Apr 21, 2012

ந. பிச்சமூர்த்தி – 'எழுத்து' நேர்காணல்

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு.

தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின்na_pitchamurthy சட்டப்படிப்பு படித்து, பிளீடரானார். 1924 முதல் 1938 வரையில் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார்.

வக்கீல் தொழில் செய்யும்போதே அரசியலில் காங்கிரஸ் சார்பான ஈடுபாடு உண்டு. கலாசாலையில் இண்டர்மீடியட் படிக்கும் போதே கலாசாலைப் பத்திரிகையில் கவிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எழுதினார்.

1933-ல் 'கலைமகள்' நடத்திய சிறுகதைப் போட்டியில் பதினைந்து ரூபாய் பரிசுப்பெற்ற'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதை மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமான ந.பி. அதற்கு முன் 'சயன்ஸூக்கு பலி' என்ற கதையை 'கலைமகள்' லேயே எழுதி இருக்கிறார். அதுதான் அவர் எழுதிய முதல் கதையாகும். 1923 லேயே இங்கிலீஷில் 'மோஹனி' யையும் 'ஆராய்ச்சி' யையும் எழுதியிருக்கிறார். 1938 பிற்பகுதியில் ஹனுமான் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்து சுமார் ஏழுமாத காலத்திற்குப் பின் அதனின்று விலகி, அறநிலையப் பாதுகாப்பு இலாகா நிர்வாக அதிகாரியாக உத்யோகம் பெற்று பல கோயில்களில் 1956 வரை வேலை பார்த்து ரிட்யராகி சில வருடங்களாக சென்னையில் 'நவ இந்தியா' தினசரிப் பத்திரிகையில் உதவியாசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

'கலைமகள்'ல் பரிசு பெற்றாலும் பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர் ஆனார். கு ப ராவுடன் சேர்ந்து இரட்டையராக, 'கலைமகள்'க்கும் இன்றுவரை அபிமானத்தொடர்பு இருந்து வருகிறது. பிச்சமூர்த்தி புதுக் கவிதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறார். கோர்டில் பலர் முன்னிலையில் வாதாடி பழக்கம் உள்ள பிச்சமூர்த்திக்கு மேடை ஏறிப் பிரசங்கம் செய்வது அவ்வளவாக பிடிப்பதில்லை. குறிபிட்ட கூட்டங்களில் தவிர அவர் அதிகமாக கலந்து கொள்வதும் இல்லை. பேசுவதும் இல்லை. பேசினாலும் ரத்னச் சுருக்கமாகத்தான். பிச்சமூர்த்தி நடுத்தர உயரமும் பாங்கான உடல் அமைப்பும் வாய்ந்தவர். நல்ல சிவப்பு நிறம். நரைத்த தலைமயிரும், தலைமயிரை விட வெளுப்பான தாடியும் உள்ளவர். கண்களுக்கு மேல் சற்று அதிகமாக தொங்குவது போன்ற புருவங்கள். சற்று சிவப்பேறிய ஒரு உக்ரத்தோற்றக் கண்கள். ஆளைச் சுடுவதுபோன்ற தீர்க்கமான பார்வை. கணீரென்ற குரல். பேச்சில் கொச்சையின் செல்வாக்கு.

அவரை நாங்கள் பேட்டி காணச் சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். அவரது அறையைச் சுற்றி நோட்டம் விட்டோம். சுற்றி புஸ்தகம். காகித மயம். ஒழுங்கில்லாமல் அடுக்கப்பட்டவை. அங்கங்கே தெரியும் காகிதங்கள் அவர் எழுதி வைத்திருக்கும், எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளைக் காட்டின. பல மேல்நாட்டு பிரபல எழுத்தாளர்களைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பதைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தபோது, பிச்சமூர்த்தி இந்த இடத்திலிருந்து கதை எழுதுகிறார், கவிதையும் எழுதுகிறர் என்று பட்டது.

முன்கூட்டியே பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பிச்சமூர்த்தி வெளியே இருந்து வந்ததும் வராததுமாக காரியத்தில் முனைந்துவிட்டோம். இந்த மாதிரி பேட்டி எங்களுக்கு புதிசு. தமிழில் முதல் வரிசையைச் சேர்ந்த முதிர்ந்த ஒரு எழுத்தாளரை பேட்டி காண்கிறோம். இலக்கியத் தரமாக பேட்டி இருக்க வேண்டும் என்ற ஆசை, கவலை, எப்படி அது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பேட்டி ஆரம்பித்ததுமே ஒரு சில கேள்விகளுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏறிவிட்டது. அதற்குக் காரணம் பிச்சமூர்த்தியேதான்.

எங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சுருக்கமாக, அழுத்தமாக, விவகாரமாகச் சொல்லி வந்தது மட்டுமல்ல, அடுத்த கேள்வி நாங்கள் கேட்பதற்கு தூண்டக்கூடிய வகையில், நாங்கள் என்னெல்லாம் உத்தேசித்திருந்தோமோ, அதை பொருத்தமான இடத்தில் கேட்கச் செய்ய ஏதுவாக எங்களுக்கு வழிகாட்டி இழுத்த மாதிரி இருந்தது அவரது பதில்கள். அவர் அதிகம் பொதுப்படையாக இலக்கிய விஷயங்களை விவாதிப்பதில் கவனமாக இருந்தார். குறித்த ஒன்றிரு விஷயங்களுக்கு அவர் பதிலைப் பெற முடியவில்லை. பேட்டி சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்றது. பிச்சமூர்த்தியின் பதில்கள் திட்டவட்டமாக முன்கூட்டியே அலோசித்து வைக்கப்பட்டு இருந்ததுபோல் தக்க வார்த்தைகளில் வந்து கொண்டிருந்ததால் அவைகளைத் தொடர்ந்து குறித்துக் கொள்வதும் எளிதாக இருந்தது. அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக பிச்சமூர்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டு போகிற உணர்ச்சியுடன் திரும்பினோம்.

சி சு செல்லப்பா - சு சங்கரசுப்ரமண்யன்

(வாழ்க்கைக் குறிப்புகள் சம்பந்தமான விசராணைக்குப் பிறகு பேட்டி ஆரம்பமாகியது.)

பேட்டியாளர் : நீங்கள் பி.ஏ யில் பிலாசிபி எடுத்துக்கொண்டதாக சொன்னீர்களே, அதனால்தான் உங்கள் எழுத்திலும் அதன் சாயை அதிகம் காணப்படுகிறதோ?

ந.பிச்சமூர்த்தி : அது காரணமில்லை. எங்கள் குடும்பத்தில் பரம்பரையாகவே இந்தப் போக்கு இருந்து வந்திருக்கிறது. தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக இருந்திருக்கிறார்.

பேட்டியாளர் : நீங்கள் தாடி வைத்துக் கொண்டதற்கு இதுதான் காரணமா?

ந.:(கொஞ்சம் நீண்ட மௌனம்) : 1933þல் உள் நெறியை மேற்கொண்டேன். அதன் சின்னமாக ஏற்பட்டதுதான் தாடி. உள்நெறிதான் எந்த மனிதர்க்கும் இயற்கையான வாழ்வு என்றே நினைக்கிறேன்.

பேட்டியாளர் : ஆமாம், வக்கீல் தொழில் பொருந்தாததால் தொழிலை மாற்றிக் கொண்டேன் என்றீர்களே. அப்படியானால் எழுத்தாளராக ஆனது இந்த மாற்றத்துக்கு தூண்டுதலாக இருந்ததா?

ந.பிச்சமூர்த்தி : எழுத்தினால் அதை விட்டுவிட்டேன் என்பது காரணமல்ல. எழுத்து நினைப்பு என்னைப் பற்றிய மட்டில் பால்ய முதலே இருந்தது. காலேஜில் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருந்ததுக்கு என் பரம்பரை காரணமாக இருக்கலாம். பரம்பரை என்ற உயிரியல் தத்துவம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை ஆட்கொண்டு தீரும். இந்த நியதியை தப்பமுடியாது.

என் தந்தை சகலகலா வல்லவர். ஒரு மேதை. அவருக்குள்ள மற்ற திறமைகளுடன் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் ஆகிய பாஷைகளில் சாகித்யம் இயற்ற வல்லவர். எனக்கு ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கு அவரை நன்றாகத் தெரியாது. துரதிருஷ்டவசமாக அவர் வித்தை எதுவும் எனக்கு வரவில்லை.

பேட்டியாளர் : ஞானிகளுடன் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயம் ஏற்பட்டதா?

ந.பிச்சமூர்த்தி : இன்றும் கோவிலுக்குப் போவதைவிட பெரியோர்களை அண்டுவதே மேல் என்று நான் நினைக்கிறேன். இளம் வயதிலிருந்தே துறவிகள், பைத்தியம், குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால் என்னையும் மீறியே அவர்களுடன் கலந்து விடுவேன்.

பேட்டியாளர் : இதனால்தான் அவர்கள் சம்பந்தப்பட்டதாக உங்கள் கதைகள் அதிகம் இருக்கின்றனவோ?

ந.பிச்சமூர்த்தி : இருக்கலாம். அதுவே காரணமாக இருக்கலாம். இத் தொடர்புகளால் உள்ளொளியையும் நல்ல பயனையும் அடைந்திருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்லுவேன். அவர்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால் ஆற்றில் செல்லும் கிளை போல குறிப்பின்றி புரண்டு போய்க்கொண்டே இருந்திருப்பேன்.

பேட்டியாளர் : இந்தக் குறிப்பு வாழ்க்கையில் ஏற்பட்டதுபோலவேதான் உங்கள் இலக்கியப் படைப்புகளிலும் பிரதிபலிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் வாழ்வின் ஒரு துறையிலான இயக்கம் ஆனபடியால் இலக்கியம் பாதிக்கப்பட்டேதான் தீர வேண்டும். வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் பேசுவதை நான் ஏற்கமாட்டேன். வாழும் வகை காணும் முயற்சியைவிட இலக்கிய முயற்சி சிறந்தது என்று ஒப்ப மாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம். மேதை இருந்து அந்த இன்பத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமானால் அதுவும் நல்லதுதான், முடியாவிட்டாலும் அதற்காக வருந்த வேண்டியதில்லை.

பேட்டியாளர் : நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால் கலை இன்பம் என்று தனியாக பிரிப்பதாகத் தெரிகிறது. வாழ்க்கை இன்பம் வேறு...

