Oct 25, 2012

புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் sra343கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல்  என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாகக் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை.  அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான்.  அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா,

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும்.  இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்,

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை  ஒரு உண்மை. ஒரு விடுதலை.  ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும்  கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது,  என்னைப் போலவே பல தகப்பன்களும்  இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன்.  பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து  தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா,

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து  கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை.  ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்.  ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா.  அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும்  ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை  போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா,

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை,

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே  அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை.  அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம்.  அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.  சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல்  போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது  சுயசமாதானம் செய்து கொள்கிறேன்.  அது உண்மையில்லை.

பைக் என்பது  ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில்  பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில்  நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக  மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன்.  எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை  திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள்.  அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை.  எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப்  பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா  என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால்  என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள்.  போதையில் கிறங்கிப்போன கண்கள் .

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான்  என்று  எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில்  கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே  வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங்  என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன.  அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு.  பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே  சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி  முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது  ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள்  இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள்.  பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும்.  இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை.  பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**
கணையாழி ஏப்ரல் 2011

Oct 22, 2012

சென்று தேய்ந்து இறுதல்-விக்ரமாதித்யன் நம்பி

சென்று தேய்ந்து இறுதல்


இது
என்ன இது
என்னது
இது
குகை மனிதனொப்ப
வேட்டையாடித் திரிவது vikraman1
ஆதிவாசிக்கும் நமக்கும்
என்ன பெரிய வித்யாசம்
இரை தேடித் தின்பது
தூங்குவது  
புணர்வது
கேளிக்கையும் கொண்டாட்டமுமாய்
காலம்கழிப்பது
பின்னே சலித்துக்கொள்வது
எவ்வளவு
இனிய உலகம் இது
கவிதை சங்கீதம்
நாட்டியம் பாட்டு
பறவைகள் வானம்
காற்று மழை
தொன்மக்கதைகள்
சிறப்பைச் சிந்திக்கொண்டிருக்கும் பெண்கள்
எதிலும்
முழுசாய் லயிக்க முடியாமல்
எப்பொழுதும்
இரைதேடிக் கொண்டும்
இருப்பு பற்றி யோசித்தபடியும்
என்ன இது இது என்னது
இந்தக் கவிதையை
இப்படி முடித்துவிடலாம்
அம்மாவைப் பார்க்கையில்தான்
அர்த்தமிருப்பதாகத் தோன்றுகிறது வாழ்க்கைக்கு
வழமையான முத்தாய்ப்பென்று
விமர்சிப்போர்க்கு இப்படி
இருநூற்றி நாற்பத்தேழு
எழுத்துகள்
கலைத்துப்போட்டால்
கண்டமேனிக்கும் சொற்கள்
விளையாட்டாய்
எனில்
வினையாயும்
வேறொரு முடிப்பு
தேவதைகளின் வசீகரம்
தெய்வத்தின் அனுக்கிரகம்
பிச்சிப்பூ வாசம்
பேரியற்கை ரகசியம்
பிசாசுகளின் பயங்கரம்
பாவத்தின் சம்பளம்
பேய்களின் உதரம்
பிணங்களின் நிணம்
தாயம் விழச்செய்யும்
மாயம் எங்கே பிடித்துக்கொண்டாய் செல்லமே
மொழியெனும் சிவ தனுசு
மொழியை
வெகு குறைவாகவே
பயன்படுத்துகிறேன் வீட்டில்
(அதாவது
சொற்களை
சொல்தானே
மொழியின் மூலம்)
ஒரு கவிஞன்
இப்படித்தான்
இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது
அம்மாவிடம்
அளந்து பேசுவதாகத்தான் சொல்ல வேண்டும்
(அம்மாவுக்குத்
தெரியும்)
மனைவியிடம் மட்டுமென்ன
எண்ணித்தான் பேசுவது என்றாகியிருக்கிறது
(அவளுக்குத்
தெரியாதா என்ன)
பிள்ளைகளிடமும்
பெரிதாகப் பேசுவதாகச் சொல்லமுடியாது
(சரியாகப்
புரிந்து கொண்டிருக்கிறார்கள்)
அவர்களும் என்னிடம்
அப்படியே இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை
வெளியில்
விருப்பமில்லாவிட்டாலும்
நிறையப் பேசும்படியாகிவிடுகிறது
(அவர்கள்
நிரம்பப் பேசிவிடுவார்களோ
என்று ஒரு பயமும்)
யாராவது
ஒரு இளங்கவிஞன்
கவிதை பற்றிக் கட்டுவிடுகிறான்
யாராவது
ஒரு இளம் நண்பன்
தன் வாழ்க்கைப்பிரச்னையை முன்வைத்து விடுகிறான்
யாராவது
ஒருவர்
ஜாதகத்தைக் கொண்டுவந்து நீட்டிவிடுகிறார்
தப்பிக்கவே முடியாது
பேசித்தான்
திருப்திப்படுத்த வேண்டியதிருக்கிறது
எனில்
எங்கேயுமே
மொழியைத் துஷ்பிரயோகம் செய்வதில்லை
(திராவிட இயக்கப் பாதிப்பிலிருந்து
விடுபட்டு வந்துவிட்டதில்
பெரிதும் சந்தோஷம்)
பேச்சோ எழுத்தோ
பிரயோகம் பண்ணப் பண்ண
அயர்வும் சலிப்பும் தாளமுடியவில்லை
எப்பொழுதாவதுதான்
அமைகிறது ஒரு நல்ல உரையாடல்
எப்பொழுதுதாவதுதான்
வாய்க்கிறது ஒரு நல்ல கவிதை
எப்பொழுதாவதுதான்
எடுக்கவேண்டும் போல
மொழியெனும் சிவதனுசை.
நடுவிலொரு தீவு
வேர்கள்
வளர்த்தும் விழுதுகள்
வெளிச்சம்
தின்ற இருட்டு
நாளையை
நம்பியே இன்று
இன்றென்பது
நேற்றின் எச்சம் போல
உடம்பிலிருந்து
மனசுக்கு
காமத்திலிருந்து
கவிதைக்கு
இங்கே இப்படி
அங்கே எப்படியோ
கடலலைகளுக்கு
ஓய்வுண்டா 
 
****


இவ்வளவுதான் முடிகிறது

நேற்று நண்பகலில்
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்திலிருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
போன மாசம்
கபால¦ஸ்வரர் கோயில் போயிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று மாசத்துக்கு முன்னால்
இளங்கவிஞன் ஒருவன் கவிதைகள் பற்றி
விலாவாரியாய்
கட்டுரையெழுதி அனுப்பி வைத்தேன்
இந்தக் கல்வியாண்டில்
தமிழக அரசுத் தயவில்
என் சின்ன மகனுக்கு
திரைப்படக் கல்லூரியில்
இடம் வாங்கிக் கொடுத்தேன்
வேலையில்லாமல்
திண்டாடித் திணறிப்போன பெரியவனை
இயக்குநர் நண்பர் ஒருவரிடம்
உதவியாளராகச் சொல்லிச் சேர்த்து விட்டிருக்கிறேன்
மனைவியிடம்
சண்டை போடாமலிருக்க தீர்மானித்திருக்கிறேன்
இனிமேல் கைநீட்டுவதில்லை
என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்
அம்மாவிடம்
கோபப்படாது இருக்கிறேன்
நண்பர்களை
தொந்தரவுபடுத்தக்கூடாது என்றிருக்கிறேன்
எழுதுவது படிப்பதில்
மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறேன்
எவ்வளவு நினைத்தாலும்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில்.

****

அழைக்கிறவர்கள்

நேற்று
சுடலை கூப்பிட்டிருக்கிறான்
போய்
வந்திருக்கிறேன்
என்ன
நடந்ததோ தெரியாது
இன்று
தைரியமாய் இருக்கிறேன்
போன மாசம் போல
இசக்கி அழைத்திருந்தாள்
போக
முடியாமல் போயிற்று
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாளோ
என்னவோ தெரியாது
பதினெட்டாம் படி கருப்பசாமி
எப்பொழுதும் வரச்சொல்லி
ஆளனுப்பிக் கொண்டேயிருக்கிறான்
அவன் முகத்தில் விழிக்கக் கூச்சமாயிருக்கிறது
ஆனால் ஒருநாள் நிச்சயம் போவேன்
அவனே எதிர்பாராதபடிக்கு
புட்டார்த்தி அம்மன்
அடிக்கடி கனவில் வந்து
எவ்வளவு காலம்
இப்படியே இருப்பாய்
என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்
ஒருமுறை
வந்து போ என் சந்நிதிக்கு
என்று உத்தரவிட்டிருக்கிறாள்
இன்னும் போக முடியவில்லை
அந்த வழியே கடந்து சென்றாலும்
உஜ்யனி மாகாளி
ஒருநாள் வந்து
பார்த்துவிட்டுப் போ
என்று சொல்லிவிட்டிருக்கிறாள்
போக முடியாமல்
இருந்து கொண்டிருக்கிறது
போகவேண்டும் கட்டாயம்
சிவகாமித்தாயும் நடராஜனும் மட்டும்
அழைக்க
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் போல

(நன்றி: வண்ணநிலவனுக்கு (தலைப்புக்காக)

****

Oct 20, 2012

ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா

    ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு"  - இந்திரா பார்த்தசாரதி

முன்னுரை

'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் 'கூடாரங்கள்' என்று குறிப்பிடுவது aathavan அவருடைய சிறுகதைகளை. இந்தப் புத்தகந் தான் ('முதலில் இரவு வரும்') அவருக்குச் சாகித்திய அகெதமி விருதை வாங்கித் தந்தது.

இலக்கியத்தைப் பற்றி ஆதவன் கொண்டிருக்கும் கொள்கையையும், மேற்காணும் கூற்று நிறுவுகிறது. ஆரவார மற்ற அமைதியான சூழ்நிலையில், தனிமையின் சொர்க்கத் தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காணும் முயற்சியே இலக்கியம்.

இவ்வடையாளம், சூன்யத்தில் பிரசன்னமாவதில்லை 'நான் - நீ' உறவில்தான் அர்த்தமாகிறது. இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் என்பதால் இது நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது எண்ணத்தின் நிழல். வாசகன் மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்து இலக்கியமாகாது.

ஆதவன் தன் கதைகள் முழுவதிலும் 'உரக்கச் சிந்திக்கிறார்' என்பது உண்மை. ஆனால் வாசகனுடன் உரையாடுகின்றோம் என்பதை அவர் மறக்கவில்லை என்பது தான் அவர் எழுத்தின் வெற்றி.

அவர் தன் எழுத்தின் மூலம், சமூகத்துடனிருக்கும் தம் உறவை, அடையாளத்தை, மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.

தில்லியில் சிறுவயதிலிருந்தே இருந்து வந்த இவர், தமிழில் எழுதுவதென்று துணிந்ததே, தம் வேரைத் துண்டித்துக் கொள்ள முயலவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதே சமயத்தில், தமிழ் நாட்டின் தற்காலத்திய கலாச்சாரச் சூழ்நிலையிலிருந்து ஒதுங்கி, ஒரு பார்வையாளராக இச் சமூகத்துக்குள் தம் முகத்தைத் தேடுவதையே ஓர் இலக்கிய விளையாட்டாகக் கொண்டிருப்பதுதான் இவர் எழுத்தின் பலம்.

இவர் தம்முடைய நூல்களுக்கு எழுதிய பல முன்னுரைகளில், தாம் எழுதுவதை, ஒரு 'விளையாட்டு' என்றே குறிப்பிடுகிறார். 'விளையாட்டு' என்றால் வெறும் பொழுதுபோக்கு என்று கொள்ளக் கூடாது. தத்துவக் கண்ணோடு பார்க்கும்போது, எல்லாமே, பாவனைதான். 'அலகிலா விளையாட்டுடையார்' என்று முத்தொழில் செய்யும் இறைவனையே குறிப்பிடுகிறான் கம்பன். இலக்கியமும் முத்தொழில் ஆற்றுகின்றது. எழுத்தாளனை இவ்வகையில் இறைவன் என்று கூறுவதில் எந்தத் தடையுமிருக்க முடியாது.

'விளையாட்டு' என்று கொள்ளும் சிந்தனையில்தான், எழுத்தாளனால் தன்னைச் சமூகத்தோடு ஆரோக்கியமான உறவு கொண்ட நிலையில், தத்துவார்த்தமாக 'அந்நியப் படுத்தி'க்கொள்ளவும் முடியும். இதுதான் அவனுக்குப் 'பார்வையாளன்' என்ற தகுதியைத் தருகிறது. 'பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கை விரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுவது போல், எழுத்தாளனும் இறைவன் நிலையிலிருந்து, பார்வையாளனாக இருக்கும் போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் கலைப் பரிமாணத்தைப் பெறுகின்றது.

ஆதவன் கூறுகிறார்: 'சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.'

சொல், தனி மனிதன் சமூகத்தோடு கொள்கின்ற உறவை நிச்சயப்படுத்தும் ஒரு கருவி. சமூகரீதியாக உணர்ச்சிப் பரிமாற்றங்களைத் தெரிவிப்பது சொல். சமுதாயத்தில் மனிதச் சந்திப்பினாலோ அல்லது மோதலினாலோ ஏற்படும், அல்லது ஏற்பட வேண்டிய மாறுதல்களை அறிவிப்பது சொல் விஞ்ஞானத்தின் பரிபாஷை கலைச்சொற்கள். (Technical language) இலக்கியத்தின் பரிபாஷை அழகுணர்ச்சி (aesthetics). சமுதாய ஒப்பந்தமான சொல், இலக்கியமாகப் பரிமாணமமுறும்போது, அது அச்சொல்லை ஆளுகின்றவனின் உள் தோற்றமாக (Personality) அவதாரம் எடுக்கின்றது. இதுதான் அவனது சமூகத்தில் அவனுக்கேற்படும் அடையாளம். சொல்தான் சமுதாய உணர்ச்சியைத் தெரிவிக்கும் கருவி. சமுதாய ஒப்பந்தத்தின் செலாவணி.

