழுந்தார். இடுப்பில் வலி ஏறி, மார்புக்குள் இறங்குவது போல் இருந்தது. கண்களைத் திறந்து பார்க்கையில் இவர் கால் மார்பில் ஏறியிருந்தது. பலத்தையும் தைரியத்தையும் இழந்தவர் போல், கண்கள் சொருகிக் கொண்டு போக இவரைப் பார்த்தார். நான்கு கண்களும் ஒரு நேர்க் கோட்டில் நின்றன.

''என்ன மாப்ள, தமாஷ்க்கு பண்ணினா நிஜமாகவே சண்டைக்கு வந்துட்டியே"

கால் மார்பிலிருந்து தரையில் இறங்கியது.

ராமு கஷ்டப்பட்டுக் கொண்டு புரண்டு மணலில் கையூன்றி எழுந்தார். துண்டை யெடுத்து உதறி பக்கிரி தோளில் போட்டு "நம்ப மாப்ளகிட்ட ஒருத்தன் எதிர நிக்க முடியுமா'' என்று கேட்டார்.

தனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி இருக்கிறதே என்று பக்கிரி வியந்து கொண்டார்.
முருகேசன் காலியாக இருந்த இவர் கிண்ணியில் கள் ஊற்றி நிரம்பினான். கொக்குக் கறியைப் பல்லில் வைத்துக் கடித்து இழுத்தார் இவர். எலும்பு பல்லில் பிடிபடாமல் நழுவியது. அதைத் தூக்கி எறிந்து விட்டு கிண்ணியை எடுத்துக் கொண்டு போய் மணலில் உட்கார்ந்து கொண்டார்.

''தம்பி இப்படி வாங்க''.

முருகேசன் அவர் பக்கத்தில் சப்பணங் கட்டி உட்கார்ந்து கொண்டான். அவன் இவன் தொடையில் தட்டிப் பெரிதாக சிரித்தார். இவன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை வேகமாக ஊதி விட்டுவிட்டு வானத்தை நிமிர்ந்து பார்த் தான். நிலவு அலுமினியத் தட்டுப் போலப் பறந்து செல்வதாகத் தோன்றியது.

''இந்தக் கள்ளுக்கே இங்க தங்கிடலாம் மாப்ள''.

இவன் சிரித்தான்.

பக்கிரி மணலில் கால்களை நன்றாக நீட்டிக கொண்டார். கைகளைப் பின்னுக்கு வைத்துக் கொண்டு, ''தம்பி இத கேளுங்க''

''சொல்லுங்க மாமா''.

''சிங்கப்பூரிலே இருந்து வந்ததும், ரெண்டு வருஷம் சும்மா சுத்து சுத்துன்னு சுத்தினேன். போகாத இடமில்ல. எங்கயாச்சும் தங்கினா போதுமின்னு தோணுச்சு. அப்ப ராஜா ஐயர் ஞாபகம் வந்துச்சு.. போனேன். அவுரு வைத்தினாங் கோயில்ல தாசி வச்சுக்கிட்டு இருந்தாரு. நீ இங்க கெடயின்னு நம்பளப் போட்டாரு. நாலும் மாசம் வண்டி சரியா ஓடுச்சு. நாளு ஆக ஆகத் தாள முடியல. நேரா ஐயர்கிட்டப் போய், ''சாமி மிஞ்சிப் போச்சுன்னு" கால்ல உழுந்தேன். முதல்லே, அவருக்குப் புரியல. விவரமா சொன்னதும், இடி இடியின்னு சிரிச்சு போடா மட்டிப் பயலே. அதுக்கா உருவற. போடா போய் சும்மா அங்கேயே கிடன்னு சொன்னார்.

ஆனா. நம்மாலே போக முடியல. அப்படியே பொடி நடையா நடந்து குமாரசாமி படையாச்சிகிட்ட வந்தேன். அவரு ஒரு மகானு. குடிச்சுப்புட்டு அவரைப் பத்தி, நாத்த வாயால பேசக்கூடாது.

பக்கிரி கடைசிச் சொட்டுக் கள்ளை உறிஞ்சிக் குடித்து விட்டுக் கிண்ணியைக் கீழே வைத்தார.

வெள்ளை நாய் இவர்களைச் சுற்றிக் கொண்டு வந்தது.

முருகேசன் கையில் ஒட்டி இருந்த மணலைத்தட்டிக் கொண்டு எழுந்தான்.

