Showing posts with label சுகுமாரன். Show all posts
Showing posts with label சுகுமாரன். Show all posts

Oct 8, 2012

க.நா.சு. - நினைவோடையில் துலங்கும் முகம்-சுகுமாரன்

க.நா.சு.100

'காலச்சுவடு ' பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் அறிமுக அரங்கில் பங்கேற்றுப் பேசக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனதில் உருவாகும் சில நினைவோட்டங்களும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, 100-00-0000-055-7_b நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது.க.நா.சு.தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை 'சாமி ' கொள்முதலுக்காக வெளியூர் போயிருந்தார்.அந்த தினத்தில் சந்திக்க முடியாமல் அடுத்தமுறைதான் அவரைச் சந்திக்க வாய்த்தது. சுந்தர ராமசாமிக்கு க.நா.சுவிடம் பயமும் சங்கோஜமுமிருந்தது போலவே அந்த அந்த இளைஞனுக்கும் இருந்தது. அவன் சந்திக்க விரும்பி சந்தித்த எழுத்தாளர் அந்த தயக்கத்தையும் சங்கோஜத்தையும் போக்கினார். அதன் பின்னர் அந்தச் சந்திப்புகள் சில ஆண்டுகள் வலுவாகத் தொடர்ந்தன. அந்த இளைஞன் நானும் அந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியும்தாம் என்று குறிப்பிடும் இந்த நிமிடம் நெகிழ்ச்சியாக அனுபவப்படுகிறது.

க.நா.சு. பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள் முதன்மையாக எனக்குத் தரும் உணர்வு இந்த நெகிழ்ச்சிதான். இந்த சந்தர்ப்பத்தில் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உரிமை பாராட்டவோ ஒப்பிடவோ அல்ல.எழுத்துலகில் பிரவேசிப்பவனின் மோகங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்ற பொது வியப்பைப் பகிர்ந்துகொள்ளவே.

க.நா.சுப்ரமண்யம் என்ற இலக்கிய ஆளுமையுடனான மரியாதையும் தோழமையும் கலந்த உறவின் ஐம்பதாண்டுக் கால அனுபவங்களை சுந்தர ராமசாமி தனது குரலில் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பதிவில் க.நா.சு. மீதான நேசமும் அவரது வாழ்க்கையனுபவங்கள்பால் பரிவும் அவரது கருத்துக்களை ஏற்பதும் நிராகரிப்பதுமான கறாரும் புலப்படுகின்றன.

இலக்கிய வாசகன் என்ற நோக்கில் இது எனக்கு எதற்காக ? இந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து செல்லவே விரும்புகிறேன்.

எழுத்தாளனை அவனது எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதுதான் பிரதானம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிச்சரடாக அவனுடைய வாழ்க்கையை அறிந்திருப்பதும் அவசியம் என்ற இன்னொரு தரப்பும் எழுகிறது. வாழ்வின் மீதான விசாரணையுணர்வே எழுத்து என்ற எளிய அடிப்படையை வரையறுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டு அம்சங்களும் சமமான மதிப்புக்கொள்கின்றன. எழுத்தை அறிவது அதன் நுட்பங்கைளைப் புரிந்துகொள்வது அதை வாழ்வனுபமாக ஏற்றுக்கொள்வது ஒரு செயல். அதை மேலும் விரிவானதாக, ஆழமானதாக மாற்றிக்கொள்ள எழுத்தாளனின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது உதவியாக இருக்கலாம். பிரதி போதும். ஆசிரியன் வேண்டாம் என்று கறாராகத் தீர்மானிக்கிற போக்கில் பிரதியைப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் ஏதோ ஓர் அம்சம் குறைவுபடுவதாகக் கருதுகிறேன்.

அண்மையில் வாசிக்க நேர்ந்த காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் சுயசரிதையான 'கதை சொல்ல வாழ்தல் ' (Living To Tell the Tale) இந்த நோக்கில் எனக்குத் துணைசெய்ததாக நினைக்கிறேன். ' 'வீட்டை விற்கப் போக என்னையும் கூட வரச் சொன்னாள் அம்மா ' ' என்று தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்குகிறார் மார்க்கேஸ்.அந்த வீடுதான் அவர் குடும்பத்தின் ஆதாரம்.விலை மதிப்புள்ள சொத்து. வாழ்வதற்கான இயல்பான வழிகள் மூடப்பட்டபோது வீட்டை விற்க நேர்கிறது. இந்த துயரக் கதையை யாரிடமாவது சொல்ல எத்தனித்ததில்தான் ஒரு கதை சொல்லியாக மாற நேர்ந்ததென்று மார்க்கேஸ் நினைவு கூர்கிறார். மார்க்கேசின் இந்த அனுபவத்தை தெரிந்துகொண்டபோது அவர் எழுதிய 'செவ்வாய்க் கிழமை பகலுறக்கம் ' என்ற கதை கூடுதல் அர்த்தங்களோடு புரிந்தது.

இதே அர்த்தத்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் கொந்தளிப்பான வாழ்க்கையையும் மனச் சிக்கல்களையும் தெரிந்துகொள்ள முடியாது போனால் அவரது படிப்புலகின் தீவிரத்தையும் பாத்திரங்களின் மன இயக்கங்களையும் உணர்ந்துகொள்வதில் முழுமையில்லாமற் போகக்கூடும். இந்தக் கருத்தை எல்லாப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் சார்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போகலாம் என்று கருதுகிறேன்.

க.நா.சு.பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை இந்த இரு எழுத்தாளர்களின் படைப்பு குறித்தும் வாழ்க்கை குறித்தும் மேலதிக விவரங்களை நுட்பமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது என்பதே இந்த நூலின் முக்கியத்துவம். ஓர் எழுத்தாளனின் வாழ்க்கை அவனது தனி வாழ்க்கை மட்டுமல்ல; அவன் வாழும் காலத்தின் சமூக எதார்த்தமும் கலாச்சார வினையாற்றலும் கூட.

சுந்தர ராமசாமி க.நா.சு. தொடர்பான நினைவுகளை முன்வைக்கும்போது, க.நா.சுவை சந்தித்த தனிப்பட்ட இரு அனுபவங்கள் மனதில் நிழலாக நகர்கின்றன. எண்பத்தைந்து நவம்பர் மாதம் என்று நினைவு. தருமபுரியில் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன். மாவட்டக் கள விளம்பரத்துறை அதிகாரியான சந்தானம் என்ற இலக்கிய ஆர்வலர் க.நா.சுவை தருமபுரிக்கு அழைத்து வந்திருந்தார். அந்த ஊரில் தீவிர இலக்கியம் பேசவும் விவாதிக்கவும் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தே வந்திருந்தார். மாலையில்தான் அவருடைய நிகழ்ச்சி. மத்திய அரசுத் துறை சார்பில் அழைக்கப்பட்டிருந்ததால் 'நேருவின் ஜனநாயக நம்பிக்கைகள் ' என்ற பொருளில் பேசுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். சந்தானத்தின் இல்லத்தில் ஒரு சிறிய அறையில் சிறகு ஒடுங்கிய கருடன்போல உட்கார்ந்திருந்தார். எனது இந்த மனச் சித்திரமும் கிருஷ்ணன் நம்பி நாகர்கோவில் லாட்ஜில் ஏற்பாடு செய்திருந்த குறுகலான அறையில் க.நா.சு. ஒடுங்கி உட்கார்ந்திருந்த சித்திரமும் ஒத்துப்போவதை உணர்கிறேன்.

அன்று மாலை அவர் பேசிய பேச்சின் சாரம் இப்போது நினைவில் இல்லை.ஆனால், அவர் பேசியபோது கவனத்தில் பதிந்த இரண்டு விஷயங்கள் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றன.ஜவஹர்லால் நேருவை ஒரு ரொமான்டிக் என்றும் காந்தியை ஒரு ரியலிஸ்ட் என்றும் அவர் வர்ணித்தார். 'கடையனுக்கும் கடைத்தேற்றமுள்ள ' கிராம ராஜ்ஜியத்தை கனவுகண்ட காந்தியைக் கற்பனாவாதியாகவும் 'அணைக்கட்டுகளும் ஆலைகளும்தாம் நவ இந்தியாவின் ஆலயங்கள் ' என்று சிறப்பித்த நேருவை எதார்த்தவாதியாகவும் நினைத்திருந்த என்னுடைய பாடப்புத்தக அபிப்பிராயத்துக்கு எதிரானதாக இருந்தது அன்று க.நா.சு செய்த தலைகீழ் வர்ணனை.சமூகப் பார்வையில்லாதவர், அரசியல் ஞானம் இல்லாதவர் என்றெல்லாம் முற்போக்காளர்களால் விமர்சிக்கப்பட்டிருந்ததைப் படித்து வைத்திருந்த எனக்கு க.நா.சுவின் அரசியல் பார்வை பற்றியும் சுதந்திரமான கண்ணோட்டம் பற்றியும் தெரிவிப்பதாகவிருந்தது அந்தப் பேச்சு. அந்தப் பேச்சில் என்னைக் கவர்ந்த இரண்டாவது அம்சம் நேருவை எளிமையும் முழுமையும் சார்ந்த ஓர் எழுத்தாளராகக் குறிப்பிட்டது.

க.நா.சு.வைச் சந்தித்த இரண்டாவது சந்தர்ப்பம் சென்னையில். அப்போது அவர் மயிலாப்பூர் டி.எஸ்.வி.கோவில் தெருவில் குடியிருந்தார்.ஒரு பிற்பகல் வேளையில் அவரைத் தேடிப் போனது நினைவிருக்கிறது.அந்த நேரத்து வெயிலும் அவ்வப்போது குளிர்ந்து வீசிய கடற்காற்றும் நினைவிருக்கிறது. கதவு எண்ணைக் கண்டுபிடிப்பதில் சின்னத் தடுமாற்றத்துடன் அலைந்து நடந்தபோது ஒரு வீட்டுக்குள்ளிருந்து டைப்ரைட்டரில் தட்டும் ஓசை வெளியே கேட்டது. விசாரித்துப்போனால் அது க.நா.சு.வீடுதான். ஒரு பழைய மேசைமேல் வைத்திருந்த பழைய போர்ட்டபிள் டைப்ரைட்டரில் ஒற்றை விரலால் எழுத்துக்களைத் தட்டி ஆங்கிலக் கட்டுரையொன்றை உருவாக்கிக்கொண்டிருந்தார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் 'ராயர் கபே திறந்திருப்பான்.வாங்க. ' என்று அழைத்துப் போனார்.

சுந்தர ராமசாமி க.நா.சு.வை நினைவுகூரும்போது க.நா.சுவை அறிந்தவர்களுக்கு அவரைப் பற்றிய நினைவுகள் மீண்டெழுவது இயல்பானது என்று சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

தனது நினைவு கூரலில் மரியாதையும் நெகிழ்வும் கலந்தே க.நா.சு.வின் படிமத்தை சுந்தர ராமசாமி உருவாக்குகிறார்.அபிமானமும் மரியாதையும் இழையோடுகிற ஆரம்ப கால அணுகுமுறையிலிருந்து விலகாமலேயே தனது மதிப்பீடுகளை அழுத்தமாக்குகிற சுந்தர ராமசாமி; ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ மாறான கருத்துக்களுக்குச் செவி- சாய்க்கிற க.நா.சு. ஆகிய இரு ஆளுமைச் சித்திரங்களை நூலில் காணமுடிகிறது.

க.நா.சுவின் இலக்கிய ஆளுமை, இலக்கியப் பங்களிப்பு ஆகியவை பற்றி நூலின் எழுபத்தியாறு முதலான பக்கங்களில் சுந்தர ராமசாமி கவனத்துக்குரிய கருத்துக்களை முன்வைக்கிறார். நினைவோடையில் சுழலும் ஆழமுள்ள பகுதி இதுவே என்று எண்ணுகிறேன்.கவிதை, சிறுகதை,நாவல்,விமர்சனம்,மொழிபெயர்ப்பு என்று க.நா.சு ஈடுபட்ட இலக்கியப் பிரிவுகள் சார்ந்த மதிப்பீடுகள் இதில் இடம் பெறுகின்றன.

புதுக் கவிதையின் சார்பாளராகவும் நடைமுறையாளராகவும் இருந்துங்கூட க.நா.சு விரிவான விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டது புனைகதையைத்தான்.அது ரசனை சார்ந்த விமர்சனம். அதையும் ஓர் அறிமுகப்படுத்தல் என்ற நிலையில் மட்டுமே மேற்கொண்டிருந்திருக்கிறார். 'ரொம்ப ஊன்றிச் சொன்னால் படைப்பை வாசித்துப் பார்க்கிற ஆர்வம் போய்விடும் ' என்பது அவரது வாதம்.

தனது இலக்கியப் பார்வைக்குப் பெரும்பாரம்பரியமுண்டு என்று கருதியவர் க.நா.சு. ஓர் இலக்கிய ஆசிரியன் என்ற நிலையில் தால்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர், புதுமைப்பித்தன் ஆகியவர்களின் வாரிசு என்று நம்பியவர். அவரது விமர்சன இலட்சியம் சிகரங்களை நெருங்குவது. இந்த இலக்கிய நோக்கே அவரை முக்கியமானவராக்குவது இன்றைய விமர்சனச் செயல்பாடுகளுக்கு அவரது அளவுகோல்களும் மதிப்பீடுகளும் பொருந்தாதவை. ஆனால், அவரது அடிப்படை அணுகுமுறை தவிர்க்கவியலாதது. தொடர்ந்து பாதிப்பைத் தோற்றுவிப்பது.

சுந்தர ராமசாமியின் பார்வையில் இரண்டாம் நிலை முக்கியத்துவம் க.நா.சு.என்ற நாவலாசிரியருக்கு. 'அவர் மனதில் நாவல் பற்றி இருந்த கற்பனையை அவரால் செயல்படுத்த முடியவில்லை ' என்பது சுந்தர ராமசாமியின் கணிப்பு. தாமஸ்மான், தால்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, செல்மா லாகர்லாவ் போன்ற சிகரங்களை நோக்கியதாக க.நா.சு.வின் மனதில் அந்தக் கற்பனை இருந்திருக்கக்கூடும். 'உலகத்துச் சிறந்த நாவல்கள் ' நூலின் முன்னுரையில் அப்படி ஒரு கனவைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், க.நா.சு. நாவல் வடிவில் எழுதியவையும் மனதில் திட்டமிட்டிருந்தவையும் பெரும் இடைவெளி கொண்டவை. 'பொய்த்தேவு ', 'ஒருநாள் கழிந்தது ' இரண்டும் அவரது சிறந்த நாவல்களாகச் சொல்லப்படுகின்றன. அந்தக் கணிப்பின் செலாவணித்தன்மை பற்றி இன்றைய வாசகனுக்கு மாற்று அபிப்பிராயமே இருக்கும்.

'பொய்த்தேவு ' நேர்த்தியாகச் சொல்லப்பட்ட ஒரு கதை. மேட்டுத்தெரு சோமு, சோமு முதலியாராக வளர்ந்து, சோமுப் பண்டாரமாக உயிர் நீக்கும் வரையிலான கதை. இதை அதன் சாதாரண தளத்திலிருந்து மேலெழச் செய்ய க.நா.சு.வின் ஆன்மீக அக்கறைகள் உதவியிருக்கின்றன. இந்த மாற்றம் அவரது சமகால எழுத்தாளர்களைப் பாதித்திருக்கலாம். தனது ஆரம்ப கால இலக்கியப் பரிந்துரைகளில் க.நா.சு.இடம் கொடுத்திருந்த ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'இதய நாதம் ' என்ற நாவல் இந்தப் பாதிப்பால் உருவானது என்று தோன்றுவதுண்டு. சோமு- சோமு முதலியார் - சோமுப் பண்டாரம் என்று பரிணமித்து காலவெளியில் கரைவதுபோல கிருஷ்ணன் என்ற அடங்காப்பிடாரிச் சிறுவன் கிருஷ்ண பாகவதராக உயர்ந்து மெளனத்தில் லயிப்பது கதை. பொய்த்தேவின் இயங்குதளம் ஆன்மீகமென்றால் இதயநாதத்தின் இயங்குதளம் சங்கீதம்.

அதிகம் யாராலும் பேசப்படாத க.நா.சுவின் சிறு நாவலான 'வாழ்ந்தவர் கெட்டால்... ' அவரது முக்கியமான நாவலாகத் தோன்றுகிறது. முதன்மைப் பாத்திரத்தின் பெயர் சதாசிவ மம்மேலியார். கடன்பட்டு, பட்ட கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் கடன்கொடுத்தவரால் அவமதிக்கப்படுகிறார். 'இப்படி பவிஷாகத் திரிவதற்குப் பதில் செத்துத் தொலைப்பதுதானே ' என்று கடன்கொடுத்தவர் இடித்துப் பேசிய அதே நொடியில் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்கிறார்.மனித மனத்தின் அபாய நடுக்கத்தைச் சித்தரித்த இந்த நாவல் தகுதியான வகையில் கவனிக்கப்படவில்லை.

நாவல் இலக்கணம் பற்றி தனது விமர்சனத்தில் ஆழமான மதிப்பீடுகள் எதையும் க.நா.சு செய்திருப்பதாகத் தென்படவில்லை.ஒரு கதை மையத்தை எதார்த்தமாகவும் மிகை படாமலும் செறிவாகவும் 'உண்மையுணர்வு தோன்றும்படி 'யும் சித்தரிப்பதைப் பற்றிப் பேசுகிறாரே தவிர நாவலின் சமூகப்பரப்பையோ அனுபவத்தைக் கலையாக்குவதில் நேரும் சவால்கைளையோ அவர் விமர்சனப் பொருளாகக் கொண்டதில்லை. ஆனால், படைப்பின் இலக்கியக் குணம் பற்றிச் சொல்ல முற்படும்போதெல்லாம் க.நா.சு.திரும்பத்திரும்பக் கையாளும் ஒரு சொற்றொடரை கவனத்தில் குறித்துக்கொண்டிருக்கிறேன். உலகத்துச் சிறந்த நாவல்கள், படித்திருக்கிறீர்களா ? ஆகிய நூல்களில் 'கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல் ' என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். சார்லஸ் டிக்கன்ஸின் நாவல் பற்றிய சான்றாகச் சொல்லப்படும் பிரயோகம் பின்னர் வேறு சில நாவல்களுக்கும் இயல்புத் தகுதியாகிறது. பாரதியின் கவிதையொன்றில் இடம்பெறும் இந்த வரி, படைப்பு இலக்கியத்திலிருந்து அவர் என்ன எதிர்பார்த்தார் என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இந்த வரி வேறு ஒரு தரவை முன்வைப்பதாகவும் படுகிறது. பாரதி பற்றி க.நா.சு விமர்சனரீதியாக மெளனம்கொண்டிருந்தார் என்று சுந்தர ராமசாமிநினைவோடையில் சுட்டிக்காட்டுகிறார். அந்த நோக்கில் க.நா.சு.வை பாரதி பாதித்ததன்மைக்கு எடுத்துக்காட்டாக முன்சொன்ன மேற்கோளைக் காணலாம். (இந்தவரி பாரதியின் 'பாஞ்சாலிசபதம் ' இரண்டாம் சருக்கத்தில் காப்புச் செய்யுளில் இடம்பெறுகிறது. 'தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே/ களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்/ கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல்...).ஒரே மொழியில் வெவ்வேறு காலப்பகுதியில் செயல்படுபவர்களையும் ஒரேசரடில் கோர்க்கும் உள்ளுணர்வு இதுவென்று எடுத்துக் கொள்ளலாம்.

க.நா.சு.வின் சிறுகதையாக்கங்கள் மீது சுந்தர ராமசாமிக்கு உயர்வான கருத்து இல்லை. அவருடைய நிலைப்பாட்டுடன் முழு அளவில் உடன்பட முடியவில்லை. 'ஆடரங்கு ' தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் சில செறிவும் நுட்பமும் தீவிரமானவையுமாக அனுபவப்பட்டதுண்டு.

மொழிபெயர்ப்பாளராக க.நா.சுவின் சாதனை போற்றுதற்குரியது; மகத்தானது என்ற சுந்தர ராமசாமியின் கருத்தோடு என் மனப்பாங்கும் ஒத்துப் போகிறது. மொழிபெயர்ப்பில் ஆச்சரியமளிப்பவை க.நா.சுவின் தேர்வுகள். கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர் அவர். அந்த கல்விப்புலப் பின்னணியில் அவருக்கு அறிமுகமாகியிருந்திருக்கக் கூடிய ஆங்கில நாவல்களை அவர் மொழிபெயர்ப்புக்காகப் பொருட்படுத்தவில்லை. அவரது ஈடுபாடும் தேடலும் வேறு. ஸ்வீடன்,நார்வே,போலந்து நாடுகளின் நாவல்களையும் சிறுகதைகளையும் தாம் அவர் கண்டுபிடித்து மொழிபெயர்த்து தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தினார். பிற மொழியிலிருந்து பெயர்த்து நமது மொழியில் அறிமுகம் செய்துவைக்கப்படும் படைப்பு நமது மொழிக்கு ஆக்கமளிப்பதாக இருக்கவேண்டும் என்று அவர் நம்பியதாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மொழியாக்க மரபையே அவர் உருவாக்கியதாக நினைக்கிறேன். 'நிலவளம் ', 'மதகுரு ', 'தேவமலர் ' என்று அவர் மொழியாக்கம் செய்தவையும்,க.நா.சுவின் தூண்டுதலின்பேரில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்த 'அன்னை ', 'குள்ளன் ', போன்ற ஐரோப்பியப் புனைகதைகளும், சமகால வெகுசன இலக்கியவாதிகள் சரத்சந்திரர், காண்டேகர் ஆகியோரைக் கொண்டாடியபோது, அந்தப் பொது வழியிலிருந்து விலகி ஆர்.ஷண்முகசுந்தரம் மேற்கொண்ட தாரா சங்கர் பந்தோபாத்தியாயா, பிபூதிபூஷண் பந்தோபாத்தியாயா நாவல்களின் மொழியாக்கங்களும் க.நா.சு. உருவக்கிய மரபின் தொடர்ச்சியே.

மொழிபெயர்ப்பு சரளமானதும் படிக்கப்படும் மொழியில் புரிந்துகொள்ளத் தடையில்லாததாகவும் இருக்கவேண்டும் என்று க.நா.சு.முயன்றிருப்பதை சுந்தர ராமசாமி சுட்டிக் காட்டுகிறார். நமது வாசகனுக்குப் புரியவேண்டும் என்பதிலும் நமது கலாச்சாரத்துக்கு அந்நியமானதாக ஒரு படைப்பு இருந்துவிடக்கூடாது என்பதிலும் க.நா.சு ஜாக்கிரதை காட்டியிருக்கிறார். காதரின் ஆன் போர்ட்டரின் 'குருதிப் பூக்கள் ' சிறுகதைத் தொகுதியின் மொழிபெயர்ப்பில் இந்த எச்சரிக்கையுணர்வைக் காணலாம்.

ஆனால் இந்த அதிஜாக்கிரதை ஓரிரு மொழிபெயர்ப்புகளில் க.நா.சுவைக் குப்புறத் தள்ளி யிருக்கிறது.குறிப்பாக ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவல் மொழிபெயர்ப்பு. மரபான கதைப்போக்குக்கு எதிரானதும் இறுக்கமான நடையமைப்புக் கொண்டதுமான அந்த நாவல் தமிழ் வாசகனுக்குப் புரியாமல் போய்விடலாம் என்ற அங்கலாய்ப்புடன் மொழியாக்கத்தில் அவர் மேற்கொண்ட மாற்றம் இன்று நையாண்டிக்குரியதாகத் தோன்றுகிறது. அந்த நாவலுக்கு அவர் கொடுத்திருந்த துணைத்தலைப்பு 'முத்தண்ணா '. Big Brother என்ற அரசியல் தொனியுள்ள சொற்றொடருக்கு மாற்றாக அவர் வழங்கிய பெயர் மொழிபெயர்ப்பின் நோக்கத்தையே சிதைத்ததாகக் கருதுகிறேன். பிராமணக் குடும்பங்களில் வீட்டின் மூத்த பிள்ளையைக் குறிப்பிடும் சொல்லின் மரூஉவான முத்தண்ணாவை எடுத்தாண்டது பொருத்தமானதா என்ற கேள்வியை இங்கே முன்வைக்கிறேன்.

க.நா.சுப்ரமண்யத்தின் கவிதைச் செயல்பாடுகள் சமகால வாசிப்பு நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்த வலுவற்றவை. எனினும். தாம் ஒரு கவிஞராக முன் நிற்க தூண்டுதலாக இருந்தவர் க.நா.சு. என்று சுந்தர ராமசாமி பதிவுசெய்திருக்கிறார். சிறுகதை,நாவல் ஆகிய படைப்புத் துறைகளைவிட கட்டற்ற சுதந்திரத்தை க.நா.சு. உணர்ந்ததும் பயன்படுத்தியதும் கவிதையில் தான் என்று எண்ணுகிறேன்.அவர் எழுதிய காலப்பகுதியில் அவர் அளவுக்கு கவிதைச் சோதனையில் ஈடுபடும் துணிவுகொண்டவர்கள் யாருமில்லை. எனினும்,இன்றைய தலை- முறைக்கு க.நா.சு.கவிதைகள் தூண்டுதலாகவோ வகைமாதிரியாகவோ அமையாது. ஆனால் கவிதையாக்கத்தில் தடையற்ற சுதந்திரத்தை ஒரு தேவையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவரது கவிதைகள் வலியுறுத்துகின்றன.

நினைவோடையில் துலங்கும் க.நா.சு. தொடர்பான சித்திரங்களில் அவரை வாசித்தும் அவரது இலக்கியச் செயல்பாடுகளைக் குறித்து அறிந்தும் வைத்திருக்கும் ஆர்வலர்கள் மனதில் வேறு கோணத்திலுள்ள க.நா.சுவின் சித்திரங்களும் இணையக்கூடும். இலக்கியப் பரிந்துரையாளர் அல்லது தூதுவர் என்ற எனது சித்திரமும் அதில் அடங்கும்.

பிற இந்திய மொழி இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடும்போதும் விவாதங்களில் ஈடுபடும் போதும் க.நா.சு.இல்லாத குறையை தமிழ் எழுத்தாளன் உணரக்கூடும். பிறமொழிகளின் டாம்பீக முழக்கங்களிடையே தமிழ்மொழியில் நடைபெற்றுவந்த புதிய முயற்சிகள் பற்றி மிக அதிகம் பேசியவர் அவர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறி அவர் இயங்கிய மொழி சார்ந்த படைப்புகளுக்கு அவற்றுக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர அவர் தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார்.இன்று அப்படி ஒருவர் இல்லை என்பது உண்மை.

க.நா.சுவிடமிருந்து நான் ஏற்றுக்கொண்டதும் சுந்தர ராமசாமியின் நினைவுப் பதிவுகளில் உறுதியாவதுமான ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். 'ஓர் எழுத்தாளன் என்ற முறையில் நான் ஓர் உயர்ந்த மரபுக்குச் சொந்தக்காரன். தால்ஸ்தோய்,தாஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர், கம்பன்,பாரதி, புதுமைப்பித்தன் ஆகியவர்களைப் பின் தொடர்பவன் நான் ' என்ற பொருளில் 'இலக்கிய விசாரம் ' நூலில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரே தருணத்தில் எழுத்தாளனின் உயர்வு மனப்பான்மையையும் எழுத்தின் சமூக விரிவையும் கொண்டிருப்பதாக நம்புகிறேன்.

