Showing posts with label பவா செல்லதுரை. Show all posts
Showing posts with label பவா செல்லதுரை. Show all posts

Jul 11, 2011

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லதுரை

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி bava_1 தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.

அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.

குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.

நடை நின்று, நிலத்தில் ஊனியது கால்கள். சனிமூலை ‘மென‘ பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.
பிடித்தாள்.

கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன் மீது கவிழ்வதை உணரமுடிந்தது.

அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.

‘‘கெழக்கத்தி ஆளுங்களா?’’

அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.

துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது. மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.  தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.

புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.  முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.

பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.

அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளை விடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.

அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள். சொம்பு நிரம்பியதும் ‘‘உரிச்சி துண்ணு’’ என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.

ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான், இதோ இன்னொரு இளவரசி.

இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள். உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள். துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.

இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
‘‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’’ என்று இவனை அறுத்துக் கொண்டு போய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.
அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.

இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி... அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது.
ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள். பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தது.

சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான் கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.

மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன. ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.  அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.

ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.

மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும் போது ஒரு கையில் ஓணான் கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிடவைத்தது. எல்லோரையும் போய் சேர்த்து விட்ட ஓணான் கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்து போனது.

அவன் ஊஞ்சலை தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.

இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான். இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.

பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தை உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்து சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள். நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.
காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.

ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.

வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.

கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டேயிருந்தார்கள். புதுப்புது விளையாட்டு களில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.

‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’

உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறு வரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.

மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.

ஒண்ணு... ரெண்டு... மூணு...
நூறு... நூறு...

கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தது. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...

‘‘ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா...’’

அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.

இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய், அவனைத் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டது.

இருள் அடர்ந்து போயிருந்த போது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள். பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.

அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.

*****

நன்றி: கீற்று

Mar 30, 2011

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.bava_chelladurai

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே - நீ பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ... நித்யபிதா ஒருவருக்கே நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட சர்வ வல்லவர் - இங்கே பங்கமுற்ற பசுந்தொட்டியில் படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.

*****

<http://bavachelladurai.blogspot.com/2009/05/blog-post.html>

Sep 1, 2010

வேட்டை- பவா செல்லதுரை

தெருவில் மூட்டப்பட்ட கல் அடுப்புகளில் எரிந்த சைக்கிள் டயர்களில் சோறு வெந்து கொண்டிருந்தது. சில சட்டிகளில் புனுகுபூனைக் கறி வத்தல். சாராயநெடி தெருவெங்கும் பனிமூட்டமாய் இறங்கி, உற்சாகமூட்டிக் கொண்டிருந்த சாயங்காலத்தில் ஜப்பான் கிழவன் கிழக்குப் பார்த்துக் கும்பிட்டு தெருவிறங்கினான். bava

“நானும் வரேன் தாத்தா.” என்ற குரலை அலட்சியப்படுத்தினான். “வேட்டைன்றது எனக்கும்  காட்டுக்குமான சண்டை” என்ற குரல் அலட்சியத்திற்குள் புதைந்திருந்தது. இனி அவன் மட்டும்தான். எல்லாமும் அவனுக்கு அலட்சியம்தான். வெகுநாட்களாகவே துயருற்றிருந்தான். துயரம் அவன் பேச்சை உறிஞ்சி விட்டிருந்தது. ஆலமர மைதானத்திலிருந்து மறுக்க, மறுக்க கூட்டிவந்து இந்த ஓட்டுவீட்டில் உட்கார்த்தி வைத்தபோது, அவன் நினைவில் மைதானம் காணாமல் எகிறிப்போயிருந்தது. தூங்கி எழுந்தவுடன் சுவர்களின் முகத்தில் முழிச்சது தாங்கமுடியாமல் இருந்தது. எந்நேரமும் அவன் முன்னால் விரிந்திருந்த மைதான பலியில் அவன் பேச்சை இழந்திருந்தான். எதுவுமே பிடிக்கவில்லைதான். அப்புறம் எதுக்கு வாழ?

காட்டுக்கு... இவனோடு சதா மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது அதுதான். இவன்தான் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு இவனிடம் இழந்து கொண்டிருந்தது தன்னை.

தெருவில் கால் வைத்த நிமிஷம் எதிரில் பெரிய பெரிய வாத்யக் கருவிகளோடு வேதக்காரர்கள் கரேலென்ற அட்டை போட்ட தடிதடியான புத்தகங்களோடு எதிர்ப்பட்டார்கள்.

“இவனுங்க வேற...” முணுமுணுத்தான். “குர்யகாரனுங்க கிட்ட என்னத்த கண்டுட்டானுங்க... ராத்திரில, காட்ட சுத்தற பையனுங்களைக் கூட்டி வச்சிக்கினு பாட்டு பாடி... கத்தி, கூப்பாடு போட்டு... ச்சேய்...”

