Dec 12, 2013
மீன்கள் - தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)
Dec 11, 2013
பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
1
கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகத மன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன் அந்தப்புரத்தில், நாயகியரில் ஒருத்தியைக் கூடியபடி இருந்த நேரம், திட்டமிட்டிருந்தபடி அஜாதசத்ரு தன் வீரர்களுடன் நுழைந்தான். மஞ்சத்தில் நிர்வாணமாக இருந்த பிம்பிசாரணை அப்படியே தூக்கி கைகளைப் பின்னால் முறுக்கி அவன் உத்தரியத்தினாலேயே கட்டி வீரர்களிடம் ஒப்படைத்தான். போகத்தின் தாளத்தில் சுயமிழந்து விட்டிருந்த மன்னன் காலடியோசைகளைக் கேட்கச் சற்று பிந்தி விட்டிருந்தான். தூரத்தில் உடைகளுடன் கழட்டி வைக்கப்பட்டிருந்த உடைவாளை எடுக்க முடியவில்லை. அந்த நாயகி அங்கேயே வெட்டி சாய்க்கப் பட்டாள். பிம்பிசாரன் அந்தப்புறத்தில் நீண்ட புறச்சுற்றுப் பாதை வழியாக இட்டுச் செல்லப்பட்டான். அது கூதிர்காலம். கல்லாலான அரண்மனைச் சுவர்களும் தரையும் குளிர்ந்து விறைத்திருந்தன. உள்ளிழுத்த மூச்சுக் காற்று மார்புக்குள் உறைந்து பனிக்கட்டியாகி, மெல்ல உருகி, நரம்புகள் வழியாகப் பரவி, உடலெங்கும் நிறைவதை பிம்பிசாரன் உணர்ந்தான். பிடரியும், மார்பும் சிலிர்த்து உடல் குலுங்கிக் கொண்டிருந்தான். விரைப்படங்காத ஆண்குறி காற்றில் துழவித் தவித்தது. அந்தப்புரத்தின் படிகளில் இறங்கி சுரங்கப் பாதையின் வாசலை அடைந்ததும் பிம்பிசாரன் திரும்பிப் பார்த்தான். ஒளி ஈரம்போல மின்னிய இலைகளை மெல்ல அசைத்தபடி நந்தவனத்து மரங்களும், சாம்பல் நிறத்தில் மெல்லிய ஒளியுடன் விரிந்திருந்த வானமும், அரண்மனைக் கோபுர முகடுகளின் ஆழ்ந்த மவுனமும் அவனை ஒரு கணம் பரவசப்படுத்தின. அம்மகிழ்ச்சியை வினோதமாக உணர்ந்து அவனே திடுக்கிட்டான். ஆழ்ந்த பெருமூச்சுடன் படியிறங்கினான்.
சுரங்கத்தின் உள்ளிருந்து சத்தமின்றி படியேறிப் பாய்ந்து வந்த குளிர்க்காற்று அவன் தோளை வளைத்து இறுக்கி மார்பில் தன் அங்கங்களைப் பொருத்திக் கொண்டது. பிம்பிசாரன் மனம் வழியாக எண்ணற்ற புணர்ச்சி ஞாபகங்கள் பாய்ந்து சென்றன. நடுங்க வைக்கும் குளிர் ததும்பும் அந்த அணைப்பு அவனை உத்வேகம் கொள்ளச் செய்தது. அஞ்சவும் வைத்தது. கொன்ற மிருகத்தின் உடலைக் கிழித்துப் புசிக்கும் புலியின் பாவனை அவனுக்கு புணர்ச்சியின் போது கூடுவதுண்டு. எதிர் உடல் ஒரு தடை, உடைக்க வேண்டியது. வெல்ல வேண்டியது. பின் சுய திருப்தியுடன் வாளை எடுத்தபடி வானைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும் அவனுக்கு. நீ பிம்பிசாரன் என அது விரிந்திருக்கும். நிலவின் அவன் அந்தப்புரம் வருவதில்லை. லதா மண்டபத்தில் முழுத்தனிமையில் இருப்பதை விரும்பினான். மகத மன்னர்கள் அனைவருமே முழுநிலவில் தனிமையை நாடுபவர்களாகவே இருந்திருக்கின்றனர். குளிர் காற்றின் வயிற்றுக்குள் நுழைந்த தன் உறுப்பில் வாழ்க்கையின் உச்சக்கட்டத் துடிப்பை உணர்ந்தான். ஆனால் மனம் அச்சம் தாங்காமல் பின்வாங்கும்படி கூறியது. அவன் இரத்தம் முழுக்க வடிந்து கொண்டிருந்தது. உதிரும் இலையின் எடையின்மை, பின்பு களைப்புடன் தடுமாறினான். அவன் நரம்புகள் புடைத்து நீலமாக மாறின. உடல் வெளுத்துப் பழுத்தது.
வாள் நுனிகளால் தள்ளப்பட்டு பிம்பிசாரன் சுரங்கத்திற்குள் நுழைந்தான். நரைத்த தாடி பறக்க, கட்டப்படாத தலைமயிர் பிடரியில் புரண்டு அலையடிக்க, தள்ளாடி நடந்தான். அவன் முன் அஜாத சத்ருவின் பாதங்கள் வலுவாக மண்ணை மிதித்து நகர்ந்தன. இருட்டு மணமாகவும், தொடு உணர்வாகவும், நிசப்தமாகவும் மாறி, மனதை நிறைத்தது. காவலர்கள் ஒலியாக மாறினார்கள். பின்பு கரைந்து மறைந்தார்கள். பிறகு எதுவும் ஊடுருவாத தனிமையில் பிம்பிசாரன் நடந்து கொண்டிருந்தான். பாதையெங்கும் கால்களை விறைக்கச் செய்யும் ஈரம் நிறைந்திருந்தது. இருளுக்கு கண் பழகியபோது சுரங்கச் சுவர்கள் கசிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவை மெல்ல சுருங்கி விரிந்தபடி இருந்தன. அது ரத்தம். சிறிய நீரோடையாக மாறி அது அவன் கால்களைப் பற்றிக் கொண்டது. சுவர் வளைவுகளை மோதி கிளுகிளுத்தபடி விலகிச் சென்றது. எங்கோ வெகு ஆழத்தில் பேரொலியுடன் அருவியாக விழுந்து கொண்டிருந்தது.
தன் கால்களை இடறிய ஆட்டுக்குட்டிகளைப் பற்றி அப்போது பிம்பிசாரன் எண்ணினான். கனிந்த கண்களுடன், மார்போடு அணைத்த ஆட்டுக்குட்டியுடன் தன் யாகசாலைக்கு வந்த சாக்கிய முனியை கனவில் காண்பது போல் அவ்வளவு அருகே கண்டான். அவன் உடலின் மெல்லிய வெம்மையைக்கூட அக்கடும் குளிரில் உணர முடிந்தது. பவளம் போலச் சிவந்து யாகசாலை மையத்தில் இருந்த பலிபீடம். அதைச் சுற்றி தலை துண்டிக்கப்பட்ட வெள்ளாடுகளின் கால்கள் உதைத்து புழுதியில் எழுதிய புரியாத லிபிகளை இப்போது படிக்க முடிவதை அறிந்தான். புத்தர் புன்னகை புரிந்தார். அவன் அவரை நோக்கிப் பாய்ந்து செல்ல விரும்பினான். ஆனால் ஓட்டம் அவன் பாதங்களைக் கரைத்துவிட்டிருந்தது. உருகும் பனிப் பொம்மை போல மிதந்து சென்று கொண்டிருந்தான். புத்தரின் கரம் படு விழி சொக்கியிருந்த ஆட்டுக் குட்டியின் உடலின் வெண்மை மட்டும் ஒரு ஒளிப் புள்ளியாகக் கண்களுக்கு மிஞ்சியிருந்தது. பின்பு அதுவும் மறைய இருட்டு எஞ்சியது. பலி பீடத்திற்கென்று பிறவி கொண்டு இறுதிக் கணத்தில் மீட்கப்பட்ட ஆடுகள் நந்தவனம் முழுக்க செருக்கடித்துத் திரியும் ஒலி கேட்டது. குளம்புகள் பட்டு சருகுகள் நெரிந்தன. வாழ்வின் நோக்கத்தையே இழந்துவிட்ட அவை ரத்தம் கனக்கும் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தன. மண்டை ஓடுகள் உடையும்படி பரஸ்பரம் மோதிக்கொண்டன. வழியும் ரத்தத்திலே வெறி கொண்டு மேலும் மேலும் மோதின. மரண உறுமல்கள் எதிரொலித்து சுரங்கம் ரீங்காரித்தது. பிம்பிசாரன் இருட்டின் முடிவற்ற ஆழத்தை ஒவ்வொரு கணமும் உணர்ந்தான்.
2
அஜாத சத்ருவின் முடிசூட்டு விழாவிலும் வானவர் மலர் மாரி சொரிந்தனர். அவன் தன் தந்தையின் தேவியரைத் துரத்திவிட்டு அந்தப்புரத்தை தன் தேவியரால் நிரப்பினான். ஆனால் கூடலின்போது எப்போதும் கவசத்துடனும் வாளுடனும் இருந்தான். இரும்பின் குளுமை பெண்களை உறைய வைத்து விட்டிருந்தது. ஆழத்தில் அவள் உடல் சதைகளும், மிக அந்தரஙகமான தருணத்தில் அவள் சொல்லும் பொருளற்றா வார்த்தையும்கூட சில்லிட்டிருந்தன. பனிக்கட்டிப் பரப்பைப் பிளந்து, காட்டுப் பொய்கையில் நீராடி எழும் உணர்வே அஜாத சத்ரு எப்போதும் அடைந்தான். பின்பு அப்பெண்ணின் அடிவயிற்றில் காது பொருத்தி அச்சத்துடன் உற்றுக் கேட்பான். உடைவாளால் அவளைப் பிளந்து போட்ட பிறகுதான் மீள்வான். அவள் கண்கள்கூட மட்கிப்போய் வெட்டுபவனுக்கு அந்த ஆதி மகா உவகையைச் சற்றும் அளிக்காதவையாக ஆகிவிட்டிருக்கும். இரவெல்லாம் அல்லித் தடாகத்தில் தன் வாளைக் கழுவியபடி இருப்பான். அதன் ஆணிப் பொருத்துகளிலும், சித்திர வேலைகளிலும், உறைந்த ரத்தத்தைச் சுரண்டிக் கழுவுகையில் எப்போதாவது தலையைத் தூக்கினால் விரிந்த வானம் நீதானா என்று வினவும்.
தன் பாதத் தடங்களை இடைவாளால் கீறி அழித்துவிட வேண்டுமென்பதில் அஜாதசத்ரு எப்போதும் கவனமாக இருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் ஆண்மை நுழைந்து மீண்ட வழியில் அது நுழைந்து சென்றது. உதிரம் பட்டு அது ஒளி பெற ஆரம்பித்தது. அவன் இடையில் அது ஒரு மின்னல் துண்டாகக் கிடந்தது. அவன் உடலில் அது செவ்வொளி பிரதிபலித்தது. அவன் அரியணையை நெருப்பு போல சுடர வைத்தது. வாள் அவனை இட்டுச் சென்றது. பாயும் குதிரைக்கு வழிகாட்டியபடி காற்றை மெல்லக் கிழித்தபடி அது முன்னகரும்போது பயத்துடனும், ஆர்வத்துடனும் அதைத் தொடரும் வெரும் உடலாக அஜாத சத்ரு ஆனான். கோசலத்தில் பிரசேனஜித்தின் தலையை மண்ணில் உருட்டிய பின்பு வாள் உடலைச் சிலுப்பி ரத்த மணிகளை உதறியபோது முதன்முறையாக அஜாத சத்ரு அதைக் கண்டு அஞ்சினான். கூரிய ராவால் ரத்தத்தைச் சுழட்டி நக்கியபடி வாள் மெல்ல நெளிந்தது. அதிலிருந்து சொட்டும் துளிகள் வறண்ட மண்ணில் இதழ் விரிக்கும் அழகைக் கண்டு அஜாத சத்ரு கண்களை மூடிக் கொண்டான். லிச்சாவி வம்சத்துக் குழந்தைகளின் ரத்தம் தேங்கிய குட்டையில் தன் கையைவிட்டு குதித்து பாய்ந்து, வாளைமீன் போல மினுங்கியபடி, வால் துடிக்க, உடல் நெளித்துத் திளைக்கும் தன் வாளைப் பார்த்தபடி அஜாதசத்ரு நடுங்கினான். பின்பு திரும்பி ஓடினான். சாம்ராஜ்யப் படைப்புகளையும் வெற்றிக் கொடி பறக்கும் கொத்தளங்களையும் விட்டு விலகி காட்டுக்குள் நுழைந்தான். அங்கு தன்னை உணர்ந்த மறுகண தாங்க முடியாத பீதிக்கு ஆளானான். நினைவு தெரிந்த நாள் முதல் வெறும் கைகளுடன் வாழ்ந்து அறிந்ததில்லை. கைகளின் எல்லா செயல்பாட்டுக்கும் வாள் தேவைப்பட்டது. ஆபாசமான சதைத் தொங்கலாக தன் தோள்களின் மீது கனத்த கரங்களைப் பார்த்து அஜாத சத்ரு அழுதான். திரும்பி வந்து தன் வாள்முன் மண்டியிட்டான்.
சிரேணிய வம்சத்து அஜாத சத்ரு கோட்டைகளைக் கட்டினான். ராஜகிருக நகரை வளைத்து அவன் கட்டிய பாடலிகாமம் என்ற மாபெரும் மதில் அதற்குள் மவுனத்தை நிரப்பியது. பல்லாயிரம் தொண்டைகளோ முரசுகளோ கிழிக்க முடியாத மவுனம். அதன் நடுவே தன் அரண்மனை உப்பரிகையில் வாளுடன் அஜாதசத்ரு தனித்திருந்தான். நிறம் பழுத்து முதிர்ந்த வாள் அவன் மடிமீதிருந்து தவழ்ந்து தோளில் ஊர்ந்து ஏறியது. சோம்பலுடன் சறுக்கி முதுகை வளைத்தது. அந்த நிலவில் அஜாத சத்ரு எரிந்து கொண்டிருந்தான். இரும்புக் கவசத்தின் உள்ளே அவன் தசைகள் உருகிக் கொண்டிருந்தன. புரண்டு புரண்டு படுத்தபின் விடிகாலையில் தன்மீது பரவிய தூக்கத்தின் ஆழத்திலும் அந்நிலவொளியே நிரம்பியிருப்பதை அஜாத சத்ரு கண்டான். இதமான தென்றலில் அவன் உடலில் வெம்மை அவிந்தது. மனம் இனம்புரியாத உவகையிலும் எதிர்பார்ப்பிலும் தவிக்க அவன் ஒரு வாசல் முன் நின்றிருந்தான். நரைத்த தாடி வழியாகக் கண்ணீர் மவுனமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. கதவு ஓசையின்றித் திறந்தது. ஒளிரும் சிறுவாளுடன் அங்கே நின்றிருந்த பொன்னுடலை அஜாத சத்ரு பரவசத்தால் விம்மியபடி பார்த்தான். அது வாளல்ல தாழைப்பூ மடல் என்று கண்டான். தனனைக் கைது செய்து கூட்டிச் செல்லும் அப்பிஞ்சுப் பாதங்களை எக்களிப்புடன் பின்தொடர்ந்தான். மலர் உதிர்வது போன்று அப்பாதங்கள் அழுந்தி சென்ற மண்மீது தன் கால்களை வைக்கும் போதெல்லாம் உடல் புல்லரிக்க நடுங்கினான். சிறு தொந்தி ததும்ப மெல்லிய தோள்கள் குழைய தள்ளாடும் நடை அவனை இட்டுச் சென்றது. நீரின் ஒளிப்பிரதிபலிப்பு அலையடிக்கும் சுவர்கள் கொண்ட குகைப் பாதையில் நடந்தான். சுவர்கள் நெகிழ்ந்து வழியும் ஈரம் உடலைத் தழுவிக் குளிர்வித்தது. எல்லா பாரங்களையும் இழந்து காற்றில் மலரிதழ்போல் சென்று கொண்டிருந்தான்.
பதறிய குரலில் ஏதோ புலம்பியபடி அஜாத சத்ரு விழித்துக் கொண்டான். அந்தப்புரத்து அறைகள் வழியாக ஓடினான். தன் மகனைத் தனக்குக் காட்டும்படி கெஞ்சினான். பெண் முகங்கள் எல்லாம் சதைப் பதுமைகளாக மாறின. சுவர்கள் உறைந்திருந்தன. அம்மவுனத்தைத் தாங்க முடியாமல் என் மகன் என் மகன் என்று அழுதான். கற்சுவர் நெகிழ்ந்த வழியினூடே வந்த முதிய தாதி அஞ்சிய முகத்துடன் தன் மகனை அவனிடம் காட்டினாள். போதையின் கணமொன்றில் தவறிவிட்டிருந்த வள் விழித்துக்கொண்டு சுருண்டு எழுந்து தலைதூக்கியது. அவன் அதைத் தன் வலக்கையால் பற்றினான். அவன் கையைச் சுற்றி இறுக்கித் துடித்தது. அழுக்குத் துணிச் சுருளின் உள்ளெ சிறு பாதங்கள் கட்டைவிரல் நெளிய உதைத்தன. அஜாத சத்ரு குனிந்த அந்த முகத்தைப் பார்த்தான். உதயபத்தன் சிரித்தான். என்றோ மறந்த இனிய கனவு ஒன்று மீண்டது போல அஜாதசத்ரு மனமுருகினான். உதயபத்தன் மீது கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. வள் அஜாதசத்ருவை முறுக்கியது. அதன் எடை அவன் கால்களை மடங்க வைத்தது. அவன் தசைகளும் நரம்புகளும் தெறித்தன. அவன் அதை உருவி தன் மகனின் முஷ்டி சுருண்ட சிறு கைகளில் வைத்தான். காந்தள் மலர் போல அது அங்கிருந்தது. அதன் கீழ் தன் தலையைக் காட்டியபடி அஜாதசத்ரு மண்டியிட்டான். அன்றிரவுதான் அவன் மீண்டும் முழுமையான தூக்கத்தை அடைந்தான்.
