Showing posts with label ஆர்.சூடாமணி. Show all posts
Showing posts with label ஆர்.சூடாமணி. Show all posts

Dec 9, 2010

அந்நியர்கள் - ஆர். சூடாமணி

"வா... வா..." என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை, மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணற வைத்தது. பார்வையும் புன்சிரிப்புமே பேசின.

"ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே" r-sudamani என்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

"எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு! என்னை நீ ஸ்டேஷனில் எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது" என்றாள் ஸவிதா.

ஸௌம்யா சிரித்தாள். "அப்பாடா! நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு."

இரண்டு நிமிஷங்கள் வரையில் மௌனமுகங்களாய்ச் சகோதரிகள் எதிரெதிரே நின்றார்கள்; பேச்சுக்கு அவசியமற்றா அர்த்தமயமான, இதயமயமான நிமிஷங்கள். சாமான்களுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டாக்சியில் ஏறிக் கஸ்தூரிபா நகர் வந்து சேரும் வரை பரஸ்பரம், "எப்படியிருக்கே? உங்காத்துக்காரர், குழந்தைகளெல்லாம் சௌக்கியமா?" என்பதற்குமேல் உரையாடவே இல்லை. டாக்ஸியில் அவ்வளவு இடம் இருந்தபோது தம்மையறியாமல் நெருக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே எல்லாமாய்ப் பொலிந்தது.

ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றுக் குசலம் விசாரித்த பின், "நீ வரது நிச்சயமானதிலேருந்து உன் அக்காவுக்குத் தரையிலே கால் நிக்கலே!" என்று சிரித்தார்.

ஸௌம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது. மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம், புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.

"இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறெதும் வித்தியாசமில்லே" என்றாள்.

நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். 'காலம் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!' என்று சொல்வதுபோல் இருந்தது. அந்தச் சிரிப்பு. பிரிந்திருந்த காலமெல்லாம் இந்தச் சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசமுள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாய்த் தொடர்ச்சியை மேற்கொண்டுவிட முடிகிறது! ஸௌம்யா சொன்னதுபோல், இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரியவில்லை. மனத்தளவில் அவர்களுள் வித்தியாசம் ஏது? எனவே பதினோரு ஆண்டுகளின் இடைவெளி கணப்போதில் தூர்ந்து விட்டது. பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இருவரும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தது போலவே தோன்றியது.

விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையே வேறு. வெவ்வேறு இடங்களிலிருந்து பறந்து வந்து ஒன்று சேர்ந்ததெல்லாம் ஒரு துக்கத்தில் பங்கு கொள்ள. அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள். பேச்செல்லாம் அம்மாவும் அவள் இறுதியின் விவரங்களுந்தான். காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத்துக்குத் திரும்பி விட்டார்கள்.

அதன்பின் இப்போதுதான் உண்மையான நெருக்கம். சிறிது காலமாக ஒருவித ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம்யாவை அவள் கணவர், ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின்பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டு ஒரு மாறுதலுக்காக அவளுடைய அக்காவிடம் பம்பாயிலிருந்து அனுப்பிவைத்தார்.

இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற்போல் இருந்தது. முதல்நாளின் மௌனத்துக்குப் பிறகு ஆந்தரிகமும் தோழைமையும் பேச்சில் உடைப்பெடுத்துக் கொண்டன. "அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாளாது போலிருக்கே!" என்று ஸவிதாவின் கணவர் பரிகசிப்பார். அவள் மக்கள் கிண்டலாய்ச் சிரிப்பார்கள். அது ஒன்றுமே ஸவிதாவுக்கு உரைக்கவில்லை. பேச்சு என்றால் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது ஒருநாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன்றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக்காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழைகள் இயல்பாய்க் கலந்துகொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியைவிடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்து கொள்ளல்.

மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும்போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலைவிட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக்கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக்கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதா நாற்பது வயதாகப் போகிறது. ஸௌம்யா அவளைவிட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.

வைத்தியமும் நடந்தது, ஒரு கடமையைப் போல.

ஸவிதா சகோதரியை உற்றுப் பார்த்தாள். "உனக்கு ரத்தம் கொஞ்சம் ஊறியிருக்குன்னு நினைக்கிறேன். முகம் அத்தனை வெளிறினாப்பல இல்லே."

"உன் கைபாகந்தான்! இல்லேன்னா பம்பாயில் பார்க்காத வைத்தியமா?" என்று ஸௌம்யா சிரித்தாள்.

தயிரில் ஊறவைத்துச் சர்க்கரை சேர்த்த வற்றலை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டவாறு இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த டிபன் அவர்கள் பிறந்தகத்தில் பழக்கம்.

"இங்கே யாருக்கும் இது பிடிக்கிறதில்லே. இப்போதுதான் எனக்கு ஜோடியாய்ச் சாப்பிட நீ வந்திருக்கே" என்று கூறி மகிழ்ச்சியுடன் தயாரித்திருந்தாள் ஸவிதா.

மாலை நாலரை மணி இருக்கும். ஸவிதாவின் மூத்த மகன் பத்தொன்பது வயதான ராஜூ, எம்.எஸ்.ஸி. முதல் ஆண்டு மாணவன், கல்லூரியிலிருந்து திரும்பி வந்தான்.

"அம்மா, நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்.ஸி. முடிச்சுட்டுப்போற ஸ்டூடண்ட்ஸுக்கெல்லாம் 'ப்ரேக் - அப்' பார்ட்டி நடக்கிறது.நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன். ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்" என்றான்.

"சரி" என்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"நீ முதல் வருஷ ஸ்டூடண்ட்தானே ராஜூ? ஓவர்நைட் இருந்துதான் ஆகணுமா?"

"ஆகணும்னு ஒண்ணுமில்லே சித்தி. ஆனா எனக்கு ஆசையாயிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பப் பேர் இருக்கப் போறா."

அவன் அங்கிருந்து சென்றபின் ஸௌம்யா, "இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா ஸவி?" என்றாள்.

"ஆமாம்."

"நீயும் வேணாம்னு சொல்றதில்லையா?"

"எதுக்குச் சொல்லணும்?"

"இப்படியெல்லாம் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பிச்சுதான் இந்தநாள் பசங்க எல்லா வழக்கங்களையும் கத்துக்கறா. இல்லையா? சுருட்டு, கஞ்சா, குடி அப்புறம் கோ-எட் வேற.. நான் இப்ப ராஜூவை ஏதும் பர்சனலாய்ச் சொல்லலே."

"புரிகிறது ஸௌமி. ஆனா காலம் மாறரதை நாம் தடுத்து நிறுத்திட முடியுமா?"

"குழந்தைகளை நாம் தடுத்துக் காப்பத்தலாமே?"

"உலகம்னா இப்படியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த நாள் பசங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்கறது அவா கையில இருக்கு."

"பெரியவாளுடைய கன்ட்ரோலே அவசியம் இல்லைங்கறயா?"

"கன்ட்ரோல் பண்ணினா இன்னும் பிச்சுண்டு கிளம்பும், அவ்வளவுதான்."

"குழந்தைகளுக்கு உதவி தேவை. அப்பா அம்மா வேற எதுக்குத்தான் இருக்கா?"

"தங்களுடைய அன்பு என்னிக்கும் அவாளுக்காகத் திறந்தே இருக்கும்னு குழந்தைகளுக்குக் காட்டத்தான். வேறு எப்படி உதவ முடியும்?"

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரே சீராய்ப் போய்க் கொண்டிருந்த ஒன்றில் சிறு இடலுணர்வா? ஸௌம்யா தன் டிபன் தட்டை மேஜைமேல் வைத்தாள். வற்றல் இன்னும் மீதம் இருந்தது. ஸவிதா கண நேரம் அமைதி இழந்தாள். பிறகு கையை நீட்டித் தங்கையின் கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.

"இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸௌமி. அடிபட்டுக்காமல் யாரும் வளர முடியாது. குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா? முதல்லே, அவ அதை ஏத்துப்பாளா? சொல்லு. போகட்டும், புதுசா ஒரு ஹிந்திப்படம் வந்திருக்கே, போகலாமா? நீ அதை ஏற்கனவே பம்பாயில் பார்த்துட்டியா?"

"இன்னும் பார்க்கலே, போகலாம்."

புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகுநேரம் அதைப் பற்றி விவாதித்தார்கள்> ஸௌம்யாவுக்குப் படம் பிடிக்கவில்லை. "இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத்திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமாயிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?" என்றாள்.

"நாம அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்."

"முதல்லே விஷத்தைக் கொட்டுவானேன்? அப்புறம் அதில் நல்லது எங்கேன்னு தேடிண்டிருப்பானேன்? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரந்தான்."

அன்று இரவு ஸௌம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகைகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.

ஸவிதாவின் கண்கள் விரிந்தன. "அட, உன் பேர் போட்டிருக்கே! கதையா? நீ கதை கூட எழுதறியா! எப்பலேருந்து? எனக்குச் சொல்லவே இல்லையே?"