எழுத்தை ஜீவனமார்க்கமாகக் கொண்டவர்.ஆனால் அதை முன்னிருத்தி சலுகைகள் கோர முற்படாதவர்.நாடோடி அலைச்சலில் வாழ்ந்தவர். எழுத்தின் சந்தை மதிப்பீடுகளுக்கு எதிராக நின்றவர்.புதிய சவால்களுக்கு சிந்தனையைத் திறந்துவைத்தவர் என்று ஒன்றின் பின் ஒன்றாக வரும் தோற்றங்களில் க.நா.சு.வை இந்த நூலில் சுந்தர ராமசாமி மீட்டு அறிமுகப்படுத்துகிறார். அவையல்லவே க.நா.சுப்ரமண்யத்தின் நிஜமான தோற்றம் என்று எவராலும் மறுக்க முடியாமலிருப்பதே இந்த நினைவோடையின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகவுள்ளது என்ற குறிப்புடன் நிறைவு செய்கிறேன்.

@8:37 PM 5/10/2005

நன்றி:திண்ணை

நினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி

நினைவோடை:க.நா.சு. புத்தகம் வாங்க இங்கே செல்லவும்

Oct 3, 2012

க.நா.சுவின் எழுத்து மேஜை - சுகுமாரன்

க.நா.சு.100

ஓவியம்: ஆதிமூலம்

என்னைப் பற்றி அக்கப்போர்கள் அவ்வப்போது எழுந்து அடங்கி யிருக்கின்றன. யார் யாரோ அந்தந்தச் சமயத்துக்கு ஏதோ சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். இன்றும் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எண்ண வில்லை. காலம் பதில் சொல்லட்டும். என் அபிப்பிராயத்தில் வலுவில்லாவிட்டால் காலம் அடித்துக்கொண்டு போய்விடும். வலுவிருந்தால் என் அபிப்பிராயம் தானாக நிற்கும். - க.நா.சு.


இலக்கிய வாசிப்பு முக்கால் நேரத் தொழி தொழிலாக இருந்த நாட்களில் க.நா.சுவின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். கதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படும் தெளிவால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். கவிதைகளில் தென்பட்ட தெளிவான இருண்மையால் குழம்பியிருக்கிறேன். அவற்றில் தெரியும் வடிவரீதியான கட்டற்றதன்மையால் வசீகரிக்கப்பட்டிருக்கிறேன். அவருடைய விமர்சனங்களையும் அவர்மீதான விமர்சனங்களையும் வாசித்திருக்கிறேன். எனினும் அவரது பங்களிப்பை நிர்ணயித்துக்கொள்ளக் கூடிய வாசிப்பைச் செய்ய முடிந்ததில்லை.ka.na.su-drawings

மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக உருவாக்கப்பட்ட ‘ஆசான் கவிதைப் பரிசு’ 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்தது. அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான். அதற்கு முன் தமிழக அரசின் பரிசைக் கோதை சிரித்தாள் என்ற நூலுக்காகப் பெற்றிருந்தார். மலையாளக் கவிஞரும் பத்திரிகையாளருமான நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் மலையாள நாளிதழின் வாரப் பதிப்புக்காகக் க.நா.சு. பற்றிக் கட்டுரை எழுத முயன்றுகொண்டிருந்தார். க.நா.சு. தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கிலத்திலும் எழுதுபவர் என்ற அதிகபட்சத் தகவல்கள் நண்பரிடமிருந்தன. க.நா.சுவின் படைப்புகள், அவரது விமர்சனமுறை, மொழிபெயர்ப்பு, இலக்கிய நடை முறையாளராக அவர் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த பங்களிப்புகள் போன்ற உபரித் தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் அளித்த அந்த வாய்ப்புத்தான் க.நா.சுவின் இலக்கிய ஆளுமையைப் புரிந்துகொள்ள உதவியது. ஒரு வாரக் காலம் தேடித் தேடிப் படித்துத் தொகுத்தவற்றைத் தமிழில் எழுதிக் கொடுத்தேன். கோடுபோட்ட நோட்டுப் புத்தகத் தாளில் பத்துப் பதினைந்து பக்கம் வந்தது. ஒரு தகவல் விடுபடாமல், வரிசைக் கிரமம் மாறாமல் நண்பர் அதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பினார். அன்று துக்ளக் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த வண்ணநிலவன்தான் க.நா.சுவின் புகைப்படத்தை அனுப்பித் தந்தார்.

நாளிதழ் வாரப் பதிப்பில் முழுப்பக்க அளவில் அமர்க்களமாகக் கட்டுரை வெளிவந்திருந்தது. க.நா.சுவின் வாசகனாக அந்தக் கௌரவம் மகிழ்ச்சியளித்தது. ஆனால் அவ்வளவு பெரிய கட்டுரையில் எங்காவது என் பெயர் தட்டுப்படுகிறதா என்றுதான் தேடிக்கொண்டிருந்தேன். இல்லை. மலையாள மொழியாக்கத்தில் நண்பர் செய்திருந்த ஒரே மாற்றம் கட்டுரைக்கு ஒரு ரொமாண்டிக் சாயலைக் கொடுத்ததுதான். ‘எங்கே தரமில்லாத இலக்கியம் இருக்குமோ அங்கே விமர்சகனின் வாளுடன் க.நா.சு. பிரசன்னமாவார்’ என்ற இப்போதும் நினைவில் பதிந்திருக்கும் வரியைப் படித்தவுடன் வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது.

கட்டுரையில் என் பங்கு மறுக்கப்பட்டதைப் பற்றி இலக்கிய நண்பர்களிடம் புலம்பினேன். கேட்டவரில் யாரோ அட்சரம் பிசகாமல் என் முறையீட்டை மலையாள நண்பரிடம் தெரிவித்தார். ‘அவர் எழுதியது தமிழில்தானே, நானல்லவா அதை மலையாளத்துக்கு மாற்றினேன். முடிந்தால் அவரே மலையாளத்தில் எழுதுவதுதானே?’ என்று சொன்னது என்னைச் சீண்டிவிட்டது. அதுவரை மலையாளத்தில் பேசவும் வாசிக்கவும் மட்டுமே என்னால் முடியும். பிழையில்லாமல் எழுதுவது சிரமம். நண்பரின் கேலியால் உசுப்பப்பட்டே அந்த மொழியைப் பிழையற எழுதப் பயின்றேன். இதுவரை தோராயமாகப் பதினைந்து உருப்படியான கட்டுரைகளை மலையாளத்தில் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையை எழுதியபோதும் தமிழ் எழுத்தாளரான க.நா.சு. வாளையுருவியபடி நிற்கும் ஆவிரூபத் தோற்றம் மனத்துக்குள் தென்பட்டது. ஆக என்னுடைய மலையாள ஞானத்துக்கு மறைமுகமான தூண்டுதல் அவரும்கூட என்பது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

o

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் என்ற க. நா. சு. இன்று இருந்தால் வயது நூறு. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்தபோது நவீனத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட காலம் செயல்பட்டவர் என்ற பெருமைதான் அவர் மிச்சம் வைத்துவிட்டுப்போனதாகத் தோன்றியது. நீண்ட ஆயுளுடன் இலக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தவர்கள் அவருக்கு முன்பும் பின்பும் இருந்தனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் ஏதோ கட்டங்களில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். எழுத்தின் மீதுள்ள மோகத்தால் ஈடுபட்டிருந்த பணிகளைத் துறந்து இலக்கியம் செய்தவர்கள். கல்லூரிப் படிப்பை முடித்த நாள் முதல் எழுத்தும் வாசிப்பும் மட்டுமே தன்னுடைய விருப்பமும் தொழிலுமாக வாழ்ந்தவர் க. நா. சு. நம்பிப் பிழைப்பு நடத்தப் போதுமான வருவாய் தராத எழுத்துத் துறையில் ஈடுபட்டிருந்ததை ஒரு சாகசமாகவே எண்ணத் தோன்றுகிறது.

எழுத்தைச் சார்ந்திருப்பவனுக்குத் துணையாக இருந்திருக்கக்கூடிய கல்வி, பத்திரிகைத் துறைகள்மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் க.நா.சுவைத் தீண்டத்தகாதவராக்கின. ஈடுபட்டிருந்த இலக்கியத் துறையிலும் கணிசமான பகைமையை ஈட்ட முடிந்தது. ‘பண்டிதப் போக்கு, பத்திரிகைப் போக்கு, இலக்கியப்போக்கு இந்த மூன்றும் இருபது ஆண்டுகளாக எந்த மாற்றமுமில்லாமல் இருக்கின்றன. இவை மாறும் என்பதற்கும் உத்தரவாதமில்லை’ என்றுKA.-NA.-SU-Portrait-01 ஐம்பதுகளில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். தமிழில் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் அவருடைய நோக்கம். எனவே இலக்கியப் பகைமையை விரும்பியே ஏற்றுக்கொண்டார். பகைமை மூலம் கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்தார் என்றும் தோன்றுகிறது. எழுத்தின் மீது மட்டும் பிடிப்புள்ளவராக வாழ இந்தச் சுதந்திரம் அவருக்குத் துணையாக இருந்தது. ஒரு நாடோடியின் சுதந்திரம். அதைச் சார்ந்துதான் அவருடைய கருத்துகளும் விமர்சன அடிப்படைகளும் உருவாயின. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலக்கியத்தில் ஒரு சுயவதைக் குதூகலத்துடன் இயங்கியவர் க. நா. சு. என்பதைத்தான் அவரது வாழ்க்கையின் முதன்மையான இயல்பாகக் காண்கிறேன். இலக்கியத்தின் மூலம் தன்னை நிறுவவோ பொருள் ஈட்டவோ அவர் முனைந்ததில்லை என்பது இந்த இயல்பின் அடையாளம். ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம்.

க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு அவர் சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது மருமகன் பாரதி மணி ‘சுந்தர ராமசாமி நினைவு நூலகத்’துக்குக் கொடுத்திருந்தார். அவற்றை வகைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். வியப்பளிப்பதாக இருந்தது அந்தச் சேகரிப்பு. பெயரளவில் தெரிந்துவைத்திருந்த தமிழ். இந்திய, பிற மொழி எழுத்தாளர்களின் கடிதங்கள். தலைப்பு மட்டுமே தெரிந்த பழைய புத்தகங்கள். அவர் சேர்த்திருந்த புத்தகங்களுக்குக் கிட்டத்தட்ட சம அளவில் கையெழுத்துப் படிகளும் அதில் இருந்தன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல நூறு பக்கங்கள். அவற்றில் சில மட்டுமே அச்சேறியவை. சில எழுதத் தொடங்கி முடிக்காமல் விடப்பட்டவை. சில சிறுகதையாகத் தொடங்கி நாவலாக்கும் எண்ணத்தில் நீட்டப்பட்டுப் பாதியில் நிறுத்தப்பட்டவை. ஆங்கிலக் கையெழுத்துப் படிகள் பலவும் பத்திரிகைகளின் வேண்டுகோளின்படியும் பதிப்பாளர்களின் ஒப்பந்தத்துக்கும் தயாரிக்கப்பட்டவை. அவற்றில் சரபோஜி மன்னரைப் பற்றிய ஆங்கில நூலுக்கான கைப் பிரதிகள் இரண்டோ மூன்றோ இருந்தன. ஒன்று விரிவானது. மீதி இரண்டும் அதிலிருந்து சுருக்கப்பட்டவை. அவற்றுக்கு மத்தியில் நான்கைந்து நாற்பது பக்கக் குறிப்பேடுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன. நேர்த்தியாகப் பத்தி பிரித்துக் கோடுபோட்டு எழுதப்பட்டவை. எல்லா நோட்டுகளிலும் பார்த்த ஒற்றுமை - எதிலும் தொடர்ச்சியாகக் கணக்குகள் இல்லை.

மாதத்தின் ஆரம்ப நாட்களில் மட்டும் எழுதப்பட்டிருந்தன. எந்தப் பத்திரிகைக்கு என்ன படைப்பை அனுப்பியிருக்கிறார் என்பதைப் பொருள் பத்தியிலும் அதற்கு வர வேண்டிய அன்பளிப்புத் தொகை பற்றுப் பத்தியிலும் வந்த தொகை வரவுப் பத்தியிலும் எழுதப்பட்டிருந்தன. ஆர்வத்துடன் பார்த்ததில் அவர் எழுதியவையும் அவருக்கு வர வேண்டிய பற்றும் அதிகம். வரவுப் பத்தியில் அபூர்வமாகவே குறிக்கப்பட்டிருந்தது. அநேகமாக வரவு இல்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அவர் தனக்காக வாதிட்டதாக எந்தத் தடயமும் இல்லை. ஆனால் அவர் இடம்பெற்றிருந்த அமைப்புகளில் தமிழ் சார்ந்த காரியங்களுக்காக அவர் விட்டுக் கொடுத்ததுமில்லை. ஜான் ஆப்ரஹாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை படம் தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட நடுவர் குழுவில் ஒருவராக இருந்த க. நா. சுதான் காரணமென்று சொல்லப்பட்டது. சினிமாவோடு எந்த நெருக்கமும் கொண்டிராதவரான க. நா. சு. ஒரு தமிழ்ப் படம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததை இது காட்டுகிறது. அவருடைய இலக்கியப் பரிந்துரைகளிலோ பட்டியல்களிலோ இந்திரா பார்த்த சாரதியின் பெயர் அநேகமாக இடம்பிடித்ததில்லை. ஆனால் சாகித்திய அக்காதெமி விருது பெற்ற இ.பாவின் குருதிப்புனல் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் க. நா. சு. தமிழ் நாவல் ஒன்று தேசிய அளவில் பேசப்படும் வாய்ப்பை அவர் பாழாக்கவில்லை.

க. நா. சுவின் இந்த இயல்புதான் அவரைத் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமையாக்கியது. அவரது கருத்துகளுக்கு மதிப்பளித்தது. விமர்சனரீதியாக அவரைத் தூற்றியவர்களும் பிற்போக்காளர் எனக் குற்றம் சாட்டியவர்களும் மரியாதையுடன் அவரைப் பார்த்ததற்கும் தமது படைப்புகளைப் பற்றி எதிர்மறையாகவேனும் கருத்துச் சொல்வாரா என்று எதிர்பார்த்ததற்கும் அவரது சமரசமற்ற இயல்பு காரணமாக இருக்கலாம். இந்த இயல்பிலிருந்தே தனது இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கியிருக்கிறார்.

ka-naa-su-table ன்று இலக்கியத்துக்குள் வரும் தலைமுறை க. நா. சு.வின் படைப்புகளை வாசிக்காமலிருக்கலாம். அவருடைய விமர்சனக் கருத்தாக்கங்களை ஊன்றிக் கவனிக்காமலிருக்கலாம். எனினும் இலக்கியம் ஒரு தீவிரச் செயல்பாடு என்று நம்புமானால் க. நா. சுவின் தொடர்ச்சியை இந்தத் தலைமுறையிலும் காண முடியும். முன் எப்போதையும்விடப் படைப்புச் செயல் பன்முகமாகவும் வேகமாகவும் நடைபெறும் காலம் இது. மிக அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் எழுத்தாளர்களும் அணிவகுத்தும் அதைவிட அதிக எண்ணிக்கையில் படைப்புகள் குவிந்தும்வரும் காலம். எனினும் எச்சரிக்கையான வாசகன் இவை எல்லாவற்றையும் மகத்தானவை என்று ஒப்புக்கொள்வதில்லை. தன்னுடைய ரசனைக்கும் மனப்பாங்குக்கும் ஒத்துவருவதையே வாசிக்கத் தயாராகிறான். அதிலும் தனக்கான தரத்தை நிர்ணயிக்கிறான். தேர்ந்த வாசகன் வைரமுத்துவின் கவிதைகளையும் ஞானக்கூத்தனின் கவிதைகளையும் தரம் பிரித்தே அறிகிறான். கொற்கையையும் (ஜோ டி குருஸின் நாவல்) உடையாரையும் (பாலகுமாரனின் நாவல்) இனங்கண்டுகொண்டே வாசிக்கிறான். இந்தத் தரநிர்ணயத்தை வலியுறுத்தியதுதான் நவீனத் தமிழ் இலக்கியத்துக்குக் க.நா.சு. செய்த பெரும் பங்களிப்பு. பருண்மையான தோற்றம் கொண்டதாக இந்தத் தரத்தைச் சொல்ல முடியாதபோதும் அதன் இருப்பை இலக்கியச் செயல்பாடுகளில் உணர முடியும். அப்படி உணரச் செய்யும் ஒரு மரபை ஏற்படுத்தியவர் க. நா. சு.

தொண்ணூறுகளில் தமிழிலக்கிய விமர்சனச் சூழலில் ஒரு சலனம் உருவானது. கோட்பாட்டுக் கருவிகள் மூலம் படைப்பைக் கட்டுடைக்கும் போக்கு. இதன் பரபரப்பில் க.நா.சுவின் ரசனை விமர்சன முறைதான் முதல் பலியானது. கோட்பாடுகளை முன்வைத்து அல்ல; அனுபவத்தை முன்னிருத்தியே ஓர் இலக்கியப் படைப்பு வாசகனுடன் உறவாடுகிறது என்ற கருத்து வலுவிழ்ந்துபோனது. அதன் விளவு - படைப்புகளுக்குப் பதில் கருத்தாடல்களே இலக்கியச் சூழலை நிரப்பின. க. நா. சு. தனது விமர்சனக் கருத்துகளையும் மதிப்பீடையும் ஒரு பெரும் பின்புலத்திலிருந்தே காண்கிறார். உலகம் தழுவிய இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே இங்குள்ள முயற்சிகளையும் கருதியவர் அவர். எழுத்தைத் தீவிரமாக எண்ணும் படைப்பாளி தால்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன், பாரதி, புதுமைப்பித்தன் ஆகியவர்களின் மரபுத் தொடர்ச்சி (இலக்கிய விசாரம் நூலில்) என்பது அவருடைய எண்ணம். அவருடைய விமர்சன இலட்சியம் இந்தப் பெரும் ஆளுமைகளை நெருங்குவது. இந்த நோக்கையே அவர் முதன்மையானதாகக் கருதினார். இந்த அடிப்படையிலேயே அவருடைய தரப்படுத்தல் நிகழ்கிறது. கட்டுடைப்பு விமர்சனங்களில் படைப்பில்லை. பிரதி மட்டுமே. கட்டுமானம் மட் டுமே. தரம் பொருட்டல்ல. இத்தகைய கருத்துச் சூழலில் க.நா.சு. மறுக்கப்பட்டது இயல்பானது. குறுகிய காலம் மட்டுமே விவாதிக்கப்பட்ட இந்தப் புதிய விமர்சன உரையாடல் அதன் அந்நியத்தன்மையால் வலுவிழந்தது. மீண்டும் படைப்பும் அனுபவமும் பேசுபொருட்களாகியிருக்கின்றன. க. நா. சு கையாண்ட அதே வழிமுறையில் இன்று படைப்பை அணுகுவது சாத்தியமல்ல. எனினும் அந்த அடிப்படையிலிருந்து நெருங்குவது இலக்கியபூர்வமானது. பொதுச் சமூகத்திலும் அளவைவிடத் தரத்துக்கே இன்று செலாவணி கூடுதல் என்பதால் க. நா. சுவைப் போஸ்ட் மார்டன் இலக்கியவாதியாகவும் வகைப்படுத்தலாம்.

o

க. நா. சுவை இரு சந்தர்ப்பங்களில் பார்த்து உரையாடிய நினைவின் நிழல் மனத்துக்குள் அசைகிறது.

முதல் சந்திப்பு எண்பத்து ஐந்து நவம்பர் வாக்கில். தருமபுரியில். மாவட்டக் கள விளம்பரத் துறை அதிகாரியான சந்தானம் என்ற இலக்கிய ஆர்வலர் க. நா. சுவைத் தருமபுரிக்கு அழைத்துவந்திருந்தார். அந்த ஊரில் தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தே வந்திருந்தார். சந்தானத்தின் வேண்டுகோளுக்கு இணங்கிய கனிவு அதிலிருந்தது. மத்திய அரசுத் துறை அழைப்பின் பேரில் வந்ததால் ‘நேருவின் ஜனநாயக நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டிருந்தார். மாலையில்தான் கூட்டம். சந்தானத்தின் இல்லத்தில் தங்கியிருந்தவரைச் சந்தித்தேன். ஒரு சிறிய அறையில் சிறகு ஒடுங்கிய கருடன்போல அமர்ந்திருந்தார். அன்று பேசிய பேச்சின் சாரம் நினைவிலில்லை. ஆனால் மாலைக் கூட்டத்தில் பேசியதில் இரு அம்சங்கள் இன்றும் கவனத்தில் இருக்கின்றன. ஜவாஹர்லால் நேருவைக் ‘கற்பனையாளர்’ (ரொமாண்டிக்) என்றும் காந்தியை ‘எதார்த்தவாதி’ (ரியலிஸ்ட்) என்றும் பேச்சில் வர்ணித்தார் க. நா. சு. எல்லாருக்கும் சமநீதி என்ற கனவு கண்டவரை எதார்த்தவாதியாகவும் ஆலைகளும் பெரும் தொழிற்சாலைகளும்தான் இந்தியாவின் புதிய ஆலயங்கள் என்று சொன்னவரைக் கற்பனையாளராகவும் க. நா. சு. செய்த தலைகீழ் வர்ணனை பொதுப்புத்திக்குப் பிடிபடாத சிந்தனையின் வெளிப்பாடு என்று தோன்றியது. கூடவே சமூகப் பார்வையில்லாதவர், அரசியல் உணர்வு இல்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவரின் அரசியல் நோக்கும் சுதந்திரமான சிந்தனையும் புலப்பட்டன.

இரண்டாவது சந்திப்பு சென்னையில். அப்போது அவர் மயிலாப்பூர் டி. எஸ். வி. கோவில் தெருவில் குடியிருந்தார். இலக்கியப் பத்திரிகைகள் தவிர வெகுசன இதழ்களான குங்குமம், முத்தாரம், துக்ளக் முதலான பத்திரிகைகளுக்கும் எழுதிக்கொண்டிருந்தார். ஒரு பிற்பகல் வேளையில் அவரைத் தேடிப் போனேன். அந்த நேரத்து வெயிலும் அதை மட்டுப்படுத்த வீசிய கடற்காற்றின் குளிரும் இப்போதும் ஞாபகத்தில் அடிக்கின்றன. கதவு எண்ணைக் கண்டுபிடிப்பதில் சின்னத் தடுமாற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டுக்குள்ளிருந்து தட்டச்சுப் பொறியில் தட்டும் ஒசை கேட்டது. சந்தேகமில்லை. அது க. நா. சுவின் வீடுதான். ஒரு பழைய மேஜைமேல் வைத்திருந்த போர்ட்டபிள் டைப் ரைட்டரில் ஒற்றை விரலால் எழுத்துகளைத் தட்டி ஆங்கிலக் கட்டுரை தயாரித்துக்கொண்டிருந்தார். அதைப் பாதியில் நிறுத்தி விசாரித்தார். உரையாடத் தொடங்கினார். ‘வெகுஜன இதழ்களை விரோதமாகப் பார்த்தவர், அதில் எழுதலாமா?’ என்ற கேள்விக்கு அவர் பதில் ‘நானாகப் போகவில்லையே, அவர்களாக வந்து கேட்டார்கள். எடிட் பண்ணாமல் போடுகிறார்கள். இத்தனை காலம் சண்டைபோட்டதற்குப் பிராயச்சித்தமோ என்னமோ? அதிலும் நான் வெகுஜன ருசிக்கானதை எழுதவில்லையே? என் போக்கில்தான் எழுதுகிறேன்’. சிறிது நேரப்பேச்சுக்குப் பிறகு ‘ராயர் கபே திறந்திருப்பான். வாங்க’ என்று எழுந்தார்.

கைத்தடியை ஊன்றிக்கொண்டு தெருவில் நடந்தபோது நான் பார்த்தேயிராத என் தாத்தா யாருடனோ நடப்பதுபோல இருந்தது. அந்தத் தாத்தாக்களுக்கு இலக்கியம் தெரிந்திருக்காது என்றும் நினைத்துக்கொண்டேன்.

o

நவீனத் தமிழ் இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் க.நா.சு. தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார். நாவல். சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை என எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். எழுத்தை முதன்மையானதாகவும் தொழிலாகவும் கொண்ட ஒருவருக்குத் தவிர்க்க முடியாத செயல்பாடு இது. எனினும் க.நா.சு.வை விமர்சகராகவே மதிப்பிட வேண்டியிருக்கிறது.

நாவலாசிரியராகக் கணிசமான ஆக்கங்களைச் செய்திருக்கிறார். எனினும் அவரே சொல்லிக் கொண்டது போலக் காலத்தின் முன் வலுவிழந்து போனவை அவை. பொய்த் தேவு, ஒரு நாள் கழிந்தது இரண்டும் அவருடைய முக்கியமான நாவல்களாகச் சொல்லப்படுகின்றன. அந்தக் கணிப்பின் பொருத்தப்பாடு மறு சிந்தனைக்குரியது. இந்த இரண்டுமல்லாமல் அதிகம் பேசப்படாத வாழ்ந்தவர் கெட்டால். . . நாவலை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். பட்ட கடனைக் கொடுக்க முடியாமல் கடன் கொடுத்த நபரால் அவமதிக்கப்படுகிறார் நாவலின் மையப் பாத்திரமான சதாசிவ மம்மேலியார். கடன் கொடுத்தவர் ‘இப்படி பவிஷாகத் திரிவதற்குப் பதில் செத்துத் தொலைப்பதுதானே?’ என்று இடித்துச் சொன்ன அதே நொடியில் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்கிறார். மனித மனத்தின் அபாய நடுக்கத்தைச் சித்தரித்த இந்த நாவல் அதிகம் கவனிக்கப்படவில்லை.

வாசிக்க எளிமையானவை என்பதைத் தாண்டி க. நா. சுவின் சிறுகதைகள் இன்றைய வாசிப்பில் எந்தப் புத்துணர்வையும் ஏற்படுத்துவதில்லை. இன்று எழுதப்படும் சிறுகதைகளின் நேர்த்திக்கும் நுட்பத்துக்கும் முன் அவரது கதைகள் காலத்தில் பின்நகர்ந்துபோகின்றன. புதிய தலைமுறையின் பார்வையில் அவை மறந்துபோவதற்கான வாய்ப்புகளே அதிகம். அவரது கவிதை முயற்சிகளும் அதே விதிக்கு உட்பட்டவை. சமகால வாசிப்பில் பாதிப்புகளை நிகழ்த்த வலுவற்றவை. எனினும் அவரது கவிதையாக்கச் செயல்பாட்டில் புலப்படும் ஓர் அம்சம் இன்றைய கவிஞனுக்கு உதவக் கூடியது. கவிதையாக்கத்தில் தடையற்ற சுதந்திரத்தை இன்றியமையாத கூறாக ஏற்க அவரது கவிதைகள் வலியுறுத்துகின்றன.

மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய இரு துறைகளில் க.நா.சுவின் பங்களிப்புகள் அசலானவை. அவரது தேர்வுகள் முதன்மையானவை. கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். ஆங்கிலத்தில் எழுத்துப் பணியைத் தொடங்கியவர். இந்த இரு பின்புலங்களிலிருந்து பார்த்தால் அவருக்கு அறிமுகமாகியிருந்திருக்கும் நாவல்களைத் தமிழாக்கத்துக்காகக் கணக்கிலெடுத்துக்கொள்ளவே இல்லை. மொழிபெயர்ப்புகளுக்கான படைப்புகளை ஒரு கண்டுபிடிப்பாகவே செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் பிரபலமடைந்த நாவல்களை ஒதுக்கி விட்டு ஐரோப்பிய மொழி நாவல்களையே எடுத்துக்கொண்டிருக்கிறார். நிலவளம் (நட் ஹாம்சன்), மதகுரு, தேவமலர் (செல்மா லாகர்லாவ்), அன்பு வழி (பேர்லாகர் க்விஸ்ட்), விலங்குப் பண்ணை, 1984 (ஜார்ஜ் ஆர்வெல்) , குருதிப் பூக்கள் (காதரின் ஆன்போர்ட்டர்) என்று அந்த நாளையக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்கள்கூட அறிந்திராத படைப்புகளை மொழியாக்கம் செய்தார்.

ஓர் இலக்கியவாதியும் இலக்கிய வாசகனும் பேரிலக்கிய மரபொன்றின் சந்ததி என்று அவர் கொண்டிருந்த மதிப்பீட்டின் விளைவாக இதைக் கருதுகிறேன். இன்னொரு காரணத்தையும் க. நா. சு. குறிப்பிடுகிறார். ‘இலக்கியம் வளமாக இருக்கும் காலத்தில் அதிக அளவில் மொழிபெயர்ப்புகளும் வரும். ஆங்கில இலக்கியம் செழுமையாக இருந்த விக்டோரியா காலத்தில் ஏராளமான பிற மொழி நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.’ (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் நூலில்). சமகால வெகுஜன இலக்கியவாதிகள் சரத் சந்திரர், காண்டேகர் என்று சிலாகித்துத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தபோது க. நா. சு. அறிமுகப்படுத்திய அயல்மொழிப் படைப்புகள் அன்றைய தீவிர இலக்கியத்தைப் பாதித்தன. சற்றுக் கவனமாகப் பார்த்தால் அந்தப் பாதிப்பின் தொடர்ச்சியை இன்றும் காணலாம்.

க.நா.சு.வின் விமர்சன முகத்தின் இன்னொரு தோற்றம் - நவீனத் தமிழின் இலக்கிய நடைமுறையாளராகப் பிறமொழியினரிடையே அறியப்பட்டிருந்தது. பிழைப்பு நிமித்தம் ஆங்கில இதழ்களில் எழுதிய அவர் அதிகபட்சமாகத் தமிழ் இலக்கியம், கலாச்சாரம் தொடர்பான கட்டுரைகளையே எழுதியிருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டுக் கருத்தரங்குகளிலும் பிற மேடைகளிலும் தமிழுக்காக வலுவாக ஒலித்த குரல் அவருடையது. இந்திக் கவிஞரும் மத்திய அரசின் முன்னாள் பண்பாட்டுத் துறைச் செயலருமாக இருந்த அசோக் வாஜ்பாய் ஒருமுறை தேசிய மட்டத்தில் தமிழின் பிரதி நிதித்துவம் குறிப்பிடும்படியாக இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டு சொன்னார், “க. நா. சுப்ரமண்யம் போன்ற ஒரு ஆளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.” வேண்டும் தான். ஆனால் எங்கிருந்து?

o

1988இல் க. நா. சு மறைவுக்குப் பின்பு அவருடைய மனைவி ராஜி சுப்ரமண்யம் மகளுடன் வசிப்பதற்காகத் தில்லி திரும்ப முடிவுசெய்தார். சென்னை வீட்டிலிருந்த பொருட்கள் சிலவற்றை விற்பதாக இருந்தார். கவிஞர் லதா ராமகிருஷ்ணன் மூலம் க. நா. சு. பெயரிலிருந்த சமையல் வாயுவும் அவர் பயன்படுத்திய எழுத்து மேஜையும் எனக்குக் கிடைத்தன. கேஸ் விநியோகிப்பாளர் விநியோகத்துக்காக வரும் ஒவ்வொரு முறையும் தெருவிலிருந்து நான் குடியிருந்த வரிசை வீட்டுக்கு வரும்போது “ஏம்பா கே. என். சுப்ரமணியம் வீடு எதுப்பா?” என்று கேட்டுக்கொண்டே வருவார். சமையல் வாயு அரிதான வஸ்துவாக இருந்ததால் உரிமையாளரே கையொப்பமிட வேண்டும் என்று வற்புறுத்துவார். “அவர் எங்க தாத்தா, டில்லிலே இருக்கார். கேஸுக்குக் கையெழுத்துப் போடறதுக்காக இங்கே வர முடியுமா?” என்ற பதிலில் அலுத்துக்கொண்டு போவார். ஊர் மாறும்போது அந்த இணைப்பைக் குறிப்பிட்ட நபர் உயிருடன் இல்லை என்று எழுதிக் கொடுத்த நினைவு.

அவர் பயன்படுத்திய மேஜை இன்னும் இருக்கிறது. ஈட்டி மரத்தில் செய்த மேஜை. வலது பக்கம் மேலே இழுப்பறையும் அதற்குக் கீழே ஓர் அறையும் கொண்ட மேஜை. இடது பக்கம் கால்களை நுழைத்து உட்கார வசதியான அமைப்பு. அதைக் கொண்டுவந்தபோது இழுப்பறைக்குள் காலியாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு நாள் அந்த இழுப்பறையை முழுவதுமாகக் கழற்றி எடுத்தேன். இரண்டு அறைகளுக்கும் இடையில் பத்திரிகைத் தாள்களிலொன்று பதுங்கி ஒட்டியிருந்தது. எடுத்துப் பார்த்தேன். க. நா. சு. ஆசிரியராக இருந்து நடத்திய ஞானரதம் பத்திரிகைப் பின்னட்டைப் பக்கத்தின் கிழிசல். கீழே க. நா. சுவின் பெயர். தமிழ்நாடு மேப்பைப் போலிருந்த கிழிசலில் படிக்க முடிந்த சில அரை, கால் வரிகளில் என் பெயர். என் முதல் தொகுப்பான கோடைகாலக் குறிப்புகளுக்கு அவர் எழுதிய மதிப்புரை அது. முழுப்பிரதி எங்கோ காணாமற்போனதில் ஏற்கனவே துக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். கிழிசல் துக்கத்தை அதிகமாக்கியது.

சென்னையில் க. நா. சு.வைச் சந்திக்கப் போனதே அந்த மதிப்புரைக்கு நன்றி தெரிவிக்கத்தான். புத்தகம் வெளியான சமயத்தில் மூத்த எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் பிரதிகளை அனுப்பியிருந்தேன். நான் அனுப்பாதவர்களில் ஒருவர் க. நா. சு. அனுப்பாத சிற்றிதழ் ஞானரதம். ஆனால் அதில்தான் இரண்டு பக்க மதிப்புரை வெளி வந்தது. அதற்கு நன்றி பாராட்டுவது நாகரிகம். ஆனால் க.நா.சுவை நேரில் சந்தித்தபோது சங்கோஜத்திலும் தயக்கத்திலும் அதைச் சொல்ல முடியவில்லை. பின்னர் வெகுகாலம் வரை அந்தத் துண்டுத்தாளைப் பாதுகாத்து வைத்திருந்தேன். வீடும் ஊரும் மாறியதில் அந்தப் பொக்கிஷம் காணாமற்போனது. அந்த ஞானரதம் இதழை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் தவித்தது போன்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நானும் தமிழ் இலக்கியக்காரனல்லவா? தேடிக் கண்டு பிடித்துப் பார்க்க வேண்டும்.

‘என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார், க.நா.சு.?’

நன்றி : காலச்சுவடு

Nov 22, 2011

வெளியில் ஒருவன்-சுகுமாரன்

வெளியில் ஒருவன்

பரிவில்லாதது வீடு
வெளிக் காற்றில் ஏராளம் விஷம் sukumaran
சோகை பிடித்த தாவரங்கள்
நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  .
பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்
சரித்திரம் கெக்கலிக்கும்.
தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து
எங்கும் பொய்கள் கவியும்.
ஒன்று அல்லது மற்றொன்று -
விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.

திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று
மனிதர்கள் எரிக்கப் படுவதை
பெண்கள் சிதைக்கப் படுவதை
குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை
பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை
‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை
கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை
சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.

பாதுகாப்பற்றது வெளி
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்
நமது வாழ்க்கை. 
இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்
நமது காலம்.
நாம் எதிர்பார்த்திருக்கிறோம்
அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.
எனினும்
வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை
தாமிரச் சூரியன்
பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்
அக்குளில் சிறகு பொருத்தும் இசை - இவற்றுக்காய்க்
காத்திருக்கிறது நம்பிக்கை
பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.

கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

******

Sep 14, 2011

ஜே.ஜே. – இருபத்தைந்து - சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகத்தின் நவீன கிளாசிக் வரிசையின் சிறப்புப் பதிப்பான ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலின் பின்னுரை

கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது:

"சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என்sugumaran_1 அபிப்பிராயம்."1

இருபத்து நான்காம் வயதில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முழுமையாக வாசித்து முடித்ததும் தோன்றிய மனநிலை ஏறத்தாழ இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் தமிழில் அன்றுவரை வெளியாகியிருந்த பெரும்பாலான நவீனப் படைப்புகளோடு அறிமுகம் கொண்டிருக்கிறேன் என்ற இறுமாப்பும் இதே எழுத்தாளர் அதுவரை எழுதி வெளியான எல்லாவற்றையும் படித்திருக்கிறேன் என்ற தற்பெருமையும் அந்த மனநிலையில் ஆடிச் சரிந்தன. மிகவும் பழக்கப்பட்ட நிலப் பகுதியில் மூடுபனி கவிந்த பொழுதில் நிற்க நேர்ந்தது போன்ற துலக்கமின்மையை உணர்ந்தேன். நூல்  வடிவத்தில் வெளிவருவதற்கு முன்பே சில பகுதிகள் வாசிக்கக் கிடைத்ததன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நாவலும் அதுவாகவே இருந்தது. மலர்மன்னன் வெளியீடாக வந்த '¼' காலாண்டு இதழில் ஜே.ஜே: சில குறிப்புகளின் ஆரம்ப அத்தியாயங்கள் அச்சேறியிருந்தன. அதை வாசித்துப் பெற்ற குதூகலப் பதற்றம் நாவலை மிக நேர்த்தியான புத்தகமாகக் கைவசப்படுத்தும்வரை தொடர்ந்திருந்தது. முதல் வாசிப்பில் ஈர்க்கக்கூடிய பிரமிப்பையும் புரிபடாத் தன்மையையும் அனுபவித்ததற்கான காரணங்களைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடைவெளிவிட்டுப் பல முறை நாவலை வாசித்த பக்குவத்தில் வகைப்படுத்தினால் அவை பின்வரும் அம்சங்களைச் சார்ந்தவையாக இருக்கும்.

நாவல் என்பது கதையை முன்னிறுத்தி விரிவடையும் வடிவம் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு எதிரானதாக இருந்தது ஜே.ஜே: சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் ஆரம்பப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் 100-00-0000-053-3_b நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் 'திட்டமிட்ட சதி'யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது. இந்த நோக்கில் தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி ஜே.ஜே: சில குறிப்புகள்.

சமகாலத் தமிழ் வாசகனை நாவலின் நடையே ஈர்த்தது; வெருட்டியது. மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது. ஆவணங்களுக்கான தெளிவு, புனைகதைக்கான ஜாலம், கவிதையின் வேகம், தொனி மாற்றங்களின் நுட்பம் ஆகிய எல்லாமும் இழைந்த மொழியில் அமைந்த நாவல். 'புறங்கழுத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடிகள் விழுவதுபோல' வீச்சுக் கொண்டிருந்த நடை, நாவலை நகர்த்திச் செல்வதற்கான காரணி என்பதைவிட நாவலின் ஆதாரப் புள்ளியாகவே உருவங்கொண்டிருந்தது. அறிவார்ந்த தளத்தில் முன் நகரும் படைப்பு என்பதால் இந்த இயைபு வலுவானதாகவும் இருந்தது. புனைவு மொழி சார்ந்து வழக்கத்திலிருந்த இலக்கணம் இந்த நாவலில் தகர்ந்தது. நடை காரணமாகவே கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீலனை செய்யத் தூண்டிவிட்ட முதல் படைப்பாக ஜே.ஜே: சில குறிப்புகள் இருந்தது.

வாசக ஈர்ப்புக்கு ஆரம்பமாக இருந்தன இந்தக் கூறுகள், எனினும் நாவலை அந்தரங்கமானதாக ஏற்றுக்கொள்ளத் தனிப்பட்ட நியாயங்களும் எனக்கிருந்தன. அந்தக் காலப் பகுதியில் எனது வாசிப்புக்கும் மனச் சாய்வுக்கும் இணக்கமாக இருந்த பலவற்றோடும் தொடர்பு கொண்டனவாகவும் அந்த நியாயங்கள் இருந்தன.

ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்கள் அன்று பெரும் அலையாக என் கருத்திலும் கவனத்திலும் மோதிக்கொண்டிருந்தன. ஜே.ஜே: சில குறிப்புகளின் முதல் வரியே காம்யுவை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, நாவலுடனான வாசக உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பைக் கூடுதலாக்கியது. ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் உயிர்ச் சாயல் சி.ஜே. ஜோசப் என்ற மலையாள எழுத்தாளனின் அடையாளங்களைக் கொண்டிருந்ததைவிடக் காம்யுவின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்புவது அன்றைய மனநிலைக்கு உவப்பாக இருந்தது. ஜோசப் ஜேம்ஸ் - ஆல்பெர் காம்யு என்ற பெயர்களின் உச்சரிப்பு ஒற்றுமையில் மனம் மயக்கம் கொண்டது. காம்யுவின் பிரச்சினை மனிதச் சூழலின் நெருக்கடியை ஆராய்வது, அந்த ஆய்வுக்குச் சுதந்திரமான சிந்தனையைச் சார்ந்திருப்பது என்பதாகக் கருத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தின் தமிழ் வடிவம் அல்லது திராவிட வடிவமே ஜே.ஜே. என்ற நம்பிக்கையும் கவனத்தில் வேரோடியிருந்தது.

அதே கால அளவில் வாசித்து ஆவேசம் கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் அருண் ஜோஷி. குறிப்பாக அவர் எழுதிய பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு என்ற நாவல்2. வாசிப்பின் பல கட்டங்களில் ஜோசப் ஜேம்ஸும் பில்லி பிஸ்வாஸும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்டார்கள். பில்லி என்கிற பிமல் பிஸ்வாஸுக்கும் ஜோசப் ஜேம்ஸுக்கும் புனைகதைப் பாத்திரங்கள் என்ற வகையில் எந்தப் பந்தமும் கிடையாது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன்; பில்லி அமெரிக்க வாழ் இந்தியன். அமெரிக்க வாsura ழ்க்கையின் பகட்டு அவனை விரட்டுகிறது. அங்கிருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு வந்து கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறான். குடும்பம், காதல், சமூகத்தின் கோளாறுகள் எல்லாம் அவனைக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன. அமைப்புக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனக்குமான உறவு பற்றி ஓயாத கேள்விகளுடன் உழலும் பில்லி கடைசியில் காணாமற்போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ள முடியாமல் காவல் துறை வழக்கை மூடுகிறது. இந்த நாவலுடன் ஜே.ஜே: சில குறிப்புகளை ஒப்பிட முடியாது. ஆனால் பில்லி பிஸ்வாஸ் தனது கேள்விகளாக ஏற்றுத் துன்புறும் அனைத்தையும் ஜே.ஜே.யும் கொண்டிருந்தான் என்று தோன்றியது. என்னுடைய ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் தனது படைப்பின் நோக்கமாக அருண் ஜோஷி3 சுட்டிக்காட்டிய வாசகம் ஜோசப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளனுக்குப் பொருந்தக் கூடியதாகவேபட்டது. 'மனித மனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்ற அருண் ஜோஷியின் வாக்குமூலம் ஜே.ஜே.வுக்கும் இணக்கமானது என்பதே என் வாசிப்பின் நியாயம்.

ஜே.ஜே: சில குறிப்புகள் வெளிவந்த வேளையில் அந்த நாவல் இலக்கிய வாசிப்புக்கான பிரதி என்பதுபோலவே இலக்கிய அங்கீகாரத்துக்கான கையேடாகவும் இருந்தது. அதன் கணிசமான பகுதிகளை மனப்பாடமாகச் சொல்ல முடிந்திருந்தது. அதை ஓர் அங்கீகாரமாகவும் மனம் கொண்டாடியது. அன்று சீரிய இலக்கியச் சூழலில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த பலரும் இந்தப் பயிற்சியை விளையாட்டாகவோ தீவிரமாகவோ மேற்கொண்டிருந்தார்கள் என்பது இன்று பெரும்பாலோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.

சுந்தர ராமசாமியை முன்பே அறிவேன். ஆனாலும் அவருக்கு எழுதிய முதல் கடிதம் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலில் கண்ட ஒரு பிழையைக் குறிப்பிட்டு எழுதிய அஞ்சலட்டையாக இருந்தது. நாவல் பாத்திரமான பாலு தனது நோய்ப் படுக்கையில் கிடந்து வீணையின் மீட்டலாக வரும் இசையைப் பற்றிச் சொல்லும் பகுதியில் 'லம்போதர'4 என்ற சங்கீத உருப்படியை 'வர்ணம்' என்று நாவலாசிரியர் எழுதியிருப்பார். அப்போது இசைப் பித்தம் முற்றியிருந்ததால் கீதத்தை வர்ணம் என்று எழுதிவிட்டீர்களே என்று சிணுங்கிக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்றும் அடுத்த பதிப்பில் திருத்தப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அன்று பதிப்புத்துறை இருந்த நம்பகமற்ற சூழலில் அவருடைய வாக்குறுதி அடுத்த பிறவியில் நிறைவேறக்கூடும் என்றே எண்ணத் தோன்றியது. சீரிய இலக்கிய நூல்களின் விதியும் அவ்வாறாகத்தான் இருந்தது. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகளின் காரியத்தில் விதிவிலக்காக நிகழ்ந்தது ஓர் அற்புதம். ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நாவல் இரண்டாம் பதிப்புக் கண்டது. 'லம்போதர' கீதம் என்று திருத்தமும் பெற்றிருந்தது. நான் சொல்லித் திருத்தம் செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லை. பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருந்திருக்கலாம். ஆனால் என் பொருட்டுத்தான் நாவலாசிரியர் அதை மேற் கொண்டார் என்ற அசட்டு மகிழ்ச்சி நாவலைப் படிக்கிற ஒவ்வொரு முறையும் மேலெழும். இன்றும்.

n

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது. இவ்விரு காரணங்களாலேயே முன்சொன்ன எல்லாவிதச் சிந்தனைப் போக்கிலிருந்தும் இந்த நாவல் அணுகப்பட்டிருந்தது.

சிற்றிதழ் சார்ந்த கலாச்சாரச் செயல்பாடுகள், ஆர்வலரின் நடவடிக்கை என்னும் நிலையையும் வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் உளவியல் வினை என்ற நிலையையும் கடந்து கருத்துருவாக்கம் என்னும் அமைப்புப் பணியாக மாறியது எண்பதுகளில் எனக் கருதுகிறேன். அந்த மாற்றத்தின் எதிர் அதிர்வுகள் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை உருவாக்கியிருக்கின்றன. நாவலில் புலனாகும் அறிவார்ந்த தளத்துக்கான முகாந்திரம் இதுதான். எழுத்து, கலை, இசை, ஓவியம் என்று பண்பாட்டுச் செயல்பாடுகளில் எதார்த்த வாழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மை கொண்ட கருத்தாடல்தான் நாவல் எதிர்கொள்ளும் சவால். கருத்துகளை உருவாக்குபவர்களும் நடைமுறைப்படுத்துபவர்களுமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் நாவலின் மையப் பாத்திரங்களாவதற்கான காரணமும் இதுதான். துரதிருஷ்டவசமாக அந்தக் காலப் பகுதியில் இயங்கிய தமிழ் எழுத்தாளர்களோ கலைஞர்களோ பண்பாட்டுக் காவலர்களாக நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நாவலின் பின்புலமாகக் காட்டப்படும் மலையாள இலக்கிய உலகில் கருத்தை உருவாக்குபவர்களாக எழுத்தாளர்கள் உண்மையாகவே போற்றப்பட்டனர். ஆக, நம்பகமான பின்னணியில் சமகாலத்தின் கோலங்களை நாவலாசிரியரால் பயமில்லாமல் விவாதிக்க முடிந்தது. இந்த அச்சமின்மைதான் அதன் வாசகரிடையே மாபெரும் வியப்பைப் படரவிட்டிருக்கிறது.

வெளிவந்து இரண்டரைப் பதிற்றாண்டுகளைக் கடந்திருக்கும் ஜே.ஜே: சில குறிப்புகள்தான் சமகால நாவல்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது என்று கருதுகிறேன். நாவலாசிரியரின் கூற்றுப்படியே ஐம்பதுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்றும் எழுதப்படுகின்றன. இனியும் எழுதப்படலாம். ஏறத்தாழ இவை அனைத்தும் ஒரே தொனியில் அமைந்தவை. பார்வையில் வேறுபாடுகள் கொண்டவையாகத் தோன்றினாலும் நோக்கத்தில் ஒரே தன்மை கொண்டவை. தாம் வரித்திருக்கும் கருத்து நிலையையொட்டி நாவலைப் பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்ட பிறகு, அதற்கு ஏற்ப நாவல் இல்லை என்ற விமர்சன மதிப்பீட்டுக்கு அவற்றை எழுதியவர்கள் வந்து சேருகிறார்கள். தீர்ப்பை நிர்ணயித்த பின் நடத்தப்படும் விசாரணையின் தந்திரத்தை ஒத்திருக்கிறது இது.

நாவலின் கட்டமைப்பு பல இழைகளால் பின்னப்பட்டது. சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்திருக்கிறேன். அதன் நடை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து என்னை ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்த உச்ச நடைகளில் (grand style என்பதற்குச் சமமாக இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்துகிறேன்) ஒன்றாக நாவலின் நடையை வகைப்படுத்தலாம். இது மொழிசார்ந்த உத்தியல்ல. எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைவது. பல தள இயக்கம் கொண்டது. பாதிப்புகளை உருவாக்கக்கூடியது. சிறுகதையில் இதன் துல்லியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன் கதைகள். நாவலில் சமகால உதாரணம் ஜே.ஜே: சில குறிப்புகள். தொடர்ந்து வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான படைப்பாகப் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்நாவல் நிலைத்திருப்பதும் இந்தக் காரணத்தாலேயே என்பது என் எண்ணம்.

n

"ஜே.ஜே: சில குறிப்புகள் மலையாளக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்"5 என்று பிற்காலக் கட்டுரையொன்றில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
ஆரம்ப வாசிப்பில் ஜோசப் ஜேம்ஸ் என்ற பாத்திரம் மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸை நினைவூட்டுவதாக நம்பியிருக்கிறேன். நாடக ஆசிரியரும் ஓவியரும் விமர்சகரும் சிந்தனையாளருமாக வாழ்ந்து மறைந்தவர் சி.ஜே. மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை முதன்மைப்படுத்தியவர்; நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான கலகத்தையும் உருவாக்கியவர். அவரது மொழி மலையாள இலக்கியத்தில் புதிய தடங்களை ஏற்படுத்தியது. மறைக்கல்வி பயிலக் குடும்பத்தினரால் தூண்டப்பட்டவர். மடாலயப் படிப்பை உதறி வெளியில் இறங்கியவர். சி.ஜே.யும் அற்ப ஆயுளில் மறைந்தவர். நாற்பத்திரண்டாம் வயதில். சி.ஜே.யின் மரணத்துக்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி ரோசி தாமஸ் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியிருந்தார். 'இவன் என் பிரியமான சி.ஜே.'6 என்ற அந்தச் சிறு நூலை வாசிக்கும் சந்தர்ப்பத்திலும் சி.ஜே.தான் ஜே.ஜே.யா என்று மயங்கியதுண்டு. அந்த அளவுக்கு நம்பகமான தகவல்களுடன் பின்புலத்தை நிறுவ நாவலாசிரியர் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். சி.ஜே. தாமஸ் வாழ்க்கையின் நிஜம். ஜோசப் ஜேம்ஸ் புனைவின் உண்மை.

மலையாள இலக்கிய உலகில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் தமிழ் வாசகனான என்னை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சி.ஜே. தாமஸ்தான் ஜே.ஜே. என்ற உரிமை பாராட்டலை அடக்கிய சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன். சி.ஜே. தாமஸின் தொகுக்கப்படாத கட்டுரைகள் அடங்கிய நூலின் பின்னுரையில் அதன் தொகுப்பாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'சி.ஜே. தாமஸைப் பற்றி ஒரு புத்தகம் எழுத மலையாளியால் முடியவில்லை. அதற்கு ஒரு தமிழர் வேண்டியிருந்தார்.'7 இதை ஓரளவுக்கு உண்மை என்றும் பெருமளவுக்குப் புனைவின் வெற்றி என்றும் காண்கிறேன்.

நவீன மலையாளக் கவிஞர்களில் ஒருவரான ஆற்றூர் ரவிவர்மா ஜே.ஜே: சில குறிப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிமாற்றம் செய்த முதல் நாவலும் இதுதான். அளவுக்கு மிஞ்சிய வடமொழிச் சொற்களால் பின்னப்படும் மலையாள நடையே இலக்கியத் தன்மை கொண்டது என்ற கருத்துக்குச் சவாலாக இருந்தது ஆற்றூரின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவான சொற்களையும் தமிழ் வாக்கிய அமைப்புகளையும் அப்படியே கையாண்டிருந்தார் ஆற்றூர். சுத்தமான மலையாள நடையல்ல; என்றாலும் புதிய ஒரு திராவிட நடை மலையாள இலக்கியத்துக்கு வாய்த்தது. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடம் இந்த நடையின் பாதிப்பைக் காணவும் முடிந்தது. நவீன கவிஞரும் விமர்சகருமான கல்பற்றா நாராயணன் சுந்தர ராமசாமி மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் குறிப்பில் இந்தப் பாதிப்பைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார். ஓர் அர்த்தத்தில் ஜே.ஜே: சில குறிப்புகளின் அறிமுகத்துக்குப் பின்னரே தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி வளர்ந்திருக்கின்றன என்று மலையாள இலக்கியவாதிகளும் வாசகர்களும் நம்ப முன்வந்தார்கள். அதுவரை அவர்களும் 'என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?' என்ற குதர்க்கமான கேள்வியால் தமிழிலக்கியத்தைச் சீண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜோசப் ஜேம்ஸை வரவேற்பதற்காக ஆற்றூர் ரவிவர்மா திறந்துவைத்த கதவுதான் இன்று புதிய தலை முறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மலையாள இலக்கிய உலகில் பிரவேசிக்கவும் உதவுகிறது.

n

ஜோசப் ஜேம்ஸின் பிரச்சினைகள் சமகால வாழ்வில் கருத்துலகம் வகிக்கும் பங்கைப் பற்றிய நெருக்கடிகளைச் சார்ந்தவை. ஜே.ஜே.யே கருத்துக்களின் நடைமுறையாளனாகத்தான் அறிமுகமாகிறான். மனித வாழ்க்கையின் ஆதாரமான தேவைகளுக்கும் கருத்துக்களுக்குமான மோதலையே அவன் சந்திக்கிறான். வாழ்வு, சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களுடன் நெருங்கும் போது இந்தக் கருத்தாக்கங்களைப் பின்னொதுக்கிவிட்டு வாழ்வும் சமூகமும் பிறவும் அவற்றின் எதார்த்தச் சிக்கல்களுடன் பூதாகரமாக முன் நிற்கின்றன. அப்படியானால் மனித குலம் தோன்றிய நாள் முதல் எனது காலம் வரையில் சிந்தனைப் போக்குகள் பேணிக் கடைப்பிடித்துவந்த கருத்துக்களின் தேவையும் பங்கும் என்ன? சமூகத்துக்கான கருத்துருவாக்கத்தை ஓர் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடிகிறதா? தனிமனிதனால் சகஜீவிக்குக் கருத்தியல் ரீதியில் உத்தரவாதமளிக்க இயலுமா? அப்படி அளிக்கப்படும் உத்தரவாதத்தை அவன் ஏற்க மறுத்தால் என்ன செய்வது? திணிப்பதா? அந்தத் திணிப்பு அமைப்பின் அதிகாரத்தை அமல்படுத்துவது ஆகாதா? 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு ஆற்ற வேண்டும். அல்லது இறந்து போய்விட வேண்டும். இரண்டும் எனக்குச் சாத்தியமில்லை. இதுதான் என் பிரச்சினை' என்கிறான் ஜே.ஜே.