3
ராஜக்ருக மாநகரம் வெள்ளத்தால் அழிந்தது. மண்ணின் ஆழத்திலிருந்து பெருகிய ஊற்றுக்களே அதைத் தரைமட்டமாக்கின. உதயபத்தன் பின்பு கங்கை நதிக்கரை சதுப்பில் தன் தந்தையின் உடலைப் புதைத்த இடத்தில் இன்னொரு பெரும் நகரத்தை எழுப்பினான். சதுப்பின் மீது மரக்கட்டைகளை அடுக்கி அதன்மீது கோபுரங்களும் கோட்டைகளும் எழுப்பப்பட்டன. மிதக்கும் நகரத்தின் கீழே பூமியின் ஆறாத ரணங்களின் ஊற்றுக்கள் எப்போதும் பொங்கியபடிதான் இருந்தன. அந்த நகரம் ஒருபோதும் இருந்த இடத்தில் நிலைத்திருக்கவில்லை. எவர் கண்ணுக்கும் படாமல் அது நகர்ந்தபடியே இருந்தது; நூற்றாண்டுகள் கழித்து கங்கையை அடைந்து சிதறும்வரை. பாடலிபுத்திரம் பூமி மீது மனிதன் எழுப்பிய முதல் பெருநகர் அது.
-----------
(காலச்சுவடு)
Dec 10, 2013
நான் - மகாகவி பாரதியார்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.
Dec 9, 2013
நீக்கல்கள் - சாந்தன்
அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் - அப்படித்தான் அதிகம் நேர்கிறது. - பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல - மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்...
வீட்டிலிருந்தே ‘ஸ்பெஸிம’னை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகிவிடும். “எப்படியும், எடுத்து நாற்பத்தைஞ்சு நிமிஷத்துக்குள்ளை குடுத்திட வேணும் -- இல்லாட்டி, நிச்சயமா ஒன்றும் சொல்ல ஏலாது.” என்று விஜயன் நேற்றைக்கே சொல்லியிருந்தான். விஜயன் இவனுடைய வலு நெருங்கிய கூட்டாளி. டொக்டர். பெரிய ஆஸ்பத்திரியில்- பட்டணத்தில்தான் இப்போது வேலை. அவனுடைய உதவியாலும், ‘அட்வைஸா’லும்தான் இந்த விஷயம் சுலபமாக நடக்கப் போகிறது - வீண்மினைக்கேடு, பரபரப்பு, ஆட்டபாட்டமில்லாமல்.
சைக்கிளிற்தான் போவது என்று தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது. ‘ஸ்பெஸிம’னையும் அங்கு போய்த்தான் எடுத்தாக வேண்டியிருக்கிறது.
‘ஸிப்’ வைத்த காற்சட்டையையும், ‘புஷ்-ஷேர்ட்’டையும் முன்னேற்பாடாக-வசதி கருதிப்-போட்டுக் கொண்டான். விஜயன் தந்த ஆஸ்பத்திரிச் சிட்டையை ஞாபகமாக எடுத்துக்கொண்டாயிற்று. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டபோது, அவனுக்குள்ளே சாதுவான கூச்சமாய்த்தானிருந்தது. சும்மா, விஜயனைப் போய்ப் பார்த்துவிட்டு, அப்படியே பட்டணத்திற்குப் போய்விட்டு வருவதாகவே, மனைவியிடம் சொல்லியிருந்தான். அவளுக்கு இப்போது விபரஞ் சொல்லத் தேவையில்லை; இந்த ‘டெஸ்’டின் முடிவைப் பார்த்துத் தேவையானதைப் பேசிக்கொள்ளலாம்.
அவளுக்கும் இவனுக்கும் கல்யாணமாகி, வருகிற சித்திரை இரண்டு வருடம். காதல் கல்யாணம்தான். அந்தக் காதல் காலத்திலேயே, இவன் கனக்கக் கற்பனைகள் பண்ணிக் கொண்டிருந்தான். நீண்ட காலத் திட்டங்கள், அழகிய ஓவியங்களாக நெஞ்சிற் பதிந்து உறைந்துபோன, அவள் நிறமும் விழிகளு, தன் தோற்றமும் முடியுமாக, இவனது விந்து இதுவரையில் முளைத்துத் தளிர்த்திருக்க வேண்டுமே - அது நடக்கவில்லை என்பதை அவனாற் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...
திருப்பித் திருப்பிப் பரீட்சை எழுதிக் ‘குண்டடிக்கிற’ மாணவன் மாதிரி, மாதா மாதம் ‘ரிசல்ட்’க்காக காத்திருந்து; ஆசை அவதியாய், ஏமாற்றத்தில் அடுத்தடுத்து முடிகிறபோது -
‘எங்கே வழுக்குகிறது’ என்று புரியவில்லை. தானறிந்த மட்டில், தங்களிருவரிலும் எந்தக்கோளாறும் வெளிப்படையாயில்லை என்பது தெரிந்தது. சராசரிக்குக் கொஞ்சம் மேலாயிருந்த உடற்கூற்று அறிவு, விஜயனிடம் போகத் தூண்டவே, போனான். “அதுதான் சரி; இப்பவே ஏதாவது செய்யிறதுதான் புத்தி. வயது போனால், பிறகு என்ன செய்தும் அவ்வளவு பலனிராது”.. என்று, விஜயன் உற்சாகப்படுத்தினான். வழிமுறைகளும் அவ்வளவு சிக்கலாயில்லை.
“முதல்லே, உன்னை ’டெஸ்ட்’ பண்ணுவம் அதிலை ஒரு கோளாறுமில்லையெண்டா, பிறகு, அவவை ஒரு லேடி டொக்டரிட்டைக் கூட்டிக் கொண்டு போ...”
தன்னை எப்படிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்று அவன் அறிந்தபோது ’வலு சுகமான டெஸ்ட்’ -என்று தெரியவந்தது. எப்படி ’ஸ்பெஸிமன்’ எடுக்கிறது என்பது புரியவில்லை. கேட்டான். அதற்கும் ஏதாவது முறை அல்லது கருவிகள் இருக்கக்கூடும்..
”நீதான் எடுத்துக் குடுக்கவேணும். ‘டெஸ்ட் ரியூப்’ தருவினம்” விஜயன் பயலின் முகத்தில், குறும்போ, சிரிப்போ மருந்துக்குக் கூட இல்லை!
‘கவுண்ட’ரின் வெளியே நின்று மெல்லத் தட்டினான். யாரோ ஒருவர் - ஆய்வுக்கூட உதவியாளராய்த்தானிருக்கும் - வந்தார். விஜயன் தந்த சிட்டையை நீட்டினான். பெயர், வயது, என்ன பரிசோதனை - எல்லாவிபரமும், அந்தத் துண்டில் விஜயன் தானே குறித்துக் கொடுத்திருந்தான்.
‘டெஸ்ட் ரியூப்’ இல்லை - கிட்டத்தட்ட அதே அளவில், சுத்தமாகக் கழுவி பிளாஸ்டிக் மூடிபோட்ட, சிறிய போத்தல் ஒன்று கிடைத்தது.
ஏதோ ஒரு ’வார்ட்’டிலிருந்த விஜயனைத் தேடிப் போனான். “எங்கேயிருந்து எடுக்கப் போகிறாய்? ‘குவார்ட”ஸிலை, என் அறைக்குப் போனா, வசதியாயிருக்கும்....”
“அது சரியில்லை; நீயில்லாத நேரத்திலை, நான் அங்க தனியாய்ப் போறது அவ்வளவு நல்லாயிராது...”
“அப்ப, வேற என்ன செய்யிறது? இங்க உள்ள ஆஸ்பத்திரி ‘லவெட்டிரி’யளை நம்பி உள்ளுக்குப் போகேலாது....” கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு-
“...இங்க வா” என்று சொல்லிக் கூட்டிப் போனான்.
ஓரிடத்தில் வரிசையாக நாலைந்து சின்னச்சின்ன அறைகளிலிருந்தன. தொங்கலிலிருந்த அறைக்கதவை விஜயன் மெல்லத் தள்ளினான். அது கக்கூஸ் அல்ல. ஆஸ்பத்திரி வேலையாட்கள் தட்டுமுட்டுக்களைப் போட்டு வைக்கிற அறை. இந்த வரிசை அறைகள் எல்லாமே அப்படித்தான் போலிருக்கிறது.
விஜயன் அறைக்கதவைத் தள்ளுகிறபோதே, ஒரு வேலையாள் பார்த்து விட்டான். அவசரமாக ஓடி வந்தான் - உடம்பை வளைத்துக் கொண்டு; நின்ற இடத்திலேயே காற் செருப்பைக் கழற்றி விட்டு விட்டு.
“ஐயா-?” கேள்வியே வணங்கியது. இவனுக்கு அந்த ஆள் மேல் கோபமாக வந்தது; பரிதாபமாயுமிருந்தது.
விஜயன் கேட்டான்.
“இந்த ஐயா, ‘லாப்’பில் குடுக்கிறதுக்கு ஏதோ ‘ஸ்பெஸிமன்’ எடுக்க வேணுமாம். இதுக்குள்ளை துப்புரவாய் இருக்குதுதானே?....”
“ஆமாங்க, ஆமாங்க.. வடிவாப் போலாமுங்க”
“சரி; நீ போய் அந்தரப்படாம ஆறுதலா எடு.. எடுத்து ‘லாப்’பிலை குடுத்திட்டு வா- நான் ‘வார்ட்’டிலை தானிருப்பன்...” - விஜயன் இவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் திரும்பினான்.
“ஐயா பயப்படாமப் போலாமுங்க... உள்ள, நல்ல ‘கிளீ’’னா இருக்கு...” அந்த ஆளும் போய் விட்டான்.
கதவைத் தள்ளி உள்ளே போனான், இவன். மிகவுந் துப்புரவாய்த்தானிருந்தது. சிறிய அறை. ஐந்தடி அகலங்கூட இராது. அதில் அரைவாசி இடத்தை, சுவரிலேயே கட்டப்பட்டிருந்த ‘றாக்கைகள்’ பிடித்துக் கொண்டிருந்தன. ஒரு மூலையில் தண்ணீர்க் குழாய் இருந்தது. ‘நல்ல இடந்தான்’ என்று எண்ணிக் கொண்டே கதவை சாத்தினான். பூட்ட முடியாது போலிருந்தது. பூட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த கட்டை இறுகிக் கிடந்தது. நிலையில் கட்டியிருந்த கயிற்றுத் துண்டை இழுத்து, கதவில் அடித்திருந்த ஆணியில் இறுகச் சுற்றினான். ‘வெளியிலிருந்து தள்ளினாலும் திறவாது’ என்கிற நிச்சயம் வந்தபின் தான் உள்ளே வந்தான். காற்சட்டைப் பையிலிருந்த போத்தலை எடுத்துத் தட்டின் மேல் வைத்தபோது தான், ஜன்னல் கண்ணில் பட்டது. ஜன்னற் கதவின் மேல் பாதி, கண்ணாடி!
அருகே போய் நின்று பார்த்தான். தன்னுடைய தலை எப்படியாவது வெளியே தெரியும் போலத்தானிருந்தது. பரவாயில்லை. தலை மட்டும்தானே’ என்கிற ஒரு நிம்மதி, ஜன்னலுக்கூடாய்ப் பார்த்தால், ஆஸ்ப்பத்திரியின் மற்ற கட்டிடங்கள் உயர உயரமாய் நின்றன. எதிர்த்த கட்டிடத்தின் மேல் மாடியில், வரிசையாக ஜன்னல்கள். நல்ல காலமாக அங்கு ஒருவரையும் காணவில்லை. அந்தக் கூட்டத்திற்கும் இந்த அறைக்கும் நடுவிலிருந்த முற்றத்தில் யாரோ போனார்கள். இந்தப் பக்கம் பார்க்கிறவராக எவருமில்லை.
இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாகக் கை விட்டிருந்த பழக்கத்தில் இப்போது கை வைப்பது ஒரு மாதிரியாய்த்தான் இருந்தது. வளம் வராதது போல, சீனி போட்டுக் கோப்பி குடித்துப் பழகியவனுக்குக் கருப்பட்டியைக் கடித்துக்கொண்டு குடிக்கச் சொல்லிக் கொடுத்தாற் போலவும் இருந்தது. எப்படிச் சரிவரும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்றுத் தெரியவில்லை.
கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தேகால். முடிந்துபின் எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
மனம், எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது. பதட்டம் வேறு. இந்தப் பதட்டத்துடன் மனதை ஒரு முகப்படுத்த முடியாமல், ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது அவனுக்குத் தெரியும். மனதை நிலைப்படுத்த முயன்றான். திருவிழா நாட்களில் கோவிலுக்குப் போய், சாமியைக் கும்பிட முயல்வது போல இருந்தது இந்த முயற்சி. தான் இப்போது செய்து கொண்டிருக்கிற வேலை, மனைவிக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாள் என்ற நினைப்பு வந்தது.
பழைய ‘ரெக்னிக்’குகள் ஒன்றுஞ் சரிவரவில்லை. சீனியுங் கருப்பட்டியுந்தான். முதற்கட்டமே இன்னம் முடியவில்லை.... வெளியே, யாரோ ஆர்ப்பாட்டமாகப் பேசிக் கொண்டு போனார்கள். இந்த அறையைத்தான் திறக்க வருகிறார்களோ என்று, ஒரு நிமிடம் பேசாமல் நின்றான். அந்தப் பரபரப்பில், இவ்வளவு நேரம் பட்ட பாடும் வீணாய்ப் போயிற்று. அவர்கள் இங்கு வரவில்லை - குரல்கள் தாண்டிப் போய், நடைபாதையில் மங்கி மறைந்து போயின.
மீண்டும் முயன்று ஒரு நிலைக்கு வந்த பின் நேரத்தைப் பார்த்தபோது, இப்போதே பத்து நிமிடமாகி விட்டுருந்தது; ‘கெதியாகச் செய்து முடிக்க வேணும்’ என்கிற உறுதி மனதை நிலை நிறுத்த உதவியாயிருந்தது.
படிக்கிற காலத்தில், ஒத்த தோழர்களுக்குள் புழங்கிய ‘தன் கையே தனக்குதவி’ ‘வெள்ளையனே வெளியேறு’ - என்கிற வசனங்களெல்லாம் அப்போதைய ‘ரீன் ஏஜ்’ அர்த்தங்களுடன் இப்போது நினைவில் வந்தன. இந்தப் பரபரப்பிலும் சிரிப்பு வந்தது.
“ஐயா.... உள்ளேதான் இருக்கிறீங்களா?......” என்கிற கேள்வி, இவனைத் திடுக்கிடச் செய்வது போல, இருந்தாற்போல் வெளியிலிருந்து வந்தது. அந்த ஆளாய்த்தானிருக்கும். சட்டென்று பாய்ந்து, கதவை அழுத்திப் பிடித்தபடி “ஓமோம் இன்னம் முடியேல்லை...”’ என்றான். குரல் அடைக்க.
”சரிங்க, சரிங்க... ஐயா வெளியே போயிட்டீங்களோன்னு பாத்தேன்.. நீங்க இருங்க...”-குரல் நகர்ந்தது... அவன் மேல் அசாத்தியக் கோபம் வந்தது, இவனுக்கு.
கதவடியிலிருந்து திரும்பி, மீண்டும் தன் இடத்திற்கு - ஜன்னலடிக்கு வந்த போது, எதிர்த்த மாடி ஜன்னல்களில் ஆள் நடமாட்டந் தெரிந்ததை அவதானித்தான். ஒரே ஆத்திரமாய் வந்தது. யாரோ இரண்டு மூன்று பேர், அங்கே நின்று ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பக்கந் திரும்பவில்லைதான்; ஆனால் தற்செயலாகத் திரும்பினால், இவன் கட்டாயம் கண்ணிற்படுவான். சுவர்த் தட்டின் ஒரு மூலையில் மடங்கிப் போய்க்கிடந்த கடதாசி மட்டை கண்ணிற் பட்டது. எடுத்துத் தூசி தட்டி, விரித்துப் பார்த்த போது, ஜன்னலில் இவன் தலையை மறைக்கிற அளவுக்குச் சரிவரும் போலிருந்தது. வலு பாடுபட்டு, ஜன்னல் இடுக்குகளில் அதைச் சொருகி மறைக்கப் பார்த்தான். இதை விட்டு, போத்தலையும் வீசி எறிந்துவிட்டுப் போய்விட வேண்டுமென்கிற அவதி எழுந்தது. அடக்கிக் கொண்டான்.
கனவுகளின் தோல்வியை இனியும் பொறுக்க முடியாது.. இல்லாவிட்டாலும், காரணமாவது தெரிந்தாக வேண்டும்... ஒருபடியாக, மட்டையை ஜன்னலிற் பொருத்திய போது, அது அந்நேரத்தில் நிற்குமாப் போல நின்றது. ஒரு மூலையில் மட்டும் நீக்கல். பரவாயில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக இவனைத் தெரியாது; ஆனால், இவனுக்கு வெளியே எல்லாந் தெரியும்.