"வெக்கமாயிருந்தது. மெள்ளச் சொல்லிட்டுக் காட்டலாம்ன்னுதான் எடுத்துண்டு வந்தேன். இப்போ ஒரு வருஷமாய்த்தான். எப்பவானும், சும்மா ஆசைக்கு படிச்சுப் பாரேன்."

படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.

"ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமான நடை."

"நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?"

ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, "நல்ல கதைதான், ஆனா... நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு" என்றாள்.

"நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கிறது என் லட்சியம்."

இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது. மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவிவிட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது.  அப்பாடா! எல்லாம் முன்புபோல ஆகிவிட்டது.

ஒன்பது மணிக்கு நூலகத்திலிருந்து சேவகன் புதிய வாராந்தரப் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பழையவற்றை வாங்கிக்கொண்டு போனான். ஸௌம்யா புதிய புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், "ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா? அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்து கொண்டது அவ்வளவுதானா?

"ஈராஸ் தியேட்டரில் வர ஒவ்வொரு தமிழ்ப்படத்துக்கும் அவளை அழைச்சுண்டு போயிடறியே. ஸௌமி மேலே உனக்கு என்ன கோபம்?" என்றார் அவள் கணவர்.

"பம்பாயில் அவளுக்கு அடிக்கடி பார்க்க முடியாதது தமிழ்ச் சினிமா தானே? அவள் இஷ்டப்பட்டுத்தான் நாங்க போறோம். இல்லையா ஸௌமி?"

"ஓரா" என்றாள் ஸௌம்யா. மற்றவர்கள் அர்த்தம் புரியாமல் விழித்தபோது ஸவிதாவுக்கு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக்கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள். அவர்களாக ஏற்படுத்தும் பதங்களுக்கும் ஒலிச்சேர்க்கைகளுக்கும் தனித்தனியே அர்த்தம் கொடுத்த அந்த பிரத்தியேக அகராதியில் 'ஓரா' என்றால் ஆமாம் என்று பொருள். திடீரென அந்தரங்க மொழியை ஸௌம்யா பயன்படுத்தியபோது தம் ஒருமை மீண்டும் வலியுறுத்தப்படுவதுபோல் ஸவிதாவுக்குத் தோன்றியது. சகோதரிகள் புன்சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.

"சாயங்காலம் லேடீஸ் கிளப்புக்குப் போகணும். ஞாபகமிருக்கா?" என்றாள் ஸவிதா.

அவள் அங்கம் வகித்த மாதர் சங்கத்துக்கு அதுவரை சிலமுறைகள் சகோதரியை அழைத்துப் போயிருந்தாள். இன்று மற்ற உறுப்பினர்களிடம் தன் தங்கை கதை எழுதுவாள் என்று சொல்லிக்கொண்டபோது கண்களிலும் முகத்திலும் பெருமை ததும்பியது.

மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்க வேன்டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகிலிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம்பிடிக்கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத்தலைவி நிதி திரட்டிக் கொண்டிருந்தாள். "உங்களாலானதைக் கொடுங்க" என்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். "நீங்க...?" என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒருதரம் சகோதரியை ஏறிட்டு விட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.

வீடு திரும்பும் வழியில் ஸவிதா, "பாவம், இல்லே அந்தப் பையன்?" என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.

"என்ன ஸௌமி பேசாமலிருக்கே?"

"என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கிறியா? ஆனா.."

"ஆனா...?"

"இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்சினை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது. அதனால், போட்டு என்ன பிரயோசனம்?"

"அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்."

சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.

ஹாலுக்கும் அவர்கள் நுழைந்தபோது அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. ஸவிதாவின் பதினான்கு வயதான மகளின் கையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த பத்திரிக்கையைப் பிடுங்குவதற்காக அவளைவிட இரண்டு வயது இளையவனான தம்பி ஓடித் துரத்திக் கொண்டிருந்தான்.

"குட்றீ அதை எங்கிட்ட!"

"போடா தடியா, நான் பாத்துட்டுதான்."

"அமிதாப்பச்சனை ஒடனே பாக்காட்டால் தலை வெடிச்சுடுமோ?"

இருவரும் கத்திக்கொண்டே விடாமல் ஓடினார்கள். சோபாவுக்குப் பின்னிருந்து வேகமாய் மூலை திரும்பிப் பாய்ந்தபோது பையன் சுவர் அலமாரியில் மோதிக் கொண்டான். அதன்  கண்ணாடிக் கதவு உடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓர் உயரமான 'கட்கிளாஸ்' ஜாடி பக்கவாட்டில் சரிந்தது. அது கீழேவிழுமுன் ஸவிதா ஓடிப்போய் அதைப் பிடித்துக் கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. "கடங்காரா, அதென்ன கண்மூடித்தனமாய் ஓட்டம்? இப்போ இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?" என்று மகனைப் பார்த்து மூச்சிரைக்கக் கோபமாய்க் கத்தினாள்.

பையன் தலை கவிழ்ந்தது. "ஸாரிம்மா!" வேகம் அடங்கி அவனும் அவன் அக்காவும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

ஸவிதாவின் படபடப்பு அடங்கச் சிறிது நேரம் ஆயிற்று. ஸௌம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பாரேன் ஸௌமி, நம் அப்பா அம்மா கொடுத்ததுன்னு  நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி காப்பாத்தி வச்சுண்டிருக்கேன். அது தெரிஞ்சும் இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?"

ஸௌம்யா ஏதும் சொல்லவில்லை.

"இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருந்திருக்கும். இதன் ஜோடியை உனக்குக் கொடுத்தாளே, நீயும் பத்திரமாய்த்தான் வச்சிருப்பே, இல்லையா,"

"பத்திரமாய்த்தான் இருக்கு."

"இதே மாதிரி ஹால்லேதான் பார்வையாய் வச்சிருக்கியா நீயும்,"

"வச்சிருந்தேன்."

"அப்படின்னா?"

"மேல் ஃப்ளாட் பொண்ணு அதைப் பார்த்து ரொம்ப அழகாயிருக்குன்னு பாராட்டினாள். அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்துட்டேன்."

ஸவிதா அதிர்ந்து நின்றாள்.

"என்ன! கொடுத்துட்டயா? அதை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது?"

"ஏன் வரக்கூடாது?"

"அப்பா அம்மா நினைவாய்..."

"அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?"

மீண்டும் கத்தி முனையில் விநாடி இடறியது. சகோதரிகள் ஒருவரையொருவர் தீவிரமாய் வெறித்தார்கள். பார்வையில் குழப்பம்.

"நான்போய் நமக்குக் காபி கலக்கிறேன் ஸவி. ஜாடியை ஜாக்கிரதையாய் வச்சுட்டு வா."

ஒரே அளவு இனிப்புச் சேர்த்த காபியை அவள் எடுத்துவர, இருவரும் பருகினார்கள். நழுவிப்போகும் ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொள்ளும் செயலாய் அது இருந்தது.

அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப்போகின்றன? அந்த ஏக்கம் இருவர் பார்வையிலும் தெரிந்தது. அடிக்கடி ஒருத்தி தோழமையை மற்றவள் நாடிவந்து உட்கார்ந்துகொள்வதிலும் 'இது அவளுக்குப் பிடிக்கும்' என்று பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், 'அடுத்த சந்திப்பு எப்போதோ?' என்ற தாபம் தொனித்தது. எனினும் அத்தனை ஆந்தரிகத்திலும் இப்போதெல்லாம் பேச்சில் ஒரு கவன உணர்வு. சிரித்துக்கொண்டே அரட்டையடிக்கும்போது, பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சுருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்து கொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை. விளிம்புக்கு இப்பாலேயே இருக்க வேண்டுகிற கவலையில் நிழலாடும் ஒரு தயக்கம்.

அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பிரதியைத் தபால் மூலம் பார்த்துவிட்டு ஸௌம்யாவின் கணவர், "அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே! 'நான்தான் ஸௌம்யா' என்று நெற்றியில் அச்சடித்துக் கொண்டுவா" என்று எழுதியிருந்தார். அவரும் குழந்தைகளும் எழுதும் கடிதங்கள் மேற்போக்கில் உல்லாசமாயும் இயல்பாகவும் தொனித்த போதிலும் அவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது. விரைவில் கிளம்பிவிட வேண்டியதுதான்.

தாம் இனி இப்படி வருஷக்கணக்காகப் பிரிந்திராமல் ஆண்டுக்கொரு தடவை ஒருவரையொருவர் முறை வைத்துப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக் கொண்டார்கள்.

"நியூ இயர் ரெஸொல்யூஷன் மாதிரி ஆயிடக்கூடாது இது!" என்று ஸௌம்யா கூறிச் சிரித்தபோதே அவள் கண்கள் பனித்தன. ஸவிதாவின் மோவாய் நடுங்கியது. எதுவும் சொல்லாமல் ஓர் அட்டைப்பெட்டியை எடுத்து வந்து நீட்டினாள். அதனுள் ஓர் அடையாறு கைத்தறி நூல் சேலை. சிவப்பு உடல், மஞ்சளில் அகலமான கோபுரக்கரை.

