Sep 30, 2012

பூனைக்குட்டிகள்-கா.நா.சுப்ரமணியம்

க.நா.சு.100

பூனைக்குட்டிகள்

மேஜை மேல் படுத்துறங்கும் kanasu56
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
தடுக்கிறது 
நாற்காலியில்
படுத்துறங்கும்
கபில நிறக்குட்டி
என்னை உட்கார
அனுமதிக்க
மறுக்கிறது
அடுப்பிலே
பூனைக்குட்டி
உறங்குகிறது
சமையல்
இன்று நேரமாகும்
என்கிறாள்
என் மனைவி

 

கஞ்சிஞ்ஜங்கா

எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது
டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்று
கஞ்சிஞ்ஜிங்கா மலை மேலே பனி மூடியிருப்பதைப்
பார்த்திருக்கிறேன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது பார்க்கிறேன், வித்தியாசம் ஒன்றும்
தெரியவில்லை, என் கண் தான்
சற்று மங்கி விட்டது.

நன்றி:அரியவை

Sep 29, 2012

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு - அசோகமித்திரன்

க.நா.சு.100

புத்தக அறிமுகம்

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம் கி.அ.சச்சிதானந்தம்  வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை - 600017. விலை - ரூ75/-

மன்ச்சி மனுஷிக்கு ம -ரணமே சாட்சி’ என்று ஒரு பழமொழி தெலுங்கில் உண்டு. எல்லா நல்லவர்களுக்கும் அனாயாச மரணம் கிடைப்பதில்லை. ஒரு குழந்தையுடையது போன்ற மனது கொண்ட பாரதியார் கடைசி நாட்களில் ஒரு நொடிப்போதாவது ‘காலா, நீ உடனே வா’ என்று எண்ணியிருக்கக் கூடும். செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தால் அது மனைவி, குழந்தைகளை அனாதரவாகவிட்டுச் செல்ல மனமில்லாததால்தாka-na-su ன் இருக்கும்.

க.நா.சுப்பிரமணியனுக்கு அனாயாச மரணம் சாத்தியமாயிற்று. அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது என்று சில ஆண்டுகள் முன்புதான் தெரிய வந்தது. அவர் கண் மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர்த்தது இந்த நோயை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது. நோய் ஒப்புக்கொள்ள மறுத்த பலர் வாரக்கணக்கில் மருத்துவமனையில் சித்திரவதைக்குள்ளானதைப் பார்த்திருக்கிறேன். என் குடும்பத்திலேயே இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

’எழுதிக் கொண்டேயிருந்தவர்’ என்ற அடையாளம் அவருக்குப் பொருத்தமானதுதான். சுஜாதா கூட எழுதிக் கொண்டேயிருந்தார். பிரசுர சாத்தியமோ, வேறு எந்த வகை வெகுமானமோ இல்லை என்று தெரிந்துதான் க.நா.சு எழுதிக் கொண்டேயிருந்தார் என்று கூற வேண்டும்.

நான் அவரை 1966 முதற்கொண்டு அறிவேன். சென்னையிலும், டில்லியிலும் அவருடைய வீட்டுக்குப் பலமுறை போனதில் பல விஷயங்கள் கேட்காமலே தெரிந்தன. ஒன்று, தினமும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அவர் பத்து பக்கமாவது எழுதுவது. இரண்டாவது, அவருடைய பல ஆங்கிலக் கட்டுரைகளை சன்மானமே சாத்தியமில்லாத பத்திரிகைகளுக்கு எழுதியது. மூன்றாவது, அவருடைய பல படைப்புகள் திரும்பி வந்திருப்பது. நான்காவது, அவருடைய கையெழுத்துப் பிரதிகள் ஏராளமானவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. பல பகுதிகள் கொண்ட அவருடைய சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியை இலக்கியப் பத்திரிகை என்று அறியப்பட்டதொன்று தொலைத்துவிட்டதாகக் கூறியது. ஒரு சொல் வருத்தம் தெரிவிக்கவில்லை. அது போனது போனதுதான்.

கி.அ.சச்சிதானந்தம் எழுதிய ‘எழுதிக் கொண்டேயிருந்த க.நா.சுப்பிரமணியம்’ சில நல்ல பின்னிணைப்புகளைக் கொண்டிருக்கிறது. முக்கியமானது, க.நா.சு - செல்லப்பா விவாதம். ஆனால் அச்சிட்ட முறையில் அதன் முழுப்பயனும் பெற முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது.

ஆங்கில மொழியில் க.நா.சுப்பிரமணியம் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அநேகருடைய படைப்புகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் அமெரிக்கப் பதிப்பகம் ராண்டம் ஹவுஸ் நடத்திய ஒரு போட்டிக்காக ‘அவதூதர்’ நாவலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார். அவருடைய நாவல் பரிசு பெறவில்லை. ஆனால் சில மாற்றங்கள் செய்தால் பிரசுரம் செய்யச் சம்மதம் என்று ராண்டம் ஹவுஸ் கடிதம் எழுதியிருந்தது. (இதை நான் பார்த்தேன்). க.நா.சு முடியாது என்று எழுதியிருக்கிறார். இது போன்ற விஷயங்களில் இதுதான் சரி என்று கூற முடியாது. இந்த நாவல் தமிழிலும் மிகத் தாமதாகத்தான் வெளியாயிற்று. ‘பித்தப்பூ’ கற்பனை செய்யமுடியாத அச்சுப்பிழைகளுடன் வெளியாயிற்று. ராண்டம் ஹவுஸ் சில மாற்றங்கள் செய்தாலும் அச்சுப்பிழைகள் இல்லாமல் வெளியிட்டிருக்கும்.

சச்சிதானந்தம் அவரறிந்த க.நா.சுவை ஒரு சிறு விள்ளல்தான் இந்த நூலில் தந்திருக்கிறார். க.நா.சுவுக்கு எழுத்துத் துறைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் என்று கிடையாது. சென்னையில் எம்.கோவிந்தன் என்ற மலையாள இலக்கிய இலட்சியவாதி க.நா.சுவின் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவர் முயற்சியில் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர்கள் மாநாடு கேரளத்தில் நடந்தது. சண்முகசுந்தரம், மெளனி, சுந்தர ராமசாமி, சி.சு.செல்லப்பா போன்றோர் அகில இந்திய கவனம் பெற்றார்கள். அவ்வளவு மகத்தான படைப்பாளிகளை ஒரே இடத்தில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அதன்பின் நேரவேயில்லை.

க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும். பொதுவாகப் பத்து கதைகள் கொண்ட தொகுப்பு என்றால் அதில் ஐந்தாறுதான் தரமாக இருக்கும். க.நா.சு பிற மொழிகளில் கூடச் சிறப்பாக உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பார். அத்தொகுப்பு நூல்கள் இன்று கடைகளில் கிடைக்காது. தேசிய நூலகங்களில் இருக்கக்கூடும்.

கி.அ.சச்சிதானந்தன் நூலில் பல தகவல்கள் இருக்கின்றன. அந்த நூலுக்கான அளவில் உள்ளதைப் போல இன்னும் நிறையப் பதிவு செய்யப்படாமல் உள்ளன.

நன்றி: சொல்வனம்

Sep 28, 2012

என்னை பாதித்த புத்தகங்கள்’ -க.நா.சு

க.நா.சு 100

என்னை பாதித்த புத்தகங்கள்’ என்ற க.நா.சு எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

நான் தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்குகிறபோது Joyce-னுடைய Dubliners கதைகளை முன் மாதிரியாகக் கொண்டு நகராத, Emotionless கதைகளைத்தான் எழுத முயன்றேன். எனக்கு Stream of consciousness என்கிற கயிற்றரவு உத்தி அவ்வளவாகத் தமிழுக்கு ஏற்ற விஷயமாகப்படவில்லை; அதற்கு ஒரு வசன வார்த்தை வளம் வேண்டும்; தமிழில் அது இன்னும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறேன். புதுமைப்பித்தனின் கயிற்றரவு, நினைவுப்பாதை முதலிய சிறுகதைகளிலும், லா.ச.ராமாமிருதம் கொட்டுமேளம், பாற்கடல் போன்ற கதைகளிலும் கையாளுகின்ற அளவுக்குKA.-NA.-SU-Portrait-01 மேல் Stream of consciousness உத்தியைத் தமிழில் கையாள முடியாது என்றே நான் நினைக்கிறேன். சாதாரணமாக இந்த உத்திதான் Joyce-இன் சிறப்பு என்று சொல்லுவார்கள்.

பி.ஏ வகுப்பில் எனக்கு ஏதோ ஒரு பரிசு வந்தது. அதற்கு என் பேராசிரியர் Khadya ”என்னென்ன புஸ்தகங்கள் வேண்டும்?” என்று கேட்டார். நான் சற்றும் தயங்காமல் Thus spake Zarathustra - Nietzshe எழுதிய ஒன்று, Walt Whitman Leaves of Grass இரண்டும் என்று சொன்னேன். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்து நூல்கள். நீட்ஷே சர்வாதிகாரவாதி. இன்று அவர்தான் ஹிட்லருக்கு மூலகாரணம் என்று சொல்பவர்கள் உண்டு. Whitman ஜனநாயகவாதி. இருவரிடமும் எனக்கு ஈடுபாடிருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.

நீட்ஷேயின் கருத்துகள் மிகவும் புரட்சிகரமானவை. Beyond Good and Evil, AntiChrist, Thus spake Zarathustra போன்ற நூல்கள் ஐரோப்பிய சிந்தனைப் போக்கைக் கணிசமான அளவில் பாதித்தவை. ஜெர்மன் வசனத்தில் நீட்ஷேயின் போக்கு மிகவும் புரட்சிகரமானது. மிகவும் காவியமயமான சிந்தனைகளைக் காவிய நயமேயற்ற வார்த்தைகளில் சொல்லிவிடுகிற சாமர்த்தியம் நீட்ஷேயிடம் உண்டு. இதைக்கற்றுக்கொள்ள மிகவும் பாடுபட்டேன் என்றால் மிகையாகாது. கருத்திலும் நீட்ஷே, மிகவும் பிற்போக்கானது என்று கருதப்பட்ட மனுஸ்மிருதி சிந்தனைகளை ஆதரித்தார். விஞ்ஞான ரீதியில், கிறிஸ்துவ நரகம், ஸ்வர்க்கம் பற்றிய சிந்தனைகளையும் தலைகீழாகப் புரட்டியவர் அவர்.

தைரியமாகச் சிந்திக்க அறிந்து கொள்வதற்கு நீட்ஷேயை ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது அவசியம். அவர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல விஷயம். சிந்தனைத் தெளிவு, தீவிரம், அழுத்தம், அதைச் சொல்வதில் ஓர் உத்தி இவ்வளவும் நீட்ஷேயினால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். சமுதாய வாழ்விலே நாம் ஏற்றுக்கொள்கிற பல அடிப்படையான விஷயங்களை ஒன்றுமில்லை என்று ஆக்கியவர் நீட்ஷே.

அதே அளவில் நாம் நல்லது என்று நம்பியிருப்பதெல்லாம் கெட்டது அல்ல என்கிற சிந்தனையை ஐரோப்பாவிலே முதல் முதலாகத் தொடங்கித் தந்து, நல்லது தீயதைக் கடக்கும் ஒரு நியதியை உற்பத்தி செய்து தந்தவர் டாக்டர் ஸிக்மண்ட் ஃப்ராய்டு. அவர் சிந்தனைகள் காரணமாக குடும்ப உறவுகள் தளர்ந்தன. மனித வாழ்வின் அடிப்படை தனிப்பட்ட செக்ஸ் உணர்வுதான் என்று சொல்லி, கலை இலக்கியம் எல்லாவற்றிலும் புதுநோக்குகளைச் சாத்தியமாக்கியவர் Freud. இதைத்தவிர சற்றேறக்குறைய அதே சமயத்தில் நான் படித்த Jack Londonனின் Martin Eden என்கிற நாவலும் என்னை வெகுவாகப் பாதித்தது. இலக்கியகர்த்தாவாக வாழ விரும்பிய ஒருவன் எப்படிப்பட்ட சோதனைகளுக்குள்ளாவான் என்று Martin Eden-னில் Jack London விமர்சிக்கிறார். இதைத்தான் இலக்கிய கர்த்தாகளுக்கு மிகவும் அவசியமானதோர் நூலாக நினைக்கிறேன்.

இதற்கு முன் எனக்கு என்று, இந்தப் படிப்பெல்லாம் காரணமாக, ஒரு தனித்தன்மை ஏற்பட்டுவிடவே அதற்குப் பின் படித்த நூல்களில் பலவும் என்னை இந்த அளவுக்கு Jack London-இன் Martin Eden, James Joyce-ன் Dubliners, Ezra Pound-ன் விமர்சனங்கள், Fraud-ன் Psycho Analysis, Kipling-ன் Kim போலப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்வேன்.

படிப்பது முடிவில்லாத ஒரு காரியம். முடிவில்லாது செய்து கொண்டிருக்கிற இந்தக் காரியம் முடிவில்லாத பாதிப்புகளை நாம் அறிந்தும், அறியாமலும் நமக்குள் விளைவிக்கிறது. இலக்கியாசிரியன் ஒருவனுக்குத் தெரியாத அளவில் அவன் எழுத்தில் விமர்சகன் காணக் கூடிய அளவில் பாதிப்புகள் இருக்கலாம். இருக்க வேண்டும். இராமல் இராது. Thomas Mann, Romain Rolland, Antole Francis, Selma Lagerlof, Vemer Von Heivenstan, Knut Hamsun, Franz Khafka, William Saroyan, Maxim Gorky, Dostoevsky, Lady Muraaki இவர்களெல்லாம் நான் பின்னர் கண்டு கொண்ட நாவல் கதாசிரியர்கள்.

கவிகளில் டாண்டேயையும், ஆங்கிலக் கவிகளையும் தவிர மற்றவர்களைப் பின்னர்தான் கண்டு கொண்டேன் - Paul Valery, Rainer Maris Rilke, Lorca என்று பலரை இதே போல நாடகாசிரியர்களாக Benevente, Ibsen, Priendello இவர்களைக் கல்லூரி விட்டபிறகுதான் கண்டு கொண்டேன். இவர்களுடைய பாதிப்பையெல்லாம் தெரிந்து கொள்ளும் சக்தி என் தனித்தன்மைக்கு அதற்குள் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம். நான் படித்த முதல் தமிழ்ச்சிறுகதை பி.எஸ்.ராமையாவின் வார்ப்படம் என்பதாகும். அதிலே ஒரு உருவமும், கருத்தும் அமைந்திருக்கிறது என்றும்,. அது மாதிரித் தமிழ்க் கதைகள் என்னால் எழுத முடியும் என்று உணர்ந்து தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

புதுமைப்பித்தனின் கதைகளில் சிற்பியின் நரகத்தையும், மெளனியின் கதைகளில் காதல் சாலை என்பதையும் நான் முதன் முதலில் படித்தேன். பிச்சமூர்த்தியின் வானம்பாடி என்கிற கதையையும், தாய் என்கிற கதையையும் படித்தபோது இந்த மாதிரிக் கதைகள் நான் எழுதக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.அதேபோல் பெ.கோ.சுந்தர்ராஜனின் கதை செளந்தர்யமே சத்தியம் என்பதைப் படித்தபோது அது என்னைப் பாதித்தது - இப்படி எழுதக்கூடாது என்கிற அளவில். தியாகபூமி என்கிற நாவல் கல்கியினுடையது வெளிவந்தபோது இது மாதிரி நாவல் என்கிற பெயரில் எதுவும் எழுதிவிடக்கூடாது - கடவுள் காப்பாற்றுவாராக என்று தீர்மானித்துக் கொண்டேன்.

அதற்குப்பிறகு நாற்பதுகளில் காப்பாற்றுவதற்குக் கடவுளைக் கூப்பிட வேண்டிய சந்தர்ப்பங்கள் பலப்பல எழுந்து விட்டன. அவற்றை இங்கு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். தியாகபூமி முதல் அலைஓசை வரையில் கல்கி எழுத்து என்னை பாதிக்கிற எழுத்தாகவே இருந்தது என்று மட்டும் சொல்லுகிறேன். கல்கியின் எழுத்துகள் நல்ல நூல்கள் கெடுதி சக்தியின் எழுத்துக்கள் நல்ல நூல்கள் கெடுதி செய்யும் சக்தி வாய்ந்த நூல்கள் என்று ஆரம்பத்தில் சொன்னேனே அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம்

கி.அ.சச்சிதானந்தம் - வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை - 600017. விலை - ரூ75/-

நன்றி: சொல்வனம். ஓவியம்: ஆதிமூலம்

Sep 27, 2012

க.நா. சுப்ரமணியம்(1912-1988)

க.நா.சு 100

சமகால படைப்பாளிகள் மீது மிகக் கறாரான மதிப்பீடுகளை முன்வைத்த விமர்சகர். க.நா. சுப்ரமணியத்தை இலக்கியச் சிற்றிதழ்களில் இயங்கிய விமர்சகர்களுள் முன்னோடியாகக் குறிப்பிட வேண்டும்.