''என்ன மாப்ள கிளம்பிட்டீங்க''

காலுக்குக் கீழே இருந்த கிண்ணியை எட்டி உதைத்தார்.

''ரெம்ப தண்ணீங்க மாமா''.

''இதுயென்ன தண்ணி? இன்னும் ரெண்டு கிண்ணி போடுவேன்.''

'''நீங்க போடுவீங்க''.

''ஏன்? உன்னால முடியாதா?''

அவர் இவன் பக்கமாக வந்து தோள் மீது கை வைத்தார். இவன் கால்களைத் தரையில் அழுத்திக் கொண்டு விசித்திரமாக இவரை நோட்டம் இட்டான். அவர் கை தோளிலிருந்து உயர்ந்து, இவன் முண்டா சைப் பற்றி இழுத்துப் பறக்க விட்டது. காற்றில் துவண்டு செல்லும் துண்டைப் பார்த்து, ஆனந்தத்தோடு கைகொட்டி மேலே எழும்பிக் குதித்தார். கீழே விழுந்த துண்டை, நாய் ஓடி வந்து இழுத்துக் கொண்டு சென்றது. நாயைப் பிடிக்க தங்கராசு எழுந்தார்.

பக்கிரி இவனுக்கு முன்னே வந்து நின்று கொண்டு "மாப்ள ஒரு கை பார்க்கலாமா?''

இவன் அவரை ஆழ்ந்து நோக்கினான்.

''என் சொல்லுற?''.

''நாளைக்கு வச்சுக்கலாம்.''

''இன்னிக்கு என்ன?''

''வேணாம்?''

''பயமா இருக்கா மாப்ள?''

இரண்டடி பின்னால் சென்ற பக்கிரி திடீரென்று குனிந்து மணலையள்ளி இவன் மூஞ்சியில் வீசினார். இவன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டான்.

''மாப்ளைக்கு ரோசம் கம்மிதான்''

இவன் மேல் பாய்ந்து மார்பில் ஒரு குத்துவிட்டு, பின்னால் நகர்ந்து கொண்டு சிரித்தார்.

உதட்டைப் பல்லால் கடித்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு குனிந்து மெல்ல முன்னேறி, அவர் புட்டத்தில் ஒரு உதை கொடுத்தான். இவர் கைகளைப் பரப்பிக் கொண்டு மூஞ்சி மணலில் சொருக விழுந்தார்.

நாய் குறைத்துக் கொண்டு இவன் மேல் பாய்ந்தது. கைகளையும் கால்களையும் வீசி நாயைத் துரத்தினான். நாய் மெல்ல மெல்லப் பின் வாங்கியது. தங்கராசு பக்கிரியின் பக்கத்தில் உட்கார்ந்து, முகத்தில் படிந் திருந்த மணைலத் தட்டினான்.

மேகங்கள் அகல, நிலவு பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்தது.

பக்கிரி மெல்லக் கையூன்றி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார்.

''பய, உதையில் ஓடிட்டான?''

தங்கராசு பெரிதாகத் தலையசைத்தான்.

*******

Jun 28, 2010

நிழல் குதிரை-எஸ்.ராமகிருஷ்ணன்

சா.கந்தசாமி

நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை!

saa.ka மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும் வியப்பளிக்கும். குறிப்பாக, குதிரையின் மிரட்டும் கண்கள், அதன் வேகம் சொல்லும். மண் குதிரைகள் என்று நம்புவதற்கு இயலாதபடி அதன் வார்ப்பு, காலம் கடந்தும் அங்கே புத்துரு கலையாமல் இருக்கின்றன.

அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவரைக் கண்டேன். அறுபதைக் கடந்திருக்கும். செம்புழுதியேறிய வேஷ்டி. தலை, எண்ணெய் காணாமல் சிக்குப்படிந்திருந்தது. பீடிக் கம்பெனியின் விளம்பர பனியனை அணிந்திருந்தார். கோயிலின் இருபுறமும் அடுக்கிவைக்கப்பட்டு, மழையாலும் காற்றாலும், தலையும் கால்களும் வீசி எறியப்பட்ட குதிரைகளின் முன் நின்றபடி, தானாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

சாமிக்குச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு வெளிர் மஞ்சளும் நீலமும் பூசப்பட்ட புதுக் குதிரைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. வயசாளி மெதுவாக நடந்து, அந்தக் குதிரைகளை தன் விரலால் சுண்டிப் பார்த்தார். முகத்துக்கு நேராகத் தன் கைகளை நீட்டிப் பார்த்தார். பிறகு எரிச்சல் அடைந்தவரைப் போல, ‘‘குதிரையா இது..? கோவேறுக் கழுதை மாதிரியில்ல இருக்கு’’ என்று திட்டினார். அவரை யாரும் சட்டைசெய்யவேயில்லை.