ந.பிச்சமூர்த்தி : இந்து நாகரீகம் இலக்கியத்துக்கு இரண்டாவது ஸ்தானம் தான் கொடுத்திருக்கிறது. முதல் ஸ்தானம் ஆன்ம வேட்கைக்கு. நான் ஒரு இந்து. இந்த அடிப்படை நோக்கில் ஏற்படுகிற விளைவுகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.

பேட்டியாளர் : ஆனாலும் தங்கள் படைப்புகளில் 'கலை இன்பம்' எடுப்பாக கிடைக்கிறதே.

ந.பிச்சமூர்த்தி : உள்ளபடியே நான் கருதும் கலை இன்பத்திற்கும் ஆன்ம இன்பத்திற்கும் தரத்தில் வித்தியாசம் இராது.

பேட்டியாளர் : (குறுக்கிட்டு) நானும் புலனின்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

ந.பிச்சமூர்த்தி : அது சரி...சொல்லை மந்திரம் என்பார்கள். சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயலுவதுதான் இலக்கியம். அந்த இடத்தில் உலகின் சிகரமும் ஆன்ம உலகின் சிகரமும் இணைகின்றன.

பேட்டியாளர் : அப்படியானால் மேல் நாட்டு இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இந்த இணைப்பு இல்லையா?

ந.பிச்சமூர்த்தி : மேல்நாட்டு இலக்கியத்தில் இந்த நோக்கு இல்லை என்று சொல்லமாட்டேன்.

பேட்டியாளர் : அறிவு நிலை அளவுக்குத்தான் உண்டு. ஆன்மிக நிலையளவுக்குக் கிடையாது என்று கூறப்படுகிறதே.

ந.பிச்சமூர்த்தி : மேல் நாட்டில் ஒரு பகுதி இலக்கியம்தான் உலகியல் இன்ப துன்பங்களே முடிவானது என்று கருதி இயங்குகிறது. டால்ஸ்டாய், மாரிஸ் மெடர்லிங், பிளேக், ஷெல்லி, யீட்ஸ், ஏ.ஈ.இ எமர்ஸன், விட்மன், எட்வர்ட் கார்ப்பெண்டர் ஆகியோர் போல், சொல்லப்போல், காஃப்கா தாமஸ் மான் போன்றவர்கள்கூட இதே ஆன்ம வேட்கையைத்தான் இலக்கிய முறையில் அமைத்திருக்கிறார்கள்.

பேட்டியாளர் : 'அன்னா கரீனினா' எழுதிய டால்ஸ்டாயையும் சேர்த்தா சொல்லுகிறீர்கள் . முழுக்க முழுக்க நடப்பியல் சம்பந்தப்பட்டதல்லவா அன்னா கரீனினா?

ந.பிச்சமூர்த்தி : ஒரு ஆசிரியரின் ஒரு படைப்பில் இந்த தொனி இல்லாமல் போனதைக் கொண்டு அடிப்படைத் தன்மையே தகர்ந்து விட்டது என்று கருதக்கூடாது. டால்ஸ்டாயைப் பற்றிய வரையில் மேல் நாட்டு முறையில் இலக்கியத்தை அணுகுவது தவறு என்று அவர் மனமாற்றம் பெற்ற பிறகு உணர்ந்தார் என்பது தெரிந்த விஷயம்.

பேட்டியாளர் : ஆகவே மேல் நாட்டு முறையில் இலக்கியம் படைப்பது சம்பந்தமாக நாமும் அதேமாதிரி முடிவுக்குத்தான் வரவேண்டுமா?

ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் சம்பந்தப்பட்ட மட்டில் தர்க்க பூர்வமான விவாதங்கள் செய்வதால் புத்தகங்கள் பெருகலாமே தவிர அதிக உண்மைகள் தெரிந்து விடுவதில்லை. ஏனென்றால் இலக்கியமும் வாழ்வைப்போல நம்மை யறியாமலே, ஒரு வேளை - நம்மையும் மீறி உந்தித் தள்ளும் ஒரு சக்தி...அல்லது எதுவோ...

பேட்டியாளர் : இதுவரை பொதுப்படையாக பேசிவிட்டோம். தமிழ் இலக்கியத்துக்கு வருமுன் ஒரு கேள்வி. தாகூருக்கும், உங்களுக்கும் ஒப்பிடுதல் செய்கிறார்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : தாகூருக்கு எனக்கும் எந்தவிதத்தில் சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. தாடியைத் தவிர. எல்லோரும் படித்த அளவுக்கோ படிக்காதஅளவுக்கோதான் நானும் தாகூரைப் படித்திருக்கிறேன் ஆங்கிலத்தில்தான். ஆனால் காளிதாசனுக்குப் பிறகு நம் நாட்டில் தோன்றிய மகாகவி தாகூர் ஒருவரே என்று சொல்வேன்.

பேட்டியாளர் : தாகூர் சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்திருப்பது போல் நீங்களும் கொடுத்திருப்பதாக விமர்சகர் க நா சுப்ரமணியம் கூறியிருக்கிறார். இந்திய உருவம் என்று தனியாகக் கூறுவதற்கு இருக்கிறதா? நமது உருவ முயற்சி பற்றியும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால்....

ந.பிச்சமூர்த்தி : நாமரூபங்களுக்கு இந்துக்கள் பெருமை தரக்கூடாது. உடம்பைப் போற்றுதல் உயர்ந்த பண்பாகாது. 'ஊனுடம்பு ஆலயம். உள்ளம் திருக்கோவில்' என்றார் திருமூலர். உருவத்திற்கு உள்ள பெருமை எல்லாம் உயிருக்குள்ள சக்தி தான். உருவத்திற்கு அழகு ஏற்படுவதே உயிரின் இயக்கத்தினால்தான். நோய்ப்பட்ட உயிரில் உருவ அழகைக் காண முயல்வது குதிரைக் கொம்புக்காக புறப்படும் வேட்டையாகும். ஆகவே உருவம் என்று இலக்கியத்தில் எந்தத் துறையில் விவாதத்தை எழுப்பினாலும் பேசினாலும் அதை நான் பெரிதாகக் கருதுவதில்லை. இந்திய நோக்கு என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதற்குத் தகுந்த இலக்கிய அமைப்புதான் ஏற்படும். தமிழ் இலக்கியத்துக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.

பேட்டியாளர் : இன்றையத் தமிழ் இலக்கியத்தில் உள்ள உருவங்கள் மேல் நாட்டு முறையைப் பின்பற்றியதா? நம் மரபு உருவங்கள் எந்த அளவுக்கு இருந்திருக்கின்றன? சோதனை என்று பேசப்படுவது எந்த அளவுக்குச் சரி?

ந.பிச்சமூர்த்தி : உயிரானது தன்னைத்தானே தின்று வாழ முடியாது. தனக்குப் புறம்பாக உள்ள பொருள்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம்தான் அது வளர முடியும். அதாவது பழயதில் புதுமை கலப்பதுதான் உயிரியக்கம். பழந்தமிழ் மரபுகள் வளரும்போது அல்லது வளர விரும்பும்போது இந்த இயற்கை நியதிகளுக்கு ஒப்ப பிறநாட்டு இலக்கிய மரபுகளையும் ஜீரணம் செய்து கொள்ளப் பார்க்கிறது. தமிழ் நாட்டு சிறுகதை உருவம் என்று சொல்ல எதுவும் இல்லை. அமெரிக்க உருவம், இங்கிலீஷ் உருவம், என்றெல்லாம் சொல்வது பயனில்லாத பாகுபாடுகள். தெளிந்த ரசனையைக் காட்டினால் உருவம் நன்றாக இருக்கிறது என்று நினைக்க வேண்டும். குழம்பிய ஜலத்தில் முகம் தெரியாது. அப்போது இலக்கியம் கண்ணாடி ஆகாது.

பேட்டியாளர் : இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ந.பிச்சமூர்த்தி : உங்கள் கேள்வியிலேயே தவறு இருக்கிறது. நீங்கள் சொல்லுவதிலே ஒரு முக்கிய விஷயம் இருப்பதை உணர்ந்தீர்களோ கண்ணாடி மனிதனை அப்படியே காட்டக் காணோம். இடது புறமாக இருப்பது கண்ணாடியில் வலதுபுறமாகவும், வலது புறமாக இருப்பது இடது புறமாகவும் தெரியும். ஆகவே கண்ணாடிகூட மாற்றத்தான் செய்கிறது. இலக்கியம் கண்ணாடியை விட அதிக மாற்றத்தைத் தருகிறது. இன்னொரு விஷயத்தைக்கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துக்கொள்ளலாம். கருப்பையிலிருந்து பிறக்கும் குழந்தை தலைகீழாகத்தான் பிறக்கிறது. பூமியில் வந்தவுடன் நிமிர்கிறது. இலக்கியத்தில் ஆசிரியர் கருப்போல குறுகி அணுவாகி வியாபித்து விடுகிறான் ஆசிரியன் அகண்டாகாரம் அடையும் சாதனையில் எந்த இலக்கியமும் ஒரு அறிகுறி அல்லது ஒரு மைல்கல்.

பேட்டியாளர் : சமீபத்தில் உங்கள் மணிவிழா பாராட்டுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது பாம்பு அடிக்கடி சட்டை உரித்துக் கொள்வதுபோல் எழுத்தாளன் தன்னை புதுசுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றீர்களே.. தமிழ் எழுத்து உலகில் அந்தச் சட்டை உரிப்பு எந்த அளவுக்கு இன்று நடைபெறுகிறது? பாரதி, ராமையா மணிக்கொடி காலத்தில் நடந்த சட்டை உரிப்பு மாதிரி? இன்று பொதுவாக இன்றைய தமிழ் இலக்கியத்தில்...

ந.பிச்சமூர்த்தி : தமிழ் நாட்டில் இலக்கிய முயற்சிகள் எல்லாவற்றையுமே நான் வரவேற்கிறேன். சைக்கிள் சவாரி செய்பவன் பயிற்சி காலத்தில் தவறி விழுந்தால் அவனை ஏளனம் செய்வது தவறு. அவனுக்கு ஊக்கம் ஊட்டத்தான் வேண்டும். அவன் சொல்லும்வழி தவறாக இருந்தால், அதை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமை. எத்தனையோ லட்சக் கணக்கான முயற்சிக்குப் பிறகுதான் இயற்கை, மனிதன் என்ற ஒன்றை சாதித்தது. புதிய தமிழ் இலக்கியத்தில் ஒரு நூற்றாண்டு ஆகட்டுமே. எல்லோரும் சரியான நோக்கோடு முயலுட்டுமே. அவற்றின் தரத்தைப் பற்றி முன்கூட்டி முடிவுகட்ட வேலை யாருடையதும் அல்ல. அதை அனுபவிக்கும் சந்ததியார் அந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள். எப்பேற்பட்ட விமர்சனமும் ஒருவருடைய அபிப்பிராயம்தான் - அதாவது அடிப்படையான கொள்கையுடன் பிணைக்கப்படாத வரையில். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேனா?