ஆதவன் தம் உருவ வேட்டையில் தம்மை இழந்து விடவில்லை. 'இயற்கையைப் பற்றிப் பாடிய இருவர்களில் ஷெல்லி இயற்கையில் தம்மை இழந்தார். வேர்ட்ஸ்வொர்த் தம்மைக் கண்டு தெளிந்தார்' என்று விமர்சகர்கள் கூறுவார்கள். ஆதவன் தன்னை, 'சொற்களை மேய்த்து' 'விளையாடி'க் கண்டு கொள்ளும் முயற்சிகளாகத்தாம் அவர் எழுத்து அமைகின்றது.

இவருடைய 'அடையாளம்' என்ன? அவரே எழுதுகிறார். என்னுடைய 'நானை' இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு. என்னுடைய 'நானி'லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. எல்லா 'நான்'களுமே நியாயமானவையாகவும், முக்கியமானவையாகவும் படும். ஆகவே, என்னுடைய 'நான்' என்று ஒன்றை முன் நிறுத்திக் கொள்வதும், பிறருடைய 'நான்'களுடன் போட்டியிடுவதும் குழந்தைத் தனமாகவும் தோன்றும். ஆமாம். நான் ஓர் 'இரண்டு கட்சி ஆசாமி'

இரண்டு கட்சி ஆசாமி எனும்போது அவர் தம்மை ஒரு Paranoid Schizo Phrenic ஆகச் சித்திரித்துக் கொள்ளவில்லை. உளவியல் தர்க்கத்தின்படித் தம்மை வாதியாகவும் பிரதி வாதியாகவும் பார்க்கும் தெளிவைத்தான் குறிப்பிடுகிறார். இதனால், தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்குமிடையே உள்ள உறவில் காணும் முரண்பாடுகளை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. புரிந்து கொள்கின்றாரேயன்றித் தீர்ப்பு வழங்க முன் வருவதில்லை. இது தம்முடைய பொறுப்பில்லை என்று ஒதுங்கி விடுகிறார்.

இதனால்தான் இவருக்கு இலக்கியம் பற்றிய கொள்கைத் தீவிரம் எதுவுமில்லை என்ற ஓர் அபிப்பிராயம் இவரைப் பற்றி சில இலக்கிய விமர்சகர்களிடையே உண்டு.

இதைப் பற்றியும் அவரே கூறுகிறார்: 'திட்டவட்டமான சில எதிர்பார்ப்புகளைத் திசை காட்டியாகக் கொண்டு இலக்கியத்தில் ஏதோ சில இலக்குகளைக் கணக்குப் பிசகாமல் துரத்துகிற கெட்டிக்காரர்கள் மீது எனக்குப் பொறாமை உண்டு. திசைகாட்டி ஏதுமின்றி, பரந்த இலக்கியக் கடலில் தன் கலனில் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட விரும்பும் சோம்பேறி நான். இலக்குகளிலும், முடிவுகளிலும் அல்ல, வெறும் தேடலிலேயே இன்பங் காணும் அனைவரையும் இனிய தோழர்களாக என் கலன் அன்புடன் வரவேற்கிறது!'

எழுத்தாளன் ஒருவனுக்குக் 'கொள்கைத் தீவிரம்' தேவையா என்ற கேள்வி எழுகின்றது. பட்டயத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு, அப்பட்டயத்தை நியாயப்படுத்துவதற்காக எழுதுவதுதான் 'கொள்கைத்தீவிரமா' என்றும் கேட்கலாம்.

படைப்பாளி படைக்கிறான். விமர்சனப் பாதிரி நாம கரணம் சூட்டுகிறான். இதுவே பட்டயமும் ஆ கிவிடுகின்றது. பல சமயங்களில், இப்பட்டயத்தையே ஓர் சிலுவையாக எழுத்தாளன் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது தான், அவன் படைப்பாற்றல் ஒரு வரையறைக்குள் குறுகி, அவன் எழுத்து, சலிப்பைத் தரும் ஓர் 'எதிர்பார்க்கக் கூடிய' (Predictable) விஷயமாக ஆகிவிடுகின்றது.

கலையின் சிரஞ்சீவித் தன்மை, அது தருகின்ற 'ஆச்சர்யத்தில்' தான் இருக்கிறது. ஒரே ராகத்தை ஒரு சங்கீத மேதை பல்வேறு சமயங்களில், பல்வேறு விதமாகப் பாடுவது போல. ind_paaஆதவன் எழுத்தில் இந்த 'ஆச்சர்யத்தை' என்னால் காண முடிகின்றது. 'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' எழுதிய ஆதவன் தான், மிக நளினமான காதற் கதைகளும் எழுதியிருக்கிறார்.

ஆனால் எல்லாக் கதைகளிலும், அடிப்படையாக ஒரு விரக்தியை நம்மால் உணர முடிகின்றது. அவர் கதை 'இன்டர்வியூ'வில் வரும் சுவாமிநாதன் கூறுவது. ஆசிரியருடைய மன நிலையையும் பிரதிபலிக்கின்றது. 'முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம், கடைசியாக இருப்பதற்கும் வெறுப்பு' 'முதலில் இரவு வரும்' என்ற தலைப்பே, இவர் மன இயல்பை வெளிப்படுத்துகின்றது. 'குளிர் காலம் வந்தால், இதற்குப் பிறகு வசந்தம் நிச்சயம் வந்துதானே ஆகவேண்டும்?' என்று ஷெல்லி கூறுகிறான். ஆதவனும் வரவேற்பது 'முதலில் இரவு'; அக்கதையில் ராஜாராமன் சொல்லுகிறான்: 'ராத்திரி, ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடியும் சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும். அதுதான் நாளைக்கு'.

நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.

'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' என்ற கதையில் ஆதவன் (இக்கதையை எழுதும்போது இவர் வயது 31) ஒரு கிழவரின் அகத்தில் புகுந்து கொண்டு சிந்தனை ஓட்டமாகக் கதையில் சொல்லுகிறார். புற நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அவருடைய சிந்தனை, விளக்கை ஒளி வீசச் செய்வதற்காகப் பயன்படும் மின்சார 'ஸ்விட்ச்'. மனைவியை இழந்த கிழவர் மகன் வீட்டிலிருக்கிறார். தம் உலகை இழந்து விட்ட தவிப்பில் அவர் புதிய உலகைக் கண்டு மருள்கிறார். அவருக்குப் பிடித்தமான நாவிதன் கடைக்கு முடி வெட்டிக் கொள்ளச் செல்லும்போது, தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும், இக்கால இளைஞர்களைக் கண்டு, புதிய உலகம் இப்படி 'உருப்படியான தீவிரப் பிடிப்பில்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் ஆழமான எதனுடனும் தம்மைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமலும் இருக்க வேண்டுமா என்று மனம் வருந்துகிறார். தம் உலகத்திய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார். தம் மண வாழ்க்கையையும், தம் மகனின் மண வாழ்க்கையையும் பற்றி எண்ணிப் பார்க்கும் போது, இத்தகைய அந்தரங்க உறவுகளில் கூட இக்காலத்தில் போலித் தனம் மேலோங்கி இருக்க வேண்டுமா என்பதுதான் அவர் வேதனை. அவர் மகனும், மகளும் கல்லூரி ஆசிரியர்கள்.

அன்று மாலை பல்கலைக் கழகப் பேராசிரியாகிய மோத்வானியும், அவர் மனைவியும் பேச வருகிறார்கள். மோத்வானி இக்கால அறிவு உலகின் பிரதிநிதி. போலி அறிவு ஜீவி. இடம், வலம், நடு ஆகிய எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர். அதாவது, வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி என்று அறிந்தவர். விஸ்கி குடித்துக் கொண்டே, வறுமையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயலுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த 'ட்ராயிங் ரூம்' சோஷலிஸ்டுகளின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் கிழவர் ஒதுங்குகிறார். அவருக்கு அன்று காலை மயிர் வெட்டிவிட்ட நாவிதனை போலித் தனமான மனக் கிளர்ச்சியின் வெளியீடாக ஓர் இளைஞன் கத்தியால் குத்தி விட்ட விபரீத செய்தியைக் கெட்கிறார். கள்ளங் கபடமற்ற தன் பேத்தியை இறுகத் தழுவிக் கொள்வதுடன் கதை முடிகிறது.

இளைஞனின் 'அந்நியமாதல்' கதைகளைப் படித்த நமக்கு ஒரு கிழவரின் 'அந்நியமாதல்' கதை ஒரு வேறு வகையான அனுபவம். இக்கிழவர் உலகை வெறுக்கவில்லை. நாவிதனின் ஸ்பரிஸம், முடி வெட்டிக் கொண்டு வெந்நீரில் குளித்தல், நல்ல காப்பி ஆகிய வாழ்க்கையில் சின்ன சின்ன சலுகைகள் கூட அவருக்குச் சொர்க்கமாக இருக்கின்றன. வாழ்க்கையை வெறுத்துப் போலிப் பரவசங்களில் ஆழ்ந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் இக்கால இளைஞர்கள் மீது தான் இவருக்குக் கோபம்.

வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண் பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டு வதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; 'இன்று', 'இன்றாக' இருப்பதற்குக் காரணம் 'இன்று', 'நேற்றைய தினத்தின்' தொடர்ச்சிதான் என்று 'நேற்றைய தினத்தை' அடியோடு வெறுக்கும் மனப்பான்மையில், 'நாளை'யைப் பற்றிய நினைவே இல்லாமலிருக்கிறார்கள். பழைமையை அடியோடு அழிக்கும் ஆவேசந்தான் இக்கதையில், அந்த முள்ளங்கி இளைஞனைப் பழமையின் சின்னமாக இருக்கும் நாவிதனைக் கொல்லத் தூண்டுகிறது. ஆனால் கிழவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை போய்விடவில்லை.

அந்தச் சிறிய குழந்தையை அக்கிழவர் தழுவிக் கொள்வதாகக் காட்டும் குறியீடு மூலம், ஆதவன், இதை அழகாக விளக்குகிறார். கிழவருக்குப் பழமையின்பாலிருக்கும் பிடிப்பு, போலித் தனமான, வெறுக்கத்தக்க ஈடுபாடன்றி, சமூக உறவுகளில் ஒருவன் தன் 'சுதந்தரத்தை' உணர முடியுமென்று புரிந்து கொள்ளும் கேண்மையுணர்வு. 'சமூக உறவுகள்' என்றால், கிழவரின் மகனுக்கும், மோத்வானிக்குமிடையே இருக்கின்ற போலித் தனமான உறவு அன்று; அவர்களுக்கும், நாவிதர் களுக்குமிடையே உள்ள உறவு, கிழவர் புதிய உலகுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகவிருப்பது ஒரு முக்கியமான விஷயம்.

'பழமை நேர்மையும் ஆழமும் கொண்டிருந்தால், ஒருவனால் தன்னை நியாயமான, சரித்திர நிர்ப்பந்தங் களினால் ஏற்படுகின்ற புதிய மாறுதல்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய உள் வலு அதற்கு உண்டு' என்று ஜார்ஜி மார்க்காவ் கூறுகிறார்:

ஆதவனின் ஒவ்வொரு கதையும் உள் நோக்கிச் செல்லும் பயணம். அப்பயணத்தின் விளைவாகப் புலப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், புற நிகழ்ச்சிகள் பரிசீலனைக் குள்ளாகின்றன.

ஆனால் ஆதவன் தீர்ப்பு வழங்குவதில்லை. மென்மையும், நளினமும், நாசூக்கும் கலந்த நடையின் மூலம், சொல்ல விரும்பும் கருத்தை, எழுத்தின் வடிவத்தின் வழியாக உணர்த்துகின்றார்.

இதுவே அவர் கலையின் வெற்றி.

***

Oct 19, 2012

குழந்தையின் கடல்-ராஜா சந்திரசேகர்

குழந்தையின் கடல்

நள்ளிரவில் எழுந்துDSC_4335a__1___2__reasonably_small - Copy
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று

பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்

பெயர் வைக்கும் சிறுமி

நாய்க்குட்டிகளுக்கு
பெயர் வைக்கும் சிறுமி
நாய்க்குட்டிகளிடம்
கேட்கிறாள்
தனக்கு பெயர்
வைக்கச் சொல்லி

பார்க்கும் பொம்மை

தன் குழந்தைக்கு
பொம்மை
வாங்க முடியாது
எனத் தெரிந்து
பேரம் பேசி
வெளியேறப் பார்க்கிறார்
அப்பா

பாசம் உணர்ந்து
கட்டுபடியாகும் பேரத்துக்கு
படிய வைத்து
விற்கப் பார்க்கிறார்
கடைக்காரர்

பொம்மைப் பார்க்க
போராடுகின்றனர்
இருவரும்

நன்றி: நினைவுகளின் நகரம் தொகுப்பு

Oct 16, 2012

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை.
"கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்..." என்பதை அவன் அறிந்தவனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழைஇழையாய் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். ஆடைகளைப் பயன்படுத்தும் நாம் நெய்தவனைப்பற்றி யோசித்ததே இல்லை. ஆனாலும் மிகச் சிலரின் காதுகளுக்கு தறியின் இடதும் வலதுமாய் ஒடி ஒடி நூல் இழைக்கும் நெளியின் ஒலி கேட்கிறது. அப்படித்தான் எனக்கும் தேனுகாவுக்கும் அது கேட்டது. அந்த சப்தம் தந்த உறுத்தலால் தான் தொண்ணூற்றி ஓராம் ஆண்டின் இறுதியில் கரிச்சான்குஞ்சு மற்றும் எம்.வி.வி ஆகியோரது புத்தகங்களே இப்போது அச்சில் இல்லாமல் இருக்கிறது அவற்றை நாம் கொண்டு வர ஏற்பாடு செய்ய  வேண்டுமென்றும் அவர்களுக்காக கருத்தரங்கள் நடந்த வேண்டுமென்றும் சந்திக்கும் போதெல்லாம் பேசி பேசி திட்டமிட்டுக் கொண்டே இருந்தோம்.  அப்போது தொண்ணூற்றி இரண்டில் திடீரென கரிச்சான்குஞ்சு இறந்து விட்டார். பதற்றமாக இருந்தது. ஏதோ செய்ய தவறிவிட்டோம் என்பது போலவான ஒரு மனச்சங்கடம். உடனே கரிச்சான்குஞ்சுவின் வெளிவராத “காலத்தின் குரல்” என்ற புத்தகத்தை நண்பர் “புதிய நம்பிக்கை” பொன் விஜயன் மூலமாக வெளிக்கொண்டு வந்தோம். அப்போது அதில் பொதியவெற்பனும் கடைசியில் சேர்ந்துகொண்டார். கருத்தரங்கம் நடத்த முடியாத நாங்கள் கரிச்சான்குஞ்சுக்கான இரங்கல் கூட்டத்தை நடத்தினோம். அப்போது அவர் படத்தை திறந்து வைத்து அப்புத்தகத்தையும் வெளியிட்டார் எம்.வி.வி.