நீக்கல் வழியே பார்த்தான்; அந்த மாடி ஜன்னல்களருகில் அப்போது நின்றவர்கள் இல்லை. இரண்டு ‘நேர்ஸ்மார்’, அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. ஒருத்தி, ஜன்னலை நெருங்கி வந்தாள். கையிலிருந்த எதோ காகிதங்களை விரித்து வெளிச்சப் படுகிற மாதிரிப் பிடித்து, அந்த இடத்திலேயே நின்று படிக்கலானாள். இவன் நேரத்தைப் பார்த்தான். இருபது நிமிடமாகிக் கொண்டிருந்தது.
வெளியே இருந்தவன், மீண்டுங் குரல் கொடுக்கலாம். விஜயன் கூட தேடி வந்தாலும் வரலாம்...
‘டக்கென்று முடித்துவிட வேண்டும்’ - என்று திரும்பவும் நினைத்துக் கொண்ட போதிலேயே, அதைச் சுலபமாக முடித்துக் கொள்வதற்கான வழியும் அவன் மனதிற் பளிச்சிட்டது.
கடதாசி மட்டை நீக்கலூடாகப் பார்த்தான். அந்த ‘நேர்ஸ்’ இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தாள். ‘அழகு’ என்ற சொல் கிட்டவும் வராது. ‘சாதாரணம்’ என்று வேண்டுமானால் - அதுவும் யோசித்து - சொல்லலாம். கறுப்பு இளவயதுதான். உடற்கட்டை நிர்ணயிக்க முடியாதபடி, ‘யூனிஃபோர்ம்’ நின்றது. பாதகமில்லை.
அவள், தானறியாமலே இவனுக்கு உதவலானாள்.
இவன் வலு சுத்தமாக அவளுடைய ‘யூனிஃபோர்ம்’, தொப்பி, எல்லாவற்றையும் தன் மனதாலேயே கழற்றிவிட்டான்.
கற்பனைகள் கற்பிதங்கள் எல்லாம், அவள் நேருக்கு நேரேயே நின்றதால், நிதர்சனம் போலவே இவனை எழுப்பி, ஊக்கப்படுத்தின.....
உச்சத்தை நோக்கி விரைந்த கணங்கள்.
எல்லாம் முடிந்தபோது, ‘அப்பாடா’ என்றிருந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அந்த நேர்ஸ் மீது பச்சாத்தாபமும் தன்னில் ஆத்திரமும் கொண்டான்.
*
தட்டச்சு : சென்ஷி
Dec 7, 2013
ஹார்மோனியம் - செழியன்
மதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில் நடந்து, செங்குத்தான மாடிப் படிகளில் ஏறி அந்த மேன்ஷனின் ஏழாவது அறையைக் கண்டுபிடித்தேன். ‘ஹார்மனி இசைப்பள்ளி’ என்று எழுதப்பட்ட, காய்ந்த கதம்ப மாலையிட்ட விளம்பரப்பலகை இருந்தது. வாசலில், இரண்டு தேய்ந்த ரப்பர் செருப்புகள் கிடந்தன. அறையின் உள்ளிருந்து ஊதுபத்தி வாசனையோடு ஹார்மோனிய இசை கேட்டது.
பண்டிட் கண்களால் என்னை அமர்த்திவிட்டு, ஹார்மோனியத்தில் ஊர்ந்த தன் விரல்களைத் தளர்த்தி நிறுத்தினார். அறையெங்கும் இசையின் அதிர்வு பரவித் தணிந்தது. பத்துக்குப் பனிரெண்டு அறை. சகல மதங்களுக்கான தெய்வங்களின் படங்களின் கீழே ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.
‘மியூசிக் கத்துக்கணும்...’
’உட்காருங்க. எங்கெ இருந்து வர்ரீங்க?’
‘சிவசங்கைலயிருந்து..’
அவரது விரல்கள் சப்தமில்லாது ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளின் மேலாக ஏதோ தேடுவதாகப் பாவனித்தன.
‘ம்.. சொல்லுங்க.. எங்கெருந்து. வர்ரேன்னு சொன்னீங்க..’
‘சிவகங்கையில இருந்து வர்ரேன். மியூசிக் கத்துக்கணும்னு ஆசை.’
‘என்ன பண்ணிட்ருக்கீங்க..’
‘வேல தேடிட்டிருந்தேன்.’
’நாள மறுநாள்....’ விரல்களில் ஏதோ கணக்குப் பார்த்தார். அஷ்டமி, என உதடுகள் முணுமுணுத்தன. ’வியாழக்கெழம அமாவாசை... அன்னிக்கே சேர்ந்திடுங்க... திங்கள் வியாழன் க்ளாஸ். வாரம் ரெண்டு க்ளாஸ். இருநூறு ரூபாய்.. சம்பளம் ஏற்கனவே மியூசிக் படிச்சிருக்கீங்களா’
‘இல்ல..’
‘வீட்ல யாராவது படிச்சிருக்கீங்களா’
‘இல்ல.. நான் தான் முதல்ல...’
’ஏன் கத்துக்கிடணும்னு நெனைக்கிறீங்க’
‘கத்துக்கணும்னு ஆசை’
ஹசன் பண்டிட் புன்னகைத்தார்.
வரும் திங்கள்கிழமையிலிருந்து வகுப்புக்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். நான் அறையைக் கடந்து மாடிப்படிகளில் இறங்குகையில் ஹார்மோனியத்தின் இசை மீண்டும் பரவியது. ஹார்மோனியத்தின் கட்டைகளின் ஊடே தயங்கி, தாவி, ஊர்ந்து, பின்வாங்கி ஸ்வரங்களைத் தேடும் அவரின் விரல்கள் என் நினைவில் வந்தன.
இருட்டத் துவங்கிவிட்டது. ஹசன் பண்டிட், இருட்டத் துவங்குகிற கறுப்பு. பாகவதர் போல தூக்கிச் சீவிய தலைமுடி. தீர்க்கமான சிறிய கண்கள். மீசையில்லாமல் சுத்தமாக மழித்த முகம். இசைக் கலைஞனுக்குரிய தேஜஸ்.
மொட்டை மாடியில் வெறுமனே மேகங்கள் பார்த்துக் கலையும் என் மாலைப் பொழுதுகள் இனி ஹசன் பண்டிட்டின் ஸ்வரங்களால் நிறையும் என நினைக்கையில் உற்சாகமாக இருந்தது.
திங்களன்று இசைவகுப்புகுப் போகிறோம் என்பதே எனக்குள் மிகுந்த பரவசத்தை அளித்தது. இரண்டு நீள அன்ரூல் நோட்டுக்கள் வாங்கிக் கொண்டேன்.
அன்று நடுத்தர வயதில் மேலும் இரண்டு பேர் நீள நோட்டுக்களுடன் காத்திருந்தனர். ஆசிரியர் அவர்களுக்கான வகுப்பு முடியும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னார். பக்கத்துக் கட்டிடத்திலிருந்த பேக்கரியில் இருந்து ரொட்டிகள் முறுகும் வாசனை இதமாய் இருந்தது. பச்சை நிற ரெக்ஸின் உறையினால் மூடப்பட்டு ஓரத்தில் இருந்த ஹார்மோனியத்தை ஒருவர் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் கவனித்தேன். அந்த அறையில் மொத்தம் மூன்று ஹார்மோனியங்கள் இருந்தன. ஹசன் பண்டிட்டின் ஹார்மோனியம் மட்டும் பெரியது.
‘ஜண்டை வரிசை வாசிங்க...’
ஸஸ ரிரி கக மம... எனத்துவங்கி ஹசன் பண்டிட் காட்டும் விரல் அசைவிற்கும் கைதட்டுதலுக்கும் ஏற்ப வேகம் இயல்பாய்க் கூடி.. சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறுமிகள் நடனமாடுகையில் அவர்கள் கையில் இருக்கும் வண்ண வண்ணமான ரிப்பன்கள் காற்றில் அலைவதைப் போல... ஸ்வரங்களின் நடனம். அலை அலையாய் மின்சாரம் போல அறையில் பரவும் இசை அதிர்வில் அந்த இடமே எனக்கு அற்புத உலகம் போல இருந்தது. அவர்கள் வாசித்து முடித்ததும் அதிர்வுகள் தணிந்து மௌனம் கவிந்தது. அவர்களுக்கான பாடக் குறிப்புகளை எழுதச் சொல்லிவிட்டு ஆசிரியர் என்னை அழைத்தார்.
எனது நீள நோட்டினை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து, கண்களை மூடிப் பிரார்த்தித்துவிட்டு, பெரிதாக பிள்ளையார் சுழி போட்டு என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினார்.
அறை நிசப்தமாய் இருந்தது.
கற்காலத்தில் இடுகாட்டில் கிடந்த எலும்புகளை ஊதி, சப்தங்களை எழுப்பிய கதையிலிருந்து துவங்கினார். தேர்ந்த கலைஞனின் அடவுகளைப் போல முகபாவனைகளாலும், விரல் அசைவுகளாலும் அவர் பேசப் பேச ஆதிமனிதனின் புதைமேடுகளில் கிடந்த எலும்புகளில் வண்டுகள் துளையிட்டுப் பறக்க.. காற்றின் சுழிப்பில், விசிறலில்.. இனந்தெரியாத சோகத்தோடு ஒரு குழலிசை புகையெனச் சுழல... அறை இருட்டிக் கொண்டே வந்தது. ஸ்வரங்களை வாசித்துப் பழகிய அவரது கறுத்த விரல்கள், காற்றில் கண்ணுக்குத் தெரியாத ஆர்மோனியத்தின் கட்டைகளை வாசிப்பது போல அபிநயித்தன. சூனியம் இல்லாத இருண்ட வனத்துக்குள் மயில்கள் அகவுகின்றன. அதிலிருந்து ஸட்ஜமம். கிரௌஞ்சப் பறவைகள் பாடுகின்றன. நிலா வெளிச்சத்தில் மூங்கில் துளிர்கள் தேடித் தின்ற களிறுகள் பாறைகளின் ஊடே தன் இணையை ஆளும் சுகத்தில் பிளிறுகின்றன. ஸ்வரங்கள் உயிர்த்து அசைகின்றன. கைலாயத்தில் நடனம் கொள்ளாது சிவனின் ஏழு தலைகளிலிருந்தும் ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு கதியில். இசைமுனி நாரதனின் வீணைத் தந்திகள் தாமாக அதிர்கின்றன.
ஸ ரி க ம ப த நி என ஏழு ஸ்வரங்கள். வேங்கட மகியின் பனிரெண்டு சக்கரங்கள். மேளகர்த்தாக்கள். எழுபத்திரெண்டு தாய். கோடிக்கணக்கான குழந்தைகள். திருவையாறின் பிரசன்ன வீதிகளில் தியாகையரின் தம்புரா அதிர்கிறது. காவேரியில் உதிர்ந்த நாகலிங்க மலர்கள் உயிர்த்துப் பறக்கின்றன. சியாமா சாஸ்திரியின் ஆலாபனை. முத்துச்சாமி தீட்சிதரின் ஸ்வரக்கட்டு. பனை ஓலைகளில் துளசிதாஸரின் எழுத்தாணி கீறி நகர்கிறது. சரளிவரிசை. ஹார்மோனியத்தின் கமகக் குழைவும் ஒரு காந்தர்வக் குரலுமாக...
ஸரிகம பா கம பா பா
கமபம நிதபம கம பக மகரிஸ
ஸா நித நீ தப தா பம பா பா
கம பத நித பம கமபக மக ரிஸ
ஸா ஸா நித நீநீதப தாதா பம பா பா
கமபத நிதபம கமபக மகரிஸ...
நான் மீண்டபோது எனக்கெதிரே நாற்காலி மட்டுமே இருந்தது. ஊதுபத்தியின் புகைவளையங்கள் சுழன்று திரிதிரியாய்ப் பிரிந்து மௌன ஆலாபனையாய்க் கலைந்தன.
‘ஸ்வரம் மாதா; லயம் பிதா
ஸ்வரமும் தாளமும் கூடிக் கூடிப் பிணைந்து, விலகி, ஸ்பரிசித்து.. தழுவி அணைத்து... துரித காலத்தில், விளம்பித காலத்தில் காற்றில்... காற்றுக்குள் நிகழும் கலவி. சூல் கொண்ட காற்று இசையாகிறது. மற்றதெல்லாம் உயிர்பிடிக்காது திரிதிரியாய்க் கலைகிற சப்தம். காற்றுதான் இசை. காற்றுதான் பிராணன். இசைதான் பிராணன். இசை கூடினால் தியானம். இசை கூடினால் ஞானம். ஜெபம் கோடி தியானம். தியானம் கோடி லயம். லயம் கொள். த்ருவம், மட்யம், ரூபகம், ஜம்பம், த்ருபுடம், அட, ஏகம் என ஏழு ராஜகுமாரர்கள். ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு தேவ கன்னிகைகள். ஏழு ராஜகுமாரர்களின் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு லயத்தில் குதித்து வருகின்றன. த்ருதம், அணுக்ருதம், லகு, புலுதம், காகபாதம் என சப்தக் கோவைகள். வண்ண வண்ணமாய் தொடுக்கப்பட்ட அட்சர மாலைகள். தக்கத்திமி தக்கத்திமி திமி திமியென.. காற்றின் புலனாகாத அரூப வெளியில் ராஜகுமாரர்களும் தேவகன்னியரும் மாலை சூழ சுயம்வரம் கொண்டு சூடித் திளைக்கிறார்கள்.
ஸ்வரம் மாதா; லயம் பிதா
கேட்பவை எல்லாம் ஸ்வரம்.. கேட்பவை எல்லாம் லயம். மேற்கூரையில் மழை பெய்கிறது. சட்டச் சட சட்டச்சட வென. திருபுட தாளம். பெய்து களைத்த மழை தாழ்வாரச் சருக்கத்தில் துளித்துளியாய்ச் சொட்டுகிறது ஏக தாளம். குழந்தை முனகுகிறது. மந்த்ர ஸ்தாயியில் கமகம். வீறிட்டு அலறுகிறது. தாரஸ்தாயி சஞ்சாரம். மணலைக் கயிறாய்த் திரிக்கிற மாதிரி காற்றை இசையாய் நெய்கிற ரச மந்திரம், சித்த மந்திரம். காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன். இயற்ற முடிந்தால் அதுதான் ஞானம். காற்றைக் கேள். கேட்கத் துவங்கு.’
காற்று முகத்தில் விசிற பேருந்தின் சன்னலோரம் அமர்ந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். காற்றிலும் இது பனிக்காற்று. பண்டிட்டைச் சந்தித்ததில் இருந்து என் சுவரில் இறுகியிருந்த சன்னல்கள் எல்லாம் தாமாகத் திறந்து கொள்வதாக உணர்ந்தேன். எனக்கான கிழமைகள் இசையென அதிர்ந்து அடங்குகையில் வியாழன் வந்திருந்தது.
சந்தன ஊதுபத்தியின் வாசனை ஈஸ்ட்டில் முகிழ்த்த மென் ரொட்டிகள் ஓவனில் முறுகும் வாசனை. ஹார்மனி இசைப்பள்ளி.
‘வணக்கம்.’
தன் ஹார்மோனியத்தின் முன் அமர்ந்து இசைக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த ஹசன்பண்டிட் நிமிர்ந்தார்.
‘உட்காருங்க.. ஒரு நிமிஷம்’ ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளில் ஐந்து விரல்களையும் விரித்து, சப்தம் வராமல் தொட்டுத் தொட்டுக் குறிப்புகள் எழுதிக் கொண்டு இருந்தார். அவர் தலைக்குப் பின்னால் மஞ்சள் சட்டமிட்ட மும்மூர்த்திகளின் படம் தொங்கிக் கொண்டிருந்தது.
‘போன வகுப்புல நடத்துன பாடத்தைப் படிச்சுப் பார்த்தீங்களா..’
‘படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சு.’
‘க’ங்கற ஸ்வரத்தோட பெயர் சொல்லுங்க’
‘காந்தாரம்’
‘நல்லது. ஸரளி வரிசைல பயிற்சி கொடுத்திருந்தேன். பாடம் பண்ணிட்டீங்களா’
‘இன்னும் பண்ணலை..’
‘ஏன்... பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லையா’
என்னிடம் ஹார்மோனியம் இல்லை என்பதை அவரிடம் சொன்னேன்.
‘அதனாலென்ன.. ஒண்ணு வாங்கிடுங்க. பெட்டி கையில இருந்தா சாதகம் பண்ண வசதியா இருக்கும். போகப் போக பாடங்கள் நிறையாப் போயிடும். கீ போர்டு கூட பெறகு வாங்கிக்கலாம். முதல்ல ஒரு பெட்டி பழசா இருந்தாக்கூட பாத்து வாங்கிடுங்க.’
வேலையில்லாமல் வகுப்புக்கு வருவதே சிரமமான நிலையில் பெட்டி வாங்க முடியுமென்று எனக்குத் தோணவில்லை.
’சங்கீதத்தை ‘ஹராம்’னு குரான்ல சொல்லியிருக்கும். அதனால எங்க வீட்ல என்னைய சங்கீதம் கத்துக்க விடல. அப்ப பத்தொன்பது வயசு எனக்கு. சீனிவாஸ சாஸ்திரின்னு ஒரு பண்டிதர். மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல இருந்தார். அவருக்கு சகல பணிவிடையும் செஞ்சு கத்துக்கிட்டேன். ஏன் சொல்றேன்னா.. மனசு இருந்தா மார்க்கம் உண்டு. ஞானத்தைக் கொடுத்தவன் அதுக்கான கருவியை ஒளிப்பானோ? எல்லாம் கெடைக்கும்’
அன்று மாயாமாளவ ராகத்தில் ஸரளிவரிசையின் மீதமுள்ள பாடத்தை அவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டேன். அவரது ஹார்மோனியத்தை என் பக்கம் திருப்பி வாசிக்கச் சொன்னார்.