பகல் முழுவதும் அவரைக் கவனித்தபடியே இருந்தேன். அவருக்கு அந்தத் திருவிழாவோ, அதன் மேளதாளங்களோ, சந்தோஷமோ, எதுவுமே பிடிக்கவில்லை. மேளம் அடிப்பவர் முன் போய் நின்றபடி, ‘‘என்னய்யா சாணி மிதிக்கிற மாதிரி அடிக்கிறீங்க..?’’ என்று சத்தம் போட்டார். சாமி கும்பிட வந்த பெண்களைப் பார்த்து, ‘‘சாமி கும்புட வந்தவுளுக மாதிரி தெரியலை… சர்க்கஸ்காரிக மாதிரி மினுக்குறாளுக…’’ என்று ஏசினார்.

திருவிழாவின் சந்தோஷம் அவரைத் தீண்டவே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவராக நடந்து போய், வெளிறியிருந்த ஒரு மண் குதிரையின் முன் உட்கார்ந்து, அதை ஆசையாகத் தடவி விட்டபடி இருந்தார். அவர் அருகில் போய் அமர்ந்தேன். என் காதுபடச் சொன்னார்… ‘‘மண் குதிரைதானேன்னு நினைச்சுக்கிட்டாங்க. இதுக்கும் உசிரு இருக்குய்யா! கையை நீட்டிப் பாரு… அது மூச்சு விடுறது உன் புறங்கையில தெரியும். இங்கே நிக்கிற குதிரைங்க எல்லாம் ராத்திரி எல்லோரும் போன பிறகு ஒண்ணுக் கொண்ணு பேசிக்கிட்டு இருக்கும் தெரியுமா… இப்போ செலுத்துற குதிரைங்க எல்லாமே ஊமைக் குதிரைங்க!’’.

நான் ஆமோதித்துத் தலையசைத் தேன். அவர் தொலைவில் உள்ள ஒரு குதிரையைக் காட்டி, ‘‘அது காது அழகைப் பாரேன், செஞ்சுவெச்சு அம்பது வருசமாச்சு… புதுப் பெண்டாட்டி மாதிரி எம்புட்டு அழகா இருக்குது!’’

அவர் காட்டிய திசையில் இருந்த குதிரையைத் திரும்பிப் பார்த்தபோது, அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. ‘‘கண்ணுட்டுப் பார்த்தா போதாது… கையால தொட்டுப் பார்த்துட்டு வா!’’

எழுந்து அந்தக் குதிரையைத் தொட் டுப் பார்த்தேன். என்ன அருமையான வார்ப்பு! ‘‘எப்படி இருக்கு?’’ என்று கேட்டார் பெரியவர். நன்றாயிருப் பதாகச் சொன்னேன்.

‘‘மண் குதிரையைத் தொடுறப்போ அதைச் செஞ்சவன் கையைத் தொடுற மாதிரி உணர்ச்சி வரணும். அதெல்லாம் யாருக்கு இருக்கு? பானை, சட்டி, பொம்மைன்னு மண்ல எத்தனையோ செய்றாங்க. அதுல சோறாக்குறோம், கொழம்பு வெக்கிறோம், ஆனா, அதைச் செஞ்சவன் விரல் ரேகையும் அதில் படிஞ்சிருக்குன்னு நாம பாக்குறதே இல்லை!’’ | பெருமூச்சிட்டபடி அவரிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும், யாரோ என் முகத்தில் அறைந்தது போல இருந்தது.

நான் அவரின் கைகளை அப்போதுதான் பார்த்தேன். அகலமான கைகள். ‘‘நீங்கள் குயவரா?’’ என்று கேட்டேன். அவர் வேண்டாவெறுப்பாக, ‘‘இங்க இருக்க பாதிக் குதிரைக நான் செஞ்சதுதான்!’’ என்றார். கோபத்துக்கும் எரிச்சலுக்குமான காரணம் அப்போது தான் புரிந்தது.

இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந் தோம். அவர் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஒரு சிறுவனைப் போல ஆசையை அடக்க முடியாமல் கேட்டேன்… ‘‘உங்க கையைத் தொட்டுப் பார்க்கலாமா..?’’