கும்பகோணம் காந்திபூங்கா எதிரில் உள்ள ஜனரஞ்சனி ஹாலின் கீழ்புற சிறிய அரங்கில் அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த நாளின் மதியத்தில் எம்.வி.வியின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கையும் நடத்தினோம். அசோகமித்திரன், கோவை ஞானி, கோமல்சாமிநாதன் ம.ராஜேந்திரன், மாலன், ப்ரகாஷ், மார்க்ஸ் போன்ற எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம்.வி.வி. அந்த கூட்டத்தில் பேசிய இறுதி உரையின் கடைசி வரிகள் ரொம்பவும் நெகிழ்வானது, "நான் கல்லாப்பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையை கட்டி பூட்டி விட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (அதாவது முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்". அதாவது இரண்டாயிரம் ஆண்டு நிகழப்போகிற தன் மரணத்திற்கு கிட்டத்தட்ட அவர் தொண்ணூற்றி இரண்டிலேயே தயாரான ஒரு மனநிலையில் இருந்தார். அவரது இந்த வார்த்தைகள் இவரது புத்தகங்களையும் தாமதமில்லாது உடனே கொண்டு வந்து விட வேண்டுமென எங்களைத் தூண்டியது.
பொதிய வெற்பனிடம் அப்போது அது பற்றி பேச அவர் எம்.வி.வியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ”இனி புதிதாய்” - என்ற தலைப்பில் ஒரு புத்தமாக கொண்டு வந்தார்.
வெளியிடப்படாத அவரின் காதுகள் நாவலின் கையெழுத்து பிரதி சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தில்  ஏழாண்டுகள் ஆக இருந்து கடைசியில் காணாமலே போய்விட்டது. எங்களுக்கும் எம்.வி.வி.க்கும் மிகச்சிறந்த நண்பராக இருந்த ஆசிரியர் கலியமூர்த்தியின் சலியாத தேடுதலால், அது மறுபடி கைக்கு கிடைத்தது. அதனை நான்
Mvv
Add caption
அன்னம் பதிப்பகம் மீராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். அவரும் ஒரு ஆறுமாதகாலத்துக்குப் பின் அதைப் படித்துப் பார்த்து அதன் தரமும் மேன்மையும் உணர்ந்து அதனை வெளியிட்டார். அந்நாவலுக்கான பொருத்தமான ஜாக்ஸன் போலக்கின் ஒவியத்தை அட்டைப்படமாக வடிவமைத்து தந்தார் தேனுகா. எங்களுக்கு இதல்லாம் சந்தோஷமான காரியங்களாக இருந்தது.
சவுத் ஏஷியன் பதிப்பகம் வழியாக “என் இலக்கிய நண்பர்கள்” - என்ற எம்.வி.வியின் கட்டுரை தொகுதியை கொண்டுவந்தோம். அதன் முன்னுரையில் கூட எங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார் எம்.வி.வி. இன்றும் காலச்சுவடு வழியாக சரிச்சான்குஞ்சு எம்.வி.வி. புத்தகங்களை கொண்டு வர நானும் தேனுகாவும் முன் முயற்சி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து கொண்டுமிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது ”பைத்தியக்காரப் பிள்ளையே” - சான்று என்று அசோக மித்திரானால் குறிப்பிடப்பட்ட எம்.வி.வி. வெளியில் வர இயலாத அவரது இறுதிகாலங்களில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்திக்க ஏங்கியவாறே இருந்தார். அதை உணர்ந்த நாங்கள் எந்த எழுத்தாளர் கும்பகோணத்துக்கு வந்தாலும் அவர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். அப்படித்தான் ஞானக்கூத்தன், எஸ்.வைதீஸ்வரன், பிரபஞ்சன், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, கோபிகிருஷ்ணன், வண்ணநிலவன், மீரா, திலகவதி, கோமல் சாமிநாதன் போன்ற பலரையும் நான் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவாறு இருந்தேன். நானும் தேனுகாவும் சராசரியாய் வாரம் ஒரு முறை அவரை பார்ப்பவர்களாக இருந்தோம். அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புகளும் எங்களுக்கு அமைந்தது.
அவர் வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சுற்றிய காலம் என்ற ஒன்று இருந்தது. அதற்குபின் எண்பதுகளின் துவக்கத்தில் கும்பகோணம் காந்தி பார்க்கின் திறந்த வெளியிலும் ஜனரஞ்சனி ஹாலின் சா துஷேஷய்யா நூலகத்திலும் நாங்கள் சிறுசிறு கூட்டங்களை நடத்தி அதில் எம்.வி.வியையும் கரிச்சான்குஞ்சுயையும் பேசவைப்போம். தங்கள் எழுத்துலக அனுபவங்களை அவர்கள் எங்களுக்கு கதை கதையாக சொல்வார்கள். இருவருமே வயசு வித்யாசமின்றி எல்லோரிடமும் இணக்கமாக பழகக்கூடியவர்கள். சில சமயம் அசட்டுத்தனமாக நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்வார்கள். சமயத்தில் ” வக்காள ஒழிகளா..” என்பது போன்ற வார்த்தைகள் கரிச்சான்குஞ்சு வாயிலிருந்து சகஜமாக வரும். எம்.வி.வியிடமிருந்து அப்படி கேட்க முடியாது. கரிச்சான்குஞ்சுவிடமிருந்து பரவசமும் குழந்தைத்தனமும், குதூகலமும், சிரிப்பும் பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்ளும். எம்.வி.வி. எப்போதும் நிதானமாக இருப்பார். எல்லாவற்றையும் கடந்த ஒரு ஞானியின் புன்னகையோடு சலனமின்றி இருப்பார் பல சமயம். கரிச்சான்குஞ்சு வாய்விட்டு எதிராளியின் மேலேகூட சமயத்தில் தட்டி  சிரிப்பார். எம்.வி.வியின் சிரிப்பு அடக்கமாக கட்டுக்குள் இருக்கும்.
வறுமையும் லௌகீக சிரமங்களும் மனஅழுத்தமும் இருக்கும் போதும் கூட எம்.வி.வி. ஒரு மெல்லிய புன்னகையோட இருந்திருக்கிறார். எந்த கஷ்டத்திலும் நண்பர்களிடம் அவர் கடன் வாங்கியதில்லை. நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அத வெளில சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரை குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும், பல்கடிச்சு தாங்கணும் என்பார். அவர் அவரது இந்த வார்த்தைகளுக்கு தக்கவே அவர் வாழ்ந்தார்.
வீட்டிலிருந்தபடியே தினமும் கொஞ்சம் கைகால் நீட்டி உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பூஜை அறையில் தினமும் சாமி கும்பிடும் வழக்கமும் இருந்தது. அதுபோலவே தினமும் முகச்சவரம் செய்து கொள்வதில் கவனமாக இருப்பார். புதிய புதிய சட்டைகளை அணிந்து கொள்வார். பவுடர் பூசிக்கொள்வார். முகம் எப்போதும் தேஜஸ்ஸாக இருக்கும். கணக்காக வாரிய தலைமுடி. திருநீறும் குங்குமமும் துலங்கும் நெற்றி. வெற்றிலை காவி ஏறிய பற்கள். பன்னீர் புகையிலை வாசம். தாம்பூலம் தளும்பும் இதழ்களின் கனிந்த சிரிப்பு. பார்த்தடவுடன் ஒரு மரியாதை தோன்றும் விதமாகவே அவர் எப்போதும் இருப்பார். பனியனோடு வீட்டில் அமர்ந்து இருக்கும் போதுகூட. ஒரு தத்துவ ஞானியின் பிரசன்னம்போல இருக்கும் அவரது இருப்பு.
“ திருக்கண்டேன் பொன்மேனிக்கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.....”
அவர் தோற்றம் இந்த பேயாழ்வாரின் இந்த பாசுரத்தை எனக்கு நினைவூட்டும் சில சமயம். அதீத வறுமையிலும் செம்மாந்து புன்னகைத்த எம்.வி.வி. அந்த எழுத்தின் மூலமே அதை அடைந்தார் என்பதுதான் துயரம்.
பெரும் பட்டுஜரிகை வியாபாரியான அவர் வியாபாரத்தையும் மறந்து எழுதத்துவங்குகிறார். தேனி என்ற  இலக்கிய பத்திரிக்கையை துவங்கி முதலீடு போட்டு, தானே ஆசிரியராக இருந்து நடத்துகிறார். உதவி ஆசிரியர் அவரது அத்யந்த நண்பன் கரிச்சான்குஞ்சு. பேப்பர்காரனுக்கு பிரஸ்காரனுக்கு பைண்டிங் பண்றவனுக்கு நாம் கடன் சொல்ல முடியுமா? பணம் இல்லன்னு சொல்ல முடியுமா? எழுத்தாளன் மட்டுமென்ன விதிவிலக்கு என்று, நாற்பதுகளில்  தேனியில் எழுதியவர்களுக்கு இருநூறு ரூபாய் சன்மானம் தந்துள்ளார். இவ்வளவு பணம் வருகிறதே என்று இரண்டு பெயரில் அதில் எழுதிய எழுத்தாளர்களும் உண்டு என்பது இதில் இன்னொரு சுவாரஸ்யம். அந்தகாலத்தில் கிட்டத்தட்ட அந்த ஒரு வருஷத்தில் முப்பதாயிரம் ரூபாய் இந்த பத்திரிக்கையால் நஷ்ட்டம் அடைந்துள்ளார் எம்.வி.வி. இந்த காலமதிப்பில் அது எத்தனைலட்சம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அந்த பத்திரிக்கை நடத்தியதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் ஒரு தனி நாவலுக்குரியது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். மௌனியின் கதை ஒருமுறை பிரசுரத்திற்கு வந்ததாகவும் அதில் ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக். கமா, புல்ஸ்டாப் ஏதுமில்லை கிளாரிட்டி இல்லை. ஆனால், எல்லாவற்றையும் மீறி, நெளிநெளிகோடுகளால் ஆன, நுட்பமான வேலைப்பாடு கூடிய, Ravi subramaniyanமனச்சித்திரங்கள் அவை என்று சிலாகித்துச் சொல்வார். அந்த தேனி பத்திரிக்கைகாக பேப்பர்கூட வாங்கத்தெரியாமல் பேல் கணக்கில் ஆர்டர் கொடுக்க அது வீட்டில் வந்து இறங்கியுள்ளது. ஒரு நாள் அந்த பத்திரிக்கைக்காக பேப்பர் நறுக்க பேலை உருட்ட, அது வாசல் வரை ஓடி பரந்து விரிந்து கிடந்திருக்கிறது. அந்த நேரத்தில் இவரிடம் ஜரிகை வாங்க வந்த குஜராத் சேட், அந்த பேப்பரின் மேல் நடந்து இவரை வந்து அடைகிறார். இந்த பித்து உள்ள உன்னால் இனி வியாபாரம் சரியாக செய்ய முடியாது என்று, அன்றே அவருடனான எல்லா வியாபார உறவுகளையும் முறித்துக்கொள்கிறார். பின், மெல்ல ஷீணமடைந்து முடிவுக்கு வருகிறது அவரது வியாபாரம். அதன் பின்னான வறுமையும் மன அவசங்களும் அவரை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வந்திருக்கிறது. இருபத்திஏழு வருஷங்கள் அவரது காதுகளில் நாரசமான விநோதமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அதனோடுதான் நான் வாழ்ந்தேன் கடைசியில் என் குருநாதன் முருகன் திருவருளால்தான் அந்த துயரங்களிலிருந்து மீண்டேன் என்று சொன்னார். காதுக்குள் யாரோ அமர்ந்திருப்பது போலவும் திட்டுவது போலவும் சிரிப்பது போலவும் அழைப்பது போலவுமான, அமானுஷ்ய குரல்கள் அவரை ஆட்டிப்படைத்திருக்கிறது. அந்த அனுபவத்தின் வழியே அவர் கண்டடைந்த நாவல்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற காதுகள் நாவல்.
அந்த நாவலை பல எழுத்தாளர்களால்கூட சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. மருத்துவர்கள் இது ஒரு ஹாடிட்ரி ஹல்யூசினேஷன் சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தி அதுபற்றிய விஷயங்களைச் சொன்ன பிறகே அந்த நாவல் குறித்து பலருக்கும் புரிந்தது.
சிறுகதை நாவல் குறுநாவல் கட்டுரை மொழி பெயர்ப்பு குழந்தை இலக்கியம். நாடகம் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக்குவித்த எம்.வி.வி. தனது வாழ்நாளில் சராசரியாக அவரே சொன்னபடி ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதியுள்ளார். இவ்வளவு எழுதிய எம்.வி.விக்கு அவரது கடைசி பத்து ஆண்டுகளில் ரைட்டர்ஸ்கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாமல் ஆனது.
என்ன ரவி எம்.வி.வி. கையெழுத்து இப்படி இருக்கு என்று கேட்ட மீராவுக்கு
நான் எழுதிய பதில் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தேன்.
எழுதி எழுதிச் சோர்ந்த விரல்கள்
இப்போது கையெழுத்திடவும் நடுங்குகிறது
இ.சி.ஜி. கிராப் போல. என்று
பட்டாடை நெய்யும் சௌராஷ்ட்டிரர்கள் சமூகத்தில் பிறந்த அவரது வாழ்வில் பட்டின் மினுமினுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. அவரது பால்ய காலத்தின் சில வருஷங்கள் தவிர. அந்த பால்யகாலத்திலும் அவருக்கு இன்னொரு அவஸ்தை நிகழ்ந்தது. தனது சொந்த அப்பா அம்மாவால் அவரது தாய்மாமனுக்கு சிறுவயதிலேயே தத்து கொடுக்கப்பட்டவர் எம்.வி.வி. மாமாவை அப்பா என்றும் அத்தையை அம்மா என்றும் அழைக்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது அத்தை இவ்வளவு செலவு பண்ணி உன்னை தத்துஎடுத்தேனே அம்மா என்று கூப்பிட மாட்டேன் என்கிறாயே அம்மா என்று கூப்பிடு என்று சொல்லி தண்டிக்கிறார். வாய் அம்மா என்றாலும் மனம் ஒட்டாமல் தத்தளிக்கிறார் வெங்கட்ராம். அவரது மன அழுத்தத்தில் துவக்கப்புள்ளி இது என்று சொல்லலாம்.
இவ்வளவுக்கு மத்தியில் சுவாரஸ்யமான பல அடுக்குகளை கொண்டது அவரது வாழ்க்கை. அப்பா அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடிஸ்வர வாழ்க்கை. பதிமூன்று வயதில் எழுத்ததுவங்கியது. பதினாறு வயதில் மணிக்கொடியில் சிட்டுக்குருவி என்ற கதை பிரசுரம். பி.ஏ. பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கி கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கிய புலமை. இளம் வயது திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம். நாற்பத்தெட்டில் தேனி பத்திரிக்கை துவங்கியது. பத்திரிக்கையில் நஷ்டம், அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியாக சிலகாலம். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு காலம். இந்த அனுபவங்களும் கூட இல்லாவிட்டால் எழுத்தை தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில் என்பார் எம்.வி.வி.
கரிச்சான்குஞ்சு கவனிக்கப்படாதது போலவான ஒரு விஷயம் எம்.வி.விக்கு முழுவதுமாக நேர்ந்து விடவில்லை. ”என்னய்யா இந்த ஊரை இப்படிக்கொண்டாடுதேய்யா அவரை” - என்று லா.ச.ரா. குறிப்பிடும்படி ஆனது அந்திமக்காலங்களில் அவர் மீது குவிந்த கவனம்.
அவர் சௌராஷ்ட்டிர மொழியில் எழுதி இன்னும் வெளிவராத புத்தகம் மீ காய் கரு.
தமிழில் அதன் அர்த்தம் நான் என்ன செய்யட்டும்.
கடைசியாக வந்த அவரது புத்தகம் எம்.வி.வியின் கணிசமான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. அதை மிகுந்த பிரியத்தோடும் பொருளாதார சிரமத்தோடும் பாவைச்சந்திரன் வெளியிட்டார். அதில் பிழைகள் திருத்தும்வரை பார்வை சரியாக இருந்தது எம்.வி.விக்கு. அந்த புத்தகம் முழுமைப்பெற்று வரும் போது அதைப்பற்றி அவரது காதில் சத்தமாக கத்தி சொல்ல வேண்டியிருந்தது. அட்டைப்படத்தில் சிரித்தபடி இருக்கும் அவரது புகைப்படத்தை தன் கைகளால் மட்டுமே தடவிப்பார்த்துக் கொள்ள முடிந்தது அவருக்கு.
கேட்காத காதுகளோடும் பார்க்க முடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் குமிழிகளோடும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை.
இயன்ற வரையில் நினைவுதப்பாமல் இருந்த வரையில் எல்லா கஷ்டங்களையும் மீறி
கைமாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்து கொண்டே இருந்தார். தன் நடுங்கும் விரல்களால்.
நன்றி: ரவிசுப்ரமணியன் தளம்