பேட்டியாளர் : நாங்கள் பின்னர் கேட்க இருந்த கேள்விக்கு பதில் இப்போதே கிடைத்து விட்டது. அதாவது விமர்சனம் பற்றி. தமிழ் எழுத்துலகில் படைப்பாளி சம்பந்தப்பட்ட மட்டில் சட்டை உரிப்பு.

ந.பிச்சமூர்த்தி : என்னைப் பற்றியே பேசலாம் என்று நினைக்கிறேன். காத்தாலும் அழித்தாலும் இலக்கியமே சரணம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். பல காரணங்களால் நான் இக் காரியத்தை செய்யாமல் இருந்து விட்டேன். இலக்கிய ஆசிரியன் எவனும் தன்னை இலக்கியத்துக்கு என்று ஒதுக்கி வைப்பானானால் அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய வழியை அவன் காண்பான். சட்டை அப்போது தானாகவே உரியும். இந்த சமர்ப்பணம் என்பது ஆன்மத்துறையில் எவ்வளவு அவசியமோ அதைவிட இன்னும் அத்யாவச்யம் இலக்கியத்திலும். எழுதிப் பிழைப்பது என்பதைப் பற்றி நான் பேசவே இல்லை. மதத்திற்கு என்ன பெருமை கொடுப்பார்களோ அதற்குக் குறையாதபெருமை உண்மையான இலக்கியத்துக்கும் உண்டு.

பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டியினர் இந்த சட்டை உரிப்பு செய்து வந்திருக்கிறார்களா?

ந.பிச்சமூர்த்தி : கோஷ்டிகளைப் பற்றிப் பேசுவது என் உடன்பாடு அல்ல. சட்டை உரிப்பது என்றால் புதிய முயற்சிகள் என்றுதான் பொருள். லட்சியத்தைக் குறைத்துக் கொண்டால் பிழைப்பு நிலைக்கு இறங்கி விடுகிறோம். பிழைப்பு நிலைக்கான சாதனம் இலக்கியம் என்று நினைப்பு ஓரளவு தமிழ்நாட்டில் இன்று பரவி இருக்கிறது. எதை நம்பி வாழ்கிறோமோ அது சோறு போட வேண்டும் என்பது நியாயம்தான். சோறு போடவில்லை என்பதற்காக விட்டுச் செல்ல முடியாது. அதற்காக தரத்தையும் இறக்கிவிடக் கூடாது.

பேட்டியாளர் : குழுக்களாக இருந்து இலக்கியம் சாதிக்க முடியுமா? வட்டத்தொட்டி, வெள்ளி வட்டம்....

ந.பிச்சமூர்த்தி : நான் அதை நம்பவில்லை. உலகத்தைப் பார்ப்பது என்றால் என் சொந்தக் கண் பார்த்தாலொழிய எனக்குத் தெரிவதில்லை. நான் உண்ட உணவை பிறர் ஜீரணம் செய்ய முடியாது. இலக்கியம் கலை, உருவம் பெறும் வரையில் அது தனி மனிதனின் வேதனையோ ஆவேசமோ அல்லது இன்பமோ ஆகும். அதற்குப் பிறகு இலக்கியாசிரியனுக்கும் அந்தப் படைப்புக்கும் சம்பந்தம் இல்லை.

பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டி என்று ஒன்று...

ந.பிச்சமூர்த்தி : கிடையாது.

பேட்டியாளர் : பின் ஏன் அப் பெயரை அடிக்கடி பிரஸ்தாபிக்கிறார்கள்?

ந.பிச்சமூர்த்தி : பொதுவான போக்கு இருந்ததைக் கொண்டு ஏதோ கோஷ்டியாக இருந்தது போல தவறுதலாய் பேசி வருகிறார்கள். புதுமைப்பித்தனுக்கும் கு ப ரா வுக்கும், எனக்கும் எந்தவிதத்தில் ஒற்றுமை இருக்கிறது.

பேட்டியாளர் : கு.ப.ரா பெயரை பிரஸ்தாபித்தீர்கள். உங்களை 'இரட்டையர்' என்கிறார்களே எப்படி?

ந.பிச்சமூர்த்தி :கும்பகோணத்தில் 3, பிள்ளையார் கோயில் தெரு, எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். நான் காற்றாடி கட்டிவிட்ட நாள் முதல், அவன் தவளைக் குஞ்சுகளை நெருப்புப் பெட்டியில் போட்டு விளையாடின நாட்கள் முதல் இணைபிரியாத தோழர்கள்.

பேட்டியாளர் : (குறுக்கிட்டு) அதுதான் கு.ப.ராவின் 'பாட்டியின் ஆதங்கம்' என்ற கதையில் அந்தக் குழந்தைகள் தவளை விளையாட்டு பிரஸ்தாபம் இருக்கிறதோ?

ந.பிச்சமூர்த்தி :(சிரித்து) அப்படியா? இருக்கா? அதற்குப் பின் படிப்புக்காக வெளியூர் போனபோதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயேதான் காணப்படுவான். அவன் உத்யோகம் பார்த்த காலத்திலும்கூட கும்பகோணம் வரும்போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர்ந்துதான் பார்க்க முடியும். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம். வ.ரா.தான் எங்களை இரட்டையர் என்றார்.

பேட்டியாளர் : பாரதிக்குப் பின் வ ரா ஒரு இலக்கிய சக்தியாக விளங்கினாரே. அதைப்பற்றி அதிகம் இப்போது பிரஸ்தாபிக்கப்படுவதில்லையே. வ ராவின் இலக்கிய சாதனை பற்றி உங்கள் கருத்து?

ந.பிச்சமூர்த்தி : வ ரா சில புதிய துறைகளைக் கையாண்டார். வாழ்வில் பாமர மக்கள் என்று கூறப்படுவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் இடம் சம்பாதித்துத் தர முயன்றவர்களில் முதல்வர் என்றே அவரைப் பற்றிச் சொல்லலாம். அவருடைய நடைச் சித்திரத் தொகுப்பு இதற்கு சிறந்த சான்று. இங்கிலிஷ் ஆசிரியர் ஏ ஜி ஜி செய்த காரியத்தை வ ரா தமிழ் இலக்கியத்திற்குச் செய்திருக்கிறார். ஒரு விதத்தில் அவர் ஜான்சனைப் போன்றவர். அவருடைய எழுத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேற்பட்ட சக்தி வாய்ந்தது வரா, என்னும் ஜீவன். அந்தச் சக்தியின் கவர்ச்சி முழுவதும் அவருடைய இலக்கியத்தில் காணப்படுவதாகச் சொல்லமுடியாது. ஒரு விதத்தில் வசனத்திற்கு புதிய நியதிகளை உண்டாக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றே சொல்லலாம். தனித்துச் சுருங்குவதைவிட விரிந்து பரவுவதே அவரது எல்லாவிதத்திற்குமான கொள்கை.

பேட்டியாளர் : பாரதி, வ.ரா வுக்குப் பிறகு அத்தகைய சக்தி இன்று தமிழ் நாட்டில் இல்லாதது இன்றைய மந்தத்திற்கு காரணமா? சாதனைக் குறைவுக்குக் காரணமா?

ந.பிச்சமூர்த்தி : தனி ஜீவன் அரசியலில் எதையும் சாதிக்கலாம். ஆனால் இலக்கயத்தில் எந்த ஜீவனின் புது முயற்சியைப் பார்த்தாலும் அந்த முயற்சிக்கு இட்டுச் செல்லும்பாதை அதற்கு முந்திய இலக்கியத்தில் இருப்பது காணப்படும். ஏற்கனவே இலக்கியம் தனி ஜீவனின் முயற்சி என்று சொல்லி இருக்கிறேன். பாரதி புதிய தமிழ் இலக்கியத்தை உண்டாக்கினார் என்று சொல்வதைவிட புத்துயிர் பெற்ற தமிழ் நெஞ்சம் பாரதியாக குரல் கொடுத்தது என்று கூற வேண்டும். அதேபோலத்தான் வ.ராவும்.

பேட்டியாளர் : இப்போது அந்த மாதிரி தொனிக்கும் குரல்?

ந.பிச்சமூர்த்தி : இல்லை என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டுக் கருத்துக் குழப்பங்கள் காரணமாக விரிந்து உயர்ந்து தலமை தாங்க வேண்டியவர்கள் சுருங்கி நின்று விடுகிறார்கள்.

பேட்டியாளர் : இதனால் இலக்கிய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதை....?

ந.பிச்சமூர்த்தி : அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழன்னை ஓயாத இளமை பெற்றவள். அவள் பொலிவை பல விதத்தில் காண்கிறோம். எல்லாவிதப் பொலிவையும் ஒருவர் அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்ல இயலாது. அவரவர் போக்குப்படி தமிழன்னையை வணங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

பேட்டியாளர் : கு.ப.ரா வைப்பற்றி ஒரு கேள்வி. அவர் ஒரு மாதிரியான 'செக்ஸ்' கதைகள் மாப்பஸன் மாதிரி எழுதினதாக அபிப்பிராயம் கூறப்படுகிறதே. இந்த 'செக்ஸ்' விஷயத்தை ஒரு இலக்கிய பிரச்னையாக அவர் கையாண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்குத் தெரிந்தவரையில் ராஜகோபாலன் மாப்பஸன் அதிகம் படித்திருந்தான் என்று சொல்வதிற்கில்லை. அவன் கதைகள் பச்சையாக இருக்கின்றன என்று கூறுவதுபற்றி நான் ஒன்று சொல்வேன். வாழ்வு பச்சையாக இருந்தால் இலக்கிய ஆசிரியன் என்ன செய்வான்? அவைகளை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களைக் கையாளக் கூடாதா என்று கேட்டால் அது அந்தந்த ஆசிரியரைப் பொறுத்த விஷயம். வேதனையைத் தாங்கும் சக்தி ராஜகோபாலனுக்கு கிடையாது. அவன் உடம்பு மிகவும் நோஞ்சல். பெண்கள் படும் வேதனை அவனால் தாங்க முடியாது. ஆகவே பெண்ணின் வேதனையே அவனுடைய இலக்கிய விஷயமாயிற்று.

