Oct 14, 2010

சு.ரா.வின் சிறுகதைகள் காட்டும் சுவடுகள் - அரவிந்தன்

சுந்தர ராமசாமி நினைவு தினம் அக்டோபர் 14

மதிப்பீடு : படைப்பு வெளியில் சு.ரா.வின் பயணம்

அரவிந்தன்

sura---drawing3நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், பத்தி, உரைகள், நேர்காணல் எனப் பல வடிவங்களில் தன் படைப்பு ஆளுமையை வெளிப்படுத்தி அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளை மட்டும் வைத்துக்கொண்டு அவரது படைப்பு ஆளுமையை மதிப்பிடும்   முயற்சி இது. தான் செயல்பட்ட அனைத்துத் துறைகளிலும் தீவிரமும் நேர்மையும் கொண்டு சிறப்பாக இயங்கிய மிக அரிதான தமிழ் ஆளுமைகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. இத்தகைய ஒரு படைப்பாளுமையின் ஒரு துறை சார்ந்த வெளிப்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பேசும்போது இதரப் பரிமாணங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் போய்விட வாய்ப்புள்ளது. என்றாலும் சூரியக் கதிர்களைத் தன் சின்னஞ்சிறு குவிமையத்தின்வழி வீரியத்துடன் வெளிப்படுத்தும் குவி ஆடியின் திறனை ஒத்த சிறுகதைக் கலை, ஒட்டுமொத்தப் படைப்பாளுமையின் ஜீவனைத் தன்னுள் அடக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்வு என்னும் மாபெரும் பரப்பின் பின்னணியில் அனுபவம், பார்வை ஆகியவை சார்ந்து மொழியின் உதவியுடன் மேற்கொள்ளும் நீண்ட பயணமாக நாவலைக் கொள்ளலாம் என்றால் வாழ்வெனும் பரப்பினூடே மேற்கொள்ளப்படும் பயணத்தின் திருப்பங்கள், தடு மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் படைப்பு சார்ந்த பதிவுகள் என்று சிறுகதைகளை வரையறுக்கலாம். வாழ்வின் முழுமையைத் தன் கரங்களுக்குள் அணைத்துக்கொள்ள நாவல் முயல்கையில், பகுதிகளினூடே தெறிக்கும் உக்கிரத்தின் வழியே முழுமையைக் கோடிகாட்ட முயல்கிறது சிறுகதை. பலவித சலனங்கள், பல்வேறு கதை மாந்தர்கள், வெவ்வேறு காலகட்டங்கள், மாறுபட்ட பக்குவ நிலைகள், மாறிவரும் தத்துவ நோக்குகள், பரிசோதனைகள் என்று படைப்புகளின் பன்முகச் சவால்களை எதிர்கொள்வதற்கான கூறுகள் பலவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது சிறுகதை வடிவம். தொடர்ந்து இயங்கிவரும் எந்த ஒரு படைப்பாளியின் பயணத்தையும் நுட்பமாக நாம் கவனித்தால் மொழி, பார்வை, எழுத்துக் கூர்மை ஆகியற்றில் அந்தப் படைப்பாளிக்குள் நிகழும் மாற்றங்களில் பெரும்பாலானவை அவரது சிறுகதைகளிலேயே வீரியத்துடன் வெளிப்படுவதைப் பார்க்க முடியும்.

அதிகம் பேசப்பட்ட நாவல்களையும் முக்கியத்துவம் பெற்ற கவிதைகளையும் எழுதியிருந்தாலும் சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காண முடிகிறது. பல வழிகளில் பயணம் செய்துவந்த சுந்தர ராமசாமியின் இலக்கிய வெளிப்பாடுகள் சிறுகதைகளின் வாயிலாகவே தொடங்கியது மட்டுமல்ல; சிறுகதைகளின் வழியாகவே கூர்மையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டன. தமிழ் நாவல் வரலாற்றிலேயே அதிக விவாதங்களை உருவக்கியுள்ள ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை எழுதியிருந்தாலும் சிறுகதைகளை மட்டுமே வைத்து அவரைத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகக் கூறிவிட முடியும். எனவே அவரது சிறுகதைகளைப் பற்றிப் பேசுவது ஒருவிதத்தில் அவரது ஒட்டு மொத்த ஆளுமையையும் பங்களிப்பையும் பற்றிப் பேசுவதாகவே அமையும்.

o o o

முதலில் அவரது கதைகளின் ஒட்டுமொத்தப் போக்குகளைப் பார்க்கலாம்.