அவர் லேசாகச் சிரித்தபடி, ‘‘கையில் என்னய்யா இருக்கு? மனசுல இருக்கு… அதுதான் மண்ணை வனையுது. மண் லேசுப்பட்டது இல்ல. அதுக்கும் குணம் இருக்கு, வாசம் இருக்கு. கட்டுன பெண்டாட்டியாவது நம்ம சொல் பேச்சுக் கேட்பா… மண்ணு லேசில் படியாது!’’ என்றார்.

அன்று முழுவதும் அவரோடு இருந்தேன். சிதிலமடைந்துபோன குதிரைகளின் தலைகளை, கால்களை அவர் ஓரமாக அடுக்கிவைத்தபடி இருந்தார். திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் குதிரைகளின் கண்கள் கூச்சம்கொண்டு அசைவது போலவே தெரிந்தன.

நீண்ட உரையாடலுக்குப் பின்பு அவரிடம், ‘‘எதற்காக உங்களுக்கு எதையுமே பிடிக்கவில்லை?’’ என்று கேட்டேன். அவர் ஆத்திரமடைந்தவர் போல, ‘‘நமக்கு என்ன மதிப்பிருக்கு சொல்லுங்க? எல்லாப் பயலுகளும் குடிக்கிறதுக்கும், ஆடுறதுக்கும்தான் வர்றாங்க. மூளி மூளியா மண்ல செஞ்சு கொண்டு வந்து வெச்சா, சாமி எப்படி தரிசனம் கொடுக்கும்? எல்லாம் ஏமாத்தாப் போச்சு! மண்ணோட உள்ள உறவு தாய்ப்பால் மாதிரி. நாம தான் சப்பிச் சப்பிக் குடிக்கத் தெரிஞ்சுக்கணும். அது வத்தாம பாலைக் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கும்ÕÕ என்றார்.

தனது கலை அழிந்து வருகிறது என்ற கோபத்தின் கீழே வேறு ஏதோ காரணம் இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் இருந்து நடந்து சாலையின் விளிம்புக்கு வந்தபோது கேட்டேன், ‘‘உங்ககூட யாரு வந்திருக்கா..?’’

அவர் உடைந்து போன குரலில் சொன்னார், ‘‘இந்த மண் குதிரைகளைத் தவிர, எனக்கு வேற யாருமே இல்லைய்யா! பெத்த பிள்ளைக எல்லாம் பிழைப்பு தேடி மெட்ராசு, பாம்பேனு போயிட்டானுக. ஒருத் தனுக்கும் இந்தத் தொழில் பிடிக்கலை. எனக்கு இதைவிட்டா வேறு தொழில் தெரியாதுய்யா! பரம்பரையா குசவங்க நாங்க. இன்னிக்கு இருக்கனா, செத்தனான்னு பார்க்கக்கூட எனக்கு யாரும் இல்லை. பெரியவங்களை விடுங்க… ஆறு பேரப் பிள்ளைக இருக்குதுங்க. ஒருத்தருக்கும் என்னை வந்து பார்க்கத் தோணலை. என்கிட்ட என்ன இருக்கு? என்னால முடிஞ்சது மண்ணுல ரெண்டு பொம்மை செஞ்சு தருவேன். பேரன், பேத்தி எல்லாம் டவுன்ல இங்கிலீஷ் படிக்கிறவங்க. இதெல்லாம் பிடிக்குமா? ஏழையாப் போயிட்டா, சொந்தத் தாத்தானுகூட பார்க்காம உறவு அத்துப்போயிரும்னு ஆகிப் போச்சுய்யா. நானும் குதிரை செய்றதையெல்லாம் விட்டுட்டேன். மிச்சமிருக்கிறது தலை போன இந்தக் குதிரைகதான். அதுககூட பேசிக்கிட்டுக் கெடக்கிறேன்!’’