"எதுக்கு இதெல்லாம் ஸவி?"

"பேசப்படாது. வைச்சுக்கோ."

"உன் இஷ்டம். எனக்கு மட்டுந்தானா?"

"இதோ எனக்கும்."

மயில் கழுத்து நிறம். ஆனால் அதே அகலக்கரை.

மீண்டும் புன்னகைகள் பேசின.

நாட்களின் தேய்வில் கடைசியாக இன்னொரு நாள். ஸௌம்யா ஊருக்குப் புறப்படும் நாள். ரெயிலுக்குக் கிளம்பும் நேரம். சாமான்கள் கட்டி வைக்கப்பட்டுத் தயாராயிருந்தன.

"கிளம்பிட்டாயா ஸௌமி?" ஸவிதாவின் குரல் கம்மியது.

"நீயும் ஸ்டேஷனுக்கு வரயோன்னோ ஸவி?"

ஆவலுக்கு ஆவல் பதிலளித்தது. "கட்டாயம்."

"எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறதுக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்."

ஸவிதா மௌனமாய் இருந்தாள். ஸௌம்யாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"ஆனா இங்கே பூனை அறையே இல்லையே?" என்றாள் தொடர்ந்து.

"இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போதாதா?"

"நம்பிக்கை இருந்தால்னா? உன் நம்பிக்கை அந்த மாதிரின்னு சொல்றயா?" திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. "அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லைன்னு அர்த்தமா?"

"நான்... நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடையாது" ஸவிதாவுக்கு சங்கடம் மேலோங்கியது. "இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?"

"என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்ராயம் இல்லையா?"

"இதை ஒரு பெரிய விஷயம்னு நான் நினைக்கலே."

ஸௌம்யாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களுடைய சிறுமிப் பருவத்தின் சூழ்நிலை எத்தனை பக்திமயமானது! அம்மா அன்றாடம் பூஜை செய்வாள். சாயங்காலமானால், 'போய்ச்  சுவாமி அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏத்துங்கோடி' என்று பணிப்பாள். அவர்களை வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்கு அழைத்துப் போவாள். தோத்திரங்களெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். 'வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் துணை இருக்கிறது ஆண்டவன் பெயர் ஒண்ணுதான்' என்று போதிப்பாள். தான் அந்த வழியிலேயே நடந்து வந்திருக்க, இவளுக்கு மட்டும் என்ன ஆயிற்று?

"தெய்வ நம்பிக்கையை இழக்கற மாதிரி உனக்கு அப்படி என்ன அனுபவம் ஏற்பட்டது ஸவி?"

"அந்த நம்பிக்கை இழந்துட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாய்த் தெரியாது. ஆனா, அனுபவம்னு நமக்கே ஏற்பட்டால்தானா? கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு? போகட்டும், உலகத்தின் பிரச்சினைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலைபோகிற பிரச்சினையாய் எனக்குத் தோணலேன்னு வச்சுக்கோயேன்."

"எத்தனை அலட்சியமாய்ச் சொல்லிட்டே? ஆனா நான், தெய்வத்தை நம்பலேன்னா என்னால் உயிரோடயே இருக்க முடியாது."

பார்வைகள் எதிரெதிராய் நின்றன. அவற்றில் பதைப்பு, மருள். ஸௌம்யாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. தமக்கையைப் பார்த்த அவள் பார்வை 'இவள் யார்?' என்று வியந்தது. பிறகு கண்கள் விலகின.

ஸவிதா தவிப்பும் வேதனையுமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அர்த்தம் இருக்கும் போலவும் தோன்றவில்லை. ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல...

அன்பு... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத் தான் அது இருக்கிறது.

மன்னிக்கவும். ஹெரால்ட்ராபின்ஸ்! வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத்தான் அன்பு செய்து கொண்டிருக்கிறோம்.

"நாழியாறதே! பேசிண்டேயிருந்தால் ஸ்டேஷனுக்குக் கிளம்ப வேணாமா? வாசலில் டாக்ஸி ரெடி" என்றவாறு அங்கு வந்த அவள் கணவர் அவர்களைப் பார்த்து, "உங்க பேச்சுக்கு ஒரு 'தொடரும்' போட்டுட்டு வாங்கோ. அடுத்த சந்திப்பில் மறுபடியும் எடுத்துக்கலாம்" என்றார் சிரித்துக்கொண்டே.

"இதோ வரோம். வா ஸௌமி!" ஸவிதா தங்கையின் கையைப் பற்றிக் கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

******

Jul 27, 2010

பூமாலை- ஆர். சூடாமணி

அன்புள்ள ரம்யா,

உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக. 

r-sudamani கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ''எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ'' என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. உனக்கு நான்கு வயதாகும்வரை உன் அம்மா உயிரோடு இருந்தாள். ''என் பட்டுச்சுட்டி! என் செல்லக்குட்டி!'' என்றெல்லாம் கொஞ்சி உன் உள்ளங்கையில் அவள் முத்தமிடுவது ஏதோ கனவுபோல் உனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்தக் கையில் சித்தி சூடு போட்டாள் என்ற நினைவு தகிக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை உன்னைச் சீராட்டிச் செல்லம் கொடுத்து உன் சுருள் முடியைச் சீவிக் கிருஷ்ணன் கொண்டை போட்டு அழகு பார்த்திருந்த அதே சித்தி, தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு உன்னை வெறுத்துத் துன்புறுத்தலானாள் என்ற நினைவு அதை விட அதிகமாய்த் தகிக்கிறது.

அப்புறம் உன் கணவன்.

கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் உன் தர்க்கப் புலமையைக் கண்டு பிரமித்து உன்னை மணக்க விரும்பியவர். அவர் பெற்றோர் உன்னைப் பார்க்க வந்தபோது உன் சித்தி பேசியதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாய்.

''ரம்யாவையா பிடிச்சிருக்காம் உங்க பையனுக்கு? நிச்சயமாய் இந்த வீட்டு ரம்யாதானா?''

''ஆமாம்''

''அவ அவ்வளவு சேப்பு கூட இல்லையே? கிட்டத்திலேர்ந்து பார்த்தாரா?''

''அவ மேடைப் பேச்சில் அறிவு ததும் பித்தாம்..''

''குடித்தனம் பண்ணப் போற பெண்ணுக்கு எதுக்கு அறிவும் பேச்சும்? எதிர்த்து வாயாடவா?''

''ஏன் பார்க்கவும்தான் அழகாயிருக்கா!''

''அதுசரி. கழுதைகூட பருவத்தில் அழகாய்த் தானிருக்கும்...''

இது எதுவும் உன் நினைவிலிருந்து இன்றும் அழியவில்லை. இதுபோல் எத்தனையோ குரூரங்களைச் சித்தியிடம் சந்தித்து நீ உணர்ந்த நோவும் அவமானமும் கோபமும் இன்னும் மறக்கவில்லை. ஐம்பது வயதாகிறது உனக்கு!

நான்கு மாதங்கள் முன்பு நீ அரை நூற்றாண்டு முடித்த போது உன் கணவர் உனக்கு மல்லி மொக்கு டிஸைன் தங்க நெக்லஸ் வாங்கிப் பரிசளித்தார்.

''உனக்கும் நாட்டுக்கும் பிறந்தநாள் பொன்விழா. என் ரம்யாதேவிக்கு அன்பான வாழ்த்துக்கள்!''

அவர் முகத்தில் மலர்ச்சி. பல ஆண்டுகள் முன்பு முதல் முதலில் உன்னைக் கண்டு விரித்திருந்த அதே லயிப்பு.

நீ முகம் சுளித்தாய். எனக்கு எழுதியிருக்கிறாய்.

''ஆமாம். தங்க நகை பரிசளித்தால் ஏமாந்துவிடுவேனாக்கும்! பொன்விழா அது இது என்று அலங்காரமாய் பேசிவிட்டால் போதுமா? பேச்சில் இருக்கும் அன்பு மனசில் இருக்க வேணாமா? கண்தான் அலைகிறதே?''

அவர் மனசில் என்ன இருக்கிறதோ என்னமோ, உன் மனசில் ஊட்டி இன்னும் இருக்கிறது.

அப்போது உனக்கு இருபத்தைந்து வயது. நளினி மூன்று வயதுக் குழந்தை. உன் மடியில் நளினி. சுற்றிலும் உதக மண்டலத்தின் குளிர்ச்சி. தொலைவில் வானத்துக்கு அவாவுறும் யூகலிப்ட்ஸ் மரங்கள். பொட்டானிகல் கார்டனில் இருக்கிறாய். பூக்களஞ்சியத்தின் வர்ணக் கோலாகலம். டேலியா, பிட்டூனியா, கிளாடியோலஸ், சாமந்தி, ரோஜா, லார்க்ஸ்பர், பெயர்களை அடுக்குவதால் இன்பம் கூடுமா என்ன? இன்பம் ஒரு பரிபூரணம். கூடுவதோ குறைவதோ அதற்கில்லை. மேடுகளின் உச்சியிலுள்ள மரங்களின் இலைப் பின்னல் வெப்பத்தை வடிக்கட்டித் தணித்துத் தரும் மிருதுவான சூரிய ஒளி, சரிவுகளில் சறுக்கி விளையாடும் பட்டுக் குழந்தைகள். வண்ண வண்ண ஸ்வெட்டர்களுள் ரோஜாக் கன்னங்கள் குலுங்கப் பந்துகளாய் உருண்டு வரும் உற்சாக ஒளிக் குவியல்கள். அவர்களின் கலீர் கலீரென்ற சிரிப்பு.