‘இது ஸட்ஜமம். ஸட்ஜமத்துக்கு கட்டைவிரல். இடது கையில் பெல்லோஸ் போட வேண்டும். இதிலிருந்து எழும்புகிற காற்று ஹார்மோனியத்தின் உள்ளறைகள்ல போய்த் தங்குது. நாம ஒரு கட்டைய அழுத்தும்போது, உள்ள அடைபட்ட காற்று துளையின் வழியே வெளியேறும். அப்படி வெளியேறும்போது அந்தத் துளையில் இருக்கிற ரீடு, நாக்கு மாதிரி இருக்கும். அது அதிரும். அதுதான் நாதம். எங்க... ஸட்ஜமம் வாசிங்க’
இடது கை பெல்லோஸ் அழுத்த, பதட்டத்துடன் கட்டைவிரலால் ஸட்ஜமம் தொட்டேன். புதரிலிருந்து சாம்பல் குருவிகள் விடுபட்டுப் பறப்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு. அடுத்து சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம் என ஒவ்வொரு விரலாக அழுந்த ஹார்மோனியம் விதவிதமான தொனியில் என்னுடன் பேச முயல்கிறது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்ல?
‘சப்தங்கள் எல்லாம் ஸ்வரம். ஏற்கனவே சொல்லியிருக்கேன். உலகத்தின் சப்தங்கள் எல்லாம் ஏழு ஸ்வரத்தில் அடக்கம்.’ அருகிலிருந்த டீ கிளாஸை ‘ணங்’கென்று மேடையில் வைத்தார். ‘இது ஒரு ஸ்வரம்’ காற்றில் சன்னலின் திரைச் சீலைகள் சரசரத்தன. ‘இதுவும் இசை’.
பேருந்தில் ஊருக்குத் திரும்பும்போது மழை பெய்தது. மழை எத்தனை பெரிய இசைக்கருவி. எத்தனை தந்திகள் கொண்ட வயலின். சதா சுழன்று கொண்டே இருக்கும் பூமி எத்தனை பெரிய இசைத்தட்டு. குளத்து நீரில் நிலா வெளிச்சம் வீணைத் தந்தியாய் நலுங்குகிறது. அதனதன் இசை. எனக்கு பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் பிரமிப்பாய் இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் காதுகளுக்கான உலகம். காற்றைக் கேள். இதுதான் சப்தங்களின் வாகனம். கேட்கத் துவங்கு.
திங்கள் - வியாழன், திங்கள் - வியாழன் என கிழமைகள் இசைபடக்கழிந்தன. இன்னும் ஹார்மோனியம் வாங்க முடியவில்லை. ஸரிகம ரிகஸரி என்று ஸ்வரங்கள் தாவித் தாவி நடனமிடும் தாட்டு வரிசை வந்துவிட்டது. என் கிழமையில் வகுப்புக்கு வரும் ஷங்கர கோடி, நேற்றுதான் பத்தாயிரம் ரூபாய்க்கு புது கீ-போர்டு வாங்கி வந்திருந்தார். அதில் கடல் அலைகளின் உறுமலையும், பின்னிரவில் எழும் சில்வண்டுகளின் ஓசையைக் கூட எழுப்ப முடிந்தது. ஆச்சர்யம் ஒரு புறம், இயலாமை ஒரு புறம். இசைக்கருவி இல்லாமல் வகுப்பை மேலும் தொடர்வது அயற்சியாக இருந்தது. மதுரை, கூலவாணிகன் தெருவில் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.
‘என்ன சார்... எப்படியிருக்கீங்க?’
’நல்லாயிருக்கேன் ஷாஜகான்...’
‘என்ன இந்தப்பக்கம்... ஏறுங்க வண்டில..’
வாகன வேகத்தில் புறந்தலையின் வியர்வை உலர்வது இதமாக இருந்தது. டவுன்ஹால் ரோட்டின் பழமுதிர்ச்சோலையில் ஆளுக்கொரு ஆப்பிள்சாறு.
’இப்ப... எங்க வொர்க் பண்றீங்க?’
‘வேலையில்ல ஷாஜகான். சும்மாதான் இருக்கேன்.’
’ஜோல்னாப் பையும் அதுவுமா மதுரையில என்ன பண்றீங்க’
‘மியூசிக் கிளாஸ். கீ போர்டு கத்துட்டிருக்கேன்.’ வேலையில்லாமல் மியூசிக் கற்றுக் கொள்வதைச் சொல்ல சற்றே குற்ற உணர்வாக இருந்தது.
‘ஓ.. இன்ட்ரஸ்டிங்... பாட்டெல்லாம் வாசிப்பியா’
‘இல்ல. இப்பதான் ஒரு மாசமா...’
‘எனக்கும் மியூசிக்ல இன்ட்ரஸ்ட். உனக்குத் தான் தெரியுமே. நானும் ஒரு பத்துநாள் மியூசிக் கிளாஸ் போனேன். அதோட சரி... எல்லாத்திலேயும் பாதிக்கிணறுதான். சரி... இன்ஸ்ட்ருமெண்ட் என்ன வச்சிருக்க..’
’இனிமேதான் வாங்கணும். பழையதா ஆர்மோனியம் தேடிட்டிருக்கேன்’
ஷாஜகான் சிரித்தார்.
‘சரி... வாங்க வீடு வரைக்கும் வந்துட்டுப் போகலாம்’
‘இல்ல ஷாஜகான் இன்னொருமுறை..’
’ஏறுங்க.. புதுவீடு கட்டிட்டு நீங்க வரவேயில்ல’
என்னை ஹாலில் அமர்த்திவிட்டு உள்ளே போனவர், வரும்போது சிறிய மரப்பெட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். ஹார்மோனியம் என்று பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. என் எதிரில் வைத்து மேலிருந்த தூசியைத் துடைத்தார். மரப் பலகையில் கீல் வைத்த மூடி இருந்தது. ஹார்மோனியப் பெட்டியின் மூடியைத் திறந்ததும், காவியேறிய பல்வரிசையுடன் பாகவதர் ஒருவர் சோகமாகச் சிரிப்பது போலிருந்தது. ரொம்பவும் பழமையானது. வெள்ளைக் கட்டைகளில் மைக்கா ஒட்டப்பட்டிருந்தது. அதன் முனைகள் உடைந்து நிறம் பழுப்பேறியிருந்தது. ஹார்மோனியத்தின் இருபுறமும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வெண்கலக் கைப்பிடி இருந்தது. முன்பக்கம், காற்றறைகளைத் திறந்து ஒலியின் அளவைக் கட்டுப் படுத்தும் இழுவைத் திறப்புகள் நான்கு இருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக நுனியில் வெள்ளைப் பளிங்குக் குமிழ்கள் பெரிய பொத்தானைப் போல இருந்தன. பார்த்த உடனேயே அது சிங்கிள்ரீட் பெட்டி எனத் தெரிந்தது. கீழே ஏதும் பழுதடைந்திருக்கிறதா என்று குழந்தையைப் போல இருகைகளாலும் தூக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது. கீழே வைக்கும்போதுதான் பார்த்தேன். இரண்டு பளிங்குக் குமிழ்களுக்கு இடையில் ஏதோ பெயர் பொறிக்கப் பட்டிருப்பதைப் பார்த்து, தூசியைக் கைகளால் துடைத்தேன். ‘எட்டுக்கட்டை முருகசிகாமணிப் பாகவதர், கண்டரமாணிக்கம்’ என்றிருந்தது.
ஹார்மோனியத்தின் மத்திம ஸ்தாயியில் வெள்ளை கறுப்பு நோட்டுகளின் மேலே ஸ்வரங்கள் எது என்று அறிய, அடையாளத்திற்காக ஸ,ரி,க,ம,ப,த,நி, என்று சிறிய சதுரமான காகிதத்தில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது. நல்ல தேக்கு மரத்தால் ஆன ஜெர்மன் ரீட் பெட்டி. பெல்லோஸ் காற்றுக் கசியாமல் கச்சிதமாய் இருந்தது.
‘ரொம்பப் பழைய பெட்டி. எல்லா நோட்டும் பேசுமா.’
’புரியல.’
’எல்லா கட்டையும் வாசிச்சா சத்தம் வருமா.. பழுது இருக்கான்னு’
‘வாசிச்சுப் பாரேன். நான் தொட்டே ரெண்டு வருஷம் ஆச்சு. எப்பவாவது எடுத்து துடைச்சு வச்சிடுவேன். ஒரு மாசமா அதுவும் இல்ல. பக்கத்துல வீடு எதுவும் இல்லையா. வாசிச்சா பாம்பு வரும்னு அம்மா இதைத் தொடவே விடறதில்ல. அப்படி என் இசையைக் கேட்டு பாம்பாவது வரட்டுமேன்னு மொட்டைமாடிக்கு தூக்கிட்டுப் போயி வாசிப்பேன். அந்த முருகசிகாமணி பாகவதர் ஒரு பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தாரு. அதுவும் இப்ப பாதி மறந்துபோச்சு’
ஷாஜகான் மனைவி கொடுத்த ஏலக்காய் தேநீரை அருந்தும்போது வலதுகையால் ஹார்மோனியத்தின் கட்டைகளை மெதுவாக வருடிப் பார்த்தேன். கட்டைகள் ஒன்றுக்கொன்று பிடிக்காமல் இலகுவாய்த்தான் இருந்தன.
‘சும்மா வாசிச்சுப் பாருப்பா. இங்கே குடு. நானே வாசிச்சுக் காட்டிர்ரேன்’ ஷாஜகான் அவர் பக்கம் திருப்பி, கீழ்ஸ்தாயியிலிருந்து ஒவ்வொரு கட்டையாக அழுத்திக் கொண்டே வந்தார். மணிமணியான ஸ்வரங்கள். கொஞ்சமும் பிசிறில்லாமல் காத்திரமாக இருந்தது.
‘சவுண்டு சும்மா ஏழு வீட்டுக்குக் கேக்கும். அந்த பாகவதர் தன்னோட சொத்துப் போல இதை வச்சிருந்தாரு. என் ஆர்வத்தைப் பாத்தாரு. அவருக்கு ஆஸ்த்மா. மாத்திரை வாங்கக்கூட காசில்ல. வறுமை. கடேசீல நீயே இதை வச்சுக்கன்னு கொடுத்திட்டாரு’
‘எவ்வளவுக்கு வாங்குனீங்க’
’அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா குடுக்கும்போது ஒண்ணு மட்டும் சொன்னாரு. இது நான் பழகுன பெட்டி என் தெய்வம். ஆசைப்பட்டுக் கேக்குறியேன்னு குடுக்கிறேன். நூலாம்படை மட்டும் அடையவிட்றாத. இது சரஸ்வதி. வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா. அவரு சொன்னதையே நான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தா, வச்சிக்க. வாசிச்சுப் பெரிய ஆளா வா’
அவர் சொன்ன விதம் நெகிழ்ச்சியாக இருந்தது.
‘எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா.. ஒரு வாரத்துல..’
‘சரி நூறு ரூவா குடு. இசைக்கருவியை சும்மா குடுக்கக் கூடாது’
’இல்ல எவ்வளவுன்னு சொல்லுங்க..’
‘நான் வாங்குனதே அவ்வளவுக்குத்தான். போதுமா’
மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். தனக்குத் தெரிந்த ஒரே பாடலான ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’ என்கிற பாடலின் பல்லவியை மட்டும் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு சரளமில்லாமல் வாசித்துக் காண்பித்தார். நியூஸ் பேப்பர் போட்டு நைலான் கயிறால் கட்டி, கைகளால் தொட்டு வணங்கி, கழுத்து நிற்காத பச்சைக் குழந்தையை கையில் தருவது மாதிரி பதமாகத் தந்தார். நன்றி சொல்லி விடை பெற்று வெளியே வருகையில் நிலா வெளிச்சம் தார்ச்சாலைகளை மெழுகியிருந்தது. கையில் ஹார்மோனியத்தின் பாரம். நைலான் கயிறு அழுத்த கைமாற்றிக் கொண்டேன். இசைக் கருவியின் மௌனம் கனக்கிறது. தன்னை வாசிக்க விரல்கள் இல்லாமல் இருட்டறையில் இத்தனை ராகங்களோடும் இத்தனை ஸ்வரங்களோடும் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தியானம். வாசிக்கப்படாதபோது இசைக்கருவிகள் என்ன உணர்கின்றன?
எனக்குப் பிடித்தமான சன்னலோரப் பயணம். தூங்குகிற குழந்தையைப் போல அமைதியாக மடியிலிருக்க எனக்குள் ஏதோ பொறுப்புணர்வு கவிவதாக உணர்கிறேன். பாட்டியின் மந்திரக் கதைகளில் வரும் சொர்க்கபுரத்து இளவரனைத் திருமணம் செய்ய, தேவதைகள் காற்றும் எனும் பரத கணத்தோடு சேர்ந்து சூறாவளியாய் மாறித் துரத்துவது போல, முகத்தில் விசிறும் காற்று ‘என்னை இசையாக மாற்று’ என்று என்னையும் எனது ஹார்மோனியத்தையும் பயண வேகத்தோடு துரத்திக் கொண்டே வருவதுபோல் இருந்தது.
வீட்டுக்குள் ஹார்மோனியத்தைத் தூக்கி வந்தபோது எல்லோரும் விநோதமாகப் பார்த்தனர். ஹாலின் மையத்தில் வைத்து சுற்றியிருந்த காகிதத்தைப் பிரித்தேன். ஹார்மோனியத்தின் வருகை யாருக்கும் சந்தோஷத்தையோ, துக்கத்தையோ தரவில்லை. தொட்டு வணங்கிவிட்டு ஸரளிவரிசை வாசிக்கலாம் என யோசித்தேன். சின்ன வீடு. இந்த இரவு நேரத்தில், வேலையில்லாத இளைஞன் நடுவீட்டில் அமர்ந்து ஹார்மோனியம் பழகுவது யாருக்குப் பிடிக்கும். தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.
நாளை பௌர்ணமி. வெளிச்சம் இதமாக இருந்தது. அடுத்த இசை வகுப்புக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. ஹார்மோனியத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டேன். கீழ்ஸ்தாயியின் ஸட்ஜமத்தைத் தொட்டேன். இருட்டறையில் நெடுநாள் பூட்டியிருந்த கதவு திறப்பது போலிருந்தது. நடுவிரலால் பஞ்சமம். சுண்டு விரலால் மத்திமஸ்தாயி ஸட்ஜமம். மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து.. பூவைச் சுற்றும் கதம்ப வண்டு மாதிரி காற்றின் அரூப அடுக்குகளில் இருந்த ஸ்வரங்கள் ஹார்மோனியத்தைச் சுற்றி மொய்க்கின்றன. குரல் சேர்த்துப் பாடி சுதி சேர்த்துப் பார்த்தேன். சுதியோடு ஒட்டாது கலைந்த குரல், பிசிறு தேய்ந்து தேய்ந்து சுதி சேரும் கணத்தில்... மின்சாரம்.. சட்டென வீசிய காற்றில் என் உடல் சாம்பல் குவியலெனக் கலைந்து, குரல் மட்டும் நானாக மிஞ்சுகிறது. பிறகு குரலும் என்னுடையதில்லாமல் போக வெறும் ஸ்வரங்கள் அந்தரத்தில் இசை கூட்டிக் கொண்டு அதிர்கின்றன. ஸா பா ஸா.
தயங்கித் தயங்கி ஸரளி வரிசை. சவுக்க காலம், விளம்பியதம், துரித காலங்கள். ஜண்டை வரிசை. ஸ்வரங்களின் அடுக்கு. ஒன்றின் நிழலாய் அதே ஸ்வரம். விரல்கள் தளர்ந்து ஓர் இலகு கூடி வருகிறது. பூர்வாங்கத்தில் முன்னேறிப் பதுங்கி, உத்தராங்கத்தில் தாவி ஒரு ஸ்வரம் தொட்டு ஆரோகணித்து காற்றில் துவளும் துணியென மெதுவாய் அவரோகணம். ஸட்ஜமத்தில் இளைப்பாறி மேல்ஸ்தாயி வரிசை. தாட்டு வரிசை. ஸ்வரங்கள் துரித கதியில் பின்னிப் பின்னி பூத்தொடுக்கும் விரல்களின் அனிச்சை கொண்டு, ஹார்மோனியத்தின் கட்டைகளும் விரல்களும் ரகசியம் பேசி, குழைந்து, விலகிச் சீண்டி, கமகமெனத் தடவி ஸ்வரங்கள் அலைந்து மெது மெதுவாய் எழும்பி நுரைத்துப் பின்வாங்கி அலைகொண்டு எழும்பி அடித்துச் சிதறியது. பாற்கடல். ஹார்மோனியம் மிதக்கிறது. கால்கள் கடற்கன்னியின் செதில்களெனக் குழைய நான் நீந்துகிறேன். மொட்டை மாடியில் தங்க நிற மீன்கள் என் முகம் உரசி இடம் வலமாய் நீந்துகின்றன. சமுத்திரம் கொள்ளாத இன்னொரு அலை. ஹார்மனி இசைப்பள்ளியின் சாத்திய ஊதா நிறக் கதவில் அலைமோதி தண்ணீர் பொரிகளாய்ச் சிதறி விழுகிறது. கதவைத் திறந்தால் பாலைவனம். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை மணல். புழுதிக் காற்று முகத்தில் அறைகிறது. எங்கோ தொலைவிலிருந்து அரபி மொழிப் பிரார்த்தனைப் பாடல் மிதக்கிறது. மணல்வெளியெங்கும் அலை அலையாகப் பாம்புகள் ஊர்ந்த தடமென காற்றின் சுவடுகள். காற்று கானலென நெளிகிறது. வெளியிலும், மணலிலும் காற்றின் லிபிகள். சற்றே தொலைவில் இரண்டு ஹார்மோனியங்கள் இருக்கின்றன -
துகள் துகளாக மணல் விசிறுகிறது. மணலுக்குள் கை புதைத்துக் கொண்டு ஹசன் பண்டிட் என்ன செய்கிறார். காற்று விசிற விசிற புதைந்த மணலிலிருந்து மீள்கிறது அவரது ஹார்மோனியம். அவரது விரல்கள் வாசித்துக் கொண்டே இருக்கின்றன.