என்ன பேசுவது என்று தெரியாத அமைதி என்னைக் கவ்விக்கொண்டது. அங்கிருந்த மண் குதிரைகளைத் திரும்பிப் பார்க்க குற்ற உணர்வு ஏற்பட்டது. அவர் ஆத்திரம் அடங்கா தவர் போலச் சொன்னார்… ‘‘பத்து வருசத்துக்கும் மேலாச்சு… திருவிழாவுக்குக்கூட ஊருக்கு வர மாட்டாங்க. நானும் எந்தப் பிள்ளை வீட்டுக்கும் போறது இல்லை. எவன் கிட்டயும் கையேந்த மாட்டேன். இந்த மண்ணு இருக்கிற வரைக்கும் பொழச்சுக் கிடப்பேன். இல்லேன்னா மண்ணுக்குள்ளேயே அடங்கிருவேன். நானெல்லாம் மண்புழு மாதிரிதேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மண் ருசி மட்டும்தான்! என்ன… வயசு ஆக ஆக மனசு கேட்க மாட்டேங்குது. பேரன் பேத்திகளைத் தேடுது. வீட்ல நிறைய விளையாட்டுச் சாமான் செஞ்சு போட்டிருக்கேன். என்னிக்காவது என்னைத் தேடி வந்தா விளையாடட்டும். இல்லேன்னா நான் செத்ததும் குழியில அந்தப் பொம்மைகளையும் சேத்துப் பொதைச்சிர வேண்டியதுதான்!’’

பேச்சு அடங்கி நாவு ஒடுங்கிவிட்டது. அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். அது நடுங்கிக்கொண்டே இருந்தது. மண் குதிரைகளில் இவரும் ஒருவர் போலாகிவிட்ட நிலை புரிந்தது.

ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டு, பேரன், பேத்தியைப் பார்க்கக்கூட முடியாத நிலை என்பது எத்தனை துக்ககரமானது. அப்படி வாழ்வது மண் குதிரைக்குச் சமமானதுதானோ?

திருவிழா முடிந்து அந்த மைதானமே காலியாகி இருந்த போதும், அதை விட்டு வெளியேறிப் போக மனதற்றுப் போய்விட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத வலி காற்றில் சுற்றிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும் வழியில் எனக்கு சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை நினைவுக்கு வந்தது.

ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைப் பற்றிய கதை. இருவரும் மீன் பிடிக்கப் போகிறார்கள். ஒரு மீன் அவர்களது தூண்டிலில் சிக்காமல் அலைக்கழிக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தாத்தா முயற்சிக்கிறார். அவரால் முடியவில்லை. பேரன் அதை தான் பிடித்துவிடுவதாக சவால்விட்டு, தூண்டிலோடு போய் மீனைப் பிடித்துவிடுகிறான். பேரனின் வெற்றி தாத்தாவின் சுயபெருமையின் மீது விழுந்த அடிபோல் ஆகிவிடுகிறது. தன்னால் பிடிக்க முடியாத மீனை, பேரன் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேரனைத் திட்டுகிறார். ஆனால், அன்றிரவு அவர் மனது பேரனின் சாகசத்தை நினைத்துப் பெருமைப்படுகிறது.

வெளிப்படாத அன்பு என்பது கல்லுக்குள் தேரை இருப்பது போல, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலே வாழ்வது போன்றது. தாத்தாவின் அன்பு யாரும் திறக்காத சிப்பிக்குள் உள்ள முத்தைப் போன்றது. அதைத் தீண்டுவதும் கைவசமாக்குவதும் என்றோ அபூர்வமாகவே நடந்தேறுகிறது.

எல்லா வீடுகளிலும் வெளிப் படுத்த முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார் கள். நம் நிழல் கூடவே வந்தாலும், அது எதையும் பேசுவது இல்லை. அதுபோல இவர்களின் அன்பும்!

அருவியாகச் சப்தமிடும் போதுதான் தண்ணீரை வியந்து பார்க்கிறோம். குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனம் ஒருபோதும் புரிந்துகொள்ளப்படுவதே இல்லைதானோ?

 

சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி, தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். இவரது ‘சாயாவனம்’ நாவல் தமிழில் குறிப்பிடத்தக்கது. ஓவியம், நுண்கலைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட சா.கந்தசாமி, குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரித்து வருகிறார். சா.கந்தசாமி தொகுத்த ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பு, மிகக் கவனமாகவும் நுட்பமாகவும் தொகுக்கப்பட்டது. இவருடைய கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘சா.கந்தசாமி கதைகள்’ என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

நன்றி: கதாவிலாசம் , ஆனந்தவிகடன் பிரசுரம்.