நீ அழகின் நடுவில் அமர்ந்திருந்தாய்.

பிக்னிக் கூடையை திறந்து ·ப்ளாஸ்கிலிருந்து சூடான, மணமிக்க தேநீரை ஒரு கப்பில் வார்த்து உன்னிடம் புன்னகையோடு நீட்டினார் உன் கணவர்.

''களைப்பாத் தெரியறே ரமி. ஸ்நாக்ஸ் அப்புறம் சாப்பிடலாம். முதல்ல டீயைக் குடி.''

நீ கையை நீட்டினாய். உன்னை நோக்கியிருந்த அவர் விழிகள் கணநேரம் அசைந்தன. எங்கே பார்க்கிறார்? நீயும் தலையை லேசாய்த் திருப்ப, கண்ணைக் கட்டி நிறுத்தும் ஒரு வடிவம். பச்சை நிறச் சேலையில் அழகின் பூர்ண அருள் பெற்ற உருவம். கூந்தல் மல்லிகையைவிட வெள்ளையாய்ப் புன்னகை. உடனிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைவில் பேச்சு கேட்க வில்லை. ஆனால் இவள் பேசினால், அந்தப் பேச்சும் அழகாய்த்தானிருக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் தோற்றம்.

உன் முகத்தில் மலர்ச்சி மறைந்து சுருசுருவென்று கோபம் ஏறியது. ''எனக்கு டீயும் வேணாம் ஒரு இழவும் வேணாம்'' குழந்தையைப் பொத்தென்று தரையில் இறக்கிவிட்டு எழுந்து நடந்தாய்.

உன் மனசில் ஊட்டி இன்னும் மறையவில்லை. அதனால்தான் இப்போதுகூட உன் ஐம்பதாம் பிறந்த நாளுக்கு அவர் பரிசளிக்கும் போது ''பேச்சில் இருக்கிற அன்பு மனசில் இருக்க வேணாமா?'' என்று கேட்கத் தோன்றுகிறது உனக்கு.

எப்படி அழுது தள்ளியிருக்கிறாய் இதையெல்லாம் நினைவுகூர்ந்து! ''சுவரோ டாயினும் சொல்லி அழு என்பதற்கிணங்க எழுதுகிறேன்'' என்று பழமொழியை வேறு துணைக்கு அழைத்திருக்கிறாய். நான் சுவர் இல்லை ரம்யா, உன்னுள் இருக்கும் கண்ணாடி. உன்னை நீ என்னில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அழுகையெல்லாம் ஒரு பீடிகைதான், உச்ச அழுகைக்கு வருவதற்கு.

சித்தியின் பிள்ளை உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு புது மனிதன் போல் தன்னை அறிமுகம் செய்து கொண்டபின்:

"அக்கா! சென்ற காலத்தில் ஏதேதோ நடந்திருக்கலாம். அது ஒன்றையும் மனசில் வைத்துக் கொள்ளாதே. என்னை மன்னித்து விடு. நான் உன் சகோதரன் என்ற உரிமையை என்னிடமிருந்து பறித்து விடாதே. அந்த உரிமையின் பேரில் உன் கருணையை எதிர்நோக்கும் தீனனாக, இந்த வேண்டுகோளை உன்முன் வைக்கிறேன்.

''அம்மாவுக்குத் தீவிர இருதய நோய். சில ஆண்டுகளாகச் சிகிச்சை அளித்து வந்தும் பயனில்லை. வால்வ் கோளாறு. இனி அறுவைச் சிகிச்சை செய்வதுதான் ஒரே நம்பிக்கை என்று டாக்டர்கள் ஒன்று போல் சொல்லிவிட்டார்கள்.

''என் பொருளாதார நிலை மோசமென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் பணக்காரனுமில்லை. பட்டுப்போர்த்திய வைக்கோல் பொம்மையான மத்திய வர்க்கக் குடும்பஸ்தன். அறுதியிட்ட வருவாயில் செலவு போக சேமிப்பு அதிகமில்லை. நிச்சயமாக, தொடரும் வைத்திய செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் செழுமை இல்லை. அதற்காக விதவைத் தாயை கைவிட முடியுமா? அங்கே இங்கே கடன் வாங்கி பெரும்பாலும் பணம் புரட்டிவிட்டேன். ஆனால் சுமார் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தயவு செய்து தந்து உதவுவாயா? தொழிலதிபரான உன் கணவரின் செல்வச் செழிப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தொகை உனக்குப் பெரிசில்லை. கேட்கும் உரிமை எனக்கு இல்லை என்று நீ கருதலாம். ஆயினும் என் தாயின் உயிரைக் காப்பாற்ற - ஒரு மனித உயிரைக் காப்பாற்ற - இந்த நெருக்கடி சமயத்தில் இவ்வுதவியை நீ செய்வாயா அக்கா?''

''என்ன கொழுப்பு!'' என்று நீ வெகுண்டாய், ''அக்காவாவது ஆட்டுக்குட்டியாவது! எத்தனையோ காலமாய்த் தொடர்பு விட்டுப் போன ஒருவன் இப்போது உதவி தேவைப்படுகிறதென்று உறவு கொண்டாடுகிறானா?'' என்று பொங்கினாய். ''என் கணவரிடம் பணம் இருப்பது மாற்றாம் மாமியாருக்கு வைத்தியம் பார்க்கவா?'' என்று நினைத்துப் பொருமினாய்.

உன்னைக் கொடுமை செய்த சித்தி சாகக் கிடக்கிறாள் என்ற எண்ணம் இனிக்கிறது. சாகட்டும் என்று வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இனிக்கிறது.
பின்னே உனக்கென்ன பிரச்சினை? ''பணம் தர முடியாது'' என்று தம்பிக்கு எழுதிப் போட்டுவிட்டு உன் இனிப்பான எண்ணங்களை ரசித்து கொண்டிருக்க வேண்டியதுதானே? மாறாக, வாழ்க்கையில் உனக்குள்ள குறைகளையெல்லாம் பட்டியலிட்டு, போதாதற்கு உன் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மெனோபாஸ் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் சொல்லி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ''நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்! இப்போதும் படுகிறேன். இந்நிலையில் அந்தப் பயல் வேறு பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்கிறானே! இது எனக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?'' என்று தன்னிரக்கத்தில் புலம்பி, உன் மனசைக் கொட்டிக் காற்றில் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறாயே, இது ஏன்? உன் எண்ணத்தை நான் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகவா? என் ஆமோதிப்பு உனக்கு அத்தனை முக்கியமா?

ஆனால் எனக்குக் குமட்டுகிறது ரம்யா? வருஷக்கணக்காய் வெறும் குப்பையாகவே மனசில் சேர்த்து வைத்திருக்கிறாயே! எப்படி இதனோடு வாழ்கிறாய்? இந்த மக்கிய நாற்றம் அருவருப்பாயில்லையா?''

கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், மனசில் எடுத்து வைத்துக் கொள்ள உனக்குப் பூக்களே கிடைக்கவில்லையா ரம்யா? அதாவது, நல்ல விஷயங்களோ இனிய நினைவுகளோ ஏதுமில்லையா?

அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.

தனக்கொரு மகன் பிறந்த பின் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தலானாள் என்பதை ஏன் நினைக்கிறாய்? தனக்கொரு மகன் பிறக்கும் வரை உன்னிடம் பாசத்தைப் பொழிந்தாள் என்பதை நினைத்துக் கொள்ளேன் இன்னொரு பூ.

சித்தி உன்னை வெறுத்தாள் என்பதை விட்டுவிட்டு, அப்பாவின் அன்பு உனக்கு எப்போதும் இருந்து என்பதை மனசில் பதித்துக் கொள். குழந்தையான உன்னிடம் இரவில் வந்து உன்னைக் கையிலேந்திக் கண்ணைத் துடைத்து, ''உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி?'' என்று நெஞ்சுருகப் பாடிக் கதை சொல்லிப் படுக்க வைத்துத் தட்டித் தூங்கச் செய்வாரே... அந்த நினைவை உன்னுடன் பத்திரப்படுத்திக்கொள். ஆமாம். அப்பா சித்தியின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றவில்லை என்பதை வெகு அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாயே, அப்பாவைப் பற்றிய இந்த நல்ல நினைவை ஏன் குறிப்பிடவில்லை?