ரோட்டுக்கு வந்து விட்டிருந்தான். பஸ், லாரி சப்தங்களால் அதிர்வுற்றான். சத்தம் எப்போதுமே பொறுக்க முடியாததுதான். ஆலமர மைதானம்தான் ஒட்டிக்கிடந்தது மனசோடு. மரத்தை விட்டுவிட்டு, இவனை வேரோடு பிடுங்கி வந்து தெருவில் நட்டார்கள். துளுக்காமல், கொள்ளாமல் மரக்கட்டையாய் கணக்குக்கு நின்றுகொண்டிருந்தான் ஜப்பான் கிழவன்.

தோளில் தொங்கிய திட்டுத்திட்டாய் தீட்டுக்கரை போலப் படிந்திருந்த தோல்பையில் புதைந்திருந்த கண்ணிகளின் கனம் கனத்தது. கொஞ்சநேரம்... கொஞ்சமே கொஞ்ச நேரம் கண்ணிகளை அவிழ்த்து, சிக்கெடுத்து காட்டில் பரத்தி... இந்த நினைவுகள் மட்டுமே அவனை ஈரப்படுத்திக்கொண்டிருந்தன. சுத்தி, சுத்தி முகத்தில் நெருப்பள்ளிக் கொட்டின வாழ்வில் முகம் கருகி, நாக்கு வெளித்தள்ளி செத்துப்போயிருப்பான். இந்தக் காடுதான் காப்பாற்றியது.

ரோட்டிலிருந்து ஒத்தையடிப் பாதையில் இறங்கின கால்கள். தார் ரோட்டை மறுத்து மண்ரோட்டில் இறங்குகின்றபோதே ஜப்பான் கிழவன் காட்டோடு மல்லுக்குத் தயாராகின்றான். வெறி ஏறுகிறது ரத்தத்திற்கு... “மாட்டேன்... மாட்டேன்...” என்று கதறக் கதற... இவன் வெளியேறும்போது அதன் குழந்தைகுட்டிகளைக் குத்துயிரும், குலையுயிருமாக இழுத்துக்கொண்டுதான் போகிறான்.

நரைத்துத் துடிக்கும் காவியேறிய மீசையின் பக்கத்தில் வெற்றியின் சிரிப்பு வந்து மறைவதும் அந்த நேரத்தில் மட்டும்தான். மண்தரையில் பட்டவுடன் சனிமூலையில் கும்பிட்டான். வேலிக்காத்தான் முள் இடதுகால் பெருவிரல்பட்டுத் தைத்தது. அனாவசியமாகக் காலை மேல் தூக்கிப் பிடுங்கி எடுத்தான். ரத்தம் கசிந்தது. எச்சிலை மண்ணில் தொட்டு ரத்த வாயில் பூசினான்.

நடந்தான்... எப்போதும் செருப்பு போடறவங்களைப் பாத்தா எகத்தாளம்தான் கெழவனுக்கு. செருப்பு சத்தத்துல ஒரு மொசக்குட்டிக்கூட ஓடிடும். ஆலமர மைதானத்தில் மல்லாந்து கிடந்தபோது. எதுவுமற்று இருந்த மனசிருந்தது. ஒத்தையடிப் பாதையின் கடேசியாய் இவன்முன் சண்டையிட்டு நிற்கப் போகும் காடு பெரும் ஆரவாரமான காற்றோடு பயமுறுத்திக் கொண்டிருந்தது.

இருட்டிக் கொண்டிருந்தது. இவனுள் இவன் மட்டுமே இருந்த நாழிகை அது. எதுவுமற்று அம்மணமாய் இருந்தது மனசு. பார்த்தான். எதிரில் தன் ராட்சதச் சிறகை விரித்து இவனை அப்படியே அலகில் குத்திக் குதறித் தூக்கிப் போக, நின்று கொண்டிருக்கும் அந்தக் காட்டை. இந்தக் கணங்களில்தான் இவன் பயமற்றுப் போகிறான். அச்சங்கள் உதிர்த்து லேசாகிறான். காற்று மாதிரி உரிமையோடும், அந்நியமற்றும் காட்டுக்குள் நுழைகிறான். இருட்டிவிட்டிருந்தது.

குளிர்ந்த காற்று முகத்திலடித்தது. நிதானமாக மடியைப் பிரித்து புகையிலையை எடுத்து வாய்க்குள் அதக்கினான். இது அவன் உலகம். அவசரமற்ற உலகம். அவசரம் சீவனை உசுப்பி விடும். ஒரு நீண்ட இரவு அவனுக்கு மட்டுமே இந்தக் கானகத்தில் காத்திருக்கிறது. எதற்கு அவசரம்?

தாலியறுத்தான் பாறையில் ஏறினான். ஏறும்வழி பழகிவிட்டிருந்தது. அம்மாவாசைக்கு முந்தின ஐந்து நாட்களும் பிந்தின ஐந்து நாட்களும் வேட்டைக்கு உகந்தவை. வெளிச்சமற்ற இரவுகள் ஆள் வருவதை சீவன்களுக்கு உணர்த்தாது. வெளிச்சத்துக்கு எப்போதுமே டார்ச் லைட் கிடையாது. கண்கள்தான் சுற்றிலும் சாம்பல் பூத்து நடுவில் மணி மணியாய் ப்ரவுன் கலரில் மின்னுதே அதைவிடவா செல் அடைத்த டார்ச் லைட்?