புதுமைப்பித்தனின் மகாமசானம் என்ற சிறு கதையைப் படித்த பிறகுதான் எழுத வேண்டும் என்ற உந்துதல் தனக்கு ஏற்பட்டது என்று சு.ரா. பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சிறு வயதில் இடதுசாரி இயக்கங்களோடு இருந்த தொடர்பு பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது ஆரம்ப காலக் கதைகளில் இந்த இரண்டு அம்சங்களின் தாக்கத்தையும் பார்க்க முடிகிறது. அவற்றை அவரது முதல் கட்டக் கதைகள் என்று கூறலாம். இந்தக் கதைகளில் அவரது சமூக அக்கறையை வெளிப்படையாகக் காண முடிகிறது. எழுத்தின் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும்; ஏற்படுத்திவிட முடியும் என்ற வேகம் - முற்போக்கு எழுத்தாளர்களுக்கே உரித்தான வேகம்-காணப்படுகிறது. ஆனால் இந்தப் பாதையில் அவர் அதிக தூரம் பயணம் செய்யவில்லை. விரைவிலேயே அவர் எழுத்து ஆழமான விஷயங்களை நோக்கி நகர்கிறது. கோவில் காளையும் உழவு மாடும் என்ற கதை இதற்குச் சிறந்த உதாரணம்.

பிரசாதம் முதல் இல்லாத ஒன்று வரையிலான கதைகளை சு.ரா.வின் இரண்suraaடாம் கட்டக் கதைகள் என்று கூறலாம். இந்தக் கதைகளில் அவரது மொழியில் கூர்மையும் அழகும் கூடியிருப்பதைக் காண முடிகிறது. நுட்பமான கவனிப்புகள், சிக்கலான மனப் பதிவுகள், மனித ஆளுமைகளின் விசித்திரங்கள், காலத்தின் கணக்கற்ற கோலங்கள் ஆகியவை அனாயாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனித வாழ்வின் பல கூறுகளை மிகுந்த ரசனையுடனும் மிகையற்ற நெகிழ்ச்சியுடனும் இவை கூறுகின்றன. பிரசாதம், சன்னல், ஸ்டாம்பு ஆல்பம், எங்கள் டீச்சர், வாழ்வும் வசந்தமும் என்று பல கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மிகவும் கச்சிதமான வடிவம்கொண்ட சிறுகதைகளுக்கான உதாரணங்களாகக் காட்டக்கூடிய கதைகள் பல இந்தக் காலகட்டத்துக் கதைகளில் உள்ளன.

அழைப்பு என்ற கதையிலிருந்து தொடங்கும் சு.ரா.வின் இதர கதைகளை அவரது மூன்றாம் கட்டக் கதைகள் என்று வகைப்படுத்தலாம். இதிலுள்ள பெரும்பாலான கதைகளில் அவரது கூறல் முறையும் கையாளும் விஷயங்களும் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளன. கச்சிதமான யதார்த்தக் கதைகளை வெற்றிகரமாக எழுதிவந்த சு.ரா., வடிவம் சார்ந்த பரிசோதனைகளை இந்தக் கதைகளில் மேற்கொள்கிறார். அந்தப் பரி சோதனைகள், பரிசோதனைகளைப் பிரதான நோக்கமாகக் கொண்ட வலிந்த முயற்சிகளாக இல்லாமல் உள்ளடக்கம் சார்ந்த இயல்பான மாற்றங்களாக இருக்கின்றன. மனித வாழ்வின் மீது படர்ந்திருக்கும் மர்மங்களையும் புதிர்களையும் புரிந்துகொள்ள விழையும் தீவிரமான தேடலை இந்தக் கதைகளில் காண முடிகிறது. வாழ்வின் அடிப்படைகள், அதன் அர்த்தம் அல்லது அர்த்தமின்மை குறித்த தேடலையும் இந்தக் கதைகள் மேற்கொள்கின்றன. இந்த விசாரணை, ஒரு குறிப்பிட்ட காலம், இடம், ஆகியவற்றின் பின்னணியிலும் அவற்றைத் தாண்டியும் தன் பயணத்தை மேற்கொள்கிறது. தீவிரமான இந்தத் தேடலுக்கு இசைவாக மொழி மேலும் கூர்மையும் தீவிரமும் இறுக்கமும் பெற்று கனமான வாசிப்பு அனுபவத்தைச் சாத்தியமாக்குகிறது. அழைப்பு, போதை, பல்லக்குத் தூக்கிகள் ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற பல கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சு.ரா. தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய சில கதைகளை என் பார்வையில் அவரது நான்காம் கட்டக் கதைகள் என்று சொல்லலாம். மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்னும் தொகுப்பில் உள்ள கதைகள் மொழி, கதைப் பொருள்கள், கூறல் முறை ஆகிய அம்சங்களில் சு.ரா.விற்குள் சமீப காலங்களில் ஏற்பட்டுவந்த மாற்றங்களைக் காட்டுகின்றன. இந்தக் கதைகளை ஆழமான பொருளில் சு.ரா.வின் அடுத்த கட்டக் கதைகள் என்று வரையறுத்துவிட முடியாது. ஆயினும் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டேவரும் போக்கு சு.ரா.விடம் இறுதிவரை நீடித்தது என்பதை இக்கதைகள் காட்டுகின்றன. அத்துடன் முக்கியமான ஒரு சில மாறுதல்களும் இவற்றில் தெரிகின்றன, குறிப்பாகக் கூறல் முறையில். ஆவேசம், கூர்மை, நுட்பமான, ஆனால் இரக்கமற்ற அங்கதம், உள்ளார்ந்த தத்துவ விசாரணை ஆகிய அம்சங்கள் தமது இயல்பை இழக்காமலேயே தம்மை உருமாற்றிக்கொண்டிருப்பதை இக்கதைகள் காட்டுகின்றன. நிதானம், கனிவு, நெகிழ்வு ஆகிய அம்சங்கள் கூடியிருக்கின்றன. சு.ரா.வின் முந்தைய கட்டத்துக் கதைகளை நினைவுபடுத்தும் கதைகளுடன் முற்றிலும் புதிய தடத்தில் கால் பதிக்கும் கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. குறிப்பாகத் தலைப்புக் கதை.