பேட்டியாளர் : உங்கள் கதைகளுக்கு எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் ஆதாரமா?

ந.பிச்சமூர்த்தி :எல்லாக் கதைகளுக்கும் சொல்லமுடியாது. சில கதைகளுக்கு இருக்கலாம். ஆனால் வாழ்வு இலக்கியத்தில் வரும்பொழுது திரிந்து வேறு உரு கொண்டுவிடுகிறது.

பேட்டியாளர் :ஏதாவது உதாரணங்கள் ?

ந.பிச்சமூர்த்தி : கும்பகோணம் கடைத் தெருவில் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த ஒரு பையன் இருந்தான். அவனைப் பார்த்தால் அரைப் பைத்தியம் போலதான் இருக்கும். அவன் அனாதை. அவன் என் மனதில் விட்ட வடுத்தான் 'அரைப் பைத்தியம்' என்ற கதையாக உருவெடுத்தது. 'மோஹினி' என்ற என் கதைக்கு ரவிவர்மாவின் படம் தூண்டுகோல்.

பேட்டியாளர் : கேட்கப்போகிற கேள்வி பற்றி வித்தியாசமாக நினைத்துவிடாதீர்கள். 'பதினெட்டாம் பெருக்கு'க்கு எதாவது அம்மாதிரி அநுபவம்.....?

ந.பிச்சமூர்த்தி : கிடையவே கிடையாது.

பேட்டியாளர் : நீங்கள் கதை எப்படி எழுதுகிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்கே தெரியாத விஷயம். ஒரு காரணம் சொல்கிறேன். சாலிவாஹனன் 'கலாமோஹினி' பத்திரிகை நடத்தியபோது நெருக்கி கதை கேட்டார். முடியாது என்று சொல்லிவிட்டு திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றுவிட்டேன். பஸ்க்காக ஒரு திண்ணையில் உட்கார்ந்து இருந்தேன். ஏதோ ஒரு லயிப்பில் ஒரு புதுக்கவிதை எழுதினேன். முடித்துவிட்டுப் பார்க்கும்போது பஸ் போய்விட்டது. சாலிவாஹனன் வீட்டுக்குத் திரும்பி கவிதையைக் கொடுத்தேன். அதற்குப் பெயர் 'காட்டு ராஜா'. அடுத்த இரண்டொரு தினங்களில் 'கவி' என்ற கதை எழுதினேன். அதை 'கலைமகள்' பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆகையால் எப்படி எழுதுகிறேன், எப்பொழுது எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

பேட்டியாளர் :புதுக்கவிதை முயற்சி நீங்களும், கு.ப ராவும் ஆரம்பித்தீர்களே, இன்று அதற்குள்ள இடம் என்ன என்று நிதானிக்க முடிகிறதா?

ந.பிச்சமூர்த்தி : புதுக்கவிதை முயற்சி பற்றியவரை அதற்கு இன்று போதிய வரவேற்பு இருக்கிறதென்று சொல்லமாட்டேன். இந்த புதுக்கவிதை முயற்சி வலுத்தால் யாப்புக்கு இணங்கிய கவிதை முயற்சியிலே புதிய வலிமையும் ரசனையும் தோன்றும் என்று நினைக்கிறேன்.

பேட்டியாளர் : புதுக்கவிதை, வசன கவிதை என்ற பெயர்கள் பற்றி உங்கள் கருத்து?

ந.பிச்சமூர்த்தி : பெயரைப்பற்றி எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஒரு குழந்தைக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதை உலக அநுபவத்தில் பார்க்கிறீர்களே.

பேட்டியாளர் : உங்கள் கவிதைகளில் கலீல் கிப்ரான் பாதிப்பு (இன்ஃப்ளுயன்ஸ்) இருப்பதாகச் சொல்லலாமா?

ந.பிச்சமூர்த்தி : கலீல் கிப்ரான் என்ற ஒருவர் இருந்ததே எனக்கு இரண்டு வருஷங்களாகத்தான் தெரியும். தவிரவும் கிப்ரான் புதுக்கவிதைப் பேர்வழியும் அல்லவே. அராபியில் அவர் எழுதியுள்ளது எல்லாம் யாப்புக்கு இணங்கியவையே.

பேட்டியாளர் : நாவல் எழுதும் முயற்சி நீங்கள் செய்யவில்லையா?

ந.பிச்சமூர்த்தி :இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.

பேட்டியாளர் : சிறுகதைகள் எழுதிப் பழகிய கைக்கு நாவல் எழுதுவது எப்படிப் படுகிறது?

ந.பிச்சமூர்த்தி : நாவல் எழுதுவது சிறுகதை எழுதுவதைப்போல் அல்ல என்று தோன்றிகிறது.

பேட்டியாளர் : உங்கள் எழுத்தில் ஆரம்ப காலத்தில் ரொமாண்டிக், பிற்காலத்தில் 'பிலசாபிக்' என்று காலகட்டம் பிரித்துச் சொல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : அப்படிச் சொல்வது தவறு என்று நினைக்கிறேன். என் கதைகளை ஒரு லேபிளுக்குள் வகைப்படுத்த விரும்புகிறவர்கள் தோல்விதான் அடைவார்கள். இந்தச் சொற்றோடர்களுக்கே பொருள் கிடையாது என்னைப் பொறுத்தவரை.

பேட்டியாளர் :'காஷ÷வல் மானர்'ல பல நல்ல கதைகள் எழுதி இருப்பதாக க.நா சுப்பிரமண்யம் உங்கள் சமீபத்திய கதைத் தொகுதி மதிப்புரையில் கூறி இருக்கிறாரே. அப்படி என்றால் என்ன?

ந.பிச்சமூர்த்தி : விமர்சகர் என்ன கருத்தில் சொல்லி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் 'பதினெட்டாம் பெருக்கு' கதைகளில் காணும் சிந்தனை வேகத்தைவிட கடுமையாகவே அதில் காணப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

பேட்டியாளர் : உங்கள் எழுத்து சம்பந்தமாக இடையில் ஏற்பட்ட பதினெட்டு ஆண்டு இடைநிறுத்தம் இதைப் பாதிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : ஒருவேளை என்னுடைய வளர்ச்சியை இது காட்டுவதாக இருக்கலாம்.

பேட்டியாளர் :தற்போதைய பத்திரிகை உத்தியோகம் உங்கள் படைப்புச் செயலை பாதிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : ஒன்றும் பாதிக்கப்படவேயில்லை

பேட்டியாளர் : இப்போதெல்லாம் நீங்கள் ஓரங்க நாடகம் எழுதுகிறதே இல்லையே.

ந.பிச்சமூர்த்தி : இப்போதுகூட ஒன்று எழுத முயன்று கொண்டிருக்கிறேன். எழுதாதற்கு காரணம் எதுவும் இல்லை. நடுவில் பதினெட்டு வருஷ காலம் நான் எதுவுமே எழுதவே இல்லையே. எழுதுவதை மறந்தே விட்டேனே.

பேட்டியாளர் : வேண்டுமென்றேயா?

ந.பிச்சமூர்த்தி : இல்லை. கவனம் எல்லாம் உத்தியோக விஷயத்தில் சென்றதால் படைப்புக்கான மனநிலை ஏற்பட்டதே கிடையாது.

பேட்டியாளர் : அதேபோல பத்திரிகை வேலையும் மன நிலையை பாதிக்காதா?

ந.பிச்சமூர்த்தி : பாதிக்காது. அன்று வேலை அன்றோடு நின்று விடுகிறது. சட்டையை கழற்றி வைப்பதைப் போல. மறுநாள் காலை வரையில் மனத்திற்கு சுதந்திரம் தானே?

பேட்டியாளர் : கோயிலைவிட பெரியோர்களை அண்டுவதையே விரும்பிய நீங்கள் பதினெட்டு வருஷம் கோவிலுக்குள்ளேயே இருக்க ஏற்பட்டதேங?

ந.பிச்சமூர்த்தி : அதுதான் அதில் உள்ள விசேஷம். கோயிலில் கூட அதனுடைய நிர்வாகத்தை கவனிப்பதுதான் என் கடமையாக இருந்திருக்கிறது. கோயிலில் எனக்கு வெறுப்பு என்று எண்ணிவிட வேண்டாம். தமிழ்நாட்டு கலாசாரம் முழுவதும் இன்றும் கோயிலில்தான் காணப்படுகிறது. கடவுளை விட குருவையே மேலானவர்களாக பாவிப்பது நம்முடைய வழக்கம்.

பேட்டியாளர் : கவியாகவும் இருந்து, பதினெட்டு வருஷம் கோயிலுக்குள்ளேயே இருந்த நீங்கள் மாணிக்க வாசகர், தாயுமானவர் போல் ஆகிவிடாமல் தப்பிப் பிழைத்து இலக்கியத்துக்குத்திரும்பினீர்களே நல்லவேளை (பிச்சமூர்த்தி வாய்விட்டுச் சிரித்து விட்டார்)

பேட்டியாளர் :உங்கள் 'முள்ளும் ரோஜாவும்' போட்டியில்பரிசு பெற்றதே. போட்டி பற்றி உங்கள் அபிப்பிராயம்என்ன?

ந.பிச்சமூர்த்தி : போட்டிகள் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.

பேட்டியாளர் :பிரதேச இலக்கியம் மேல் நாட்டில் வளர்ந்திருக்கிறதே. அம்மாதிரி தமிழ் நாட்டில்?

ந.பிச்சமூர்த்தி :ஏன், புதுமைப்பித்தன் தமிழ் வசனத்தில் திருநெல்வேலி வாசனையும், ஆர் ஷண்முகசுந்தரம் நாவல்களில் கோவை மண் மணமும் வீசுகிறதே.

பேட்டியாளர் : அம்மாதிரி இலக்கிய வளர்ச்சி அதிகம் இருப்பது விரும்பத்தக்கது இல்லையா?

ந.பிச்சமூர்த்தி : நவநாகரீகச் சூழ்நிலையில் தமிழ் வசனம் இன்ன உருவத்தை அடையும் என்று கூறமுடியாது. சம்பாஷணை என்று இலக்கியத்தில் வரும்போதெல்லாம் பிரதேச வாசனை வீசாவிட்டால் அதில் இலக்கிய ரசனை, உண்மை இருக்காது.

பேட்டியாளர் :'பிக்ஷ÷' என்ற புனை பெயரை வைத்துக் கொள்ள காரணம்?