இருப்பு, நிகழ்வு, செயல்பாடு ஆகிய மூன்று நிலைகளில் ஏற்படும் முரண் குறித்த பதற்றமே ஜே.ஜே.யை உலுக்குவது. உலுக்கலிலிருந்து விடுபட அவன் காணும் வழி இவற்றின் மீது போர்த்தப்படும் திரைகளைக் களைவது. முன்வைக்கப்படும் ஆயத்தத் தீர்வுகளை மறுப்பது. அடிப்படை சார்ந்த கேள்விகளை எழுப்புவது. இந்தக் கேள்விகள் நிரந்தரமானவை. பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. இந்தப் பொருளில்தான் ஜே.ஜே.வும் அவனை மையமாகக் கொண்ட நாவலும் நிகழ்காலத் தன்மை கொண்டவையாக நிலைபெறுகின்றன. அதுதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் புதிய வாசகர்களை ஈர்க்கவும் புதிய வாசிப்புகளுக்குத் தூண்டவும் இந்த நாவலைத் தகுதியுள்ளதாக்குகிறது என்று கருதுகிறேன்.

திருவனந்தபுரம்

சுகுமாரன்

31 மே 2006

குறிப்புகள்

1 ஜே.ஜே: சில குறிப்புகள் (ஆறாம் பதிப்பு / காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோயில் / 2004) பக்: 29

2 'The Strange Case of Billy Biswas' (Orient Paperbacks, New Delhi / 1971)

3 அருண் ஜோஷி: 1939 - 93. ஆங்கிலத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர். ஐந்து நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அதிகம் கவனிக்கப்படாமல் போன எழுத்து இவருடையது. சாகித்ய அக்காதெமி பரிசு பெற்றவர்.

4 ஜே.ஜே: சில குறிப்புகள் (முதல் பதிப்பு / க்ரியா / சென்னை - 1981) பக்: 7

5 ஆளுமைகள் மதிப்பீடுகள் - சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம் / நாகர்கோவில் - டிசம்பர் 2004) பக்: 356

6 இவன் என்டெ ப்ரிய சி.ஜெ - ரோஸி தாமஸ் (டிசி புக்ஸ், கோட்டயம் / 2005)

7 அன்வேஷணங்கள் - சி.ஜெ. தாமஸ் - தொகுப்பாளர்: கே.என். ஷாஜி. (நியோகம் புக்ஸ், கொச்சி / மே 2004) பக்: 109.

சித்திரங்கள்: பாஸ்கரன்

நன்றி: காலச்சுவடு ( இதழ் 79, ஜூலை 2006)

Jul 15, 2011

சுகுமாரன் - நேர்காணல்

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்

சந்திப்பு: பெருமாள்முருகன்

சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர். sukumaran-1

இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் பல தளங்களைச்  சார்ந்தவையாகவும் வாசிப்புத்தன்மை கூடியவையாகவும் உள்ளன. மொழிபெயர்ப்பில் கணிசமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து கவிதைகளையும் சிறுகதைகளையும் கட்டுரை நூல்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

‘கோடைகாலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதங்கள்’, ‘சிலைகளின் காலம்’, ‘வாழ்நிலம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் உள்ள கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பாகப் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ 2006இல் வெளிவந்துள்ளது. ‘திசைகளும் தடங்களும்’, ‘தனிமையின் வழி’ ஆகியவை இவரது கட்டுரைத் தொகுப்புகள்.

‘மார்க்சிய அழகியல்: ஒரு முன்னுரை’ (சச்சிதானந்தன்), ‘சினிமா அனுபவம்’ (அடூர் கோபாலகிருஷ்ணன்), ‘மைலம்மா ஒரு போராட்ட வாழ்க்கை’ ஆகிய உரைநடை நூல்களும் ‘வெட்டவெளி வார்த்தைகள்’, ‘கவிதையின் திசைகள்’, ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’, ‘பெண் வழிகள்’ ஆகிய கவிதை நூல்களும் ‘இதுதான் என் பெயர்’ (சக்கரியா) என்னும் நாவலும் ‘காளி நாடகம்’ (உன்னி) என்னும் சிறுகதை நூலும் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளவை.

2008ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெற்றுள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார். இவர் மனைவி பிரேமா மணி. 15.05.2007 அன்று இரவு திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் கண்ட நேர்காணல் இது.

கவிதைத் தொகுப்பு ஒன்றிற்கான முன்னுரையில் ‘கருத்தும் அனுபவமும் இணைந்த படிமம்தான் கவிதை’ என்று எழுதியுள்ளீர்கள். இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்.

கவிதை என்பது அடிப்படையில் அனுபவம் சார்ந்த விஷயம். அதில் வாசகன் தொகுத்து எடுத்துக்கொள்வது கருத்தைத்தான். அடிப்படையாக எந்த அனுபவமுமே உங்கள் மனத்தில் தங்கப்போவது ஒரு கருத்து என்கிற நிலையில்தான். ஆனால் அதை வெறும் கருத்தாகச் சொல்லும்போது வாசகனுக்கு உவப்பில்லாத ஒன்றாகவும் எழுதுகிறவனுக்குத் தன் மனத்தைப் பகிர்ந்துகொள்கிற ஒரு விஷயமாக இல்லாமலும் போகிறது. இது இரண்டும் எங்கே சமன்படுகின்றன என்பதுதான் கவிதையின் அடிப்படையான கேள்வி.

சில சமயம் கருத்து மட்டுமே சொல்லப்பட்டு அதனுடைய மறைபொருளாக இருக்கும் அனுபவம் வெளிப்படும் அல்லது அனுபவம் மட்டுமே சொல்லப்பட்டு அதனுடைய கருத்து வெளிப்படும். புதுக்கவிதை இவை இரண்டும் ஒன்று சேர்கிற புள்ளி.

கவிதையைக் கூறுபோட்டு வெளிப்படையாக இது கருத்து, இது அனுபவம் என்று பிரிக்க முடியாது. அனுபவம் அடிப்படையில் ஒரு கருத்து. கருத்து அடிப்படையில் ஓர் அனுபவம். இரண்டும் ஒன்றுசேர்கிறபோது தான் கவிதைக்கான படிமமாக வந்து நிற்கிறது.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

என்பது ஓர் அனுபவம். அதே நேரத்தில் ஒரு கருத்து. இதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுதான் கவிதை’ என்றும் ஓரிடத்தில் எழுதியிருக்கிறீர்கள். நேரடித்தன்மைதானே நமது கவிதை மரபில் மிகுதி?

நேரடித்தன்மை கவிதை அல்ல. நேராக ஒரு விஷயத்தைச் சொல்வதற்குக் கவிதை தேவையில்லை. பிற எந்த மொழியையும்விடச் சிந்தனையும் வெளிப்பாடும் கவிதையாக இருக்கின்ற மொழி தமிழ். இதில் வெறுமனே ஒரு plan கூற்றா அதாவது statement ஆக எந்த விஷயமும் சொல்லப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகின்றது.

காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

இதைப் பார்க்கும்போது வெறும் statement ஆகத்தான் இருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு கவிதை மனம் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்த மாதிரியான ஒரு கூற்று அமைகிறது என்பது என் முடிவு.

சங்க இலக்கியத்தில் உள்ள சித்திரங்களாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் நேரடியாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் அவற்றில் எல்லாம் ஓர் அனுபவம், அனுபவம் சார்ந்த ஒரு மனம், அந்த மனத்தில் இருந்து கிளர்ந்த உணர்ச்சிகள் ஆகியவைதான் முன்னால் வந்து நிற்கின்றன. எனக்கு உடனடியாக நினைவில் வருவது,

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்

என்று முடியும் கவிதை. அந்தக் கவிதை அங்கே முடியவில்லை. அது ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறது’.

உங்கள் முன்னுரை ஒன்றில் ‘சொந்த மரபை நோக்கித் திரும்புவது’ என்று பின்- நவீனத்துவத்திற்கு விளக்கம் கொடுக்கிறீர்கள். பின்-நவீனத்துவம் பற்றிக் கோட்பாட்டு அடிப்படையில் பேசும் போக்கிற்கு எதிரானதாக உங்கள் கருத்து இருக்கிறதே?

அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் சார்ந்து எழுத்தை மதிப்பிடும் ஆள் நான். கோட்பாடுகளின் பின்புலத்தில் நான் எந்த அபிப்ராயத்துக்கும் வரவில்லை. தமிழ்ப் புதுக்கவிதை என்பது ஒரு வடிவ மாற்றம் என்று எனக்கு எப்போதும் தோன்றியதே கிடையாது. அது உணர்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்தான் என இப்போதும் நம்புகிறேன்.

பாரதிக்குப் பின்னால் மிகப் பெரிய எழுச்சி என்பது பாரதிதாசன்தான். பாரதிதாசனுக்குப் பின்னால் வந்த கவிஞர்கள் எல்லாருமே அவருடைய நகல்களாக மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். இது தமிழ்க் கவிதையில் மிகப் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரிய ஆரவாரத்தை, தேவையில்லாத இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு நேர் எதிரான ஒரு போக்குத்தான் புதுக்கவிதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய யூகம்.

மௌன வாசிப்பும் கவிதை ஆகும். அதற்கு நம்மைத் தூண்டிவிட்டது மேற்கத்திய படிப்பு அனுபவம். கவிதையை அச்சடிக்கக்கூடிய வாய்ப்பு. இந்த இரண்டும் முக்கியம். ஆகப் புதுக்கவிதை என்பது மேற்கத்திய அனுபவங்களில் இருந்து, கருத்தாக்கத்தில் இருந்து நாம் தொகுத்துக்கொண்ட ஒரு விஷயம். இது தொடர்ந்து கொஞ்ச காலத்திற்கு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் புதுக்கவிதை எழுதியவர்களுக்கு எல்லாம் படிமமும் உணர்வுநிலையும்தான் முக்கியமாக இருந்திருக்கின்றன. தங்களுக்கான விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். இது பின்னால் அதாவது எழுபத்தைந்து எண்பதுக்குப் பின்னால் முழுக்கவுமே மேற்கத்திய அல்லது ஐரோப்பியச் சாயலுக்கு மாற ஆரம்பித்தது. அதற்குச் சமூகரீதியான காரணங்கள் உண்டு. மார்க்சியத் தத்துவம் நமக்கு அறிமுகமாயிற்று.

அதுபோலப் பல்வேறு தத்துவங்கள் அறிமுகமாயின. அவை சார்ந்த இலக்கியங்கள், மற்ற விஷயங்கள் எல்லாமே அறிமுகமாயின. அதனால் அந்த வடிவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு இங்கே திரும்பப் பேசும் நிலை உருவானது. இதில் நம்முடைய உணர்வு, வாழ்நிலை, மனப் போக்கு ஆகியவற்றை எல்லாம் முன்வைக்கத் தவறிவிட்டோம்.

சிம்பனி என்கிற ஒரு விஷயத்தையே கேட்காத ஆள் அதைப் பற்றிக் கவிதை எழுத முடியும். வாழ்க்கையில் பியானோ என்பதைப் பக்கத்தில்கூடப் பார்க்காத ஆள் பியானோவைப் பற்றிக் கவிதை எழுத முடியும். இதுதான் மேற்கத்திய நவீனத்துவம் நம்மீது செலுத்திய மோசமான பாதிப்பு என்று நினைக்கிறேன். இப்படித் தமிழில் நிறையக் கவிதைகள் வந்திருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு.

இது அடுத்த கட்டத்தில் எங்கே போகும் என்னும் கேள்வி வந்தது. அப்போது நம்முடைய அனுபவங்கள்தான் நமக்கு முதன்மையானவை என்கிற தீர்மானத்திற்கு ஒவ்வொரு கவிஞனும் அல்லது மொத்தமான கவிதைச் சூழலும் வந்து சேர வேண்டியிருக்கும் என்னும்போது நம்முடைய மொழி, நம்முடைய வாழ்க்கை, நம்முடைய வாழ்க்கையில் தட்டுப்படும் உவமைகள், உருவகங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் புழங்கு மொழி ஆகிய எல்லாம் சேர்ந்துதான் புதிய நவீனத்துவம் என்று உருவாகும். இதை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொற்சேர்க்கையில் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தில் ‘ஆதுமிகா’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நவீனத்துவத்திற்குப் பிறகான கவிதை. பெங்காலியில் ‘உத்ராதுமிக்’ என்கிறார்கள். இதனுடைய அடிப்படைகள் எல்லாமே நம்முடைய மரபு. மரபுன்னா வழக்கமான அர்த்தத்துல சொல்லவே இல்ல, நம்முடைய வாழ்நிலைகள் சார்ந்த ஒரு விஷயத்திற்குத் திரும்பிப் போறது என்னும் அர்த்தத்தில் சொல்கிறேன்.

நம்முடைய வாழ்க்கையில் பெறக்கூடிய கூறுகளைத் திரும்பக் கவிதையில் கொண்டுவருவதுதான் நவீனத்துவமாக, பின்-நவீனத்துவமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனுடைய வெளிப்படையான உதாரணமாக இன்னொன்றைச் சொல்லலாம். மார்க்சியம் மற்றும் சமூக மாற்றத்திற்கான இயக்கங்கள் எல்லாம் உருவாகி வந்தபோது அந்தக் கவிதைகள் எல்லாம் நமக்கு வந்தன. அந்தக் கவிதைகளை அப்படியே நாம் நகலெடுத்துக்கொண்டிருந்தோம். நம்முடைய அனுபவங்கள் கிடையாது. நாளைக்குப் புரட்சிவந்துவிடும் என்று இந்தக் கவிதைகள் கூறின. ஆனால் புரட்சி என்கிற விஷயமோ புரட்சிக்கான சூழ்நிலையோ கனியாத போது இவையெல்லாமே போலித்தனமாக இருந்தன.

ஆனால் இதற்கு எதிரான இன்னொரு அணி கவிதையில் அரசியல் பற்றியெல்லாம் பேச வேண்டாம் என்னும் தீர்மானத்தில் இருந்தது. அரசியல் பேசுவது கவிதைக்கு மாற்றுக் குறைவான விஷயம் என்று அவர்கள் நினைத்தபோது அதுவும் பேசப்படலாம் என்னும் எண்ணம் உருவாயிற்று. அரசியல்ரீதியாக நடக்கிற ஒரு விஷயம் தனிமனித வாழ்க்கையை மாற்றக்கூடும், தீர்மானிக்கக்கூடும் என்னும்போது அரசியலும் கவிதைக்குள்ளே வர ஆரம்பித்தது. இது இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடந்திருக்கிறது. அதை நான் தமிழ் மொழியில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்.

மரங்களைப் பற்றிப் பேசுவது குற்றமாகக்கூடிய காலம் வந்துவிட்டது என்று பெர்டோல்ட் பிரெக்ட்டுடைய ஒரு கவிதை இருக்கிறது. இதற்கு இணையாக வேறு வரிகளைத் தமிழில் நாம் பார்க்க முடியும். மரத்தைச் சகோதரியாகப் பாவித்துப் பேசுகிற ஒரு கவிதை தமிழில் இருக்கிறது. பெர்டோல்ட் பிரெக்ட்டுடைய இந்த வரியைக் குறிப்பாக வைத்துக்கொள்ளலாமே தவிர நம்முடைய அடிப்படையாக வைத்துக்கொள்ள முடியாது. நமக்கு அடிப்படையான விஷயம் மரத்தைச் சகோதரியாகப் பார்த்த அந்தக் கவிதை வரிதான். அது நமது மரபுக்குள்ளேயே இருக்கிறது. அதை நாம் மேலே கொண்டு வருவோம் என்பதுதான் இதனுடைய நோக்கம்.

ஒரு கவிஞனுக்கு மரபிலக்கியப் பயிற்சி எந்த அளவுக்கு இருக்கணும்னு நெனக்கறீங்க?

இருக்கணுமா வேண்டாமா என்ற கேள்விக்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்ற இரண்டு பதிலுமே சொல்லலாம். தமிழில் மிகப் பெரிய சாதனையாளர்கள் என்று சொல்லப்படுகிற சிலருக்கு மரபுரீதியான பயிற்சி கிடையாது. சிலருக்கு மரபுரீதியான பயிற்சி உண்டு. மரபுல வந்த பிறகுதான் அவுங்க மாறி இருக்காங்க. மரபுங்கறது செய்யுள் எழுதுவதா யாப்பிலக்கணம் புரிந்துகொண்டு எழுதுவதா? அப்படீன்னா அந்த மரபு தெரியாம கவிதை எழுத முடியும். கவிதைக்கான மனநிலைதான் முக்கியம்.

ஒரு மரபுங்கறது இந்த மொழிய நான் பேச ஆரம்பிக்கிறபோதே இந்த மொழியப் பயில, எழுத ஆரம்பிக்கிறபோதே எனக்குள்ள வந்துருது. என்னிடம் முன்னுரைக்காகவோ அபிப்ராயம் கேட்டோ வருகிற கவிதைப் புத்தகங்களில் நான் அடிப்படையா இரண்டு விஷயங்களைத் தேடுகிறேன். ஒன்னு இந்த மொழிக்கென்று ஒரு மரபுண்டு. இரண்டாவது கவிஞனுக்கென்று தனியாக ஒரு மரபுண்டு. இதை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் இந்த மொழியில் ஒரு ஜீஷீமீtவீநீ பீவீநீtவீஷீஸீ இருக்கு. அதுதான் கவிதையோட தொடர்ந்து உங்களைத் தொடர்புபடுத்துகிறது. அதுதான் கவிதையோட வாசல்களைத் தொடர்ந்து உங்களுக்குத் திறக்கிறது.

பாரதியார் கவிதையில் இருந்து சொல்லனும்னா சிட்டுக்குருவி என்று ஒரு படிமம் வருகிற போதே அது சுதந்திரத்தைப் பற்றிய கவிதை என்று தீர்மானிச்சிர்றீங்க. நதிங்கிற ஒரு படிமத்தக் கவிதையில் பார்க்கிறபோதே இது வெறுமனே ஒரு நதியைப் பற்றியது அல்ல வாழ்க்கையைப் பற்றிய வாழ்க்கை ஓட்டத்தைப் பற்றிய ஒரு கவிதை அப்படீன்னு தீர்மானிக்கிறோம். இது கவிதையின் பொது வீபீவீஷீனீ. இதப் புரிஞ்சி இதுக்குள்ள நான் என்னுடைய ஒரு இடியத்த உண்டு பண்றன். அப்படியான கவிதைகள்தான் நிற்கும் அப்படீங் கறது என்னுடைய நம்பிக்கை. எனக்குக் கிடைக்கிற கவிதைத் தொகுப்புகளிலெல்லாம் முதல்ல அடிப்படையா நான் தேடற விஷயம் இதுதான். இதை எழுதிய கவிஞருக்கு இந்த மொழியின் மரபு பிடிபட்டிருக்கா என்பதுதான். அந்த மரபு யாப்பிலக்கண மரபோ செய்யுள் மரபோ அல்ல.

ஒரு மனித அனுபவத்த இன்னொரு மனிதரிடம் தொடர்புபடுத்த என்னென்ன கருவிகளை உபயோகப்படுத்த முடியும், என்னென்ன வழிகளில் அதனை அடைய முடியும் என்பதையெல்லாம் தீர்மானிப்பதுதான் மரபுன்னு நான் யோசிக்கிறேன். அதனாலதான் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய சங்கக் கவிதையைப் புரிஞ்சிக்க முடியுது. இன்றைக்கு பிரான்சிஸ் கிருபாவினுடைய கவிதையைப் புரிஞ்சிக்க முடியுது. இதுதான் மரபு அப்படீங்கறது. ஒரு மொழியில் செயல்படுகிற ஒருவனுக்குப் பின்னால் அந்த மொழி சார்ந்த மரபு இயங்கிக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தப்பியவன் கவிஞனும் ஆகமாட்டான்.

நீங்க எந்த அளவுக்கு மரபிலக்கியங்களைப் படிச்சிருக்கீங்க? அதில் எத்தகைய பயிற்சி இருக்கிறது?

தமிழை முறையாகப் படித்த மாணவன் என்று சொல்லும் வகையான பயிற்சியெல்லாம் எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய மனசு அல்லது சிந்தனை முழுக்க இருக்கிற ஒரு மொழி அப்படீங்கறது தமிழ். இதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். என்னுடைய பள்ளிப் படிப்பு என்பது அறுபதுகளின் பிற்பகுதி. அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் எல்லாருமே தமிழ் மேல் மாறாக் காதல் உள்ளவர்கள். இன்றைக்கு யோசிக்கும்போது அது ஓரளவு வெறி என்ற தீர்மானத்துக்கு வர முடியும். அவுங்க கத்துக் கொடுத்த தமிழ், முறையாகக் கத்துக்கொடுத்த தமிழ். அதுதான் என்னுடைய தமிழ்ப் பின்னணி.

இந்த ஆர்வத்தினால் பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள்ளாகத் தமிழின் முக்கியமான இலக்கியங்களை எல்லாம் படிப்பது என்னும் தீர்மானத்துக்கு வந்தேன். இதில் எல்லாருமே உதவி செய்திருக்கிறார்கள். ஆறாவது ஏழாவது படிக்கிறபோது எங்களுக்கு ஒரு தமிழாசிரியர் வந்தார். அவர் பேர் கலியபெருமாள். அவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்றவர். அவர் எங்க வகுப்புக்கு வந்தார். ஆனா தமிழ் கற்பிக்கல. அப்போது நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருக்கும். அந்த வகுப்பை அவர்தான் பார்த்துக் கொள்வார்.

அவர் படித்த புத்தகங்கள் பற்றி, அவர் பார்த்த திரைப்படங்கள் பற்றி எல்லாம் ரொம்பவும் ருசியாச் சொல்வார். அந்த 45 நிமிசங்கள் முடிந்தவுடனே நமக்குப் பெரிய ஏக்கம் வந்துவிடும். ஏன் மணி அடிக்கறாங்கன்னு. அந்த அளவுக்கு அவர் சுவையாச் சொல்வார். பெருங்காவியங்களுடைய சாரத்தக் கதையாச் சொல்லியிருக்காரு. இதெல்லாம் தொடர்ந்து படிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது. இந்தக் காவியங்கள் எல்லாம் சொல்லும்போது பதவுரை, பொழிப்புரை சொல்றவரா இல்லாம அதில் இருக்கும் கவிதைக் கணங்களை நெருக்கமாப் பார்க்கிறவராகவும் நம்மைப் பார்க்கச் செய்கிறவருமான ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அது தமிழ்மேல என்னுடைய ஆசையை அதிகப்படுத்தியது. அதற்குப் பின்னால் அடுத்த வகுப்புக்குப் போகிறபோது தமிழ்தான் சகலமும் என்று நினைக்கிற ஆசிரியர்கள் வந்து சேர்ந்தாங்க. புலவர் ச. மருதவாணன் என்று ஒரு ஆசிரியர். புலவர் ந. சுந்தரராசன் என்பவர் இன்னொருவர்.

இவர்கள் எல்லாம் தமிழ் கற்றுக்கொடுக்கிறபோது பாரதியார் சொன்ன ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்னும் வரிகளைச் சொல்லலாம்னு அந்த வயதில் தோன்றியது. இன்றைக்கு மொழி பற்றிய அபிப்ராயங்கள் மாறியிருக்கிறது. இதெல்லாம்தான் தமிழை ஊட்டி வளர்க்க உதவின. இதில் குறிப்பாக மருதவாணனைச் சொல்லணும். நான் ஆர்வத்தோட ‘முத்தொள்ளாயிரம்னா என்ன’ என்று கேட்டதுதான். ‘சனிக்கிழம வீட்டுக்கு வா’ அப்படின்னிட்டாரு. சனிக்கிழமை காலையில் அவர் வீட்டுக்குப் போனால் மாலைவரைக்கும் அவர் வீட்டிலேயே உண்டு உறவாடிப் பாடம் கேட்கலாம். இது பின்னால வரைக்கும் தொடர்ந்தது. தமிழ் எனக்குள்ளே பெரிய சுடரா ஒளிர்வதற்கான கைகளாக அவர்கள் இருந்தார்கள்.

அத்தோடு கவிதை என்பது சின்ன வயதிலேயே மயக்கம் தரக்கூடிய விஷயமாக இருந்தது. நான் வளர்ந்த சூழ்நிலையில் ரொம்பத் தனியாக வளர்ந்தேன். பெற்றோரிடமிருந்து பிரிந்து. என்னுடைய அத்தை மாமா இரண்டு பேரும்தான் என்னை வளர்த்தார்கள். அதனால் சின்னதாக ஓர் அனாதைத்தனம், ஆதரவில்லா ஏக்கம் எப்போதுமே எனக்கு இருக்கும். ரொம்பவும் தனியா ஓரிடத்தில் உட்கார்ந்து யோசிக்கிற பழக்கம் உண்டு. அப்போது எனக்குப் பெரிய துணையாக இருந்தவை புத்தகங்கள்தான். புத்தகங்கள் படிக்கும்போது புத்தகங்களில் வரும் ஓர் உலகம். புத்தகங்களுக்கு அப்பால் ஓர் உலகம் வரும். அது கற்பனையா நான் உருவாக்கிக்கிட்ட உலகம். இந்தக் கதைகளை நம்மால் எழுத முடியுமா என்று யோசித்தபோது முடியாது என்கிற ஒரு நிலைமைக்குத்தான் நான் வந்தேன். ஏன்னா நாலு பக்கம் ஐந்து பக்கம் கதை இருக்கும். அதைவிட எளிமையாக எனக்குத் தெரிந்தது கவிதை எழுதுவதுதான். பத்து வரியில் நம்மால் கவிதை எழுதிவிட முடியும் என்பது ஒரு தெம்பைத் தந்தது.

அதனால் இரண்டு மூன்று விஷயங்கள் கிடைத்தன. மற்ற பையன்கள் முன்னால் ஒரு நட்சத்திரமாகும் வாய்ப்புக் கிடைத்தது. மொழியைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்படி எழுதின கவிதைகள் எல்லாமே என்னுடைய தமிழாசிரியர்கள்கிட்டக் காட்டியிருக்கிறேன். அவுங்க ஒவ்வொரு திருத்தங்களாச் சொல்லியிருக்காங்க. குறைந்தது ஆயிரம் கவிதையாவது எழுதியிருப்பேன். இதற்கு மறைமுகமாக எனக்கு உதவிய ஒரு நூலைச் சொல்லணும். புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்னும் நூல் அது. எனக்குப் பத்தாவது பதினொன்றாவது படிக்கும்போது கிடைத்த இந்தப் புத்தகம் யாப்பைக் கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.