உன் சித்தியின் விஷப் பேச்சால் உன் கல்யாணம் ஒன்றும் நின்று போய்விட வில்லையே! பேச்சுப் போட்டியில் உன் அறிவை வியந்தவர் இன்றுவரை உன்னிடம் அன்பு மாறாமல்தான் இருக்கிறார். அவர் கண் அழகிய பெண்ணின் பக்கமாய் அலைந்ததாம், பைத்தியமா உனக்கு? அழகை அதன் எந்த வெளிப்பாட்டிலும் ரசிப்பது என்பது மனித இயல்பு. ஊட்டியின் பசுமையான எழில் சூழலில் பச்சை ஆடையுடுத்து நின்றவள் அந்தக் கணம் அவ்விடத்தின் உயிர்நாடியாக, அதன் அழகுக்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாகத் தோன்றியிருக்கலாம். ஏன் கூடாது? உன்னிடம் அவர் அன்பின் ஆந்தரிகம் என்றாவது மாறியதுண்டா? விகல்பமில்லாத அந்தப் பார்வையால் முகம் சுளித்த நீ அதற்குப் பதில் அந்த இடத்தின் வண்ண மலர்களும் பட்டுக் குழந்தைகளும் தண்ணென்ற காற்றும் மெத்தென்ற கதிரொளியு மான அழகிய சூழ்நிலையின் இனிமையை மனசில் தேக்கியிருக்கலாமே! உன் மடியில் குழந்தையோடு நீயே அழகின் மடியில் அமர்ந்திருந்த இன்பம் உன் மனசில் புகவில்லை. தேநீர் எடுத்து நீட்டிய அவர் அக்கறை, அந்த இன்பத்தின் ஒரு பாகமாய் உனக்குத் தோன்றவில்லை. அவர் கண் அலைந்தது என்று ஒரு கசப்பைத்தான் உள்வாங்கிக் கொண்டாய்.

வேறு நினைவுகளுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் இருக்கின்றன! டை·பாய்ட் ஜுரத்தில் நீ படுத்தபோது இரவு பகல் பாராது அவர் உனக்குப் பணிவிடை செய்ததும், நீ விரும்பிக் கேட்டிருந்த புத்தகத்தைக் கொட்டும் மழையில் ஊரெல்லாம் அலைந்து தேடி எங்கோ நகர்க் கோடியில் ஒரு சிறு சந்துக்கடையில் கண்டுபிடித்து வாங்கி வந்து உன் கையில் வைத்து உன் முகம் மலர்வதைக் கண்டு பூரித்து நின்றதும்... இவை போன்ற எதுவும் உன் நினைவில் தங்கவில்லை. ஊட்டிக் கசப்பு ஒன்றைத்தான் இத்தனை ஆண்டு களும் நெஞ்சில் காப்பாற்றி வைத்திருக்கிறாய். குப்பை சேர்ப்பதில்தான் உனக்கு எத்தனை ஆசை!

உனக்கென்ன குறைச்சல் ரம்யா? வளமான வாழ்க்கை, அன்பான கணவன், எம்.எஸ்ஸி., எம்.சி.ஏ, முடித்து வெளிநாட்டில் கணிப் பொறி உயர்நிலைக் கல்வி பயிலும் அறிவுமிக்க மகள். எத்தனை பூக்கள் உனக்கு!

எனினும் நீ புலம்புகிறாய். இப்போது உன் முக்கியப் புலம்பல், உன்னைக் கொடுமை செய்த சித்தியின் வைத்தியத்துக்காக அவள் பிள்ளை உன்னிடம் பணவுதவி கேட்பது உனக்கு இழைக்கப்படும் அநீதி என்பது. அவள் உயிர் பிழைக்க நீ ஏன் உதவ வேண்டும்? அவள் செத்தால் உனக்கென்ன? சொல்லப்போனால் அது உனக்கு மகிழ்ச்சியல்லவா தரும்?

இருப்பினும், உடனடியாய்த் தம்பிக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதிப் போடாமல் என் ஆமோதிப்புக்காகக் காத்திருந்து காலம் தாழ்த்துகிறாய். அப்படியானால் உன் முடிவைப் பற்றி உனக்கே மூலையில் எங்கோ ஒரு சிறு சந்தேகம் இருக்கிறதென்று அர்த்தமா?

ஆபத்து என்று கேட்கும் போது உதவ மறுத்தால் அது உனக்குள் எங்கேயோ உறுத்தும் போல் தோன்றுகிறது. அதுதானே? அவள் இறந்தால் நீ சந்தோஷப்படுவாய் என்ற நினைப்பைவிட அதிக கனமாயிருக்கிறதா இந்த உறுத்தல்?

'இல்லை!' என்று கூவுகிறாய். 'பணம் அனுப்ப முடியாது என்று இப்போதே அவனுக்கு எழுதிவிடுகிறேன்' காகிதமும் பேனாவுமாய் மேஜையடியில் உட்கார்ந்து விட்டாய்.

ஒரு நிமிஷம் பொறு ரம்யா. நான் சொல்லும் மிச்சத்தையும் கேட்டபிறகு எழுது. ப்ளீஸ். எனக்காக.

''சரி, சொல்லு!''

நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் வாழ்வது சுலபமான காரியமா?

''இல்லை, ஒரு போதும் இல்லை...''

கடைசி மூச்சுவரை நாம் நம்மோடு தானே வாழ்ந்தாக வேண்டும் ரம்யா?

'ஆமாம்'.

அப்படியானால் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

'நீ என்ன சொல்ல வருகிறாய்?'

நீ காப்பாற்றியிருக்கக்கூடிய ஒரு மனித உயிர் உதவி கிடைக்காததால் இறந்து போயிற்று என்றால் அதன் பிறகு உன்னை உனக்குப் பிடிக்குமா? உன்னோடு நீ வாழ சகிப்பாயா?''

சிறிது நேரம் வரை உன்னிடம் பேச்சில்லை. அசைவில்லை. சுவரை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய். பிறகு பேனாவை மெல்ல மூடி வைக்கிறாய். நெற்றியில் கைபதித்து யோசனையில் ஆழ்கிறாய்.

உன்னை வெறுப்பவளுக்கு இந்த உதவியைச் செய்தாயானால் அதில் உனக்குப் பெரிய லாபம் இருக்கிறது ரம்யா. வெறுப்பு, கசப்பு என்றெல்லாம் மனசில் நீ சேர்த்து வைத்திருக்கும் குப்பை கூளங்கள் அனைத் தையும் இந்த ஒரே செயல் ஒரே வீச்சில் பெருக்கித் தள்ளித் துப்புரவாக்கிவிடும். அப்படிச் சுத்தமாகிய இடத்தில், நீ இதுவரை புறக்கணித்து வந்துள்ள நல்ல நினைவுகளை - அந்தப் பூக்களை எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை அழகான மாலையாய்த் தொடுக்கலாம். சித்திக்கு உதவி செய்வதன் மூலம் கசப்புத் தளை உடைந்து நீ பெறும் விடுதலையுணர்வு அந்தப் பூமாலையில் ஒரு பாரிஜாத மலர்போல் நடு நாயகமாய் விளங்கும். எனக்கும், குப்பையின் மக்கிய நாற்றம் நீங்கிப் பூமணம் கமழும் உன் மனசில் குடியிருப்பது கொஞ்சம் வசதியாய் இருக்கும்.

மீண்டும் பேனாவை எடுத்துத் திறக்கிறாய். மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொள்கிறாய். என்ன எழுதப் போகிறாய்?

உனக்குப் பதில் சொன்னதோடு என் வேலை முடிந்தது. இனி உன் இஷ்டம். வரட்டுமா ரம்யா?

உன் பிரிய
ரம்யா

******
நன்றி : ஒன்பது சகோதரிகள்
(உலகப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்),தொகுப்பாசிரியர் : முனைவர் சுபாசு
சிந்தியன் பதிப்பகம், நந்தனம், சென்னை 35.

*******

Jul 1, 2010

இணைப் பறவை - ஆர்.சூடாமணி

வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள்.

"யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா"

"தெரியும்."

"அங்கே வரேளா?" kalamkari-painting-twin-birds-02

"ம்ஹூம்."

"உங்களைப் பார்க்கத்தானே அவா...."

"எனக்கு யாரையும் பார்க்கவேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு."

"உங்களைப் பார்க்காம போவாளா ?"

"ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்"

"நம்பவே மாட்டா"

"அப்போ நான் செத்துப் போயிட்டேன்னு சொல்லு போ"

ஸ்ரீமதி மறு பேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனை பேர் வந்து விட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன்! பாடம் ஒப்பிகிற மாதிரிதான். "பாவம் இந்த வயசில் உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வேணாம்". "போனவ புண்ணியவதி, பழுத்த சுமங்கலியாய் மஞ்சக் குங்குமத்தோட ஜம்னு கல்யாணப் பொண்ணாட்டம் போய்ட்டா. அதை நினைச்சுத்தான் நீங்க மனசைத் தேத்திக்கணும்". "பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் உங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறா. பேரன் பேத்திகளுக்கு உங்க மேல உசிரு. அதை நினைச்சு ஆறுதாலாயிருங்கோ."