Oct 15, 2012

க. நா. சு. வின் ஓர் உரை

க.நா.சு.100

இத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது.

மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை.

() () ()

இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. புத்தகத்தைப் பாராட்டி பேசிவிடுவதோடு நிறுத்திவிடாமல், காசு கொடுத்து வாங்கி இது நன்றாக இருக்கிறது என்று பத்துப்பேரிடம் சொல்லி அவர்கள் சந்திக்கிற ஆட்களும் மற்றவர்களிடம் சொன்னால், அந்தப் பத்துப்பேரும் வாங்காவிட்டாலும் ஓரிருவர் வாங்குவார்கள்  என்ற ஒரு நம்பிக்கையில் புத்தக விற்பனை ஓரளவு ka-naa-su-1நன்றாக ஆகுமென்று தோன்றுகிறது. இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம் என்று எண்ணுகிறேன். புத்தக விமர்சனக் கூட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. இரண்டு மூன்று கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்தும், பேசப்போயும், வேடிக்கைப்பார்க்கப் போயும் அறிந்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது என்று நான் சொல்லலாம். நல்லவேளையாக இதைச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

இரண்டாவதாக சிறுகதைகள் என்பதைப் பற்றி பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. ஒரு எழுபத்தைந்து வருட சரித்திரம் இருக்கிறது. இந்த எழுபத்தைந்து வருட சரித்திரத்தில், சிறுகதைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமானால், ஒரு பத்து / இருபது பேரை பெயர் சொல்லி குறிப்பிட்டுச் சொல்ல்லாம் என்று நான் சொல்வேன். கொஞ்சம் தாராளமாகச் சொல்பவர்கள் நாற்பது ஐம்பது பேரைச் சொல்ல்லாம் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒரு நான்கைந்து பேர்களைத்தான் சொல்ல முடிகிறது. அல்லது ஏழெட்டு பேரை சொல்ல முடிகிறது என்று வைத்துக் கொண்டாலுங்கூட அந்த ஏழெட்டுப் பேரை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று யோசித்துப் பார்க்கையில், அவர்கள் எல்லாருமே மற்றவர்கள் எழுதியதிலிருந்து மாறுபட்ட எழுத்துக்களைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அந்த மாதிரிப் பார்க்கும்போது இன்று எழுதப்படுகிற எழுத்துகளிலிருந்து மிகவும் பெரிய அளவில் மாறுபட்ட எழுத்தை மா. அரங்கநாதன் தன்னுடைய ‘வீடு பேறு’ என்ற நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்று இரண்டல்ல-இருபது கதைகள் இருக்கின்றன. இந்த கதைகள், இந்த மாறுபட்ட விதத்தில் பொது மக்களுக்கு இதுதான் பிடிக்குமென்று எல்லாரும் தெரிந்து எழுதுகிற சிலர் பழக்கமாக கையாளுகிற – புள்ளிவைத்த இடத்தில் கையெழுத்து போடுகிறமாதிரி வார்த்தைகள் போட்டு நிறுத்திவிடுகிற கதைகள் எழுதுகிற ஒரு தமிழ் உலகத்தில் – தனிப்பட்ட ஒரு குரலாக ஒலிக்கிறது. சிறு கதைகள் எழுதுவதற்கு என்றும் தைரியம் வேண்டியதாக விருக்கிறது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால், அந்த தைரியம் அரங்கநாதனுக்கு இருந்ததுமட்டுமல்ல-இந்தக் கதைகளில் சிலவற்றை பத்திரிகைகளிலும் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். அதாவது ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு சிறுகதைகள் என்று தெரிந்து படிக்க்க்கூடிய வாசகர்கள் படிக்கும் சில பத்திகைகளில் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். இதில் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதை – பெயரைச் சொல்லாமல் – சொல்கிறேன். இவருடைய கதையை, ‘மைலாப்பூர்’ என்ற கதையை; ஞனரதத்தில் வெளியிட்டபோது, வெளியிட்டப்பிறகு, நான் ஒரு நண்பரை சந்திக்க நேர்ந்தது சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ‘‘எனக்கு அந்தக் கதையில் என்ன எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை’’ என்று சொன்னார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் கொஞ்சம் அறிவாளி. விமர்சனங்கள்-கதை என்று அவரும் எழுதுகிறவர்தான். எழுதுவதில் கொஞ்சம் திறமையுள்ளவர், படிப்பதிலும் திறமையுள்ளவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்தவர்தான். சொன்னவுடன் எனக்கு கொஞ்சம் வியப்பாகவும் இருந்த்து. என்ன புரியவில்லை என்று கேட்டேன். எதற்காக இதை எழுதியிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னார். நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து விட்டு நீங்கள் இன்னொரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, விட்டுவிட்டேன். ஆனால் அன்றிரவு தூங்கப் போகும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்களை உங்களுக்கே காட்டிக் கொடுப்பதற்காகத் தான் அந்தக்கதையை எழுதி இருக்கிறார் அரங்கநாதன் என்று சொல்லலாமா என்று தோன்றியது. இது எந்த சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – தரமாக எழுதுகிற எந்தச் சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆசிரியன் தன்னைப்பற்றி மட்டும் காட்டிக் கொள்வது இல்லை. வாசகனுடைய அறிவு தளத்திலிருந்து, அவனுடைய மனதிற்குள் அலைகளை எழுப்புகிற வேகத்தையும் அவனைச்சுற்றி சித்தரிக்கிறான். அவனுக்கே புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு இந்தச் சிறுகதைகள் பிரயோஜனப்படுகின்றன. நல்ல சிறுகதைகள் என்று சொல்லக்கூடியவை பிரயோனப்படுகின்றன என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி இந்தக்கதைகள் வேண்டியிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகு அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை – அதனால் சொல்லவில்லை. இந்த மாதிரி கதைகள் எழுதுகிறபோது, ஒரு கனமாக கதைகள் எழுதுகிறவர்களை, அதிகமாக பாராட்டுவது என்பது நம்மூரில் பழக்கமில்லை என்று இக்கட்டத்தில் இரண்டுபேர் பாராட்டிவிட்டார்கள்.

தன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்ல்லாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறக் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது. ஒரு Intellectual அறிவு தளத்தில் – போலி அல்லாத அறிவுத்தளத்தில் – உள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். அறிவுதளம் என்று சொல்லுகிற போது போலியாக ஓர் அறிவு தளம் அதாவது நமக்கு நம்முடைய படிப்பில் இருந்து வராத, நம்முடைய மண்ணில் வேர்விடாத அறிவு இயக்கங்கள் பல பரவி இருக்கின்றது. உலகில் அவைகளுக்கெல்லாம் நாம் வாரிசாக எண்ணிக்கொண்டு, அந்த அறிவு தளத்திலிருந்து செய்யப்படுகிற சில விஷயங்களை நம்மிடையே பார்க்க முடிகிறது. இந்த மாதிரி பார்க்கிற விஷயங்கள் மனோ தத்துவ காரியங்கள், மனோதத்துவ அலசல்கள் என்கிற அளவில் சைக்யாட்ரிக் என்கிற மாதிரி – சைக்கோபாத் என்று சொல்கிற அளவில் எல்லாம் படுகிறபோது, ஓரளவு போலியாகப் போய்விடுகிறது. இந்தப் போலித்தனம் சில சமயம் அரசியலிலும் காணப்படுகிறது. அரசியலில் நாம் யோசித்துப் பார்த்தோமானால், அரசியல் சிந்தனைகளில் ஒரு சிந்தனை கூட நம்முடைய சிந்தனை நம்முடைய மண்ணில் இருந்து கிளம்பியது என்று சொல்லும்படியாக இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை என்பது உண்மை. அதனாலேயே இந்த அறிவு தளத்தில் ஒரு போலி அம்சம் எப்போதும் இருக்கிறது. இந்தப் போலி அம்சத்தை மீறி அறிவு தளத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களிடமிருந்து, நாம் நிற்கிற மண்ணிலிருந்து கிளம்புகிற வேர்கள், கிழங்குகளிலிருந்து வருகிற ஓர் அறிவு தளத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. அதை சிலபேர் செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

அந்த மாதிரி போலி அல்லாத ஓர் அறிவு தளத்தில் இந்தக் கதைகள் – அரங்கநாதனின் கதைகள் – செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். பார்க்கும் போது மிகவும் சிறப்பாகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

நான் போலி அறிவு தளத்தில் வந்த கதைகள் என்று சொல்வதற்கு ஓர் உதாரணம் சொல்ல்லாமென்று தோன்றுகிறது. ‘பள்ளம்’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதில் ஒரு கதை. குரங்குகள் வந்து உபத்திரவப்படுத்தும், ஒரு சமதாயத்தில், அந்தக் குரங்குகளை ஒழிப்பதற்கு அதன் கைகளில் தண்ணீர் பாம்புகளைச் சுற்றி ஓர் ஓலைச்சுருள் மாதிரிக் கொடுத்துவிட்டால் அந்தப் பாம்புகள் அவைகளைக் கவ்விக் கொள்ளும் – அவைகளும் விடாது, குரங்குகளும் பயந்து ஓடிவிடும் என்று ஒரு கதை வந்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது இது எந்த ஊரில் நடக்கிற விஷயம் – நம்மூரில் யாருக்குமே வந்திராது என்று சொல்லக்கூடும். இந்தக் கதையை எழுதியவர் மிகவும் நல்ல சிறுகதைகள் பல எழுதியிருக்கிறவர்தாம். ஆனால் இந்த அறிவு போலித்தனத்தினால் ஏற்பட்ட ஒரு விளைவாக இந்த மாதிரி கதைகள் சிலவும் நம்மூரில் வரத்தொடங்கி இருக்கின்றன, அந்த மாதிரி போலியான அறிவு தளத்தில் நிற்காது – நல்ல அறிவு தளத்தில் – நமக்குரிய அறிவு தளத்தில் நின்று கதை எழுதுவது என்பது சிலபேருக்கு கைவந்திருக்கிறது. இப்படி கைவந்தவர்களில் சில பேரை குறிப்பாகச் சொல்லலாம். புதுமைப்பித்தனைச் சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனால் அரங்கநாதன் பாதிக்கப்படுகிறார் என்று நண்பர் சொன்னார். அது எனக்கு அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை ஏனென்றால் புதுமைப்பித்தன் கால சிந்தனையில் பலவிதமான கலப்படங்கள் வந்திருக்கின்றன. ஓரளவு தெளிவின்மை கூட இருந்த்து என்று சொல்லக்கூடும். அரங்கநாதன் சிந்தனையில் – அவர் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதுகிறார் என்பதாலேயே ஓரளவிற்கு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடும், சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. இதேமாதிரி பூரணத்துவம் தெரிகிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த மாதிரி பலபேர் எழுதியிருக்கிறார்கள். சுந்தர்ராமசாமியில் பிரசாதம் என்றி சிறுகதைத் தொகுப்பில் பல கதைகள் அந்த மாதிரியாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். தி. ஜானகிராமன் ஆரம்பகாலத்தில் எழுதிய கதைகள் கொட்டுமேளம் முதலிய தொகுப்புக்களில் வந்த கதைகள் – அந்த மாதிரி பல.