அந்தக் கட்டத்தில் தளை தட்டாம ஒரு வெண்பாவை என்னால் எழுத முடியும். அத்தோடு அந்தப் புத்தகம் தான் புதுக்கவிதைன்னு ஒரு விஷயம் இருக்கு என்னும் உணர்வை, அறிவைத் தந்தது. அந்த நூலின் ஒரு பகுதியில் புதுக்கவிதை பற்றி அவர் சில விமர்சனங்களை வைத்திருப்பார்.

ந. பிச்சமூர்த்தியின் ‘தாயும் குஞ்சும்’ என்னும் கவிதையை மேற்கோளாக எடுத்துப்போட்டு அவர் விமர்சனத்தைத் தொடர்ந்திருப்பார். அந்தக் கவிதை பிச்சமூர்த்தியால் வானொலியில் வாசிக்கப்பட்ட கவிதை. அதையும் குறிப்பிட்டுவிட்டு ‘இத்தகைய பாட்டல்லாப் பாட்டுக்களைத் தமிழ் மக்களுக்கு ஒலிபரப்பும் நிலையில் உள்ளது தமிழ்நாட்டு வானொலி நிலையம்’ அப்படீன்னு விமர்சனம் செய்திருந்தார் புலவர் குழந்தை. அவர் கொடுத்திருந்த அந்தக் கவிதைப் பகுதியைப் படித்தபோது அதுதான் கவிதைங்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. ‘இருப்பிட மின்ப மென்றும் இனியசே றும்ப ரென்றும்’ என்று புலவர் குழந்தை அதற்கு ஒரு மரபு வடிவத்தைக் கொடுத்திருப்பார். பிச்சமூர்த்தியின் கவிதை ‘இருப்பிடம் இன்பமென்றும் சேறதே சொர்க்கமென்றும்’ அப்படீன்னு தொடங்கும்.

கவிதை மனசைச் சார்ந்தது என்று நான் நம்ப ஆரம்பிச்சதன் அறிகுறி அதுதான். ‘உம்பர்’ என்பது ஒரு புலவருக்குப் புரியக்கூடிய பாஷை. ஆனால் ‘சொர்க்கம்’ என்பது சாதாரணமாகத் தமிழ் தெரிஞ்ச ஒருவனுக்குப் புரியக்கூடியது. புரியக்கூடிய முறையில் எழுதப்படுவதுதான் கவிதை அப்படீங்கறது என்னுடைய நம்பிக்கை. அதுல இருந்துதான் புதுக்கவிதை பற்றிய ஒரு தோற்றம் எனக்குக் கிடைத்தது. அதுக்கு முன்னாலேயே ‘எழுத்து’ங்கிற அந்தப் பத்திரிகையை நான் பார்த்திருக்கிறேன்.

சோமசுந்தரம் என்று எங்களுடைய ஆசிரியர். அவர் தமிழ்ப் பண்டிதர் அல்ல. தமிழ் ஆர்வலர். அவர் கையில் அப்படி ஒரு பத்திரிகையைப் பார்த் திருக்கிறேன். பத்திரிகைன்னா ஒரு தலைப்பு இருக்கும். அதுக்கும் கீழ ஒரு படம் இருக்கும். உள்ளேயும் படங்கள் இருக்கக்கூடிய பத்திரிகைகளைத்தான் பார்த்திருப்போம். படமே இல்லாமல் நான் பார்த்த முதல் பத்திரிகை அது. என்ன பத்திரிகை சார் அப்படீன்னு கேட்டபோது ‘இலக்கியப் பத்திரிகை’ அப்படீன்னாரு. நான் பார்த்த முதல் இலக்கியப் பத்திரிகை அதுதான். அதற்குப் பின் எங்கள் ஊர் நூலகத்தில் ‘புதுக் குரல்கள்’ என்கிற தொகுப்பு எனக்குக் கிடைத்தது. அதன் உள்ளடக்கத்தில் பிச்சமூர்த்தின்னு பேர் இருந்தது. ஏற்கனவே அந்தப் பேர் எனக்கு அறிமுகம் ஆகியிருந்ததால் அவர் கவிதையைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் கவிதைகள், அதில் இருந்த மற்ற கவிதைகள் என எல்லாவற்றையும் படித்தபோது கவிதை என்பது வேறொரு முகத்தோடு இருக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை எனக்குள்ளே உண்டாயிற்று. இதுதான் நான் கவிதைக்கு வந்த வரலாறு.

உங்களுடைய தொடக்கக் கவிதைத் தொகுப்புகளான ‘கோடை காலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதங்கள்’ ஆகியவற்றில் இருந்த செறிவு அதற்கப்புறம் வந்த ‘வாழ்நிலம்’ தொகுப்பில் இல்லை. வாசகரை நோக்கி உங்கள் கவிதை எளிமைப்பட்டிருப்பதாகப்படுகிறது. இந்த மாற்றத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

அது தானாக உருவான மாற்றம். மனநிலைகளில் ஏற்பட்ட மாற்றம். கோடைகாலக் குறிப்புகள் எழுதும் போதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சிரமங்களை அனுபவித்தேன். அதனால் அதில் உள்ள கவிதைகள் கழிவிரக்கத்தோடானவையாகப் பெரும்பாலும் இருக்கும். அப்போதைய சூழலிலும் அதற்கான வாய்ப்பு இருந்தது. எல்லாம் மொத்தமாகச் சேர்ந்துதான் அப்படியான தொனி என் கவிதைகளில் வந்தது. ‘கோடைகாலக் குறிப்புகள்’ தொகுப்புக் கவிதைகள் என்னை முன்னால் வைத்து வருத்தங்களைச் சொல்பவை, ஆதங்கங்களைச் சொல்பவை, கோபங்களைச் சொல்பவை, தோல்வியைச் சொல்பவை, எரிச்சலைச் சொல்பவை எனப் பலவிதமாக இருக்கும்.

அதற்குப் பின்னால் வரும் கட்டத்தில் என்னை முன்னிறுத்தி என்னைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களையும் கேள்வி கேட்கிற சுபாவத்துக்கு வந்து சேர்ந்தேன். ‘பயணியின் சங்கீதங்கள்’ தொகுப்புக் கவிதைகளை அப்படிப் பார்க்கிறேன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ கவிதைகளில் ஒரு முடிவுக்கு நானே வந்திருப்பேன். இருப்பதா இழப்பதா அப்படீன்னு ஒரு தீவிரமான முடிவுக்கு வந்து அந்தக் கவிதைகளில் நின்னிருப்பேன். ‘பயணியின் சங்கீதங்கள்’ வருகிற போது முடிவுகளுக்கெல்லாம் நான் தயாராகவே இல்லை. கேள்விகளை மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ‘ஏன் நமது நிலைமை இப்படி இருக்கிறது?’ என்று கேள்விகளை மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதற்கப்புறம் வந்த கவிதைகளில் இந்தக் கேள்விகளுக்கு நானும் பொறுப்பு, நீயும் பொறுப்பு என்கிற ஒரு பெரிய தளத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது அதுவரை நான் பயன்படுத்திவந்த மொழி வலுவானதாக எனக்குத் தோன்றவில்லை. அதை எளிமைப்படுத்துதல் என்று சொல்ல முடியுமான்னு தெரியவில்லை. இன்னும் புரிந்துகொள்வதற்குத் தோதான ஒருவகையில் பண்ணனும் என்னும் தேவை எனக்கு ஏற்பட்டது. நீங்க நல்லா யோசிச்சீங்கன்னா தமிழ்க் கவிதையில் அப்படியான ஒன்று தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு. ஒரு கவிஞனும் ஆரம்பத்தில் எழுதிய அதே மொழியைப் பின்னால் எழுதவில்லை. உடனடியாகக் கிடைக்கக்கூடிய உதாரணம் பசுவய்யா. அவர் ஆரம்பத்தில் எழுதிய மொழிநடையில் பின்னால் எழுதவில்லை. அது அவருக்குள்ளே நிகழ்ந்த மாற்றம், அந்த மொழியில் நிகழ்ந்த மாற்றம், காலத்தில் நிகழ்ந்த மாற்றம் ஆகிய எல்லாம் சேர்ந்துதான் கவிதையுடைய தேவையை வெளிப்பாட்டைத் தீர்மானிக்கின்றன. அப்படி நிகழ்ந்த மாற்றங்கள் தான் எனக்கும்.

தொடக்கக் கவிதைகளில் கழிவிரக்கம் இருக்குன்னு சொன்னீங்க இல்லியா. அந்தக் கவிதைகளை எல்லாம் படித்தால் வாழ்க்கையே துக்கம்தானோ எனத் தோன்றும். அவ்வளவு துயரம், கழிவிரக்கம் கவிதைக்குத் தேவையா?

இந்த வாழ்க்கையில் சந்தோசத்துக்கான கணங்கள் ரொம்பக் கொஞ்சமாகவும் துக்கத்துக்கான கணங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அப்படி இருப்பதுதான் இயல்பு. ஐம்பது வயது ஆகும் இந்தக் கட்டத்திலும் அந்த அபிப்ராயத்தில் இருந்து நான் மாற விரும்பவில்லை. மாறுவதற்கான பெரிய முகாந்திரங்கள் இல்லை. அன்றைக்கு என்னுடைய தனிப்பட்ட துயரம் பெரிதாக வருத்தப்படுத்தியது என்றால் இன்றைக்கு மொத்தமாக இருக்கிற வேறு துயரங்கள். சமூகத்தில் பார்க்கும் விஷயங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் என எல்லாமே வருத்தப்படுத்துது. அதைப் பற்றி உடனடியாக ஒரு கவிதை எழுதி முன்னணிப் போராளியாக வந்து நிக்கனும் என்று கேட்டால் அதற்கான திராணி எனக்கில்லை. அந்த விஷயங்கள் என்னையும் தொடுது. அதனால் நான் பாதிக்கப்படுகிறேன். அதனால் எங்கோ ஒரு மூலையில் நானும் கசிகிறேன்.

நந்திகிராமில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதில் எனக்கு ஒன்றும் சந்தோசம் இல்லை. உங்களுக்கும் சந்தோசம் இல்லை என்கிற போது வெறும் சந்தோசமான கணங்களைப் பற்றி என்ன பேச முடியும்?

உங்கள் கவிதை உருவாகும் முறைபாடு (process) எப்படியானது?

முப்பது வருசத்தில் நூற்றுக்கும் கொஞ்சம் அதிகமான கவிதைகள் எழுதியிருப்பவன் நான். நான் சரளமான எழுத்தாளன் அல்ல. சரளமான எழுத்தாளனாக இல்லாமல் போனதுக்குக் காரணம் நான்தான். என் கவிதைதான். ஒரு கவிதை மாதிரியே இன்னொரு கவிதை இருக்கும் என்கிறபோது அதை எழுத வேண்டாம் என்னும் கட்டாயத்தை நானே உருவாக்கிக்கிட்டு இருக்கிறேன். ஒருமுறை பயன்படுத்திய மொழி மாதிரி நான் இன்னொருமுறை பயன்படுத்தினால் அந்தக் கவிதையை எழுத வேண்டாம் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். ஒருவர் எழுதின அனுபவம் மாதிரியே நான் எழுத வேண்டி நேரும் அப்படின்னா அந்த மாதிரியான கவிதைகளை நான் தவிர்த்தேன். அதனால் கவிதை எண்ணிக்கையைக் குறைச்சுக்கிட்டே வந்திருக்கேன்.

அது பற்றியான வருத்தம் எல்லாம் இல்லை. இருபத்தைந்து வருசம் எழுதியுமே கவிதைமேல் இருக்கும் காதல் ஏன் குன்றாமல் இருக்கிறது என்னும் கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கிட்டிருக்கேன். தெரியவில்லை. ரொம்பச் சின்ன வயசிலேயே கவிதை உள்ள வந்துட்டதால் அதுமேல இருக்கிற நேசம் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கலாம். வேறு எதையும்விட என்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொண்டேன் எனத் தோன்றும் இடம் கவிதை தரும் இடமாக இருக்கலாம். இவை எல்லாமே கவிதையைத் தொடரக் காரணமாக இருக்கின்றன. கவிதை எப்படி உருவாகிறது என்பது தொடர்ந்து புதிராகத்தான் இருக்கிறது.

பலமுறை யோசித்துப் பார்த்தால் சிலசமயம் ஒரு வரி வந்து இந்தக் கவிதையைத் தொடர்ந்து கொண்டுபோயிருக்கும். சில சமயம் படிமம் கவிதையைக் கொண்டுபோயிருக்கும். சில சமயம் வெறுமனே ஒரு சந்தம் மட்டும் கொண்டு போயிருக்கும். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்ல முடியும். 'கையில் அள்ளிய நீர்' என்கிற கவிதையை முதலில் அறுபது வரிகள் எழுதியிருப்பேன். ஆனால் எதுவுமே நிறைவாகத் தோன்றாததால் கிடப்பில் போட்டுவிட்டேன். வேறொரு நாள் அந்தப் படிமம் திரும்பத் தோன்றியபோது இப்போது இருக்கிற ஆறேழு வரிகள் மட்டும்தான் மிஞ்சின. அந்தக் கவிதையை அதே வடிவத்தில் தக்கவச்சுக்கிட்டேன். இது கவிதை வந்த ஒரு வழி.

சிலது சித்திரங்களாக வரும். போபால் பற்றிய விஷயத்தில் அந்த ஆட்கள் ஓடிவரக்கூடிய ஒரு விஷயம். அது எனக்குக் கிடைத்த ஒரு காட்சி. அதேபோலக் கொஞ்ச காலம் ரொம்பப் பயணம் செய்யக்கூடிய தொழிலில் நான் இருந்தேன். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. நீலகிரி மலையில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கிக் கிடந்தன. எனக்கு இந்த இரண்டு காட்சிகளுக்கும் ஏதோதொடர்பு இருப்பதாகத் தோன்றியது. அதுதான் ‘இந்த நூற்றாண்டில் மூன்று காட்சிகள்’ என்னும் கவிதை. யார்கிட்டேயோ ஏதோ கேள்வி கேட்கும்போது சும்மா ‘ச்சோ’ அப்படீன்னு ஒலிக்குறிப்ப மட்டுமே பதிலாத் தந்தாங்க. அது ஒரு கவிதையை முழுக்கவுமே கொடுத்திருக்கு. ‘பெயர்களின் கவிதை’ என்பது. எழுதி முடித்ததும் கவிதை என்னை விட்டுப் போயிடுது. அது வாசகனுடையதாக ஆயிருது. இருந்தாலும் இது எப்படி வந்தது என்ற கேள்வி தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்குது. அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காதவரைக்கும் நான் கவிதை எழுதிக்கிட்டேதான் இருப்பேன். அந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சின்னா கவிதை எழுதுவதை நிறுத்திக்குவேன்.

உங்கள் கவிதையில் வரும் கிளிக்குக் காரணம் வைத்தீஸ்வரன் என்று சொல்லியிருக்கிறீர்கள்? சச்சிதானந்தனின் சில வரிகளை அப்படியே பயன்படுத்தியிருப்பீங்க. இது மாதிரி வேறு கவிஞர்களின் தாக்கம் உங்களிடம் இருக்கிறதா?

இருக்கு. நான் பிறக்கும் போதே கவிதையாகக் கத்திக் கொண்டு பிறந்த ஆள் கிடையாது. நான் ஒரு மாதிரிப் படிக்க ஆரம்பிச்சேன். படிப்பு ருசியைத் தந்தது. அந்த ருசி வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது. அப்போது நாமும் எழுதலாம் என்னும் துணிவு வந்தது. அப்படித் தொடர்ந்து வந்த ஆள் நான். என்னை எல்லாரும் பாதித்திருக்கிறார்கள். பாதிப்பே இல்லாமல் ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன் செயல்பட முடியுமா என்று என்னிடம் கேட்டால் என் பதில் முடியாது என்பதுதான். என்னைப் பெரிதாகப் பாதித்த கவிஞர் சுப்பிரமணிய பாரதிதான்.

அதாவது பள்ளிப் புத்தகத்தில் பாரதியைப் படித்தபோது யாரோ பாட்டு எழுதியிருக்கான் என்று தோன்றிய ஒரு ஆள்தான். ஆனால் வயது ஏற ஏற அந்தக் கவிதைகள் வேறு வேறு அர்த்தங்களாக மனசுக்குள் வந்துக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு கட்டத்தில் படிக்கும் போதும் அந்தக் கவிதைகளுக்கு வேறு வேறு பொருள், வேறு வேறு வண்ணம், வேறு வேறு தொனி பார்க்க முடிந்தது. எனக்குப் பெரும் பாதிப்பு பாரதியிடம் இருந்து வந்தது. உதாரணமாக ஒரு கவிதை சொல்கிறேன். இருளும் ஒளியும் என்னும் கவிதை. ‘வானமெங்கும் பரிதியின் சோதி’ என்று தொடங்கும் அது. அதனுடைய ஈற்றடி ‘மான வன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே’ என்பது. அந்த வரி இல்லாமல் இருக்கலாம். அது கவிதையாக இருக்கக்கூடும். ஆனால் அந்த வரியைச் சொல்வதற்காகத்தான் அந்தக் கவிதையை எழுதினார் என்று நான் யூகிக்கிறேன். இந்தத் தந்திரத்தை நான் என்னுடைய பல கவிதைகளில் பயன்படுத்தி யிருப்பேன். ‘நெடுங்காலம் புகைந்துகொண்டிருப் பதைவிடப் பற்றி எரிவது மேல்’ என்று முடியும் என்னுடைய கவிதையில் அந்த வரி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த வரி இல்லாமல் அந்தக் கவிதையை என்னால் எழுத முடியாது.

வைத்தீஸ்வரன் ஒரு நகரம் சார்ந்த கவிஞர் என்கிற முறையில் என்னைப் பாதித்தார். அவர் நகரம் சார்ந்தவர். நான் நகரம் சார்ந்தவன்னு சொல்றது எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை. கோயம்புத்தூர் மாதிரியான ஒரு நகரத்தைச் சென்னை மாதிரியான அல்லது இன்னும் பெரிய நகரத்தோடு ஒப்பிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. பெரிய கிராமத்தின் சாயல்களைக் கொண்ட நகரம் கோயம்புத்தூர். நகரம் என்று சொல்கிற வகையில் வைத்தீஸ்வரனின் சாயல்கள் என்னிடம் உண்டு. பேருந்து போன்ற சில படிமங்களைக் கொண்டுவருவது போன்றவற்றில் அப்படிச் சொல்லலாம்.

ஆனால் என்னை ரொம்பவுமே பாதித்த கவிஞரா இருந்திருக்க வேண்டியவர் பிரமிள் என்கிற தருமு சிவராமு. ஆரம்ப காலத்தில் படிமங்கள் கவிதைக்கு இன்றியமையாதவை என்று நான் நம்பிக்கொண்டிருந்த போது என்னை பெரிய வீஸீயீறீuமீஸீநீமீ பண்ணியவர் தருமு சிவராமு. அதனுடைய சில சாயல்கள் அங்கங்கே என்னுடைய கவிதையில் இன்றைக்கும் இருக்கின்றன. ‘இருளின் நிறமுகக் கதுப்பில் தணல்கள் சிரித்தன’ என்று ஒரு வரி. அது படிமமாகவோ உவமையாகவோ எதுவுமாகவும் இல்லை. அந்த வரி மட்டுமே ஒரு மொத்தமான கவிதையாக இருக்கும். அந்த மாதிரியான வரிகள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. அந்த அளவுல அவருடைய பாதிப்பு இருக்கு.

என்னுடைய வாசிப்பு சார்ந்து செசார் வயெஹோ என்கிற பெரு நாட்டுக் கவிஞர் தற்செயலா எனக்குத் தெரியவந்த ஒரு பெயர். எழுபதுகளில் எனக்குப் படிப்பதில் தீவிரமான ஆர்வம் இருந்தது. அப்படிப் படித்ததில் இந்த சோசலிசக் கவிதைகள் அல்லது இடதுசாரிக் கவிதைகள் எல்லாமே என்னை ரொம்பவும் பாதித்தன. அந்தப் பாதிப்பில் நான் பல கவிஞர்கள் பக்கத்துல நின்னு தொட்டு உரசிப் போயிருப்பேன். கையப் புடிச்சிக் குலுக்கிக்கிட்டு அவர் கைக்குள்ள என்னை அடக்கிக்கமாட்டாரான்னு ரொம்பவுமே ஆசைப்பட்ட கவிஞர் செசார் வயெஹோ. அவருடைய கவிதைகள் என்னை ரொம்பவுமே பாதித்திருக்கின்றன. ஒரு பெரிய துக்கம், தனிமனிதத் துக்கம், அது சார்ந்த சமூகத் துக்கம் என்பதுதான் அவருடைய கவிதைகளின் அடிநாதம். அந்தச் சமூகத் துக்கம் தனிமனிதனைப் பாதிக்கும் விதத்தையும் தனிமனிதத் துக்கம் சமூகத்தைப் பாதிக்கும் பொதுத் துக்கமாகிற விதத்தையும் செசார்கிட்டத்தான் நான் கத்துக்கிட்டேன். அவர் கவிதையினுடைய பாதிப்பு இருக்கு. ஆனால் அவர் எழுதிய மாதிரி ஒரு வரிகூட நான் எழுதினதில்லை. அந்த உணர்வை நான் உறிஞ்சி என் நரம்பில், கிளையில் இலையில் எல்லாம் பரவவிட்டதுதான்.

அதேபோலத்தான் பாரதி. பாரதியின் நிறைய வரிகள். வரிகள் என்று சொல்வது அவற்றைக் குறைவுபடுத்துகிற மாதிரியாக இருக்கிறது. படிமமாகவோ பதப்பிரயோகமாகவோ இருக்கலாம். இவை எல்லாம் பாரதியிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். அவர்தான் என்னைப் பாதித்த பெரும் ஆளுமை. பாப்லோ நெரூடா எனக்குப் பிடித்த கவிஞர். பெரிசா வீஸீயீuறீமீஸீநீமீ பண்ணினவர் அல்ல. சச்சிதானந்தன் வரிகளை ஒரு க்ஷீமீயீமீக்ஷீமீஸீநீமீக்காக எடுத்தது. அவர்கிட்ட நான் கத்துக்கிட்ட ஒரு விசயம் வரிகளை நீட்டிவிடுவது. அதை ஒரு பாதிப்புன்னு சொன்னா பிரெக்ட்கிட்ட அது நிறையவே இருக்கிறது. வரிகள் நீளமா வரும்.

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்துப் ‘பெண்வழிகள்’ என்று ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். தமிழில் பெண் கவிதைகள் பற்றிய பேச்சு தொடங்கிய காலத்திலேயே பெண்மொழி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இப்போது தமிழில் வரும் பெண் கவிதைகளுக்கும் மலையாளப் பெண் கவிதைகளுக்குமான இயைபு என்னன்னு பார்க்கறீங்க?

பெண்களுக்குத் தனியான ஒரு உலகம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய அனுபவம் என்னுடையது அல்ல. அந்த அனுபவத்தை என்னாலும் சுவீகரிக்க முடியுமானால் இன்னும் கொஞ்சம் மேன்மைப்பட்ட கவிஞனாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். பெண்களின் அனுபவம் எழுத்தில் வரணும். எழுத்தில் எதற்கும் விலக்கோ தடையோ இருப்பதாக எனக்கு அபிப்ராயம் இல்லை. எழுத்தில் எல்லாமும் சாத்தியம். பெண்ணுடைய உலகமும் அதில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் கொஞ்சம் விரிவான வாசகன். தமிழ் அல்லாத வேறு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து படிக்கிற ஆள் நான். அந்த மொழிகளில் நடக்கும் முயற்சிகளை எல்லாம் பார்க்கும்போது நான் இயங்கும் மொழியில் அப்படியான முயற்சிகள் இல்லை என்கிற குறையை உணர்கிறேன். வாசகனாகவும் கவிதை ஆர்வலனாகவும் உணர்கிற குறை இது. அதைச் சொல்வதற்காக எழுதிய கட்டுரைதான் பெண் மொழி. அதில் பெண்மொழி நம் கவிதையில் இல்லை என்று சொல்லியிருப்பேன். பின்னால் லீனா மணிமேகலையுடைய தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரையில் என்னுடைய கருத்தைத் திருத்திக்கொண்டேன். ஏன்னா இந்தப் பத்து வருசத்துக்குள் நிறையப் பெண்குரல்கள் வந்திருக்கு.

நான் அந்தக் கட்டுரையை எழுதியபோது அன்றைக்கு இருந்த பெண் குரல்கள் என்பவை இரா. மீனாட்சி, திரிசடை, சுகந்தி சுப்பிரமணியன் போன்றவைதான். கவிதை என்று தைரியமாகச் சொல்லக்கூடிய குரல்கள் இவைதான். அந்த ஆதங்கத்தில் எழுதின கட்டுரை அது. அதற்குப் பின்னால் வந்த கவிதைகளையும் தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன். சில பெண் கவிஞர்களுடைய தொகுப்புக்கு நான்தான் முன்னுரையும் எழுதியிருக்கிறேன். இந்த மொழியில் இது தவிர்க்க முடியாதது, வரவேற்கப்பட வேண்டியது, தொடர்ந்து போக வேண்டிய ஒரு போக்கு என்று எனக்குத் தோன்றுகின்றது. பெண்ணுடைய உலகம், உணர்வு, வரலாறு எல்லாவற்றையும் அவர்களுடைய மொழியில் பதிவுசெய்வதற்கான எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு. அதை எந்த வகையிலும் மறுக்க முடியாது. அதை ஏற்றாகனும். அப்போதுதான் இலக்கிய வாசகன் அல்லது இலக்கியவாதி என்னும் முறையில் உங்களுடைய உலகத்தை விரிவுபடுத்த அது உதவும். இந்த நோக்கில்தான் நான் பெண் கவிஞர்களுடைய தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன்.

தமிழில் பெரிய வெள்ளமாக வந்திருக்கிறது. இது ஒரு ஆற்றொழுக்கான ஓட்டமாக மாறுவதற்கு இன்னும் கொஞ்சம் காலமாகும். இதற்குள் சரியும் சரியில்லாததும் தேவையும் தேவையில்லாததுமான பல போக்குகள் இந்த ஓட்டத்தில் இருக்கின்றன. இதில் பிரதானமாக எனக்குத் தோன்றுவது பெண்கள் உடலை மையப்படுத்திக் கவிதை எழுதுபவர்கள் என்று சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு. அது சரியானதாக எனக்குப் படலை. பெண் உடலைப் பற்றிப் பெண்தான் எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். கமலாதாஸ் ஒரு கவிதையில் கர்ப்பத்திலிருந்து குழந்தை இறங்கின ஒரு வலியைச் சொல்லியிருப்பாங்க. இந்த வரியைச் சுகுமாரனோ பெருமாள்முருகனோ உணர்ந்து எழுத முடியாது. ஊகித்துத்தான் எழுத முடியும். அப்படியான உண்மையான இயல்புகள் கவிதைக்கு வருவது என்பது நம் கவிதையை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கும் நம்ம கவிதையை மேன்மைப்படுத்துவதற்கும் உதவும் என்று நினைக்கிறேன். அதனால் அதைப் பற்றிய குறைகள் எனக்கு இல்லை. ஆகவே அந்தக் குற்றச் சாட்டுகளை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.