மணிக்கொடி இதழில் முன்னோடிகளைத் தொடர்ந்து இரண்டாம் தலைமுறை படைப்பாளியாகத் தன் படைப்புலக வாழ்வைத் துவங்கிய க.நா. சுப்ரமணியம் வாழ்வின் இறுதிவரைத் தொடர்ந்து இயங்கினார். இடையில் சிலகாலம் வாழ்விற்கான பொருளைத்தேட ஆங்கில இதழ்களில் எழுதினாலும் வாழ்வின் பிற்பகுதியில் தமிழில் தொடர்ந்து இயங்கினார். சிறுகதை, நாவல் என்னும் புனைகதையின் இரு வடிவங்களிலும் பங்களிப்பு செய்தாலும், நாவலில் அவர் நிகழ்த்திய சாதனைka-naa-su-1 குறிப்பிடத்தக்கது. அவருடைய பொய்த்தேவு வடிவச்சிறப்பு பெற்ற முதல் தமிழ் நாவலாக அமைகிறது. மயன் என்னும் புனைபெயரில் புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம் என்னும் இதழ்களையும் வெளிக்கொணர்ந்தார். இலக்கிய வடட்டம் இலக்கிய விமர்சனத்தை முன்னிலைப்படுத்திய இதழாக அமைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில்தான் க.நா. சுப்ரமணியம் விமர்சகராக இயங்கத் துவங்கினார். எனினும் 1948 தேனீ இதழில் ‘மௌனியின் மனக்கோலம்’ வெளியானபோது, மௌனியைக் குறித்து அவர் எழுதிய அறிமுக உரை அவருடைய எதிர்கால விமர்சனப் பயணத்தை அறிமுகம் செய்வதாக அமைந்துள்ளது. “மௌனியின் கதைகளில் எல்லாச் சிறுகதை நயங்களும் அமைந்துவிடுகின்றன. கதாபாத்திரங்கள் வேண்டிய அளவுக்கு உருவமாகி விடுகின்றன. பின்னணி சரியாக அமைந்து விடுகிறது. ஒரு மனோபாவம் பலமாக உருவம் பெற்றுவிடுகிறது. சிறுகதையில் வேறு என்ன வேண்டும்?” (சர்வதாரி ஆனி 15) க.நா. சுப்ரமணியம் தொடர்ந்து இலக்கியப்படைப்புகள் மீதான தன் கவனிப்பை இதுபோல்தான் பதிவு செய்துள்ளார். படைப்புடனான வாசக உறவில் விமர்சகனாக தான் குறிக்கிடாமல் தனக்குச் சிறப்பு என்று பட்டதைத் தொட்டுக் காட்டுவதையே தன் விமர்சனப் பாணியாகக் கொண்டுள்ளார்.

ஐம்பதுக்களில் வாசக எண்ணிக்கை இலக்கியத் தரத்தின் அடையாளமாக பொழுதுபோக்கு எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டது. கல்வி வட்டத்தினர் இலக்கியப் படைப்புகளின் உள்ளடக்கங்களைச் சமூகச் சிக்கல்கள் அடிப்படையில் தொகுத்து வகைசெய்து பொழுது போக்கு எழுத்தாளர்களைப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தினர். மார்க்சிய சார்பு கொண்ட விமர்சகர்கள் சமூக மாறுதலுக்கான இலக்கியத்தின் பங்களிப்பினை முன்னிலைப்படுத்தினர். இச்சூழலில் இலக்கியத்தரம் குறித்ததான தேடலை க.நா. சுப்ரமண்யம் இலக்காகக் கொண்டார்.

1955இல் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் சிறுகதையின் வளர்ச்சி குறித்ததான கட்டுரையை எழுதிய க.நா. சுப்ரமணியம் தொடர்ந்து விமர்சகராக இயங்கத் துவங்கினார். சமகாலத்தில் சி.சு. செல்லப்பாவும் தன் விமர்சன பயணத்தைத் துவங்கினார். இருவரும் துவக்கத்தில் இணைந்தே செயல்பட்டனர். ஆனால் சரஸ்வதி இதழிலேயே க.நா. சுப்ரமணியத்தின் முறையான விமர்சனப் பயணம் துவங்கிவிட்டது. என்றே கூறவேண்டும். ஆகஸ்டு 1958 சரஸ்வதி இதழில் அவர் எழுதிய ‘இலக்கிய விமர்சனம்’ விமர்சனம் குறித்ததான அவர் பார்வையை உணர்த்துவதாக அமைகிறது. “ஸிமீணீறீவீsனீ, ஸிஷீனீணீஸீtவீநீவீsனீ வரையில் பலப்பல வார்த்தைகள் இன்று நம்மிடையே அடிபடுகின்றன. (ஒரு தமிழ் விமர்சகர்?) விஹ்stவீநீவீsனீ என்பதைக்கூட ஒரு இலக்கிய ரீதியாகச் சொல்லிவிட்டார். இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக மேல்நாட்டு இலக்கிய விமர்சகர்கள் உபயோகப்படுத்துகிற வார்த்தைகள். அவற்றின் அர்த்தமே அப்படி ஒன்றும் பூரணமாகத் தெளிவான விஷயம் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். நாம் இந்த வார்த்தைகளை உபயோகிக்கும் போது எந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்துகிறோம் என்று நமக்கும் தெரிவதில்லை; நாம் எழுதுவது வாசிப்பவர்களுக்கும் தெரிவதில்லை என்றுதான் சொல்லவேண்டும்.” இறுதிவரை க.நா. சுப்ரமணியம் கோட்பாடு சார்ந்த விமர்சனம் மீது நம்பிக்கையற்றவராகவே இருந்தார். அவரைப் பொறுத்த வரையில் விமர்சகன் படைப்பிலிருந்து தான் அடைந்த அனுபவத்தை வாசகனோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். விமர்சகன் தன் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னிடம் இயல்பாக இருக்கும் ‘ருசி’யைத் தேர்ந்தெடுத்த இலக்கிய சிகரங்களை வாசிப்பதின் மூலம் வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து உலக இலக்கிய சிகரங்களை அறிமுகம் செய்து வந்தார். மார்ச் 1959 சரஸ்வதி இதழில் ‘பற்றி இலக்கியமும், இலக்கிய விமர்சனமும்’ கட்டுரையில் மரபிலக்கியம் தொடர்பான கல்விவட்ட அறிஞர்களின் நூல்களைக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். அவர்களைப் ‘பற்றி இலக்கியக்காரர்’ என பெயர்சூட்டி அழைத்தார். “முதல் நூலுக்கு முக்கியத்துவம் தந்து, இலக்கியக் கண்ணோடு அதைப் பார்ப்பது விமர்சனமுறை. முதல்நூலில் உள்ளதையெல்லாம் எடுத்துச் சொல்லி, அதில் இல்லாததையும் சேர்த்து என் கெட்டிக்காரத்தனத்தைப்பார் என்று இரண்டு வரிக் கவிதைக்கு இருபது பக்கம் வியாக்கியானம் எழுதுவதுதான் பற்றி இலக்கிய முறை”. தமிழ்க் கல்வி வட்டத்தில் தழைத்து வந்த இலக்கியக் கல்வியின் பலவீனத்தை க.நா. சுப்ரமணியம் அன்றே இனங்காட்டியுள்ளார்.

ஜனவரி 1959 சரஸ்வதி இதழில் தமிழ்க்கவிதை மரபை உலகக் கவிதை மரபோடு ஒப்பிட்டு, வசன கவிதையின் வருகையை வரவேற்றார். இக்கட்டுரைக்கு அவர்தந்த ‘புதுக்கவிதை’ என்னும் தலைப்பே பின்னால் யாப்பினைத் துறந்த கவிதை வடிவிற்குப் பெயராக நிலைபேறு கண்டது. சரஸ்வதி இதழிலேயே க.நா. சுப்ரமணியத்தின் விமர்சன ஆளுமை துவங்கிவிட்டது என்றே கூறவேண்டும். சரஸ்வதி மார்க்சிய சார்புநிலை கொண்ட இதழ் எனினும் தன் கவிதைகளை சரஸ்வதியில் வெளியிட அவர் தயங்கவில்லை. க.நா. சுப்ரமண்யம் எக்கோட்பாட்டையும் பொருட்படுத்தவில்லை. இலக்கியத்தை அவர் அதற்கும் அப்பாலானதாகக் கண்டார்.

க.நா. சுப்ரமணியம் மார்க்சிய சிந்தனைக்கு எதிரிடையானவராகத் தொடர்ந்து இனங்காணப்பட்டார். படைப்பாளிகளின் தத்துவ சார்பு நிலைகளை அவர் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கியதில்லை. ஆனால் குறிப்பிட்ட தத்துவம் பிரச்சாரமாக வெளிப்பட்டு, இலக்கியத்தரத்திற்கு எதிரிடையாக அமைவதையே கண்டனத்திற்குள்ளாக்கினார். மார்க்சியர்கள் அன்று நம்பிக்கை கொண்டிருந்த ‘சோசலிச எதார்த்தம்’ இலக்கியத்தைப் பிரச்சாரக் கருவியாகக் கீழிறக்கியது. மார்க்சியர்களுடனான மோதலின் துவக்கப்புள்ளியாக இந்து நாளிதழில் தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவலுக்கு அவர் எழுதிய மதிப்புரையைக் குறிப்பிடவேண்டும். ‘நாவலாக வேடமணிந்த கட்சியின் பிரச்சார ஏடாக’ அதனைச் சுட்டினார். 1956 டிசம்பர் சரஸ்வதி இதழில் தொ.மு.சி. ரகுநாதன் தன் எதிர்வினையைப் பதிவுசெய்தார். முத்துமோகன், கைலாசபதி போன்ற மார்க்சிய விமர்சகர்கள் தொடர்ந்து க.நா. சுப்ரமணியத்தைக் கடுமையான சொற்களில் தாக்கியுள்ளனர். கைலாசபதி அவர்மீது பெரும் அவதூறுகளையே நூலாக முன்வைத்துள்ளார். க.நா. சுப்ரமணியம் பொழுதுபோக்கு எழுத்துகளையும், பிரச்சார எழுத்துகளையும் இலக்கியமாக ஏற்கவில்லை. இலக்கிய வளர்ச்சிக்கெதிரான இடையூறுகளாக இனங்கண்டார்.

1959இல் எழுத்து இதழ் தோற்றம் கொண்ட போது க.நா. சுப்ரமணியத்தின் விமர்சன இயக்கம் தீவிரமடைந்தது. சி.சு. செல்லப்பாவைப் போல் மணிக்கொடியின் தொடர்ச்சி என்னும் நிலைபாட்டினை க.நா. சுப்ரமணியம் மேற்கொள்ளவில்லை. பி.எஸ். ராமையா, சிட்டி போன்றவர்களைச் ‘சந்தர்ப்ப விசேஷத்தால்’ மணிக்கொடியில் எழுத நேர்ந்தவர்களாகவே குறிப்பிட்டார். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி ஆகியவர்களையே மணிக்கொடியின் சாதனையாளர்களாக இனங்கண்டார். ந. சிதம்பர சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா ஆகியோரை மற்றொரு தளத்தில் ஏற்றுக்கொண்டார்.

க.நா. சுப்ரமணியம் ‘வாசக எண்ணிக்கை’ என்பதற்கெதிராக இலக்கியத்தரம் என்பதை முன்நிறுத்தினார். இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளாகதான் இனங்கண்டவற்றைத் தொடர்ந்து வாசகப் பார்வைக்குக் கொணர்ந்தார். தேர்ந்த சிறுகதை ஆசிரியர்களின் பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டார். எல்லா பட்டியலிலும் முன்னோடிகளின் பெயர்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தபோது, சமகாலப் படைப்பாளிகள் பெயர்கள் தொடர்ந்து இடம் பெறுவதில்லை. அதற்கானக் காரணங்களையும் அவர் முன்வைத்ததில்லை. குறிப்பிட்ட இலக்கியப் படைப்பினைக் குறித்து வேறான மதிப்பீடுகளுக்கும் இடமுண்டு என்பதை ஏற்றுக்கொண்ட க.நா. சுப்ரமணியம் விமர்சகனாகத் தன் மதிப்பீட்டை முன்வைப்பதாகக் கூறினார். தன்னுடைய விரிந்த வாசக அனுபவத்தின் அடிப்படையில் கூறுவதாகச் சொன்னார். மதிப்பீடுகள் பொதுவான தளத்தில் எடுக்கப்படுவதின் அவசியத்தை முன்நிறுத்தி ‘அலசல்’ விமர்சனத்தை சி.சு. செல்லப்பா முன்னிலை படுத்தினார். க.நா. சுப்ரமணியத்தின் எழுத்து இதழுடனான உறவு ஒரு முடிவிற்கு வந்தது.

1963இல் க.நா. சுப்ரமணியம் இலக்கிய வட்டம் இதழைத் தோற்றுவித்தார். ‘அலசல்’ விமர்சனத்தை இலக்கியவட்டம் தலையங்கங்கள் மூலமாகத் தொடர்ந்து கண்டனத்திற்குள்ளாக்கினார். அலசல் விமர்சனம் படைப்பை அல்ல விமர்சகனின் அறிவுக்கூர்மையையே வெளிப்படுத்துகிறது என்றார். “விமரிசனம் இலக்கிய ரஸனையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்; கவிதையைப் பற்றிச் சொல்வதைவிட கவிதையைப் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்” என்பதே அவர் நிலைபாடாக அமைந்தது. “விமரிசனத்தில் ஒரு நோக்குதான் உண்டு என்பதில்லை. பல தரப்பட்ட, பலவிதமான, அடிப்படைகளில் வித்தியாசப்பட்ட நோக்குகள் பலவும் உண்டு” என்பதை அழுத்தமாகத் தொடர்ந்து பதிவுசெய்து வந்த க.நா. சுப்ரமண்யம் இறுதிவரை தன் விமர்சனப் பாதையை விட்டு விலகவுமில்லை. தமிழில் எண்ணிக்கையில் அதிக இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியவராகக் க.நா. சுப்ரமணியத்தைச் சுட்டவேண்டும். விமரிசனக்கலை, படித்திருக்கிறீர்களா, உலகத்துச் சிறந்த நாவல்கள், முதல் ஐந்து தமிழ் நாவல்கள், இலக்கிய விசாரம், இந்திய இலக்கியம், சிறந்த பத்து இந்திய நாவல்கள் ஆகிய விமர்சன நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய நூற்றாண்டில் அவருடைய விமர்சனக் கட்டுரைகள் இரு தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டுள்ளன. ‘கு.பா.ரா.வின் சிறுகதைகள்’, ‘தமிழில் வசன நடை’ ஆகிய கட்டுரைகள் அவருடைய விமர்சன ஆளுமை வெளிப்பாட்டிற்கு எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன.

க.நா. சுப்ரமணியத்தை இலக்கிய சிபாரிசுக்காரர் எனக் குறிப்பிடுவதுண்டு. தமிழின் சிறந்த இலக்கியப்படைப்புகளை மீண்டும் மீண்டும் சொல்லி வாசகப்பார்வைக்குக் கொண்டுவந்த பெருமை அவருடையது. உலக இலக்கியத்தைத் தமிழிற்கு அறிமுகம் செய்து தமிழ் இலக்கியப் படைப்பை உலகதரத்தில் மதிப்பீடு செய்ய க.நா. சுப்ரமணியமே வழிவகுத்தார். இலக்கிய விமர்சனம் இலக்கியத்தில் ஒரு துறையாக நிலைபேறு அடைய அவருடைய விமர்சனக் கட்டுரைகள் காரணமாக அமைந்தன. தமிழ் விமர்சகர்களுள் முதன்மையானவராக க.நா. சுப்ரமணியத்தையே மதிப்பிடவேண்டும்.

கிருஷ்ணசாமி. ப, க.நா.சு. இலக்கியத்தடம், காவ்யா.

Sep 26, 2012

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம்-பழ. அதியமான்

க.நா.சு.100

க. நா. சுப்ரமண்யம் (1912- 1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்துகொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. என்றாலும் நாவல்களும் மொழிபெயர்ப்புகளும் எண்ணிக்கையில் முதலிரு இடங்களைப் பெற்றுவிடுகின்றன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் என்ற வரிசையில் எண்ணிக்கை வகையில் மற்ற படைப்புகள் அமையும். மொழி பெயர்ப்புகளில் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குமானவை அடங்கும். உலக இலக்கியம், இலக்கியாசிரியர்கள் பற்றி எழுதியவை விமர்சனக் கட்டுரைகளில் அடங்கும்.

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் எழுதிய நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் ஒருவனால் படித்துவிட முடியுமா என்று சொல்ல முடியவில்லை. இவற்றை ஒருசேரப் 5583098182_c953766a59_b பார்ப்பதுகூடச் சாத்தியமல்ல எனத் தோன்றுகிறது. சாகித்திய அகாதெமிக்காக 2000இல் இம்முயற்சியில் இறங்கிய தஞ்சை பிரகாஷ் வெற்றிபெற இயலவில்லை. இலக்கியச் சிந்தனையின் தூண்டுதலில் இம் முயற்சியில் சென்ற ஆண்டு ஈடுபட்ட கி. அ. சச்சிதானந் தம் ‘அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பதும் சுலபமான காரியம் அல்ல’ என்று சொல்லிவிட்டார். 76 ஆண்டுக் காலம் வாழ்ந்து, 60 ஆண்டுக் காலம் சளைக்காமல் எழுதிய க.நா.சுவின் நூல்களை எல்லாம் தொகுத்தால் 20,000 பக்கங்கள் வரலாம் என்பது அவரது யூகம். இது குறைவான மதிப்பீடு என்பது என் எண்ணம். க.நா.சுவின் நூல்கள் நாட்டுடைமையாகிவிட்டதால் உரிமை பற்றிக் கவலையின்றி எல்லாவற்றையும் தொகுத்து எவராவது வெளியிடலாம் - ‘காவ்ய’ப் பதிப்பாக அல்லாமல்! நூற்றாண்டை ஒட்டி வெளியிட்டால் பொருத்தமாகவும் இருக்கும்.

2012இல் நூற்றாண்டு காணும் தமிழ் இலக்கியவாதிகளுள் முக்கியமான நால்வர் க. நா. சுப்ரமண்யம், மு. வரதராசன், கோ. வன்மீகநாதன், ஜி.வரதராஜன் ஆகியோர். மொழிபெயர்ப்பிலும் பழந்தமிழ் சமய நூல்களுக்கு உரை எழுதுவதிலும் ஈடுபட்ட பின்னிருவரின் படைப்புகள் எண்ணிக்கையில் குறைவு. இலக்கியம் பற்றிய பார்வையில் ஏறக்குறைய எதிர் - துருவங்களாய்க் கருதத்தக்க முன்னிருவரும் படைப்பு எண்ணிக்கையில் இணைந்த இமயங்களாய் இருக்கின்றனர். க. நா. சு., மு. வ. இருவரின் படைப்புகள், அவர்கள் வயதினும் மிகுதி. 62 வயது வாழ்ந்த மு.வவின் நூல்கள் 85 என்கிறார்கள். அவை பட்டியலுக்குள் வந்துவிட்டன. க. நா. சு. 76 ஆண்டுகள் வாழ்ந்தார். ஏறக்குறைய 107 நூல்கள் அவரது முழுமைபெறாத பட்டியலில் சேர்ந்துள்ளன. ஆறு மாத காலத்தில் கிடைத்த நேரத்தில் தேடியதில் கிடைத்ததன் இருப்புக் கணக்கு இவை.