*********

Jun 20, 2010

தக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி

மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது.
நான்காம் தடவையாக, "எலே ராமு" என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, "இப்பத்தான் Sa.kandasamyவெளியே போனான்" என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள்.
ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை.
ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.
அவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.
"தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது..." ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.
மாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.
ஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது.
"அந்தப் பக்கமா போறேன், தாத்தா." என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து ஆனைச்சரிவில் இறங்கி, புன்னை மரத்தடியில் நின்று தூண்டிலை வீசினான். சற்று நேரம் தக்கை அசையவில்லை. போட்டது போலவே கிடந்தது. பிறகு மினுக் மினுக்கென்று ஓர் அசைவு; சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது.
அவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன.
தூண்டிலை எடுத்துக்கொண்டு கரைக்குச் சென்றான். பெரிய கொட்டாங்கச்சியிலிருந்து மண்ணைத் தள்ளி ஒரு மண்புழுவை எடுத்துக் கோத்து தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினான்.
இப்படி இடம் மாறும் பழக்கமெல்லாம் தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார்; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும், கம்பீரமாகவும் நின்று தூண்டிலை வீசுவார்.
"ஒரு மீனும் பிடிக்காமல் போகமாட்டேன்" என்ற உறுதியுடன் தக்கையைப் பார்த்தான். தக்கை குதித்துத் திடீரென்று மேலே எழும்பியது. அவன் முழுக் கவனமும் தூண்டிலில் விழுந்தது. கையைத் தளர்த்தி நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது.
மீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம் மலரும். நரையோடிய மீசை ஒரு பக்கமாக ஒதுங்க சிறு புன்சிரிப்பு ஒன்று வெளிப்படும். பதற்றமில்லாமலும் ஆர்பாட்டமின்றியும் நேராகத் தூண்டிலை இழுப்பார். மீன் துடிதுடித்து மேலே வரும் அநேக சந்தர்பங்களில் தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு.
ஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது, "கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா" என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கொண்டாய் ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.
அவன் தூண்டிலில் சிக்கிய மீன் தப்பித்துக் கொண்டாட முடியாது; சாதுரியமாகவும், கனமாகவும் இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை.
ராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது.
தூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக்கும் மயிலையைப் பார்த்தான் ராமு. மனதிற்குள்ளே சந்தோசம்.
தன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்துவிட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது - ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும், மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியாகக் கவனம்.அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்துத் தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.
"நீதான் பிடிச்சியா?" என்று கேட்டுக் கொண்டு தாத்தா அருகில் வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். "பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ " மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார்.
ராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலிருந்து அவன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வது மாதிரி மாணிக்கத்திற்குத் தோன்றியது.
அந்நினைவு வந்ததுமே அவர் எரிச்சலுற்றார். இருக்கையை விட்டு விரைவாக எழுந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து  இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
சற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். முற்றத்திற்கு ஓடிக் கையை அலம்பிக்கொண்டு வந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்தான்.
இடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக்கொண்டு, "செத்த முன்னே எங்கே போயிருந்தே?" என்று கேட்டார் மாணிக்கம்.
"அந்தப் பெரிய மீனு..."
கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.
"அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ?" அவர் குரல் திடீரென்று உயர்ந்தது.
"அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது".
ராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவன் கொடுத்த வெற்றிலையை வாங்கி அடக்கிக்கொண்டு, பெரிய தூண்டிலுடன் குளத்தை நோக்கிச் சென்றான். அந்தத் தூண்டிலை ஒரு மீனும் அருத்ததில்லை. அநேகமாக மீனால் அறுக்க முடியாத தூண்டில் அது.
ராமுவும் கூடச் சென்றான்.
கயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது.
ராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின்ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தான்.