"பாவம் தள்ளாத வயசில் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட இடி !...." ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத, வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால். தாத்தாவுக்கு எப்படி இருக்கும்...?

வந்தவர்களை அப்படி பேசி வெளியே அனுப்பிவிட வேண்டுமென்ற உறுதியோடு அவள் சென்றாள். ஆனால் பயனில்லை; அவள் நாசூக்காக எவ்வளவு உணர்த்தியும் கேட்காமல் அவர்களில் ஒருவர் தாத்தாவைப் பார்த்தே தீருவதென்று பின் கட்டுக்கு வந்து விட்டார்.

"என்ன, மிஸ்டர் சாரி...."

மாட்டுக்கொட்டிலின் பக்கத்தில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் உடல் விறைத்துக் கொண்டது.

"யாரு! வரதனா ? வாங்கோ, ஆகாசத்தைப் பார்த்தேளா ? மழை வரும்போல இல்லே?" என்றார் தாத்தா திரும்பாமலே.

வந்தவர் திகைத்துப் போனார். சட்டென்று பேச முடியவில்லை....

"என்ன பேசவே காணோம் ? மழை வந்தா இப்போ ஊரிலிருக்கிற தண்ணிக் கஷ்டத்துக்கு விமோசனம் பிறக்கும், இல்லையா ?" என்றார் தாத்தா தொடர்ந்து. பிறகு திரும்பி நின்று வந்தவரைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

"நீங்க அப்படி நினைக்கல போலிருக்கு. அதுவும் சரிதான். நம்ம வறட்சிக்கு கொஞ்ச மழை போறாதுதான். நன்னா அடிச்சுப் பெய்யணும், உங்களுக்கு என்ன தோண்றது?"

துக்கம் விசாரிக்க வந்தவர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார். "விஷயத்தைக் கேள்விப்பட்டேன் மிஸ்டர் சாரி. அப்போ நான் ஊரில்லே. திருச்சிக்கு ஒரு காரிய்மாப் போயிருந்தேன். வந்ததுமே இப்படின்னு சொன்னா. மனசு ரொம்ப சங்கடப்பட்டுது. ஆறுதலா உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே...."

"உங்க ரெண்டாவது பையன் ஏதோ இன்ட்டர்வ்யூக்குப் போயிருந்தானே என்ன ஆச்சு ?"

"நீங்க அதை நெனைக்கூடாதுன்னு இருக்காப்ல இருக்கு. ரொம்ப விவேகந்தான். துக்கத்துக்கு இடம் கொடுத்தா அப்புறம் மனுஷன் மீளமுடியாது. நீங்களாவே தான் எப்படியோ மனசைத் தேத்திக்கணும். இந்த வயசில் உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்கப்படாது. என்னதான் மாமி தன் வரைக்கும் ஒரு குறையும் இல்லாம மகாலக்ஷ்மியாட்டம் போய்ட்டாள்னாகூட......"

"பாங்க் வேலையாத்தானே அந்த இன்ட்டர்வ்யூ ? அல்லது வேறேதும் கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டுருந்தானா ? "

வரதன் அவரை வெறிக்கப் பார்த்தார். ஒரு விநாடி மனத்தில் மின்னிய சந்தேகத்தை அடக்கிக் கொண்டார். சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.

"சில சிநேகிதாளோடு வந்திருக்கேன். அவாளுக்கு எங்கேயோ கடைத் தெருவுக்குப் போகணுமாம்...இத்தனைப் பெரிய உலகித்தில் மாமிக்குத்தான் இடமில்லாமல் போய்டுத்து ? ஆனா நம்ம கையில் என்ன இருக்கு ? எல்லாம் அவன் செயல். உயிர் என்னிக்கிருந்தாலும் அநித்தியந்தான். மனசைச் சமாதானப் படுத்திகணும். பெருமாள் உங்களுக்கு அதுக்கான தெம்பை கொடுக்கட்டும். தைரியமாய் இருங்கோ ஸார்... இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்வா...."

"அப்போ கிளம்பிட்டேளா ? சரி போயிட்டு வாங்கோ. இன்னொரு நாள் சாவகாசமா வாங்களேன். வெய்யத்தாழ வந்தால் 'ப்ளெஸண்ட் வாக்'காகவும் இருக்கும்" என்றார் தாத்தா.

வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.

தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.

வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.

"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"

ஸ்ரீமதி எச்சிலை விழுங்கிக்கொண்டாள். அறுபதாண்டுகால உறுதுணையின் இழப்பு. அதை இழப்பு என்று சொல்லிவிட்டால் போதுமா ? அதை ஏந்துவதற்கு வார்த்தையில் இடமுண்டா ? அறுபது ஆண்டுகள் ! பிரபவ, விபவ என்று தொடங்கி அக்ஷய வரையில் ஒரு வட்டமே முழுசாக அடங்கிவிட்ட தாம்பத்தியம். அறுபது வருடத் தோழமை மட்டுந்தானா? பாட்டியைத் தவிர இன்னொரு பெண்ணை இவர் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. "நான் ரொம்ப குடுத்து வச்சவடீ" என்று பாட்டி எத்தனைதரம் கண்களில் நீர் மல்கச் சொல்லிக் கசிந்திருக்கிறாள் !. செத்த முகத்தில் கூட அந்த பரவசம் மாறாமல் இருந்தது. அதன் அர்த்ததின் விரிவுகளையெல்லாம் கேவலம் துக்க விசாரிப்பு என்ற சம்பிரதாயத்தின் எல்லைகளுக்கு அடக்கி வைக்க முடியுமா? வார்த்தைகளுக்கு எப்போது மௌனமாய் இருக்கவேண்டும் என்று தெரிவதில்லை.

"இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை" என்றார் தாத்தா.

"சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்"

"நல்ல பொண்ணு. இப்படி வா"

பின்கட்டுத் தாழ்வாரப் படிகளிலே மேல் படியில் பாட்டி வழக்கமாக உட்கார்ந்து காற்று வாங்கும் படியில் தாத்தா உட்கார்ந்துக் கொண்டார். அவளை அருகில் இருத்திக் கொண்டு அவள் கையைத் தம் கையில் பற்றிக் கொண்டார். பார்வை மறுபடியும் மல்லிகைக் கொடியில் நிலைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. நிறைந்து ததும்பும் பாத்திரத்திலிருந்து துளிகள் சிந்திவிடாதபடி ஜாக்கிரதையாகப் பற்றுவதுபோல், ஸ்ரீமதி அந்த மௌனத்தை வெகு கவனமாகப் பாதுகாத்தாள். தாத்தாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சிறு சலனங்கூட ஒரு குறுக்கீடென்று கருதி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது அவர் உடம்பில் ஒரு நடுக்கம் பாய்வதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

"அப்பா, சாப்பிட போகலாமா ?"

இரவு ஆகிவிட்டதா என்ன ? ஸ்ரீமதியின் தந்தை பின்னால் நின்று குரல் கொடுத்தப் போது, அந்த ஒலி ஒரு பாறாங்கல்லாக மௌனத்தின் மீது விழுந்தது. ஸ்ரீமதி பதறிக் கொண்டு தாத்தாவைப் பார்த்தாள். ஆனால் அவர், "ம்.. வரேன் போ" என்றார். சாதாரணமாக, ஸ்ரீமதியின் கையை விட்டுவிட்டு, "நீயும் போய் எலையிலே உக்காரு, வந்துடறேன்" என்றார். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவர் வரவில்லை.

"இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்" என்றார் ஸ்ரீமதியின் தந்தை.

"சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு" என்றான் ஸ்ரீமதியின் தம்பி. "பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா"

ஸ்ரீமதியின் அண்ணன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் புதிதாகத் திருமணம் ஆனவன். மனைவி இன்னம் வீட்டுக்கு வரவில்லை.

"இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து" என்றாள் ஸ்ரீமதியின் தாய்.

"பாவம் அப்பா ! அவர் வாய்விட்டுக் கதறி அழுத்துட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது" என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.

"அது என்ன துக்கமோ ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்?"

"நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா"

"நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது"

ஸ்ரீமதி எழுந்துவிட்டாள். "நான் போய்த் தாத்தாவைக் கூப்பிட்டு வர்ரேன்" என்று சொல்லி வேகமாய் அறையை விட்டுச் சென்றாள்.

தாத்தா வந்து உட்கார்ந்துச் சாப்பிட்டார். எதுவுமே பேசவில்லை. ஸ்ரீமதியின் தாய் எப்போதும் போல அவருக்கு மரியாதையுடன் பரிமாறினாள். தாத்தா அவ்வப்போது தலை நிமிர்ந்த போதெல்லாம் அவர் பார்வை நாற்புறமும் ஏதோ தேடுவதுபோல் அலைந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துப் போய்க் கைக்கழுவிக் கொண்டார்.

சிப்பல் தட்டில் சாதம் எடுத்து வந்த ஸ்ரீமதியின் தாய் வியப்புடன், "என்ன மாமா, அதுக்குள்ளே எழுந்துட்டேளே?" என்றாள்.