ஒரு படைப்பாளியைப் பற்றி மதிப்பிட (சாதகமாகவோ பாதகமாகவோ) முதல் ஆதாரமாக இருப்பவை அவரது படைப்புகள். அவையே முழுமையாகவும் ஒழுங்காகவும் கிடைக்காதபோது அவரைப் பற்றிச் சரியான ஆய்வுகள் உருவாகவும் விவாதம் மேலெழும்பவும் வாய்ப்புகள் இல்லை. சமகாலப் பார்வை சார்ந்த அரசியல், தனிப்பட்ட அன்பு அல்லது விரோதம், மதிப்பு அல்லது பொறாமை கலந்த மதிப்பீடுகளும் வதந்திகளும் தொடர்ந்து பரவும் அது. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவும் தொற்றுநோய். வாசகன் சுயமாகப் படித்து அவனாக உருவாக்கிக்கொள்ளும் கருத்தும் மதிப்பீடும்தான் அவனுக்குள் இறங்கிச் செரிக்கும். மற்றவை என்ன இருந்தாலும் அன்னியப் பொருள்கள்தாம். அவற்றை உடம்பு ஒரு கட்டத்தில் வெளியேற்றி விடும்.

படைப்புகள் பொதுவெளியில் இல்லாததினால், அவற்றைப் பற்றிய சில தகவல்களை வைத்திருப்பவர்கள்கூட ஆய்வாளர்களாக மகுடம் சூட்டிக்கொண்டு திரிகிறார்கள். தகவல்கள் ஆய்வுகள் அல்ல என்ற ஆய்வுலகின் பாலபாடத்தைத்தான் தமிழ்ச் சமூகத்தில் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது கேவலம். ஒரு மொழியின், இலக்கியத்தின் ஒரு கூறுமீது வெளிச்சம் பாய்ச்சிய படைப்பாளிக்கு அவனது சமூகத்தின் பின்தேவைக்கான முன்தயாரிப்பு அவனது நூற்பட்டியல். இங்கே க. நா. சு. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக் குவித்திருக்கிறார். அவரது கருத்துகளைக் காலம் இன்னும் பழசாக்கிக் குப்பைக்குத் தள்ளிவிடவில்லை. அப்படியே தள்ளினாலும் அவரது மொழிபெயர்ப்புகளும் விமர்சனங்களும் உரமாகும் குப்பைகளாகவே இருக்கும்.

இந்தச் சூழலில் க.நா.சு. பற்றிய ஆய்வுக்கான முன்தயாரிப்பாக அவரது நூற்பட்டியலை, முழுக்குறிப்புகளுடன் ஆயத்தப்படுத்த விரும்பினேன். அப்பணி முடியவில்லை. இந்நூற்றாண்டில் முடியலாம். அதற்கு முன்னால் அப்பட்டியலை வாசகர்களின் கவனத்துக்கு முழுமைப்படுத்தும் நோக்கத்தில் சில சாதாரண விவரங்களுடன் தர விரும்பியதன் விளைவு இக்கட்டுரை.

பத்திரிகை எழுத்து

மணிக்கொடி, சூறாவளி, சந்திரோதயம், சரஸ்வதி, தேனி, இலக்கியவட்டம், எழுத்து இறுதியாக முன்றில் போன்ற இதழ்களுடன் தொடர்புகொண்டும் நடத்தியும் இருந்த க. நா. சுப்ரமண்யத்தின் படைப்புகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னரே நூல்களாகியுள்ளன. ‘பெரிய மனிதன்’ சுதேசமித்திரனில் வந்தது. ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். ‘நளினி’ (1959) சந்திரோதயத்தில் (1945) தொடர்கதையாக சமூகச் சித்திரம் என்ற தலைப்பில் பிரசுரமானது. முதலில் எழுதிய நாவலான ‘சர்மாவின் உயில்’ சுதேசமித்திரன் (1946) வாரப்பதிப்பில் தொடராக வந்தது. சமூகச் சித்திரம், நல்லவர், ஆட்கொல்லி ஆகியவை வானொலியில் ஒலிபரப்பானவை. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் இலக்கிய வட்டத்தில் பிரசுரமான கட்டுரைகள்.

க.நா.சுவின் சில நாவல்கள் முதலில் வானொலியில் ஒலிபரப்பான தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. க. நா. சு. போன்றவர்களின் ஆழமான எழுத்துகள் வானொலி போன்ற திருப்பிக் கேட்க, திருப்பிப் பார்க்க வாய்ப்பற்ற ஊடகத்தில் வெளிவரும்போது படைப்பாளனின் உணர்வு எந்த அளவுக்கு வாசக மனத்துக்குள் போய் இறங்கும் என்ற சந்தேகம் யாருக்கும் வரக்கூடியதே. வானொலி வெளிப்பாடு கணத்தில் தோன்றிக் கணத்தில் மறையும் ஒலிக்கீற்று. நேயனின் மனத்தில் ஊடுருவிப் பாய அது மின்னலைப் போல இருக்க வேண்டும். க.நா.சுவின் எழுத்துகள் மின்னல் அல்ல. மீண்டும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய, நிதானமாகப் படித்தறிய வேண்டிய, சராசரி வாசகனின் புரிதலுக்கு மீறிய மூடுண்ட எழுத்துகள். இவ்வகை எழுத்துகள் இத்தன்மை உடைய ஊடகம் மூலம் எங்ஙனம் பரவ முடியும் என்று குழம்பி நின்றேன். வானொலியில் ஒலிபரப்பான நாவல்களுள் ஒன்றான ஆட்கொல்லி முன்னுரையில் என் குழப்பத்தை முன்னுணர்ந்தவர் போலக் க. நா. சு. விவரிக்கிறார்.

“ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் [டி. என். விசுவநாதன்] கேட்ட போது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலைச் சுலபமானதான, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாராவாரம் பின்பற்றக் கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலம் கனமான கருத்துள்ள ஆழ்ந்துள்ள, கவனிக்க வேண்டிய, ஊம் கொட்டாமல் நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும், சமூகச் சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன்.”

தொடர்ந்து வானொலியில் க.நா.சுவின் நாவல்கள் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை. எப்படி ஆகும்?

நாவல் எண்ணிக்கை

சமூகச் சித்திரம் தொடங்கித் தந்தையும் மகளும் உள்ளிட்டு 17 நாவல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘போன்ற 20 நாவல்கள்’ என்று க. நா. சுவின் நாவல்களின் பட்டியலைத் தருகிறார் தஞ்சை பிரகாஷ், சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுதிய நூலில். இவை தவிர அச்சில் வராமல், உள்ள நாவல்கள் எனத் திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற 15க்கும் மேற்பட்டவை கையெழுத்துப் பிரதிகளாக உள்ளனவாம். ஆக மொத்தம் 35 நாவல்கள் தேறுகின்றன. இவை நாவல்கள் மட்டும். பிரசுரமானவை, பிரசுரமாகாதவை என்ற வகையில் அடங்கும் இவை மட்டுமல்ல க.நா.சு. எழுதியவை. அழிந்துபோனவை -மன்னிக்கவும் - கிழிந்துபோனவை என்ற ஒருவகையையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது.

1949ஆம் ஆண்டு பேரன்பு என்னும் ஒரு நாடகக் காப்பியத்தைத் திருப்தி தராதபோது க.நா.சுவே om033 கிழித்து எறிந்திருக்கிறார் என்று பிரகாஷ் குறிப்பிடுகிறார் (க.நா.சுப்ரமண்யம், ப. 53).

க.நா.சு. இலக்கியத்தடம் (1991) நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நேர் காணலில் க.நா.சு. (1984) சொல்வதை இவ்விடத்தில் பார்க்கலாம்:

“ஏழுபேர் (நாவல்) உங்கள் [வாசகர்] கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை. புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துவிட்டு ஊருக்குப் போயிருந்தேன். வீட்டுக்காரன் வாடகை பாக்கி என்று எல்லாப் புத்தகங்களையும் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டான்.”

க. நா. சு. குறிப்பிடும் ஏழுபேர் நாவல் வெளிவந்ததோடு அவரது மூன்று நாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. எது எப்படியோ வீட்டுக்காரனுக்கு வாடகை பாக்கி வைத்து அவஸ்தைப்பட்டிருப்பார் என்பதும் அது புத்தகத்தோடு சம்பந்தப்பட்டது என்பதும் விளங்குகிறது.

க.நா.சுவின் மொத்த நாவல் எண்ணிக்கை 35 தானா என்பது தெரியவில்லை. தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) நூல், பசி, பொய்த்தேவு, ஒரு நாள், அசுரகணம் ஆகிய நான்கு நாவல்களை மட்டுமே குறிப்பிடுகின்றது. “அவரது [க.நா.சுவின்] நாவல்கள் புத்தகமாக வந்திருப்பவை பன்னிரெண்டு. மூன்று நான்கு நாவல்கள் கைப்பிரதிகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன்” - இது சி. சு. செல்லப்பா (எழுத்து, ஜனவரி 1966) குறிப்பிடுவது.

ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும்தான் க. நா. சு. எழுதிய நாவல் எண்ணிக்கை தெரியவில்லை என்று நினைக்க வேண்டாம். ஆசிரியரான க.நா.சுவுக்கும் அது குழப்பம்தான். ஒரு நாள் முன்னுரையில் தயக்கத்துடன் தெரிவிக்கும் வாசகம் இது:

“ஒரு நாள் என்கிற இந்த நாவல் நான் எழுதிய நாவல்களில் ஒன்பதாவது என்று எண்ணுகிறேன்.” ‘எதையும் சந்தேகப்படு’ என்று மார்க்ஸ் சொன்னதைத் தன் நாவல் விஷயத்திலும் கடைபிடிக்கும் க.நா.சுவைப் போய் வலதுசாரி என்று சொல்கிறார்கள்!

எழுதுவதில் சளைக்காதவரான க. நா. சு. தனக்குத் திருப்தி வர அசுர கணம் (1959) நாவலை நான்கு தடவைகள் எழுதியிருக்கிறார். “ஒரு பதின் மூன்று வருஷங்களுக்கும் அதிகமாக மனசில் ஊறிக்கிடந்த விஷயம் இது. பூரணமான உருத் தர நான் இதை நான்கு தடவைகள் எழுத வேண்டியதாக இருந்தது” (அசுரகணம், முன்னுரை). அசுர முயற்சி இன்றி சில நாவல்கள் உடனேயும் உருவாகியிருக்கின்றன. “இது [சர்மாவின் உயில்] என்னுடைய முதல் நாவல். 1938இல் சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி மூலபாடத்தை 15 நாட்களிலும், இந்த உருவத்தில் 21 நாட்களிலும் எழுதி முடித்தேன்” (சர்மாவின் உயில் முன்னுரை). இதன் முதல் பதிப்பு ஜனவரி 1948இல் கலைமகள் காரியாலயம் மூலம் வெளிவந்தது. முதல் நாவல், எழுதிப் பத்தாண்டுகள் கழித்துத் தான் வந்திருக்கிறது. உயிலை எழுதுவது சிரமமல்ல, நடைமுறைப்படுத்துவது கடினம் என்பது உண்மைதானே.

இன்னொரு நாவலையும் இப்படிப் பலமுறை பல்லாண்டுகள் க.நா.சு. முயன்று முடித்திருக்கிறார். அது பித்தப் பூ. அதுதான் அவரது கடைசி நாவல்.

“பைத்தியத்தின் காரணங்கள்- அது தேகம் காரணமாக ஏற்படுகிறதா, மனம் காரணமாக ஏற்படுகிறதா, இரண்டிற்கும் ஏற்படுகின்ற அதிர்ச்சியினால் உண்டாகிறதா என்றெல்லாம் கண்டுகொண்டு கூறும் அளவில் இந்தக் காலத்தைய மனோதத்துவ அறிவு வளர்ந்துவிட்டதாய் நினைக்கிற மேல்நாட்டு மனோதத்துவ சாஸ்திரமும் ஓரளவிற்கு அசட்டுத்தனம்தான் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்லும் பித்தப் பூ என்ற தலைப்பைக் கொண்ட நாவல் ஒன்று எழுத வேண்டுமென்று 1959இல் எண்ணினேன். மூன்றுதரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது செய்திருப்பது நாலாவது முயற்சி” [பித்தப்பூ (1989) முன்னுரை]. முடிவாக வெளிவந்த நான்காவது முயற்சியைப் பற்றிய அபிப்பிராயத்தைக் க. நா. சு. தெரிவிக்காததைக் கவனியுங்கள். எதையும் ஒன்றுக்கு நாலுதரம் செய்வதுதான் க.நா.சுவின் நாவல் பழக்கம்போலும்.

முதலும் முடிவும்

க. நா. சுவின் முதல் நாவல் பசி என்கிறது காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்த பொய்த்தேவு நாவலின் பின்னட்டைக் குறிப்பு. சென்ற பத்தியில் முதல் நாவல் சர்மாவின் உயில் என்று க.நா.சு. கூறுவதாக எழுதியிருந்தீர்களே என்று பார்க்கிறீர்களா! பொறுங்கள்.

சர்மாவின் உயில் (1948) நாவலின் முன்னுரையில் க. நா. சு. சொல்வது பின்வருவது. “ஜனவரி 1938இல் சேலத்தில் ஒரு மாசம் தங்கியிருக்க நேர்ந்தபோது இதை எழுதினேன். சர்மாவின் உயில் என்னுடைய முதல் நாவல் . . . இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அதை ஆதரவுடன் புஸ்தக உருவில் வெளிக்கொணருகிற கலைமகள் காரியாலயத்திற்கு நான் பெரிதும் கடமைப்பட்டவனாகிறேன். இது 1946இல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் தொடர்ச்சியாக வெளியாயிற்று.”

ஆக சர்மாவின் உயில் 1938இல் எழுதப்பட்டு, 1946இல் பத்திரிகையில் வெளியாகி, 1948இல் நூலாகியிருக்கிறது. ஆனால் 1938க்குப் பிறகு எழுதப்பட்ட பசி, 1943இல் வெளி வந்துவிட்டது. எனவே முதலில் எழுதப்பட்ட நாவல் சர்மாவின் உயில் என்றும் முதலில் வெளியான நாவல் பசி என்றும் சொல்லலாம்.

ஒரு நாவல் எழுதப்பட்டுப் பத்தாண்டுகள் கழித்து வெளிவருகின்றதா? ஒரு நூல் வெளியீட்டுக்கு இவ்வளவு காலம் எடுத்துக்கொள்வது இன்றைய பதிப்புச் சூழலில் ஆச்சரியமாகத் தோன்றும். 1940, 50களில் நிலைமை அப்படித்தான் இருந்தது. 1987 அக்டோபரில் வெளியான க. நா. சுவின் இன்னொரு நூலான ஐரோப்பியச் சிறுகதைகளின் வெளியீட்டுத் தாமதத்தை ஒப்பிட இந்தப் பத்து வருடம் ஒன்றுமேயில்லை.

“1942 வாக்கில் அல்லயன்ஸ் குப்புசாமி அய்யரிடம் கொடுத்த தொகுப்பு. 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 1987இல் நூலாக வடிவம் பெறுகிறது. கதைகள் இந்த அரை நூற்றாண்டில் பழசாகிப் போய்விடவில்லை” (ஐரோப்பியச் சிறுகதைகள் (1987), முன்னுரை).

குப்புசாமி ஐயரிடம் கொடுத்த பிரதியை அவர் பேரன் சீனிவாசன் வந்து நூலாக்குகிறார். தாமதம் எனக்கு அதிர்ச்சி தரவில்லை. பிரதியைப் பத்திரமாக வைத்திருந்தது தான் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

க. நா. சுவின் முதலில் வெளிவந்த நாவல் பசியாக இருக்கலாம். ஆனால் முதலில் வெளிவந்த நூல் இவ்வாண்டு 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தாகூரின் வரலாறு. தாகூர் காலமானதை ஒட்டி அல்லயன்ஸ் வெளியிட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரின் முகவுரையுடன் கூடிய நூல் கவி ரவீந்திரநாத தாகுர் (1941). க.நா.சுவின் கடைசி நூல் கலைஞன் வெளியிட்ட மனித சிந்தனை வளமாக (1988) இருக்கலாம். கடைசியாக அவர் முன்னுரை எழுதியது வேள் பதிப்பகம் வெளியிட்ட கலை நுட்பங்கள். 16 டிசம்பர் 1988இல் மறைந்த அவர் அந்த முன்னுரையை 4 டிசம்பர் 1988இல் எழுதியுள்ளார்.

அஞ்சல் வழி நாவல்

நடுத்தெரு என்ற நாவலை க. நா. சு. எழுதியது புதுமுறையில். தான் நடத்திய இலக்கிய வட்டம் இதழில் ஒரு தொடராக அதை எழுதாமல், ஒவ்வொரு இதழுடனும் தனித்தனியாக எட்டு, எட்டு பக்கங்களாகத் தொடச்சியாக சந்தாதாரர்களுக்கு நாவலை எழுதி அனுப்பியுள்ளார். இலவச இணைப்பாக அஞ்சல் வழியில் நாவல்!

“இலக்கிய வட்டத்தின் ஒவ்வொரு இதழுடனும் எட்டுப் பக்கங்கள் நடுத்தெரு என்கிற நாவலின் பகுதியும் தரப்பட்டுவருகிறது என்று வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இந்தப் பகுதிகளைச் சேகரித்து வைத்துக்கொள்வதற்கு ஒரு யீஷீறீபீமீக்ஷீ தயாராகிக்கொண்டிருக்கிறது. அது 17 ஜனவரி 1964 இதழுடன் எல்லா சந்தாதாரர்களுக்கும் அனுப்பித் தரப்படும். நாவல் முடிந்த பின், கதையை பைண்டு செய்துகொள்ள புஸ்தக ஜாக்கெட் ஒன்றும் அச்சிட்டுத் தரப்படும்” (இலக்கிய வட்டம், 20 டிசம்பர் 1963).

பைண்டுசெய்யப்பட்ட புத்தகத்தை வைத்துப் படிக்கச் சிக்குப்பலகையும் படித்த பின் பாதுகாத்துவைக்க அலமாரியும் அனுப்புவது பற்றிய அறிவிப்பு ஏதும் தொடர்ந்து வந்த இலக்கிய வட்டம் இதழ்களில் கிடைக்கவில்லை.

நாவல் தொகுப்பு

சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடும் மரபு இருக்கிறது. தமிழில் நாவல்களைத் தொகுத்து முதலில் வெளியிட்டவர் அநேகமாக க.நா.சு.வாகவே இருக்கலாம். அவரது மூன்று நாவல்கள் (1985) (ஏழு பேர், பசி, அசுரகணம்), நான்கு நாவல்கள் (1985) (நளினி, வாழ்ந்தவர் கெட்டால், ஆட்கொல்லி, பெரிய மனிதன்) என்ற நூல்கள் இவ்வகையின.