இப்படி சொல்லக்கூடியவர்களில் இருபது முப்பது பேர்கள் நம்மிடையே தேறுவார்கள். அந்தமாதிரியாக ஒரு கனமாக தளத்தில் போலியல்லாத அறிவு தளத்தில் நின்று கதைகள் எழுதுகிற கலை அரங்கநாதனுக்கு நன்றாக்க் கைவந்திருக்கிறது என்பது இந்தக் கதைகளைப் படிக்கும் போது தெரியும். நாம் ஒவ்வொரு கதையாக படித்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலுமே முத்துக்கறுப்பன் என்கிற பெயரை அறிமுகம் செய்து வைக்கிற போதே ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கிறமாதிரி ஓர் உலுக்கலை ஏற்படுத்தி விடுகிறார் என்பது அவருக்கு ஒரு சிறப்பான அம்சமாக இதில் காண முடிகிறது.

இதில் இன்னொரு விஷயம், இந்தமாதிரி பாராட்டுக் கூட்டங்கள் போட்டு ஒரு ஆசிரியரை பாராட்டுகிறபோது, ஓஹோ நாம் ஏதோ பிரமாதமாக செய்து விட்டோம் என்று அந்த ஆசிரியர் திருப்திபட்டுக் கொண்டே அதோடு நிறுத்திவிடவோ கூடும். அந்த மாதிரி அரங்கநாதன் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. இந்தக் கதைகளிலேயே அது தெரிகிறது. இவருடைய முதல் புத்தகத்தை - ‘பொருளின் பொருள் கவிதை’ என்றப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதுவும் விளக்கமுடியாத கவிதையைப் பற்றி, சொல்ல இயலாத சில விஷயங்களை, தமிழ் வார்த்தைகளில் சொல்வதற்கு அவர் முயன்றுபார்த்திருக்கிறார். அதுமிகவும் நல்ல முயற்சி. அந்த மாதிரியான ஒரு முயற்சி தமிழுக்கு மிகவும் புதிது. மிகவும் அவசியமானது. பல பேர் செய்து பார்த்திருக்க வேண்டியது. அவரவர்கள் நோக்கிலிருந்து செய்து பார்க்க வேண்டியதென்று எனக்கு தோன்றுகிறது. அந்தமாதிரி இந்தக்கதைகளைத் தொடர்ந்து அவர் நாவல்கள் எழுதலாம், கவிதைகள் எழுதலாம். எது எழுதினாலும் இந்தச் சிறுகதைகளுக்கு அப்பால் போவதாக அமையவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அது மிகவும் அசவியம். ஏனென்றால் இலக்கியத்தில் சாதனை என்பது ஏதோ ஓரிடத்தில் நின்று விடுவதல்ல. அது மேலே மேலே என்று போய்க் கொண்டிருப்பதால் தான் இன்னும் பலர் எழுத வேண்டியதாய் இருக்கிறது. எழுதியவரே தான் செய்த்து போதாது என்று ஒரு நிலையில்தான் அடுத்த புத்தகத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு ஓர் அளவிற்கு ஒரு மெச்சூரிட்டி வேண்டும். இதோடு அவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்கிற நினைப்பு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்கிறேன். அது அவருக்கு இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றாக எழுதுகிறவர்கள் மிகவும் அருகிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இலக்கியம் என்று கேட்பவர்கள் மேலைநாடுகளில் இப்போது இருக்கிறார்கள். சினிமா போதாதா டீ.வி. போதாதா மற்றும் வேறு பல விஷயங்கள் இருக்கின்றனவே - உலகில் அதெல்லாம் போதும் – இலக்கியம் என்ற ஒன்று ஏதோ பத்துபேர் கூடிக்கொண்டு ஏதோ ஒன்றை எதற்காக செய்கிறார்கள் என்று கேட்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறது என்பது பேராசிரியர்கள் வாயிலாக தெரிகிறது. ஆங்கிலப் பேராசிரியர்கள் கேட்கிறார்கள். நாம் இதுவரையில் முன்னூறு நானூறு வருடங்களாக இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் இனிமேல் எடுபடாது – செல்லாது. ஏனெனில் டி.வி.யும் காமிக்ஸ் புத்தகங்களும் சினிமாவும் தான் பிரயோஜனப்படும் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இலக்கியத்திற்கு என்றைக்குமே ஒரு தேவை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கனமான விஷயங்களுக்கு எப்போதுமே ஒரு வால்யூ, தேவை இருக்கத்தான் செய்கிறது. இந்த சினிமா, டி.வி. என்று சொன்னாலும் கூட அவைகளெல்லாம் வார்த்தை என்கிற – மொழி என்கிற – ஒரு சரடோடு இணைக்கப்பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த மொழி என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள, சரியாகச் செயல்படும்படியாக செய்வதற்கு கனமான இலக்கிய ஆசிரியர்கள் எந்தக் காலத்திற்கும் தேவைப்படுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. சற்றேறக்குறைய ஒரு மூவாயிரம் வருடங்களாக இலக்கியம் என்கிற சரடை – கனமாக சரடை – புரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு பாராட்டுகள் ஓரளவு ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை என்றாலுங்கூட இலக்கியம் என்பது இருந்துகொண்டுதான் இருக்கும்.

இந்த இலக்கியம் என்பது இருந்து கொண்டிருக்கிற வரையில் அரங்கநாதன் போன்றவர்கள் நிறைய செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து வெயல்படவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இந்த மாதிரிப் புத்தகங்களை ஆயிரம்பேர் கூட படிப்பதில்லையே என்ற ஒரு கேள்வி தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தமிழ் நாட்டிற்கு மட்டும் உரியதாக – இருந்துக் கொண்டிருக்கிறது. இதை எப்படித் தீர்த்து வைப்பதென்றுதான் தெரியவில்லை. நல்ல கதைகளாக எழுதியிருக்கிறார். நல்லப் புத்தகமாக நல்ல அச்சாக ப்ரூப் மிஸ்டேக்ஸ் இல்லாமல் வருகிற புத்தகங்கள் மிகவும் குறைவு என்பது புத்தகங்கள் படிக்கிற எல்லாருக்கும் தெரியும். இப்போது ஆங்கிலத்தில் வருகிற தினசரி பத்திரிகைகளில் கூட ஒரு பக்கத்திற்கு மூன்று ப்ரூப் மிஸ்டேக்ஸ் வந்துவிடுகிறது. இந்த மாதிரி புத்தகங்கள் – அமைப்பு எல்லாமே நேர்த்தியாக வந்திருக்கின்ற புத்தகத்தை வாங்கவேண்டியவர்கள் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். அதிகமாக என்றால் பத்தாயிரக் கணக்கில் வேண்டாம், ஆயிரம் இரண்டாயிரம் என்கிற அளவிலாவது இருக்க வேண்டும் என்கிற நினைப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்த மாதிரி வாசகர்களை – காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிக்கிற வாசகர்களை – கண்டு பிடிப்பது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துவைப்பது என்பது என் காலத்தில் நடக்கப் போகிற காரியமல்ல. நமது சந்த்தியர் காலத்தில் – உங்கள் காலத்தில் – நடப்பதற்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பவர்கள் பத்துப் பேரிடமாவது ஒரு மாதத்தில் இந்தப் புத்தகம் படித்தேன் நன்றாக இருந்த்து என்று திருப்பித் திருப்பி அவர்கள் நம்மிடம் என்ன சொன்னாலும் கூட பொறுத்துக் கொண்டு சொல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். அதையே வேண்டுகோளாக நானும் விடுக்கிறேன். யாரிடமும் புத்தகம் படிக்காதவர் என்று தெரிந்தாலுங் கூட சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு ஓர் உபயோகம் இருக்கும். இதை நான் முப்பது வருடங்களாக சில பேர்களை திருப்பித் திருப்பிச் சொல்லியே ஓரளவிற்கு அவர்கள் புத்தகங்களுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிற ஒரு விஷயம். இந்த மாதிரி விளம்பரப்படுத்த வேண்டியது நல்ல புத்தகங்களை – விளம்பரப்படுத்த வேண்டியது – மிகவும் அவசியம். சிறுகதைகள் மிகவும் குறைவாகவே – நல்ல கதைகள் என்று சொல்லக்கூடியவை – இந்தக் காலத்தில் வருகின்றன என்று சொல்ல வேண்டும், இந்தச் சிறுகதைகளில் – மிகவும் குறைவாக வருகிறவைகளில் – மிகவும் சிறந்த ஒரு கதைத் தொகுப்பாக இந்த ‘வீடு பேறு’ என்னும் கதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது என்று சொல்வது மட்டும் போதாது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதையைப் படிக்கிற போதும் மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூணடுகிற ஒரு அம்சம் இதில் இருக்கிறது. அந்த கனம் அரங்கநாதனின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்றும் சொல்லலாம். திருப்பித் திருப்பி படிப்பதற்கு இதில் விஷயமிருக்கிறது. இதை வெறும் கதையாகச் சொல்லியிருந்தால் – சம்பவமாகச் சொல்லியிருந்தால், சம்பவம் முடிந்துவிட்டது – கதையை முடித்த பிறகு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கும். அந்த சம்பவத்திற்கு முந்தைய சம்பவமும் ஞாபகமிருக்கும். திருப்பி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த சம்பவங்களைச் சொல்வதில் இவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார். இதை எவ்வளவு பேர் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று தெரியாது. ‘எர்னஸ்ட் ஹெமிங்க்வே’ என்பவர் ஒரு சிறப்பான இலக்கிய ஆசிரியர் என்று பெயர் வாங்கிய முதல் புத்தகம் Farewell to Arms என்ற ஒரு புத்தகம். 1924-25ல் வெளிவந்த்து. அந்த புத்தகத்தைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டிய ஓர் அம்சம் என்னவென்றால், இந்த நாவலில் சொல்லிய விஷயங்கள் மிகவும் சிறப்பானவை என்று சொல்லி ஹெமிங்க்வே என்பவருக்கு ஒரு முதல்தரமான இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அந்த மாதிரி அரங்கநாதனின் சிறுகதைகளில் சொல்லாத விஷயங்கள் – அரணையைப் பற்றி – அரணை என்கிற பெயரே சொல்லாமல் வந்திருக்கிறது என்று நண்பர் வாசித்துக் காண்பித்தார். அந்தமாதிரி சொல்லாமல் விட்ட விஷயங்கள் எழுப்புகிற தொனி நம்மை மீண்டும் மீண்டும் இந்தக் கதைகளை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டிவிடக் கூடியவை. இந்த சொல்லாமல் விட்ட விஷயங்களை எப்படி நாம் கிரகித்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொரு தடவை படிக்கிற போதும் இதை முதல் தடவை நாம் கவனிக்க முடியவில்லையே இரண்டாவது தடவை தானே கவனிக்க முடிந்தது – இன்னும் என்ன இருக்கிறது இதில் கவனிப்பதற்கு என்று யோசித்துப் பார்த்துப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதே மாதிரி படிக்க வேண்டிய இலக்கிய ஆசிரியர்கள் தமிழில் இதற்கு முன் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சில கதைகள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டிய கதைகள்.

அதற்கு மாறாக படித்த உடனேயே புரிந்து விடுகிற கதைகளை சிலபேர்கள் மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும்கூட அவர்களை இலக்கிய ஆசிரியர்களாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை இலக்கியத்திற்கே ஒரு தொனி என்கிற அடிப்படையைத்தான் அதாவது உடனே விளங்காத ஆனால் பின்னால் நிச்சய விளக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிற விஷயங்கள் சிறுகதையில் ஏற்படுகிறபோது – கவிதைகளில் ஏற்படுகிற மாதிரி – நாவல்களில் கூட இதுமாதிரி உண்டு – இலக்கியத் தரமாக இருக்கிற நாடகங்களிலும் உண்டு – இந்த தொனி என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அது அரங்கநாதனில் மிகவும் பூரணமாக தொனிக்கிறது என்கிற விதத்தில் இந்தச் சிறுகதைகள் உள்ளன. இது 1987ல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மூன்று வருடங்களில் என் கண்களில் கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து சிறுகதை தொகுப்புகள் பட்டிருக்கும். அதில் மிகச்சிறந்த ஒன்றாக இதை நான் கருதுகிறேன் என்று சொல்லி அரங்கநாதனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறுகிறேன்.

ஒரு இரண்டாயிரம் பேராவது வாங்கிப்படிப்பதற்கு ஏதாவது வசதி செய்வதற்கு விளம்பரப் படுத்துவதற்கு யாராவது உதவினால் நல்லது என்று நினைக்கிறேன். நல்லப் புத்தகங்கள் என்று சொல்லி – எடுத்துச் சொல்லி நூறுபேருக்கு அல்லது ஆயிரம் பேருக்கு இந்தப் புத்தகம் நல்ல புத்தகம் என்று சொல்லி, எழுதி, தெரியப்படுத்துவதற்காக ஒரு ஸ்தாபனம் மிகவும் அவசியமென்று கருதுகிறேன். நல்ல சிறுகதைகள் வெளியிடுவதற்கு இப்போது தமிழில் ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. எல்லாரும் மணிக்கொடி மணிக்கொடி என்று அந்தக் காலத்தில் இருந்து ஒரு பத்திரிகையைப் பற்றி பேசுகிறார்கள். அது இருந்தது-போனது. ஆனால் இப்போது என்ன பண்ண வேண்டும். நல்ல கதைகள் எழுதுகிறவர்கள் எங்கே எழுதுவது என்று கேட்டால் ஏதோ ஒரு கணையாழி இருக்கிற மாதிரிச் சொல்லலாம் – சில சமயம் அது நல்ல கதைகள் போடுகிறது. ஏதோ தீபத்தில் சில சமயம் நல்ல கதைகள் வருகின்றன. இந்த மாதிரி ஒன்றிரண்டு பத்திரிகைகள். இப்படியிருக்கிற ஒரு நிலையில் இம்மாதிரி கதைகள் எல்லாம் வெளிவருவதற்குக்கூட ஏதாவது ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்யவேண்டும். இது எப்படி நடக்குமென்று எனக்கு தெரியாது. நான் இதையெல்லாம் பல தடவை சொல்லிச் சொல்லி தோற்றுப் போனவன் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்து ஆனந்த விகடனில் வருகிற கதைகள் போதும் – குமுதம் கதைகள் போதும் என்று தமிழர்கள் காலத்தள்ளுவது சரியல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கதைகளுக்கு அப்பால் சிறுகதை என்ற ஓர் இலக்கியம் உண்டு. அந்த சிறுகதைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதைப் படிக்க வேண்டியவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்கிற ஒரு நினைப்பு ஏற்படவேண்டும். அது எப்படி ஏற்படும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தான் பலருக்கும் சொல்லி இந்த மாதிரி நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு வாசகர்களைத் தூண்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் இலக்கியத்திற்கு ஒரு இயக்கமாக இயங்க வேண்டியவர்கள் இலக்கிய ஆசிரியர்கள் அல்ல. இலக்கிய ஆசிரியர்கள் வாசகர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக எழுதுவதே நின்றுவிடும். வாசகர்கள் தாம் தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கு, தங்களது தமிழ் வளத்தை விருத்தி செய்து கொள்வதற்கு நல்ல புத்தகங்களை தேடிக் கொண்டுபோய்படித்தாக வேண்டும். அப்படி தேடிக் கொண்டுபோய் படிப்பதுடன் மற்றவர்களையும் வாசிக்கச் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Oct 12, 2012