ந.பிச்சமூர்த்தி :கவிதைகள் அந்தப் பெயரில் ஆரம்பத்தில் எழுதினேன்.

பேட்டியாளர் : மனநிழல் கூட எழுதி இருக்கிறீர்களே.

ந.பிச்சமூர்த்தி : ஆமாம். ஒரு காலத்தில் துறவில் எனக்கு மோகம் இருந்தது உண்மை. அந்த மோகம் விடுபட்ட பிறகு அந்த மாதிரியான தொனியுள்ள பெயரையாவது வைத்துக்கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டேன். என் பெயரின் சரியான உருவம் பிக்ஷôடனமூர்த்திதானே.

பேட்டியாளர் : முடிவாக ஒரு வேண்டுகோள். அறுபது ஆண்டுகள் நிறைந்த முதிர்ச்சியில், முதிர்ந்த எழுத்தாளர் என்ற நிலையில் இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன் படுகிற வகையில் நீங்கள் அளிக்கும் செய்தி?

ந.பிச்சமூர்த்தி : சொந்த வாழ்வை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு என்று சமர்ப்பணம் செய்து வாழ வேண்டியதுதான் எந்த தமிழனுடைய கடமையும் ஆகும் என்று நினைக்கிறேன். எதற்கேனும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு உப்பில்லாத ஊறுகாய். குறிப்பாக இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் இன்றியமையாதது.

(எழுத்து ஏடு 21 - செப்டம்பர் 1960)

நன்றி : நவீன விருட்சம்

Apr 20, 2012

சிந்தாநதி - லா.ச. ராமாமிருதம்

1967/68

நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோஜம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரை சந்திக்கும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா என் நாவல் “புத்ர“ வைப் படித்திருந்தார் என்று la_sa_ra சொன்னால் மட்டும் போதாது. ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து ரசித்து மகிழ்ந்தார். அதுவும் பெரிதல்ல. புத்திபூர்வமாக இலக்கிய ரீதியில் வாழ்க்கையையே நோக்கப் பழகிக்கொண்ட பக்குவ மனம் – அதுவும் பெண்டிரில் காண்பது மிக மிக அரிது என்று என் கருத்து. அந்த மூன்று நாட்களும் எனக்கு மிக சந்தோஷமான நாட்கள்.

கன்யாகுமரியின் காந்தம் சாதாரணமன்று. மறுவருடமும் ஆனால் நான் மட்டும் தஞ்சை திருச்சி மதுரை என்று ஆங்காங்கே தங்கி ரசிக நண்பர்களுடன் அளாவி.. அது தனிக்குஷி தான்.

தென்காசியில் ஒரு நண்பர் வீட்டில் மூன்று நாட்கள் காம்ப். ஜாலி டைம். அவர் பேச்சுவாக்கில் நாகர்கோயிலில் என் நண்பரின் தாயார் தவறி நான்கு மாதங்களாயின என்று சொன்னபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். என் பிரயாணமே நாகர்கோயிலை நோக்கி அந்த அம்மாவுடன் மறு சந்திப்பை எதிர்நோக்கித்தானே! ஆனால் அவர் மறைவு பற்றி எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை? எனக்கு மன வருத்தம்தான்.

மறுநாள் நாகர்கோயிலில் நண்பர் வீட்டை அடைந்தபோது பிற்பகல் 3 மணி இருக்கும். என்னைக் கண்டதும் எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்! அந்த உணர்ச்சியின் பரஸ்பரத்தை விஸ்தரிக்கவும் வேண்டாமா!

tவாசல் அறையில் நண்பரும் நானும் பேசினோமோ பேசினோமோ நேரம் போய்க் கொண்டிருந்ததே தெரியவில்லை. அவர் தரையில் பாயில் படுத்தவண்ணம். எதிரே விசுப்பலகையில் தலையணையில் சாய்ந்தபடி நான்.

என்ன பேசினோம்? எல்லாவற்றையும் பற்றித்தான். மேனாட்டு இலக்கியம். நம்நாட்டு இலக்கியம். புதுக் கவிதை. புது வசனம். எழுத்தின் நுணுக்கங்கள். பங்சுவேஷனின் தனி பாஷை. மனிதர்கள். புவனம். வாழ்sinthanathi க்கை...

சினிமாவைத் தவிர இந்நாளில் தடுக்கி விழுந்தால் பேசுவதற்கும் கடிதங்களில் பரிமாறிக் கொள்ளவும் அதுதானே சப்ஜெக்டே!

அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்ffகளைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைதுக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை.

சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா?

ஆனால் இதுபோன்ற நேரங்கள் காய்ப்பு காண நினைவைச் சூடிவிட்டுப் போமே தவிர நம்மோடு காயமாக இருத்தி வைத்துக் கொள்ளற் பாலன்று.

சற்று நேரம் கழித்து – எந்நேரமோ? அவர் புழக்கடைப் பக்கம் போனார். விளக்கைப் போடாமலே நான் அந்த அறையுள் இன்னொரு அறையுள் – இல்லை - அதன் வாசற்படியிலே நின்று சுற்றி நோக்கினேன்.

கட்டில் ஜன்னலோரமாக அதே மூலையில்தான் மெத்தையும் இரண்டு தலையணைகளும் – அவைகளும் அதே தாமோ? மற்றபடி பண்டங்கள் நாற்காலிகள் ஏற்கெனவே நான் அவைகளைப் பார்த்திருந்த இடங்களும் நிலையும் பெரிதும கலைந்த மாதிரி தெரியவில்லை.

“அம்மாவைத் தேடறேளா?” என் பின்னாலிருந்து என் செவியோரமாய் பேச்சே ஒரு மூச்சு.

தன் தாயாரின் மறைவை அவர் தெரிவிக்கும் விதமா?

எப்படியும் இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இல்லை. அந்தக் கேள்வியை ஒரு பதிலாகவே நான் படித்தேன். அதுவும் அந்தத் தருண விசேடம் தானா?

அம்மா என்றால் ஒரு அம்மா தான். உன் அம்மா. என் அம்மா. தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா.

போனவருடம் இந்த வீட்டுக்கு நான் வந்திருந்த போது என் தாயின் முதல் வருடச் சடங்குகளை முடிந்த கையோடு.

ஆகவே இங்கே இப்போ நான் தேடியது அவர் தாயாரையா? என் தாயாரையா?

பதிலை எதிர்பார்க்காமால் ஆனால் ஏதோ இன்ப ரகசியத்தில் சீண்டிக்கொண்டேயிருக்கும் கேள்வி.

சிந்தாநதி ஓட்டத்தில் துள்ளு மீன்.

****

தட்டச்சு & ஓவிய பிரதி உதவி: ரமேஷ் கல்யாண்

தினமணியில் 1984-ல் தொடராக வந்தது.

Apr 10, 2012

மொழி அதிர்ச்சி - கோபிகிருஷ்ணன்

''பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.''

''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.''

''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு gopikrishnan-1 மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..''

''வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?''

''சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.''

''என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..''

''சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?''

''தூங்குறா.  ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.''

''என்ன ஆச்சுன்னா தூக்கம் கெடுங்குறீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க.''

''நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?''

''அப்படிச் சொல்றதுக்கில்லீங்க..ஏதோ சாப்பிடும்..ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.''

''என்ன ஆயிடுச்சின்னா சாப்பாடு எறங்காதின்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''குளிக்கிறதுலெ ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா?  தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?''

''குளிக்குது.  அதுலெ என்னாங்க இருக்கு?  ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க.. அப்ப குளிக்காதுங்க..''

''என்ன ஆனா குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க.. நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''இவங்களுக்குத் தலையிலெ எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?''

''பலமா அடின்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு.  அவ்வளவுதாங்க..''

''ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க.  நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''நா மேக்கொண்டு கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..''

''எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?''

''அப்பிடிச் சொல்றதுக்கில்லே..ஒங்களெப் புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..''

''...............................''

''நடுநடுவுலெ எனனமோ ஒரு வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு கொஞ்சஞ் சொல்றீங்களா?''

''அட, நீங்க ஒண்ணு..அது ஒண்ணுமில்லீங்க..''

''அப்பிடி நீங்க சொல்லக்கூடாது.  நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான் நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும்.  இல்லேன்னா இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..''

''நா புரியாத எதெயும் சொல்லலீங்களே.''

''இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான் எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?''

''அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு 'டை' யெல்லாம் கட்டிக்கிட்டு ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..''

''எனக்குச் சத்தியமாப் புரியல்லெ.''

''ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?''

''என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லீட்டீங்க..''

''பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே.  ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?''

(அக்டோ பர் - டிசம்பர் 1991ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கதை)

நன்றி: நவீன விருட்சம்

Apr 4, 2012

நான் - நகுலன்

.

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்nagu8
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?


நான்(2)

நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன் போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.

Apr 1, 2012

அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்

அம்மா வந்தாள் நாவலின் சிறு பகுதி

பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிt_janakiraman_2க் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே யிருக்கிறார். அண்ணா வழக்கம் போல உச்ச ஸ்தாயியில் ட்யூசன் சொல்லுகிறான். தெருவில்   எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு - ஒன்று கூடி - கச்சேரியின் மிருதங்கம், பானை டோலக்கு, கஞ்சிரா, கொன்னக்கோல் எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவார்களே... அதுபோல், ஒன்றின்மேல் ஒன்று விழுந்து கட்டுப் பட்டாசுப்போல வெடிக் கின்றன. சை சை என்று யாரோ கத்துகிறார்கள். ஒரு நாய் உயீ உயீ என்று அழுதுகொண்டே ஓடுகிறது. பொட்டென்று கச்சேரி ஓய்ந்துவிட்டது; இருந்த இடம் தெரியவில்லை. அடுத்த வீட்டு கார்ப்பரேஷன் பில் கலெக்டர் சேர்ந்தாற்போல நாற்பது ஐம்பது தும்மல் போடுகிறார். நாலு நாள் வட்டம்; அவருக்கு அது ஒரு கணக்கு.

ஆனால் நிசப்தமாகத்தான் இருக்கிறது. அப்பு மறந்து போகமாமலிருப்பதற்காக காலையிலும் பகலிலும் வேதம் சொல்லிக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவனுக்கு நிசப்தமாகத்தான் இருக்கும். இரவில் மனதுக்குள் சொல்லிக் கொண்டேயிருப்பான். அப்போதும் அவனுக்கு நிசப்தமாகத்தானிருக்கும்.