‘பண்டிட் ஐயா... தீபக் என்ற தான்சேனின் ராகத்தை தாங்கள் வாசிக்க முடியுமா?’ ஹசன் பண்டிட்டின் விரல்கள் நின்று தயங்கின. பிறகு விரல்கள் காற்றில் தாமாக ஒத்திகையென அசைந்து பார்த்த கணத்தில் ஹசன் பண்டிட் வாசிக்கத் துவங்கினார். வாசிக்க வாசிக்க.. பஞ்சமத்தின் கட்டையிலிருந்து துளிர் நெருப்புப் பற்றுகிறது. எரியத் துவங்குகிறது ஹார்மோனியம். காற்று சிலிர்க்கிறது. பண்டிட்டின் விரல்கள் மெழுகுதிரி போல் பற்றிக் கொள்கின்றன. ஹார்மோனியம் முழுதும் எரிந்துவிடுமுன் அதன் ஸ்வரக் கட்டைகளைப் பிடுங்கி எடுக்கிறேன். புகை வளையங்கள் பெரிது பெரிதாய்ச் சூழ்ந்து மறைக்கின்றன. மணல் குன்றுகளில் கால் சறுக்க ஓடுகிறேன். கையில் இறுக்கிப் பிடித்திருந்த ஸ்வரக் கட்டைகள் உருவி விழ என்னிடம் ஒரே ஒரு வெள்ளைக் கட்டை மட்டும் இருக்கிறது. அதன் மேல் சிறிய சதுரமான காகிதத்தில் ‘க’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.
’ஒரு ஸ்வரத்தால் ராகம் இயற்ற முடியுமா பண்டிட்ஜி... அதுவும் என்னிடம் இருப்பது அந்தர காந்தாரம் மட்டும். முடியுமா பண்டிட்ஜி.’ பாலைவனம். முழுக்க நெளியும் பாம்புத் தடங்களுக்குள் என் பதட்டமான காற்சுவடுகளும் ஹார்மோனியத்தின் ஸ்வரக்கட்டைகளும் இறைந்து கிடக்கின்றன.
பச்சை ரெக்ஸின் போர்த்தி ஒரு உருவம் படுத்திருக்கிறது. எழுப்பினேன். ஜடைமுடி வளர்த்த பாகவதர்.
‘ஐயா.. என்னிடம் அந்தரகாந்தாரம் மட்டும் வாசிக்கக்கூடிய ஸ்வரக்கட்டை இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு ஹார்மோனியம் தர முடியுமா?’
‘தருவேன்..’
பச்சை ரெக்ஸினை முழுவதுமாக விலக்கியதும், உள்ளங்கையில் வைக்கும் அளவுக்கு தந்தத்தால் ஆன வெண்மையான குட்டி ஹார்மோனியம் இருந்தது.
‘இது ஆலங்கட்டி மழையோடு சேர்ந்து வானத்திலிருந்து தவறி விழுந்தது. உனக்கு வேண்டுமா?’
‘வேண்டும். ஆனால் ரொம்பவும் சிறிதாக இருக்கிறதே’
‘நீ வாசிக்க வாசிக்கப் பெரிதாகும். தருகிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நீ ஒன்று தர வேண்டும்’
‘என்ன..?’
‘உன் கையில் உள்ள பத்துவிரல்களையும் தர வேண்டும்’ சொன்னவனின் கைகள் இரண்டு கட்டைகளின் முனையைப் போல விரல்களற்றுத் தீய்ந்திருந்தன. முன் புஜத்தில் முருகேசபாகவதர் என்று பச்சை குத்தியிருந்தது.
பண்டிட்ஜி என்று கத்திக் கொண்டே கானல் நீருக்குள் ஓடத் துவங்கினேன். கால்கள் பதியும் புதைமணல். எதிரே பச்சை நிறத்தில் அலைகள். சுழித்துக் கொண்டு ஆக்ரோஷத்துடன் பாலைவனத்தைக் கடல் கொள்ள வருகிறது அலை. மணற்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. என் கையில் உள்ள ஸ்வரக்கட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அலறுகிறேன். அலை முகத்தில் அடித்துச் சிதற பிறகு எல்லாம் கடல். கடற்குதிரைகளுடன் நீந்துகிறேன். என்னிடமிருந்த ஸ்வரக்கட்டை மீனாக மாறிப் பிடியிலிருந்த நழுவுகிறது. சமுத்ரத்தின் நீலப் பச்சை வெளியிலிருந்து குமிழிகள் பறக்க ஒரு ஹார்மோனியம் மிதந்து வருகிறது. இடது கையால் ஹார்மோனியத்தைப் பற்றி அணைத்துக் கொண்டு வலது கையால் வாசித்துக் கொண்டே வெளிச்சம் புகாத கடலின் அடி ஆழத்தில் நீந்திச் செல்கிறேன். நீரில் ஆழ்ந்த மலைத்தொடர்ச்சிகளின் படர்ந்த உப்புப்பாறைகளின் மேலே வரிவரியாய் மேற்கத்திய இசைக்குறிப்புகள். சுரங்கத் தொழிலாளி போல நெற்றியில் விளக்கைக் கட்டிக் கொண்டு உப்புப் பாறைகளின் மேல் இசைக்குறிப்புகளை ஹசன் பண்டிட் வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
‘இன்று திங்கட்கிழமை பண்டிட்ஜி’
‘அதனாலென்ன... இது புதைந்த நகரங்களுக்கான இசை வகுப்பு’
நீந்துவதான பாவனையில் கால்கள் உதறி விழிக்கையில், கடல் வற்றிப் போய் தரைதட்டி எழுந்தது மாதிரியான உணர்வு. பனிவிழும் மொட்டைமாடியின் சிமிண்ட் தரையில் படுத்திருந்தேன். சமுத்ரமாய் அலைந்த நீர் எதிரே கண்ணாடி டம்ளரில் சலனமில்லாமல் இருந்தது.
கீழே வீட்டில், எல்லோரும் தூங்கியிருந்தார்கள். அயற்சியாக இருந்தது. எனக்கென அடுப்படியில் மூடி வைக்கப்பட்டிருந்தது இரவுக்கான உணவு.
காலையில் திரும்பவும் தாட்டு வரிசை வாசித்துப் பார்க்க வேண்டும். ஹார்மோனியத்தின் வெள்ளைக் கட்டைகளில் நாள்பட்ட தூசு படிந்து அழுக்கேறிப் போயிருக்கிறது. திருகாணிகள் எல்லாம் துருவேறியிருக்கின்ற பெல்லோஸ் கொஞ்சம் துடைத்துச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.
காலையில் ஹார்மோனியத்தைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். முத்துவிநாயகம் வந்திருந்தான்.
’என்னப்பா பாகவதர் ஆகப் போறியா? இதெல்லாம் வீட்ல இருந்தாலே தரித்திரம்’
அவனை நான் பொருட்படுத்தாது என் அன்பிற்குரிய ஹார்மோனியத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒரு திருப்புளி, பழைய துணி, சின்னக்குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். தூசியைத் துடைத்ததும் துணியைத் தண்ணீரில் நனைத்து வெள்ளைக் கட்டைகளைத் துடைத்தேன். விரல் படாமல் குருட்டு அழுக்கு ஏறிப்போய் இருந்தது. திட்டுத் திட்டாய் கறை படிந்தது போல அழுக்கு. என்ன துடைத்தாலும் அப்படியே இருந்தது. துருப்பிடித்து இறுகிப் போன திருகாணிகளைக் கஷ்டப்பட்டுக் கழற்றினேன். ஸ்வரக் கட்டைகளின் மேலே அழுத்திக் கொண்டிருந்த மரச்சட்டதைக் கழற்றினேன். இப்போது ஸ்வரக் கட்டைகளை கழற்றுவது எளிதாக இருந்தது. அவற்றின் கீழே சிலந்தி இழைகளும், தூசியும், எள்ளுப் போன்ற எச்சங்களும் இருந்தன. வாயால் ஊதிப் பார்த்துத் துடைத்தும் தூசி போகவில்லை. ஹார்மோனியத்தில் இருந்த கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அனைத்தையும் வரிசைப்படி தரையில் அடுக்கி வைத்தேன். தரையில் அந்த வரிசை அழகாக இருந்தது. உள்ளிருந்த பித்தளை ரீடுகளில் Made in German என்று பொடியான எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சின்னதிலிருந்து துவங்கி பெரிது பெரிதாக ரீடுகள் அழகாக அறையப்பட்டிருந்தன. அஞ்சறைப் பெட்டியைப் போலிருந்த ஹார்மோனியத்திலிருந்து ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் குமிழ்களை இழுத்து மெதுவாகக் கழற்றினேன். கம்பி மிகவும் துருவேறிப் போய் இருந்ததால் இழுப்பது சிரமமாக இருந்தது. ஹார்மோனியத்தின் உள் அறையில் இரண்டு அந்துப் பூச்சிகள் வெளிறிப் போய் உயிரோடிருந்தன. முருகேச பாகவதரின் காத்திரமான இசைகேட்டு இவை வளர்ந்திருக்கலாம் அல்லது அவரது இசையின் அதிர்வில் உயிர்பிடித்து மிஞ்சிய ராகங்களாக இருக்கலாம். எதுவாயினும் ஹார்மோனியத்தின் உள்தட்டு அறையின் இருட்டுக்குள் இசையுடன் காதல் கொண்டு வாழ்வது எவ்வளவு அற்புதமானது. லேசாகப் பக்கவாட்டில் தட்டியதும்... மறைந்த இசை குறித்து நீண்ட கனவில் இருந்த இரண்டு அந்துப் பூச்சிகளும் வெளிச்சம் பொறுக்காது வெளியேறி ஓடின.
காற்றுத் துருத்திகளின் உள்ளேயிருந்த தூசியினைத் துடைத்தேன். ஹார்மோனியம் இப்போது ஸ்வரக் கட்டைகள், குமிழ்கள், திருகாணிகள், மரச்சட்டங்கள் எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஹார்மோனியத்தின் வெளிப்புறமும், உட்புறமும் மரப்பலகையின் தன்மையை இழந்து நிறம் வெளிறிப் போயிருந்தது. ஸ்வரக் கட்டைகள் திரும்பவும் வெற்றிலைக் காவியேறின பல்வரிசையை நினைவுபடுத்தின. அந்த நிறமே வெறுக்கத் தக்கதாக இருந்தது.
அப்போதுதான் திடீரென எனக்கு அந்த யோசனை வந்தது. புதிதாக மாற்ற பெயிண்ட் அடித்தால் என்ன?
ஐம்பது மி.லி. ஆசியன் வெள்ளை, கறுப்பு வண்ணமும் வார்னிஷும், கடைக்காரரின் ஆலோசனைப்படி மென்மையான உப்புத்தாளும் சின்னதாக தூரிகையும் வாங்கிக் கொண்டேன்.
ஸவரக் கட்டைகளை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்து வரிசைப்படி அடுக்கி கிரமம் மாறாமல் இருக்க அவற்றின் பின்புறம் பென்சிலால் எண்கள் குறித்துக்கொண்டு, அக்கா எனக்கு நெயில் பாலிஷ் போட்டுவிடுவது மாதிரி இதமாக கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கு வண்ணம் பூசினேன். ஹார்மோனியப் பெட்டிக்கு வார்னிஷ் அடித்து நிழலில் காய வைத்தேன். திருகாணிகள் புதிதாக வாங்கி விட்டேன். எல்லாம் முடிக்க பதினோரு மணியாகி விட்டது. இன்று திங்கட்கிழமை. மாலை இசை வகுப்பு. இன்று இசைவகுப்புக்கு எடுத்துப் போய் ஹசன் பண்டிட்டிடம் என் புது ஹார்மோனியத்தில் ஸரளி வரிசை வாசித்துக் காட்ட வேண்டும்.
மதியம் மூன்று மணியளவில் ஸ்வரக் கட்டைகள் உலர்ந்திருந்தன. ஹார்மோனியம், வார்னிஷ் அடித்ததும் தனது மர வண்ணத்துக்குத் திரும்பி அழகாய் இருந்தது. இழுப்புக் குமிழிகளைப் பொருத்தி, ஸ்வரக் கட்டைகளை வரிசைப்படி அடுக்கினேன். அடுக்க, அடுக்க மெருகு கூடிக் கொண்டே வந்தது. ஹார்மோனியம் புத்தம் புதிதாகி விட்டது. என்ன அழகாய் இருக்கிறது. ஒருமுறை கீழிருந்து உச்சஸ்ஹாயி வரை ஆரோஹணம், அவரோஹணம் போய்த் திரும்பலாம் போல இருந்தது. கட்டைகளைத் தொடுவதே, மெதுரொட்டியைத் தொடுவது போல் இதமாக இருந்தது. மணி ஐந்தாகிவிட்டது. எப்போதும் மூன்றரை மணிக்கே மதுரைக்குக் கிளம்பி விடுவேன். அவசர அவசரமாக திருகாணிகளைப் பொருத்தினேன். வாசிக்கவும் இப்போது நேரமில்லை. முதன் முதலில்... ஹசன் பண்டிட்டின் ஆசீர்வாதம் பெற்று அவர் முன்னிலையில் வாசித்துக் காட்டுவதுதான் சாங்கியமானது என்று மனதுக்குள் பட்டது. அவரும் சந்தோஷப்படுவார்.
ஆங்கிலத் தினசரியில், ஹார்மோனியத்தைச் சுற்றி நைலான் கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு மதுரைப் பேருந்தில் ஏறினேன்.
ஹசன் பண்டிட்டின் அறைக்கு வரும்போது மணி ஏழாகி விட்டது. அவர் இசை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தின் நகல் பிரதியை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, புத்தகத்தை மூடிவிட்டுப் புன்னகைத்தார்.
அறையில் மென் ரொட்டிகளின் வாசனையும் ஊதுபத்தியின் சந்தன வாசனையுமாக ரம்மியமாக இருந்தது.
என் தாமதம் குறித்து அவர் கேட்கத் துவங்குமுன், நண்பர் ஒருவரிடமிருந்து ஹார்மோனியம் வாங்கி விட்டேன் என்று சந்தோஷம் பொங்கச் சொன்னேன். நைலான் கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்க ஹசன் பண்டிட் உதவினார். நான் மூடியிருந்த தாள்களைப் பிரித்தேன்.
‘ஜெர்மன் ரீடு பெட்டி. ரொம்பப் பழசா இருந்துச்சு.. அதான்’
ஹசன் பண்டிட் புரிந்து கொண்டு சிரித்தார். நான் அவரது ஆசீர்வாதம் கோரினேன். ஸ்வரங்களைக் குறிக்கும் கறுப்பு விரல்களால் ஹசன் பண்டிட் என் தலையைத் தொட்டார்.
’சார்... உங்களுக்குப் போன்’ கீழே மேன்ஷன் மேலாளரிடமிருந்து அழைப்பு வர ‘வாசிங்க வந்துர்ரேன்’ என்று சொல்லிவிட்டு ஹசன் பண்டிட் படிக்கட்டுகள் நோக்கி நடந்தார்.
எதிரே இருக்கும் மும்மூர்த்திகளின் படத்தைப் பார்த்தேன். இசை தவழும் அறையின் தியானத் தன்மையை மனதில் நினைந்து கண்கள் மூடி வணங்கினேன். ஹார்மோனியத்தைத் தொட்டு வணங்கிவிட்டு இடது கையால் பெல்லோஸ் அழுத்தி வலது கை கட்டை விரலால் மத்திமஸ்தாயியின் ஸட்ஜமம் தொட்டேன். சப்தமே இல்லை. பெல்லோஸ் கொஞ்சம் அழுத்திப் போட்டு ஸட்ஜமத்தோடு நடுவிரலால் பஞ்சமத்தையும் சுண்டு விரலால் மேல் ஸட்ஜமத்தையும் சேர்த்து அழுத்தினேன். ஸ்வரங்கள் ஊமையாய் இருந்தன. ஒலிக்கவே இல்லை. பதட்டத்தோடு பெல்லோஸை வேகவேகமாக அழுத்தி சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம் வாசிக்க... மாயமாளவ கௌளைக்குப் பதில் புஸ்புஸ் என்று காற்றுதான் வந்தது. பெல்லோஸை இன்னும் லாவகமாக அழுத்தி கீழ்ஸ்தாயி, உச்சஸ்தாயி என்று மேலும் கீழும் உள்ள கறுப்பு வெள்ளைக் கட்டைகளை அழுத்தினேன். ஸ்வரங்கள் பேசவே இல்லை. கொஞ்சங்கூட ஒலி எழவில்லை. என் ஹார்மோனியமே எங்கே உன் மணிமணியான காத்திரமான ஸ்வரங்கள். ஆஸ்துமாவில், மரணப்படுக்கையில் கிடக்கும் முருகசிகாமணிப் பாகவதரின் கடைசி மூச்சு போல ஹார்மோனியத்திலிருந்து காற்றுதான் வந்து கொண்டிருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. ஊதுபத்தியின் புகை வளையம் சுழித்துப் பெரிதாகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
- செப்டம்பர் 2002, கணையாழி
தட்டச்சு : சென்ஷி
Dec 6, 2013
பஞ்சத்து ஆண்டி - தி. ஜானகிராமன்
அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது:
“எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க... ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை... எழுந்திருக்க மாட்டிஙக்?... இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.”
இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார அம்மாள். உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, பெரிய பானையையும் தூங்கிக் கொண்டிருந்த பெரிய குழந்தையையும் தோளில் சார்த்தித் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினான் அவன். அதற்குள் அவன் பெண்டாட்டி, கைக்குழந்தை, இரண்டாவது மூட்டை இரண்டையும் எடுத்துக்கொண்டு நடந்தாள். இரைச்சலில் விழித்துக்கொண்ட நடுக் குழந்தை அவர்களுடைய அவசரத்தைக் கண்டு பரபரவென்று எழுந்து, அவர்களைத் தொடர்ந்தது. நன்னையன் அடுத்த வீட்டுத் திண்ணையில் கைச்சுமைகளை இறக்கி, வேட்டியை இறுக்கக் கட்டிக்கொண்டு, மீண்டும் நடந்து, எதிர்த்த சாரியில் ஆறேழு வீடு தள்ளியிருந்த பிள்ளையார் கோயில் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்தான்.
முதுகில் வெயில் விழத் தூங்குகிறவனை எழுப்புவது போல் அவள் எழுப்பினாளே தவிர, அப்படி ஒன்றும் கண் விழிக்க நேரமாகிவிடவில்லை. இருள் சற்றே பிரிந்திருந்தது. சல் சல்லென்று ஒவ்வொரு வாசலிலும் கேட்ட, சாணி தெளிக்கிற ஓசை கொஞ்சம் கொஞ்சமாக இருளை விரட்டிக் கொண்டிருந்தது.
கோயில் திண்ணை மீது போட்டதும் குழந்தைகள் மீண்டும் சுருண்டு துயிலில் ஆழ்ந்துவிட்டன. நன்னையனுக்குக் கண்ணெல்லாம் பொங்கிற்று. அவனுடைய பெண்டாட்டிக்கும் கண் திறக்க முடியாமல் பொங்கிற்று. இரவு இருவரும் சாப்பிடவில்லை. இராக்காலப் பிச்சையாகக் கிடைத்த பழைய சோறு குழந்தைகளுக்கே சரியாகக் காணவில்லை. நாலு நாளாக ஒரு வேளைச் சாப்பாடுதான்; அதுவும் அரை வயிற்றுக்கு. ஆறாப் பசி, அடி வயிற்றில் அனலாகக் குமைந்தது. இப்படியே இன்னும் ஒரு வேளை இருந்தால் குமட்டல் கிளம்பிவிடும். தலை கனத்தது. வறட்சியினால் முணு முணு என்று வலித்தது. கண்ணைக் கசக்கித் தேய்த்துத் தெருவைப் பார்த்ததும், அந்த அம்மாள் கிழமை சொல்லிக் கூச்சல் போட்டது நினைவுக்கு வந்தது.
புரட்டாசி சனிக்கிழமைதான். உலகத்துப் பிச்சைக்காரரெல்லாம் ஊரிலே கூடி விட்டார்கள். ஒரு பெரிய ஆண்டிக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. எத்தனை ஆண்டிகள்! நாற்பது ஐம்பது இருக்கும்! பொழுது புலருவதற்கு முன்னால் எத்தனை ஆண்டிகள்! இவர்கள் எப்போது கண் விழித்தார்கள்? இரவு எங்கே படுத்திருந்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? பல் தேய்க்கவில்லையா? எல்லாம் ஒரே வார்ப்பு! வெளுத்துப் போன காவித்துணி. கழுத்தில் கொட்டை, கையில் ஓடு. பாதி பேர் மொட்டை, பாதி பரட்டை, படுகிழங்கள், கண் குருடு, கால் விந்தல்! - முன்னை வினைப் பயன்கள் ஊர்வலம் போவது போல் இருந்தது நன்னையனுக்கு.
திண்ணையில் உட்கார்ந்தவாறே அவன் கேட்டான்:
“சாமி, எங்கே போறீங்க?”
“சிவகுரு செட்டியார் வீட்டிலே கொடுக்கறாங்க.”
“என்ன கொடுக்கறாங்க?”
“வர்ற பரதேசிங்களுக்கெல்லாம் ஒரு சல்லி, ஒரு பிடி அரிசி. போறோம்.”
“சல்லியா?”
”ஆமாம்.”
“சல்லிக்காசு யாருக்குய்யா ஆம்பிடுது இப்ப! பெரிய தர்மந்தான் போ!”
“கட்டின வீட்டுக்கு யார்தான் பளுது சொல்ல முடியாது?” என்று கூட்டத்தோடு நடக்கப் பெருநடை போட்டான் பரதேசி.
நன்னையன் கூட்டிப் பார்த்தான். அவன், பெண்டாட்டி, மூன்று குழந்தைகள் - ஐந்துபிடி அரிசியும் ஐந்து சல்லியும் தேறும்; கைக்குழந்தையையும் ஆளாக மதித்தால்.
“அஞ்சு பிடி அரிசி, ஒரு வயித்துச் சுவரிலே ஒட்டிக்கக் காணுமா?” என்று கேட்டுக் கொண்டான்.
“எல்லோரும் போறாங்களே. நீங்களும் போய்ப் பாருங்களேன்” என்று யோசனை சொன்னாள் மனைவி.
“போய்ப் பாருங்களேனா? நீ வரலியா?”
”என்னாலே நடக்கறதுக்கு இல்லே. மூட்டை முடிச்செல்லாம் தூக்க முடியாது. இந்த மூணும் சுருண்டு சுருண்டு தூங்குது. வயித்துலே காத்துதான் இருக்கு. அதுக எப்படி நடக்கும்?”
அவன் மட்டும் எழுந்து உட்கார்ந்தான். அதற்குள் சிவகுரு செட்டியார் வீட்டு வாசலில் ஆண்டிகள் ‘க்யூ’ வரிசையில் உட்கார்ந்து விட்டார்கள். உட்கார்ந்த ஒழுங்கைப் பார்த்தால் தொன்று தொட்ட வழக்கமாகத் தோன்றிற்று. புரட்டாசியில் மட்டும் இல்லை. எல்லாச் சனிக்கிழமைகளிலும் சிவகுரு இந்தத் தர்மத்தைச் செய்கிறாராம். நாற்பது ஐம்பது பேருக்குப் பிறகு, கடைசி ஆளாக உட்கார வேண்டும் என்று நினைத்தபோது, நன்னையனின் காலும் உள்ளமும் ஏழெட்டு மைல் நடந்து வந்தது போல களைத்துவிட்டன.
இவர்களோடா உட்கார வேண்டும்? என்ன இருந்தாலும் அவன் பஞ்சத்து ஆண்டிதான். சுபிட்சம் என்ற வாடையை நுகராத இந்தப் பரம்பரை ஆண்டிகளோடா உட்கார வேண்டும்! உட்கார்ந்தாலும் மோசமில்லை. முகம் தெரியாத ஊர்தானே? ஆனால் செட்டியார் இன்னும் வாசலுக்கு வரவில்லை. ஒரு மணி நேரம் செல்லுமாம். பூஜையில் உட்கார்ந்திருக்கிறாராம். வெயில் கூடக் கிளம்பவில்லை. வேறு எங்கே போவது? நன்னையன் உட்கார்ந்தான். தான் வேறு என்ற தன்மையுடன், உள்ளங் குன்ற, உடல் குன்ற, ஓர் அடி தள்ளினாற் போல் உட்கார்ந்து கொண்டான். பரதேசிகளில் பலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அவனுக்குப் பக்கத்தில் இருந்த பரதேசிக்குக் கிராப்புத் தலை. சீவாத பரட்டைக் கிராப்பு; சீசாவுக்குள் விட்டுக் கழுவுகிற பிரஷ் மாதிரி. கழுத்தில் கொட்டை; தடிப்பயலாக வளர்ந்திருந்தான்.
“சாமிக்கு என்ன ஊரு?” என்று அவன் கேட்டான். நன்னையனுக்கு அவனோடு பேசுவதற்கே கௌரவக் குறைச்சலாக இருந்தது. பதில் சொல்லவில்லை.
“உங்களைத்தாங்க. எந்த ஊரு உங்களுக்கு?”
“ஏன்!”
“கேட்கக்கூடாதுங்களா?”
“சேலம்.”
“சேலமா? ஏ அப்பா? ரொம்பத் தொலைவான ஊராச்சே.”
“ஆமாம்.”
”எங்கே இம்மாந் தூரம்?”
வரிசையில் உட்கார்ந்த பிறகு, பதில் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?
”ஆமாம், என்ன செய்யுறது? பிளைப்புப் போயிடுச்சு, பிச்சைக்குக் கிளம்பியாச்சு.”
“அப்படீன்னா வேறெ பொளப்பு உண்டுன்னு சொல்லுங்க!”
“இருந்தது. இப்ப இல்லே...”
“என்ன! வெள்ளாமையா?”
“நெசவு.”
“நெசவா? வேட்டி புடவையெல்லாம் நெய்வமுனு சொல்லுங்க.”
“துண்டு துப்பட்டிக்கூட நெய்வோம். நூல் இல்லே. எத்தினி நாளைக்கு இருக்கிறதை வித்துத் திங்க முடியும்! மூக்குலே, கையிலெ இருக்கிற வரைக்கும் நகைதான். வித்துக் காசாக்கிட்டா, ரெண்டு நாள் சோறுதானே! தீந்துது. இப்படிப் பண்ணிக்கிட்டே வந்தா, அப்புறம் விக்கிறதுக்கு என்ன இருக்கும்?”
“ஏன் நூல் கிடைக்கலே?”
“என்னமோ கிடைக்கலே.”
“வேற பிளைப்புக் கிடைக்கலியோ?”
“வேறெ ஏதாவது தெரிஞ்சால்ல செய்யலாம்? வேட்டி புடவை நெய்யத் தெரியும். பொழுதெல்லாம் தறியிலெ உக்காந்து, ரத்தம் செத்த கூட்டம் நாங்க. கோடாலி, மண்வெட்டி தூக்க முடியுமா? ஓடியாடி வேலைசெய்ய முடியுமா?”
“பாவம்!”
அதற்குள் அவனை அடுத்து உட்கார்ந்திருந்த ஓர் ஒற்றைக் கண்ணன் சொன்னான்: “பிச்சை எடுக்க மட்டும் தெம்பு வேண்டியதில்லைன்னு இதுக்கு வந்தீங்களோ? இதுவும் லேசுப்பட்டதில்லே. எங்களைப் பாரு, இன்னிக்கு ஒரு ஊரு, சாயங்காலம் ஒரு ஊரு, ராத்திரி வேறெ ஊரு, நாளைக்குக் காலமே எத்தனையோ தூரம் போயிருப்போம். இதுக்கும் ஓடியாடிப் பாடு பட்டாத்தான் உண்டு.”
பரம்பரைப் பிச்சைக்காரனின் தொழில் அபிமானத்துடன் பேசின அவனுடைய குரலில் கற்றுக்குட்டியைக் கண்டு அசட்டையும் ஆதரவும் தொனித்தன.
“இன்னிக்குத் தஞ்சாவூருன்னா, நாளைக்குக் கும்மாணம், நாளை ராத்திரி திருடறமருதூரு, நாளைத் தெறிச்சு மாயாவரம், அப்புறம் சீயாளி, கனகசபை, இப்படி நாளுக்கு ஒரு சீமையாப் பறக்கிறோம் நாங்க. நீங்க என்னமோ உடம்பு முடியலேன்னு பிச்சை எடுக்க வந்தேங்கிறீங்களே; என்னத்தைச் சொல்றது?”
“இப்படியே நடந்து நடந்து உயிரை விடவா நாம் பிறந்திருக்கோம்?”
“நடந்தாத்தான் சோறு உண்டு. ஒரே ஊரிலே சுத்திச் சுத்தி வந்தா, சனங்களுக்குக் கச்சுப் போயிடும்.... சும்மாக் குந்தியிருக்கிறது சோம்பேறிப் பிச்சைக்காரங்களுக்குத்தான். சாமிங்க, சிவனடியாருங்க இவங்களுக்கெல்லாம் யாத்திரை தான் கொள்கை.”
’நீ பிச்சை எடுக்க லாயக்கில்லை’ என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. நன்னையனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “எப்பொழுதுமே பிச்சையா எடுக்கப் போகிறோம்? ஏதோ சோதனைக் காலம்! ஹும். வெட்டிப் பயல்கள்” என்று மனத்திற்குள் சபித்துக் கொண்டே எழுந்தான்.
“என்ன அண்ணே, எளுந்திக்கிட்டீங்க?”
”இருங்க. பல் தேய்ச்சிட்டு வந்திடறேன்” என்று எழுந்தான் அவன். தெருக்கோடி திரும்பி, ஆற்றங்கரை நடப்பில், குறுக்கே ஓடிய வாய்க்காலில் இறங்கினான். மதகின்மீது ஒரு செங்கல் துண்டை உரைத்துப் பல்லை விளக்கி, முகத்தைக் கழுவிக் கொண்டான். ஒரு கை தண்ணீர் மொண்டு விழுங்கினான். அது நெஞ்சையும் மார்பையும் அடைத்து, உயிரைப் பிடிப்பதுபோல் வலியைக் கொடுத்தது. நல்ல பசியில் வெறும் வயிற்றில் ட் தண்ணீர் ஊற்றிய அதிர்ச்சி அது. மெதுவாக அதை உள்ளே இறக்கி, வாய்க்கால் கரையிலேயே ஒரு நிமிஷம் உட்கார்ந்தான். மீண்டும் எழுந்து, வயிறு கொண்ட மட்டும் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தெருவை நோக்கித் திரும்பினான்.
சனிக்கிழமை; போட்டி ஏராளம். அதையும் மிஞ்சினால்தான் வயிற்றில் ஏதாவது போட முடியும். போட்டியை மிஞ்ச ஒரு வழிதான் உண்டு. உண்மையைக் கலப்படமில்லாமல் சொல்ல வேண்டும். பிச்சை நமக்குத் தொழில் அல்ல என்று படப்படச் சொல்ல வேண்டும். அப்படித்தான் கருணையை எழுப்பலாம்.
வெயில் வந்துவிட்டது. சிவகுரு செட்டியார் இன்னும் பூஜையில்தான் இருக்கிறார். பத்துப் பதினைந்து வீட்டைக் கடந்து சென்றான் அவன். அங்கும் ஒரு போட்டி காத்திருந்தது. ஒரு குரங்காட்டி, குச்சியை இரண்டு முழ உயரத்தில் பிடித்து, லங்கையைத் தாண்டச் சொல்லிக் கொண்டிருந்தான். லங்கையையா சமுத்திரத்தையா என்று யோசிக்காமல் குரங்கு தாண்டித் தாண்டிக் குதித்தது. வேடிக்கை பார்க்கச் சிறுவர்களின் கூட்டம். ஒரே சிரிப்பு, கூச்சல்! மிகப் பெரிய போட்டி இது! நன்னையன் இன்னும் இரண்டு வீடு தள்ளிப் போய் நின்றான்.
வீடு பெரிய வீடு. வாசலில் கொட்டகை. அங்கே சாய்வு நாற்காலியை மேற்கே பார்க்கப் போட்டுச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர்.
“அம்மா!” என்று நன்னையன் கூப்பிட்டான்.
“ஏனையா அம்மாவைக் கூப்பிடறேஎ? ஐயா ஒண்ணும் கொடுக்க மாட்டாருன்னா? கண்ணைப் பிட்டுக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே; விடியட்டுமென்னு காத்திருந்தியா முகதரிசனம் கொடுக்க! ஐயா எளுந்தவுடனே நல்ல பண்டமாப் பாத்துக் கண் விளிக்கட்டுமேன்னு வந்தியாக்கும்? எனக்கு ஒண்ணும் புரியலியே. சும்மா நின்னுக்கிட்டே இருந்தா? பதில் சொல்லுய்யா.. விடியக் காலமே எளுந்திருக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே?.... என்ன எண்ணம்னு கேக்கறேன். பேசாம படுக்கையிலேருந்து எளுந்து மூஞ்சியைக் களுவிக்கிட்டு வந்து சாஞ்சிருக்கேன். மூஞ்சியைக் காட்டுறியே. நீ என்ன குத்து விளக்கா? கண்ணாடியா? கட்டின பொஞ்சாதியா? சொல்லு-”
மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அவர். பதில் சொல்லு சொல்லு என்று சொன்னாரே தவிர, அது வருவதற்கு இடங் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பாக்கு வெட்டு நேரம் கூட சும்மா இருந்தால் அவன் ஆரம்பிக்கலாம்; அவர் நிற்கவில்லை.
“ஏனையா, கோளி கத்தறத்துக்குள்ளாற இந்தத் தாடி, மீசை, களிசல், கையிலை ஒரு இளிக்கிற சொம்பு - இப்படி வந்து நிக்கிறியே.... உடனே போட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? இல்லை சொல்லேன்? பேசாமடந்தையா நிக்கிறியே.”