போன வாரம் பெய்திருந்த மழைக்கு ஆப்பு சுலபமாகத் தரையிறங்கியது. மெல்ல கண்ணிகளை விடுவித்தான். நிதானம்.. நிதானம்... ஒவ்வொன்றாய் தரையில் நிற்கின்றன. இழுத்துக் கொண்டே நகர்கின்றான். இரும்புச் சங்கிலிகளின் அசைவுகள் கூட அவன் கட்டுப்பாட்டிலிருந்தது. செவடன்குளக் கிழக்குப் படிவரைக்கும் வந்தது கண்ணி.

ஏறி நிதானித்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை அடர்ந்த இருட்டு. அண்ணாந்தான். தூரத்தில் வெளிச்சமற்ற ஒன்றிரண்டு நட்சத்திரங்கள். மழை வரும்போலிருந்தது. வரட்டுமே. அதனாலென்ன? என்ன வேணுமானாலும் வரட்டும். கானகத்தின் தலை உச்சியில் நின்று அதையே வம்புக்கிழுப்பது போல ஒரு பார்வை பார்த்துத் தீர்மானித்தான்.

“சனி மூலைக்கும் செவடன் குளத்துக்கும் நடுவுல...”

என்னைக்கு தப்பியது அவன் கணக்கு? ஞாபகமாய் மடியில் வைத்திருந்த கற்பூரம் பற்ற வைத்து, சனிமூலையைப் பார்த்து மீண்டும் ஒரு கும்பிடு. கண்ணிக்கும் அவனுக்குமான உறவு சட்டென அறுந்து போனது மாதிரி ஒரு உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. தற்காலிகம்தான். மண் முழுவதும் வெற்றுடம்பில் ஒட்ட குளக்கரையின் மேல் படுத்து கண்ணிமேல் கண்வைத்து நேர்பார்த்தான். எதுவும் தவறவில்லை. நடந்தான்.

இனி நடைதான். நடை மட்டும்தான். கிழக்கிலிருந்து தெற்காகக் கால்களைத் தள்ளிப்போட்டான். கால் எலும்புகளுக்கு உடும்பு வத்தல் வலுவேற்றியிருந்தது. தேய்ந்த பாதை வழிகாட்ட இரட்டைச் சலங்கை கட்டிய கம்பை ஊனியும், விசிறியும் நடந்தான். இரண்டு பக்கத்துப் புதர்களும் மரங்களும் அவனுக்கு அத்துப்படி.

காட்டில் சமீபமாக, குழிவெட்டிப் புளியங்கன்றுகள் நட்டிருந்தது கோபமூட்டியது அவனுக்கு. “வேலையத்த... வேலை...” என்று காவியேறிய மீசை துடித்தது. “ஆண்டவனுக்குத் தெரியாதா... இந்தக் காட்டு சீவன்களுக்கு என்ன என்ன மரம்?... என்ன என்ன தழைன்னு?... புளியங்கண்ணு வைக்கறானுங்க... புளியங்கண்ணு... மசுருல...” கோபத்தில் ஒரு மரக்கன்றைக் குழியிலிருந்து பிடுங்கினான். வரவில்லை.

வலுவாய் பூமியில் ஊனிவிட்டிருந்தன வேர்கள். ஆத்திரத்தோடு கைகளை விடுவித்து, கையிலிருந்த கம்பால் மேல் நுனியில் அறுத்தான். நுனிக்கிளை துளிரோடு வீழ்ந்தது. பாதி வெற்றியும், மீதித் தோல்வியுமாய் நடந்தான். நுணாத் தழையைக் கொத்தாய்ப் பறித்து முகர்ந்தான். காட்டுவாசம் மூளைக்கேறியது. சின்ன சின்ன டூம் லைட்டுகளாய் பழுத்திருந்த நுணாப் பழத்தைக் கொத்தாய்ப் பறித்து வாயில் போட்ட மறுநிமிஷமே துப்பினான். கொட்டைகளாய் வந்து விழுந்தன.

இன்று, நேற்றல்ல அம்பது அறுபது வருசமா நடக்கின்றான் இந்த திப்பக் காட்டுல. தெக்கால போயி மேக்கால திரும்பி மீண்டும் அவன் கண்ணிக்கு சமீபிக்கும்போது விடிந்துவிட வேண்டும். இது கணக்கு? இது தப்பக்கூடாது. கடவுளே இதில் தப்பு பண்ண முடியாது. சுத்தி, சுத்தி சேத்து வைக்கும் காசில் எருமைக்கடா வெட்டுவதெல்லாம் இந்தக் கணக்கு தப்பாமலிருக்கத்தான். அதைப்போய் வேண்டான்றானுங்க... புடிக்கலை... காட்டை வுட்ருன்றானுங்க முடியுமா? கடை வச்சி தராங்களாம் கடை...