விடியற்காலையில் எழுந்து விடுகிறான் அவன். குளிக்கிறான். ஓதுகிறான். மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வருகிறான். பஸ் ஏறி மாம்பலம் போகிறான். ஓய்வெடுத்துக்கொண்ட ஒரு என்ஜினீ யரின் வீட்டுக்குப் போகிறான். ஒரு ஏழெட்டுப் பேர் வருகிறார்கள். வயதானவர்கள். ஆனால், தளதள வென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கிறான். அர்த்தமும் சொல்லு கிறான். பத்து மணி சுமாருக்கு வீடு திரும்புகிறான். மீண்டும் தானே சொல்லுகிறான். காலையில் போலவே மாலையில் இன்னொரு நாலு கிழவர் களுக்கு ஒரு பள்ளிக்கூடக் கட்டிடத்தில் பாடம். அது வாரம் நான்கு நாள். மற்ற நாட்களில் பீச்சில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பான். அங்கே கடல் இரைகிறது. கூட்டம் மொணமொணவென்று முனகு கிறது. இத்தனையும் நிசப்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால், அம்மாவைப் பார்க்கும்போது, அப்பாவைப் பார்க்கும்போது, சிவசுவைப் பார்க்கும்போது, அந்த நாய்க்கச்சேரிக்கு மேலே காதில் ஒரு இரைச்சல் - அம்மாவை எப்போதும் பார்க்கும்போது இல்லை. அப்பாவை எப்போதும் பார்க்கும் போதுமில்லை; சிவசு வந்துவிட்டுப் போகும் நாட்களில்தான் - அல்லது, அவன் நினைவு வரும் பொழுதுகளில்தான்.

திடுதிப்பென்று சிவசுவின் குரல் சில நாட்களில் பிற்பகல் நேரத்தில் கேட்கும். ஒரு ஐந்து நிமிஷம் கேட்கும். ஒரு நாள் மாடி அறைக்குள்ளேயே கேட்டது. அன்று அப்பு முழங்கை மீது தலை வைத்து, பெஞ்சின் மீது சுவர்ப்பக்கம் திரும்பி, கண்ணை மூடி ஒருக்களித்திருந்தான்.

''ஓகோ, சார் படுத்திண்டிருக்காரா!'' என்று குரல் கேட்டது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் சிவசுவின் முதுகும் பின் தலையும் மாடிப்படியில் இறங்குவதுதான் தெரிந்தன. அப்புவுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ''போ வெளியே'' என்று தொண்டை கிழிய, நெற்றி நரம்பு புடைக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. கீழே சிவசு சிரிப்பது கேட்டது. காதில் இரைச்சலெடுத்தது. விரலைக் காதுக்குள் விட்டு அடைத்துக்கொண்டான். ஆனால் இரைச்சல் அடங்கவில்லை. மார்புக்குள் ளெல்லாம் புரையோடி விண்விண் என்று புண்ணின் நோவாக மோதிக் கொண்டேயிருந்தது. விறுவிறு வென்று கீழே இறங்கினான். சிவசு ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது. தூணோரமாக அம்மா நிற்கிறாள். அதைப் பார்க்காமலேயே, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டே விறுவிறுவென்று நடையைக் கடந்து, ஹைரோடில் ஏறினான். அப்பாடா! என்ன இரைச்சல்! என்ன சந்தடி! எத்தனை பஸ்கள்! எத்தனை கார்கள்! கார்ப்பரேஷன் குப்பை வண்டிகள் ஒரு வரிசை - பெரிய பெரிய மாடுகளுடன் லொங்கு லொங்கென்று கடகடவென்று வருகின்றன. 'எங்கோ கடையிலிருந்து வரும் நாடகக் கூச்சலும், ஒரு தட்டான் கடைச் சத்தியடியலும் சேர்ந்து கொள்கின்றன. ட்ர் ட்ர் ட்ர் ட்ர் என்று ஒரு மோட்டார் சைக்கிள் அ
ழுதப் பேரிரைச்சலுடன் கடந்து ஓடுகிறது. பால், தேன் - இன்னும் சொல்ல முடியாத இனிமைகளாக எல்லாம் காதில் வந்து ஊற்றுகின்றன. பைக்ராப்ட்ஸ் சாலையில் திரும்பி, பீச்சை நோக்கி நடந்தான் அப்பு. பழக்கூவல்! பூக்கூவல்! லாரிகள்! ஒரே அமுதப் பொழியலாகப் பொழிகிறது! வெயில் வேறு தோலைப் பிழிகிறது. பீச்சு நெருங்குகிறது. நிமிர்ந்து கல்லூரி கடிகாரத்தைப் பார்த்தால் மணி மூன்றரை தானாகிறது. கடற்கரை மணல் பரப்பு சூன்யமாகக் கிடக்கிறது. இருந்தாலும் சாலையைக் கடந்து நகர்ந்து ஒரு மரத்தினடியில் பெஞ்சு மீது உட்கார்ந்து கொண்டான் அவன். மெளனமாகத் துள்ளி விழுந்த கடல் இப்போது லேசாக இரைந்துகொண்டே விழுகிறது.

இங்கே வந்து உட்கார்ந்த பிறகுதான் தெரிகிறது. இங்கு வந்தும் பயனில்லை. இறுக மூடியிருந்த கதவைத் திறந்துவிட்டாற்போல காதில் திடீரென்று மீண்டும் சத்தம் கேட்கிறது. மனதுக்குள் அப்பா நின்று கொண்டிருக்கிறார். அப்பாவை நினைக்கும்போது இந்த இரைச்சலே அறுவறுப்பே மணியமாகப் போய் விட்டது. அவர் நேரே இருக்கும்போது வருவதில்லை. அவரோடு பேசும்போது வரவில்லை. அவரோடு சேர்ந்து வேதம் ஓதும்போது வரவில்லை. அவர் வேதாந்த பாடம் நடத்தும்போது நாலைந்து நாள் போய், அவனும் இருந்து கேட்டான். அவருடைய தர்க்க மூளை, வக்கீல்களுக்கும் ஜட்ஜுகளுக்கும் சமமாக ஈடு கொடுப்பதையும், சில சமயம் மீறிக்கொண்டு ஓங்கி வெற்றிக் களிப்புடன் ஒரு படி உயர்ந்து நிற்பதையும் பார்த்திருக்கிறான்; கர்வப்பட்டிருக்கிறான் - எங்கப்பா எங்கப்பா என்று. 'உங்களைப்போல் கார் இல்லாவிட்டால் என்ன, தோட்டம் இல்லாவிட்டால் என்ன, தோய்த்து உலர்த்திக் கசங்கிய அரைக்கைச் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தால் என்ன, முக்கால் பழுப்புப் பஞ்சகச்சம் கட்டியிருந்தால் என்ன? எங்கப்பாவுக்கு உங்கள் எல்லாரையும் ஒரு நிமிஷம் மட்டிகளாகப் பார்க்க முடியும்' என்று உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளுவான். ஒரு நாள் அந்த அரை நிமிஷ மட்டிகளைக் கடிந்து, அவர் மண்டையில் போட்டுக் கொள்வதைப் பார்த்து வெதறிப் போய், சிரிப்பை அடக்கிக் கொண்டான்... அவரோடு நாலைந்து தடவை விடியற்காலையில் பேசிக் கொண்டே உலாவ இங்கெல்லாம் வந்திருக்கிறான். அப்போதெல்லாம் இல்லாமல், இப்படித் தனியாக உட்கார்ந்து அவரை நினைக்கும்போது மட்டும் இப்படி உள்ளே புகையும் அனலுமாக எரிவானேன்?

அம்மா அவனை உட்கார்த்தி வைத்து இரண்டு நாள் மூன்று நாளைக்கு ஒரு முறை - இரண்டு வாக்கியம் கனம் சொல்லுடா கேக்கறேன்'', ''குழந்தே! கணீர்னு ஏதாவது சொல்லேன் கொஞ்சம்'' என்று கேட்பாள். தொண்டையை கனைத்துக்கொண்டு அவன் தொடங் குவான். அவள் முகம் மாறுவதைக் காணும்போது, சொல்லக்கூட ஓடாது. அதில் ஏதோ வெளிச்சம் வந்து படர்கிற மாதிரி இருக்கும். ஒரு நூறு வெள்ளை ரோஜாப் பூக்கள் வந்து லேசாக அசைந்து கொடுப்பது போலிருக்கும். கண்ணை மூடிக் கொண்டிருப்பாள் அம்மா. திடீர் என்று அதில் முத்து முத்தாகப் பனி வழிகிற மாதிரி... என்ன இது... அம்மா கன்னத்தில் நீர்தான் ஓடுகிறது.

''என்னம்மா?'' என்று நிறுத்தியவுடன் கேட்பான்.

''என்னமோடா குழந்தை. நீ சொல்ற போதெல் லாம் தாங்க முடியாம ஆயிடறதுடா இப்படி... யாருதான் இதையெல்லாம் பண்ணினாளோ!''

''பண்ணவாவதும்மா! வேதத்தை யாரும் பண்ணலே. ரிஷிகள் கண்டது அது. ஆகாசத்திலே அந்த தத்துவங் கள் எல்லாம் சூக்ஷ்மமா கண்ணுக்குத் தெரியாம, புத்திக்குத் தெரியாம இருக்கும். ரிஷிகள் தியானம் பண்றபோது தபஸ் பண்றபோது, ஒண்ணு ரண்டு அவா கண்ணிலே படும். அப்படியே நாக்கிலே சப்தமா மாறிவரும். நீ இப்ப இருக்கே பாரு. இந்த மாதிரி இப்படியே ரொம்ப தூரம் உள்ளுக்குள்ளே இறங்கி இறங்கிப் போயிருப்பா அப்ப வந்து, ரண்டு மூணு, பூ பூத்தாப்பல தெரியும். அதைப் பறிச்சிண்டு வந்துடுவா. யாரும் பண்ணலேம்மா. அது அங்கேயே இருக்கு.''

''ஆமாண்டா அப்பாக் கூடச் சொல்லியிருக்கா'' என்று தலைப்பால் கன்னத்தைத் துடைத்துக் கொள்வாள் அம்மா.