சிறுகதைத் தொகுப்புகள்

தெய்வ ஜனனம், அழகி, மணிக் கூண்டு, ஆடரங்கு, க. நா. சு. சிறு கதைத் தொகுப்பு மி, மிமி, மிமிமி. ஆகியவை சிறுகதைத் தொகுதிகள். தினமணி, சுதேசமித்திரன், தினமணி கதிர் ஆகியவற்றில் வந்த முறையே பஸ், பயணம், பொய்க்கதைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை என்று பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். ஒரு கதாசிரியனுக்குச் சிறந்த கதைகள் பத்து தேறினாலே போதும் என்று சொன்ன க. நா. சுவின் கதைகள் எண்ணிக்கை நூறு இருக்கலாம்.

நவீனத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட புதுமைப்பித்தனும் வடிவ நேர்த்தியில் தேர்ந்துவிட்ட கு. ப. ராவும் மனவுலகத்தை வெளிப்படுத்துவதில் முன்னேறிக்கொண்டிருந்த மௌனியும் புழங்கிக்கொண்டிருந்த வெளியில் அதைக் கண்டுணரும் விமர்சன ஆற்றல் பெற்றிருந்த க. நா. சுவால் அவர்களோடு ஒப்பிடப் படைப்பாற்றலில் குறைந்திருந்தது வருந்த வேண்டிய விஷயம் அல்ல. பெரும்பான்மையோர் அதைக் காணவே முடியாது இருந்தபோது க. நா. சு. அதைக் கண்டதும் உணர்ந்ததும் வெளிப்படுத்தியதும் இலக்கியப் பேராற்றல்தான்.

மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள்

தமிழ், ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்விடீஷ் மொழிகளும் க.நா.சுவுக்குத் தெரியும் என்று சொல்வது ஐதீகம். மொழிபெயர்க்கும் அளவுக்கு அம்மொழிகளில் அவருக்குப் பரிச்சயம் கிடையாது என்று பிரமிள் எழுதியுள்ளார். ஆங்கிலம் வழியாகவே அவரது மொழிபெயர்ப்புகள் அமைந்தன என்றாலும் அதில் ஒன்றும் பாதகமில்லை.

நோபல் பரிசு பெற்ற நூல்களின் மொழிபெயர்ப்புகள்; ஐரோப்பிய, ஜெர்மானிய, அமெரிக்க, உலகச் சிறுகதைகள்; ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் கிரேன், ஜாக் லண்டன், இப்சன் போன்ற தனிப்பட்ட எழுத்தாளர் படைப்புகள்; உலகத் தத்துவச் சிந்தனையாளர்கள்; உலகின் சிறந்த நாவலாசிரியர்கள்; உலகின் சிறந்த நாவல்கள்; உலகத்துச் சிறந்த நாடகங்கள்; உலக இலக்கியம் என்ற முறையில் க. நா. சு. மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்தலாம்.

க.நா.சுவின் மொழிபெயர்ப்புகள் விதவிதமான முறையில் நூல்களாகியுள்ளன. இவற்றில் சீர்மை இல்லை. உலகத்துச் சிறந்த நாவல்கள் என்ற பெயரில் இரண்டு நூல்கள் இருக்கும். ஒன்றில் 48 நூல்களின் சுருக்கங்கள்; மற்றொன்றில் 15 நூல்களின் சுருக்கங்கள். இதில்கூடப் பெரியது; சிறியது என்ற சீர்மை இருக்கிறது. ஒரு நூலின் கட்டுரைகள் இன்னொன்றிலும் இருக்கும். ஒரு நூல் மறுபதிப்பாகும்போது வேறு பெயரில் ஆகும். முழுதாகவும் மறுபதிப்பு ஆகாது. சில கட்டுரைகள் காரணமில்லாமல் காணாமல் போயிருக்கும். க. நா. சுவின் நூற்றாண்டிலாவது யாராவது இதை ஒழுங்குபடுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மொழிபெயர்ப்புகள்தாம் க.நா.சுவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகும்.

மூலமொழியில் அல்லது ஆங்கிலத்தில் இக்கதைகளையும் படைப்பாளர்களையும் ஒருமுறையாவது படித்தவர்களால்தாம் க. நா. சுவைப் புரிந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. க. நா. சுவின் விமர்சனங்களும் அப்படித்தான். அறிமுகம் செய்வதாக நினைத்து இவற்றை எழுதினாலும் அவை எளிமையாக இருக்கவில்லை. அவரது பரந்த படிப் பின் காரணமாக ஆழமான விமர்சனமாக அவை தாமாகவே மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது.

கு. அழகிரிசாமியைக் குறைவாகப் படித்திருந்தபோது க. நா. சு. எனக்குச் சாதாரணமாகத்தான் பட்டார். அழகிரிசாமியை முழுதாகப் படித்த பிறகு க. நா. சுவின் அழகிரிசாமி பற்றிய மதிப்பீடு எவ்வளவு ஆழமானது என்று புரிந்தது. அழகிரிசாமி தன் கதைகளை அடக்கமான தொனியில் எழுதுகிறார் என்பது க. நா. சுவின் சாதகமான, நுட்பமான விமர்சனங்களுள் ஒன்று. அதுவே அவரது கதைகளில் ஆதாரம் என்பதை மிகச் சில கதைகளிலிருந்தே க. நா. சு. கண்டுகொண்டுவிட்டார். அதுதான் க. நா. சுவின் இலக்கிய நுட்பம். க.நா.சுவின் இலக்கிய நம்பிக்கைகளுள் ஒன்று ‘தாழ்ந்த சுருதியில் பேசுவது’ என்பது.

அதேபோல உ. வே. சாமிநாதையரின் எழுத்து பற்றிய பார்வையும். “தமிழ்நாட்டில் 1789 முதல் 1930 வரை வாழ்ந்த ஒரு ஐந்தாறு தலை முறைகளின் வாழ்க்கை வளத்தை . . . நமக்கு ஓரளவுக்குக் காட்டியிருக்கிறார் சாமிநாதையர்” என்று ஓரிடத்தில் க. நா. சு. எழுதுகிறார் (விமர்சனக் கலை, ப.106). இதைத்தான் சாமி நாதையரின் எழுத்தில் பழங்காலம் ஜ் சமகாலம் குறித்து முறையே பெரு மிதமும் வருத்தமும் இழையோடிக்கொண்டிருக்கும் என்று ஒரு கூடுதல் அடி எடுத்து ஆ. இரா. வேங்கடா சலபதி பேசுகிறார். பொ. வேல்சாமி உள்ளிட்டோர் வெவ்வேறு குரல்களில், முறைகளில் பெருமாள்முருகன் தொகுத்த உ. வே. சா.: பன்முக ஆளுமையின் பேருருவம் (2005) நூலில் இக்கருத்தையே பேசி உறுதி செய்கிறார்கள். க.நா.சுவின் கருத்தை நீங்கள் மறுக்கலாம். ஆனால் அது ஏதோ ஒரு அடிப்படையிலானது என்பதும் பரந்த படிப்பின் சாரம் அவ்வடிப்படையில் இறங்கியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

க. நா. சுவின் ஆங்கில நூல்கள்

“க. நா. சுவின் சொந்த நூல்கள் 10 (ஆங்கிலத்தில்)”. க. நா. சுவின் நூல்களைப் பட்டியலிட்ட பிரகாஷ் இப்படி குறிப்பிடுகிறார். இந்த வரியின் நேர்ப்பொருள் புரியவில்லை எனினும் 10 ஆங்கில நூல்களை எழுதியுள்ளார் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார் என ஏகதேசமாகக் கொள்ளலாம். அவை பற்றிய விவரங்களை அவர் தரவில்லை. “ஆங்கில மொழி நூல் ஒன்று! காஸ்மா பாலிட்டன் கிளப்” என்று ஒரு வரியும் இதே பட்டியலில் வேறொரு இடத்தில் வருகிறது. அதுவும் புரியவில்லை. சா.கந்தசாமியின் சூர்யவம்சம், நீல. பத்மநாபனின் தலைமுறைகள் ஆகிய நாவல்களைக் க.நா.சு. மொழி பெயர்த்திருக்கிறார். ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரத்திரத்தையும் அவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வாழ்வின் இறுதியில் வருகைதரு பேராசிரியராக இருந்த காலத்தில் செய்த பாரதியின் காட்சி மொழிபெயர்ப்பையும் ஆங்கில நூலாகக் கொண்டால் மொத்தம் நான்கு ஆங்கில நூல்களே பார்வைக்குக் கிடைத்தன. சமணப் பின்புலத்தில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் விளக்கும் ஜிலீவீக்ஷீuஸ்ணீறீறீஸ்ணீக்ஷீ ணீஸீபீ பிவீs ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ (1987) என்ற நூல் பாரதிய ஞான பீட வெளியீடாகத் தில்லியில் வெளிவந்தது. வ. ஐ. சுப்பிரமணியத்தின் அறிமுகத்துடன் க. நா. சுவின் நீண்ட முன்னுரையும் உண்டு. இந் நூலில் ஏறக்குறைய 48 அதிகாரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் நீதி நூல், அது இலக்கியமல்ல என்று ஐம்பதுகளில் எழுதியவர் க.நா.சு. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை ஜிலீமீ கிஸீளீறீமீt ஷிtஷீக்ஷீஹ் (1977) என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன்னரே மொழிபெயர்த்திருந்தார். தில்லி, கிரீணீனீ றிக்ஷீணீளீணீsலீணீஸீ வெளியீடான இது கதைசார்ந்த உரைநடை மொழிபெயர்ப்புதான். தமிழ்ப் பின்புலமுள்ள இவ்விரண்டு இலக்கிய நூல்கள் க. நா. சுவிடமிருந்து உருவானது ஆச்சர்யமல்ல. நீரத் சி. சௌத்ரியின் முன்னுரையுடன் மேக்மில்லன் வழியாக வெளிவந்த நூல் க. நா.சு. எழுதிய ஜிலீமீ சிணீtலீஷீறீவீநீ சிஷீனீனீuஸீவீtஹ் வீஸீ மிஸீபீவீணீ (1970). இந்தியாவில் கத்தோலிக்கச் சமூகம் பற்றிக் க. நா. சு. எழுதியிருப்பது நிச்சயம் புதிதாகத் தெரியவரும்போது ஆச்சர்யம் தரும்.

“பாரதியின் காட்சிகள் (ஒரு வசன காவியம். பாரதியாரின் கையெழுத்திலேயே முழுக்க முழுக்க ஆப்செட் முறையில் அச்சடித்து அது புதுக் கவிதையோ வசன கவிதையோ அல்ல என்று நிரூபித்து க. நா. சு. பதிப்பித்த ஆய்வுக்கட்டுரையுடன் கூடிய நூல்)” என்று பிரகாஷ் க. நா. சுவின் கட்டுரை நூல் பட்டியலில் தெரிவித்திருந்தார். பாரதியின் கையெழுத்திலான நூல் என்ற அம்சம் ஆர்வத்தைத் தூண்டச் சிரமப்பட்டு அதைத் தேடிப்பிடித்தால் அந்நூல் அவர் சொன்ன முறையில் உருவாகவில்லை என்று தெரிந்தது.பட வேண்டிய சிரமம் எல்லாம்பட்ட பிறகு சலபதியிடம் பேச்சுவாக்கில் அலைந்ததைப் பற்றிச் சொல்ல நேர்ந்தது. அவரும் அதே நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பே அலைந்து திரிந்து ஏமாந்ததைச் சொன்னார். பிரகாஷ் புத்தகத்தைப் படித்துவிட்டு இப்படித் தேடி வேறு யாரும் ஏமாறாமல் இருக்கவே இதை இங்கே சொல்லிவைக்கிறேன்.

பாரதியின் காட்சி, ஙிலீணீக்ஷீணீtலீவீ திக்ஷீமீமீ க்ஷிமீக்ஷீsமீ ணிஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீt (சிக்ஷீவீtவீநீவீsனீ & ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ வீஸீ ணிஸீரீறீவீsலீ) (1989) என்பது அந்நூல் பெயர். 11 இயல்களைக் கொண்ட அத்தமிழ் நூலின் கடைசி மூன்று இயல்கள் மட்டும் ஆங்கிலம். பாரதியின் காட்சி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரகாஷ் குறிப்பிடும் வகையிலான கட்டுரை ஒன்பதாவது இயல். நூல் முன்னுரையில் அந்நூலின் பதிப்பாசிரியர் தெரிவிப்பது பின்வருவது.

“பாரதி தான் கைப்பட எழுதிய வசன கவிதைக் கையேட்டைச் சென்னைக்கு நேரில் சென்று சென்னை அருங்காட்சியக இயக்குநர் திரு. ஹரிநாராயணன் அவர்களை நேரில் சந்தித்து நிழற்படப்படி எடுத்து வந்தார்கள் [க. நா. சுப்ரமண்யம்]. அவர்கள் கொண்டுவந்த பாரதியின் சொந்தக் கையெழுத்து ஏடே அவர்தம் ஆராய்ச்சிக்குப் பொருளாயிற்று . . . பாரதியின் காட்சி அதிலிருந்து உருவானதுதான்.”

புனைபெயர்

நான் பார்த்தவரை க. நா. சு. அநேகமாக எல்லா உரைநடை நூல்களையும் சொந்தப் பெயரில் வெளியிட்டுள்ளார் என்று சொல்லலாம். மயன் என்ற பெயரில் கவிதைகளை அவர் எழுதிவந்தது பிரசித்தம். பத்திரிகைகளில் எழுதும்போது புனைபெயரைப் பயன்படுத்தியிருக்கலாம். நசிகேதன் என்ற பெயர் அவற்றுள் ஒன்று. சரஸ்வதியில் க. நா. சுவை விமர்சித்து வந்த ஒரு கட்டுரையில் மணிவாசகன் என்பவர் வேறொரு நோக்கில் குறிப்பிட்ட ஒரு தொடரில் சில புனைபெயர்கள் விவரம் பதிவாகியிருக்கிறது.

“சொல்நயமோ பொருள் நயமோ இல்லாத அம்மாமித் தமிழில் ‘ஆண்டாள்’ முதல் ‘ராஜா’ வரையில் ஓராயிரம் பெயர்களில் கதைகள் வெளியிட்டு வந்ததைத் தவிர - இவர் செய்த இலக்கியத் தொண்டு தான் என்ன?” (சரஸ்வதி, இதழ் 7, மலர் 3). அந்த மணிவாசகன் யார் என்று தெரியவில்லை.

பயணப்பிரியர்

ஹோட்டல் உணவின் ருசியில் மயங்கிக் கிடந்த க. நா. சுவின் வாழ்க்கை பயணங்களால் நிறைந்தது. நெற்பயிரைப் போல இரண்டிடங்களும் மரத்தைப் போல ஓரிடமுமாக வாழ்க்கையை முடித்துக்கொண்டவர் அல்ல அவர். காற்றைப் போலச் சுழன்றுகொண்டே இருந்திருக்கிறார். சாத்தனூரை விட்டுச் சென்னைக்கு ரயிலேறிய க. நா. சு. பயணத்திற்கு அஞ்சவில்லை. சிதம்பரம், சென்னை உள்ளிட்ட தமிழக நகர வாழ்க்கை 1965 வரை, 20 வருடம் தில்லி வாழ்க்கை (1965 - 85), மூன்றாண்டு புதுவை உள்ளிட்ட சென்னை வாழ்க்கை (1985-88). இறுதியில் தில்லிக்குச் சென்று நிகம்பூ மயானம் வழியாகப் போய்ச்சேர்ந்தார்.

சென்னை, தில்லி என்று நிரந்தர வசிப்பிடங்களை வைத்துக்கொண்டிருந்தாலும் இந்தியா முழுக்க, உலகின் பல பகுதிகளிலும் சுற்றிப் பலப் பல மாதங்கள் தங்கி வாழ்ந்திருக்கிறார். சில மாதங்கள் திருவனந்தபுரத்தில் ராஜாராவுடன் ஒரு சாமியாரைச் சந்தித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். நாகர்கோவிலுக்குப் போய் ஓரிரு மாதம் இருந்திருக்கிறார் - அப்போதுதான் சுந்தர ராமசாமியை வழிமாற்றிவிட்டது.

க. நா. சு. நாகர்கோவிலில் வாழ்ந்ததை சு. ரா. தன் நினைவோடையில் சொல்லியிருக்கிறார். வேறு பல ஊர்களில் தங்கியதைக் க. நா. சுவின் முன்னுரைகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆடரங்கு முன்னுரை தாம்பரத்திலிருந்து (12 ஏப்ரல் 1955) எழுதப்பட்டிருக்கிறது. முதல் ஐந்து தமிழ்நாவல்கள், ஆட்கொல்லி, படித்திருக்கிறீர்களா ஆகியவற்றின் முன்னுரைகள் திருவனந்தபுரத்தில் (1959) உருவாகியுள்ளன. தில்லியில் கலை நுட்பங்கள் முன்னுரையும், மைசூரில் பித்தப்பூவுக்கான முன்னுரையும் தயாராகியுள்ளன. நல்லவர் முன்னுரை மதுரையிலிருந்து எழுதப்பட்டது. சர்மாவின் உயில் தயாரானது சிதம்பரத்தில்.

க. நா. சு. சொல்கிறார் ஒரு கதையில் . . . “என் பிரயாணங்களில் என் அறிவு விசாலித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு நாற்றம் வீசுகிறது. தஞ்சாவூருக்கென்று பிரத்தியேகமான ஒரு நாற்றம். கும்பகோணத்திற்கென்று ஒரு பிரத்தியேகமான நாற்றம். மன்னார்குடிக்கென்று ஒரு பிரத்தியேகமான நாற்றம். திருவட்டீசுவரன் பேட்டைக்கென்று பிரத்தியேகமான நாற்றம். திருவனந்தபுரத்துக்கென்று ஒரு பிரத்தியேகமான நாற்றம், மதுரைக்குத் தனியாக ஒரு நாற்றம் உண்டென்பதை நான் திருப்பரங்குன்றம் பஸ்ஸில் போய்கொண்டிருக்கும்போது உணர்ந்து கொண்டேன்” (ரெட்டைப் பிள்ளையார், சரஸ்வதி, ஜூன் 1958).