ஆனா இதில் நான் பார்க்கக்கூடிய குறை என்பது கவிதை மொழி சார்ந்தது. இதுவரைக்கும் ஆண்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த மொழியைத்தான் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். பெண்களுடைய மொழியாக இதை மாற்றுவதற்குப் பெரிய முயற்சி எதுவும் இல்லை. ரொம்பக் குறைவான முயற்சிதான் நடந்திருக்கு. இதில் மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு. அப்படியான முயற்சியைத் தொடங்கிவைத்தவர் சுகந்தி சுப்பிரமணியன் என்பது என் அபிப்ராயம். அதற்குப் பின்னால் பெரிய இடைவெளி விட்டு இன்றைக்கு சல்மாவிடம் அப்படி ஒரு மொழி செயல்படுது என நான் ஊகிக்கிறேன். மாலதி மைத்ரி, சுகிர்தராணியிடம் அப்படியான மொழி செயல்படுகிறது. பெண்ணுடைய உலகத்தின் ஒரு மென்மையான மொழி உமா மகேஸ்வரியிடம் செயல்படுகிறது. இதையெல்லாம் நான் பார்க்கிறேன்.

ஆனால் இவர்களுடைய மொழியாக, சுயம்புவாக முழுவதும் பெண் உலகம் சார்ந்த, பெண் உணர்வு சார்ந்த மொழியாக இது இல்லை. அடுத்து, இவர்கள் எல்லாருமே பெண் உடல், உறுப்பு ஆகிய இரண்டு நிலைகளில் இருந்துதான் இந்தக் கவிதைகளை எழுதுகிறார்கள். பெண்கள் இந்தச் சமூகத்தினுடைய ஒரு பகுதி, இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்று சொல்லப்படுமானால் பெண்ணுக்கும் வரலாற்றில் இடம் உண்டு, பண்பாட்டில் இடம் உண்டு, மதத்தில் இடம் உண்டு, மொழியில் இடம் உண்டு, இலக்கியத்தில் இடம் உண்டு. இத்தனை இடங்களிலும் இவர்கள் யாருமே பிரவேசிக்கவில்லை. எனக்குச் சுலபமாகத் தெரிஞ்ச இன்னொரு மொழி என்பதால் மலையாளத்தில் அப்படியான இடத்தை, வரலாற்றை மையப்படுத்துகிற ஒரு போக்கை மலையாளப் பெண் கவிதைகளில் பார்த்தேன். அதனால்தான் அந்தக் கவிதைகளை மொழிபெயர்த்தேன். தமிழ்க் கவிதைகளையும் மலையாளக் கவிதைகளையும் ஒப்பிடுவதற்கான விஷயம் இல்லை. இது அதை நிறைவுசெய்யவும் அது இதை நிறைவு செய்யவுமான பங்களிக்கும் முயற்சியாகத்தான் பார்த்தேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.

என் அப்பா, அம்மா இரண்டு பேரும் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் கேரளாவிலிருந்து பிழைப்புத் தேடித் தமிழ்நாட்டுக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்க அப்பாவுக்கு ஒரு சகோதரி. என் அப்பாவின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அதில் இன்னொரு சகோதரனும் சகோதரியும் உண்டு. எங்க அம்மா ஏழு ஆண்களுக்குப் பின் கடைசியாகப் பிறந்த ஒரே பெண். அம்மாவுக்கு அவங்க அப்பாவைப் பார்த்த ஞாபகமெல்லாம் இல்லைன்னு சொல்லிக் கேட்டிருக்கேன். எங்க பாட்டி கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் நெடும்பரா என்னும் கிராமத்தில் கோவில் தொடர்பான வேலைகள் செய்துகொண்டிருந்தார்கள். பிழைப்புத் தேடித் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கோயம்புத்தூருக்கு வந்து குடியேறினார்கள்.

எங்க அப்பா ஆரம்பத்தில் கோயம்புத்தூரிலிருந்து நேவல் போர்ஸ் அலுவலகத்தில் சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தார். அதற்கப்புறம் பதினாறு பதினேழு வயதில் கோயம்புத்தூர் நகராட்சியில் மின்கம்பியாளராக வேலையில் சேர்ந்தார். எங்க அப்பா நேவல் இதிலெல்லாம் வேலைசெய்துகொண்டிருந்தபோது கோயம்புத்தூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு எடுபிடி வேலைக்கெல்லாம் போவார். அங்க இருந்த ஒருவர் சி. பி. கண்ணன். அவர் ஸ்டுடியோவில் நீர்ப் பராமரிப்பு மாதிரியான வேலைகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். கருணாநிதி வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த காட்சிகளை எல்லாம் பார்த்த பாக்கியம் செய்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். என் அப்பாவுடைய சகோதரி, என்னுடைய அத்தையின் கணவர், அப்போது இறந்துபோய்விட்டார். என் அத்தைக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் சி.பி.கண்ணன் அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டார். இந்தக் கல்யாணம் அதிகாரப்பூர்வமாக நடந்ததா இல்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதற்கு அப்புறம் மெட்ராஸ் இன்ஜினியரிங் சர்வீஸ் என்கிற கம்பெனியில் வேலை கிடைத்தது என்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் என்னும் இடத்துக்குப் போனார்கள். எங்கப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க அம்மா பேரு தங்கமணி. அப்பா பேரு நாராயணன். எங்க அத்தைக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் நான் பிறந்த ஒன்பதாவது மாசமே என்னை அங்க கொண்டு போய்விட்டார்கள்.

என்னுடைய பன்னிரண்டு வயதுவரைக்கும் அந்தப் பகுதியில்தான் இருந்தேன். அங்கேதான் வளர்ந்தேன். என் கவிதையில் எங்கேயாவது மரம், செடி, மலை, நதி இதெல்லாம் தென்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த இளமைக்காலக் காட்சிகள்தான். அப்புறம் என் மாமா, அதாவது சி. பி. கண்ணன், நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பிரமாதமான மனிதர். அவருக்கு இன்னொரு குடும்பம் மனைவியெல்லாம் இருந்தார்கள். ஆனால் அதைப் பற்றி அவர் அதிகம் பேசியதில்லை. எங்க அத்தைகூடத்தான் கடைசிவரைக்கும் இருந்தார். ஓய்வுபெற்ற பின்னால் கோயம்புத்தூருக்கு வந்து இருந்தார். அப்புறம் இறந்துபோயிட்டார். இப்ப எங்க அத்தை பாலக்காட்டில் இருக்கிறார்கள்.

எங்க அம்மாவுக்குக் கூடப் பிறந்த ஏழு பேரில் முதல் இரண்டு பேர் கோயம்புத்தூரில் வேலையெல்லாம் பார்த்தார்கள். மூன்றாவது ஒருவர் சின்ன வயதிலேயே பூனாவுக்கு ஓடிப்போயிட்டார். அவருக்கு என்னுடைய சாயல் என்று இன்றைக்குவரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த சகோதரர்கள் இரண்டு பேரும் ஊமைகள். அதில் ஒருவர் ஊனமானவரும்கூட. இன்னொரு சகோதரர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இவர்கள் எல்லாரும் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். கோயம்புத்தூரில் இருந்த ரப்பர் கம்பெனி ஒன்றில் சின்னச் சின்ன வேலை எல்லாம் செய்துகொண்டிருந்தார்கள்.

எங்க அப்பா கோயம்புத்தூர் நகராட்சி மின்துறையில் கொஞ்சம் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று இருந்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு ஓரளவு மார்க்சியச் சாயல் இருந்தது. வாழ்க்கையில் அவர் வெளிப்படையாக அரசியல் என்று வைத்துக்கொண்டது அது மட்டுமாகத் தான் இருக்கும். கோயம்புத்தூர் நகராட்சியில் முதன்முறையாக நடந்த தேர்தலில் வென்று நகராட்சி ஊழியர் மின் சம்மேளனத்தின் முதல் செயலாளர் ஆனவர். அவர்கள் முதலில் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள். என் அப்பா மூன்று நாள் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்திருந்தார். அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. கருப்புத் துணியெல்லாம் கட்டிக்கிட்டு இருந்தார். நான் போய் அப்பான்னு கூப்பிட்டபோது பேச மாட்டேன் அப்படீன்னு கைகாட்டினார். அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

நான் ஊட்டியில் இருந்ததால் அப்பாகூடப் பெரிய நெருக்கம் எல்லாம் கிடையாது. நான் அப்பா அம்மா யாரும் இல்லாமல் தனியா அத்தையோட பராமரிப்பில் இருந்தேன். என் அத்தைக்குச் சின்ன அளவில் இலக்கிய ஈடுபாடெல்லாம் உண்டு. அவர்களுக்கு மலையாளம் நன்றாகப் படிக்க, எழுத, பேசவெல்லாம் தெரியும். கேரளத்தில் இருந்த மலையாளக் குடும்பங்களில் எல்லாம் வழக்கமாகப் பாராயணம் செய்கிற பக்தி நூல்கள் எல்லாத்தையும் அத்தை படிப்பார்கள். அதற்கு நேரெதிரானவர் மாமா. அவர் கோவிலுக்குப் போய் நான் பார்த்ததே இல்லை. அவர்களோடு இருந்தபோது வசதியான இளமைப் பருவம் இருந்தாலும் எனக்குச் சின்ன ஏக்கம் இருந்தது. தனியா இருக்கோம் அப்படீன்னு. அப்புறம் நாலாவதோ அஞ்சாவதோ படிக்கும்போது முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்குக் கோயம்புத்தூர் வந்தவன் அப்புறம் திரும்பி அங்கே போகவில்லை. என்னுடைய அத்தை ரொம்பவுமே வருத்தப்பட்டுக்கிட்டு அங்க இருந்த என்னுடைய சொத்தை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்தாங்க. பழைய பெட்டி பம்பரம், தூண்டில் முள், தீப்பெட்டிப் படம் இந்த மாதிரி நிறையச் சொத்து இருந்தது. அதற்குப் பின்னால அங்க இருக்கலயே தவிர இப்பவும் என்னோட ஊர் அப்படின்னா ஞாபகம் வருவது வெல்லிங்டன்தான். அது மாதிரியான வாழ்க்கை இருக்கும் என்றால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று இப்பவும் தோன்றுகின்றது.

அந்தத் தெரு முழுக்கவுமே ராணுவத்தில் இருந்தவர்கள், அது சார்பான தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்கள் எல்லாம் இருந்த இடம். தெருமுனையில் நின்னா எங்க வீடு நடுவில் இருந்தது. அந்த வீட்டுக்கு வர்றதுக்குக் கொறஞ்சது அரைமணி நேரம் ஆகும். ஏன்னா ஒவ்வொரு வீட்டு மேலயும் ஏறித்தான் வரணும். அப்படியான ஒரு பெரிய பிணைப்பு இருந்த ஊர். அது மனசுக்குள்ள பதிந்திருக்கிறது. அதனால் அந்த ஊர்மேல் இருக்கும் பிரியம் இன்னும் களையவில்லை. எனக்கு அடுத்தது தங்கை. அதுக்கப்புறம் ரொம்ப இடைவெளிவிட்டு இன்னும் இரண்டு பெண்களும் ஒரு பையனும். எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. தம்பியும் அம்மாவும் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறார்கள்.

என்னுடைய ஆரம்பப் படிப்பு வெல்லிங்டன்ல. செயின்ட் ஜோசப் ஸ்கூல். கோயம்புத்தூருக்கு வந்தப்புறம் செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல் என்று சொல்லப்படுகிற செயின்ட் மைக்கல்ஸ் ஹைஸ்கூலின் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளிக் கல்வி முழுக்கவும் அங்கேதான். எஸ்எஸ்எல்சியில் எனக்குக் கிடைத்த பெரிய சந்தோசம் மாவட்டத்தில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவன் நான் என்கிற பெருமை. அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் பற்றி முதலிலேயே சொன்னேன். அப்புறம் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பியுசி படித்தேன். நல்ல மதிப்பெண். டாக்டர் ஆகணும் அல்லது அக்ரி யுனிவர்சிடிக்குப் போகணும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. டாக்டர் ஆகறதுக்கு வசதியெல்லாம் இல்லை. அதனால் அக்ரி யுனிவர்சிடியில் சீட்டுக் கேட்டேன். அதற்குக் காரணம் விவசாயம் பற்றிப் படிப்பது அல்ல. அப்போது அங்கே நல்ல இலக்கியச் சூழ்நிலை இருந்தது. கங்கை கொண்டான் என்ற கவிஞர் அங்கே இருந்தார். அவர் வெளியிட்ட ஆண்டு மலர்கள் எல்லாமே மாபெரும் இலக்கியப் பொக்கிஷங்களாகத் தோன்றின. இன்றைக்கும் அப்படித்தான் தோன்றும். அதற்காகவே அங்கே போனேன்.

வேளாண் பல்கலையிலிருந்து சேர்க்கை அட்டை வரும்னு காத்துக்கிட்டு இருந்ததில் எல்லா இடங்களிலும் கடையை மூடிவிட்டார்கள். அதனால் அந்த வருசம் எங்கேயும் சேர முடியவில்லை. அரசு கல்லூரியில் பொருளியல் படிக்கலாம் என்று மாலைக் கல்லூரியில் சேர்ந்தேன். நமக்கும் பொருளாதாரத்திற்கும் ஒத்துவராது என்பது தெரிந்தது. அது இன்றுவரைக்கும் தொடர்கிறது. அடுத்த வருசம் பிஎஸ்ஜி கல்லூரியில் பிஎஸ்ஸி வேதியியல் சேர்ந்தேன். ஆனால் அதில் ரொம்பப் பிரமாதமான மாணவனாக நானில்லை. தமிழில் பெரிய ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூடத்திலேயே எனக்குக் கிடைத்த ஆசிரியர்களின் தூண்டுதல் அதற்குக் காரணம். நான் முந்தியே சொன்ன மாதிரி கலியபெருமாள் என்னும் ஆசிரியர் இருந்தார். அவர் கதையாச் சொன்ன இரண்டு விசயங்கள் என்னை ரொம்பவுமே பாதித்தது. முதலாவது கோமல் சுவாமிநாதன் எழுதிய ‘புதிய பாதை’ நாடகக் கதையைச் சொன்னார். இரண்டாவது ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்னும் கதை. அவை இரண்டுமே எனக்குப் பெரிய பாதிப்பாக இருந்தன. அவரிடம் கேட்டு ஜெயகாந்தன் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

அந்த வயதில் அக்கதைகள் எனக்குப் புரிந்தன என்பதுதான் ஆச்சர்யம். சோமசுந்தரம் என்னும் இன்னொரு ஆசிரியரிடம் அந்தக் கதைகளை விமர்சித்தேன். ‘மிருகம்’ என்று ஜெயகாந்தன் எழுதிய கதை. சொந்த சகோதரனும் சகோதரியும் உறவு கொள்கிறார்கள். அதை அவரிடம் சொன்னபோது ‘பிஞ்சுலயே பழுத்துட்ட’ என்றார். நான் கதைகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதற்குச் சந்தோசப்பட்டு ‘இனிப்பும் கரிப்பும்’ என்னும் தொகுப்பைக் கொடுத்தார். நான் தெரிந்துகொண்ட முதல் எழுத்தாளன் ஜெயகாந்தன். அந்தக் கட்டத்தில் ‘ஞானரதம்’ பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் ஜெயகாந்தன் எழுதுகிறார், முன்னோட்டம் என்னும் பகுதி முக்கியமானது என்பதை எல்லாம் என்னுடைய ஆசிரியர் சொன்னார். அவர் சிபாரிசால் அவற்றைப் படித்தேன். அதில் தென்பட்ட ஒரு பெயர் புதுமைப்பித்தன்.

கோவை மத்திய நூலகத்துக்குப் போய்ப் புதுமைப்பித்தன் பெயருள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்தேன். ‘காஞ்சனை’ தொகுப்பைப் படித்தபோது ரொம்பவுமே பரவசமாக, சந்தோசமாக, பயமுறுத்தக் கூடியதா, அதுவரைக்கும் இருந்த அபிப்ராயங்களை எல்லாம் மாத்தறதா இருந்தது. ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ படித்தேன். அதைப் படித்தபோது தீர்மானித்த ஒரு விஷயம் ஒரு காலத்திலும் எழுத்தை நம்பி வாழக் கூடாது என்பது. இந்தச் சமயத்திலும் எனக்குள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர் பாரதி. பாரதிமேல் இருந்த ரசனை, வாசக மதிப்பு எல்லாம் கடந்துபோய் அவர்மேல் பெரிய பக்தியே ஏற்பட்டிருந்தது. இன்றும் அந்த பக்தியில் இருந்து விடுபடலை. கல்லூரியில் படித்தபோது பூசாகோ (றிஷிநி) கல்லூரி நூலகம் பெரிய பொக்கிஷமாக இருந்தது.

கல்லூரியில் ‘புது வெள்ளம்’ என்று ஒரு பத்திரிகை மாணவர்களுக்காக வந்தது. மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் பத்திரிகைன்னாலும் அதற்கு ஆசிரியராக இருந்தவர் முத்துராமலிங்கம் என்று ஒரு ஆசிரியர். என்னுடைய கதை, கவிதை எல்லாம் அந்த இதழில்தான் வந்தன. நான் முன்பே சொன்ன மாதிரி மரபு சார்ந்த கவிதைகள் பள்ளி ஆண்டு மலரில் எழுதியிருக்கிறேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போது தாமரை இதழில் கதைகள் எழுதினேன். தொடர்ந்து இரண்டு இதழ்களில் என் கதைகள் வந்தன. ஒரு கதை பேர் ‘நியாயங்கள்’. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. இந்தச் சமயத்தில் அபூர்வப் பசி கொண்ட ஆள் மாதிரி நிறையக் கதைகள் வாசித்தேன். சீக்கிரமே ஜெயகாந்தன் எனக்குச் சலிப்பு தட்டினார். அன்றைக்கு வந்திருந்த ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவல் வரைக்கும் ஏகதேசமா எல்லாமே வாசித்திருந்தேன். படித்தபோது ஈர்ப்பைத் தரக்கூடியதாக இருந்த அவை பின்னால் ஒரு மாதிரி அலுப்பைத் தந்தன. 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலைத் தவிர.

அப்புறம் என் கவனம் தி. ஜானகிராமன் பக்கம் திரும்பியது. நான் அதிகம் பேசாத ஆள். சங்கோஜி. மென்மையான சுபாவம் இருப்பதாகச் சொல்லப்படுபவன். அதனால் எனக்குப் பொருத்தமான எழுத்தாளர் ஜானகிராமன் என்பது மாதிரி பட்டது. இது மட்டும் போதாது என்று தோன்றியபோது மெல்ல மெல்ல ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் படிக்க நேர்ந்தது ஆங்கில மீடியம் சார்ந்த பள்ளி. அதனால் ஆங்கிலத்தில் படிப்பதும் எனக்கு எளிதாக இருந்தது. அன்றைக்குக் கிடைத்த சார்லஸ் டிக்கன்ஸ் மாதிரியான புத்தகங்கள் தாண்டி டி. ஹெச். லாரன்ஸ் மாதிரியான புத்தகங்களுக்கு வந்தேன்.

நடுவில் கம்யூனிஸ்ட் கட்சியோடு சின்ன உறவு. என்னுடைய ஆசிரியர் சோமசுந்தரம் சிபிஐ கட்சியோட உறுப்பினர். அவர் என்னைக் கட்சி அலுவலகத்திற்குக் கூட்டிக்கொண்டு போவார். முதன்முதலாக ஜெயகாந்தன் என்கிற எழுத்தாளரைப் பார்த்தது அங்கேதான். ‘இவன் கவிதையெல்லாம் எழுதுவான்’ என்று என் ஆசிரியர் சொன்னார். ‘ஆங் அப்படியா. சபாஷ்’ அப்படீன்னு சொல்லிட்டுப் போனார் ஜெயகாந்தன். அதனால் அங்கே கிடைத்த சில புத்தகங்கள் எல்லாம் என் கவனத்தை மாற்றின. ரஷ்ய இலக்கியங்கள் மாதிரியான விஷயங்கள். அவற்றைப் படித்தபோது என்னுடைய எழுத்தாளர் என்று தோன்றியவர் ஆன்டன் செகாவும் தாஸ்தாவ்ஸ்கியும்தான்.

ஆங்கிலத்தில் படிக்கிறேன், தமிழில் கவிதைகள் எழுதுகிறேன், கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன என்றபோது என்னுடைய ஆசிரியர் கமலேசுவரன் என்பவர் எனக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்து உதவினார். அப்போது எஸ்.வி.ஆரின் ‘எக்ஸிஸ்டென்சியலிசம் ஓர் அறிமுகம்’ என்ற புத்தகம் வந்திருந்தது. அது என்னை உலுக்கிப் போட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தின் மூல வடிவமான Irrational Man என்ற புத்தகத்தையும் நான் தேடிப் படித்தேன். இதையெல்லாம் நான் படிப்பதைப் பார்த்த கமலேசுவரன், சார்த்தர் எழுதிய Being and Nothingness என்ற ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அது கிட்டத்தட்ட எழுநூறு எண்ணூறு பக்கம் வரும். கரடு முரடான நடையில் எழுதப் பட்டிருக்கும். அவர் எல்லா மாணவர்களையும் ‘குஞ்சு’ அப்படீன்னுதான் கூப்பிடுவார். ‘ஏ குஞ்சு உனக்கு இது மண்டையில ஏறுதா பாரு’ என்றார். ஆனால் முந்நூறு பக்கம்தான் மண்டையில் ஏறியது. மீதி ஏறலை. ஆனால் முந்நூறு பக்கம் படிக்க முடிந்தது அன்றைக்குப் பெரிய சாதனையா இருந்தது. தொடர்ந்து அது சார்ந்த எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்னை ரொம்பக் கவர்ந்தவர் ஆல்பெர் காம்யுதான். அந்தக் கவர்ச்சி இன்றைக்குவரைக்கும் மாறவில்லை.

இப்படி வாசிப்பும் ஆசிரியர்களும் கொடுத்த தூண்டுதலாலேதான் எழுத ஆரம்பித்தேன். இந்தச் சமயத்தில் கோயம்புத்தூர் இலக்கிய வட்டங்களோடு எல்லாம் தொடர்பு ஏற்பட்டது. ‘புது வெள்ளம்’ என்று கல்லூரியில் நடத்தப்பட்ட அந்தப் பத்திரிகையில்தான் பாதசாரி என்று இன்று அறியப்படுகிற என்னுடைய நண்பர், எனக்கு மூன்று வருடம் சீனியரான விஸ்வநாதன் ஒரு கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருந்தார். அவர் கட்டுரையின் நடை என்னை ரொம்பவும் பிரம்மிக்கவைத்தது. தமிழில் இவ்வளவு வலுவான நடையை உருவாக்க முடியுமா அப்படீன்னு. நாங்க இரண்டு பேரும் கல்லூரி நாட்களில் பழக்கமாக இருந்தோம். பின்னால் எனக்கு ஒரு வருடம் இடைவெளி வந்த சமயத்தில் நான் எழுதின ஒரு கதை உள்ளூர்ப் பத்திரிகையில் வந்தது. அதை விஸ்வநாதன் படித்துவிட்டு என்னைத் தேடி எங்கள் வீட்டுக்கு வந்தார். அது ஒரு நல்ல நட்பின் தொடக்கம். இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தோம். சே. ப. நரசிம்மலு நாயுடு பள்ளியில் ஒரு இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று இரண்டு பேரும் போனோம். அந்தக் கூட்டத்தின் இடைவேளையில் ‘எதுக்கு ரண்டு பேரும் வாங்க போங்கன்னு பேசிக்கிட்டிருக்கணும். என்ன சொல்றீங்க?’ என்று விஸ்வநாதன் கேட்டதாக ஞாபகம். ‘சரி நீ சொல்லுடா’ என்றேன் நான். அதிலிருந்து எங்கள் இரண்டு பேரின் நட்பும் கொஞ்ச காலம் இரட்டையராகத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது.

நாங்கள் போய்ச் சேர்ந்த இடம், நிறுத்தம் ஞானியுடைய வீடு. கோவை ஞானி படிப்பு ஆர்வமுள்ள எங்களை ரொம்பவும் ஊக்குவித்தார். எங்களுக்குத் தெரியாமல் இருந்த பல திசைக் கதவுகளைத் திறந்து வைத்தவர் ஞானிதான். மார்க்சியம், தத்துவம், தமிழ், தமிழ்ப் பண்பாடு என்கிற பல விஷயங்களை அவர்தான் அறிமுகப்படுத்தினார். ஞானி மாதிரியான அறிவுசார்ந்த ருசிகரமான பேச்சாளர் தமிழில் இல்லை என்று எனக்குத் தோன்றியது. பலநாள் சாயங்காலம் ஆறு மணிக்குக் கோவைச் சிதம்பரம் பூங்காத் திடலில் பேச ஆரம்பித்து இராத்திரி ஒன்பது மணிவரைக்கும் அவர் பேச்சைக் கேட்டு விட்டுப் பேச்சின் பரவசத்திலேயே நடந்து போயிருக்கிறேன். அந்த அளவு மாபெரும் மேதமை அவர் பேச்சில் வெளிப்படும். அதில் குறைந்த பட்சம்கூட அவருடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது என் அபிப்ராயம். ஞானியின் பார்வை என்பது அடிப்படையில் ஒரு மார்க்சியப் பார்வை. ஆனால் அந்த மார்க்சியப் பார்வை பல பின்னல்கள் கொண்டது என்று எனக்குத் தோன்றியது. அந்தப் பின்னல்களை எல்லாம் சகித்துக்கொள்கிற அளவு எனக்கு மன வலு இல்லை. அதனால் அவரிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தேன்.

பரிட்சை எழுதி முடித்ததும் எனக்குக் கிடைத்த முதல் வேலை சின்னக் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி வேலை. வெல்டிங் ராடு, வெல்டிங் அக்ஸசரி எல்லாம் விற்கிற வேலை. அதில் ஆறுமாதம் வேலை செய்தேன். அப்போது நிப்போ பேக்டரியின் விற்பனைப் பிரதிநிதியா எனக்கு வேலை கிடைத்தது. அதற்கு ஊர் ஊராகச் சுற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு அந்த வேலையைவிடவும் ஊர் சுற்றும் வாய்ப்புத்தான் ரொம்பவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அப்போது பிரம்மராஜன் ஊட்டியில் வேலை பார்த்தார். அந்தச் சமயத்தில் நானும் விஸ்வநாதனும் ஒன்றாக இருந்து இலக்கிய விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். என் கவிதைகள் சில முக்கியமான இலக்கியப் பத்திரிகைகளாகிய ‘கவனம்’, ‘ழ’ ஆகியவற்றில் வந்திருந்தன. அதனால் அதிலெல்லாம் எழுதிக் கொண்டிருந்த பிரம்மராஜனைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசையோடு ஊட்டிக்குப் போய் அவரைப் பார்த்தேன்.

அவருடனான தொடர்பு இலக்கியரீதியாகவும் நட்புரீதியாகவும் ரொம்பவும் வலுவானதாக இருந்தது. அவர் மூலமாகக் கிடைத்த பல விஷயங்கள் என்னை இன்றைக்கு ஆளாக்கி இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய இலக்கியம் பற்றிய அறிமுகம். இன்னொன்று சங்கீதம் சம்பந்தமான நுட்பமான அறிவு. இதற்குப் பிரம்மராஜனுக்கும் அவர் மனைவி மீனாவுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். அப்புறம் பல புத்தகங்களைப் பிரம்மராஜன் சிபாரிசு பண்ணியிருக்கிறார். வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய முதல் தொகுப்பு முன்னாலேயே வந்திருந்தது. இரண்டாவது தொகுப்பு ஊட்டியில் இருக்கிற போதுதான் வந்தது. அது ‘வலி உணரும் மனிதர்கள்’ என்பது. அதனுடைய பின்னட்டைக் குறிப்பு எழுதியது நான்தான்.