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. - பாரதி மணி

க.நா.சு.100

ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு KA.-NA.-SU-Portrait-01மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் என் அம்மா திண்ணைக்கு வந்து, அவரிடம் ‘ஓய்! மணி ரெண்டாகப்போறது. இன்னும் குளிக்காமெ, சாப்பிடாமெ, உம்ம பேச்சைக்கேட்டுண்டு ஒக்காந்திருக்கான். எல்லாம் ஆறிப்போயாச்சு. அப்பறமா சாப்டுட்டு பேசலாமே!’ என்று எங்கள் ‘இலக்கிய விசாரணைக்கு’ ஒரு முற்றுப்புள்ளி வைப்பாள்! நான் தில்லி வந்து, பிறகு லீவில் ஊருக்குப்போயிருந்தபோது, தில்லியில் நான் கேட்ட படே குலாம் அலிகான், பேகம் அக்தர் இசை பற்றியும், பால சரஸ்வதி அபிநயம் குறித்தும் நான் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டிருப்  பார். அவரிடம் தான் முதன்முதலாக சாணிப்பேப்பரில் அச்சிடப்பட்ட எழுத்து பத்திரிகையைப்பார்த்தேன். பழைய பிரதிகளை பைண்ட் போட்டு வைத்திருப்பார். தான் ஒரு வரி கூட எழுதாமல், நல்ல எழுத்தை ரசிக்கத்தெரிந்த ‘இலக்கியவாதி’! இளவயதிலேயே நல்ல எழுத்தை இனம் கண்டு, தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் வித்திட்ட ஆசான்.

விகடன், கல்கி கதைகளைப்படிக்கும் என்னிடம், கிருஷ்ணன் நம்பியின் கதை வந்திருக்கும் சரஸ்வதி யைக்கொடுத்து படிக்கச்சொல்லுவார். பாவம்…..அறுபது வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்த ஒரு ‘நல்ல எழுத்தாளரை’ப் படிக்காமலே போய்விட்டார்!

எந்த பிரபல எழுத்தாளர்கள் நாகர்கோவிலுக்கு / கன்யாகுமரிக்கு வந்தாலும், நடராஜனுக்கு தகவல் வந்துவிடும். அவருடன் நான் போய் சந்தித்த மூத்த எழுத்தாளர்கள் அனேகம். எனக்கு அவர்களைப்பார்க்க தணியாத ஆவல் இருந்ததோ இல்லையோ, பார்வதிபுரத்திலிருந்து தெற்கு ரோடு -– இப்போதுகாலச்சுவடு விலாசமிருக்கும் K.P. Road –- வழியாக நடந்துபோகும்போது, பேச்சுத்துணைக்காகவாவது என்னையும் வற்புறுத்தி இழுத்துக்கொண்டு போய்விடுவார். அவர் மூலமாகத்தான் ‘மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் நம்ம வேப்பமூடு ஜங்ஷனை வெச்சு ஒரு நாவல் எழுதியிருக்கான்’ என்று ஒரு புளியமரத்தின் கதை கையெழுத்துப்பிரதியைப் படித்துப்பார்த்தேன். பிறகுதான் அது சரஸ்வதியில் தொடராக வந்தது. நாஞ்சில்நாட்டு எழுத்தாளர்களிடம் அவருக்கு தனிப்பிரியம். கிருஷ்ணன் நம்பிக்கும், சு.ரா.வுக்கும் நெருங்கிய நண்பர்.

ஒருநாள் மாலை என்னிடம் ‘நாறோலுக்கு’ வரியா? க.நா.சு. வந்திருக்காராம். சென்ட்ரல் லாட்ஜிலே தங்கியிருக்கார். பாத்துட்டு வருவோம்’ என்றார். எனக்கு அப்போது தன் இனிஷியலை K.N.S. என்று ஆங்கிலத்தில் சுருக்காமல், தமிழில் க.நா.சு. என்று வைத்துக்கொண்டிருப்பவரை பார்த்துவிட்டு வரலாமேயென்று தோன்றியது. லாட்ஜில் சின்ன அறையில் நம்பியும், சு.ரா.வும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டையில்லாத, பூணூல் இல்லாத உடம்பு, இன்னும் மறையாத அம்மைத்தழும்பு, பூ விழுந்த கண், சீப்பையே கண்டிராத தலை. பிற்காலத்தில் தன் ஒரே மகளை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போகும் மனிதரை நான் முதன்முதலில் சந்தித்தேன். ஆனால் தன் ’வருங்கால மாப்பிள்ளை’க்கான எந்த மரியாதையையும் எனக்குத்தரவில்லை! படுக்கையின் ஒரு மூலையில் நானும் ஒண்டி உட்கார்ந்து, பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பேச்சு நடுவில், ‘காப்பி சாப்பிடலாமே…….. கோல்டன் லாட்ஜில சொல்லுவோம். கிச்சாமணி குண்டுப்போத்தி ஹோட்டல்லேருந்து ரசவடை வாங்கிண்டு வருவன்.’ என்று நடராஜன் சொல்ல, ராமசாமி கொடுத்த பத்து ரூபாய் நோட்டுடன் கீழே வந்தேன். ‘கெட்டிச்சட்னி நெறைய வைக்கச்சொல்லுங்க’ என்று க.நா.சு சொன்னதும், மணிமேடையிலிருந்து ரெண்டணா வாடகை சைக்கிள் எடுத்து வடசேரி இறக்கத்துக்குப்போனதும் நினைவிருக்கிறது.

நான் தில்லி போனபிறகு, அறுபதுகளின் இறுதியில் க.நா.சு. சென்னையிலிருந்து தில்லி வந்துவிட்டதாக அறிந்தேன். அவ்வப்போது ரஃபி மார்க் I.E.N.S. ஹாலில் கஸ்தூரி ரங்கன் நடத்தும் கணையாழி மாதாந்திரக் கூட்டங்களிலும், கர்ஸன் ரோடு மலையாளி மெஸ்ஸிலும்,  நான் மெம்பராக இருந்த தில்லி ஃபிலிம் ஸொசைட்டி திரையிடல்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். சர்வதேச திரைப்படவிழாவில் நான் போகும் நாலு தியேட்டர்களில் ஒரு தியேட்டருக்கு மகளுடன் வந்திருப்பார். ஒரு வணக்கத்தோடு சரி. ‘நிறைய கெட்டிச்சட்னியோடு ரசவடை வாங்கித்தந்தேனே!’யென்று பழங்கதையால் அவரை துன்புறுத்தியதில்லை. பிறகு முளைத்த UNI கான்டீனுக்கும் அடிக்கடி வருவார். அவர் தோற்றமோ என்னவோ இணக்கமாக பேசத்தோன்றவில்லை.

1970-ல் இ.பா. மழை நாடகம் எழுதியதும், அதில் கதாநாயகியாக நடித்த ஜமுனாவுக்கு, எனக்கே தெரியாமல் என்மேல் ’பற்று’ ஏற்பட்டதையும் சொல்லியிருக்கிறேன். மாமிகளின் மத்தியில் எப்போதும் எனக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ‘மணிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். ஆண் காரியம் பெண் காரியம் தெரிந்த சூட்டிகை. கைநிறைய சம்பளம் வாங்கறான். எந்த மகராஜிக்கு குடுத்து வச்சிருக்கோ?’ என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். இ.பா.வின் மாமியார் மூலமாக எனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்து, மகள் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்தநாள் காலை க.நா.சு. நான் அப்போது வேலை பார்த்த பிர்லா ஆபீசுக்கு வந்து என்னிடம் பேசினார். அப்போது தான் எனக்கே அந்த எண்ணம் இருந்ததை உணரமுடிந்தது. என் அக்காவிடம் க.நா.சு. வந்த விஷயத்தை சொன்னபோது, ‘ஆமாண்டா… ரொம்ப நல்ல பொண்ணு….நமக்கு ஏன் இந்த ஐடியா முன்னாடி தோணலே?’ என்று என் திருமணத்துக்கு முதல் அட்சதை போட்டார்.

காதல் திருமணங்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லாமல் இரு குடும்பத்தினரின் ஒத்த கருத்தோடு ஜமுனாவின் கைத்தலம் பற்றினேன்.. திருமணம் ஒரு கனமழைநாளில், போட்ட பெரிய பந்தலெல்லாம் தண்ணீரில் முழுகி, அங்கிருந்த ஒரு நாடக மேடையில் இனிதே நடந்தேறியது. எனக்கு நாடகமே உலகம் அல்லவா! இ.பா.வின் மழை நாடகத்தில் தொடங்கிய காதல், அவரது இரண்டாவது படைப்பான போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் நடிக்கும்போது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தன்று, தாரைவார்த்து கொடுக்குமுன் நடக்கும் விரதத்தின்போது க.நா.சு. பூணூல் அணிந்திருந்தார். பலவருடங்கள் கழித்து, அவரிடம் ‘உங்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயத்தை ஏன் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உங்கள் வீட்டாருக்கு அதில் நம்பிக்கையிருந்தது. அந்த நல்ல நாளில் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை!’யென்று பதிலளித்தார். தில்லியில் நடந்த என் திருமண நாளன்று, பார்வதிபுரத்தில் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நடராஜன் தன் வீட்டில் ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தாராம். அவருக்குப்பிடித்த எழுத்தாளர் க.நா.சு.வின் மகளை நம்ம ஊர் கிச்சாமணி கல்யாணம் செய்துகொள்கிறான் என்றால் சும்மாவா?

என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது.  அடுத்தநாளைப்பற்றிய கவலையே இல்லாதவர். எனக்கு அவரிடமிருந்த ஒரே வருத்தம் பத்திரிகைகளுக்கு எழுதி, வரும் பணத்தை இருக்கும்போது தாராளமாக ஹோட்டலுக்கு செலவழித்துவிட்டு, பணம் இல்லாத நாளில், ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாரா?’ என்று மணியார்டருக்கு காத்திருப்பது தான்.  ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சமைக்கும் சமையலை ரசித்து, சப்புக்கொட்டி சாப்பிடுவார். சும்மா சொல்லக்கூடாது….. நான் நன்றாகவே சமைப்பேன். என் அம்மாவின் சீடன்.

என் நண்பர்கள் வட்டத்தில் நான் செய்யும் மொருமொருவேன்றிருக்கும் மசால் வடையும் தூள் பக்கோடாவும் பிரசித்தம். அவை தான் மாலைவேளைகளில் எனது ‘சோமபான’ விருந்துகளுக்கு ஸைட் டிஷ்! (சிறு வயதிலிருந்தே நான் ஒரு மசால்வடைப்ரியன். ‘சுண்டெலியா பொறந்திருக்க வேண்டியவன்டா நீ’ என்று அலுத்துக்கொண்டே, என் அம்மா எண்ணெய்ச்சட்டியை வைப்பாள்!)  பத்து வடைகள் சாப்பிட்டபின்னும், ‘ராஜி! மணி பண்ணின வடை இருக்கா? இருந்தா….இன்னும் ரெண்டு கொண்டுவாயேன்!’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிடுவார். என் எழுத்தைப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் குழந்தைகளுக்கு பிரியமான தாத்தா. என் குழந்தைகளுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவர்.

மாலை நேரங்களில் ஒருநாள் கூட நண்பர்களுடன் ‘Bar’ திறந்திருக்கும் என் ‘தாகசாந்தி கேந்திர’த்துக்கு அவர் வந்ததேயில்லை. வருடாவருடம் டிசம்பர் 31 இரவு நடக்கும் புத்தாண்டு பார்ட்டியில் ஒரு பெக் ’ராயல் ஸல்யூட்’ ஊற்றி அவர் ரூமுக்குச்சென்று, அவரை வற்புறுத்தி குடிக்கச்சொல்லுவேன். மரியாதை நிமித்தம் அதை வாங்கி வைத்துக்கொள்வார். அடுத்தநாள் காலையில் அது அப்படியே இருக்கும்!

தம்பதி சமேதராக நாங்கள் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், வருமுன் ‘மெட்ராசிலே செல்லப்பா, முத்துசாமியைப் பாருங்கோ. சிதம்பரத்துக்குப்போனா மெளனியைப்பாத்துட்டு வாங்கோ. உங்க ஊருக்குப்போனா நம்பியையும், சுந்தரராமசாமியையும், திருவனந்தபுரத்தில் டி.கே. துரைசாமியையும் ஒரு நடை பாத்துட்டு வாங்கோ’ என்று அவர் சொல்ல மறப்பதேயில்லை.