க. நா. சுவின் காணிக்கைகள்

க. நா. சு. தனது நூல்களைக் காணிக்கையாக்கியிருக்கிற விதம் அவரது நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

பொய்த்தேவு (1946) நாவலுக்குச் சிதம்பரத்திலிருந்து, விய ஆண்டு விஜயதசமி அன்று எழுதிய சமர்ப் பணம் கடவுளுடன் தொடர்புடையது.

“இந்தப் புஸ்தகத்தை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் முணுக்கு முணுக்கென்று ஒரே விளக்கு. அதிக வெளிச்சம் தராமல் எரியும் கர்ப்ப கிருஹத்திலிருந்துகொண்டு என் காரியங்களில் குறுக்கிடாமல், என் வீட்டு வாசலில் இருந்தபடியே கவனித்து வந்த சிதம்பரம் செங்கழுநீர்ப் பிள்ளையாருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறேன்.”

தொந்தரவு தராத பிள்ளையாருக்கு நாவலை அர்ப்பணித்த மறுமலர்ச்சி எழுத்தாளர் க. நா. சுவாகவே இருக்கலாம்.

“எங்கள் குடும்பத்தை இரண்டு தலைமுறைகளுக்கும் அதிகமாக ஒருமையை உணரச்செய்த என் தகப்பனாரின் அம்மா (பாட்டி) அக்காவின் நினைவிற்கு இதைச் சமர்ப்பிப்பது நியாயம் என்று தோன்றுகிறது” என்று தன் முதல் நாவலைப் பாட்டிக்குக் க. நா. சு. காணிக்கையாக்கினார். எல்லாவற்றுக்கும் காரணமும் நியாயமும் தேடும் க. நா. சுவின் குணம் மேற்கண்ட வரிகளிலும் வெளிப்படுகின்றன. இது ஒரு நாள் நாவலின் இரண்டாம் பதிப்பு சமர்ப்பணத்திலும் உறுதியாகிறது.

“[ஒரு நாள் நாவலின்] முதற்பதிப்பு வெளியிட்ட அ. கி. கோபாலனுக்கு இதைச் சமர்ப்பணம் செய்வது பொருந்தும் என்று எண்ணி சமர்ப்பிக்கிறேன்” மனித குல சிந்தனைகள் (1966) நூலை அப்போது காலமாகிவிட்டிருந்த முன்னாள் தினமணி ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கத்துக்குக் க. நா. சு. அர்ப்பணித்திருந்தார்.

“புது விஷயங்களையும் புதுப் போக்குகளையும் ஆதரிப்பதில் டி. எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு இருந்த ஆர்வம் தமிழர்கள் கவனத்துக்கும் பெருமைக்கும் உரியதாகும். அவர் நினைவுக்கு இந்த நூலை நான் சமர்ப்பிக்கிறேன்”

காணிக்கைகளுக்கான ஆளுமைகளைத் தேர்வதில் க. நா. சு. செலுத்திய கவனத்தை, காணிக்கை வாசகங்களிலும் செலுத்தியிருப்பதை உணரலாம். புதுமைப்பித்தன் போன்ற இலக்கியவாதிகளையும் மணிக்கொடி போன்ற இலக்கிய இதழ்களையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் போன்றோரின் பெரும்பங்கைக் க.நா.சு. கூர்மையாக உணர்ந்திருந்தார் என்பதற்கு மேலே கண்ட சமர்ப் பணம் ஒரு சான்று. பொருத்தம் பார்க்காமல் க. நா. சு. எதையும் செய்யமாட்டாரோ! இந்நூல் டி. எஸ். சொக்கலிங்கம் நடத்திய நவசக்தியில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு பொருத்தம்.

க. நா. சுவுக்குச் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றுத் தந்த நூலான இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1985) சமர்ப்பிக்கப்பட்டிருப்பது முந்நூறு வாசகர்களுக்கும் இருபது எழுத்தாளர்களுக்கும்.

“. . . இந்த நூலைத் தமிழில் இன்று இருக்கிற இருநூறு முந்நூறு நல்ல வாசகர்களுக்கும் இலக்கிய தீபத்தை மங்கவிடாமல் எண்ணெய் வார்த்து, திரிபோட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிற பத்து இருபது பெயர் சொல்லக்கூடிய இலக்கிய ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.”

இருபது தலைவர்களும் முந்நூறு தொண்டர்களும் கொண்ட சிறு கூட்டத்தைப் பெருக்கத்தான் க. நா. சு. 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். ‘எழுதிக்கொண்டே இருந்த க. நா. சுப்ரமண்யம் என்று க. நா. சு. பற்றிய தன் நூலுக்கு பெயர்வைத்திருக்கிறார் கி.அ.சச்சிதானந்தம்.’ பொருத்தம் தானே.

“இந்தத் தொகுதியில் உள்ள கதைகளுக்குள் வருகிற என் நண்பர்களுக்கு இதை நான் சமர்ப்பிக்கிறேன்” என்று ஆடரங்கு சிறுகதை தொகுதியைக் (1955) நண்பர்களுக்கு அர்ப்பணித்தார். க. நா. சு வின் இளம் நண்பரான சா. கந்தசாமி தன் சாயாவனம் நாவலை ‘ஸ்ரீமதி ராஜி சுப்பிரமணிய’த்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார் (1969). திருப்பிச் செலுத்தலோ!

க. நா. சு. (இறுதியாக?) அர்ப்பணித்த நூல் கலை நுட்பங்கள். ‘இந்த நூல் ஆர். மகாதேவனுக்கு என் அன்புடன்’ என்பது முன்னுரையின் உள்ளே கிடைக்கும் ஒரு சமர்ப்பணவரி.

அழகி (1944) க. நா. சுவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. அல்லயன்ஸ் வெளியிட்ட தமிழ்நாட்டுச் சிறுகதைகள் வரிசையில் 10ஆவதாக இடம்பெற்றது. அந்நூலைப் புதுமைப்பித்தனுக்கு அன்பளிப்பாக அளித்ததைக் க. நா. சு. பின்னாளில் நினைவு கூர்ந்துள்ளார்.

“என் முதல் கதைத் தொகுப்பான அழகி வெளிவந்ததும் குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா, சிஷ்யனிடமிருந்து குருவுக்கா? என்று கேட்டுக் கையெழுத்திட்டு அவரிடம் [புதுமைப்பித்தனிடம்] ஒரு பிரதியைக் கொடுத்தேன். அந்தப் பக்கத்தைக் கிழித்தெறிந்துவிட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டார்” ( புதுமையும் பித்தமும், ப.25).

அந்தக் குறிப்பிட்ட பக்கத்தைப் புதுமைப்பித்தன் கிழித்தெறியவில்லை. அதை அப்படியேதான் வைத்திருந்தார். அந்நூல் புதுமைப்பித்தன் சேகரத்திலிருந்து சலபதிக்குக் கிடைத்து, அதைக் காலச்சுவடு புதுமையும் பித்தமும் நூலில் (2006) நகலெடுத்து வெளியிட்டும் உள்ளது. க.நா.சுவின் கையெழுத்து படிக்கும்படி நன்றாக உள்ளது. அவர் சொல்வதுபோல அழகி முதல் சிறுகதைத் தொகுப்பாகவும் தெரியவில்லை. தெய்வ ஜனனம் ஜூன் 1943இல் ஜோதி நிலைய வெளியீடாக அதற்கு முன்பே வெளிவந்துவிட்டிருந்தது.

க. நா. சுவின் புத்தகங்கள் பற்றிய இக்குறிப்பைப் படிப்போர் பெட்டிச் செய்தியில் இருக்கும் நூற்பட்டியலில் இல்லாத நூல் பற்றித் தெரிந்திருந்தால் விவரத்தைக் காலச்சுவடுக்கு அனுப்பிவைக்கலாம். அது ஆய்வாளருக்குப் பயன்படும்.

க. நா. சு புத்தகப்பட்டியல்

க. நா. சுவின் புத்தகப் பட்டியலைத் தயாரிக்க முனைந்த எனக்கு அது அவ்வளவு சுலபமல்ல என்று உடனே தெரிந்துவிட்டது. குறிப்பிட்ட ஒரு பதிப்பகம் அல்லது சில பதிப்பகங்களில் மட்டும் அவரது நூல்கள் வெளியாகவில்லை. வெளியீட்டில் எந்த முறைமையையும் காண முடியவில்லை. எந்த ஒரு நூலகத்திலும் தனி நபரிடத்திலும் உறவினர்கள் உட்பட அவரது நூல்கள் முழுமையாக எங்கும் இல்லை. சு. ரா. நினைவு நூலகம் நாகர்கோவில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னை, பெரம்பூர் நண்பர் லட்சுமிபதி, மற்ற நண்பர்களின் சிறுசேகரங்கள் ஆகியவற்றிலிருந்து இப்பட்டியல் உருவாகியிருக்கிறது. புத்தக விளம்பரங்கள், மதிப்புரைகள், போன்றவையும் பயன்பட்டன. இது முன்பட்டியல், முழுமையாக்கப்பட வேண்டியது.

நாவல்

அசுரகணம் (1959)

அவதூதர் (1988)

அவரவர் பாடு (1963)

ஆட்கொல்லி (1957)

ஆயுள் தண்டனை

ஏழுபேர் (1946)

ஏழுமலை

ஒரு நாள் (1946)

கந்தர்வ லோகத்தில் கொலை

கருகாத மொட்டு (1966)

கோதை சிரித்தாள் (1986)

கோபுர வாசல்

சக்தி விலாசம்

சத்யாகிரஹி

சமூகச் சித்திரம் (1953)

சர்மாவின் உயில் (1948)

தந்தையும் மகளும்

தாமஸ் வந்தார் (1988)

நடுத்தெரு

நளினி (1959)

நான்கு நாவல்கள் (1955)

பசி (1943)

பட்டணத்து வாழ்வு (1961)

பித்தப்பூ (1987)

புழுதித் தேர்

பெரிய மனிதன் (1959)

பொய்த்தேவு (1966)

மாதவி (1959)

மூன்று நாவல்கள் (1985)

வாழ்ந்தவர் கெட்டால் (1951)

வாழ்வும் தாழ்வும்

அச்சில் வராதவை:

திருவாலங்காடு, மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர்

சிறுகதை

அழகி முதலிய கதைகள் (1944)

ஆடரங்கு (1955)

இரண்டு பெண்கள் (1965)

க.நா.சு கதைகள் மி, மிமி, மிமிமி (1988)

சாவித்திரி சிறுகதை

சுந்தா பாட்டி சொன்னாள்

தீ! தீ கதைகள்

தெய்வ ஜனனம் (1943)

நாயக்கர் தஞ்சை கதைகள்

பதினேழு கதைகள்

மணிக்கூண்டு (1961)

மராட்டியர் தஞ்சை கதைகள்

கவிதை

க.நா.சு கவிதைகள் (1986)

புதுக் கவிதைகள் (1989)

மயன் கவிதைகள் (1977)

நாடகம்

ஊதாரி (1961)

ஏழு நாடகங்கள் (1944)

கலியாணி

நல்லவர் (1957)

பேரன்பு, கவிதைநாடகம்

மஞ்சளும் நீலமும்

வாழாவெட்டி

விமர்சனக் கட்டுரை

இந்திய இலக்கியம் (1984)

இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)

இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)

இலக்கிய விசாரம் (ஒரு சம்பாஷணை) (1959)

இலக்கியச் சாதனையாளர்கள் (1985)

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)

உலக இலக்கியம் (1989)

உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)

கலை நுட்பங்கள் (1988)

கவி ரவீந்திரநாத தாகுர் (1941)

சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)

தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)

படித்திருக்கிறீர்களா? (1957)

புகழ்பெற்ற நாவல்கள் (1955) (இரண்டு தொகுதிகள்)

புதுமையும் பித்தமும் (2006)

மனித குல சிந்தனைகள் (1966)

மனித சிந்தனை வளம் (1988)

முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)

விமரிசனக் கலை (1959)

மொழிபெயர்ப்பு

அன்பு வழி - ஸ்வீடிஷ் - பேர்லாகர் க்விஸட் (1956)

ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம் (1958)

உலகின் சிறந்த நாவல்கள் (1959)

எளிய வாழ்க்கை - ஹென்றி டேவிட் தேபரோ (1956)

ஐரோப்பியச் சிறுகதைகள் (1987)

குடியானவர்கள் - போலந்து

தாசியும் தபசியும் - பிரெஞ்சு

நல்ல நிலம் - கெரோல்

நிலவளம் - நார்வேஜியன் - நட்ஹாம்சன்

மதகுரு - போலந்து

மிருகங்கள் பண்ணை - ஜேம்ஸ் ஆர்வெல் - (1956)

விருந்தாளி - பிரெஞ்சு- ஆல்பெர் காம்யூ

ஆங்கில நூல்

Contemporary Indian Short Stories (Ed.) (1977)

Contemporary Tamil Short Stories (1978)

Generations (Novel) - Neela Padmanaban (1972)

Movements for Literature

Sons of the Sun (Novel) - Sa.Kandasamy (2007)

The Anklet Story (1977)

The Catholic Community in India (1970)

Thiruvalluvar and His Thirukkural (1989)

பாரதியின் காட்சி (1989)

******

நன்றி: காலச்சுவடு – இதழ் 144

Sep 25, 2012

அவனுடைய நாட்கள்-வண்ணநிலவன்

கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் ஆவுடை வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் வராவிட்டாலும் பரவாயில்லை. அவனையும் வீட்டுக்குப் போக விட மாட்டாள். சங்கரனுக்கு அம்மா மேல் கோபம் கோபமாக வந்தது.

இன்றைக்கும் வேலை இல்லாமல் ஆட்கள் திரும்புகிறார்கள் என்றதுமே சங்கரனுக்குச் VANNANILAVAN-6 சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஆவுடைக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஏற்கெனவே இந்த வாரத்தில் இரண்டு நாள் வேலை இல்லை. இன்றோடு சேர்த்தால் மூண்று நாளாகிறது. வாரச் சம்பளம் குறைந்துவிடும். சனிக்கிழமை ரேஷன் வாங்க சிட்டை வட்டிக்காரனிடம்தான் போய் நிற்க வேண்டும்.

சங்கரனுக்கு சீக்கிரமாக வீட்டுக்குப் போய் சாப்பாட்டுச் சட்டியை வீட்டில் போட்டு விட்டு நிர்மலா வீட்டுக்குப் போக வேண்டும். இப்படியே திரும்பினால் பதினைந்து நிமிஷத்தில் நிர்மலா வீட்டுக்குப் போய் விடலாம். அங்கே போய் எப்படியும் ஒரு அரை மணி நேரமாவது சிலோன் ரேடியோ கேட்கலாம். முக்கியமாக நிர்மலாவிடம் பேசிக் கொண்டிருக்கலாம். நேற்று ராத்திரி கேபிள் டி.வி.யில் பார்த்த படத்தைப் பற்றிச் சொல்லுவாள். நிர்மலாவுடன் இருந்தால் வீட்டு ஞாபகமே வருவதில்லை. அவளுடன் இருக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காபி கொடுக்கும்போது அவளுடைய விரல் பட்டால் விவரிக்க முடியாத பரவசம் ஏற்படுகிறது. ராத்திரி வீட்டுக்குத் திரும்பும் போதுதான் நரகத்திற்குப் போகிற மாதிரி இருக்கிறது. அந்த நாள் ஏன் முடிந்ததென்று இருக்கிறது.

தசரா ஆரம்பித்து மூன்று நாட்களாகி விட்டன. எல்லா கோயில்களிலும் தினசரி கச்சேரி நடக்கிறது. தெருவுக்குத் தெரு மைனர் பார்ட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு வெளியூர்களிலிருந்து கும்பம் ஆடுகிறவர்களையும் நையாண்டி மேளங்களையும் கொண்டு வந்திருந்தன. அம்மாதான் ஒன்பது மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தால் திட்டுகிறாள். அதற்காக கண் முழித்து தசரா பார்க்காமல் இருக்க முடியுமா என்ன ?

'எக்கா கம்பெனிக்கா போறீய... ? அதான் வேல இல்லியே, வீட்டுக்குப் போங்கக்கா... எதுக்குப் போட்டு வீணா அலையுதியோ... ? ' என்றாள் பாக்கியம்.

'இல்ல, போர்மேன் அண்ணாச்சியைப் பாக்கணும். அதான் போய்க்கிட்டு இருக்கேன் ' என்றாள் ஆவுடை. பாக்கியம் கொஞ்சம் தள்ளிப் போனதும், 'இவளுகளுக்கு என்ன வந்தது ? நான் எங்கியும் போறேன். ரோட்டுல போறவ பேசாமப் போக வேண்டியதுதான ? இவ கிட்டக் கேட்டுட்டுத்தான் ஒவ்வொண்ணுஞ் செய்யனும் போல இருக்கு ' என்றாள்.

'எதுக்கு அந்த அக்காவப் போட்டுத் திட்டுத ? வீணா அம்புட்டுத் தூரம் எதுக்கு அலையணும் வேலதான் இல்லையே. வீட்டுக்குப் போங்கண்ணு சொல்லுதா. இது ஒரு குத்தமா ? அவளைப் போயி கண்டமானைக்கிப் பேசுதீயே ' என்றான் சங்கரன்.

'இந்தானைக்கு ஒனக்கு ஊர் மேயப் போகணும். கம்பேனி லீவுன்னா ஒனக்குக் கொண்டாட்டம். இப்பிடி தெனசரி வேல இல்லன்னு வீட்டுக்குத் திரும்புதமேன்னு எனக்கு வயித்துல புளியக் கரைக்கி. '

சங்கரன் பேசாமல் தலை குனிந்து நடந்து கொண்டிருந்தான். கோபத்திலும் எரிச்சலிலும் ஆவுடையுடைய நடையின் வேகம் அதிகரித்தது. முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். தூத்துக்குடி பஸ் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது.

அப்பா வேலையில்லாமல் வீட்டில் உட்கார்ந்து நாலைந்து வருஷமாகி விட்டது. சங்கரனையும் மூன்று பொம்பளைப் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு ஆவுடை அநேகம் பாடு பட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் அவனையும் பொட்டு வெடிக் கம்பெனிக்கு தன்னோடு வேலைக்குக் கூட்டிக் கொண்டு போனாள். அவர்களுடைய வாரச் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடியது.