தனித்த நடையில் பழைய நினைவுகள் வரிசையிட்டன. இப்படித்தான் சித்திரை மாத இருட்டு. எதிர்பார்க்காத மழை. திமிற முடியலை. திரும்பி ஓடி தாலியறுத்தான் பாறைக்கு கீழேயே குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். வெள்ளம் புரள மழை நின்றதும், பாறை மீதேறி நின்று பார்த்தான். எங்கும் இருள் அப்பிக் கிடந்தது. இவன் டார்ச் லைட் கண்கள் அடைந்து போயிருந்தது. எதன் மீதும் ஊடுருவமுடியாமல், தூறலினூடே நடந்தான். சில்லிப்பான விடியல், அவன் கண்ணிகளில் நாலைஞ்சு காட்டுப்பன்னி. நம்ப முடியாமல் கண்களை அழுத்தித் துடைத்து பார்த்தான். அந்த இடமே துவம்சமாகி இருந்தது. அரையடி, ஒருஅடிக்கு குழி விழுந்து கிடந்தது. பன்றிகளின் மூர்க்கத்தனம் குழிகளின் ஆழத்தில் தெரிந்தது. மர திம்மைக்குப் பின்புறம் மறைந்து நிதானித்தான். ஒண்ணும் வழியில்லை. திரும்பி ஊர்ந்தான். புதருக்குப் புதர் நிமிர்ந்து பார்த்தான். பன்னிகளின் உறுமல் கானகத்தை நடுங்கச் செய்து கொண்டிருந்தது.

துணையின் அவசியம் ஒரு நிமிடம் புரிந்தது. மறுநிமிடம் மனதால் நிராகரித்தான். ஒத்தையடிப் பாதை பிடித்து ஓடிக்கொண்டிருந்தான், மூச்சிரைத்தது. அப்பொதெல்லாம் நாலு சுவரற்ற ஆலமர மைதானம்தான். சத்தம் போட்டு பேரம் பேசி மதுரையோடு துப்பாக்கி சகிதம் ஓடலான நேரம், சூரியன் சுர்ரீரென உறைக்க ஆரம்பித்து விட்டிருந்தான்.

தூரத்திலிருந்தே அடையாளம் காட்டினபோது இரண்டு தப்பித்திருந்தது. அறுந்த கண்ணிகள் இவனைக் கலவரமூட்டியது. வெடிச்சத்தத்திற்கு மீதி இரண்டும் சாய்ந்தது. கூட்டமே கறி தின்று குடித்தது. வந்தவிலைக்கு கவுண்டர்களுக்கு வாரிக் கொடுத்தான். மல்லாட்டைக் கூடைக்கு ஒரு கூறு வாரி வைத்தான். அந்த மாதிரி நாட்களின் தெம்புதான் இந்த நடை.

மேற்கால திரும்பிவிட்டிருந்தான். கம்பின்மேல் எகிறி கொத்துகிறது. நல்லது இல்லை. விரியன்... நிதானித்தான். உடம்பெல்லாம் கண்ணாடி கண்ணாடியாய்... கண்ணாடி விரியன். நாலடி பின் நகர்ந்து ஓடிப்போய் நடுமுதுகில் எட்டி உதைத்தான். பொத்தென்ற சத்தத்தோடு புதரில் விழுந்தது கேட்டது. திரும்பிப் பார்த்து நடந்தான்.

சத்தம் போட்டு ஜீவன்களைத் துரத்தினான். எந்த அரவமும் இல்லை. சலங்கைக் கோல், காற்றில் விளையாடிக்கொண்டு வந்தது. புதரின் அசைவுக்கு நின்றான். மரம் மாதிரி நின்று, புதருக்குள் கண்களால் நுழைந்தான்.

அஞ்சாறு காட்டுப் பன்னிக்குட்டிகள். நேத்து ராத்திரி அல்லது இன்னிக்கு முன்னேரம். ரத்தப் பிசுபிசுப்பு கையிலெடுத்த குட்டியில் தெரிந்தது. சகிக்கமுடியாத சத்தம் போட்டுக்கொண்டேயிருந்தது. இவைகளைக்கூட வாரிக் கொண்டு போன நாட்கள் உண்டு. அது காசிம்மாவுக்குமுன். தாய்ப் பன்னியின் மூர்க்கத்திற்குப் பயந்து சட்டென சகல ஜாக்கிரதையோடும் நடந்தான்.

ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து... ஜன்னி வந்து செத்து போனதுக்கு அப்புறம்... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக. கண்ணியைச் சமீபத்தபோது விடிந்து கொண்டிருந்தது. பரபரப்பு அடைந்து சுற்றிய கண்களுக்கு, வெறுமைதான் மிஞ்சியது. ஒண்ணுமேயில்லை. ஒரு புனுகுப்பூனைகூட இல்லை. நாலஞ்சு தடவை கண்ணியின் தூரத்திற்கு நடந்து பார்த்தான். எந்த ஜீவனின் காலடியும்கூடத் தெரியலை. வாழ்வின் முதல் தோல்வி. ஆடிப்போனான்.

கால்நீட்டி தரையில் உட்கார்ந்தான். பிருஷ்டத்தில் சுரீரென முள்குத்தியது. துடித்துப் பிடுங்கினான். காரமுள். மலைக்க மலைக்கப் பார்த்தான். காடு வெற்றிக்களிப்பில் காற்றில் கூத்தாடிக்கொண்டிருந்தது.

ஆப்பு பிடுங்கி கண்ணிகளை அவிழ்த்தான். அதன் மீதான தொடலே அருவறுப்பாய் இருந்தது. இதுவரை ஏமாற்றினதில்லை. ஒரு மொசக்குட்டியாவது மாட்டியிருக்கும். என்ன ஆச்சினே யோசிக்க முடியல.