அந்தக் கட்டத்தில் ‘ஸ்வரம்’ என்னும் பத்திரிகையை டி.எம்.நந்தலாலா என்கிற மருந்தாளுநர் கல்லூரி மாணவர் நடத்திக்கொண்டிருந்தார். அது Inland formatஇல் வந்து கொண்டிருந்தது. பிரம்மராஜன் ஊட்டிக்கு வந்தபோது ஒரு இலக்கிய வட்டம் உருவாக ஆரம்பித்தது. ‘ஸ்வரம்’ பழைய வடிவத்தை விட்டுவிட்டு ஒரு பத்திரிகையின் வடிவத்துக்கு வந்தது. பதினாறு பக்கம் உள்ள கவிதைப் பத்திரிகை. சில இதழ்கள் வந்து நின்றுவிட்டது. அந்த இடைவெளியைப் பூர்த்திசெய்வதற்காக ‘மீட்சி’ என்ற பத்திரிகையை பிரம்மராஜன், அவருடைய நண்பரான ஆர். சிவக்குமார், எத்திராஜ் அகிலன், ராஜாராம் எல்லாரும் சேர்ந்து தொடங்கினார்கள். அந்த இதழின் இருபது இருபத்தைந்தாவது இதழ்வரைக்கும் தொடர்ந்து அதற்குள் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். பிறகு என்ன காரணத்தினால் அந்த நட்பு போச்சு என்பது வாழ்க்கையில் நான் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள விரும்புகிற ஒரு ரகசியம்.

இதற்கிடையில் இந்தச் சமயத்தில்தான் எண்பது அல்லது எண்பத்தொன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன், தமிழ்ச் சிறுபத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தன. அதன் முதல் கூட்டத் திற்கு நான் போயிருந்தேன். நாமக்கல் பக்கம் சேந்தமங் கலத்தின் காந்திநகர் என்ற இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது. பெங்களூரில் இருக்கும் ஜி.கே.ராமசாமி யின் சொந்த ஊர் அது என்பதால் கூட்டம் அங்கே நடந்தது. அங்கே பல இலக்கியவாதிகளைப் பார்த்தேன். பு.வ.மணிக்கண்ணன், தமிழவன் எனப் பலரை அங்கே பார்த்தேன். அதன் இரண்டாவது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் ஆத்மாநாமை முதன்முதலில் பார்த்தேன். அதற்கு முன்னால் ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கவிதையைப் பாராட்டி எழுதியிருந்தார், ‘ழ’ பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில். அந்தக் கவிதைதான் ‘வரலாறு’ என்று அவரால் தலைப்புவைத்து வெளியான ‘கையில் அள்ளிய நீர்’.

‘ஸ்வரம்’ நின்று ‘மீட்சி’ தொடங்கற அந்த இடைவெளியில கோவையிலிருந்து ஒரு பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்கிற தீர்மானத்துக்கு வந்தோம். ஞானி, அவருடைய நண்பர்களான ரத்தினம், அமரநாதன், அறிவன், ஆறுமுகம் எல்லாரும் சேர்ந்து ஒரு பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்று முடிவுசெய்தோம். அதற்கு முன்னாலேயே ‘பரிமாணம்’ என்று ஒரு பத்திரிகை வந்துகொண்டு இருந்தது. அதுவும் நின்றுபோனதுக்கு அப்புறம் நாங்கள் யோசிச்சு எடுத்த முடிவுதான் இன்னொரு பத்திரிகை கொண்டு வருவது. ‘நிகழ்’ அப்படீங்கற பேரை நான்தான் வைத்தேன். அதன் முதல் இரண்டு இதழ்களுக்கு நான்தான் ஆசிரியர். எனக்கு ஊர் ஊராகச் சுற்றுகிற தொழில் கிடைத்து அந்த வேலையை மேற்கொண்டதாலும் அந்தப் பத்திரிகையை அவர்கள் விரும்பினபடி கொண்டு வர முடியாது என்பதாலும் அந்தப் பத்திரிகை நான் விரும்பினபடி இல்லை என்பதாலும் விலகிக் கொண்டேன்.

உங்கள் கவிதைகளில் அப்பாவைப் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அவர் கொஞ்ச காலம் மார்க்சியச் சார்போடு இருந்ததாகச் சொன்னீர்கள்.

அதெல்லாமே அவருடைய வாழ்க்கையின் சின்னப் பகுதியில் ஒரு மின்னல் மாதிரி வந்து போனவைதான். அவருடைய பிரச்சினைகள் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள முற்படவில்லை என்பது இப்போது எனக்கு ஐம்பது வயது ஆகும் இந்தச் சமயத்தில் பெரிய வருத்தமாக இருக்கிறது. அவர் நல்ல உழைப்பாளி. அவர் ஏதோ ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இது வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகளை உண்டாக்கியது. நாங்கள் நான்கு பேர். அப்புறம் நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் என் தம்பி பிறந்தான். இது வீட்டில் எப்போதும் ஒரு நிம்மதியற்ற சூழலை உண்டாக்கியது. வசதியானதல்ல என்றாலும் பட்டினி கிடந்த குடும்பம் அல்ல. ஆனால் அவருடைய இந்தப் பழக்கத்துக்குப் பிறகு அந்த நிலைக்கும் போக வேண்டி வந்தது.

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. சனிக்கிழமை ஸ்கூல் வச்சிட்டாங்கன்னா எனக்குப் பெரிய பதற்றம் வந்துவிடும். யூனிபார்முக்குப் பதிலா எல்லாப் பசங்களும் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. என்கிட்ட இருந்தது இரண்டு செட் யூனிபார்ம் மட்டும்தான். சனிக்கிழமையும் அதையே போட்டுக்கிட்டுப் போவதற்கு வருத்தமாக இருக்கும். அதனால் நான் ஒரு தந்திரம் செய்தேன். அப்பாவுக்கு யாரோ கொடுத்த ஒரு வேட்டியக் கட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து அதிகமாக லீவுவிட்டதால் எல்லாச் சனிக்கிழமையும் தொடர்ந்து ஸ்கூல் வச்சிட்டாங்க. எல்லா வாரமும் வேட்டியோட வருவதைப் பார்த்த என் ஆசிரியர் சோமசுந்தரம் என்னை விசாரித்தார். அவருடைய ஸ்கூட்டர்ல என்னை ஏத்திக்கிட்டுப் போய் பாம்பே டையிங் கடையில ஒரு சட்டையும் பேண்டும் வாங்கிக் கொடுத்தார். அந்த அளவுக்கு வறுமை இருந்தது. எனக்குப் பின்னால் இருந்த பெண்கள் எல்லாரும் பள்ளிப் பருவம் தாண்டிக் கல்லூரிப் பருவம் வந்தாங்க. வயசுக்கு வந்திருந்தாங்க. இது பெரிய சிக்கலா இருந்தது. இதனால் அன்னைக்கு எனக்கு மாபெரும் எதிரின்னு தோன்றியது எங்க அப்பாதான். அந்தக் கோபத்தைப் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவருகிட்ட ஒருமுறையும் கோபத்தைக் காட்டியதே இல்லை. ஒரு தடவைகூட அவரை எதிர்த்துப் பேசியதில்லை. திட்டியது இல்லை. அவர் வந்தாருன்னா நான் இறங்கிப் போயிருவேன். அவர்கூட எனக்கு உறவே இல்லை. ‘பகை இல்லை அன்பைப் போலவே’.

இந்தப் பிரச்சினைகள் முற்றியபோது எங்க குடும்பத்தில் எல்லாரையும் அழச்சிட்டுக்கிட்டுத் தர்மபுரிக்குக் குடிபோனோம். ஒரு வருசம் அங்கே குடியிருந்தோம். என்னுடைய நண்பர்களான சிவக்குமார், பார்த்திபன் இவர்கள் எல்லாம் அங்கே இருந்தார்கள், ஆதரவு இருந்தது என்பதால் அங்கே போனோம். அந்த ஒரு வருசத்தில் அவர் மனம் திருந்தியோ குடும்பத்தின் மேல் பாசம் வந்தோ திரும்பவும் கூப்பிட்டார். அதனால் கோவை வந்தோம். கொஞ்சநாள் நல்லா இருந்தது. பிறகு மறுபடியும் அதே பழக்கங்கள். அதனால் அப்போது அயோக்கியத்தனமா குடும்பத்திலிருந்து விலக ஆரம்பித்தேன். அதிகமா வீட்டுக்குப் போவதோ காசு கொடுப்பதோ மாதிரியான காரியங்கள் எதுவும் செய்யவில்லை. அந்த வீட்டில் இருப்பதே நரகத்தின் நடுவில் இருப்பது மாதிரியான ஒரு உணர்வு.

அப்போது எல்லாம் என்னைக் காப்பாற்றியது என்னுடைய இலக்கிய ஆசைகள், சங்கீதம் போன்ற விசயங்கள்தான். அது என்னுடைய மனத்தில் மாறாத காயமாக இருந்தது. இன்றைக்கு எனக்கும் வயதாகி இந்த விசயங்களை எல்லாம் பகுத்துப் புரிஞ்சுக்கறதுக்கான பக்குவம் வந்த பிறகும்கூட அந்த வருத்தமும் வலியும் மாறல. இப்ப அவர் மேல கோபம் இல்லை, வருத்தம் இருக்கு. அவர் இறந்து போறதுக்குக் கொஞ்சம் கடைசியாப் பார்த்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவரை வேறு ஒரு கோணத்தில் யோசிக்க வைத்தவை. ‘நான் ஏதாவது தப்புப் பண்ணியிருந்தா மன்னிச்சிருடா.’ அது என்னை ரொம்பவும் தொந்தரவு செய்த வாசகம்.

விற்பனைப் பிரதிநிதியா எவ்வளவு நாள் வேலை செய்தீர்கள்?

நிப்போ வேலைக்குப் பின்னால் மைசூருக்குப் போனேன். அதற்கப்புறம் பொள்ளாச்சியிலுள்ள குவாலிட்டி ஸ்பின்னிங் மில்ஸின் விற்பனைப் பிரதிநிதியாத் திரிந்தேன். இப்படி ஒரு பத்து வருட காலம் சுற்றியிருக்கிறேன். இதில் கிடைத்த சம்பளத்தைவிடவும் தென்னிந்தியா முழுக்கப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான் இந்த வேலையில் இருக்க வைத்தது. அப்படித்தான் தமிழ், மலையாள மொழி எழுத்தாளர்கள் எல்லாரையும் பார்த்தது. பெரும்பாலான எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அது இந்தப் பயணங்களால்தான். என்னை இன்னும் கூரானவனா ஆக்கியது இந்தப் பயணம் தான். அப்புறம் சென்னைக்கு வந்து ஒரு ரெடிமேட் பேக்டரி தொடங் கினோம். அது நஷ்டமாச்சு. அந்தச் சமயத்தில்தான் என் கல்யாணமும் நடந்தது. வேற ஏதாவது பண்ணனும் அப்படீன்னு கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பத்திரிகை வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நான் சின்னப் பையனா இருக்கும்போது எழுத்தை நம்பிப் பிழைக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் இப்போது நான் பிழைப்பது எழுத்தை நம்பித்தான்.

உங்க இயல்புக்கு வெகுஜனப் பத்திரிகை வேலை பொருந்தி வந்ததா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

பத்திரிகைத் தொழில் மேல இருக்கும் காதல்னால அந்த வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன்னு சொல்லமாட்டேன். எழுதத் தெரியும் என்கிற தன்னம் பிக்கை எனக்கு இருந்தது. நான் எழுதியிருக்கேன் என்பதற்கு அத்தாட்சிகள் இருந்தன. கட்டாயம் ஒரு வேலை வேண்டும் என்ற போது இயல்பாக என்னுடைய தேர்வு விற்பனைப் பிரதிநிதி என்பதாகத்தான் இருந்தது. என்னுடைய மனைவிதான் ‘உனக்குத்தான் எழுதத் தெரியுமே ஏதாவது பத்திரிகைக்கு முயற்சி செஞ்சு பாரு’ன்னு சொன்னாங்க. முதன் முறையா எனக்கு அந்த எண்ணம் வந்ததே அப்பத்தான். அதுக்கு முன்னால் வெகுஜனப் பத்திரிகையில் சின்னதாக் கட்டுரை மாதிரியான சில எழுதியிருக்கிறேன். வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது ‘குங்குமம்’ பத்திரிகை வளாகத்தில் ச. ம. பன்னீர்செல்வம் என்கிற நண்பர் இருந்தார். அவருகிட்ட ஒரு வேலை வேண்டும் அப்படீன்னு கேட்டபோது ‘குங்குமம்’ வளாகத்தில் விசாரிக் கிறேன்னு சொன்னார்.

அப்போது ‘தமிழன்’ என்ற நாளிதழ் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. அதற்கான விண்ணப்பம் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு என்னைத் தேர்ந்தெடுத்தவர் சின்னக் குத்தூசி என்கிற தியாகராஜன். அதற்குக் காரணம் தமிழினி வசந்தகுமார். அவர்கள் நடத்திய ‘புதுயுகம் பிறக்கிறது’ என்னும் பத்திரிகையின் முதல் இதழில் என்னுடைய கவிதைகள் வெளியாயின. அது பிரம்மாண்டமான தயாரிப்பாக இருந்தது. அதனால் எல்லா இடத்திலும் என்னுடைய பெயர் ஓரளவுக்குத் தெரிஞ்சது. சின்னக் குத்தூசிக்கும் என் பேர் தெரிஞ்சிருந்தது. அந்தக் கவிதைகள் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதுதான் எனக்கு வேலை வாங்கித்தந்தது. இலக்கியந்தான் அன்னைக்குச் சோறு போடறதுக்குத் தயாரா இருந்தது.

பத்திரிகைக்கு வந்த பிறகுதான் எனக்குள்ள ஒரு பத்திரிகையாளன் இருக்கிறான் என்பதை நான் கண்டுபிடித்தேன். மூணாவது நாளில் இருந்தே அந்தப் பத்திரிகையின் எடிட் பேஜ் எழுத ஆரம்பிச்சிட்டன். இது கொஞ்சம் மெல்ல மெல்ல என்னை ஒரு பொருட் படுத்தக்கூடிய ஆளா அந்த வளாகத்துக்குள்ளேயும் அப்புறம் பத்திரிகை உலகத்திலும் மாற்றியது. அந்த நாளிதழ் நிர்வாகக் காரணங்களால் ஒன்பது மாதத்தோடு நிறுத்தப்பட்டபோது என்னைக் குங்குமத்துக்கு மாற்றினார்கள். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானதும் இனிமையானதுமான வேலை அமைந்தது. நிறையக் கதைகள் படிக்கலாம், வேற வேற விசயங்கள் தெரிஞ்சிக்கலாம். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் ஒரு கட்டத்தில் வெளியேற நேர்ந்த போது பத்திரிகைப் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது.

அந்தப் பத்திரிகையில் பெரிசாச் சாதித்தேன்னு சொல்ல முடியாது. எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களை வைப்பது அப்படிங்கிற மாதிரி சில செஞ்சேன். அது கீழான தரத்தில் இல்லாமல் கொஞ்சம் இலக்கியரீதியாகப் பண்ணலாம்னு நினைத்தேன். ஏன்னா, க. நா. சுப்பிரமணியமும் தியடோர் பாஸ்கரனும் சா. கந்தசாமியும் எழுதக் கூடிய ஒரு பத்திரிகையில் அதற்கான வாய்ப்பு இருந்தது. அதை நான் பயன்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர்கள் அனுமதித்தார்கள் என்பது முக்கியம். அப்படியான சுதந்திரத்தை எனக்குத் தந்தார்கள். அதைப் பயன் படுத்திக்கொண்டு சின்னச் சின்னத் தந்திரங்கள் எல்லாம் செய்து இரண்டு லட்சம் விற்கிற அளவுக்கு அந்தப் பத்திரிகையைக் கொண்டு போனேன். அப்போது எனக்கான ஒரு பாராட்டு விழாவும்கூட நடத்தினார்கள். அது தான் அந்தப் பத்திரிகை காலகட்டத் தோட சந்தோசமான விசயம்.

அதைவிட்டு வந்து ஒரு மூன்று மாதம் ‘குமுதம்’ பத்திரிகைக்குப் போனேன். வெளிப்படையான காரணம் எதுவுமே கிடையாது. குமுதத்தில் சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பது மட்டும்தான். முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவன் நான். என்னுடைய பணிக்குத் தகுதியான ஊதியம் இருக்கிறது என்னும் இரண்டு விசயங்கள் குமுதம் அழைத்ததில் எனக்குத் தெரிய வந்தவை. குமுதத்தில் கைகால் கட்டப்பட்ட ஒரு ஆள் மாதிரிதான் இருந்தேன். குங்குமம் வளாகத்தில் ஓரளவு சுதந்திரத்தோடு நான் இருந்திருக்கேன். எந்த மேட்டரையும் நான் தீர்மானித்த பிறகு வேண்டாம் என்று சொன்னது இல்லை. நான் எடுக்கும் முடிவை அவர்கள் பெரிதாகத் தடை செய்ததும் இல்லை. ஆனால் குமுதத்தில் அப்படியான ஒரு சுதந்திரம் எல்லாம் கிடைக்கவில்லை. அங்கே நாலு பேரில் ஒருவன் என்று இருப்பது எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஏதோ ஒரு தத்தளிப்பில் இருந்தபோதுதான் என்னுடைய பூர்வாசிரமம் பற்றிய ரகசியம் வெளிவந்தது. நான் ஒரு மலையாளி என்பது தெரியவந்தது. ‘மலையாளம் சேனல் தொடங்குகிறோம். நீ வந்து பொறுப்பேத்துக்கணும்’ என்று அழைப்பு. அப்படி 1998 ஏப்ரல் மாதம் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியராகப் பொறுப் பேற்றுக்கொண்டேன்.

குங்குமத்தில் நீங்கள் செய்தவை என்ன மாதிரியான மாற்றங்கள்?

ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு புதிய பகுதி தொடங்குவது. அப்புறம் நிறையப் புதிய ஆட்களைக் கொண்டு வருவது. இதெல்லாம் வந்தபோது இலவச விநியோகத்தின் ஆரம்ப கட்டமும் அன்றைக்குத் தொடங்கியது. ஆனால் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை. புத்தகம் வாங்குபவனுக்குக் கூடுதல் அலவன்சா ஏதாவது ஒரு பொருள் கொடுக்கப்பட்டதே தவிர அது பத்திரிகையின் உள்ளடக்கத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பல விசயங்களைத் தொடர்ந்து எழுத முடிந்தது. புதிய எழுத்தாளர்களைக் கொண்டுவர முடிந்தது. யுவன் சந்திரசேகரோட கவிதையைப் போட முடிந்தது. ஒரு தீபாவளி மலருக்கு இந்தியப் பெண் கவிஞர்கள் என்ற ஒரு தொகுப்பைக் கொண்டுவர முடிந்தது. ரொம்ப நாள் எழுதாமல் இருந்த விமலாதித்த மாமல்லனுடைய கதையைப் போட்டு அவரைத் திரும்பவும் வெளியே கொண்டுவர முடிந்தது. இப்படிச் சில விஷயங்கள். ‘குங்கும’த்துடைய சுபாவம் கதையைப் போடுவது, யாருக்கும் சுவாரஸ்யம் இல்லாத நடையில் சில கட்டுரைகளை வெளியிடுவது என்பதுதான். நான் பண்ணின அரவாணிகள் பற்றிய கட்டுரை, பாலியல் தொழிலாளிகள் பற்றிய கட்டுரை ஆகியவை எல்லாம் வாசகனுக்கு ருசிகரமாகவும் சில புதிய தகவல்களைச் சொல்வதாகவும் இருந்தன. அன்றைக்கு எனக்கும் சாதித்துப் பார்க்கணும் என்ற குறுகுறுப்பு இருந்ததனால நானும் வேற வேற விசயங்கள் பண்ணியிருக்கிறேன்.

என்னுடைய கட்டுரைத் தொகுப்புல மூன்று கட்டுரைகளைத்தான் அதிலிருந்து எடுத்துப்போட முடிந்தது. இன்னும் முக்கியமாக அதில் செய்த சில பேட்டிகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் என்னால் தேடி எடுக்க முடியவில்லை. குறிப்பா இளையராஜா, கமலஹாசன், எல்லிஸ் ஆர். டங்கன் இவர்களிடம் எடுத்த பேட்டிகள் ரொம்ப முக்கியமானவை. பத்திரிகையைப் பத்திரப்படுத்துகிற பழக்கம் இல்லாததால் அவற்றைத் தேடி எடுக்க முடியவில்லை. ‘குங்கும’த்திற்காக நான் செய்த இன்னொரு நல்ல விஷயம், நம்ம கண் முன்னால் தென்படுகிற சில பெண்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது. அதற்கு எனக்கு முன் உதாரணம் Savoy என்கிற பத்திரிகையில் வந்த I believe என்ற ஒரு பகுதி.

இதற்காக நான்கு இண்டர்வியூக்கள் பண்ணினேன். சில்க் ஸ்மிதா, ஸ்ரீவித்யா, உன்னிமேரி என்கிற தீபா, காஞ்சனா ஆகிய நடிகைகள். சில்க் ஸ்மிதாவும் ஸ்ரீவித்யாவும் பல விஷயங்களை ரொம்பவும் வெளிப்படையாப் பேசியிருந்தாங்க. ஆனால் இவற்றை எல்லாம் வெளியிட முடியல. வெளியிட்டாப் பிரச்சினை ஆகும் அப்படீன்னு வெளியிட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அது ஒரு பத்திரிகையாளனா எனக்கு வருத்தம் தருகிற விஷயம். அதேபோல ஒரு நல்ல பேட்டி நடிகை காஞ்சனாவுடையது. அவங்க பெங்களூர் தாண்டி ஒரு கிராமத்தில் கோயில் சுத்தம் செய்கிற வேலைசெய்து வாழ்ந்துக் கிட்டிருந்தாங்க. அதையும் வெளியிட முடியல.

அந்தப் பத்திரிகை வேலையினால் எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. பத்திரிகையாளன் என்கிற முறையில் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. நிறைய இசைக் கச்சேரிகள் கேட்க முடிந்தது. இசை பற்றி நான் எழுதிய சில நல்ல கட்டுரைகள் அதில் வந்திருக்கு. மகாராஜாபுரம் சந்தானம் பற்றியும் பீம்சேன் ஜோஷி பற்றியும் எழுதிய கட்டுரைகள் எல்லாம் முக்கியமானவைன்னு தோணுது. இப்பவும் அந்த உணர்வு மாறவில்லை.

குங்குமம் பத்திரிகை வளாகத்தில் சில வருசங்கள் இருந்திருக்கீங்க. கலைஞர் அதில் எழுதுபவர். அவரோடான அனுபவம் ஏதும் உங்களுக்கு உண்டா?

நான் அடிப்படையில் திமுக சார்பான ஆள் இல்லை. திமுகவின் அரசியலோடோ பண்பாட்டினோடோ பெரிய அனுபவ நிலைப்பாடெல்லாம் எனக்கு இல்லை. அப்படியான கட்டத்துக்கு என்னைக் கொண்டு வந்த பெருமை ஜெயகாந்தனைச் சாரும். அது ஒரு பொக்கான இயக்கம் என்று அவர் போட்டு உடைச்சது மண்டையில் ஏறி இருந்தது. அவங்க இலக்கியம் பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் எதுவும் கிடையாது. ஒரு இயக்கம் என்கிற போது அதனுடைய பங்கைக் குறைச்சுச் சொல்லவே மாட்டேன். இந்த மொழி பேசுவதனால் நமக்கு ஒரு மதிப்பு இருக்கு. இந்தப் பண்பாட்டைச் சார்ந்தவன் என்பதால் நமக்கு ஒரு கௌரவம் இருக்கு என்பதைத் தெரிவிச்சது இந்த இயக்கம்தான். இந்த இயக்கம் ஒரு சீர்திருத்த இயக்கம், சமுதாய இயக்கம் என்கிற கோணங்களில் தான் பார்க்க வேண்டும். அந்தக் கோணங்களில் பார்க்கும்போது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.

இலக்கியம், திரைப்படம், நாடகம் ஆகிய ஊடகங்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றபடி அவற்றில் மாபெரும் விற்பன்னர்கள் கிடையாது. சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளுக்காகவும் அரசியல் பிரச்சாரத்திற்காகவும் இவற்றை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்தத் தேவை தீர்ந்ததும் அவற்றின் மேல் அவர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு யாராவது கலைஞர் வசனத்திற்குச் சிலிர்ப்படைவார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஏன்னா காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிடுச்சு. அதுக்குப் பிறகும் இது தொடர்வது ஏன்? ஆதாரமான கொள்கைகள் எல்லாவற்றையும் இந்த இயக்கம் இழந்திருச்சி என்கிற போது இந்த இயக்கத்தினுடைய இன்றைய பங்கு என்ன? இந்த இயக்கத்தின்மீது மதிப்பு மரியாதை உள்ள எல்லாருமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.

இசையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

நான் ஊட்டியில் படித்தபோது பரமேஸ்வரின்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவுங்க வீட்டுக்கு நான் ட்யூசன் போனேன். அவுங்க வீட்டில் எப்போதும் பாட்டுச் சத்தமாக் கேட்டுக்கிட்டே இருக்கும். எல்லாம் பஜனைப் பாட்டா இருக்கும். சின்னப் பையனா இருந்ததால என்னைக் கூட்டிக்கொண்டுபோய்க் கோயில் பஜனையில் பாடவைப்பாங்க. அப்படிப் பாடிப் பாடிச் சங்கீதத்தில் ஒரு ருசி வந்தது. அப்புறம் கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்தபோது சங்கீதம் கத்துக்கலாமுன்னு போக ஆரம்பிச்சேன். அது நடக்கல. அப்ப எனக்குச் சீனிவாசன்னு ஒரு நண்பன் இருந்தான். அவன் நல்லாப்பாடுவான். அதனால் நான் ஒழுங்கா லேபுக்குப் போனதவிடவும் ரெக்கார்ட் நோட் எழுதினதைவிடவும் எங்காவது பாட்டுக் கச்சேரி நடக்குதா, பாட்டுப் போட்டி நடக்குதான்னு தேடிப் போன நாட்கள்தான் அதிகம் இருக்கும். ஆனால் அதைக் கூர்மைப்படுத்திவிட்டவர் பிரம்மராஜன். லேசாக் கேட்டுப் பழகி இருந்த இந்துஸ்தானி இசையைப் பற்றிய பெரிய உலகத்தைத் திறந்துவிட்டது பிரம்மராஜன் தான். ஒரு தடவை தொத்திக்கிடுச்சின்னா மாறாத விஷயம் இசை என்பதால் அது தொடர்ந்து இருந்துக்கிட்டே இருக்கு.

நம்ம கர்நாடக சங்கீதத்தில் வளர்ச்சி, மாற்றம் என்று சொல்கிற மாதிரி விஷயங்கள் இருக்கிறதா?