அந்த அம்மாவை இப்போது நினைக்கும்போது ஏன் இப்படி இரைச்சலும் புகையுமாகக் காதிலும் உள்ளிலும் மூச்சடைக்கிறது! ஆனால் அப்பாவை நினைக்கும்போது அது இன்னும் தாங்க முடியவில்லை. அப்பா ஏன் இப்படி இருக்கிறார் - ஒன்றையும் கவனிக்காமல் ஏன் வீட்டை விட்டு ஓடவில்லை? சன்யாசி ஆகவில்லை? ஏன் அவள் பொங்கிப் போட்டச் சோற்றை அவள் கையால் தின்றுகொண்டே கிடக்கிறார்! சுசிருசியாக இல்லாதவர்களின் கையால் இட்டச் சோறு நம்மையும் அழுக்காக, கரியாகத்தானே செய்யும்! பிருஹந்தனை மாதிரி, சிகண்டி மாதிரி ஆகிவிட்டாரா அப்பா! ஆனால் பிருஹந்தனை கூட பின்னலைத் தொங்க விட்டுக் கொண்டு யுத்த களத்தில் சரமாடிச் சின்னாப்பின்னப் படுத்தினாளே...!

பொழுது நன்றாக இறங்கிவிட்டது. கடற்கரை மணல் முழுவதும் நட்சத்திரங்களைப் போல் மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள். அப்பு எழுந்து அலையண்டை போனான். தெற்கு நோக்கி நீள நடந்தான். ஈர மணல், நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன. முன்னும் பின்னும் நகர்வது போதாதென்று பக்க வாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போலிருந்தது. ஐஸ் ஹவுஸ் அதோ தெரிகிறது. ஈர மணலிலிருந்து ஏறி, சற்று உட்பக்க மாக வந்து உட்கார்ந்து கொண்டான் அவன்.

வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது. மணலை சமன்படுத்திப் புள்ளி வைத்துக் கலைத்துக் கொண்டிருந்தான் அவன். ஈர மணலில் அணை கட்டும் இரண்டு குழந்தைகளை - சின்னக் குழந்தையோடு ஆடையைத் தூக்கி நீர் காலில் பட நின்று கொண்டிருந்த - அப்பாவும், அம்மாவும் வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். சிறிது தூரத்தில் 'சலாங்குடு' ஆடிக் கொண்டிருந்த கும்பலை இப்போது காணவில்லை. இருள் நன்கு கவிந்து விட்டது. தூரத்தில் நீல விளக்குகள் பளிச்சென்று விழித்துக் கொண்டிருந்தன. அப்படியே உட்கார்ந் திருந்தான் அப்பு. மனம், புத்தி எல்லாம் வறண்டு கிடக்கின்றன. ஒன்றுமில்லாமல் வறண்டிருப்பது எத்தனை இதமாக இருக்கிறது. அப்படியே படுத்துக்கொண்டு தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் - வெகு நேரம்.

மல்லாந்து படுத்தான். நட்சத்திரங்கள் கண்ணை உறுத்தின. ஒருக்களித்து உள்ளங்கை மீது தலை வைத்துப் படுத்து, கண்ணை மூடிக்கொண்டான். இனிமையான வறட்சி, இரைச்சல், ஒன்றுமே இல்லை. கடல் அலையும், மொணமொணவென்று எங்கோ மனிதர்கள் பேசுவதும், கடலுக்குப் பயந்து மெதுவாகக் கேட்கிற கார் சத்தமும் தான் காதில் விழுகின்றன.

அதிக நேரம் படுக்கை கொள்ளவுமில்லை. எழுந்து உட்கார்ந்தான்.

யாரது?.... அப்பா மாதிரி இருக்கிறதே... அப்பதான் .... பயமாக இருந்தது - அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. அவர் நடை சற்று நின்று, எங்கோ அவர் பார்த்தபோது தெரிந்த நிலை - இரண்டையும் பார்த்தும் பரிதாபப்பட வேண்டும் போலிருந்தது. நம்மைத்தான் பார்க்க வந்திருக்கிறாரோ! பார்க்கா மல் போய்விடப் போகிறாரோ என்று மார்பு பரந்தது.

''அப்பா!'' என்று கூப்பிட்டான். அலையும் வெளியும் அதைச் சாப்பிட்டுவிட்டன. உரக்கக் கத்தவும் மனமின்றி எழுந்து அவரருகே போனான்.

''அப்பா!''

திரும்பினார் அவர்.

''அப்புவா! என்னடாது! இங்கேயா இருக்கே! மணல்லெ சுத்திச் சுத்தி வந்துண்டிருக்கேன். அரை மணியா... எங்கே போனானோ போனானோன்னு அம்மா புலம்பிண்டேயிருக்கா.

''எங்கே போயிடப் போறேன்? பச்சைக் குழந்தையா!''

''சரிடா, அவளைக் கவலைப்படாதேன்னு சொல்ல முடியுமா?''

''நான் ஊரிலே இல்லாதபோது?''

அவன் குரல் கட்டையாக, வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போலக் கிடந்த கோபம் - இரண்டும் அவர் காதிலே பட்டுவிட்டனவோ என்னவோ - அவர் பதில் சொல்லவில்லை.

''உட்காரலாமாப்பா இப்படி கொஞ்சம்?''

''அம்மா காத்துண்டிருக்காடா.''

''யாருக்காக?''

எப்படிப் பார்த்தாரோ அவர், இருட்டில் தெரிய வில்லை. பேசாமல் சற்று நின்று, பிறகு உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ''நீதிமன்றத் தின் கலங்கரை விளக்கு இருமுறை சுற்றி வந்து விட்டது. அலைகள் ஒன்றை ஒன்று இடித்துப் புரண்டன.

''காபிகூட சாப்பிடாம வந்துட்டியாமேடா?''

''மறந்து போய்ட்டேன்''

மீண்டும் சிறிது மெளனம்.

''இந்த லெட்டரைப் பார்த்துட்டுக் கவலைப் பட்டுண்டு வந்துட்டியா? இத்தனை நாழியே இங்கே உட்கார்ந்திருக்கியேன்னு கேட்கிறேன்'' என்று அவன் வேண்டும் என்றே மெளனம் சாதிப்பதைக் குறை சொல்வதுபோல் கேட்டார் தண்டபாணி.

''இந்த லெட்டர் போட்டிருக்காளா?''

''என்னது நீ பார்க்கலியா?''

''இல்லியே எப்ப வந்தது?''

''உனக்குத் தெரியாதா? அப்படீன்னா நீ வந்தப்புறம் சாயங்காலத் தபாலில் வந்துதோ என்னவோ!''

''இந்து எழுதியிருக்காளா?''

''ஆமா, பவானியம்மாள் திடீர்னு நாலாம் நாள் மயக்கமா விழுந்துவிட்டாளாம். இடது காலும் கையும் சுரணை இல்லாமல் போயிடுதாம்! அப்புறம் டாக்டரைக் கூப்பிட்டுக் காமிச்சிருக்கா. ரத்தக் கொதிப்பு அதிகமா இருந்ததுன்னு இன்ஜெக்ஷன் போட்டானாம். கால் பாரிச வாயு மாதிரி இழுத்துடுத் தோன்னு முதலில் சந்தேகமா இருந்ததாம். நல்ல வேளையா அப்படி ஆகலியாம். நீட்டி மடக்கிறாளாம். நடக்கக் கூட முடியறதாம். ஆனா நடந்தால் சிரமமா யிருக்காம். உட்கார்ந்துண்டே தான் இருக்காளாம்.

அப்புவுக்கு அதைக் கேட்டு கவலை நம நமவென்றது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந் திருந்தான். பவானியம்மாளுக்கு வலிவான உடம்பு இல்லை. சாதாரணமாக இருப்பாள். ஆனால் வியாதி, தலைவலி, கால்வலி என்றெல்லாம் சொன்னது கிடையாது. பட்டினி கிடக்க அஞ்ச மாட்டாள். காயக்கிலேசம் பண்ணத் தயங்கமாட்டாள். அதனா லேயே உடலில் ஒரு அயர்வு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது போலிருக்கும். வயது வேறு அறுபதுக்கு மேலாகிவிட்டது. முப்பது வருட காயக் கிலேசம் இப்போதுதான் கைவரிசையைக் காட்டு கிறதோ என்னவோ!

''நான் போய் பார்த்து வந்தால் தேவலையே'' என்றான் அவன்.

''கட்டாயம் போகத்தான் வேணும்''

மீண்டும் சிறிது மெளனம்.

''நீ அது தெரிஞ்சிண்டு தான் கவலைப்பட்டுண்டு வந்தியோன்னு நினைச்சேன்'' என்றார் தண்டபாணி.

''அது நீங்க இப்ப சொல்லித்தானே தெரியும்.''

''அதுதான் சொல்றேன். இப்படி சொல்லாம சாப் பிடாம வந்துட்டியோன்னுதான் அம்மா கவலைப்பட றா.... உன்னைப் பார்த்தா என்னமோ போலிருக்கே.''

''...........''

''என்னன்னு சொல்லேன்''

''ஒண்ணுமில்லேப்பா''

''யாராவது ஏதாவது சொன்னாளா? அண்ணா, மன்னி யாராவது?''

''அவா என் மேலே உசிரா இருக்காப்பா'' எனக்கு ஒரு கவலையுமில்லே. சும்மாத்தான் வந்தேன். இங்கேயே இப்படியே சுத்திண்டிருக்கலாம் போலத் தோணித்து. இருந்துவிட்டேன்.''

''திடீர்னு அப்படித் தோணு¡துடா அப்பு! வேற யாராவது ஏதாவது சொன்னாளா...?''

''ம்ஹம்.''

''மத்யான்னம் யாராவது வந்தாளா?''

''............''

''கேட்டதுக்கு பதில் சொல்லேன்''

''எத்தனையோ பேர் வீட்டுக்கு வரா, போறா, அதனாலே என்ன இப்ப?''

''ஒண்ணுமில்லேன்னா நீ சொல்லப்படாதோ?''

''..........''

''சிவசு வந்தானோ?'' என்று அவனைப் பார்க்காமல் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார் தண்டபாணி.

''வந்தார். நான் படுத்துண்டிருந்ததைப் பார்த்துக் கீழே இறங்கிப் போயிட்டார்.

''அவன் அம்மாவைப் பார்க்கத்தானே வரான்.''