எப்படி வெறுங்கையோட போவ? “இன்னா தாத்தா கொண்ணாந்தே...”ன்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்?

ரத்தக்கறை படிந்த பையிலிருந்து சிறுங்கண்ணி வலையெடுத்தான். எப்போதும் பையில்தான் கிடக்கும். ராத்திரி முடிஞ்சு அப்படியே பகலுக்கும். இதை இதுவரை எடுத்ததில்லை. எப்பனா... பகல்ல... மைனா,காடை, கௌதாரி குஞ்சு புடிக்கத்தான். இந்த வெறுமை, இதை எடுக்க வெச்சிருச்சி... சிறுங்கண்ணிக்குப் பறவைகளை அழைத்து, அழைத்து சோர்ந்தான். முடிச்சிலிருந்த கேவுரும், கம்பும் கண்ணிக்கருகில் கேட்பாரற்றுக் கிடந்தன. காடை கத்தல், கௌதாரிக் கத்தல் எல்லாமும் அன்று எதன் காதுக்கும் கேட்காமல் போனது.

காடு, காற்றின் சத்தத்துக்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறிகொள்ள வைத்துக்கொண்டிருந்தது.

கண் இருட்டிக்கொண்டு வந்தது. செவடன்குளத்துத் தண்ணி எத்தனை வேளை பசியாற்றும். உடும்பு வத்தல் குழம்பும், சுடுகளியும் நேத்து சாயங்காலம் சாப்பிட்டது. வெய்யில் வேறு. சகல வித்தைகளும் பிரயோகிக்கப்பட்டு தோற்றுக் கொண்டிருந்தன. கண்ணியைச் சுருட்டக்கூட மனமின்றி நடந்தான்.

காட்டோடு அவனுக்கிருந்த பந்தம், பாசம், உரிமை எல்லாம் விடப்பட்ட மாதிரி இருந்தது. காவி மீசைக்கருகில் இருந்த புன்னகை செத்துத் தொங்கிக் கொண்டிருக்க, மண்ணுக் கோனார் பம்புசெட் வழியே ரோடேறினான்.

எட்டிப்போட்ட நடை தளர்ந்திருந்தது. யாராவது ஒரு டீத்தண்ணி வாங்கித்தர மாட்டார்களா... என்றிருந்தது. வெற்று பை தோளில் தொங்க, எதிர்ப்பட்ட பழக்கதாரர்களின் ““இன்னாடா இருக்கு...”“ என்ற கேள்விகளை முற்றாக நிராகரித்து கைவிரித்துக் காட்டிப் பேச மனமின்றி நடந்தான்.

அவன் தெரு அவனைப் பழித்துக் காட்டுவது மாதிரி நின்றுகொண்டிருந்தது. விளக்குகள் ஏற்றிவைத்துக் கொண்டிருந்தார்கள். வேதக்காரர்களின் மேடையில், ஒரே பாட்டும், சத்தமுமாய் இருந்தது. இவன் வீட்டைச் சமீபித்திருந்தான்.

மருமகக்காரியும், பேரனும் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்துவிட்டிருந்தார்கள். தளர்ந்து போயிருந்தான். தூரத்திலிருந்த பாட்டு தெருவெங்கும் நிரம்பியிருந்தது. மெர்க்குரி வெளிச்சத்தில் ஆறேழு பெண்கள் பாடிக் கொண்டிருப்பது தெளிவாய்த் தெரிந்தது.

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து - இந்நாள்வரை
அன்புவைத்தா தரித்த உன் ஆண்டவரைத்
தொழுதேத்து.

எப்போதும் இல்லாமல், இப்போது அவன் மனதில் கசிந்திறங்குகிறது பாட்டு. அடிபட்ட காயங்களுக்குத் தவிட்டு ஒத்தடம் தருகிறமாதிரி, வலியெல்லாம் கரைந்து போகிறது, சீவனைப் பற்றியிழுத்துக் கொண்டிருந்தது பாட்டு. இவன் வீட்டின்முன் நிற்காமல், தாண்டி, மேடையை நோக்கி போய்க் கொண்டேயிருந்தான். கண்ணிகள் இவன் பையில் பத்திரமாக இருந்தன.

Aug 3, 2010

ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை

சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது.

bava_chelladuraiஎல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்தது மனசு. சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சீட் நெம்பர் தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில் அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. ஊருக்குப் போகிறோம் என்கிற, துளியே துளியான சந்தோஷம்  அது. கிராமத்தில் இரண்டொரு நாளில் அது மறையும். பக்கத்து சீட்டில் இருப்பவனைப் பார்த்து விட்டு இவ்வளவு யோசிக்க முடிகிறது. இப்போது பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.

பெங்களூரில் சாய்ந்த தலை ஓசூரில் வந்துதான் நிமிர்ந்தது. அப்புறமும் தூங்க முயன்று, முடியாமல் முழித்துக் கிடந்தபோது வந்த பயம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

ஏன் இப்படி சம்மந்தமில்லாத நினைவுகள் வந்து அலைகழிக்கிறது? எல்லாவற்றையும் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரியிலேயே கரைத்தாகிவிட்டது. எதைப் பற்றியும் நினைக்காமல் ஊர்போய்ச் சேர வேண்டும். மனசு மட்டும்தான் இப்படி நினைத்தது. கண்கள் இப்படியும் அப்படியும் அலைந்தது. பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களில் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் முகங்கள் அடையாளம் தெரிகிறது. பழக்கூடை சுமந்து காய்ப்பேறிய கைகள் அவனைக் கஷ்டப்படுத்துகிறது. அழுகை அழுகையாய் வருகிறது.