நம்ம கலைகளில் ரொம்பவுமே பூரணமான கலைங்கிறது சங்கீதம்தான். அது முழுமை அடைஞ்சிருக்கு. அதற்கான வடிவம் எல்லாமே வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய சங்கீதத்தில் மிகப் பெரிய விஷயம் என்பது கீர்த்தனை பாடுவதுதான். மேற்கத்திய இசையில் சிம்பனி அப்படிங்கறதுக்கு இணையா இதை வச்சிக்கலாம். சிம்பனி வாத்தியங்களால் இசைக்கப் படுகிறது. கீர்த்தனை வாத்தியங்களாலோ வாய்ப்பாட்டினாலோ இசைக்கப்படுகிறது. அதனுடைய பெரிய வடிவத்தை அது அடைந்திருக்கிறது. ஏற்கனவே இருக்கிற அந்த வடிவத்தை நெருங்குகிற முயற்சியைத்தான் திரும்பத் திரும்ப எல்லாக் கலைஞர்களும் பண்ணிக்கிட்டிருக்காங்க. பல சமயம் நெருங்க முடியறதில்லை. அவுங்கவுங்களுடைய பாணியில் பண்ணிப் பார்க்கிறாங்க. அதனால ஒருபோதும் அது பழசு மாதிரி இருப்பதேயில்லை. ஒருதடவை மணி ஐயர் பாடிய மணிரங்கு ராகத்தை அடுத்த தடவை அவரே பாடும்போது அதே மணிரங்கு ராகம் அல்ல. ஒருதடவை எம்.டி.ராமநாதன் பாடின இந்தோளம் இன்னொரு தடவ அவர் பாடும்போது அதில் வேற வந்து சேர்ந்திருது. அந்த அம்சம்தான் தொடர்ந்து இந்தச் சங்கீதத்தை நிற்க வச்சுக்கிட்டு இருக்கு.

கீர்த்தனைகளில் பக்தி என்ற ஒரு அம்சம் மட்டுமேதானே மையமா இருக்கு?

அது இங்கு நிலவும் ஒரு கட்டுப்பெட்டித்தனம். கண்மூடித்தனமான ஒரு மரபு சார்ந்து நிலவுகிற ஒரு நடைமுறை. இந்துஸ்தானி இதைவிட மிகவும் நெகிழ்வான ஒரு இசை. அதில் பக்திக்கெல்லாம் பெரிய இடம் கிடையாது. சங்கீதத்துக்குத்தான் பெரிய இடம். நமக்கு நேர்ந்தது என்னன்னா பக்தி இலக்கியம் பரவலாக வந்துக்கிட்டு இருந்தபோது அதைப் பரப்புவதற்கு இசை ஒரு வாகனமாகப் பயன்பட்டது. பக்தி இலக்கியத்தின் அடிப்படையான கூறு நெகிழ்வுதான். தெய்வத்தின் முன்னால் தன்னை இழக்கும் நெகிழ்வு. சங்கீதத்தின் அடிப்படையான கூறும் இந்த நெகிழ்வுதான். இரண்டும் ஒன்று சேர்ந்தபோது பிரிக்க முடியாத மாதிரி ஆயிருச்சு. அதனால் பக்தி இருந்தால் சங்கீதம், சங்கீதம்னா பக்தி இருக்கணும் அப்படீன்னு எல்லாம் எதுவும் கிடையாது. தேஷ் ராகத்தில் பாடப்பட்ட எந்த தெய்வத் தோத்திரத்தைவிடவும் அந்த ராகத்தில் பாடப்பட்ட பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்ற பாட்டு உருக்கமானதுதான். சங்கீதத்தின் லட்சணம் முழுமையாக உள்ளதுதான்.

இன்றைக்குப் பழைய மனோபாவம் மாறிக்கிட்டு இருக்கு. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. கீதம் என்பது சங்கீதம்தான். அது பக்தியின் வாகனம் அல்ல. சங்கீதம் அதனளவில் முழுமையான விஷயம். பக்தி இருந்தாத்தான் சங்கீதம் இருக்க முடியும் என்பது திணிக்கப்பட்ட ஒரு விஷயம். அது இயல்பானது அல்ல. இன்றைக்கு சஞ்சய் சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் எல்லாம் வெறும் பக்திக்காக மட்டும் பாடவில்லை. மானுட அனுபவத்தை வெளிப்படுத்தப் பாடறாங்க. நான் சங்கீதத்தைக் கேட்பதும் அந்த அனுபவத்துக்காகத்தான்.

தமிழில் இப்போது நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. அதில் நீங்களும் பங்கேற்கக் கூடியவராக இருக்கிறீர்கள். அவற்றின் போக்கு எப்படியிருக்கிறது?

நான் ஒரு எழுத்துச் சோம்பேறி. அதனால் எழுதுவதற்கான ஒரு நிர்ப்பந்தத்தைத் தரும் என்பதற்காக அதில் எழுதுகிறேன். நம்ம பார்வைக்கு அகப்படாத பல வாசகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள். அவர்களை எல்லாம் எட்டுவதற்கு இதுதான் எளிய சரியான மார்க்கம் என்பதாலும் நான் அதில் எழுதுகிறேன். அதோடு என் இணைய உறவு முடிகிறது. இணையம் என்பது இப்போதைக்கு ஒரு சைபர் சண்டைதான். அதில் பெரும்பாலும் வம்புகளும் வழக்குகளும்தான். எழுபது, எண்பதுகளில் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் நடந்துகொண்டிருந்த சண்டைகள் எல்லாம் இன்று இணையத்தில் நடக்கின்றன.

இன்னொன்று இணையத்தில் எழுதும் பலரும் ஒரு மாதிரி ரொம்பவும் பிற்போக்கான, கண்டனத்துக்குரிய அரசியலைச் சேர்ந்தவர்கள். பெரிய ஆக்கப்பூர்வமான ஒரு ஊடகம் அது. ஆனால் அதை நாம் மிகவும் மோசமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் என் அபிப்ராயம். அதில் ஒழுங்கான விவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ இடமில்லை. நான் ஒரு கட்டுரை எழுதறன்னா கட்டுரையின் அடிப்படை, நோக்கம் என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதில் ஏதோ ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு முரசு கொட்டி முழக்கிப் போரைத் தொடுக்கிறாங்க. அது இலக்கிய வளர்ச்சிக்கோ சிந்தனை வளர்ச்சிக்கோ உதவக்கூடிய விஷயம் இல்லைன்னு தோணுது.

இன்னொன்று இணையம் பெரிய சௌகரியங்களை நமக்குத் தருது. இதனால் நம்முடைய எழுத்து மாற்றங்களைச் சந்திக்கிறது. இப்பப் பென்சில்ல எழுதறதுக்கும் பேனாவில் எழுதறதுக்கும் கையெழுத்து வித்தியாசம் ஆகிற மாதிரியே நீங்க பேனாவில் எழுதும் ஒரு கதைக்கும் இணையத்தில் எழுதும் ஒரு கதைக்கும் சின்ன வித்தியாசங்கள் இருக்கு. வாக்கிய அமைப்புகள் போன்றவற்றில் எல்லாம். இது எழுத்தை இன்னும் கொஞ்சம் நீக்ஷீமீணீtவீஸ்மீ ஆன ஜீக்ஷீஷீநீமீss ஆ மாற்றும் என்று நான் நினைக்கிறேன். இதெல்லாம்தான் நமக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்.

ஆனால் இப்ப நான் பார்ப்பது என்னன்னா இணையத்தில் நடக்கும் பல விஷயங்களை அப்படியே காப்பி அடித்து நம்ம மொழியில் எழுதிவிடுகிறார்கள். இந்தத் தலைமுறை வாசகர்கள் பலருக்கும் இணையத்தோடு தொடர்பு உண்டு என்பதைக்கூட கவனத்தில் கொள்வதில்லை. தமிழில் வந்திருக்கும் பல கட்டுரைகளின் ஆதாரத்தை ஏதாவது இணையத்துக்குள்ள போனால் துருவி எடுத்துவிட முடியும். இது நல்லது அல்ல. சமீபத்தில் ஒரு கட்டுரையில், குறிப்பிட்ட பாடகி பாடும்போது சிறகு விரித்துப் பறப்பதுபோல் மனமே சிறகு விரித்து எழும்புகிறது என்று ஒருவர் எழுதுகிறார். இது அப்படியே இணையத்தில் வந்த இன்னொருவர் கட்டுரையில் இருந்து எடுத்த வரிகள். இணையத்தில் இருந்து தகவல்களை எடுப்பது சரி. இது ஒரு மனம் சார்ந்த படிமம். இதை ஒருத்தன் யோசிச்சுத்தான் எழுதியிருக்கிறான். அதனுடைய உரிமை அவனுக்குத் தான். அவனுடைய பேரையே சொல்லாமல் பயன்படுத்துவது இலக்கியத் திருட்டுதான். இந்த மாதிரியான இலக்கியத் திருட்டு தமிழில் நிறைய வருது. இணையம் மூலமா நிறைய வரவும் வாய்ப்பிருக்கு.

தமிழில் சிறுபத்திரிகைகள் எல்லாமே இடைநிலை இதழ்களாகிவிட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கோட்பாட்டு விவாதங்கள் போன்றவை இல்லாமலாகிவிட்டன. சிறுபத்திரிகைச் சூழல் பற்றிய உங்க பார்வை என்ன?

கொஞ்ச நாளுக்கு முன்னால் எனக்கு ஒரு அபிப்ராயம் ரொம்ப அழுத்தமா இருந்தது. தமிழில் இரண்டு இயக்கங்கள் தோத்து போச்சி. ஒன்று சிறுபத்திரிகை இயக்கம். இன்னொன்று திரைப்படச் சங்கங்கள். திரைப்படச் சங்கங்கள் கணிசமான பார்வையாளர்களை உருவாக்கல என்பது என்னுடைய குற்றச்சாட்டா இருந்தது. அப்படி உருவாகாது என்பது எனக்குப் பின்னால் தெரிஞ்ச விஷயம். அதே மாதிரி சிறுபத்திரிகைக்கு நூறு வாசகர்தான் இருப்பாங்கன்னா அவுங்க அத்தனை பேரும் தரமான வாசகர்களா இருப்பாங்க. இன்னும் பத்துத் தலைமுறை கடந்தாலும் இப்படி நூறு வாசகர்கள் இருப்பாங்க. ஆனா இந்த நூறு வாசகர்களிடமிருந்து தொடங்குகிற விவாதம், இந்த நூறு வாசகர்களின் பங்களிப்பாக விரியும். அது விரிகிறபோது உங்களுக்கு இடைநிலையாவும் இதழ்கள் தேவைப்படும். ஆனால் சிறுபத்திரிகைக்கான தேவையும் இருந்துக்கிட்டே இருக்கும். இடைநிலைப் பத்திரிகைக்கான தேவையும் தொடரும். தமிழில் ஆரம்ப காலச் சிறுபத்திரிகைகள் எல்லாமே இலக்கியம் சார்ந்தவைதான்.

ஆனால் எண்பது தொண்ணூறுகளில் பண்பாடு, அரசியல் சார்ந்த விஷயங்கள் எல்லாமே சிறுபத்திரிகைக்குள்ள வருது. இப்ப இந்த விஷயங்கள் சிறுபத்திரிகைக்குள்ள மட்டுமே ஒதுங்கிவிடுவது அவ்வளவு பொருத்தமா எனக்குத் தோணல. ஒரு தலித் பிரச்சினைன்னா அது சிறுபத்திரிகைக்குள்ள மட்டும் விவாதித்து முடிக்கக்கூடியதா எனக்குப் படல. அது விரிவான தளத்தில் விவாதிக்கப்படணும். அதற்கு இடைநிலைப் பத்திரிகைகள்தான் பொருத்தம். அதனால இரண்டுமே இருக்கும். அதேபோலத்தான் திரைப்படம். முதலில் திரைப்பட விழாக்கள் மூலமாத்தான் நல்ல படங்களைப் பார்க்க முடிந்தது. இன்னைக்குத் தொழில்நுட்ப வசதிகள் வந்திட்டதால எந்தப் படத்தையும் எப்பவும் பார்க்கலாம். இந்தக் கட்டத்தில் ஒரு நூறு பேர் சேர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படச் சங்கங்கள் ஒரு மாற்றா இருக்கும். இது திரைப்படம் என்கிற கலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கு உதவும். அதனால் இவை எல்லாமே இருக்க வேண்டியவைதான் என்பது இப்போதைய என் கருத்து.

திரைப்படமும் உங்களுக்கு ஆர்வமான துறை. உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த அனுபவம் இருக்கிறது. தமிழ்ப் படங்கள் பற்றிய உங்கள் அபிப்ராயம்?

எனக்கு மூன்று காதல் இருக்கிறது. முதல் காதல் இலக்கியம். இரண்டாவது இசை. மூன்றாவது திரைப்படம். இந்த மூன்றுக்கும் ஆலாய்ப் பறந்த காலங்கள் உண்டு. ஒரு திரைப்படச் சங்கத்தைக் கோயம்புத்தூரில் தொடங்கி நடத்த ஆரம்பிச்சேன். அதற்கெல்லாம் கோயம்புத்தூரைச் சேர்ந்த என் நண்பர் அமரநாதன் என்பவர் பெரிய உதவியாக இருந்தார்.

திரைப்படச் சங்கம் நடத்திக்கிட்டிருந்தபோது சென்னையில் நடந்த Film appreciation course தான் எனக்குப் பெரிய திருப்பம். ராண்டர்கை, வி. கே. நாயர், சத்தீஸ் பகதூர் இவர்கள் எல்லாம் வகுப்பெடுத்தார்கள். அது ஒரு பெரிய உலகத்தைக் காட்டியது. தமிழில் இதுவரை சினிமாவே வரல அப்படீன்னு அப்ப எனக்குத் தோணுச்சு. இங்கே சினிமா என்பது ஆரம்பத்திலேயே பெரும் தோல்வி. இன்னைக்கும் சினிமா இண்டஸ்ட்ரி அப்படீன்னுதான் சொல்றாங்க. சினிமாவை ஆர்ட்ன்னு சொல்றதில்லை. அதனாலதான் இங்க சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர்னு ஒரே நட்சத்திர ஆதிக்கம். சினிமா என்பது இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு முழுமையான கலை. அப்படியான ஒரு பெரிய இயக்குநர் தமிழ் சினிமாவில் வரவில்லை. அப்படி வருவதற்கான வாய்ப்பு இனிமேல் வரலாம்.

நான் பார்த்த எந்தச் சினிமாவிலும் தமிழ் வாழ்க்கை இதுவரைக்கும் காண்பிக்கப்படவில்லை என்பது தமிழ் சினிமாவின் மாபெரும் குறை. ஒரு மாதிரி நடுத்தரமான அல்லது பெரிய, கலை என்கிற உரிமை பாராட்டுதல் இல்லாத மலையாளப் படங்கள் எல்லாவற்றிலுமே அடிப்படையான சில விஷயங்கள் இருக்கும். அவனுடைய வீடு எங்க இருக்கு, எந்த நிலத்தில் நிகழுது, அவன் என்ன மொழி பேசறான், அவனுடைய தொழில் என்ன என்கிற எல்லாமே இருக்கும். தமிழ் சினிமாவில் இதெல்லாம் வருவதே இல்லை. இதெல்லாம் ஒரு கலையின் அடிப்படை விஷயங்கள். கண்முன் காட்டி நம்ப வைக்கிற காட்சிக் கலைக்கு இதெல்லாம் அவசியம் தேவை. இதைப் பற்றிய பொதுஅறிவுகூடப் பார்வையாளனுக்கு வழங்கப்படவேயில்லை. அப்படியான ஒரு அறிவு அவனுக்கு வந்திருக்குமானால் இப்படியான படங்கள் ஓடியிருக்காது. இப்பக் கொஞ்சம் கேள்விகள் கேட்கிற சூழல் வருது. எங்க நடக்குது, ஏன் நடக்குது, எந்தச் சாதிக்காரன், என்ன தொழில் செய்யறான், இவன் வயசு என்ன, நிறம் என்ன இத்தனை கேள்விகளும் இருக்கு. ஒரு நாவல் எழுதும்போது இத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாவலாசிரியன் பதில் சொல்றானே. இரண்டரை மணி நேரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு படத்துக்கு அந்த நியாயமே கொடுக்கப்படல என்பது ஜனநாயகக் கலையின் ஜனநாயக விரோதப் போக்குதான்.

உங்கள் அத்தை மலையாளம் எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்கன்னு சொன்னீங்க. நீங்க எப்ப மலையாளம் கத்துக்கிட்டிங்க?

எனக்கு மலையாளம் பேசத் தெரியும். பேசினாப் புரிஞ்சிக்கத் தெரியும். எஸ்எஸ்எல்சி முடிக்கிற வரைக்கும் ஒரு வரிகூட எழுதப் படிக்கத் தெரியாது. நான் அன்றைக்குப் பேசின மலையாளத்தில் தமிழ் இருக்கும். அதைத் தமிழாளம் என்று சொல்லலாம். எஸ்எஸ்எல்சி முடிச்சபோது இரண்டு தீர்மானங்களுக்கு வந்தேன். ஒன்று கோயம்புத்தூரில் எனக்குத் தெரியாத தெருக்களே இருக்கக் கூடாது. அப்பத்தான் நான் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் முழுக்கச் சுத்தி என்னுடைய புவியியல் அறிவை விருத்திசெய்துகொண்டேன். இரண்டாவது ஏதாவது மொழி கற்றுக்கொள்வது என்பது. அதுக்காக இஸ்கஸ் நடத்திய ரஷ்ய, இந்தி மொழி வகுப்புகளுக்கெல்லாம் போய்ச் சேர்ந்தேன். இந்தியில் முதல் கட்டப் பரிட்சை வரைக்கும் போனேன். அப்புறம் விருப்பம் குறைஞ்சிடுச்சி. ரஷ்ய மொழிய மூணாவது நாளே நிறுத்திட்டேன். ஏன்னா அதில் மக்கிப்போன பைன் மரக் காடுகளை உடைய ஸ்டெப்பிப் புல்வெளியின் வாசனை இருந்துக்கிட்டே இருந்தது. அந்த மாதிரியான வாசகங்கள் ரஷ்யப் புத்தகங்களிலிருந்து வரும். எனக்கு இந்த மொழி சரிவராது அப்படீன்னு தோணிருச்சு.

என்னால் பேச முடிகிற, எனக்குப் புரிகிற மொழியக் கத்துக்கிட்டா என்னன்னு எனக்குத் தோணுச்சு. அப்படித்தான் மலையாளத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கிட்டேன். சொற்கள் எனக்குத் தெரியும். வாக்கியங்களின் அமைப்பு முறை எனக்குத் தெரியும். அதனால் பெரிய சிக்கல் இல்லாமல் கத்துக்க முடிந்தது. அப்பவும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. மெல்ல மெல்ல மலையாள இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதில் என்னுடைய மொழி அறிவு கொஞ்சம் வளர்ச்சி அடைந்தது. கொஞ்சம் தைரியம் வந்ததற்கப்புறம் மொழி பெயர்ப்புகளில் ஈடுபட ஆரம்பித்தேன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு. அப்புறம் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியர் பொறுப்புக்கு வந்த பின்னால் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தேன். இதுவரைக்கும் ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு ஐம்பது அறுபது கூட்டங்கள் மலையாளத்தில் பிரசங்கிச்சிருக்கேன்.

மொழிபெயர்ப்புக்கான விஷயங்களை எப்படித் தேர்ந்தெடுக்கறீங்க? மொழிபெயர்ப்புக்கென்று என்ன மாதிரி கொள்கைகள் வச்சிருக்கீங்க?

மொழிபெயர்ப்பு என்பது என்னுடைய ஆர்வம் சார்ந்த விஷயம். பின்னால் சில கட்டங்களில் தேவை சார்ந்தும் செய்திருக்கிறேன். என்னுடைய ரசனை சார்ந்தவை, என் மனப்போக்குக்கு உகந்தவை என்றுதான் செய்திருக்கிறேன். நான் சொல்லணும் என்று நினைத்துத் தேவையில்லாத தயக்கத்தினாலும் பயத்தாலும் சொல்லாமல் விட்ட விஷயங்களை வேறு யாராவது அழுத்தமாகவும் செறிவாகவும் சொல்லியிருந்தாங்கன்னா அவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். மற்றபடி மொழி பெயர்ப்பு என்னுடைய தொழில் அல்ல.

இந்த மொழிபெயர்ப்பு படிப்பவனுக்கு அதனுடைய சரியான அர்த்தத்தில் புரியணும் என்பதைத்தான் பிரதானத் தேவையாக நான் நினைக்கிறேன். மலையாளத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தைத் தமிழ் வாசகன் ஒருவன் படிக்கிறான். அதனால் தமிழில் அவனுக்குத் தெளிவாப் போய்ச் சேரணும் என்பதுதான் என் முதல் நோக்கம்.

அடுத்து மொழிபெயர்க்கும்போது எந்த அம்சத்துக்கு நியாயமாக இருக்கணும் என்பது முக்கியம். கவிஞனுக்கு நியாயமா இருப்பதா கவிதையின் உள்ளடக்கத்துக்கு நியாயமா இருப்பதா? இது அவ்வப்போது தீர்மானிக்க வேண்டிய விஷயம். சில சமயம் கவிதைகளில் கவிஞனுக்கு நியாயமாக இருக்க வேண்டி வரும். சச்சிதானந்தன் மாதிரியான கவிஞருடைய கவிதையை நான் மொழிபெயர்க்கும்போது கவிதைக்கு நியாயமாக இருப்பதைவிடவும் கவிஞனுக்கு நியாயமாக இருப்பதுதான் நல்லது. ஏன்னா அவருடைய அரசியல், பண்பாடு எல்லாம் அவர் கவிதைக்குள்ள இருக்கு. சில சமயம் கவிதைக்கு நியாயமாக இருக்க வேண்டி வரும். மலையாளத்தின் முக்கியப் பக்திக் கவியாகிய பூந்தானத்துடைய கவிதையை நான் தமிழில் மொழிபெயர்க்கும்போது அதில் கவிதைக்குத்தான் நியாயமாக இருக்க முடியும். ஏன்னா கவிஞரைப் பற்றிய எந்த விவரமும் எனக்கு இல்லை. இது எல்லாவற்றையும்விடப் பிரதானமாக நான் நினைப்பது அது என்ன தொனியில் இருக்கிறதோ அந்தத் தொனியை என் மொழிக்குக் கொண்டுவருவது என்பது. அது நான் என் மொழிக்குச் செய்யும் ஒரு பங்களிப்பு. இன்னொரு புதிய குரலை என் மொழியில் ஒலிக்கவிடுகிறேன் என்பது.

மலையாள இலக்கியம் ஓரளவு தமிழில் வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் எந்த அளவு மலையாளத்தில் வந்திருக்கின்றன?

நாம் கொள்முதலில் நியாயமாக இருக்கிறோம். விற்பனையில் அநியாயமாக இருக்கிறோம். அதற்குக் காரணங்கள் உண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது எளிது. மலையாளம் இலக்கணச் சுத்தமாகத் தெரியாமல் மலையாளம் படிக்க மட்டும் தெரிந்த ஒருவர் தமிழுக்கு மொழிபெயர்த்துவிட முடியும். பெரும்பாலும் இப்போது நடப்பது அதுதான்.

நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதிலும் நம்பகமான மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய பெயர்கள் மிகக் குறைவு. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிற பலதையும் கதைகள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாது. சுரா என்று ஒருவர் பஷீர் எழுத்துக்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். அந்த மொழிபெயர்ப்பைப் படிச்சீங்கன்னா தமிழில் ஒரு பத்தாந்தர எழுத்தாளனுக்குக் கீழதான் பஷீர வெப்பீங்க.

மலையாள இலக்கியம் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தில் மலையாள மொழியை மாற்றி அமைத்தது மூன்று பேர். மார்த்தாண்ட வர்மா, ராமராஜ பகதூர் என்ற நாவல்களை எல்லாம் எழுதிய சி.வி.ராமன்பிள்ளை முதலாமவர். இரண்டாவது வைக்கம் முகமது பஷீர். மலையாளத்துக்குள்ள ஒரு மலையாளத்தை உருவாக்கியவர் அவர். மூன்றாவது ஓ. வி. விஜயன். ஆனால் பஷீரை ஒரு கதைக்காரனாகக் காட்டுகிற மொழிபெயர்ப்புகள்தான் தமிழில் வந்திருக்கு. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகிற கவிதைகள் மாதிரியானவை ஏற்கனவே தமிழில் நிறைய இருக்கு. நம்மகிட்டக் குப்பை இருக்கு. அப்புறம் எதற்கு வெளியிலிருந்து காசு கொடுத்துக் குப்பையை வாங்கணும்?

இதில் மலையாளிங்க ரொம்பக் கவனமா இருக்காங்க. ரொம்ப முக்கியமான புத்தகமாத் தேர்ந்தெடுத்துப் பண்றாங்க. இன்றைக்குக் கொஞ்சம் நிலைமை மாறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு ரொம்பவும் குறைவுதான். எனக்குத் தெரிஞ்சு தமிழில் இருந்து ‘சித்திரப்பாவை’ என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஞானபீடப் பரிசு பெற்ற எல்லா நாவல்களையும் மலையாளத்தில் கொண்டுவரும் திட்டத்தில் டி. சி. புக்ஸ் அதை மொழிபெயர்த்தாங்க. அது ஒரு பதிப்பைத் தாண்டிப் போகவே இல்லை. ஏன்னா அதற்கு மிக மோசமான விமர்சனங்கள் வந்தன. இந்தப் புத்தகத்தினுடைய நூறு மடங்கு எடையுள்ள புத்தகங்கள் மலையாளத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணராயர் என்பவர் விமர்சனம் எழுதினார். அதனால் மொழிபெயர்ப்பு என்பது அங்கே தேர்வு சார்ந்தது. விற்பனை வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவே ஒரு புத்தகத்தை வாசகன் தலையில் திணிப்பது என்பது இலக்கிய சர்வாதிகாரம்தான்.

பிறந்ததில் இருந்து நாற்பது வருசங்களுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் வசித்த நீங்கள் தற்போது திருவனந்தபுரம் வாசியாக இருக்கிறீர்கள். இரண்டு நில வாழ்க்கை அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? பொருந்திப்போவது சுலபமாக இருக்கிறதா?

நான் இப்ப ரண்டும்கெட்டான் நிலைமையில் இருக்கிறேன். தமிழ்நாட்டை விட்டுப் போனா நான் மலையாள எழுத்தாளனாக ஆகிறேன். கேரளாவில் இருக்கும்போது தமிழ் எழுத்தாளன் ஆகிறேன். அந்த மாதிரியான ஒரு கட்டம் எனக்கு. அப்புறம் திருவனந்தபுரம் என்பது மலையாளக் கலாச்சாரத்தினுடைய பிடிவாதக் கூறுகள் உள்ள ஒரு இடம் கிடையாது. இது ஒரு தளர்வான தலைநகரம். இங்கே இருக்கும் கலாச்சாரக் கூறுகள் பலவும் தமிழைச் சார்ந்தவை. அதனால் எனக்குப் பெரிய வித்தியாசம் எல்லாம் தெரியவில்லை. பிறந்து நாற்பது வருசங்களுக்கு மேல் வாழ்ந்தது தமிழின் நீரும் நிலமும் சார்ந்த வாழ்க்கை. அது மாறிடாது. சாப்பாட்டு முறையில் சின்ன மாற்றங்கள் இருக்கலாமே தவிர வேற ஒன்னும் மாறல.

****

படி எடுப்பில் உதவி: த. இலட்சுமன் புகைப்படங்கள்: புதுவை இளவேனில்

நன்றி: காலச்சுவடு - இதழ் 108, டிசம்பர் 2008

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்