இத்தொகுப்பில் வெவ்வேறு வகைமைகளில் அமைந்துள்ள கதைகளில் மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் தனித்துத் தெரிகிறது. தனது நேரடி அனுபவ வீச்சிற்குள் வராத வாழ்வின் கூறு பற்றிய கதையை எழுதும்போது புனைவுலகின் நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சினை உருவாகிவிடுவது இயல்புதான். முழுக்க முழுக்க இன்னொருவராக உருமாறி வாழ்க்கையை அணுகும் தன்மையின் மூலமாகவே (empathy) இத்தகைய கதைகளை வெற்றிகரமாக எழுத முடியும். விலங்குகளின் நலனுக்காகத் தன் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட அர்ப் பணித்துவிட்டு அதன் சகல வலிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மறியாவை சுரா.வின் கலை, மிகுந்த நம்பகத்தன்மையுடன் நம் முன் காட்டுகிறது. எழுதும் விஷயத்தின்பால் ஆழ்ந்த மனத்தோய்வும் அத்துறை குறித்த அறிவும் உளவியல் ரீதியான உருமாற்றமும் இல்லாமல் இது சாத்தியப்படவே முடியாது. படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வுக்கும் பரவலான வாசகர்களின் அனுபவ வீச்சிற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகை நம்பகத் தன்மையோடு உருவாக்கிக்காட்டுவதற்குத் தேவையான படைப்புத் திறன் சுந்தர ராமசாமியின் கடைசிக் காலத்திலும் உயிர்ப்புடன் இருந்தது என்பதற்கான அடையாளம் இந்தக் கதை.

அனுபவ எல்லைகளை மட்டுமன்றிக் காலம் வகுக்கும் எல்லைகளையும் கடந்து படைப்பின் கூறுகளைக் கூர்மையாக வெளிப்படுத்தும் திறனைப் பறைசாற்றும் பிள்ளை கெடுத்தாள் விளை என்னும் கதையையும் இதோடு இணைத்துப் பார்த்தால் சு.ரா.வின் படைப்புத் திறன் அவர் மறைவதுவரையிலும் வற்றாத ஊற்றாகப் பெருகிக்கொண்டே இருந்தது என்பதை உணரலாம். தேக்கமின்மை என்பது எழுத்து உள்ளிட்ட சு.ரா.வின் ஒட்டுமொத்த ஆளுமையின் பயணத்தையும் சுட்டும் தன்மை என்பதால் இதை உணர்த்தும் இக்கதைகள் சு.ரா. மறைந்துவிட்ட நிலையில் அவரை நினைவுகூரும் தருணத்தில் குறியீட்டு முக்கியத்துவம் பெற்றவையாக ஆகியுள்ளன.

o o o

இனி அவரது கதைகளை அவற்றின் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்திப் பகுத்துப்பார்க்கலாம்.

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் வாயிலாகத்தான் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களோடு எனக்கு முதலில் பரிச்சயம் ஏற்பட்டது. அதைப் படித்து முடித்த கையோடு சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் (க்ரியா வெளியீடு) என்ற நூலைப் படித்தேன். இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இரண்டு நூல்களுக்கும் பொதுவான சில அம்சங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. தீவிரமான அணுகுமுறை, அதைப் பிரதிபலிக்கும் இறுக்கமும் கூர்மையும் கொண்ட மொழி, சமரசமற்ற போக்கு, ஆழம் முதலான அம்சங்கள். அதன் பிறகு அவரது பல்லக்குத் தூக்கிகள் என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அந்தத் தொகுப்பும் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக அக்கதைகளின் மொழி, தீவிரம், நுட்பம், வடிவப் பரிசோதனைகள் ஆகிய அம்சங்களுக்காக.

பிரசாதம் என்ற தொகுப்பு அதன் பிறகுதான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. இந்த மூன்று நூல்களாலும் கவரப்பட்ட எனக்கு அந்தத் தொகுப்பு ஏமாற்றத்தைத் தந்தது. அதிலிருந்த பல கதைகள் நன்றாக இருந்தாலும் எளிமையான கதைகளாக இருந்ததாலேயே என்னை அதிகம் கவரவில்லை. அந்தத் தொகுதி எனக்குத் தந்த அதிருப்தியைத் தெரிவித்து சு.ரா.வுக்கு உடனடியாக ஒரு கடிதமும் எழுதினேன். ஒரு வாசகனாக என் பழைய கதைகளைப் படித்தால் நானும் அப்படித்தான் உணர்வேன் என்று அவர் எனக்கு எழுதியிருந்த பதில் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது இப்போதும் நினைவிருக்கிறது.