நன்னையனுக்கு, “நீங்க பேசாம இருந்தா போதும். நான் போயிடறேன். சும்மா அலட்டிக்காதீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல் இருந்தது. ஆனால் அதற்கும் அவர் விடவில்லை. திருப்பித் திருப்பி அவன் கண்ணாடியாக, குத்துவிளக்காக, கட்டின பெண்டாட்டியாக இல்லாததை, நாலைந்து தடவை இடித்துக் காட்டிவிட்டு, “உனக்குத்தான் வேலை. எங்க வீட்டுலெ ஒருத்தருக்கும் வேலையே கிடையாது. பத்துப் பசை தேய்க்கிறது, முகங்களுவறது, எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டுட்டு, உன்னை வந்து உபசாரம் செய்யணும்; இல்லியா?-”
அப்பாடா!... கொஞ்சம் ஓய்ந்துவிட்டார்.
“இல்லீங்க” என்று சொல்ல வாயெடுத்தான் நன்னையன். ஆனால் மறுபடியும் அவர் பிடித்துக்கொண்டு விடப் போகிறாரே என்று பயந்து நேராக விஷயத்துக்கு வந்துவிட்டான்.
“நம்பளுக்குத் தொழில் நெசவுங்க. நமக்குச் சேலம். தறியிலே நெசுக்கிட்டு மானமாப் பொளச்சிட்டிருந்தோம். ஏளெட்டு மாசமா நூலே கிடைக்கலே. வேலை இல்லேன்னிட்டாங்க. இருந்ததை வித்துச் சாப்பிட்டோம். இங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு வந்தோம். இங்கேயும் அப்படித்தான் இருக்கு. மூணு நாள் கோயில்லே தேசாந்திரிக் கட்டளைக்குச் சீட்டுக் கொடுத்தாங்க. மூணு நாளைக்கு மேலே கிடையாதாம். அப்பாலெ நிறுத்திட்டாங்க. நாலு நாளாக் கால்வயித்துக்குக் கூடக் கிடைக்கலே. மூணு பச்சைக் குளந்தை பட்டினி கிடக்குது. நேத்திலேருந்து நானும் வீட்டிலேயும் பட்டினிங்க” என்று மூச்சு விடாமல் சொல்லி தீர்த்தான்.
“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்லுறே? தறியும் நூலும் வாங்கித் தரச் சொல்றியா?”
“நாம்ப அப்படிக் கேக்கலாம்களா? குளந்தைகளைப் பார்க்க வளங்கிலீங்க-எதோ கொஞ்சம் வயித்துக்கு?”
“இந்த பாரு, எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வந்திடுச்சு. இந்தச் சேலம் டவுனு இப்ப இருக்கா, இல்லை ஈ காக்காய் இல்லாமெ ஒரே பொட்டைக்காடாப் போயிடிச்சான்னு தெரியலே. நானும் ஆறு மாசமாப் பாக்கறேன். லக்ஷம் பேரு உன் மாதிரி வந்திட்டாங்க. நூல் இல்லே. வேலையில்லேன்னு வயித்தை எக்கிக்கிட்டு வந்தி நிக்கிறாங்க. என்ன சொல்றே?”
“அப்பறம் என்னத்தைச் சொல்றதுங்க?”
“என்னத்தைச் சொல்றதுங்களா? நான் சொல்றேன் கேளு. பிச்சைக்கும் முதல் போட்டுத்தான் ஆகணும். அதோ பாரு அநுமார் நிக்கிறாரு. அவருதான் அவனுக்கு முதல்.”
திரும்பிப் பார்த்தான் நன்னையன். குரங்காட்டி அவர் பேசுவதைக் கேட்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.
பெரியவர் சொன்னார்:
“அந்த அநுமார் அவனுக்கு முதல், இன்னும் கொஞ்ச நாளியிலே பாரு: அந்த அலுமினிய ஜோட்டி நிறைய அரிசி ரொப்பிக்கிட்டுப் போயிடுவான். அவன் பொளைக்கிறவனா, நீயா? இந்த உலகத்திலே எந்தத் தொழிலுக்கும் முதல் வேணும்டாப்பா, முதல் வேணும்; பாம்பாட்டியும் குரங்காட்டியும். ஜாலராப் போட்டுக்கிட்டுப் பாடணும்; இல்லாட்டிக் கொத்தமல்லி கறிவேப்பிலை விக்கணும். இல்லாட்டி, மூட்டைதான் தூக்கலாம். அதுக்கும் உங்கிட்ட முதல் இல்லே. எலுமிச்சம்பழத்தை நறுக்கிப் பத்துநாள் புரட்டாசி வெயில்லே காயப்போட்டது போல நிக்கிறே.”
ஒரு கணம் மௌனம்.
’குரங்காட்டியைவிட மட்டமாகப் போய்விட்டோம்!’ அவனுக்குத் தொண்டையை அடைத்தது. சேலம், தறி, அவன் குடியிருந்த வீடு, பசுமாடு, முற்றத்தில் சாயம் நனைத்துத் தொங்கின நூல் பத்தை- எல்லாம் அவன் கண் முன் ஒருமுறை வந்து போயின. ‘எங்கோ பிறந்து, எங்கோ தொலைவில் வாழ்ந்து, யாரோ முகம் தெரியாதவரிடம் பாட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோமே! எதனால்? எதற்காக?’ அவன் கண் நிரம்பிற்று. உதட்டைக் கடித்தால் கண்ணீர் தெறித்துவிடுமென்று மூச்சைப் பிடித்து நிறுத்தி, வாயைத் திறந்து கண்ணீரைக் கன்னத்தில் சொட்ட விடாமல், தேக்கினான்.
“என்ன சொல்றே?” என்று வழக்கமான கேள்வியைக் கேட்டார் அவர்.
இதற்கு என்ன பதில் சொல்வது? கண்டம் நடுங்கிற்று. அவன் பேசாமல் நின்றான்.
“சும்மா நின்னுக்கிட்டே இரு” என்று எழுந்து உள்ளே போய்விட்டார் அவர்.
குரங்காட்டி கேட்டான்: “நெசவு வேலையா உங்களுக்கு?”
நன்னையன் தலையை ஆட்டினான்.
“காலங் கெட்டுப் போச்சுய்யா. இந்த மாதிரி அவதியையும் பஞ்சத்தையும் ஒருநாளும் பாத்ததில்லே. பாயிலெ கிடந்தவங்க எல்லாரையும் தரையிலெ உருட்டிடிச்சே இந்தப் பாவி மவன் பஞ்சம். தருமம் கெட்ட உலகம்!” என்று, நொடித்தவன் நிலைமையை மனத்தில் வாங்கி, இரக்கம் சொல்லி, அவனையே பார்த்துக்கொண்டு நின்றான் குரங்காட்டி. ‘நாங்கதான் இப்படியே பிறந்திருக்கோம். நீயும் இப்படி ஆகணுமா, கண்ணராவி!” என்று அவன் மனம் கண்ணின் வழியாகச் சொல்லிற்று. அந்தப் பார்வையைப் பார்த்ததும் ஆடிக்கொண்டிருந்த நன்னையன் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தான்.
சற்றுக் கழித்துப் பத்துப் புது இட்லி, இரண்டு வயிற்றுக்குப் பழைய சோறு - எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து போட்டாள் பெரியவர் மனிஅவி. குரங்காட்டிக்கும் குரங்குக்கும் இரண்டு இட்லி கிடைத்தன.
“இந்த பாரு! நித்யம் கிடைக்கும் இந்த மாதிரின்னு நெனைச்சுக்காதே, நாளைக்கு வந்தியோ கெட்ட கோபம் வந்திடும்! போ, பொளைக்கிற வளியைப் பாரு” என்று வாசல் நிலைப்படியிலிருந்தே சொல்லிவிட்டு அவனுடைய கும்பிடைக்கூட பார்க்காமல் பெரியவர் உள்ளே போய் விட்டார்.
நன்னையன் கோயில் திண்ணையை நோக்கி நடந்தான்.
”இந்தா, இதை வாங்கிக்க.”
அவன் பெண்டாட்டிக்கு அதைப் பார்த்ததும் சோற்றுக் களஞ்சியத்தில் குதித்துவிட்டாற்போல் இருந்தது.
“ஏது இத்தினி? கிளப்புலே வாங்கினீங்களா?”
”கிளப்புலெ வாங்கும்படியாத்தானே இருக்குறோம் இப்ப! பிச்சைதான்! வாங்கி வை.”
பெரிய குழந்தை பலகாரத்தை வளைத்துக் கொண்டது. நடுக் குழந்தை, “அப்பா. குரங்குப்பா!” என்று கத்திற்று. குரங்காட்டி, திண்ணை ஓரமாக நின்று கொண்டிருந்தான்.
“என்னாப்பா?”
“ஐயா, நீங்க பொளைக்கத் தெரியாதாங்க. அவங்க கொஞ்சம் சோறும் பலகாரமும் கொடுத்தாப் போதுமாய்யா? அப்படியே இன்னும் நாலு வீட்டிலெ அரிசியும் வாங்கியாரக் கூடாது? ராத்திரிப் போதுக்கு. மறுபடியும் ஒரு நடை அலையணுமால்லியா?”
“நீ சொல்லு. உனக்கென்ன? நேத்து மத்தியானமே புடிச்சு எல்லா வயிறும் காயுது. இப்ப இதைத் தின்கிறது. அப்புறம் பாத்துக்கறோம்.”
குரங்காட்டி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டுப் பிறகு சொன்னான்:
”இந்த ஊரிலே யாரையாவது தெரியுமா உங்களுக்கு?”
“ஊரே புதிசு. ஏன்?”
“இல்லே, கேட்டேன். ஒரு சேதி சொல்லணும்.”
“என்ன சேதி!”
“சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?”
“சேதியைச் சொல்லேன். கோவிச்சுக்கறது என்ன?”
”சரி, சோறு தின்னுட்டு வாங்க. இங்க ஒருத்தரு இருக்காரு. உங்களைப்போல ஆளுங்களுக்கெல்லாம் நிறையக் கொடுப்பாரு. அவருகிட்ட அளச்சிக்கிட்டுப் போறேன்.”
“யாரு சொல்லேன்! வியாபாரியா?”
“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க சாப்பிடுங்க.”
சாப்பாடு முடிந்ததும், திண்ணையிலிருந்து இறங்கிக் குரங்காட்டியோடு நடந்தான் நன்னையன். கடைத்தெருச் சதுக்கத்தைக் கடந்து, ரெயிலடி ரஸ்தாவில் நடந்தார்கள். கால் நாழிகை தூரம் போனதும் ஊர் முடிந்துவிட்டது. அப்பால் ஒரு குளம். அதர்கும் அப்பால் சாலையோரமாகத் தோட்டிகளின் சேரி. முப்பது குடிசைகள் இருக்கும். எங்கும் திறந்த வெளி. பச்சை வயல்கள். ரெயிலடிச் சாலையின் இரு மருங்கிலும் தென்ன மரங்கள். இந்தப் பச்சையைப் பார்க்கிறபோதெல்லாம் நன்னையன் காணாததைக் கண்டதுபோல் மயங்கி நின்றான்.
சேரிக்கு முன்னால் நின்று, “இங்கதான் இருக்காரு நான் சொன்ன ஆளு.”... “காளி, ஏ காளி!” என்று உரக்கக் குரல் கொடுத்தான் குரங்காட்டி.
“ஏன்?” என்று குடிசைகளின் நடுவேயிருந்து பதில் குரல் வந்தது.
“வைத்தியலிங்கத்தை அளைச்சுக்கிட்டு வா இப்பிடி.”
நன்னையன் ஒன்ரும் புரியாமல் விழித்தான்.
கையில் ஈயக் காப்பும் ஈய மோதிரமும் ஈயக் காதணியும் ஈய மூக்குத்தியுமாக ஒரு பெண்பிள்ளை வந்தாள். கூட, குட்டிப் பருவத்தைக் கடந்து வளர்ந்த குரங்கு ஒன்று ஓடிவந்தது.
“இந்த பாருங்க, இவன்தான் வைத்தியலிங்கம்.. ஏய் வைத்தியலிங்கம், வா இப்படி” என்று அழைத்தான் குரங்குக்காரன்.
குரங்கு துள்ளிக் குதித்தது. அவனுடைய அரைத் துணியைப் பிடித்து, அண்ணாந்து பார்க்கக் குலவிற்று. அவன் கையிலிருந்த குரங்கின்மேல் விழுந்து தள்ளிற்று.
“இந்த பாருங்க. அப்பவே கோவிச்சுக்க மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நெசந்தானா?”
“நான் சொன்ன ஆளு இந்த வைத்தியலிங்கந்தான்!”
“யாரு! என்னய்யா விளையாடறே?”
”பாத்தீங்களா? கோவிச்சுக்கிறீங்களே! இவனை நானும் எம் பொஞ்சாதியும் உசிராட்டம் வளர்த்து வரோம். இதை உங்களுக்குக் கொடுத்திடட்டுமா?”
“எனக்கு என்னாத்துக்கு?”
“ஆமாங்க! உங்களுக்குப் பிச்சை எடுக்கவே தெரியலியே! நெசவாளிங்களுக்கு எப்படிப் பிச்சை எடுக்கத் தெரியும்? அது பிறவியிலே வரணும். வமிச குணங்க. லேசிலே கத்துக்க முடியாது: தச்சு வேலை, கொல்லு வேலை மாதிரிதான். வன்னியர் ஐயா சொன்னாப்போல உங்களுக்கு மூட்டை தூக்கறாத்துக்குக்கூட முதல் இல்லே. நீங்க என்னா பண்ணப் போறீங்க? அதுவும் இந்த ஊரு. தரித்திரம் பிடிச்ச ஊரு. செட்டியாரு, சனிக்கிழமை காசும், அரிசியும் கொடுப்பாரு. மைத்த நாளிலே பிச்சைக்காரன் வாடையே அந்தப்பக்கம் வீச விடமாட்டாரு. வன்னியரும் தர்மசாலிதான். அதுக்காகத் தினந்தினம் அவங்க வீட்டு வாசல்லெ போயி நிக்கறதுக்கு ஆச்சா? அவங்க ரெண்டு பேருந்தான் கொடுக்கிறவங்க. மீதி அத்தனையும் பிடாரி. போறதுக்கு முன்னாடி மேலே உளுந்து புடுங்குவாங்க. தண்ணியை வாரி மேலே வீசுவாங்க. தர்மம் பெருத்த ஊரு! நீங்க ஏதாவது கொடுத்தா உங்களுக்கு ஏதாவது கிடைக்கும். அதுக்குத்தான் சொல்றேன்.
இந்த ஊர்லே ஒருத்தருக்கும் உங்களைத் தெரியாது. இந்த வைத்திலிங்கத்தை வச்சு ஆட்டுங்க. சோத்துக் கவலையே இராது. நெசவாளி நெசவாளின்னு சொன்னா நம்பறத்துக்கு இந்த ஊர்லெ ஆளு கிடையாது.”
நன்னையன் புன்சிரிப்பு சிரித்தான்.
“என்னையும் குரங்காட்டியா அடிச்சிடணும்னு பாக்கறே! ம்... சொல்லு சொல்லு. தலைக்கு மேலே போயிடுச்சு! அப்பாலே சாண் என்ன, முளம் என்ன!”
“தலைக்கு மேலே ஒண்ணும் போயிடலீங்க. பஞ்சம் பறந்து போச்சின்னா, நீங்க மறுபடியும் ஓட்டு வீட்டுக்குப் போயிடுவீங்க. இது எத்தினி நாளைக்கு? அதுவரைக்கும்தான் சொல்லுறேன். அப்படியும் குரங்காட்டின்னா மட்டம் இல்லே. ஐயா சொன்னாப்போல இது அப்படியே தங்கக்கட்டி, நல்ல முதலு, வேற யாரையாச்சும் கூப்பிட்டு இதைக் குடுத்திடுவேனா? உங்க குளந்தைகளையும் அம்மாவையும் பாத்தேன். எனக்குப் பொறுக்கலே.”
“காளி, இவங்க ய் ஆரு தெரியுமா? இவங்களுக்குச் சேலம். தறியிலே நெசு, மானமாப் பொளச்சிக்கிட்டிருந்தவங்க. நூல் கிடைக்கலியாம், கையிலே ஓட்டை எடுத்திட்டாங்க. இவங்க அம்மா லச்சுமி மாதிரி இருக்காங்க. அந்த மகா லச்சுமியும் வாடித் தேம்புது. பச்சைக் குளந்தை மூணு, துவண்டு துவண்டு விளுது, வைத்திலிங்கத்தை இவங்க வச்சுக்கட்டுமே. கண்ணராவியாக இருக்குது, பார்த்தா!”
“என்ன, வைத்திலிங்கத்தையா!”
“அட, என்னமோ? பதர்றியே? நம்மகிட்டத்தான் மூணு இருக்கே. ஒண்ணைக் கொடுக்கறது. இங்க வச்சு ஆட்றத்துக்கு ஆளைக் காணும். இவங்க மூஞ்சியைப் பாத்துப் பெரிய மனசு பண்ணு. உன் கலியெல்லாம் தீந்துரும். ஒரு ராசா பொறப்பான் உனக்கு.”
“அவங்க கேக்கக்கூட இல்லைபோல் இருக்கு. எடுத்துக்க, எடுத்துக்கன்னு அவங்க தலையிலெ கட்டுறியே?”
“எல்லாம் எடுத்துக்குவாங்க.”
“ஏஞ்சாமி எடுத்துக்கிறீங்களா?”
“எடுத்துக்கிறேன்னு சொல்லுங்களேன்” என்று குரங்காட்டி நச்சரித்தான்.
”சரிம்மா, எடுத்துகிறேன்.”
“பாத்தியா, உங்கிட்டையா சொல்லிட்டாரு, எடுத்துக்கிறேன்னு!”