மாணிக்கம் சலூனில் சங்கரன் தினசரி பேப்பர் படிப்பான். சின்னப் பிள்ளையிலிருந்தே சிந்தாதிரிப்பேட்டை சந்தனுவின் சித்திர வித்யாலயா விளம்பரத்தைப் பத்திரிகைகளில் பார்த்து வருகிறான். சங்கரனுக்குப் பள்ளிக்கூடத்தில் கூட டிராயிங் வராது. ஆனாலும் சந்தனுவின் 'நீங்களும் ஓவியராகலாம் ' விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்து விட்டு எழுதிப் போட்டான். ஒரு வாரம் கழித்து மெட்ராஸிலிருந்து நீளமான கவர் ஒன்று வந்தது. முதன் முதலாக அவன் பேருக்கு வந்த அந்த கவரைப் பார்த்ததும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது. அதை நிர்மலாவிடம் கொண்டு போய்க் காட்டினான். ஓவியம் படிப்பதற்கு எவ்வளவு பீஸ் கட்ட வேண்டும் என்றதும் ஓவியனாகிற ஆசையே போய் விட்டது. ஆனால், ரொம்ப நாள் வரை அந்தக் கவரை அப்படியே கசங்காமல் வைத்திருந்தான்.

இதே போல டிராப்ட்ஸ் மேன் ஆகலாம், விவசாயப் படிப்பை வீட்டிலிருந்தபடியே இலவசமாகக் கற்கலாம் என்றெல்லாம் ரிஷிவந்தியத்திலிருந்து ஒரு டுட்டோரியல் காலேஜ் விளம்பரம் வந்திருந்தது. ரிஷிவந்தியம் என்ற அந்த ஊரின் பெயரே சங்கரனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அங்கிருந்தும் விபரங்கள் எல்லாம் வந்தன. வழக்கம் போல அம்ம அதெல்லாம் வேண்டாமென்று சொல்லி விட்டாள்.

ஆவுடை வேகமாகப் போய் கொண்டிருந்தாள். அவள் பின்னால் சங்கரன் இஷ்டமே இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். கம்பெனி பக்கமிருந்து கிருஷ்ணன் தன் பழைய சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். இவன் தூக்குச் சட்டியுடன் போகிறதைப் பார்த்து ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தான். நல்ல வேளையாக கிருஷ்ணன் இவனைப் பாராமலேயே போய் விட்டான். கிருஷ்ணன் இவனைக் கடந்து போகும் போது அவனிடமிருந்து மருந்து வாடை அடித்தது. கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள் எல்லோருடைய உடம்பிலும் இந்த மருந்து வாடை அடிக்கும். எத்தனை சோப் போட்டுக் குளித்தாலும் அது போகவே போகாது.

கம்பெனியின் நீளமான காம்பவுண்டுச் சுவர் ஆரம்பமாகி விட்டது. சுவர் மீது வரிசையாக மைனாக்கள் உட்கார்ந்திருந்தன. நிர்மலா வீட்டில் கூட முன்பு மைனா இருந்தது. ஈஸ்டருக்கு ஒரு வாரம் இருக்கும் போது ஒரு நாள் காலை கூண்டில் செத்துக் கிடந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நிர்மலா கூட அவ்வளவாக வருத்தப்படவில்லை. இவன்தான் ரொம்ப வருத்தப் பட்டான். பிறகு வெறும் கூண்டு மட்டும் வெகு நாளைக்கு அவர்கள் வீட்டில் உத்திரக்கட்டையில் தொங்கிக்கொண்டிருந்தது.

'ஏம்மா அதான் வேல இல்லன்னு ஆளுக திரும்பிப் போறாவ இல்ல. அப்பிடியே வீட்டுக்குப் போவ வேண்டியதுதான ? எதுக்கு இம்புட்டுத் தூரம் வீணா வந்து அலையுதியோ ? ' என்றார் வாட்ச்மேன் ஞானமுத்து.

'உள்ள அண்ணாச்சி இருக்காங்களா ? '

'அண்ணாச்சி ஆபீஸ் ரூம்ல இருக்காங்க. எதுக்கு ? '

'அவங்களப் பாக்கணும். '

'அவங்களப் பாத்து என்ன செய்யப் போறீயோ ? குளோரைடு லாரி வந்தாத்தான் வேலயே. '

'ஏதாவது கழிவு கிழிவு கெடந்தா பாக்கலாம்னுதான்... '

'கழிவுதான ? நீங்க கேக்கதுக்கு முந்தியே நேசமணி, அண்ணாச்சி கிட்டக் கேட்டுப் பாத்துட்டா. கழிவெல்லாம் ஒண்ணும் இல்லன்னு அண்ணாச்சி சொல்லிட்டாங்க. இன்னைக்கிச் சாயந்தரத்துக்குள்ள லோடு வந்துருமாம்... நாளைக்கு எப்பிடியும் வேல இருக்கும். போயிட்டு வாங்க. '

பின்னும் ஆவுடை தயங்கி நின்று கொண்டிருந்தாள். ஞானமுத்து தன் ஷெட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். சங்கரன் தள்ளியே நின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டு ஆவுடை நடக்கத் தொடங்கினாள். சங்கரனும் அவள் பின்னால் போனான். இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.

வீட்டுக்கு வந்ததும் ஆவுடை தூக்குச் சட்டியை வைத்து விட்டுப் படுத்து விட்டாள். கொஞ்ச நேரத்திலேயே தூங்க ஆரம்பித்து விட்டாள். தங்கைகள் பள்ளிக்கூடம் போயிருந்தனர். அப்பாவையும் காணவில்லை. அம்மா தூங்கியதும் சங்கரன் புறப்பட்டான். சட்டை வேட்டியெல்லாம் கருமருந்து வாடை அடித்தது. வெயிலில் வந்ததால் அந்த நெடி அதிகமாக இருந்தது. வேறு சட்டை மாற்றலாமென்று கொடியி;ல் கிடந்த சட்டையை எடுத்து மோந்து பார்த்தான். அதிலும் மருந்து வாடை அடித்தது. இத்தனைக்கும் அது துவைத்த சட்டை. வீடு பூராவுமே கருமருந்து வாடை அடிக்கிற மாதிரி இருந்தது. சட்டையை மாற்றாமலேயே நிர்மலா வீட்டுக்குப் புறப்பட்டான்.

சுபமங்களா-நவம்பர்,1995

Sep 20, 2012

சிறைவாசம்-ஹெப்சிபா ஜேசுதாசன்

('புத்தம் வீடு' புதினத்தின் அத்தியாயம் 5)

வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப் பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்து விடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது! 8abf414a-3b05-49f3-9af7-a2d5b2cd4ffc

அதோ அந்த அடிச்சுக் கூட்டிலிருந்து அப்படிப் பாதிமுகமாக வெளியில் தெரிகிறதே, அந்த முகத்துக்கு உரியவள் லிஸிதான். அந்தக் கண்கள் வேறு யாருடைய கண்களாகவும் இருக்க முடியாது. அவை அவளைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால் அந்தக் கண்களில் குறுகுறுப்போ மகிழ்ச்சியோ துள்ளி விளையாடவில்லை. அவற்றில் படிந்திருப்பது சோகமா, கனவுலகத்தின் நிழலா சும்மா வெறும் சோர்வா என்பதுதான் தெரியவில்லை. தலையில் நன்றாய் எண்ணெய் தேய்த்து வாரியிருக்கிறாள். அவள் முகத்திலும் எண்ணெய்தான் வழிகிறது. மாநிறமான அந்த முகத்துக்கு ஒளி தந்து அழகு செய்வதற்குப் புன்னகை ஒன்றும் அதில் தவழவில்லை. லிஸியா அது? நம் லிஸியா? ஏன் இப்படிக் குன்றிக் கூசிப் போய் நிற்கிறாள்? ஏன்? ஏன்?

முதலாவது, லிஸி பெரிய வீட்டுப் பிள்ளை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதை மறந்திருந்தீர்களானால் இதுதான் அதை மறுபடியும் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தருணம். லிஸியும் ஒருபோதும் அதை மறந்து விடக் கூடாது. அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சங்கூடத் தகாது. அது அவள் விலையைக் குறைப்பதாகும். இரண்டாவது, 'இற்செறிப்பு' ஒரு பழந்தமிழ் வழக்கம். சங்க காலத்திலேயே உள்ள வழக்கம். நல்லவேளையாக இது இன்னும் வெளிவராத இரகசியமாகவே இருந்து வருகிறது. பனைவிளை புத்தம் வீட்டார்க்குச் சங்க கால வழக்கங்கள் ஒன்றும் தெரியாது. அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரியும். லிஸிக்கு பதினான்கு வயது ஆகிறது. "பெரிய பிள்ளை" ஆகி விட்டாள். ஒற்றைத் தாவணி அணிந்துவிட்டாள். ஆகையால் இற்செறிப்பு மிகவும் அவசியமாகி விட்டது. நீங்கள் லிஸியின் முகத்தைப் பார்த்தால், அந்தக் கண்கள் மட்டும் உங்களிடம் "ஏன்? ஏன்?" என்று கேட்பது போலிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால் தமிழ்நாட்டின் மற்ற பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படிக் கணக்கெடுக்கப் போகிறீர்கள்?

அவள் என்னென்ன ஆசைகளை உள்ளத்தில் போற்றி வளர்த்து வந்தாள் என்று யாரும் கவலைப்படவில்லை. லிஸி வெறும் அப்பாவிப் பெண் ஒன்றும் அல்ல. முதலில் ரகளை நடத்தித்தான் பார்த்தாள். அழுது அடம் பிடித்தாள். அவளுக்குத் தெரிந்த முறையில் சத்தியாக்கிரகம் பண்ணினாள். ஆனால் இத்தனை பேரின் எதிர்ப்புக்கு இடையில் ஒரு குழந்தையின் பலம் எத்தனை தூரந்தான் போக முடியும்? அப்பனும் அம்மையுந்தான் போகட்டும். இந்தக் கண்ணப்பச்சியுங் கூட அல்லவா அவர்களுடன் சேர்ந்து கொண்டார்? கண்ணம்மையின் காரியம் கேட்கவே வேண்டாம். சித்தியாவது ஒருவாக்குச் சொல்லக் கூடாதோ? சித்திக்கு வழக்கம்போல வாய்ப்பூட்டு போட்டிருந்தது. மேரியக்கா இந்தத் தருணம் பார்த்துக் கிராமத்தில் இல்லை. மேரியக்கா பாளையங்கோட்டையில் இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள். மேரியக்காவைப் படிக்க வைக்க அவளுக்குச் சித்தப்பாவோ மாமாவோ யார் யார் எல்லோமோ இருக்கிறார்கள். லிஸிக்கு யார் இருக்கிறார்கள்?

பள்ளிக்கூடத்துக்குத் தான் விட்டபாடில்லை. கோயிலுக்காவது விடக் கூடாதோ? நாலு தோழிகளை அங்கு சந்திக்கும் பாக்கியமாவது கிடைக்கும். கண்ணப்பச்சி கண்டிப்பாகச் சொல்லி விட்டார். "இப்ப எதுக்கு? மொதல்ல ரெண்டு பேராப் போவட்டும். நம்ம குடும்பத்திலே இல்லாத பழக்கம் நமக்கு என்னத்துக்கு?"

"ரெண்டு பேர்" என்று யாரை கண்ணப்பச்சி குறிப்பிடுகிறார் என லிஸிக்கு ஓரளவு தெரியும். ஆனால் அவள் வருங்காலத்தை விட நிகழ்காலத்திலேயே அக்கறை உடையவள். இரண்டு பேராகக் கோயிலுக்குப் போகலாம் என்ற நம்பிக்கை அப்போதைக்கு அவளுக்குத் திருப்தி தருவதாயில்லை. என்றாலும் இளம் உள்ளங்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்க முடியாது. எது முதலில் எட்டிக்காயாகக் கசக்கிறதோ அதுவும் நாளடைவில் பழக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையே உலக ஞானத்தைப் போதிக்கிறது. லிஸிக்குப் பள்ளிக் கூடம் இல்லாவிட்டால் என்ன? வீடு இல்லையா? தோழர், தோழியர் இல்லாவிட்டால் போகிறார்கள். மேரியக்கா தந்த மைனா இருக்கிறது. லில்லி, செல்ல லில்லி இருக்கிறாள். லில்லியோடு கொஞ்சிக் குலவுவதில் பொழுதில் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. அந்தச் சின்னத் தலையை மடியில் இட்டுக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்! வீட்டு வேலைகளும் அப்படி ஒன்றும் பாரமானவை அல்ல. தானாகச் செய்தால் செய்வாள். இல்லாவிட்டால் அம்மையும் சித்தியும் இல்லையா? லிஸி பெரிய வீட்டுச் செல்லப்பிள்ளை தானே? இப்படியாகத் தன்னை நாளடைவில் சமாதானம் செய்து கொள்ளுகிறாள் அந்தப் பேதைப் பெண். மேலும், பதவிக்காகப் போய் ஏங்கிக் கிடந்தாளே, வீட்டிலேயே அவளுக்கு மகத்தான பதவி காத்துக் கிடக்கிறது. கண்ணப்பச்சிக்குக் கண் மங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மை போன பிறகு, அதுவும் இரண்டு வருஷம் ஆகி விட்டது. கண்ணப்பச்சிக்குத் தனிமைத் துயரம் அதிகம். லிஸியின் துணையை இன்னும் கூடுதலாக நாடினார். இந்த ஒரு காரணத்தால்தான் லிஸிக்கு அடிச்சுக் கூட்டுக்கு வரும் உரிமை கிடைத்தது. ஆபத்துக்குப் பாவம் இல்லை அல்லவா? கண்ணப்பச்சிக்கு நினைத்த நேரம் பைபிளும், தினப்பத்திரிக்கையும் வாசித்துக் கொடுக்க வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால் லிஸிக்கு அடிச்சக்கூட்டில் பெருமையுடன் நடமாடும் பதவி கிடைத்தது. அம்மைக்கும் சித்திக்கும் கிடைக்காத பதவி; அவர்கள் மாமனாருடன் பேசக் கூடாது. அவர்கள் கணவன்மார்களும் - சித்தப்பாவும் இப்படி ஆகிவிட்டாரே என தங்கள் தந்தையுடன் பேசுவதில்லை. லிஸிதான் அந்த வீட்டில் கண்ணப்பச்சிக்கு ஊன்றுகோல். அவளுக்கு அது புரியவும் செய்தது. அதனால் கண்ணப்பச்சியிடம் அவளுடைய பாசம் இன்னமும் அதிகமாயிற்று.

வீட்டிலுந்தான் என்னென்ன மாற்றங்கள்? 'ஆடு குழை தின்கிற' மாதிரி வெற்றிலை போட்டு வந்த கண்ணம்மை போய் விட்டார்களே! லிஸி வெற்றிலை இடித்துக் கொடுப்பாள் என்று அவள் கையைப் பார்ப்பதற்கு இப்போது யார் இருக்கிறார்கள்? ஆனாலும் அவள் வீட்டார் பல காரியங்களுக்காக அவள் கையை இன்னும் எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள். அதற்குக் காரணம் லிஸியேதான். லிஸி மேரியக்காவின் வீட்டிலிருந்து சில பாடங்களைக் கற்றறிந்தாள். கிராமத்து வீடானாலும் அதைச் சுத்தமாக வைக்கலாம் என்றறிந்திருந்தாள். ஏராளமாகக் குவிந்து கிடக்கும் பழ வகையறாக்களுக்கென்று ஓரிடம், கண்ணப்பச்சி மாட்டுக்கென்று சீவிப்போடும் பனம் பழக்கொட்டைகளுக்கென்று ஓரிடம், இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தாள். ஈக்களின் தொல்லை இப்போது குறைந்துவிட்டது. அடிச்சுக்கூட்டுக்கு நேராகத் திறக்கும் ஜன்னலுக்கு ஒரு 'கர்ட்டன்' கூடத் தைத்துப் போட்டிருந்தாள். அது லிஸிக்கு மிகவும் சௌகரியமாயிருந்தது. யாராவது கண்ணப்பச்சியிடம் எப்போதாவது பேசுவதற்கென்று வருவார்கள். அப்போது வீட்டினுள் இருந்து கொண்டே எல்லாவற்றையும் பார்க்கலாம். வீட்டை இப்போது பார்த்தால் ஏதோ பெண்மணிகள் வாழும் இல்லமாகத் தோற்றமளித்தது. முன்பெல்லாம்... லிஸிக்கு இப்போது சித்தியிடம் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. சித்தியாவது வீட்டை கவனித்துக் கொள்ளக் கூடாதா? சித்திக்கு அழகாக ஸாரி கட்டத் தெரியும். பவுடரை நாசுக்காகப் பூசத் தெரியும். ஆனால் இந்த அம்மையிடம் ஒத்துப் போகக் கூடத் தெரியவில்லையே; கண்ணம்மை மரித்த பிறகு! சித்தியின் முகம் இப்போதெல்லாம் கவலை படர்ந்த இருள் சூழ்ந்திருக்கிறது. சித்தப்பா அடிக்கடி 'பிஸினஸ்' என்று சொல்லிக் கொண்டு, திருவனந்தபுரம் போய் வருகிறார். அங்கிருந்து யாராவது உறவினரைக் கூட அழைத்து வருவார், போவார். ஆமாம், அதற்காகவாவது வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டாமா? உன் முற்றத்தில் பூத்துக்குலுங்குகின்ற ரோஜாச் செடிதான் எத்தனை அழகாயிருக்கிறது! லில்லியின் பட்டுக் கன்னங்களைப் போல் லிஸியின் பழைய நினைவுகளைப் போல். ஆனால் அதைப் பேண வேண்டுமானால் லிஸி மட்டுந்தான் உண்டு வீட்டில். வேறு யார் இருக்கிறார்கள்?

லிஸிக்கு சாமர்த்தியம் இல்லாவிட்டால் அப்பனை இப்படி வீட்டில் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவர் கள்ளுக்கடைக்குப் போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் காப்பிக் கடைக்குப் போகிறதை நிறுத்தி விட்டாள். ஓட்டல் பலகாரம் வீட்டில் கிடைக்கும்போது அவர் எதற்காக ஓட்டலுக்குப் போகிறார்? அவரும் கண்ணப்பச்சியைப் போல லிஸியின் கையை எதிர்பார்த்துத் தானே இருக்கிறார்! இப்படியாக அவளுக்குப் பெருமையும் திருப்தியும் தரக் கூடிய விஷயங்கள் அறவே இல்லாமல் போகவில்லை. இல்லையானால் எப்படித்தான் வாழ்கிறதாம்?