சென்னையில் க.நா.சு. நடத்திய இலக்கியவட்டம், ராமபாணம், சந்திரோதயம், சூறாவளி க்குப்பிறகு, தில்லிக்கு வந்தபின்னும் அவருக்கு இலக்கியப்பத்திரிகை நடத்தும் ஆவல் தணியவில்லை. சமயம் நேரும்போதெல்லாம், என் மாமியார் ராஜி, ‘எங்காத்திலெ ஒட்டியாணம், வங்கி, காசுமாலை, புல்லாக்கு உட்பட ரெண்டு தடவை செட் நகை பண்ணிப்போட்டா. எல்லாத்தையும் சூறாவளி பண்ணிட்டார்’ என்று புலம்புவார். தில்லியில் Lipi Literary Syndicate என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்தத் தடவை நிறுத்தாமல் தொடர்ந்து Lipi லிபி என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை நடத்தவேண்டுமென்று விரும்பினார். அப்போது நான் HDPE Woven Sacks தயாரிப்பாளர்களின் அகில இந்திய சங்கத்துக்கு தில்லியில் பிரதிநிதியாக இருந்தேன். எழுபதுகளில் உரத்தட்டுப்பாடிருந்தது. துறைமுகங்களில் வந்திறங்கும் Bulk Urea/DAP/MOP உரங்களுக்கு 15 கோடி காலி சாக்குமூட்டைகள் தேவைப்பட்டன. இந்திய அரசின் உணவுத்துறையிடம் அந்த பெரிய ஆர்டரை வாங்கிக்கொடுத்து, அதை சரியாக நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது. அவர்களை சும்மா விடலாமா? வசதியுள்ள 70 அங்கத்தினர்களிடம் Lipi Literary Syndicate-க்கு விளம்பரத்திற்காக, தலா ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கை வைத்தேன். இதற்கெல்லாம் C.A.G. Report / Lok Ayukta Report வராது! என்னிடம் அவர்களுக்கு காரியமாகவேண்டியிருந்ததால், க.நா.சு.வுக்கு ரூ.70,000 வந்தது. அப்போது இது ஒரு நல்ல தொகை. அது தீரும் வரை லிபி நான்கு இதழ்கள் வெளிவந்தன! அவரது ஆசையும் தீர்ந்தது!

உங்களில் பலருக்குத்தெரியாத விஷயம் சரண்சிங் சிலமாதங்களுக்கு இந்தியப்பிரதமராக இருந்தபோது, அவர் நடத்தி வந்த Rural India என்ற பத்திரிகைக்கு க.நா.சு.வை ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். தினமும் வீட்டுக்கு கார் வந்து அழைத்துப்போகும். கட்சியிலிருந்த எம்.பி., ராம் விலாஸ் பாஸ்வானிடம் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால், இரண்டே மாதத்தில்கால் கடுதாசி கொடுத்துவிட்டார். சரண்சிங் எத்தனையோ வற்புறுத்தியும், போகவேயில்லை.

1982 வாக்கில் மைசூரில் யூ.ஆர். அனந்தமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இந்திய எழுத்தாளர் பட்டறை முடிந்தபின் இருமாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு வருகிறேனென்று தில்லியிலிருந்து புறப்பட்டார். பல வருடங்களாக மறுபதிப்பு வராமலிருந்த அவரது எல்லா மொழிபெயர்ப்புகளும், படைப்புகளும் அப்போது புற்றீசல் போல புது பதிப்புகள் வர ஆரம்பித்தன. க.நா.சு.வின் பெயரைக்கூட கேள்விப்பட்டிராத இளம் தலைமுறையினர் அவரைப் படிக்கத் தொடங்கினர். ‘தமிழ்நாட்டிலே புதுசா என்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்காங்க.குங்குமத்திலும், துக்ளக்கிலும் தொடர்ந்து எழுதச்சொல்றா. சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாள் சென்னையிலெ இருக்கேன்’ என்று இன்லாண்ட் கடிதமெழுதிவிட்டு, என் ’சித்தன் போக்கு சிவன் போக்கு’ மாமனார் மைலாப்பூர்TSV கோவில் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தார்.

குங்குமம் பத்திரிகையில் அவர் எழுதிய ‘.நா.சு. பக்கத்தில்கருணாநிதிக்கெதிரான விமர்சனங்களையும் பதிவுசெய்ய முரசொலி மாறன் அனுமதித்திருந்தார். சொந்த மகளுக்கும் மேலாக சென்னையில் எல்லா உதவிகளையும் செய்ய, லதா ராமகிருஷ்ணன், மற்றும் மஹாதேவன் போன்றோர் பக்கத்தில் இருந்தனர். இரண்டு மாதம் சென்னை வாசம் என்பது நான்கு வருடங்கள் நீடித்தது. க.நா.சு வாழ்க்கையில் அவை மகிழ்ச்சிகரமானவை. ஒரு பிரபல வார இதழின் நிருபர் இடக்காக ‘ரொம்பநாள் கழிச்சு சென்னைக்கு ஏன் வந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு, ‘கடைசிக்காலத்திலே இங்கே சாகலாம்னு வந்திருக்கேன்!’ என்று பதிலளித்தாராம். இந்த வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை. 1988-ல் தன் கடைசி நாட்களைக்கழிக்க அவருக்குப் பிடித்த தில்லியில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். இதைப்பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

எண்பதுகளில் ஒரு தடவை நாகர்கோவில் போனபோது, பார்வதிபுரத்திலிருந்த என் அம்மாவைப் பார்க்க சுந்தர ராமசாமியுடன் போயிருந்தார். ‘அன்னிக்கு உங்காத்திலெ சாப்பிட்ட பூப்போல, வாயில் கரையும் இட்லியும், சாம்பாரும், அந்த தேங்காய் சட்னியும் போல நான் வேற எங்கெயும் சாப்பிட்டதில்லே. நானும் பல இடங்களில் கை நனைத்தவன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்… என் தாயின் இட்லியும் சட்னியும் உலகப்பிரசித்தம்!

அதனால் தான் எனக்கு ‘முருகன் இட்லிக்கடை’யெல்லாம் சாதாரணமாகப்படுகிறது. எனக்கு நாக்கு நாலேகால் முழம். காளியாக்குடி அல்வாவில் தொடங்கி, எந்த ஊரிலும், சிற்றூரிலும் எந்தெந்த ஹோட்டல்களில் எதெது விசேஷம் என்பதற்கு அவர் ஒரு ரெடி ரெக்கனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல…… சிம்லாவில் எந்த மூலையில் ராத்திரி பத்து மணிக்கு மேல் சிறந்த ‘கடக் சாய்’, சமோஸா கிடைக்குமென்பது அவருக்கு அத்துப்படி.

2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக் கொடுத்து விட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள் போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்!

தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.

எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம்.எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார்.  எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?

நன்றி: காலச்சுவடு -க.நா.சு. நூற்றாண்டு விழா  மலரில் வெளிவந்தது.

Oct 11, 2012

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி-ஜெயமோகன்.

க.நா.சு.100

மலையாள நாவலாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் இன்று வாழும் முக்கியமான படைப்பாளி. செவ்வியல் தன்மை கொண்ட பெரும்நாவல்களை உருவாக்கியவர். தன் சுயசரிதையில் அவரது முதல் நாவலான நிழல்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக Patches of shade என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான மொழியாக்கங்களுக்கு ஒரு போட்டி வைத்தபோது அன்று இளம் எழுத்தாளராக இருந்த சி.ராதாகிருஷ்ணன் தன் நாவலின் பிரதியை அனுப்பியிருந்தார். டெல்லியில் தேர்வுக்குழுவில் என்ன நடந்தது என்று பிறகு அவர் அறிந்தார்.

’ஒரு சாகித்ய அக்காதமி விருதுகூட வாங்காத இவன் யார்?’ என்ற அணுகுமுறை நடுவர்கள் மத்தியில் இருந்தது. அவரது நாவலை எட்டு நடுவர்களில் ஒருவர்கூட வாசித்தே பார்க்கவில்லை. two ஆனால் ஒரே ஒரு நடுவர் மட்டும் போட்டிக்காக அளிக்கப்பட்ட முப்பது நாவல்களையும் வாசித்துப்பார்த்தார். வந்தவற்றில் சி.ராதாகிருஷ்ணனின் நாவல்தான் சிறந்தது என்று அவர் நினைத்தார். நடுவர்கள் எல்லாரும் பேசிமுடித்ததும் திட்டவட்டமாகத் தன் கருத்தைச் சொன்னார்.பொதுவாக வங்காளிகள் எல்லாவற்றையும் வங்கத்துக்குக் கொண்டுசெல்லமுயல்வார்கள், பிற எவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவும் மாட்டார்கள். கூட்டாகச் செயல்படுவதிலும் விடாது வாதிடுவதிலும் மன்னர்கள். ஆனால் அந்த நடுவர் தன் முடிவில் திடமாக இருந்தார்

அவரால் தன் கருத்தைத் தர்க்கபூர்வமாக முன்வைத்து வாதிடமுடியவில்லை. அவருக்கு அது தேவையில்லை என்ற எண்ணமிருந்தது. ’நாவல் இதோ இருக்கிறது, படித்துப்பாருங்கள்’ என்று மட்டும் அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். தன் ரசனைமீது மட்டுமல்ல அந்த நடுவர்களின் ரசனைமேலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. கூட்டம் கலைந்தது. மறுநாள் கூடியபோது எட்டு நடுவர்களில் ஆறுபேர் அந்நாவலை மிகச்சிறந்த நாவலாக ஒப்புக்கொண்டார்கள். வங்காளிகள் இருவரும் அந்நாவல் நல்ல படைப்பென்றாலும் ஒரு வங்க நாவல் ஒருபடிமேல் என்று வாதிட்டார்கள். பரிசு சி.ராதாகிருஷ்ணன் நாவலுக்குக் கிடைத்தது. அந்த நடுவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான ஆங்கில எழுத்தாளர், பெயர் கெ.என்.சுப்ரமணியம் என்று சி.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

இந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நாம் அறியும் ஒரு முழுமையான சித்திரம் உள்ளது. க.நா.சு அன்று சி.ராதாகிருஷ்ணன் போல நிறைய வாசிக்கும் முக்கியமான இந்திய எழுத்தாளர்களுக்குக் கூட அறிமுகமில்லாதவராக இருந்தார். தமிழ்நாட்டைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களில் கட்டுரைகள் எழுதுபவர் என்பதே அவரது அடையாளம். அவர் தமிழின் மகத்தான இலக்கிய ஆளுமை என்பதை டெல்லியில் அவரைச்சுற்றி இருந்தவர்கள்கூட உணர்ந்திருக்கவில்லை.அவரது டெல்லிநண்பர்கள் சிலரால் அவர் அந்த நடுவர்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பார். அந்த சிறு ஊதியம் அவருக்கு ஒருமாதகால வாழ்க்கைக்கு உதவுமே என அவர்கள் நினைத்திருப்பார்கள்.

க.நா.சு வின் ஆளுமையும் அந்த நிகழ்ச்சியில் தெரிகிறது. க.நா.சுவுக்கு இலக்கியம் என்பது ஒரு பதவியோ, பணியோ அல்ல. அது அவரது வாழ்க்கைஇலட்சியம். அவரது உபாசனை அது. அதில் சமரசமோ அலட்சியமோ அவருக்குச் சாத்தியமில்லை. பூர்ணமான அர்ப்பணிப்புடன் மட்டுமே அவரால் அதைச்செய்யமுடியும். அதில் சுயநலமோ, தன்னகங்காரமோ ,சாதிமதஇனமொழிப் பிரிவினைகளோ அவருக்குக் கிடையாது. அந்தப்போட்டியில் அவருடைய நண்பர் எழுதிய ஒரு தமிழ்நாவலும் இருந்திருந்தால் அவர் அதன் தரத்தை மட்டுமே கருத்தில்கொண்டிருப்பார். அவரது இலக்கிய ஈடுபாடு என்பது ஆத்திகனின் கடவுள்பக்திபோல.

அவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப்பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப்பாருங்கோ’ என்ற அளவுக்குமேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.

அவருக்கு இலக்கியரசனையை விவாதம்மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கியரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள் , அவன் அகம் உருவாகிவந்த விதம், அவனுடைய உணர்ச்சிநிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக்கொள்ளமுடியாது. இலக்கியரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக்காட்டினால் மட்டுமே போதுமானது.

க.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கியவிமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக்கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கியவரலாற்றுக்குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல்செய்து வந்ததும் அதுவே.

க.நா.சு வின் முக்கியமான சீடர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி ’உலகமெங்கும் இலக்கிய விமர்சகர் என்ற சொல் எந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அர்த்தத்தில் க.நா.சுவை இலக்கிய விமர்சகர் என்று சொல்லமுடியாது, அவரை இலக்கியச் சிபாரிசுக்காரர் என்று சொல்லலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கறாரான கல்வித்துறைசார்ந்த வரையறையில் அப்படிச் சொல்லலாம்தான். ஆனால் அது சரியானது என்று படவில்லை. ஏனென்றால் ஒன்று, உலகம் முழுக்க இலக்கியவிமர்சனத்துக்கு என்று அப்படி ஒரு பொதுவரையறை இல்லை. இரண்டு க.நா.சுவின் அணுகுமுறைக்கு இந்தியமரபில் நீண்ட தொடர்ச்சியும் வேரும் உண்டு.

சுந்தர ராமசாமி எந்த அளவுகோலால் க.நா.சு இலக்கிய விமர்சகர் இல்லை என்கிறாரோ அந்த அளவுகோலால்தான் தமிழில் நமக்கு இலக்கிய விமர்சனமரபு இல்லை என்றும் சொல்கிறார். அதுவும் பொருந்தாத மதிப்பீடே. மேல்நாட்டு இலக்கியவிமர்சனம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் உருவாகி வந்த ஒன்று. இறையியல் விவாதங்களில் இருந்து அதற்கான மொழியும் கலைச்சொற்களும் உருவாகிவந்தன. அதையே நாம் இன்று இலக்கியவிமர்சனம் என்கிறோம். இலக்கிய அனுபவத்தை வகுத்துரைப்பது, இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வாதிடுவது ஆகிய இரண்டும் அதன் அடிப்படைகள். இலக்கியத்தைப் புறவயமாக விவாதிக்கமுடியும் , விவாதிக்கவேண்டும் என்ற நம்பிக்கையே அதன் அடிப்படை. அந்த நம்பிக்கை இந்திய இலக்கியத் தளத்தில் மேலோங்கியிருக்கவில்லை. ஆகவே மேலைநாட்டு இலக்கியவிமர்சனத்தின் பாணியிலான எழுத்துக்கள் நம்மிடம் இல்லை. நம்முடைய இலக்கிய விமர்சன முறையே வேறு.