"அதுக்குள்ளே அம்புட்டுக்கிச்சா" என்று வந்த மாணிக்கம் புன்னை மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துப் பிடித்து தக்கையை நோட்டமிட்டார். பெரிய தக்கை பொய்க்கால் குதிரை மாதிரி ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழுத்தது. அனுமானம் சரி, தூண்டில் முள் தொண்டையிலே குத்திக் கொள்வதற்கு நூலைத் தளர விட்டு மீன் ஆர்பாட்டத்தைத் துவங்குவதற்கு முன்னே இழுத்துப் போடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார் மாணிக்கம்.
அவர் கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாணிக்கம் சறுக்கிக்கொண்டே  குளத்தில் போய் விழுந்தார்.
ராமு ஓடிவந்து தாத்தாவைத் தூக்கினான். கணுக்காலுக்குக் கீழேயிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான்.
"மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா. செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா."
மாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.
"எதுக்காக இங்கேயே நிக்கறே?" என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான்.
மாணிக்கம் கரைக்கு வந்தார். அவர் மனம் முறிந்துவிட்டது. குலைத்த ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு இருட்டிய பின்னால் வீட்டிற்க்குச் சென்றார். ராமு சின்னத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு.
பெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபளக்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும், விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது.
குளத்தில் ஒரு விரால் தன குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பவனி வந்தது. பெரிய விரால். அநேகமாக நான்கைந்து ரூபாய் பெறும். அதே மாதிரி இன்னொரு விரால் கீழே வரலாம். இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால் மாணிக்கம் இரண்டிலொன்றை வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்று விட்டதோ என்ற எண்ணமும் தோன்றியது. விளக்கைச் சற்றே பெரிதாக்கி எட்டிய வரையில் குளத்தை ஊடுருவி நோக்கினார். தெற்கு முனையைத் தாண்டும்போது வாளை கண்ணில் பட்டது. வேகமாக வாலைச் சுழற்றி ஒரு கொண்டைக் கூட்டத்தைச் சாடியது.
மாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம்.
அவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச்சத்தை உமிழ்ந்தது. நிலவும் பளிச்சென்று இருந்தது. சரியான நேரம் வாளை இரையை அவசரமின்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டடி முன்னே சென்று ஈட்டியை மேலே உயர்த்தினார்.
நீரின் ஒரு சுழிப்பு. எங்கிருந்தோ ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.
மீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட்டையும் காணோம். மாணிக்கம் கால்கள் சோர்வுறக் கரையோரமாகச் சுற்றி வந்தார். மீன் குளத்தில் இருப்பதற்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. சலிப்பும், சோர்வும் மிகுந்தன. கோழி கூவும் நேரத்தில் விளக்கும் ஈட்டியுமாகத்  தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம்.
அடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும், கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார். "ஒண்ணு நான்; இல்லே அது... ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்."
பரண் மீது ஏறி இரண்டாண்டுகளுக்கு முன்னே கட்டிப்போட்ட தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார்.
குளத்தங்கரையில் பெரிய மீன் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும், அடுத்து ராமு மீதும் விழுந்தது.
தலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில், "என்ன பண்ணிக்கிட்டிருக்கே" என்று வினவினார்.
அவன் மெளனமாக இருந்தான்.
"உன்னைத்தான் கேக்கறேன்". காதைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தார். "எம்மா நேரமா தேடிக்கிட்டிருக்கா. நீ இங்கே வந்து குந்தியிருக்கே..." என்று தள்ளினார். கீழே விழுந்து எழுந்த ராமு தாத்தாவின் விகாரமான முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றான்.
அவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்ணீர் நாளா பக்கமும் சிதறியது.
"எவ்வளவு பெரிய மீன்... ராஜா மாதிரி..." மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார்.
மீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர அவசரமாகக் கலயத்திலிருந்து ஓர் உயிர்க் கொண்டையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சரியாக வளர்ச்சியுற்ற இரை. முள்ளில் கொத்து விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்கும். மீன் இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து, நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு, நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி, தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வலுவடைந்து கொண்டே வந்தது.
சப்தம் செய்யாமல் நீரில் இறங்கி தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினார். தக்கை வேகமாக அசைந்தாடிப் போய் அல்லி இலையில் சொருகிக் கொண்டது. ஒரு பக்கமாக இழுத்து விட்டார். மெல்ல மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீர்ல் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது.
வெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ராமுவை இழுத்து வந்து நான்கு அறைகள் கொடுத்துத் தண்ணீரில் மூச்சுத் திணற அமுக்க வேண்டும் போல தோன்றியது. அதே நினைப்போடும், ஆத்திரத்தோடும் இன்னொரு கொண்டையை எடுத்துச் செருகிக் குளத்தில் வீசினார்.
தூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார்.
வழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.
"இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயிட முடியாது" என்று மீனுக்கு அறைகூவல் விட்டார். உல்லாசமான சீழ்கையொலி அவரிடமிருந்து பிறந்தது.
தக்கை அசைந்தது. பெரிய மீன் வந்துவிட்டது.
மாணிக்கம் எழுந்து நின்றார்.
மீன் வாலால் தண்ணீரை அடித்த்தது. மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது.
தெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது.
மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விறாலோ கொண்டையோ வராமல் இருந்தால் பெரிய மீனைப் பிடித்துவிடலாம்.
கரையேறி வடக்குப் பக்கமாக நடந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது.
கொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது.
மாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன் "எலே எப்ப சொன்ன வேலை. இப்பத்தான் செய்யிறியா?" என்று உறுமினார்.
அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாகத் தலைகுனிந்தபடியே குதிரை மயிருக்கு எண்ணெய் தடவிச் சிக்கலைப் பிரித்துக் கொண்டிருந்தான்.
"எலே கேக்கறது காதிலே உளுவுதா" சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார்.
அவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது.
"நேத்தியிலேருந்து என்ன பண்ணினே?" தலையை அசைத்து மேலே தூக்கினார்.
"எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்றீங்க" என்று கேட்டாள் அவன் மனைவி.
"பின்ன, தரித்திரத்தைத் தலையிலா தூக்கி வச்சிக்குவாங்க"
"இப்படி அடிச்சிக் கொல்ல நாதியில்லாமலா போயிட்டோம்?"
"எட்டுக்கட்டு சனமுண்டு உனக்கு?"
"மவ செத்த அன்னைக்கே தெரிஞ்சிச்சே"
"என்னடி சொன்னே திருடன் மவளே" என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.
"நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு." என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள்.
"வாயை மூடு."
அவள் குரல் உயர்ந்தது.
மாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார்.
"போ உள்ளே."
”என்னைக் கொல்லு. உன்னைத்தான் கட்டிக்குவேன்னு சாதி சனத்தையெல்லாம் வுட்டுட்டு வந்தேனே. அதுக்கு இந்தப் பச்சை மண்ணோடு என்னையுங் கொல்லு.”
"பெரிய ரம்பை இவ; நா இல்லாட்டா ஆயிரம் பேரு வந்திருப்பான்."
அவர் பெல்ட் மார்பிலும், கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவள் சொன்னது அவர் மனதைத் தொட்டு இரங்க வைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விட்ட சண்டையை மறுபடியும் துவங்கியதற்காக வருத்தமுற்றார்.
அவருடைய ஒரே மகள் கல்யாணமான இரண்டாம் வருடம் ராமுவை விட்டுவிட்டுக் காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூரம் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.
மகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி. தான் உயிருக்கு உயிராக நேசித்த மகளின் நற்பண்புகள் விவரிக்கப் படுகையில் அவரால் தாள முடியவில்லை. மெல்ல எழுந்து நடக்கலானார். கால்கள் குளத்தை நோக்கிச் சென்றன.
குளம் அமைதியாக இருந்தது. தூண்டில் அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார்.
குளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியாக இருந்தது. சீழ்க்கை அடித்துக்கொண்டு கொன்றை மரத்தடியில் அமர்ந்தார் மாணிக்கம். களைப்பும், சோர்வும் மிகுந்தன. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. 'உம்' என்று உறுமிக்கொண்டு மரத்தடியில் சற்றே சாய்ந்தார். சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது.
கண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பாதிக் கயிற்றை மீன் அறுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படிச் சென்றது விராலா, வாளையா என்பது தெரியவில்லை. இரண்டும் இல்லாமல் ஆமையாகக் கூட இருக்கலாம். உறுதிப்படுத்திக் கூறும் தடயம் ஏதுமில்லை. எதுவானாலும் சரி, இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன.
சாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற, ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அறுந்துவிடும் போலப்பட்டது.
"அப்பா கும்பகோணம் ஒருவாட்டி போய் வரணும்" என்று சொல்லிக்கொண்டே முள்ளைக் காட்டினார். கட்டியதும் கயிறு தாளுமா என்ற ஐயம் வந்தது. கடைசிப் பகுதியை இரு கைகளிலும் சுற்றிக்கொண்டு ஒரு வெட்டு வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது.
'சை' என்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார்.
முன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிறது. மாணிக்கம் எம்பி மீன் மீது உட்கார்ந்து கொள்கிறார். கீழே கீழே என்று பாதாளத்திற்கு மீன் செல்கிறது. மூச்சு திணறுகிறது. தாள முடியவில்லை. 'ஹா' என்று அலறுகிறார். எல்லாம் கனவு என்றதும் மனதில் திருப்தி உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி, அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார்.
கோழிகள் கூவின.
"வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க" என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி.
கிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.
"நம்ப வாண்டு எம்மாஞ் சமத்துப் பாத்திங்களா."
மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.
"ஆத்தா" என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.
*********
தட்டச்சு : கிருஷ்ணபிரபு 

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்