"ஏன் ? சாப்டுட்டேன், எழுந்துண்டேன்" என்று தாத்தா பதிலளித்தார்.

"மோர் சாதம் சாப்பிடலையே இன்னும் ?"

"ஓ" என்றார் தாத்தா. பிறகு, "பரவாயில்லை, வயிறு ரொம்பிடுத்து" என்றார்.

ஸ்ரீமதியின் தந்தை அவரை அனுதாபத்துடன் நோக்கினார். "புரியறது அப்பா! எனக்கும் அதே மாதிரிதான் இருக்கு. துக்கம் நெஞ்சை அடைக்கற போது என்ன செய்யறோம்னே சில சமயம் நினைவிருக்கிறதில்ல. ஒவ்வொரு நிமிஷமும் அம்மா ஞாபகம் வந்துண்டே இருக்கு. எங்கே பாத்தாலும் அவ நிக்கற மாதிரியே தோண்றது. அம்மா உயிரோடு இல்லேன்னே இன்னமும் நம்ப முடியலே...."

"ஸ்ரீமதி நன்னா வளர்ந்துட்டா. சீக்கிரம் அவளுக்கும் வரன் பார்க்க ஆரம்பிக்கணும்" என்றார் தாத்தா.

அவர் அந்த அறையை விட்டுச் சென்றதும் ஸ்ரீமதியின் தம்பி தன் தந்தையிடம், "தாத்தாவுக்கு கல்யாணம் ஆகறச்சே அவருக்கு என்ன வயசுப்பா ?" என்று கேட்டான்.

"நீ அவசியம் தெரிஞ்சுண்டாகணுமோ. போடா, சாப்ட்டாச்சுன்னா எழுந்து கையலம்பிண்டு போய்ப் படி"

ஸ்ரீமதியும் அவள் சகோதரர்களும் அங்கிருந்து சென்றார்கள்.

ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அப்பா ஆனாலும் அழுத்ந்தான்" என்றான் ரங்கன்.

"எனக்கு அவரைப் பாக்கறபோது பயமா இருக்கு" என்றாள் கனகம்.

"ஏன்?"

"இப்படி உணர்ச்சியில்லாம மனுஷன் நடந்துக்க முடியுமான்னுதான். பாவம் உங்கம்மா அவருக்காக கொஞ்சமாவ உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட இல்லையே"

"உனக்கு என் அம்மாக்கிட்டே இது என்ன புதுக் கரிசனம்! அவள் உயிரோடு இருந்தப்போ அப்படி ஒன்னும் நீ ரொம்ப அனுசரிச்சுப் போகலையே ! அவள் தேமேன்னு மாட்டைக் குளிப்பாட்டினாலும், தன் புடவையைத் தோய்ச்சுண்டாலும் கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணக் கூடக் கிட்டப் போகமாட்டியே !" என்று ரங்கன் சிரித்தப் போது கனகம் கோபமாய் அவரை விழித்துப் பார்த்தாள்.

"நீங்களும் சமயம் பாத்துதான் சொல்லிக்காட்றாப்ல இருக்கு! ஏன், அப்போ சொல்றதுக்கென்ன, என் அம்மாவுக்கும் போய் ஒத்தாசைப் பண்ணுடீன்னு ?"

"இதெல்லாம், சொல்லித்தான் தெரியணுமா ?"

"மனசுக்குள்ளே வைச்சுண்டால் மத்தவாளுக்கு மூக்கிலே வேர்க்குமா என்ன ? நான் கொஞ்சம் கிட்டே போனாலும் என்னமோ ஆசாரம் கெட்டுபோயிடுத்துன்னு உங்கம்மா ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிப்பாளே, அது எங்கே தெரிஞ்சிருக்கப்போறது உங்களுக்கு! நான் செய்யறதுதானே கண்ணிலேபடும்"

"அவள் போனப்புறம் கூடவா அவள் மேலே குத்தம் சொல்லணும்? அதான் இருக்கிறவரைக்கும் தினம் வீட்டிலே குரு§க்ஷத்திரம் நடத்தியாச்சே?"

"அடேயப்பா, இத்தனை ஆங்காரம் இருக்கா உங்களுக்கு மனசுக்குள்ளே ? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருந்தேளே அப்போ ! ம்ஹ்ம், ஆயிரம்தான் இருந்தாலும், ஆம்பிள்ளை ஒவ்வொருத்தருமே கடைசியில் அம்மாக் கோதண்டராமன்தான். பொண்டாட்டி எத்தனை செஞ்சாலும் எடுபடாது. மனசிலே ஆழமான இடம் என்னிக்கும் அம்மாவுக்குன்னு தத்தம் பண்ணினதுதான்."

"அப்படித்தான் வச்சுக்கோயேன், நம்ம நாணுவும் அதே மாதிரி பொண்டாட்டிகிட்ட எத்தனை ஆசையாயிருந்தாலும், மனசில் முக்கிய இடத்தை உனக்கு தத்தம் பண்ணியிருப்பான்னு நீயும் சந்தோஷப்படேன்! அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டதனால் இனிமே இந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப அவசியமில்லையா? இந்த உணர்ச்சி இல்லேன்னா எந்த அம்மாவானாலும் தன் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவாளான்னு சந்தேகம்தான்."

"நான் ஒன்னும் அப்படி இல்லே. பாவம்னு உங்கம்மாவுக்குப் பரிஞ்சுண்டு வந்ததுக்கு எனக்கு இது நன்னா வேணும்" என்று கனகம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

உள்ளதைச் சொன்னால் கோபம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு ரங்கன் கூறினார், "கோவிச்சுக்காதே கனகம், சும்மா சொன்னேன். அப்பா போக்கு எனக்கு மட்டும் பிடிக்கிறதா என்ன? சாவு என்கிறதே ஒரு அன்னியமான எண்ணம். அழுது அதுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அந்த திகைப்பு குறையறாப்பலே இருக்கும். அதைக் கொடுக்காம ஒருத்தர் கல்லாட்டாம் இருந்தால் நீ சொன்னாப்பலே ஒருவிதத்தில் பயமாத்தானிருக்கு."

"அதுக்கில்லேன்னா! உங்கம்மாவுக்காக உங்கப்பா அழாமலிருக்கிறத பாக்கிறபோது, ஒரு பொண்டாட்டியாய்ப் பாடுபடறது எல்லாமே கடைசியில் இத்தனை வியர்த்தம் தானான்னு தோணிப்போறது. நம்மை நிராகரிச்சுட்டா பாத்தியான்னு மனசைத் தாக்கறது..." கனகத்தின் குரல் கம்மியது.

தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள் இவள்! உலகத்தில் எல்லோருமே... மரணம் என்ற மகாகர்மம் கூட - ஒரு சிறு தன்னுணர்ச்சியில்தான் அஸ்திவாரம் கொண்டிருக்கிறதா? ம்ஹ்ம் ! மனிதனைப் பொறுத்தவரையில் உலகம் என்றுமே சிறியதுதான். அதற்குச் சந்திரமண்டலம் போகவேண்டியதில்லை.

"என்னத்தையானும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதே கனகம் " என்று ரங்கன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

"நம்ம மாட்டுப் பொண்ணு ஆத்துக்கு வரட்டும். அவளும் நானும் எத்தனை ஒத்துமையாயிருக்கப்போறோம் பாருங்கோ" என்றாள் கனகம்.

**********************

ஸ்ரீமதியின் அண்ணன் சாப்பாடு முடிந்ததுமே ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு தன் வேட்டகத்துக்குச் சென்றான். வத்ஸலாவின் முகம் அவனைப் பார்த்ததுமே மலர்ந்து விட்டது.

"என்ன திடீர்னு? இன்னிக்கு வரப்போறதாச் சொல்லவே இல்லையே? சாப்பாடு ஆச்சா? " என்று விசாரித்தாள்.

"ஆச்சு" என்றான் நாராயணன். இருவரும் வத்ஸலாவின் அறைக்குச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு மாதமாகியிருந்தது. அவளை அவனுடைய வீட்டுக்கு அழைத்துவர நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் பாட்டி இறந்துவிடவே அது தள்ளிப் போய்விட்டது.

"வீட்டிலே பாட்டி பேச்சாவே இருந்தது. பாட்டிக்காத் துக்கம் கொண்டாடறவா பாட்டியை புரிஞ்சுக்காதவா. அப்படிப் பார்த்தால் தாத்தா நடந்துகிட்ட விதம் சரின்னுதான் சொல்லனும்"

"உங்க தாத்தா துளிகூட அழவேயில்லையாமே? இது வரை ஒருவார்த்தைக்கூட உங்க பாட்டியப்பத்தி பேசவும் இல்லையாம்? ஆமா, உங்க குடும்பத்தில எல்லா ஆம்பிள்ளைகளுக்குமே இந்த மாதிரிக் கல்லு மனசுதானா? "

"போக்கிரி!... புருஷன் பெண்டாட்டிக்குள் எத்தனையோ இருக்கும். தாத்தா போக்குக்குத் தக்க காரணம் ஏதாவது இருக்கலாம். மத்தவாளுக்குப் புரிய முடியுமா? நான் அதைச் சொல்லலே."