இந்திய இலக்கிய மரபு இலக்கியத்தில் லட்சணம் சார்ந்தும் ரசம் சார்ந்தும் அணுகியது. லட்சணமே இலக்கணம். நாம் இலக்கியத்தில் புறவயமாக விவாதித்தது இலக்கணத்தைத்தான். ஆனால் இலக்கண அணுகுமுறை குறுகிய வரையறைகளைச் சார்ந்ததாக இருக்கவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற விரிவான பார்வை கொண்டதாக இருந்தது. இலக்கிய ஆக்கத்தில் புறவயமாக வகுத்துக்கொள்ளத்தக்க எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு விவாதிக்கக்கூடியதாக இருந்தது. நம்முடைய இலக்கணவிவாதங்கள் நமது இலக்கியவிமர்சனங்கள் என்று சொல்லலாம். ரசம் சார்ந்த அணுகுமுறை இலக்கியம் உருவாக்கும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியச்சுவை வாசகனின் மனதிலேயே நிகழ்கிறது. ஆகவே அது புறவயமாக விவாதிக்கத்தக்கதல்ல. அதில் சுட்டிக்காட்டப்படுவதற்கு அப்பால் விமர்சகன் எதுவும் செய்வதற்கில்லை. அந்தவகையான ரசனை விமர்சனம் இங்கே வலுவாக இருந்துள்ளது.

நம்முடைய ஆரம்பகட்ட விமர்சகர்களில் பல வகையாலும் இரட்டையர் என்று சொல்லத்தக்கவர்கள் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவும். இவர்கள் இருவரும் மேலே சொல்லப்பட்ட இருவகை விமர்சனமுறைகளை சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். சி.சு.செல்லப்பா எப்போதுமே இலக்கணம்சார்ந்த அணுகுமுறை கொண்டவர். ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக்கொள்வதென்பதே அவரது நோக்கம். ஆனால் க.நா.சு எப்போதுமே அப்படைப்பு உருவாக்கும் சுவையையே முக்கியமாக கவனிக்கிறார். அவரது ரசனைவிமர்சனம் படைப்புகளை நல்ல வாசகனாக நின்று வாசித்தபின் அவை உருவாக்கும் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதாகும். இந்த வழிமுறை இங்கே சங்ககாலம் முதல் இருந்துள்ளது. இந்த அளவுகோலின்படித்தான் பல்லாயிரம் பாடல்களில் இருந்து சிலபாடல்கள் தேந்ந்தெடுக்கப்பட்டு சங்க இலக்கியத் தொகைநூல்கள் உருவாயின. பல்வேறு காவியங்களில் இருந்து ஐம்பெரும்காப்பியங்கள் அடையாளம் காணப்பட்டு முன்வைக்கப்பட்டன. திருக்குறளும் கம்பராமாயணமும் முன்னிறுத்தப்பட்டன.

க.நா.சு பட்டியல்தான் போட்டார் என்பவர்கள் நம்முடைய ஒட்டுமொத்த இலக்கிய மரபே பட்டியல்கள்தான் என்ற உண்மையைக் கவனிப்பதில்லை. சங்க இலக்கியம் என்று நாம் சொல்வது என்ன? பிரம்மாண்டமான ஒரு காலஅளவில் உருவான ஆக்கங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஆக்கங்களின் பட்டியல்கள்தானே? அன்று முதல் நாலாயிர திவ்யப்பிரபந்தம் , சைவத்திருமுறைகள் ஈறாக நம்முடைய இலக்கிய அறிஞர்கள் தொடர்ச்சியாகப் பட்டியல்கள் தானே போட்டிருக்கிறார்கள்? அந்தப்பட்டியல்கள்தானே நல்ல ஆக்கங்களை அடையாளம்காட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தன? அதன் வழியாக நாம் தமிழிலக்கியம் என்று இன்று காணும் இந்த தொடர்ச்சியான பேரியக்கத்தை நிலைநிறுத்தின? சைவத்திருமுறைகளைப் ‘பட்டியலிட்ட’ நம்பியாண்டார் நம்பிக்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப்‘பட்டியலிட்ட’ நாதமுனிகளுக்கும் ஒரு சமகால முகம் என்று நான் க.நா.சுவைச் சொல்வேன். க.நா.சுவின் பட்டியல்களே நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் அமைப்பின் அல்லது இயக்கத்தின் அடித்தளத்தைக் கட்டமைத்தன.

க.நா.சு இலக்கியத்திறனாய்வு என்றபேரில் விரிவான அலசல்களையும் தர்க்கங்களையும் எழுதவில்லை. ஆனால் அவர் நவீனத்தமிழிலக்கியச்சூழலில் திட்டவட்டமாக இலக்கிய அளவுகோல் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தினார். அவரை நாம் மாபெரும் இலக்கிய விமர்சகர் என்று சொல்வது அவர் என்ன எழுதினார் என்பதனால் அல்ல, என்ன சாதித்தார் என்பதனால்தான். இன்று நோக்கும்போது பிரமிக்கத்தக்க கருத்தியல்வெற்றி என்று அதைச் சொல்லத்தோன்றுகிறது. இன்று இடதுசாரிகள், திராவிடசாரிகள், வணிகச்சாரிகள் உட்பட அனேகமாக எல்லா தரப்பினரும் நவீனஇலக்கியமரபு என்று ஒத்துக்கொள்ளும் ஒரு படைப்புவரிசை உள்ளது. அந்த வரிசை க.நா.சு அவரது ரசனைவிமர்சனம் மூலம் அடையாளம் காட்டி அரைநூற்றாண்டுக்காலம் தொடர்ச்சியாக வலியுறுத்தி நிறுவியது. க.நா.சு வெறுமே டைரிதான் எழுதினார் என்றால் அந்த டைரிதான் நவீனத்தமிழிலக்கியம் என்ற அமைப்பாக ஆகியது என்று சொல்லலாம்.

திரும்பவும் அந்த முதல் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். அன்று அந்த நடுவர்குழுவில் இந்திய இலக்கியத்தின் பெருந்தலைகள் பல இருந்தன. க.நா.சு தமிழகத்தில் மதிக்கப்படாமல் கிட்டத்தட்ட துரத்தப்பட்டு டெல்லியில் அடைக்கலம் புகுந்த நிலையில் இருந்தவர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருதே மிக முதிய வயதில்தான் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தன்னுடைய சொந்த ரசனை சார்ந்த ஒரு முடிவை அந்த நடுவர்குழுவின் முடிவாக மிக எளிதாக ஆக்கிவிட்டார். அது எப்படி? க.நா.சுவிடம் இருந்த அந்த அறிவதிகாரம் என்ன? அதுவே இங்கே தமிழ்நாட்டிலும் அவரது சொந்தரசனையை ஒரு தரமான வாசகர்வட்டம் தங்கள் ரசனையாக எடுத்துக்கொள்ள வழிவகுத்தது. அதனூடாகத் தமிழிலக்கியத்தில் ஒரு தெளிவான வாசகத்தரப்பாக அதை நிறுத்தியது.

அதை இப்படிச் சொல்லலாம். படைப்புகளின் முன்னால் க.நா.சு தன்னை ஒரு ‘வெறும்’ வாசகனாக நிறுத்திக்கொண்டார். தனக்கென்று அரசியல்கொள்கைகளோ அழகியல்கோட்பாடுகளோ எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. தான் வாசித்த நூல்களைக்கூடத் தனக்கான அடையாளமாக ஆக்கிக்கொள்ளவில்லை.பல்லாயிரம்நூல்களை வாசித்தபின்னரும் ஒரு புதியவாசகராகவே படைப்புகளின் முன் நின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன்வைத்து வாசித்தார். வாழ்க்கையைப்பற்றியும் மனிதர்களைப்பற்றியும் தன் அனுபவங்கள் அளித்த அறிதல்களையே படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளாகக் கண்டார். இலக்கியப்படைப்பு தனக்களிக்கும் சித்திரத்தைத் தன் கற்பனையைக்கொண்டு விரிவாக்கி முழுமையாக்கினார். ஆகவே அவருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத உலகங்களை எழுதிய நீல பத்மநாபன் ,ஆர்.ஷண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களின் புனைவுலகங்களுக்குள் மிக இயல்பாக நுழைந்து வாழ்ந்தார்.

இலக்கிய ஆக்கம் முன்னிலைப்படுதுவது க.நா.சு போன்ற ஒரு வாசக மனத்தையே. அது தமிழ்மொழிப்பரப்பின், இந்தியசிந்தனைப்பரப்பின்,மானுடப்பண்பாட்டுவெளியின் நுண்ணிய ஓர் அலகு. அங்கே அந்தப்பண்பாட்டுத்தளத்தின் எல்லா விதைகளும் உறங்கும் ஒரு நிலம் அது. அங்கே ஒரு பிடி நீரை மட்டும் படைப்பாளி விட்டால்போதும், விதவிதமான விதைகள் முளைவிட்டு மேலெழும். இந்த அம்சத்தையே இலக்கிய நுண்ணுணர்வு [Literary Sensitivity ] என்ற பொதுச்சொல்லால் குறிப்பிடுறோம். அது எப்படி உருவாகிறது, எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கெல்லாம் எவ்வளவோ கோட்பாடுசார்ந்த விளக்கங்கள் உள்ளன. ஆனால் இலக்கியங்களை அறிவது இந்த அம்சம்தான். அது ஒருவருக்கு அவரது வாழ்க்கையால் உருவாக்கப்படுவது, அவரது ஆளுமையாகவே ஆகிவிடுவது.

ஆகவே க.நா.சுவுக்கு இலக்கியத்தில் கொள்கை, கட்சி சார்ந்த பேதங்களே இருக்கவில்லை. அவரை முற்போக்கு முகாம் முழுவீச்சில் எதிர்த்தபோதுகூட முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலை அவர்தான் அடையாளம் காட்டினார். எவ்வளவோ முற்போக்கு இலக்கியங்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆர்.ஷண்முக சுந்தரம் போல மறக்கப்பட்டுவிட்டவர்களை பற்றித் தொடர்ந்து பேசினார். படைப்பில் அவர் உள்ளே நுழைந்து வாழ இடமிருக்கிறதா என்பதே அவரது அளவுகோலாக இருந்தது. அவரது அளவுகோல் அபூர்வமாகவே பிழைசெய்தது. சிறந்த உதாரணம் ப.சிங்காரம். சிங்காரத்தின் அங்கதத்தை க.நா.சுவால் உள்வாங்கமுடியவில்லை.

‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச்சிறந்த தமிழ்வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வம்காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்த்தகைய மிகச்சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்லவாசகர்களை இலக்கியப்படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்கமுடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சுவுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கிவருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத்தரப்பின் தலைமைக்குரலாக ஒலித்தார். இலக்கியவிமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒருவேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும்கூட அவர் இலக்கியவிமர்சகராகவே கருதப்படுவார்.

க.நா.சு ஒரு தட்டச்சுப்பொறி வைத்திருந்தார். கையில் மடித்துக் கொண்டுசெல்லக்கூடிய சிறியவகை யந்திரம். அதில் தட்டச்சு செய்ய ஒரு தனிப்பயிற்சி தேவை. அவரது ஒரே ஸ்தாவர-ஜங்கம சொத்து அதுதான். நாலைந்து ஜிப்பா வேட்டிகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இதை இடுக்கிக்கொண்டால் அவர் எங்கும் சென்று எவ்வளவுநாளும் தங்கமுடியும். என் நண்பர் மு.கி.சந்தானம் க.நா.சுவின் ரசிகர். அடிக்கடி க.நா.சுவைத் தன் விருந்தினராக தர்மபுரிக்கும் ஓசூருக்கும் வரவழைத்து வீட்டில் தங்கவைத்து உபசரித்திருக்கிறார். காலையில் சிற்றுண்டி, காபி. அதன்பின் இரவுதான் சிற்றுண்டி. சோறு அனேகமாகத் தேவையில்லை. எளிய கொறிக்கும் உணவுகள் போதும். வேறு எந்த வசதிகளும் தேவையில்லை.

க.நா.சு எங்கோ அவர் தன் கட்டுரைகளைத் தட்டச்சு செய்வதாக எழுதிவிட்டார். அதை வாசித்த அன்றைய மார்க்சியப் பேராசானும் ஈழத்தின் பெரும்தனவந்தருமான க.கைலாசபதி, க.நா.சு ஒரு செல்வச்சீமான் என்றும் சொந்தமாகத் தட்டச்சுப்பொறி வைத்திருப்பவர் என்றும் அதற்கான பணம் சி.ஐ.ஏயில் இருந்து அவருக்கு வருவதாகவும் எழுதினார். நம்மூர் மார்க்ஸியர் அரைநூற்றாண்டுக்காலம் அதை திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். க.நா.சு அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டார் என்றாலும் உள்ளூர அவருக்கு வருத்தமிருந்தது. ஆனால் உள்ளும் புறமும் எதையும் பெரிதாக சுமந்தலைபவர் அல்ல. மானசீகமாக அவர் ஒரு நாடோடி. வம்புகளுக்கு எதிர்வினையாற்றும் வழக்கமே அவரிடம் இல்லை.

அதிகாலையில் க.நா.சு எழுந்துவிடுவார். அன்று எழுதவேண்டியதை எழுதிக் காலையிலேயே தபாலில் போட்டுவிட்டால் அவரது வேலைமுடிந்தது. அதன் பின் வாசிப்பும், உலாவுவதும், பேச்சும்தான். அதிகாலையின் அமைதியில் விளக்கின் சிவப்பு ஒளி கனத்த கண்ணாடிச்சில்லுகளில் கனல, சற்றே கூனலிட்டு அமர்ந்து க.நா.சு தட்டச்சு செய்யும் காட்சி தன் நினைவில் என்றும் இருப்பது என்றார் மு.கி.சந்தானம். அந்தத் தட்டச்சுப்பொறி மிகப்பழையது. நாலைந்து எழுத்துக்களுக்கு ஒருமுறை அதன் அச்சுகள் சிக்கிக்கொள்ளும். க.நா.சு அதைப் பொறுமையாகப் பிரித்துவிட்டு மீண்டும் தட்டுவார். அவரது மொழிநடையில் எப்போதும் அந்த தடங்கல் பிரதிபலித்தது என்று நான் சொன்னேன்

‘அந்தத் தட்டச்சுப்பொறி அனேகமாக மூர்மார்க்கெட்டில் இரண்டாம்விலைக்கு வாங்கியதாக இருக்கும்” என்றார் மு.கி.சந்தானம். அந்தக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்து அப்படிக் கொஞ்சம் பழைய கருவிகள் மூர்மார்க்கெட்டுக்கு வரும். நான் சிரித்தபடி “அது மூன்றுநான்கு கைகள் மாறியதாகக் கூட இருக்கலாம். அதற்கு முன் டி.எஸ்.எலியட் வைத்திருந்திருக்கலாம். கூல்ரிட்ஜ் வைத்திருந்திருக்கலாம்’ என்றேன்.

நன்றி: ஜெயமோகன்.காம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்