1951 முதல் எழுதிக்கொண்டிருக்கும் சு.ரா., 1966 முதல் 1973 வரை எதுவும் எழுதாமல் இருந்தார். இந்தக் காலகட்டத்தை மௌனத் தவம் என்றெல்லாம் சிலர் சொல்வதை சு.ரா. அங்கீகரித்ததில்லை. மனித ஜீவன்களுக்கு ஏற்படும் நெருக்கடிதான் காரணம் என்று அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இடைவெளிக்கான காரணம் லௌகீகமானதாக இருக்கலாம். ஆனால் இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள மாற்றம் லௌகீகத் தளத்திற்கு அப்பாற்பட்டது. இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதிய கதைகளுக்கும் அதற்கு முன் எழுதிய கதைகளுக்கும் சொல்லப்படும் விஷயம் சார்ந்தும் விதம் சார்ந்தும் வெளிப்படையான வித்தியாசங்கள் அழுத்தமாக இருக்கின்றன. என்னைப் பொருத்தவரையில் இடைவெளிக்குப் பிறகு எழுதிய கதைகளே என்னை அதிகம் கவர்ந்தவை.

ஆனால், சில ஆண்டுகள் கழித்து அவரது 'எளிமை'யான கதைகள் பற்றிய என் எண்ணம் மாறியது. 1990 வரையிலான சு.ரா.வின் சிறுகதைகளின் தொகுப்பு க்ரியா வெளியீடாக 1991இல் வெளியானபோது எல்லாக் கதைகளையும் கனவு சிறப்பிதழுக்குக் கட்டுரை எழுதுவதற்காகப் படித்தேன். அப்போது அவரது ஆரம்பகாலக் கதைகளில் முன்பு உணராத நுட்பங்களையும் ஆழங்களையும் உணர முடிந்தது. என்றாலும் தீவிரமும் இறுக்கமும் கவித்துவமும் ஓரளவேனும் இருண்மையும் (அல்லது பூடகத்தன்மையும்) கொண்ட பிற்காலக் கதைகளே என் மனத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தன. நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட எளிய கதைகளின்பால் அன்றைய சிறுபத்திரிகைச் சூழலில் நிலவிவந்த அலட்சிய மனோபாவம் என்மேல் செலுத்தியிருந்த தாக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

காலப்போக்கில் வாசிப்பில் ஏற்படும் மாற்றங்களால் எளிய கதைகள் பலவற்றை மாறுபட்ட கோணத்தில் அணுகியபோது எளிமையான கதைகளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவை மட்டுமே என்பது புரிய ஆரம்பித்தது. மகாபாரதக் கதைகளிலிருந்து டால்ஸ்டாய் கதைகள்வரை பல சிறந்த கதைகள் எளிய தோற்றத்துடன் உள்ளதை நினைவுகூர்ந்து எளிமையான கதைகளைக் கவனமான வாசிப்புக்கு உட்படுத்த முடிந்தது. பார்க்கப்போனால் எளிமை என்பதும் சிக்கல் என்பதும் ஒப்பீட்டளவிலேயே அவ்வாறு தோற்றம் கொள்கின்றன. வாசிப்பில் அதிகத் தேர்ச்சி இல்லாத ஒரு வாசகருக்குச் சிக்கலாகத் தோன்றும் ஒரு கதை, தேர்ச்சி உள்ள ஒரு வாசகருக்கு எளிய தோற்றம் தரலாம். உண்மையில் ஒரு நல்ல கதை இந்தப் பாகுபாடுகளைக் கடந்து நிற்கும். டால்ஸ்டாயின் அன்னா கரேனினா எளிதாக வாசித்துவிடக்கூடிய கதைதான். ஆனால் அதே சமயத்தில் அது பன்முகப் பரிமாணங்களும் ஆழமும் கொண்ட கதை.

பிரசாதம் முதலான சு.ரா.வின் கதைகள் எளிமையானவை. அதே சமயம் கூர்மையும் நுட்பமும்கொண்டவை. தீவிரத்தன்மையை இழக்காமலேயே சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைச் சாத்தியமாக்குபவை. ஆரம்ப நிலையில் உள்ள வாசகரிலிருந்து தேர்ந்த வாசகர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியவை. புதிதாகக் கதைகள் படிக்க ஆரம்பிக்கும் ஓர் இளம் வாசகர், என்ன படிக்கலாம் என்று என்னிடம் கேட்கும்போதெல்லாம் நான் புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்திரனின் புலிக்கலைஞன், ஆதவனின் ஓட்டம், சு.ரா.வின் பிரசாதம் போன்ற கதைகளைக் கொடுப்பதுண்டு. சு.ரா. ஆரம்ப காலத்தில் எழுதிய பிரசாதம், ஸ்டாம்பு ஆல்பம், எங்கள் டீச்சர் போன்ற பல கதைகள் இத்தகையவை.