இன்றைய வாழ்க்கையில் மிகமிகப் பிடித்த சமயம் பனையேற்றக் காலந்தான். அக்கானி அவள் விரும்பிக் குடிக்கும் பானம். அதில் விழுந்து செத்துக் கிடக்கும் ஈ, எறும்புகளை அவள் ஒருபோதும் அசிங்கமாகக் கருதினதில்லை. அவற்றை அகப்பையால் நீக்கி விட்டுக் கோப்பையை பானையில் இட்டு முகந்து குடிப்பாள். ஆனால், அதுவல்ல விஷயம். அக்கானிக் காலத்தில் அதைக் காய்ச்சுவதற்கென்று ஒரு கிழவி வீட்டுக்கு வருவாள். அவளுடன் பேசிக் கொண்டிருப்பது லிஸிக்கு நல்ல பொழுதுபோக்கு. அவள் எரிப்பதற்கென்று உலர்ந்த சருகுகளை விளக்குமாறு கொண்டு 'அரிக்கும்'போது லிஸியும் கூட நடப்பாள்; அவர்கள் வீட்டடிதான்; ஆகையால் அதில் ஒன்றும் கட்டுப்பாடில்லை. இந்தக் கிழவியின் மகன்தான் இவர்களுக்குப் பனையேறிக் கொடுப்பது. அவன் பெயர் தங்கையன். பனையேற்ற ஒழுங்குபடி ஒருநாள் அக்கானி தங்கையனைச் சேரும். தங்கையன் முறை வரும்போது அவனுடைய இளமனைவி அக்கானியை எடுத்துப் போக வருவாள். இவர்கள் குழந்தைகள் இரண்டு பேர். பிறந்த மேனியாகக் கூட ஓடி வருவார்கள். வாழ்க்கை வெறும் சப்பென்று ஆகி விடாதபடி இவர்கள் எல்லோரும் லிஸிக்கு உதவினார்கள்.

லிஸிக்கு வெளியுலகந்தானே அடைத்துக் கொண்டது? ஆனால் உள்ளே இவளுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. பனையேறுபவர்கள் சடக் சடக்கென்று குடுவையைத் தட்டிக் கொண்டு வருவதும் பனையோலைகளின் இடையே வானத்தை எட்டிப் பிடிப்பதைப் போல் இருந்து கொண்டு 'அலுங்குகளை' அதாவது பனம் பாளைகளைச் சீவிக் கீழே தள்ளுவதும் ஒருவரையொருவர் கூவியழைத்து வேடிக்கை பேசிக் கொள்வதும் எல்லாம் சுவாரஸ்யமான காரியங்களே. பனையுச்சியிலிருந்து எந்தெந்த விஷயங்களெல்லாம் அலசி ஆராயப்படும் தெரியுமா? மன்னர் அரண்மனை இரகசியங்கள் தொட்டு ஹிட்லரின் ராணுவ காரியங்கள் வரையுள்ள விஷயங்கள் அடிபடும். லிஸி இப்போது பள்ளிக் கூடத்தில் படிக்கிற மாதிரிதான். தன் வீட்டு வாசலில் இருந்து கொண்டே பல புதிய பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

*****

'புத்தம் வீடு' - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல்.

லிஸியும் தங்கராஜூம் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக மு100-00-0000-046-8_bதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள்.

இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளையே மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள்.

படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. 'புத்தம் வீடு'. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

நன்றி:தென்றல் இதழ்

Sep 14, 2012

வழி – புதுமைப்பித்தன்

அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது.

தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது.

அவள் விதவை.

நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாpudu2ழ்க்கை இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்ற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக மாறி, வைதவ்யம் என்ற வாழ்க்கை – அந்தகாரத்தைக் கொண்டு வந்தது.

அன்று முதல் இன்றுவரை வாழ்க்கை என்பது நாள் – சங்கிலி. கணவன் தேகவியோகச் சடங்குகள், சம்பிரதாயங்கள் துக்கத்தைத் தந்தாலும் பொழுதையாவது போக்கின. அப்படிச் சென்றது ஒரு வருஷம்.

அன்று அவர் இறந்தபின் பதினாறு நாட்களும் இவளைப் பிணம் போல் அழும் யந்திரமாகக் கிடத்தி, சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப்பிணம் என்ற கருத்தை உணர்த்தவோ, என்னவோ!

அலமி பணக்காரப் பெண்தான். பாங்கியில் ரொக்கமாக 20000 ரூ. இருக்கிறது. என்ன இருந்தாலும் இல்வாழ்க்கை அந்தகாரந்தானே? அவள் நிலை உணவு இருந்தும் உண்ண முடியாது இருப்பவள் நிலை.

அவளுக்குத் தாயார் கிடையாது. தகப்பனார் இருந்தார். அவர் ஒரு புஸ்தகப் புழு. உலகம் தெரியாது அவருக்கு. வாழ்க்கை இன்பங்கள் புஸ்தகமும் பிரசங்கமும். சில சமயம் அலமியையும் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்.

மரண தண்டனையனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாப்படத்தை அநுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டு சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது?

அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சையடைத்தது. தொண்டையிலே ஏதோ ஒரு கட்டி அடைத்திருப்பது மாதிரி உணர்ச்சி. உதடுகள் அழவேண்டுமென்று துடித்தன.

உறக்கம் வரவில்லை.

எழுந்து முந்தானையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியிலிருந்த நிலா முற்றத்திற்கு வருகிறாள்.

வானமாத்யந்தமும் கவ்விய இருட்டு. உயர இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது மாதிரி கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். அவளுக்கு அவை சிரிப்பன போல், தன்னைப் பார்த்துச் சிரிப்பன போல் குத்தின. மணி பன்னிரண்டாவது இருக்கும். இந்த இருட்டைப் போல் உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்!

இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். ‘சதி’யை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்கிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள். முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு… ஆனால், வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை, நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்?…

அவர் இருந்திருந்தால்…

அதை நினைத்தவுடன் மனம் ஐந்தாறு வருஷங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது. பழைய நினைவுகள், எட்டாத கனவுகள் அதில் முளைக்க ஆரம்பித்தன.

அவள் உடல் படபடத்தது. நெஞ்சில் சண்டமாருதமாக, பேய்க்கூத்தாக எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதின.

எதிரே விலாசத்தின் வீடு. இன்னும் தூங்கவில்லையா? அவளுக்கென்ன, மகராஜி கொடுத்து வைத்தவள்!

அப்பொழுது…

‘கட்டிக் கரும்பே தேனே…’ என்ற பாட்டு. கிராமபோனின் ஓலம். பாட்டு கீழ்த்தரமான சுவையுடைய பாட்டுத்தான்.

அன்று அவளுக்கு மூண்டெழுந்த தீயிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்குப் பாட்டு இனிமையாக இருந்தது. கேட்பதற்கு நாணமாக இருந்தது. இருட்டில் அவள் முகம் சிவந்தது. இனி இப்படி யாராவது அவளையழைக்க முடியுமா?

இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை.

இதிலே ஒரு முரட்டுத் தைரியம் பிறந்தது. ஏன், அந்தக் கோடித்தெருச் சீர்திருத்தக்காரர் திரு. குகன் சொல்லிய மாதிரி செய்தால் என்ன? அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவர் அந்நியர். மேலும்… நான் விதவை என்று தெரியும். போனால் அவருக்குத் தெரியாதா?

திரு.குகன் செய்த பிரசங்கத்தின் வித்து வேகமாகத் தழைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஊரிலுள்ளவர்கள் தூற்றுவார்கள்! அவர்களுக்கு வேறு என்ன தெரியும்.

நினைத்தபடி நடக்க ஹிந்துப் பெண்களுக்குத் தெரியாது. ‘இயற்கையின் தேவை’ என்ற ஈட்டி முனையில் அவள் என்னதான் செய்ய முடியாது? மேலும் தாயார் இருந்தால் ஓர் ஆறுதல், கண்காணிப்பு இருந்திருக்கும். இதுவரை தனக்கு வேண்டியதை அவளே செய்து கொண்டவள். அவளுக்குக் கேட்டுச் செய்ய ஆள் கிடையாது. மனம் சீர்திருத்தவாதியை அணுகிவிட்டால் உலகமே மோட்ச சாம்ராஜ்யமாகிவிடும் என்று சொல்லுகிறது. சீ! போயும் போயும், மூளையில்லாமல், ஆண்பிள்ளையிடம் போய் என்ன! கத்தரிக்காய்க் கடையா வியாபாரம் பண்ண? அவளுக்குச் சீர்திருத்தவாதி உள்பட இந்த உலகமெல்லாவற்றையும் கொன்று துடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று படுகிறது. சீ, பாவம்! உலகமாவது மண்ணாங்கட்டியாவது! நெருப்பில் போட்டுப் பொசுக்கட்டுமே! மார்பு வெடித்துவிடுவது போலத் துடிக்கிறது. இருளில் கண்ட சுகம், அந்தச் சங்கீத ஓலத்தில் போய்விட்டது. அவளுக்கு விசாலத்தின் மீது ஒரு காரணமற்ற வெறுப்பு. அவளையும், அவள் புருஷன், கிராமபோன் எல்லாவற்றையும் நாசம் செய்யவேண்டுமென்று படுகிறது. காதைப் பொத்திக்கொண்டு உள்ளே வந்து படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.

அசட்டுத்தனமாகத் தலையணைக்கடியில் வைத்திருந்த கொத்துச் சாவியில் இருந்த முள்வாங்கி முனை விர்ரென்று மார்பில் நுழைந்துவிட்டது.

அம்மாடி!

உடனே பிடுங்கிவிடுகிறாள். இரத்தம் சிற்றோடைபோல் பீரிட்டுக்கொண்டு வருகிறது. முதலில் பயம். அலமி இரத்தத்தைப் பார்த்ததில்லை. அதனால் பயம். ஆனால், இத்தனை நேரம் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த பாரங்கள் எடுக்கப்பட்ட மாதிரி ஒரு சுகம். இரத்தம் வெளிவருவதிலே பரம ஆனந்தம்; சொல்ல முடியாத, அன்றிருந்த மாதிரி ஆனந்தம். அதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரத்தம் பிரவாகமாகப் பொங்கி மேலுடையை நனைக்கிறது. இரத்தத்தின் பிசிபிசுப்பு தொந்தரவாக இருந்ததினால் மேலுடையை எடுத்துவிட்டாள். இரத்தம் வெளிப்படுவதில் என்ன சுகம்! நேரமாக, நேரமாக பலம் குன்றுகிறது. ‘அவரிடம் போவதற்கு என் உயிருக்கு ஒரு சின்னத் துவாரம் செய்து வைத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்! ஏன் போகாது? போனால் இந்த உடல் தொந்தரவு இருக்காது…’

அலமியின் தகப்பனார் புஸ்தகப் புழு. அன்று வெகு நேரமாயிற்று கையிலிருந்த புஸ்தகத்தை முடிக்க. முடித்துப் போட்டுவிட்டு வராந்தாவிற்கு வந்தார். அலமியின் அறையில் வெளிச்சம் தெரிகிறது. “இன்னும் தூங்கவில்லையா?” என்று உள்ளே சென்றார்.

என்ன?

அலமி மார்பில் இரத்தமா? அவள் ஏன் இம்மாதிரி அதைச் சிரித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்?

“அலமி, நெஞ்சில் என்னடி?” என்று கத்திக்கொண்டு நெருங்கினார்.

“நெஞ்சின் பாரம் போவதற்குச் சின்ன வாசல்!” என்றாள் ஈனஸ்வரத்தில். குரல் தாழ்ந்திருந்தாலும் அதில் கலக்கமில்லை. வலியினால் ஏற்படும் துன்பத்தின் தொனி இல்லை.

“இரத்தத்தை நிறுத்துகிறேன்!” என்று நெஞ்சில் கையை வைக்கப் போனார் தகப்பனார்.

“மூச்சுவிடும் வழியை அடைக்க வேண்டாம்!” என்று கையைத் தள்ளிவிட்டாள் அலமி.

“பைத்தியமா? இரத்தம் வருகிறதேடி!” என்று கதறினார்.

“இந்த இரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியையடைக்காதீர்கள்!” என்றாள்.

தலை கீழே விழுந்துவிட்டது.

மணிக்கொடி, 06-01-1935

Sep 11, 2012

புதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

13 மே 1916                                            நள சித்திரை 21

வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.

நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர், bharathi1a தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.

இவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.

‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவணைப் போலிருந்தது.

“காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா?” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா? வா வா, தூங்குகிறாயா? எழுப்ப வந்தேன், காளிதாசனா? ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.

“எப்படியிருந்த புத்தி!” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா? பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது?” என்று மறுபடியும் கேட்டேன்.

“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.

எதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.

“ஹா, ஹா, ஹா! எனக்கா விபூதி போட வந்தாய்? சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.

எலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.

எலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.

“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.

“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.

“புதுப் பேய்” என்றாள்.

யான்: என்ன வேண்டும்?

அவள்: விளக்கு.

யான்: என்ன விளக்கு?

அவள்: நெய் விளக்கு.

யான்: என்ன நெய்?

அவள்: புலி நெய்.

யான்: எங்கே கிடைக்கும்?

அவள்: காட்டிலே.

யான்: எந்தக் காட்டிலே?

அவள்: பொதியமலைக் காட்டிலே.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு; பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்” என்று பயமுறுத்தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.

பிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்:-

“நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.

“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை? காளிதாசன், காளிதாசன்! கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.

இதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையாது.

****

Sep 6, 2012

தொலைவு - இந்திரா பார்த்தசாரதி

கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். 'இ.பா' (இயற் பெயர் - ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து 'குருதிப்புனல்'என்னும் நாவலுக்காக 1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நூலுருவில் பதினைந்துக்கு மேல் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை இவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய, உலக மொழிகளில் இவருடைய படைப்பு கள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. 'மழை', 'போர்வை போர்த்திய உடல்கள்', 'நந்தன் கதை' ஆகிய இவருடைய நாடகங்கள் தமிழ் மேடைகளில் மட்டும் அல்லாமல் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டுப் பெரும் வெற்றியும் பாராட்டும் பெற்றிருக்கின்றன.

indhra parthasaradhi

 

 

 

 

 

 

 

 

 

 

ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன.

"அப்பா, அதோ "*ஸ்கூட்டர்..." என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாரா மல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி.

"கமலி!" என்று கத்தினான் வாசு.

அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான்.

"வாக்'னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு. இது கூடத் தெரியலியே?"

"அந்த ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும் ஏறிடுவாப்பா." "ஏறிட்டுப் போகட்டும். ரோடை இப்போ கிராஸ் பண்ணக் கூடாது." --------------- *தில்லியில் ஆட்டோ ரிக்‌ஷாவை "ஸ்கூட்டர்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

"அதோ எல்லாரும் பண்றாளேப்பா!"

"ஒத்தர் தப்புப் பண்ணினா எல்லாரும் பண்ணணுமா?"

கமலிக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. அரை மணி நேரமாக இருவரும் ஸ்கூட்டருக்காக அலைகிறார்கள். ப்ளாசாவி லிருந்து அவளை இதுவரை நடத்தியே அழைத்து வந்துவிட்டான் வாசு.

அவர்கள் பஸ்ஸில் போயிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம் பொங்கி வழிந்தது. குழந்தையையும் இழுத்துக் கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா? - வாசுவால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. டாக்சியில் போகலாமென்றால் அதற்கு வசதியில்லை. லோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும். இடைக்கால நிவாரணம் கொடுக்கப் போகிறார்கள்; வாஸ்தவந்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக ஆகிவிட்டது. அதற்கு வாங்கிய கடன் தீர வேண்டும். கடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக் காத காரியம். ஆனால் திடீர் திடீரென்று செலவுகள் ஏற்படும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பது?

"அப்பா, அந்த ஸ்கூட்டரிலே யாரோ ஏறிட்டா" என்று அலுத்துக் கொண்டே சொன்னாள் கமலா.

குழந்தையின் எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர் கூடக் கனாட் பிளேசில் கிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

தனக்கு என்றுமே அதிர்ஷ்டம் கிடையாது என்று நினைத்தான் வாசு. அவன் மெடிக்கல் காலேஜில் சேரவேண்டுமென்று ஆசைப் பட்டான். அதற்கு வேண்டிய நல்ல மார்க்கும் வாங்கியிருந்தான். ஆனால் இண்டர்வியூவில், "மத்திய ஆப்பிரிக்காவில் இரண்டாண்டு களுக்கு முன் எவ்வளவு அங்குலம் மழை பெய்தது?" என்று கேட்ட போது, அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஆகவே, அதற்கு அடுத்த வருஷம், "உலகம் நெடுக எங்கெங்கு மழை பெய்கிறது? எப்படி வெயில் காய்கிறது?" என்பவை பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து விட்டு, இண்டர்வியூவுக்கு போனான். 'மெக்ஸிகோவில் மத்தியான வேலைகளில் மக்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அந்த வருஷமும் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பி. ஏ. படித்து விட்டுத் தில்லியில் மத்திய அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டு மென்று அவன் தலையில் எழுதியிருந்தது - அப்படித்தான் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

"அப்பா, 'வாக்'னு வந்துடுத்து."

"சரி, கையைப் பிடி. ஓடாதே!" ஸிந்தியா ஹவுஸ் பக்கம் போய் இருவரும் நின்றார்கள்.

"காலை வலிக்கிறது" என்றாள் கமலை. மரீனா ஹோட்டலருகே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஏறியிருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம். அந்த ஸ்கூட்டர்காரனும் லோதி காலனிப் பக்கம் போக வேண்டியவன்தான் போல் இருக்கிறது. வாசுவை ஏற்றிக்கொள்ள இணங்கினான். ஆனால் ஒரு பெண் கோபமாக வந்து, அந்த ஸ்கூட்டரைத் தானே முதலில் கூப்பிட்டதாகச் சொன்னாள். ஸ்கூட்டர்காரன் அவள் எங்கே போகவேண்டுமென்று கேட்டான். அந்த பெண் கர்ஸன் ரோட் போகவேண்டும் என்றாள். நடந்தே போய்விடலாம் என்று யோசனை சொன்னான் ஸ்கூட்டர்காரன். அந்தப் பெண் முதலில் கூப்பிட்டிருந்தால் அவள் கோபம் நியாயமானது என்றே பட்டது வாசுவுக்கு. அவளை அழைத்துப் போகும்படி சொல்லிவிட்டு விலகிக்கொண்டான். அந்த பெண் நன்றியைச் சொல்லாமல் உரிமைப் போராட்டத்தில் வெற்றி அடைந்தது போல் ஏறிக்கொண்டாளே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை. நியாயத்தைப் பற்றி அப்பொழுது அவன் அவ்வளவு கவலைப்படாமல் இருந்திருந்தானானால் கமலிக்கு இப்பொழுது காலை வலித்திருக்காது.