இறங்கி விடலாமா?

இல்லை. இந்த நகரம் இனியும் எனக்கு வேண்டாம்.

ஊருக்குப் போய் என்ன பண்ண?

குடும்பத்தோட கொளத்துல விழுந்து மாஞ்சாலும் சரி, இங்க வேணாம். கம்பியில் தலை சாய்ந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். எதற்கோ காத்திருந்தது போல, எது ஞாபகம் வரக்கூடாதோ அதெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது.

‘ஏழுமலை, கூத்தாடும் போதுதான் இந்த ஜிட்டு தலப்பெல்லாம். கூடை தூக்குறப்போ வேணாம். கெராப்பு வெட்டிக்கோடா.’

சொல்றவனுக்கு இவன் மகன் வயசிருக்கும். இங்கு எல்லாருமே போடா வாடாதான். எத்தனை வயசுக்காரனயும் இப்படி சொல்ல சிட்டி ரவுண்ட் மார்க்கெட் சீனியாரிட்டி தைரியம் கொடுத்திருந்தது. யாரும் எதையும் பேச முடியாது. மரியாதைக்கெல்லாம் ஆசைப்பட்டா எவன் கை வேணுன்னாலும் நீளும். கைகள் ஊர்வாரியா, ஜில்லாவாரியா, ஜாதிவாரியா பிரியும்.

எந்த நேரமாயிருந்தாலும் கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆட வேண்டும். பாதங்களில் சலங்கைகளின் சப்தம் எழ, சுற்றி ஆடின ஊர் ஞாபகம் மனசில் முட்ட, மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில் மிதிபடும். மார்க்கெட்டில பல உருவங்கள் நின்று பார்க்கும். ‘‘லூசு’’ என்ற புரிதல் பல முகங்களில் எதிரொலிக்கும். அதெல்லாம்தான் அவனுக்கு மரண அடிகள், வேட்டைநாய் மாதிரி துரத்தித்துரத்திக் குதறியது. தப்பிக்க, எங்கும் ஓடிப்போக முடியவில்லை. சுற்றிச்சுற்றி சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டுக்குள்ளேயே வாழ்க்கை அவனை இயக்கிக் கொண்டிருந்தது.

மீறியாகி விட்டது. இதுவரை இவன் மென்னியைப் பிடித்துக் கொண்டிருந்த வாழ்வின் கலகத்தைத் திருப்பி இறுக்கியாகி விட்டது. இனி ஊர்போய்விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாக இந்த எண்ணம் உருக்கொண்டது. ஊர்தான் இவனை நெட்டித் தள்ளி காண்டோன்மென்ட் நெரிசலில் தள்ளியது என்பதெல்லாம் இதுவரை இருந்த வெறியில் ஞாபகம் வரவில்லை. ஆனால் இந்த பஸ் பயணம் இப்போதே அதைக் கொண்டு வந்து ரப்பர் பந்து மாதிரி மனசில் மோதுகிறது.

சுற்றுப்பக்கம் இருபது மைலுக்கு இருபது மைல் ‘‘ஏழுமலை ஜமா’’ தான். பாக்கு வைக்கும்போதே கிராமங்களுக்குள் போட்டி கிளம்பும். அத்தனை மவுசிருந்தது ஏழுமலை ஜமாவின் சலங்கை சத்தத்திற்கு. கிராமங்களுக்குப் பெரும்பாலும் நடந்தே புறப்படுவார்கள். அது ஒரு மாதிரியான போதை. வழிநெடுகப் பேசிக் கொண்டே போவது. சாராயம் விற்கிற புதரை நோக்கிக் கால்கள் தானாக அடையும். ஒரு மாதிரியான பக்தியோடு யாருக்கும் அதிகமாகி விடாமல் மருந்துமாதிரி குடிப்பார்கள். அப்புறம் பேச்சு நின்றுவிடும். பாட்டு... பாட்டுதான் வழிநெடுக.

பாட்டின் சத்தமும், லயமும், இந்தப் பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகள்தான் இவனை பஸ் ஏற்றி விட்டிருக்கிறது. விடியவிடியக் கூத்து நடக்கும். மறக்க முடியாத கதைகள். கூத்து முடிய, காலை பத்து, பதினொன்றுகூட ஆகும். வேஷம் கலைக்காமலேகூட படுதாவுக்குப் பின்னால் சாராயம் குடிப்பார்கள். புதுசாய்ப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பீமன், தர்மர், துரியோதனன், கர்ணன் என்று ஆளாளுக்கு ஒரு டம்ளரை உள்ளே இறக்குவார்கள்.