அவரது எளிய கதைகளின் குணாம்சங்களை இப்படித் தொகுத்துக் கூறலாம்:

சித்தரிப்பின் துல்லியம், பூவின் இதழ் விரிவதுபோல் கதை இயல்பாக வெளிப்படும் போக்கு, நுட்பமான அவதானிப்புகள், குரலை உயர்த்தாத தொனி, கூர்மையும் ரசனையும் கொண்ட மொழி, சொல்லி உணர்த்துவதைக் காட்டிலும் சொல்லாமல் உணர்த்துவதற்கான பார்வையும் திறமையும், வாழ்வு மற்றும் வாழ்தல் குறித்த அடிப்படையான கேள்விகள் குறித்த விசாரணையைத் தூண்டிவிடும் தன்மை, சிறுகதை இலக்கணத்திற்கு உதாரணமாகக் கூறத்தக்க உருவ அமைதி, எல்லாவற்றுக்கும் மேலாக, சுவையான வாசிப்பைச் சாத்தியமாக்கும் கூறல் முறை. தொடர்ந்து கதைகள் எழுதப்படவும் வாசிக்கப்படவும் முக்கியக் காரணங்களாக உள்ள இந்த அம்சங்கள் சு.ரா.வின் எளிய கதைகளின் வலுவாக விளங்குகின்றன.

o o o

இடைவெளிக்குப் பிறகு எழுதப்பட்ட அவரது கதைகளின் களமும் மொழியும் பெருமளவில் மாறியிருந்தாலும் இந்த மாற்றத்திற்கான கூறுகள் அதற்கு முன்பே தெரிய ஆரம்பித்துவிட்டன. தயக்கம், முட்டைக்காரி, இல்லாத ஒன்று ஆகிய கதைகள் பின்னால் அவரிடத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. அது போலவே, இடைவெளிக்கு முந்தைய காலகட்டத்துக் கதைகளின் சாயல் கொண்ட விகாசம், நாடார் சார், பக்கத்தில் வந்த அப்பா போன்ற சில கதைகள் இடைவெளிக்குப் பிறகு எழுதப்பட்டுள்ளன. சு.ரா. எந்தப் போக்கினோடும் ஆணி அடித்ததுபோல ஒட்டிக்கொள்பவர் அல்ல என்பதையே இந்தக் கதைகள் காட்டுகின்றன. சிறந்த கதை என்பது தோற்றத்தில் காணப்படும் எளிமை அல்லது சிக்கல் ஆகியவற்றைச் சார்ந்ததல்ல என்பதையும் உணர்த்துகின்றன.

அழைப்பு முதலான கதைகளின் வடிவமும் பொருளும் எழுத்து பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டிய அவசியத்தைக் கோருகின்றன.

எழுத்து என்பது என்ன? இந்தக் கேள்விக்குத் திட்டவட்டமான புறவயமான ஒரு விடையை யாரும் அளித்துவிட முடியாது என்பது வெளிப்படை. எழுத்து என்பது ஒருவிதத்தில் சுயத்தின் வெளிப்பாடு. வாழ்வு பற்றியும் மனிதர்கள் பற்றியுமான அகவயமான விசாரணை. புறவயமான விசாரணையாகவும் இருக்கலாம். எழுத்து என்பது வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை என்று விளக்கலாம். எந்தக் கணக்கிற்கும் அடங்காத வாழ்வின் மர்மங்களையும் எந்தத் தர்க்கத்தாலும் அவிழ்க்க முடியாத வாழ்வின் சிக்கல்களையும் புரிந்துகொள்ளும் முயற்சி என்று வகைப்படுத்தலாம். எளிதில் வகைப்படுத்த முடியாத இந்த வாழ்வைக் காலம், வெளி சார்ந்தும் அவற்றிற்கு அப்பாற்பட்ட தளத்திலும் வைத்து ஆராயும் சவால் என்று வரையறுக்கலாம்.

பன்முக நோக்கங்களும் வெளிப்பாடுகளும் கொண்ட எழுத்து என்ற வசீகரப் புதிரின் தன்மைகளை இனங்காண இப்படி எத்தனை விதமாக முயன்றாலும் முழுமையாக அதை அடையாளப்படுத்திவிட முடியாது. எழுத்து என்ற சிக்கலான செயல்பாட்டில் ஏதோ ஒரு முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. வாழ்வெனும் மாயப் புதிரின் சிக்கலை அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவுமான முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. வாழ்வின் அடிப்படையையும் அதன் பொருளையும் - அல்லது பொருளின் மையையும் - தெடும் முயற்சி நடந்துகொன்டே இருக்கிறது. மனித அறிவு, அனுபவம் ஆகியவற்றின் வீச்சுக்குள் முழுமையாகச் சிக்காத பிரம்மாண்டமான வாழ்வியக்கத்தின் சமன்பாடுகளைச் சற்றேனும் அறிந்து கொள்ளும் முயற்சி பல்வேறு தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவோ மலினமான பயன்பாட்டுக்கு ஆளாக்கப்பட்டாலும் தேடல் என்ற சொல் இந்த முயற்சியின் சாரத்தை உணர்த்துவதற்கான வீரியத்தை இன்னமும் இழந்துவிடவில்லை என்றே தோன்றுகிறது.