அப்பு அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கிழக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருத்தார். அவருக்குப் பின்னால் தொலைவில் நீதிமன்றத்துக் கலங்கரை விளக்கு சற்றைக் கொருமுறை பளிச்சிட்டு விட்டு மங்கிக் கொண்டிருந்தது. அலையும் சற்றைக் கொரு முறை ஓங்கி விட்டு மீண்டும் அடங்கிய ஓலமாகப் படிந்து கொண்டிருந்தது. அப்பா கல்மாதிரி உட்கார்ந்திருக்கிறார். முக்கால் இருளில் அவர் தலை மொத்தை நிழலாகத் தெரிந்ததே தவிர, வேறு ஒன்றும் புலப்படவில்லை.

''உங்களைப் பார்த்தால் அழவேண்டும் போலிருக் கிறது. 'நீ ஒரு மனுஷன் மாதிரி' என்று ஒரு 'சீ' போட்டு விட்டுப் போக வேண்டும் போலிருக்கிறது. 'அம்¡வைப் பார்க்கத்தானே வருகிறான்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டால் குமட்டிக் கொண்டு வருகிறது. அந்த வீட்டை விட்டே விரட்ட வேண்டும் போலிருக்கிறது!'' என்று வார்த்தைகள் உள்ளுக்குள்ளே புகைந்து உருண்டு கொண்டிருந்தன. ஆனால் வெளியே ஒன்றும் வரவில்லை. அஞ்சி, கூசி அவரையே பார்த்துக் கொண்டு, அவனும் ஒரு கல்லாக உட்கார்ந் திருந்தான்.

எல்லாம் ஸ்தம்பித்துக் கிடப்பது போலிருந்தது. அலை உருண்டும், வண்டிகள் ஓடியும், விளக்குகள் எரிந்தும், காற்று தவழ்ந்தும் கூட அப்படியே உலகமே நின்றுவிட்டாற் போலிருந்தது. அப்பாவின் சுரணை யற்ற அசட்டையைக் கண்டு காலமே நின்றுவிட்டாற் போலிருக்கிறது. மூச்சு, இயக்கம், எல்லாமே உறைந்து விட்டாற் போலிருக்கிறது.

சட்டென்று அப்பு அசைந்து கொடுத்தான். எத்தனை நேரமாயிற்றோ, தெரியவில்லை.

''நாளைக்கு நான் சித்தன் குளத்துக்குப் போக லாம்னு பார்க்கிறேன்பா!'' என்றான் அவன்

''ம்'' என்று திரும்பினார்.

மீண்டும் சொன்னான் அவன்.

''பவானியம்மாளைப் பார்க்கத்தானே?''

''ம்க்கும்.''

''போய்ட்டு வா... போய்ட்டு உடனே திரும்பி விடலாமோல்லியோ?''

''அத்தை என்ன சொல்றாளோ! பார்த்துண்டுதானே வரணும்.''

''சரி, அம்மா பரந்து போயிடுவ, சீக்கிரமா வராட்டா - அதுக்காகச் சொன்னேன்'' என்று எழுந்தார் அவர்.

''எம்பா?''
''எத்தனை நாழி இங்கேயே இருக்கிறது!? வீடுன்னு இருக்கு. வேற எங்கே போவேன்?'' என்று அவன் எழுந்தவுடன் நடக்க ஆரம்பித்தார் அவர்.

''எனக்கு ஒண்ணும் புரியலேப்பா!'' என்று நடந்துகொண்டே சொன்னான் அப்பு.

''ஒண்ணையும் புரிஞ்சுக்க சிரமப்படப்படாது. பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும். அதுக்காகத் தான் ஸ்வாமி நம்மைப் படைச்சிருக்கார்.''

அப்புவுக்கு சற்று திகைப்பாக இருந்தது. அதைக் கேட்டு, உள்ளுக்குள்ளே கொதித்தது. அடக்கிக் கொண்டே, ''புரியறதோ என்னமோ - எனக்கு ஒண்ணும் பிடிக்கவேயில்லை!'' என்று உதட்டைக் கடித்துக் கொண்டான்.

''என்ன பண்றது?'' என்றார் அவர். பிறகு இருவரும் பேசவில்லை.

வீட்டு வாசற்படி ஏறும்போதே, ''என்னடா அப்பு? எங்கடா போயிட்டே? மத்தியானம் போனவன்!'' என்று திண்ணையிலிருந்து எழுந்து வந்த அம்மா சட்டென்று நிறுத்தி விட்டாள். அதற்கு மேல் பேச முடியவில்லை. குரல் நடுங்கிக் கரகரத்தது.

''எங்கண்ணா போய்ட்டே?'' என்று கேட்ட காவேரி அம்மா தழதழப்பதைப் பார்த்தாள்.

''சும்மாத்தாண்டி, பீச்சிலே போய் உட்கார்ந்திருந்தேன்.''

''போண்ணா! அம்மாட்ட கூட சொல்லாமதான் போறதாக்கும். இனிமே எங்கே போனாலும் சுருக்க வந்துடு அண்ணா. நாழியாகுமானா, சொல்லிட்டுப் போ'', என்று அம்மாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் காவேரி.

''சரி, சரி.. போ. இது என்ன பரபரப்பு? யாராவது கேட்டா சிரிப்பா.''

இதையெல்லாம் கேட்டு அப்புவுக்கு உடல் குன்றிற்று. அம்மா தன்னிடம் காட்டும் பரிவை.... இவர்கள், காவேரி கூட புரிந்துகொண்டு ஒத்து ஊதுகிறாளோ என்று ஒரு லஜ்ஜை ஊவா முள்ளாகச் சிறு குத்தல் குத்திற்று. என்னைப் பார்த்தால் சின்னப் பையன் மாதிரி இருக்கிறதா? ஏன் இப்படி எல்லாரும் புலம்புகிறார்கள்? நானாக எதையும் செய்ய எனக்குத் திராணி கிடையாதா? சுயமூச்சு கிடையாதா? இல்லை. இந்த வீட்டையே கண்டு நான் சிணுங்கு வதை இவர்கள் புரிந்துகொண்டு, என்னைக் குழந்தை யாகவே அடித்து, வாயை மூடப் பார்க்கிறார்களா?

சாப்பிடுவதற்கு முன் ஜபத்திற்காக உட்கார்ந்து சிறுபொழுதில் இதையேதான் நினைத்துக் கொண்டி ருந்தான் அவன். அப்பொழுது யாரும் அதிகமாய்ப் பேசவில்லை. கிருஷ்ணன் ஏதோ கல்லூரியில் நடந்த தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவேரி நிமிராமல் உம் போட்டுக் கொண்டிருந்த அப்புவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந் தாள்.

சாப்பாடு முடிந்ததும் அப்பு சித்தன்குளத்துக் கடிதத்தை வாங்கிக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான்.

''அப்புவுக்கு அநேக கோடி நமஸ்காரம்'' - என்று ஆரம்பித்து கடற்கரையில் அப்பா சொன்ன செய்தி களைக் கடிதம் உருளை எழுத்துக்களில் சொல் லிற்று....'' சில சமயம் அத்தையைப் பார்க்கும்போது கவலையாகப் போய் விடுகிறது. எப்போதும் வரப் போகிறானோ என்று உன்னைப் பற்றி இரண்டு தடவை சொன்னாள். நீ முடிந்தால் வந்து பார்த்துவிட்டுப் போனால் அவளுக்கு திருப்தியாயிரக்கும். ஆனால் வேலை இருந்தால் சிரமப்பட வேண்டாம். அத்தை உன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினால் ஒரு மணி நேரம் பேசுகிறாள். உன் அம்மா, அப்பா எல்லாருக்கும் என் நமஸ்காரங்களைச் சொல்லவும், அத்தையும் ஆசி கூறுகிறாள். தப்பு இருந்தால் மன்னித்துக் கொள் ளவும் அநேக நமஸ்காரம் - இந்து''

நாலைந்து தடவை அதைப் படித்த அப்புவுக்குக் கண்ணை அப்பால் எடுக்க முடியவில்லை. பவானியம் மாளின் சோர்ந்த உடலும் பெருமூச்சும் அப்போதைக் கப்போது கண்முன் வந்துவிட்டுப் போயிற்று. இந்து கூட நன்றாக எழுதுகிறாளே! எங்கே உட்கார்ந்து எழுதியிருப்பாள்? எப்படி எழுதியிருப்பாள்? பலகை அல்லது ராமாயணப் புத்தகத்தை மடிமேல் வைத்துக் கொண்டு எழுதினாளா?... அல்லது குமாஸ்தா மேஜை முன் வைத்து எழுதினாளா?... அந்த மேஜை மீது தலையை வைத்துச் சாய்த்திருந்த போதுதான் அன்று வந்தாள். தலையை வருடினாள்... பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இந்து, இந்து.... நான் எங்கேயோ வந்து உட்கார்ந்திருக்கிறேனே... சத்திரத்தில் வந்து தங்கினவன் மாதிரி இருக்கிறதே இங்கு... தப்பு இருந்தால் மன்னித்துக் கொள்ளவுமா? எந்தத் தப்பைச் சொல்லுகிறாள்? எழுத்துத் தப்பு ஒன்று மில்லையே....

கடிதத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்

''என்னடா அப்பு எழுதியிருக்கா?''

அம்மாவின் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது.

''ஒண்ணுமில்லேம்மா, எழுத்து சரியாப் புரியலை பார்த்துண்டிருந்தேன்.'' என்று திடுக்கிட்டு போனாற் போல் தடுமாறினான் அவன்.

''அதுக்கு இப்படிப் பதறுவானேன்?'' என்று அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள் அம்மா. அப்பு கடிதத் தை மடித்தான்.

''நாளைக்குச் சித்தன்குளத்துக்குப் போறியாமே?''

''ஆமாம்மா... பார்த்துவிட்டு வரவேண்டாமா?''

''பார்த்துவிட்டு வரத்தானே வேணும்.''

அழுத்தம்பின் பகுதியில் விழுந்ததைக் கேட்டு நிமிர்ந்தான் அவன்.

''ஏம்மா?''

அம்மா ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை. திரும்பிப் பார்ப்பது போலவே, கடைக் கண்ணாலேயே நாலு பக்கமும் பார்ப்பது போலிருந்தது.

''அம்மாவை பிடிக்கலேன்னு அங்கேயே இருந்துவிட மாட்டியே....?'' அவன் காதுக்கு மட்டும் எட்டும் தாழ்ந்த குரலில் வந்தது இது. ஆனால் முழுவதையும் சொல்லி முடிக்க முடியவில்லை. அவளால், அதற்குள் கன்னம், உதடெல்லாம் கோணி நடுங்கின. கண்ணில் தெப்பம் கட்டிவிட்டது.

அப்பு தலையைக் குனிந்து கொண்டான்.

*****

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்