அநேகமாய்ப் பல ஊர்களில் ஏழுமலையை விட்டுவிட்டு ‘‘ஜமா’’ ஊர் திரும்பும். ஏழுமலைக்கென்று திறக்கும் கதவுகளும், ஒரு கோடி பிரியத்தோடு பரிமாறப்படும் மாட்டுக்கறியும், சாராயமும், ராத்திரிக்கு கிடைக்கும் ஒடம்பும் என அவனுடைய வாழ்வின் சுவாரஸ்யங்களே தனிதான். ரெண்டு மூன்று நாட்கள்கூட ஆகும் ஊர் திரும்ப.

திகட்டத்திகட்ட வாழ்கிற மாதிரி இருந்தது, செல்லங்குப்பம் கூழ்வார்க்கும் விழா நோட்டீஸ் வருகிறவரை. நம்பமுடியாமல் மறுபடி மறுபடி படித்தான். நோட்டிஸின் கீழே கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே வீடியோ படம் காண்பிக்கப்படும். ஏதோ மனசுக்குள் அறுந்து விழுவது கேட்டது. இவன் திமிரத்திமிர ஒரு திகில் வந்து வலுக்கட்டாயமாய் இவனுள் நுழைவது புரிந்தது.

‘‘இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி, சினிமாக்காரனை ஆடவுட்ரானுங்க’’, வேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்டான்.

அதன் நியாயம் பல வகைகளில் அவனுக்கு விளக்கப்பட்டது.

‘‘உங்களுக்குன்னா ரெண்டாயிரம், மூவாயிரம் ஆவும். இது முன்னூறு நானூறுல எல்லாம் முடிஞ்சிடும். மழை மாரி இல்லாத இந்த நேரத்தல ஜனங்க கைல காசு இல்லைன்னா...’’

‘‘போதும், போதும். நிறுத்திக்குங்க.’’ தாங்க முடியவில்லை. அவனுக்கு எல்லோருக்கும் முன்னால் ஆத்திரம் சிதறியது.

அப்பறம் சுத்துப்பக்க கிராமத்துல இருந்து வந்த எல்லா நோட்டீஸ்களிலும் நடிகர், நடிகைகள் பெயராகத்தான் மாறியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட சில ஊர்த்தெருக்களில் கூத்து நடந்து கொண்டிருந்தது இவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

‘‘இந்தக் காலனிக்காரனுங்கதான் இப்படி சினிமாக்காரனுக காலுல உழுந்துட்டானுங்க ச்சீ... இந்த ஜாதில பொறந்தம்பாரு’’ சதா இதே புலம்பல்தான். கூத்துக்காக இதுவரை ஊர்த்தெருவில் இந்தப் பாதம் பட்டதில்லை.

கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்ஷா ஓட்டவென்று, தர்மரையும், பீமனையும், பாஞ்சாலியையும் வாழ்க்கை பிரித்தனுப்பியது. இவன்தான் பிடிவாதமாய் எதிர்த்து நின்றான்.

எந்தப் பிடிவாதமும் ஒரு மாசத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. ஊருக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, நடுராத்தரியில் பெங்களூருக்கு பஸ் ஏறினான். போதும், போதும் என்னை நெரிக்காதே என்று ஏதோ எதிரில் நின்ற பிசாசிடம் கெஞ்சுவது மாதிரிதான் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டில் இருந்து இதோ இப்போது தப்பியது.

தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது தெரிந்தது. நடை தானாகவே சத்தத்தை குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப் பார்க்கப் பார்க்கக் கோபமாய் வந்தது.

சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான். ரெண்டு பேருக்குமே பேச ஏதுமற்றுப்போனது. விரித்திருந்த பாயில் படுத்து அவள் பழைய புடவையைப் போர்த்திக் கொண்டான். அவள் இவனைப் போர்த்திக் கொண்டாள்.

மத்தியானத்துக்கு மேல், இவன் வந்திருப்பது ஊருக்குத் தெரிந்தது. ஒவ்வொரு கூரையிலும், கேள்விகள் முளைத்தது. இதுக்குப் பயந்துதான் பெங்களூருக்கு ஓடினது. மீண்டும் அதே கேள்விகள். எப்படி ஏழுமலை வந்தாப்பலே?

இப்படித்தான் துவங்கின அவை. அப்புறம், அவை காயத்தில் குத்துகிற கோணி ஊசிகளாய் மாறும், மாறின. சித்தப்பிரமை பிடித்தவன் மாதிரி எல்லாருக்கும் ஒரே பதில் சொன்னான்.

‘‘அப்புறம் இன்னா பண்ணப் போற?” யார் மூலமோ வாழ்வு அவனைக் கேட்கிற அழுத்தமான கேள்வி இது. முடியவில்லை இதற்கு பதில் இல்லாமலே பெங்களூரை விட்டுப் புறப்பட்டிருக்கிறான்.

இருட்டினதுக்கப்பறம், ‘‘ஜமா’’ ஆட்கள் விசயம் கேள்விப்பட்டு வந்தார்கள். அதே மரியாதை இருந்தது ஒவ்வொரு மொகத்திலும். கரும்பு வெட்டக் கூப்பிட்டார்கள், சந்தையில் மாட்டுத்தரவு செய்வது கவுரவமான தொழில் என்றார்கள், எதையும் கேட்கிற மாதிரி இல்லை மனசு.