எழுத்தை, வாழ்வு குறித்த அல்லது மெய்ம்மையைக் காண்பதற்கான தேடல் என்று - அதன் ஆழமான, விரிவான பொருளில் - சுருக்கமாக வரையறுக்க முடியும் என்றால் எழுத்து என்பது எப்போதும் புதிய விஷயங்களை, அடுக்குகளை, பரிமாணங்களை, பாதைகளைத் தேடிச் செல்வதாகத்தான் இருக்க முடியும். ஏற்கனவே அறிந்த ஒன்றை, அறிந்த விதத்திலேயே 'கண்டுபிடித்து', பழக்கப்பட்ட விதத்திலேயே வெளிப்படுத்துவது தேடல் ஆகாது. தேடல் என்பது எப்போதும் நம் அறிதலுக்கு அதுகாறும் வசப்படாத விஷயங்களை நாடிச் செல்வதாகவே இருக்கமுடியும். எனில் தேடலின் கருவியான எழுத்தும் புதிய விஷயங்களை, கோணங்களை, பரிமாணங்களை நோக்கியப் பயணமாகவே இருக்க முடியும். தமிழில் இத்தகைய எழுத்தை நாம் தேடிச் சென்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே எழுத்தாளர்கள் தென்படுவார்கள். அழைப்பு முதலான கதைகள் அத்தகைய அரிய எழுத்தாளர்களில் ஒருவராக சுந்தர ராமசாமியை அடையாளம் காட்டும் சிறுகதைகள்.

தொடக்கத்தில் முற்போக்குக் கதைகள் சிலவற்றை எழுதிய சு.ரா., பிறகு அந்தச் சூத்திரத்திலிருந்து விடுபட்ட கதைகளை எழுதினார். இப்படி அவர் எழுதிய 25 கதைகளும் அப்பழுக்கற்ற யதார்த்தவாதக் கதைகளாகவே இருந்தன. நவீனத்துவச் சிறுகதைக்குரிய வடிவ நேர்த்தி, சொற்செட்டு, துல்லியமான சித்தரிப்பு, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றுடன் சுந்தர ராமசாமிக்கே உரிய நுட்பமும், மொழியழகும் கூடியவையாக அந்தக் கதைகள் அமைந்திருந்தன. இவற்றில் பல கதைகள் சக எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் இந்தப் பாராட்டுக்குக் காரணமான பல கூறுகளைத் தவிர்த்துவிட்டு, புதிய விதத்தில், புதிய பாதையில் தன் எழுத்தைக் கொண்டுசெல்லத் தொடங்கினார் சுந்தர ராமசாமி. வெற்றிக்கு உத்தரவாதம் தரும் சமன்பாடுகளையும் ஏற்கனவே கைவரப்பெற்று, வரவேற்பும் பெற்ற வித்தைகளின் சூட்சுமங்களையும் விட்டுப் பிரக்ஞை பூர்வமாக விலகிச் செல்வது என்பது எந்தத் துறையிலும் அரிதான ஒரு நிகழ்வாகவே இருக்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை மிக அரிதான இந்த நிகழ்வை அழுத்தமாகவும் அர்த்தபூர்வமாகவும் சாத்தியப்படுத்திய முதல் கலைஞன் என்று சுந்தர ராமசாமியைச் சொல்லலாம். இந்த மாற்றம் வடிவம் மட்டுமன்றிச் சாரம் சார்ந்ததாகவும் இருப்பதுதான் முக்கியமான விஷயம்.

காலத்தின் போக்கில் தன்னைச் சதா புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு கலைஞர் வாழ்க்கை பற்றிய தனது விசாரணையையும் புதுப்பித்துக்கொண்டும் கூர்மைப்படுத்திக்கொண்டும் இருக்கிறார். அனுபவம், அனுபவத்தை எதிர்கொள்ளும் முறை, வாசிப்பு, விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் வளப்படுத்தப்படும் இந்த விசாரணை, எழுத்தின் மூலம் செறிவும் கூர்மையும் கொள்வதுடன் எழுத்தின் மூலமாகவே வலுவாக வெளிப்படவும் செய்கிறது. விசாரணையின் தீவிரத்தைப் பொறுத்து வெளிப்பாட்டின் தீவிரமும் வலுப்பெறுகிறது. இத்தகைய தீவிரமான நிலையில் விசாரணைக்குட்படுத்தப்படும் வாழ்வின் சிக்கல்களைப் போலவே படைப்பும் சிக்கலானதாக மாறிவிடுகிறது. சு.ரா.வின் கொந்தளிப்பு, பட்டுவாடா போன்ற கதைகள் சிக்கலானவையாக இருப்பதற்குக் காரணம் இதுதான். அழைப்பு, போதை, பல்லக்குத் தூக்கிகள், நெருக்கடி, காகங்கள் ஆகிய கதைகள் வழக்கமான வெளிப்பாட்டு முறையிலிருந்து பெருமளவில் விலகி யதார்த்தச் சித்தரிப்பின் எல்லைகளை நெகிழ்த்தியபடி தோற்றம் கொள்வதன் காரணமும் இதுதான். பிரசாதம் முதலான கதைகளோடு ஒப்பிடுகையில் இந்த வடிவ மாற்றம் தெளிவாகத் துலங்கும்.