வாழ்க்கையில் அடிப்படையான சில விஷயங்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், சமுகத்தில் வாழ்ந்து என்ன பிரயோசனம்? சிக்கலாகிக்கொண்டு வரும் சமுதாயத்தில் இது சாத்தியமா?

பிளாசா அருகே மூன்று ஸ்கூட்டர்கள் காலியாக நின்றுகொண்டிருந்தன. வாசு கமலியின் கையைப் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்றான். ஒருவராவது அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. வாசு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்துச் சொன்னான்: "ஸ்கூட்டர் வேண்டும்."

அவன் வாசுவைப் பார்க்காமலே கேட்டான்: "எங்கே போக வேண்டும்?"

"லோதி காலனி."

அவன் பதில் சொல்லவில்லை. சிகரெட்டைப் பலமாக இழுத்துப் புகையை விட்டான். இன்னொருவன் வாசு செங்கோட்டை வருவதாக இருந்தால் அங்கு அழைத்துப் போவதாகப் கூறினான். லோதி காலனிக்குப் பதிலாகச் செங்கோட்டைக்கு அருகில் தான் இருந்திருக்கக் கூடாதா என்று வாசுவுக்குத் தோன்றிற்று. அப்பொழுது சுவரருகே நின்றுவிட்டுப் பைஜாமாவை இருக்கக் கட்டிக்கொண்டே வந்த ஒருவன், நாலு ரூபாய் கொடுப்பதானால் லோதி காலனிக்கு வருவதாகச் சொன்னான். டாக்ஸிக்கே நாலு ரூபாய்தான் ஆகும். அந்த வசதி இருந்தால் ஸ்கூட்டருடன் எதற்காகப் பேரம்? - வாசுவுக்கு மிகுந்த கோபம் வந்தது. யார் மீது என்று அவனுக்கே புரியவில்லை.

"அப்பா, அதோ ஸ்கூட்டர்" என்றாள் கமலி.

மேற்புறம் திறந்து வெயிலுக்குச் சௌகரியமாய், காற்றோட்டமாய் இருந்தது அந்த ஸ்கூட்டர். சார்ட்டைப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்தது கட்டண மீட்டர். வாழ்க்கையின் லட்சியமே கைகூடி விட்டாற்போல் ஓடினான் வாசு. ஆனால் இரண்டு தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. மூன்றாம் தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. சீறி விழுந்தான். "ரேடியேட்டர் சூடாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எங்கும் போவதாக இல்லை." ரேடியேட்டரைக் காட்டிலும் அவன்தான் சூடாயிருந்தான் என்று வாசுவுக்குத் தோன்றிற்று.

தனக்கு மிகவும் பிடித்திருந்த ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே என்று எரிச்சலாக வந்தது, வாசுவுக்கு. புதிய கட்டணம் அமலுக்கு வந்து ஆறு மாதமாகிறது. முக்கால்வாசி ஸ்கூட்டர்களில் சார்ட் தான் தொங்குகிறது; கணக்குப் பார்த்துக் கொடுப்பதற்கு ஒருவன் தன் சிந்தனை முழுவதையும் ஒருமைபடுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றி விடுவார்கள். புதிய மீட்டரில் பழைய மீட்டரைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்தாலும் பரவாயில்லை. பழைய மீட்டரில் ஏமாறாமலிருப்பதுதான் தீய எதிர்ச் சக்திகளினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போலாகுமென்று நினைத்தான் வாசு. தில்லி போன்ற நகரங்களில் ஒருவனுக்குத் தான் ஏமாறாமல் இருக்கவேண்டுமென்ற ஜாக்கிரதை உணர்வே முழு நேரக் காரியமாக இருந்தால், அவன் ஆக்கப் பூர்வமாக வளர்வது எப்படி?

"டாக்ஸியிலே போகலாமாப்பா?" என்று கேட்டாள் கமலி. அவளுக்குக் கால் வலிக்கிறது என்ற பிரத்தியட்ச உண்மையைத் தவிர, மாதத்துக் கடைசி வாரத்தில் மத்திய சர்க்கார் அஸிஸ்டெண்டால் இதைப் பற்றி யோசித்துப் பார்க்க முடியுமா என்ற பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவனால் அது முடியாது என்பது இருக்கட்டும்; மாத முதல் வாரத்தில் கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி இல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திர பூர்வமாகிவிட்ட சமுகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக் குற்ற உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்குக் கண்டிஷன் செய்துவிடுகின்றன போல் இருக்கிறது.

"ஸ்கூட்டரே கிடைக்காது"என்று சாபம் கொடுப்பது போல் சொன்னாள் கமலி.

"அவசரப்படாதே, கிடைக்கும்."

"பஸ்ஸிலே போகலாமே!" அப்பா தன்னை டாக்ஸியில் அழைத்துச் செல்ல தயாராக இல்லை என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.ஸ்கூட்டரே குறிக்கோளாகய் அலைவதைக் காட்டிலும் பஸ்ஸில் போகலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று.

"கூட்டத்திலே ஏற முடியுமா உன்னாலே?"

"பின்னாலே என்னதான் பண்றது? ஆத்துக்குப் போகாமலேயே இருக்கலாங்கறேளா?"

இக்கேள்வி ஒரு பயங்கரமான எதிர்காலத்தை அவன் மனக் கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே கிடைக்காமல் ஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும் கனாட் பிளேஸில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவன் கிழவனாகி விடுகிறான். கமலியும் வளர்ந்து பெரிய பெண்ணாகி விடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த தலைமுறையும் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.

" அப்பா, இதோ பஸ் காலியா வரது.போயிடலாம்."

வாசு திரும்பிப்பார்த்தான், பஸ் காலியாகத்தான் இருந்தது. ஆனால் லோதி காலனி செல்லும் பஸ் அல்ல; அது மதராஸ் ஹோட்டலுடன் நின்றுவிடும். அதனால்தான் கூட்டமே இல்லை.

" இந்தப் பஸ் லோதி காலனி போகாது" என்றான் வாசு.

"ஏன் எல்லாப் பஸ்ஸையும் லோதி காலனிக்கு விடமாட் டேங்கறா?"

இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லுவது? லோதி காலனி ரோம் அல்ல, எல்லா சாலைகளும் அங்கே செல்ல. அரசாங்கம் பஸ் போக்குவரத்து நடத்துவதன் நோக்கம் என்ன என்று கமலிக்கு விளங்க வைக்க முடியுமாவென ஒரு கணம் யோசித்தான். சமூகத்தைப் பற்றிக் கவலைப்படும் சர்க்காருக்குத் தான் தனி மனிதனைப்பற்றி அக்கறை இல்லை. தனி மனிதன் தன் உரிமைகளைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தால்தான் சமூகம் என்ற கருத்துப் பிறக்கிறது. இது கமலிக்குப் புரியுமா?

அவளுக்கு என்ன, இது யாருக்குத்தான் புரிகிறது? தனிமனிதன் சமூகத்துக்குள் புகுந்துகொள்வதே, சமூகம் என்ற மானசீகத்தைத் தனக்குச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் என்று தோன்றுகிறது. இதில் வெற்றியடையும் சிலரே தங்களை அத்தகைய 'ஃப்ராங்கென்ஸ்டீன்' பூதமாக்கிக்கொண்டு தனி மனிதனை மேய்ந்து வருகிறார்கள்.ஆனால் தன்ன‌ளவில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி,சமூகத்தில் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே இந்த ஸ்தாபனத்தின் யந்திரக் குரூரத்தை ஓரளவு எதிர்த்துப் போராடு வது போல்தானே?ஹரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறு பேசுவதேயில்லை என்பதைக் கண்டதும் விசுவாமித்திரனுக்கு எவ் வளவு எரிச்சல்,ஆத்திரம்!

"அப்பா,அதோ மூர்த்தி மாமா போறா!"

வாசு திரும்பிப் பார்த்தான்.கமலியின் குரலைக் கேட்டதும், மூர்த்தி காரை நிறுத்தினான்.அவன் வாசுவோடு படித்தவன்.கல் லூரியில் படிக்கும் போது அவன் பெயர் கோபாலன்.பெயர் வைத்த தோஷமோ என்னவோ,வெண்ணெய்க்குப் பதிலாக அவன் மற்ற மாணவர்களின் சைக்கிள்களையெல்லாம் திருடி விற்றுவிடுவது வழக்கம்.ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டான்.அவனும் நாதன் என்ற இன்னொரு பையனுமாகச் சேர்ந்து அந்தக் களவைச் செய்து வந்தார்கள்.இரண்டு பேருக்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.நாதன் இப்போது சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீல்.கோபாலனோ மூர்த்தியாகி, தில்லியில் ஒரு கம்பெனியில் லையாசான் ஆபீஸராக இருந்து வருகிறான்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் மூர்த்தியை உத்தியோக் பவனில் வாசு பார்த்தான்."கோபாலன்"என்று கூப்பிட்டதும் ஓரளவு திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.பிறகு வாசுவைத் தெரிந்த மாதிரியே அவன் காட்டிக்கொள்ளவில்லை."என் பெயர் மூர்த்தி, கோபாலன் இல்லை;யூ ஆர் மிஸ்டேக்கன்"என்றான்.வாசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.இப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா? இரண்டு நாள் கழித்து வாசுவின் வீட்டைத் தேடி வந்து அவன் சொன்ன பிறகுதான் விஷயம் புரிந்தது."என் பெயர் இனிமேமூர்த்தி தான்;கோபாலனை மறந்துடு.இங்கே ஏதோ நல்லபடியா இருக் கேன்.கிட்டத்தட்ட காலேஜ்லே செஞ்சிண்டிருந்த வேலை மாதிரி தான்.ஆனா அப்போ நாதன் பார்ட்னர்.இப்போ கவர்ன்மென்ட்டு.... கார் வெச்சிண்டிருக்கேன்.சுந்தர் நகர்லே வீடு.ஆத்துக்கு வாயேன் ஒரு நாள்."

உத்தியோக் பவனில் வேலை பார்க்கும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ள‌ப் பார்க்கிறான் என்பது வாசுவுக்கு அவன் வீட்டுக்குப் போன பிறகுதான் புரிந்தது.போவதை நிறுத்திவிட்டான்.ஆனால் அவன் வாசுவின் வீட்டுக்கு ஐந்தாறு தடவை வந்து போயிருக்கிறான்.

"ஹல்லோ,வாசு!எங்கே போகணும்,வீட்டுக்கா?"

"ஆத்துக்குத்தான்"என்று சொல்லிக் கொண்டே வாசுவை நம் பிக்கையுடன் பார்த்தாள் கமலி.

ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே, இவனுடன் போய்விடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான் வாசு. கூடாது: தான் அவனுக்கு ஒரளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு தனக்கு ஏற்படக் கூடாது. இந்த உணர்வே சால்ஜாப்பாக, அவனிடமிருந்து வேறு பல சௌகரியங்கள் எதிர்பார்க்கக்கூடிய இச்சை ஏற்படக்கூடும். தனக்கு அப்படி ஏற்படவேண்டும் என்றுதான் மூர்த்தி எதிர்பார்க்கிறான். ஓருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் சமுகம் என்ற கருத்து, எப்படி ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டு சமுகம் தரும் வாய்ப்புக்களை யெல்லாம் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வது என்று ஆகிவிட்டது! -மூர்த்தியுடன் போனால் தானும் இந்தக் கருத்துக்கு உடன்பட்டது போலாகும். உடனடியான சௌகரியத்துக்காகக் கொள்கையைத் தியாகம் செய்யலாம?- கூடவே கூடாது.

"நான் வல்லே, நீ போ" என்றான் வாசு.

"லோதி காலனிப் பக்கந்தான் நான் போறேன், வா!"

"நீ எதிர்த் திசையிலே போறே, லோதி காலனிப் பக்கந்தான் போறேங்கிறேயே?"

"இங்கே ஒத்தரைப் பார்த்துட்டு, லோதி காலனி போகணும், வா."

"நீ சுந்தர் நகரிலே இருக்கே. லோதி காலனி வழியாச் சுத்திண்டு போகணுமா? - நீ போ. தாங்க் யூ!"

"என்ன இவ்வளவு 'பிகு' பண்ணிக்கிறே? - உத்தியோக் பவனுக்கு வந்து உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன், சரிதானே? ஐ நோ லாட்ஸ் ஆஃப் அதர் பீபிள் இன் உத்யோக் பவன்."

எதற்காக இதைச் சொல்லுகிறான்? - 'நீ உன் ஆபிஸில் அற்ப மானவன். உன் உதவி தேவையில்லை' என்பதற்காகவா? அல்லது, 'யார் யாருக்கோ நான் பணம் தரத் தயராக இருக்கும்போது என்னுடன் படித்த நீ ஏன் இப்படி அப்பாவியாய் இருக்கிறாய்?' என்று சுட்டிக்காட்டவா? பணத்தினால் எதைத்தான் சாதிக்க முடியாது? - இதோ, இப்பொழுது இவனுடைய அந்தரங்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. டாக்ஸியில் போயிருக்கிலாம். ஏன், சொந்தக் காரே வைத்திருக் கலாம்.

"என்ன யோஜிக்கிறே? கம் ஆன், ஏறு."

"நோ... ப்ளீஸ்..." கமலியின் கையை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றான் வாசு.

கமலி கோபத்தில் வாசுவின் கைகளை உதறினாள். "எனக்கு நடக்கத் தெரியும்."

வாசு அவள் கோபத்தைப் புரிந்து கொண்டான்.ஒன்றும் சொல்லவில்லை.

'ஸிந்தியா ஹவுஸ்'எதிரே இரண்டு ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தன.ட்ரைவர்களைக் காணவில்லை.ஒரு ஸ்கூட்டரின் அருகே போய் நின்று சுற்று முற்றும் பார்த்தான் வாசு.அப்பொழுது கமலி 'ஹார்ன்' அடித்தாள்.

"நோ.அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது."

எங்கிருந்தோ ஒரு டிரைவர் அப்பொழுது அங்கே திடீரென்று தோன்றினான்."எங்கே போக வேண்டும்?"என்றான்.

"லோதி காலணி."

"திரும்பி வர வேண்டுமா?"

"இல்லை."

டிரைவர் பதில் கூறாமல் பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.

"என்ன ஸ்கூட்டர் வருமா? வராதா?"

"என் நம்பர் இப்பொ‌ழுது இல்லை.அந்த ஸ்கூட்டர்காரனைக் கேளுங்கள்."

"அந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் எங்கே?"

"தெரியாது."

இத‌ற்குள் ஐந்தாறு பேர்க‌ள் ஸ்கூட்டருக்காக அங்கு வ‌ந்து விட்டார்க‌ள்.எல்லாருக்கும் ஒரே ப‌தில்தான்.

அந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் கால்ம‌ணி க‌ழித்து வ‌ந்தான். வாசு அவ‌னிட‌ம் ஓடினான்."லோதி கால‌னி போக‌ வேண்டும்." என்றான்.

அப்பொழுது ஓர் அழ‌கானப் பெண்.க‌ண்க‌ளால் சிரித்துக் கொண்டே கேட்டாள்."காக்கா ந‌க‌ர் போக‌வேண்டும்.

ஸ்கூட்டர்கார‌ன் அந்த‌ப் பெண்ணை ஏற‌ச்சொன்ன‌தும் வாசு கூறினான்:"நான் இங்கே கால்ம‌ணி நேர‌மாக‌க் காத்துக்கொண் டிருக்கேன்.இந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ரைக் கேளுங்க‌ள்...."

அந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் த‌ன்னைச் சாட்சிக்கு அழைத்த‌தும் வேறு ப‌க்க‌ம் திரும்பிக்கொண்டு விட்டான்.வாசு விட‌வில்லை. "யார் முத‌லில் வ‌ந்தார்க‌ள்?"என்று அவ‌னைக் கேட்டான்.

"யார் வ‌ந்தால் என்ன‌?அதோ அவள்* கிள‌ம்பிப் போய்விட் டான்*."என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,அந்த‌ ஸ்கூட்டர்க் கார‌ன்.

அந்த‌ப் பெண் 'டாடா,பைபை'சொல்லாத‌ குறை! ஸ்கூட்ட‌ர் போய்விட்ட‌து.அவ‌ன் உட‌ம்பு கோப‌த்தால் ஆடிய‌து. அங்கிருந்த‌ இன்னொரு ஸ்கூட்ட‌ரையும்,டாக்சி ஸ்டாண்டிலிருந்த‌ டாக்சிக‌ளையும்,தெருவில் போய்க்கொண்டிருந்த‌ கார்க‌ளையும், பஸ்களையும் - எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற வெறி வந்தது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குப் போவதற்கு அவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ, ஸ்கூட்டரையோ அல்லது டாக்சியையோ எதிர்ப்பார்த்துகொண்டா இருந்தான்? - தன்னால் இப்பொழுது கமலியைத் தூக்கிக்கொண்டு லோதி காலனிக்கு நடந்துபோக முடியாதா?

கமலி தூக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கலாம். அவளைச் சமாதானப்படுத்தித் தூக்கிக்கொண்டு போகலாம் என்றாலும், அவனுக்குப் பைத்தியக்காரன் என்ற பட்டந்தான் கிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன், 'சமுகம் என்றால் தன்னைத் தவிர மற்றவர்கள்' என்ற பிரக்ஞையோடு அவர்கள் அபிப்பிராயத்துக்கு இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டும்.

"கமலி வா, நடந்தே போயிடலாம்" என்றான் வாசு.

"நடந்தேவா?" என்று அவள் திகைத்தாள்.

"நடக்க முடியலேன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்" என்றான் வாசு.

வரிசை வரிசையாகக் கார்களும், டாக்ஸிகளும் விரைந்துகொண்டிருந்தன.

வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.

--------------------------------

புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்