‘‘எவனுக்கும் கூத்த போடலாம் வாத்தியாரேன்னு சொல்ற தைர்யம் வரலையே’’ என்று குச்சியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்தான்.

எல்லாரும் போனபிறகு மனசு கனத்திருந்தது. எதுக்கோ ஏங்கியது. வாடகைக்கு சைக்கிள் பேசி எடுத்துக் கொண்டு வேளானந்தலை நோக்கி மிதித்தான். பிரிட்ஜ்ஜைத் தாண்டுகிற போது ஆசை வந்தது.

‘‘பாடிப் பார்க்கலாமா?”

முடியவில்லை திட்டுத் திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக் கறைகளில் பாட்டும் சந்தோஷமும் ஒட்டிக் கிடந்தன. பாட்டுக்கு ஏதோ ஒன்று முட்டித் தள்ளுவதும், பின்பு அதுவே கையைப் பிடித்துக் கொள்வதுமாய் அவஸ்தைப் பட்டான்.

மொத்தமாய் நாலு டம்ளர் குடித்து, பச்சை மொளகா அதிகமா போடச் சொல்லி, மொச்சையை கையில் வாங்கி சைக்கிள் மிதிச்சப்போ நிதானம் இழக்க ஆரம்பித்தான். இன்னைக்கு மத்தியானம் கண்ணுசாமி காட்டின கோணலூர் கூழ் ஊத்ர நோட்டீஸ் ஞாபகம் வந்தது. ‘‘அம்மன் கோயில் கிழக்காலே’’ கலர்ப் படமாம்.

சொந்த ஊரே இவனை எட்டி ஒதைச்சி, வேணான்னு முடிவு செஞ்சிட்டப்புறம் இனி எவன் கூப்புடுவான்? சொந்த ஊர்க்காரனை விட, விஜய்காந்தும், ராதாவும் முக்கியமாகி விட்டது ஊருக்கு.

பிரிட்ஜ்ஜை தாண்டும்போது லாரி ஒன்று இவனைக் கடந்து போனது. நிதானமாக சைக்கிள் ஓட்ட முயன்றான்.

வடக்கே இருந்து கூத்துப்பாட்டு சத்தம் கேட்டது.

பிரமை. வெறும் பிரமை. நாளெல்லாம் இதே நெனப்போட இருந்தா இப்படித்தான்.

இல்லை சைக்கிள் நகர நகர பாட்டு துல்லியமாகிக் கொண்டே வந்தது.

இப்போது பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும் தெரிந்தது. வெறிபிடித்த பிசாசு மாதிரி சைக்கிள் வேகமெடுத்தது. மண்ரோட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தட்டுத் தடுமாறி மரத்தடிக்கு நடந்தான்.

பத்துப் பதினைந்து உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன. மர ஸ்டூல் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். கையில் பெரிய நோட்டிருந்தது. கூத்துப் பழகிக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே புது ஆட்கள், எல்லார் முகத்திலும் அது திட்டுத்திட்டாய்த் தெரிந்தது. ஒரு செடி, மனசுக்குள் முளைப்பது மாதிரி இருந்தது இவனுக்கு. தள்ளாடி விழப் போனவனை மரம் தாங்கிக்கொண்டது. கூர்ந்து அந்தக் கால்களைப் பார்த்தான். சரியில்லை. அந்தக் கிருதாக்காரனின் அடவு தப்புத் தப்பா வருது. உள்மனசு இவனுக்குள்ளேயே பேசிக் கொள்வது கேட்டது. என்ன வாத்தியார் இவன், அடவைக் கவனிக்காம புஸ்தகத்தைப் பாத்து படிச்சிட்டா போதுமா, ‘‘அடவு தாண்டா உசுரு ஆட்டத்துக்கு.’’

கிருதாக்காரன் தொடர்ந்து தப்புப் பண்ணிக் கொண்டே இருந்தான். ஏதோ உள்ளிருந்து கிளம்ப, ‘தகிதோம், தகிதோம்’ என அந்த வட்டத்துக்குள் பெரிய வன்முறையாளனைப் போலக் குதித்தான். அவசரமாய் ஒருவன் பெட்ரோமாக்ஸ் விளக்கை நகர்த்திக் கொண்டான். அவனுக்குள்ளிருந்த வெறிபிடித்த பேய் விடாமல் ஆடியது.

மடேரெனக் கீழே விழந்தபோது, ரெண்டொருவர் அதிர்ந்தனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், ஒரு கை மூக்கில் கை வைத்துப் பார்த்தது.

‘‘மூச்சி இருக்கு’’

‘‘போதை போலிருக்கு.’’

வாத்தியார் நிதானமாய் எழுந்து வந்தார். முகத்தைத் திருப்பி வெளிச்சத்தில் பார்த்தார்.

‘‘நம்ம கோணலூர் ஏழுமலை’’

எல்லோரும் வாத்தியாரையே பார்த்திருந்தார்கள். யாருமே எதிர்பார்க்காமல் அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ‘‘தண்ணி கொண்டாடா’’ என்ற சத்தத்திற்குப் பலகால்கள் ஓடின. அந்த வார்த்தைகளில் அவ்வளவு பிரியமும் ஏதோ நம்பிக்கையுமிருந்தது.

*******

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்