கதையின் பல்வேறு அம்சங்களுடன் கதையின் வடிவத்தை இணைத்துப் பார்க்கையில் வடிவ மாற்றம் என்பது தன்னளவில் ஓர் இலக்கிய அனுபவம் என்பதை உணர முடியும். உதாரணமாக, பல்லக்குத் தூக்கிகள் கதையின் சாரத்தைக் கண்டடைய விழையும் வாசகர் அந்தக் கதையின் வடிவத்தைப் புறக்கணித்துவிட்டு அதைச் செய்யவே முடியாது. வடிவ மாற்றம் என்பது உத்தி அளவிலான மாற்றம் மட்டும் அல்ல. அது இலக்கிய அனுபவத்தின் தவிர்க்க இயலாத ஒரு பகுதி. வெளிப்பாட்டு முறையில் ஏற்படும் மாற்றமும் ஒரு படைப்பாளியின் தேடலின் விளைவுதான்; பார்வையின் வெளிப்பாடுதான். சுந்தர ராமசாமி இலக்கியத்தை இடையறாத தேடலுக்கான கருவியாகவும் ஊடகமாகவும் கருதுவதால்தான் அவரது கதைகளில் கையாளப்படும் விஷயங்கள் மட்டுமன்றி வடிவமும் மாறிவந்திருக்கின்றது.

இடைவெளிக்குப் பின் சு.ரா. எழுதிய முதல் கதை அழைப்பு. பிரசாதம், சன்னல், எங்கள் டீச்சர் முதலான கதைகளின் வாயிலாக அறியப்பட்டிருந்த சு.ரா.விடமிருந்து வெளிப்பட்ட இந்தக் கதை அவர் அதுகாறும் எழுதியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தனித்துத் தெரிந்தது. புற உலகைக் கதைக் களனாகக் கொண்டு, மனிதர்களின் பல்வேறு வகைமாதிரிகளை யதார்த்தமாகவும் நுட்பமாகவும் சித்தரித்து, வாழ்வின் பல்வேறு கோலங்களைக் கரிசனத்துடனும் கவனமாகவும் தீட்டிக் காட்டிய சு.ரா., அழைப்பு கதையில் தனது எழுத்து ஆளுமையின் வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். இதில் புற உலகம் வெறும் பின்புலமாக மாறுகிறது. அக உலகம் மையப்படுத்தப்படுகிறது. ஆழ, அகலம் காண இயலாத மனத்தின் சிக்கலான செயல்பாடுகள் கதைக்கான ஆதார முடிச்சாக மாறுகின்றன. உரையாடல் இருந்த இடத்தை உணர்வுகளும் சிக்கலான மனப் பின்னல்களும் பிடித்துக்கொள்கின்றன. சம்பவங்களுக்குப் பதிலாக மன இயக்கம் சார்ந்த மொழிப் பதிவு கதையை நகர்த்திச்செல்கிறது. கதைசொல்லியைத் தவிர வேறு கதைமாந்தர்களைப் பார்க்க முடியவில்லை. காலமும் வெளியும் மன இயக்கமும் தர்க்க அறிவும் ஆற்றாமையும் கதாபாத்திரங்களாகின்றன. பகுத்தறிவு சார்ந்த கறாரான யதார்த்தப் பார்வை அமானுஷ்யச் சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கியதாக நெகிழ்வடைகிறது. பெரும் துக்கத்திற்கு ஆளாகி, அமைதியிழந்து தவிக்கும் மனத்தின் அலைக்கழிப்பும் எல்லைகளை உடைத்தபடி விரியத் துடிக்கும் உள் மன எழுச்சியும் கதையின் முக்கியக் கூறுகளாகின்றன. கூர்மையான பிரக்ஞையும் தீவிரமான விசாரணையும் கொண்ட தனிமனிதனின் உளவியலும் சூழல் அவன்மீது செலுத்தும் நிர்ப்பந்தமும் கதையின் போக்கில் வெளிப்படுகின்றன. எல்லைக்குட்பட்ட பிரக்ஞைக்கும் எல்லைக்குட்படாத பிரக்ஞைக்கும் இடையிலான போராட்டம், வரையறைகளுக்குட்பட்டதாகத் தோற்றம் தரும் புறவெளி, எல்லையற்ற பெருவெளியுடன் கொண்டிருக்கும் உறவினை அடையாளம் காணும் தருணம், செயற்கையான எல்லைகளால் நெருக்கப்படும் பிரக்ஞை, எல்லையற்ற பெருவெளியோடு இணைத்துத் தன்னை இனம்காணும் தருணம் ஆகியவை கதையில் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன. அழைப்பு, சு.ரா.வின் அடுத்த கட்டத்தின் தொடக்கப் புள்ளி மட்டுமல்ல, அவரது எழுத்து ஆளுமையின் பரிணாம வளர்ச்சியின் அழுத்தமான அடையாளமும்கூட.