"பின்னே?"

நாராயணன் கண்கள் மிருதுவாயின.

"எங்க பாட்டி ரொம்ப அருமையான மனுஷி."

"உங்க எல்லாருக்குமே அவள் கிட்ட உயிராம், ஸ்ரீமதி சொல்லியிருக்கா."

"பாட்டியைத் தெரிஞ்ச யாரும் அதைப்பற்றி ஆச்சரியப்பட முடியாது. அவளோட எலியும் பூனையுமா சண்டை போட்ட எங்கம்மா கூட..."

"ஐயையோ, மாமியார் மாட்டுப் பெண் சண்டை உண்டா உங்க வீட்டிலே? எனக்கு இப்பவே பயமா இருக்கே!... வந்து எங்கப்பா கூடச் சொன்னார், முதல்லேருந்தே தனிக் குடித்தனமாய்ப் போயிடுங்களேன்னு...."

நாராயணன் சிரித்துக் கொண்டே அவள் காதை விளையாட்டாகக் கிள்ளினான். "ஸில்லி! பயம் எதுக்கு? மாமியார் மாட்டுப் பெண் சண்டைங்கிறது எல்லாம் அவாளுக்குள் சும்மா ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். வெளியிலே வெட்டி மடிஞ்சும்பா. ஆனா தினம், பாட்டிக்கு ராத்திரியில் பாலை எங்கம்மா தன் கையாலேதான் குங்குமப்பூச் சேர்த்துச் சுண்டக் காய்ச்சித் தயார் பண்ணுவா, அந்த வேலையை ஸ்ரீமதி கிட்டகூட நம்பி விடமாட்டா. அதே மாதிரி பாட்டியும் எதை மறந்தாலும் எங்கம்மாவின் பிறந்த நாளை மறக்காம அன்னிக்குக் கோவிலுக்குப் போய் அவள் பேரிலே அர்ச்சனை பண்ணிட்டு வருவா."

"ஓ. அப்படியா அது !"

"எதுக்குச் சொல்றேன்னா, பாட்டியோடு பழகினவாளிலே அவள் அருமை தெரியாதவாளே கிடையாது. அதுக்கு காரணம் என்ன தெரியுமா? "

"என்ன?"

"அவளைப் பார்த்தாலே யாருக்கும் தான் உயிரோடு இருக்கிறதைப் பத்தியே இரு சந்தோஷம் ஏற்படும். அவள் உயிரே வடிவமாயிருந்தவள். வாழ்க்கையோடு பிணைஞ்சிருந்தவள். நாங்க குழந்தைகளாயிருந்த போது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள், புராணக் காவியக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாத்திலேயும் நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு."

வத்ஸலா அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். கணவனின் முகத்து பூரிப்பு. கண்களின் நினைவுப் பரவசம். அவளை ஒருமாய வட்டத்தினுள் இழுத்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

"உங்க பாட்டியை எனக்கு தெரியாதேன்னு இப்போ வருத்தமாயிருக்கு" என்றாள்.

"வருத்தமே வேணாம். வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என் பாட்டி."

சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். நாராயணன் மனைவியைக் கனிவோடு பார்த்தான். "நாம் துக்கம் கொண்டாட வேணாம் வத்ஸலா! வாழ்க்கையைக் கொண்டாடுவோம். உயிரை அழுத்தமாய் ஆமோதிப்போம். பாட்டிக்கிட்ட என் பிரியத்தை இதைவிட அழகாயும் பொருத்தமாயும் வேறெப்படியும் காட்ட முடியாதுன்னு தோணித்தான் நான் அவள் பேச்சுலே உன்னை நினைச்சிண்டு வந்தேன்"

*****************

"ஏண்டி அழுதுண்டிருக்கே?" என்று கேட்டுக் கொண்டு ஸ்ரீமதியின் தம்பி அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். "எனக்கே தெரியலேடா ?" என்றாள்.

"பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே."

"ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் ! எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது"

"அவருக்கென்ன கேடு ! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது, ஸ்ரீமதி, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேக்கறியா?. பாட்டி செத்துப் போனதைப் பத்தி"

"எங்கே, படியேன் கேக்கலாம்."

வாசு தன் கவிதையை எடுத்து வந்து உற்சாகமாய்ப் படித்துக் காட்ட ஆரம்பித்தான். பாட்டியின் மறைவை உருக்கமாக வர்ணித்திருந்தான். சிறிது சிறிதாகப் பொருளின் உருக்கம் மறைந்து படைப்பின் கிளர்ச்சி அவன் முகத்தில் ஒளி கூட்டியது. "இந்த இடத்திலே அப்படியே அழுகை வராப்பலே 'மூவிங்'கா இல்லே?" என்று கேட்டபோது அவன் முகம் சந்தோஷமாக இருந்தது.

அவன் படித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீமதியின் கண்கள் முன்வாசல் தரையில் நிலைத்திருந்தன, அந்த இடம் கோலத்தின் சுவடு படாமல் மூளியாயிருந்தது. இன்னும் ஒரு வருஷத்துக்கு அங்கே கோலம் காணப்படாது.

வெளி வராந்தாவில் தான் ஒரு பக்கமாகத் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பலபேரோடு இருக்கும்போது அவர் தனியாயிருப்பது போல் தெரிகிறார். ஆனால் இப்படித் தான் மட்டுமாக முகத்தில் அந்த லயிப்புடன் இருக்கும் போது அவர் தனியாயில்லாத மாதிரி தோன்றுகிறதே, என்ன ஆச்சரியம் என்றி ஸ்ரீமதி வியந்தாள்.

அவன் தம்பி எழுந்து போன பிறகுகூட தாத்தா அதே நிலையில் இருந்தார், ஸ்ரீமதி மெள்ள அவரிடம் வந்தாள். "தூக்கம் வரவில்லையா தாத்தா? முந்திமாதிரி ராமாயணம் ஏதானும் படிச்சுச் சொல்லட்டுமா? "

"வேணாம்மா. தூக்கம் வராப்பலே இருக்கு; போய்ப் படுத்துக்கறேன்."

ஹாலில் தாத்தாவும் ஸ்ரீமதியும் அவள் தம்பியும் படுத்துக் கொண்டு வெகு நேரமாகிவிட்டது. தம்பி எப்போதோ தூங்கி விட்டான். ஆனால் தாத்தா இன்னும் தூங்கவில்லை என்று ஸ்ரீமதிக்குத் தெரியும். அது அவளுக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு இரவும் தெரிகிற விஷயம் என்பது தாத்தாவுக்குத் தெரியாது. அவர் புரண்டு புரண்டு படுப்பதும், உலகம் உறங்கும் நள்ளிரவு வேளையில் கிழக் கண்களைத் திறந்து கொண்டு விட்டத்து இருளை வெறித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியாது.

அவர் படுக்கையில் எழுந்து உட்காரும் மெல்லிய சத்தம் வந்தது. அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள். "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்கலாமா? ஆனால் அவருடைய அந்தரங்கத்தை தீண்டத் தைரியம் வரவில்லை.

தாத்தா எழுந்து நின்றார். நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீமதி ஒர் அச்சத்துடன் எழுந்து அவர் அறியாமல் இருளில் மறைந்து மறைந்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

தாத்தா வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச் சென்றார். நின்று நின்றி இடங்களை வெறித்தார். பாட்டி பூஜை செய்த அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நின்றார். பிறகு கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு பின்கட்டுக்குப் போனார். தூக்கத்தில் நடப்பது போல் நடை யந்திரப்போக்காய் இயங்கியது. தொழுவம், துவைக்கும் கல், மல்லிகைக் கொடி ஒவ்வொன்றின் அருகிலாக இருட்டினூடே சென்று நின்றார். அங்கங்கே தயங்கித் தயங்கி நின்று மண்ணிலும் வானத்திலும் பார்வையை நெடுக அலையவிட்டார். பிறகு வீட்டுக்குள் திரும்பி வந்தார். தட்டு தடுமாறி நடந்து வந்து தன் படுக்கையை மீண்டும் அடைந்தார். நடையின் தள்ளாட்டம் இருட்டினால்தானா என்று புரியவில்லை. பயத்துடன் தொடர்ந்து சென்ற ஸ்ரீமதி நிம்மதியுடன் பூனைப் போல் உள்ளே வந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்; பார்வை மட்டும் அரை இமைத் திறப்போடு தாத்தாவின் மேலே படிந்திருந்தது.

தாத்தா சிறிது நேரம் அசையாமல் படுக்கையின் மீது உட்கார்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்டார். ஆனால் தூங்கவில்லையென்று தெரிந்தது. அவர் கண்கள் திறந்துதான் இருந்தன வென்பதை கருமணிகள் இருளில் பளபளப்பதிலிருந்து ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள். அவர் ஆழமாகப் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்டது.

மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை.

*********

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்