அவள் பளபளவென்று வெண்முத்துச் சிரிப்புச் சிரித்தாள். அவனுடைய கருணை அவளையும் தொட்டுத்தான் விட்டது. அவள் சொன்னாள்: “பாத்தியா, என்னை இந்தக் குருமுட்டுலெ வச்சுச் சரின்னு தலையாட்டச் சொல்றே பாத்தியா.. இரு இரு.. சாமி! அவங்க சொல்றாங்க, கொடுக்கிறேன். எடுத்துக்கிட்டுப் போங்க. வைத்திலிங்கம் வயித்துக் கவலையே வைக்கமாட்டான்.”
கோயில் சிலைபோலக் கறுப்பாக, ஆரோக்கியமாக, பளபளவென்று வனப்பு வடிவாக நின்றாள் அவள்.
“அப்பாடா, காளியாத்தா மனசு இரங்கிட்டா! இனிமேக் கவலையில்லே!” என்று குரங்காட்டி சிரித்தான்.
சுற்றிலும் வயல். எட்டியவரையில் பரந்து நின்ற பச்சை வயலில் அலை ஓடிக்கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று. பஞ்சு பொதிந்த வானம். அவள், அவளுடைய போலிக் கோபம், சிரிப்பு எல்லாவற்றையும் பார்த்தான் நன்னையன். துணிவு பிறந்தது.
“இந்தக் குச்சியைக் கையிலே பிடியுங்க. பிடிச்சீங்களா? ‘லங்கையைத் தாண்டுடா’ன்னு சொல்லுங்க. சும்மாச் சொல்லுங்க.”
“லங்கையைத் தாண்டுடா!”
வைத்திலிங்கம் லங்கையை தாண்டிக் குதித்தது.
குச்சியை வாங்கி அதன் கையிலே கொடுத்து, “ஆடு மேய்டா வைத்திலிங்கம்னு சொல்லுங்க” என்று சொல்லி கொடுத்தான் குரங்காட்டி.
“ஆடு மேய்டா வைத்திலிங்கம்.”
குரங்கு குச்சியைப் பிடரியில் பிடித்துக்கொண்டு இப்படியும் அப்படியும் இரண்டு நடை போய் வந்து, அடுத்த கட்டளைக்குக் காத்து நின்றது.
பிறகு பள்ளிக்கூடம் போகும் கோலம், கைதி கை கட்டி நிற்கிற கோலம், பெண்டாட்டியோடு ரகசியம் பேசும் நிலை, கோபுரம் ஏறும் வித்தை - எல்லாவற்றையும் பாடம் சொல்லிக் கொடுத்தான் குரங்காட்டி.
நன்னையனையும் குரங்காக ஆட்டி வைத்துவிட்டான் அவன்!
அவள் சிரித்தாள்.
”நல்ல வேளை, பழகின குரங்கு, புதுக்குரங்கு இப்படிச் சுளுவா மசியாதுங்க” என்றாள் அவள், சிரித்ததற்குக் காரணம் சொல்வதற்காக. பிறகு, “சரி அளைச்சுக்கிட்டுப் போங்க” என்றாள்.
அதை உச்சிமோந்து காளி வழியனுப்பினாள். குரங்கு தான் போக மறுத்தது. சேரிக்குள்ளே ஓடிப்போய் ஒரு பிடி கடலை எடுத்துவந்து நன்னையனிடம் கொடுத்து, “இதைக் கையிலே வச்சுக்கிட்டு ஒண்ணொண்ணாப் போட்டுக்கிட்டே போங்க; ஓடியாரும்” என்று சொல்லிக் கொடுத்தாள் காளி.
“நீ வரலியா?” என்று கேட்டான் நன்னையன்.
“நான் பின்னாலெ வர்றேன், போங்க” என்று நின்றுவிட்டான் குரங்காட்டி.
“என்னாங்க இது, குரங்கைப் பிடிச்சுக்கிட்டு! ஏது”
“எல்லாம் பிளைக்கிறதுக்குத்தான். குரங்காட்டி கொடுத்தான்.”
“பஞ்சத்துக்கு மூணு குளந்தை பத்தாதுன்னு சொல்லியா?”
“அந்தக் குளதைங்கள்ளாம் திங்கத்தான் திங்கும். இது திங்கவும் திங்கும், சம்பாரிச்சும் போடும். தூக்கு மூட்டையை; எதிர்த்த வீட்டுத் திண்ணையில் கட்டிப் போடுவோம்.”
ஜாகை மாறிற்று. திண்ணையிலிருந்த ஜன்னல் கம்பியில் குரங்கைக் கட்டிப் போட்டான் அவன்.
கைக்குழந்தை சிரித்துக்கொண்டு கையைக் கொட்டிற்று. குரங்கைப் பிடித்துத் தலையில் அடித்தது.
“ரொம்ப நல்லக் குரங்கு. பழகின மாதிரியல்ல நடந்துக்குது!” என்றாள் அவள்.
இரண்டாவது குழந்தை வீல் என்று அழுதது. “ஏதுடா சனி!” என்று சொல்லப் போகிறாளே என்று பயந்து, நன்னையன் குரங்காட்டியின் வாதங்களைத் தான் சொல்லுகிற மாதிரி எடுத்து விளக்கினான்.
“நல்லதுதான். குழந்தைகளுக்கும் விளையாடுகிறதுக்கு ஆச்சு” என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, அவன் கவலையைத் தீர்த்தாள் அவள்.
முதல் குழந்தை பயந்துகொண்டு, தூரத்தில் நின்று கொண்டிருந்தது.
“இதைப் பாத்தியா, அநுமார்!” என்று ஆஞ்சநேயர் கதையெல்லாம் சொல்லி, அறிமுகப்படுத்தி பயத்தைப் போக்குவதில் ஈடுபட்டான் நன்னையன். தடவிக் கொடுக்கச் சொன்னான். தனக்கும் ஓர் ஒத்திகையாக இருக்கட்டும் என்று விளையாட்டுக் காட்டுகிற போக்கில், அதை லங்கையைத் தாண்டு, ஆடு மேய்க்கிற வித்தை முதலியவைகளைச் செய்து காட்டச் சொன்னான்.
கடைசியில் வைத்திலிங்கம் மூட்டையைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தது. அதற்கும் பசி வேளை.
“சும்மா எத்தினி நாளி விளையாடுவது? ராத்திரிக்கு என்ன செய்யறதாம்?”
பொழுது போனது தெரியத்தான் இல்லை. புதுக் குழந்தையோடு குழந்தைகள் விளையாடியதைப் பார்த்து, வெகுநேரம் மகிழ்ந்துவிட்டது குடும்பம்.
அலுமினியப் பேலாவை எடுத்துக்கொண்டு இறங்கினான் அவன்.
“ஏன், இதை அளச்சிக்கிட்டு போகலியா?”
”அதுக்குள்ளாறாவா?”
அவ்வளவு சீக்கிரமாகப் பரம்பரைப் பிச்சைக்காரனாகச் சரிந்துவிட அவன் உடன்படவில்லை. முழங்காலுக்குக் கீழே தொங்கத் தொங்கத் தட்டுச்சுற்றுக் கட்டி, உடம்பில் மல் பாடியும் போட்டுக்கொண்டு போனால் குரங்குங்கூட அவனை குரங்காட்டியாக மதிக்காது. சற்றுக் குழம்பி நின்று, கடைசியில் ஒன்றியாகவே போனான்.
உண்மைப் பல்லவியைப் பாடிக்கொண்டு, நாலைந்து தெருக்களில் வாசல் வாசலாக ஏறி இறங்கினான். ஊர் நடப்பே தெரியாத, தெரிந்துகொள்ளாத, கவலைப்படாத காதுகளெல்லாம் அவனுடைய நூல் பஞ்சக் கதையைக் கேட்டன.
நாலு தெருச் சுற்றிக் கால் ஓய்ந்தபோதுதான் குரங்காட்டி சொன்னது சரி என்று பட்டது அவனுக்கு. அந்தச் சின்னப் பேலாவில் பாதியை எட்டத் தவித்தது அரிசி. திரும்பி வந்து திண்ணையில் ஏறியபோது வெயில் நன்றாக ஏறிவிட்டது. காலணாவும் அரையணாவுமாக ஏழெட்டுக் காசு சேர்ந்திருந்தது. பட்டாணிக் கடலையும் வாழைப்பழமும் வாங்கி வந்தான்.
வெயில் கனல் வீசிற்று. புரட்டாசிக் காய்ச்சல் சுள்ளென்று காய்ந்தது. குழந்தைகள் கடலையையும் வாழைப்பழத்தையும் தின்று, தூங்கத் தொடங்கின. குரங்கும் அதையே தின்றது. வெயில் தாங்க முடியாமல், அதுவும் ஒருக்களித்துப் படுத்து அயர்ந்து உறங்கிவிட்டது. பெண்டாட்டியும் உறங்கினாள்.
தூங்கும் குரங்கைப் பார்த்து, நன்னையன் சிரித்துக் கொண்டான். அது மனிதன் மாதிரியே தூங்கிற்று. வெயில் பட்ட வெண் மேகத்தைப் பார்க்க முடியாமல் கண்ணை கையால் மறைத்துக்கொண்டு தூங்கிற்று. அதற்கு வயசு என்ன? ஆறு மாதம், ஒரு வருஷம் இருக்கலாம். அதற்குள் முப்பத்தைந்தும் முப்பதும் ஆன மனிதப் புருஷனின் பெண்டாட்டியையும் மூன்று குழந்தைகளையும் பாதுகாக்கச் சக்தியைப் பெற்றுவிட்டது. இந்தப் பொறுப்பு, தன் தலையில் விழுந்திருப்பது தெரியுமா அதற்கு? எங்கோ பிறந்து வளர்ந்தவனின் குடும்பத்தை நூற்றைம்பது மைலுக்கு அப்பாலுள்ள ஒரு தோட்டிச் சேரிக் குர்னக்கு எப்படிக் காக்க நேர்ந்தது. நன்னையன் வியந்து கொண்டிருந்தான். வயிறு நிறைந்திருந்ததால், துன்பத்தை நினைத்து அழாமல், சிரித்துக் கொள்ள மலர்ச்சியும் தெம்பும் இருந்தன அவனுக்கு. யுத்தம் நடந்தபோது அவன் வாழ்ந்த வாழ்வு, இந்த குரங்குக்குத் தெரியுமா! தினம் மூன்று ரூபாய்க்கு குறையாமல் கூலி கிடைத்தது. அவளும் நூல் இழைத்து எட்டணா, பத்தணா சம்பாதித்துக் கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் கிருஷ்ணா லாட்ஜில் இரண்டு இட்லியும் ஒரு முறுகல் தோசையும் காபியும் சாப்பிட்டு விட்டு, அவளுக்கும் குழந்தைகளுக்கும் வாங்கி வருவான். தாம் தூம் என்று செலவு. சினிமா தவறுவதில்லை. தேவைக்குமேல் வேட்டி, சட்டை, புடவைகள். அந்த நாளில் மாதம் பத்து ரூபாய் எளிதில் மிச்சம் பிடித்திருக்க முடியும். பிடித்திருந்தால்.....
கடைசியில் அவனும் அயர்ந்துவிட்டான்...
இரண்டு மணி நேரம் கழித்துக் கண்விழித்தபோது - தானாகக் கண்விழிக்கவில்லை அவன். குழந்தைகள் அவனை அடித்துத் தட்டிக் கூப்பிட்டன.
“அப்பா, அப்பா. எளுந்திரிங்கப்பா, குரங்கு ஓடிப் போயிடுச்சு. அப்பா, குரங்கு பிடிங்கிட்டுப் போயிடுச்சு”
விறுக்கென்று எழுந்து உட்கார்ந்தான்.
“குரங்கு போயிடுச்சு, அதோ பாருங்க”” என்றாள் அவள்.
“எங்கே?”
குரங்கு எதிர்த்த வீட்டு ஓட்டுக் கூரையின் கூம்பில் உட்கார்ந்திருந்தது.
“பா, பா!” என்று கூப்பிட்டான் அவன்.
“எப்படி ஓடிச்சு?”
“இதுங்களுக்கு விளையாட்டுக் காட்டறதுக்காக அவுத்துப் பிடிச்சுக்கிட்டிருந்தேன். விசுக்குனு பிடுங்கிக்கிட்டுப் போயிடுச்சு.”
“நல்ல கெட்டிக்காரிதான், போ!”
அவள், அவன் இருவரும் அழைத்தார்கள். கடலையும் வாழைப்பழமும் அவர்களுடைய வயிற்றில்தான் இருந்தன. வெறுங்கைகளைப் பார்த்ததும் அது இறங்கி வரத் தயங்கிற்று.
அதற்குள் தெருவில் போன சிறுவர்களும் சிறுமிகளும் கூடிவிட்டார்கள். ‘ஹோ ஹோ!’ என்று இரைச்சல்.
”ஏய், சீரங்கி!”
“ட்ரூவ்!”
கல்லை விட்டு அடித்தான் ஒரு பயல். வைத்திலிங்கம் நறுக்கென்று ஒரு தாவு தாவிப் பக்கத்தில் இருந்த மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிற்று. உச்சியில் கம்பிகளைப் பிடித்தது.
“போகாதே, போகாதே!” என்று யாரோ ஒருவர் கூச்சல் போட்டார். அவ்வளவுதான். உடம்பு ஒரு முறி முறிந்தது. கிரீச்சென்று கோரமான கூச்சல்! பேயடித்தாற்போலத் தடாரென்று அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தது குரங்கு. இரண்டு துடிதுடித்து, கண்ணை மூடி ஒடுங்கிவிட்டது.
அண்டை வீட்டுக்காரர்கள் கூடினார்கள். தெருவே கூடிற்று. அரைமணியில் ஊரே கூடிவிட்டது. மின்சாரம் தாக்கிய விலாப்பக்கம் அப்படியே கருகிப் போயிருந்தது. எதற்காக என்று தெரியாமல் நன்னையனும் பெண்டாட்டியும் அழுதார்கள். அதைப் பார்த்துக் குழந்தைகளும் அழத் தொடங்கின.
“ஏண்டா, உன் குரங்கா இது?” என்று கேட்டார் ஒரு வயசானவர்.
”ஆமாங்க.”
“எப்படிச் செத்துப்போச்சு?”
நன்னையன் கதையைச் சொன்னான்.
“ஏண்டா, அநுமார் அவதாரம்டா அது. சாக விட்டுட்டியே. இதை வச்சுக் காப்பாத்த முடியலியாடா. பாவிப்பயலே!” என்று அவன் முதுகில் இரண்டு குத்துவிட்டார் அவர். ஊருக்குப் பெரியவர்களில் ஒருவர் போல் இருக்கிறது. ஒருவரும் அவரைத் தடுக்கவில்லை. ஊரெல்லாம் இதை வந்து பார்த்தது.
காளியும் புருஷனும் ஓடிவந்தார்கள். காளி வைத்திலிங்கத்தைத் தொட்டுத் தொட்டு அழுதாள்.
“குரங்கின் கையிலே பூமாலை கொடுத்தாப்பலே பண்ணிட்டீங்களே சாமி!” என்று நன்னையனைப் பார்த்து வெதும்பினாள்.
பரபரப்பு அதிகமாகிவிட்டது. தெருவில் உள்ளவர்கள் மும்முரமாக அங்கும் இங்கும் ஓடினார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள் ஒரு சின்னச் சிங்காரச் சப்பரம் தயாராகிவிட்டது. சிறிய வாழைக்குலை, ஓலை நறுக்கு, இரண்டு மெழுகுவர்த்தி - சப்பரம் வெகு அழகாக இருந்தது. வைத்திலிங்கத்தைக் காலைத் தொங்கவிட்டு, கையை அஞ்சலி பந்தம் செய்து உட்காரவைத்து ஜோடித்தார்கள். உட்கார வைக்குமுன் குளிப்பாட்டியாகிவிட்டது. நெற்றியில் நாம, திருச்சூர்ன்ணம். மேலெல்லாம் குங்குமம். ஒரு ரோஜாப்பூ ஹாரம்.
பஜனை கோஷ்டி, ஜாலர் ஒலிக்க, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடிக் கொண்டு முன்னால் சென்றது. நல்ல கூட்டம். நன்னையன் கைதியைப் போல், பஜனை கோஷ்டியில் நடுவில் மாட்டிக் கொண்டுவிட்டான்.
ஒரு சந்துபொந்து விடாமல் ஊர் முழுதும் சுற்றி, ஆற்றங்கரைப் பாதையில் வாய்க்காலுக்குப் பக்கத்தில் நின்றது ஊர்வலம். பஜனை கோஷ்டியின் திவ்ய நாமம் ஆற்றங்கரை வெளியெல்லாம் எதிரொலித்தது. அரை மணி நேரம் ஆஞ்சனேயரின் நாமம் கடலலைபோல் முழங்கிற்று.
அழகாக இரண்டு முழம் உயரத்துக்குச் சிமிண்டு போட்டுச் சமாதி எழுப்பி விட்டார்கள். பின்னால் அரசங்கன்றும் நட்டு நீர் ஊற்றினார்கள்.
திவ்ய நாமம் முடிந்தது. எல்லோரும் விழுந்து வணங்கினார்கள்.
“என்னடா, சும்மா நிக்கிறியே, கொலைகாரப் பயலெ, விழுந்து கும்பிடுடா!” என்று ஊருக்குப் பெரியவர் ஓர் இரைச்சல் போட்டார். பரபரவென்று இடுப்பில் சோமனைக் கட்டி நெடுஞ்சாண்கிடையாக நாலுமுறை எழுந்து எழுந்து விழுந்தான் நன்னையன்.
- கலைமகள், அக்டோபர் 1951
தட்டச்சு : சென்ஷி
நன்றி..
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்