இந்த அடையாளம் அடுத்தடுத்த கதைகளில் அழுத்தம் பெற்றுவருவதைப் பார்க்க முடிகிறது. போதை, பல்லக்குத் தூக்கிகள், ரத்னாபாயின் ஆங்கிலம், பள்ளம், கொந்தளிப்பு, வழி, கோலம், எதிர்கொள்ளல், பட்டுவாடா, நெருக்கடி ஆகிய கதைகளில் இதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

o o o

இடைவெளிக்குப் பின் சு.ரா. எழுதிய கதைகளில் அழைப்பு, போதை, பல்லக்குத் தூக்கிகள், வாசனை ஆகிய கதைகள் சூழலில் அவை வெளிவந்தபோதே சிறப்பான கவனம் பெற்றன. சு.ரா. என்ற படைப்பாளிக்குள் நிகழ்ந்த மாற்றமும் அவரது படைப்பு ஆளுமை நிகழ்த்திய பாய்ச்சலும் பலராலும் உடனடியாக இனங் காணப்பட்டன. ஆனால் ஜே.ஜே: சில குறிப்புகள் வந்த பிறகு, சு.ரா. எழுதிய பல முக்கியமான சிறுகதைகள் போதிய கவனம் பெறவில்லை. தமிழ் நாவல் வரலாற்றில் அதற்குமுன் இல்லாத அளவுக்கு எதிர்வினைகளைப் பெற்ற ஜே.ஜே., அதன் பிறகு சு.ரா. எழுதிய படைப்புகளுக்கு ஒரு விதத்தில் அநீதி இழைத்துவிட்டது என்று தோன்றுகிறது. ஜே.ஜே. உருவாக்கிய பரபரப்பின் நிழல் 1981க்குப் பிந்தைய சு.ராவின் படைப்புகள்மீது கவிந்துவருகிறது. ரத்னாபாயின் ஆங்கிலம், குரங்குகள், விகாசம் முதலிய சில கதைகள் மட்டுமே இந்த நிழலின் வீச்சிலிருந்து தப்பி, போதிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. கொந்தளிப்பு, பள்ளம், கோலம், வழி, காகங்கள், பட்டுவாடா போன்ற சில முக்கியமான கதைகள் உரிய கவனிப்புப் பெறவில்லை.

Sura-book-3 மொழி, கையாளும் விஷயங்கள், கதை சொல்லும் உத்தி ஆகியவை சார்ந்து இந்தக் கதைகள் பற்றிப் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அழைப்பு, போதை, பல்லக்குத் தூக்கிகள் ஆகிய மூன்று கதைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மனநிலை சித்தரிக்கப்படுவதைக் காணலாம் (துக்கம், விடுதலைக்கான ஏக்கம்...). அதுபோலவே இருப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையேயான குரூரமான இடைவெளியைப் பற்றிப் பேசும் ரத்னாபாயின் ஆங்கிலம், பள்ளம், ஆத்மாராம் சோயித்ராம் ஆகிய கதைகளையும் ஒரே தளத்தில் வைத்துப் பேச முடியும். இந்த இடைவெளியை வெற்றுக் கனவுகளாலும் பாவனைகளாலும் மொழியின் வசீகரத்தாலும் நிரப்பிவிட ரத்னாபாய் முயல்கிறாள். பள்ளம் கதையின் கதைசொல்லியோ கனவுகளோடு செயல்பாடுகளையும் இணைத்து இந்த இடைவெளியை நிரப்ப முயல்கிறான். ஆத்மாராமின் முயற்சியில் கனவுகளும் செயல்பாடுகளும் பரஸ்பர இசைவுகூடித் தீவிரமடைகின்றன. இவ்வகையில் இந்த மூன்று கதைகளுக்கும் இடையே ஒரு தொடர்பும் படிப்படியான வளர்ச்சியும் இருப்பதை உணர முடியும்.

வழி என்ற கதையும் மிகவும் முக்கியமானது. கதையின் மேற்பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு, வனத்தில் வழி தவறிவிட்ட ஓர் இளைஞன் மீண்டு வருவதற்காக மேற்கொள்ளும் போராட்டத்தைச் சொல்லும் கதையாகவும் இதைப் படிக்கலாம். மாறாக, முழுக்க முழுக்கக் குறியீட்டுத் தளத்தில் வைத்தும் வாசிக்கலாம். ஆனால் பட்டுவாடா, எதிர்கொள்ளல் போன்ற கதைகளை அவை வெளிப்படுத்தப்படும் தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முடியாது. அவற்றின் அடியோட்டமாக இருக்கும் சரட்டைப் பிடித்துக்கொண்டு சென்றால்தான் உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்தக் கதைகளிலும், காகங்கள், அலைகள் ஆகிய கதைகளிலும் தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் இடையேயான மோதல்கள், முரண்கள், சிக்கல்கள் ஆகியவை பல்வேறு பரிமாணங்களில் எதிர்கொள்ளப்படுகின்றன. புலன்களால் நாம் உணர்ந்துவரும் புற உலகை இக்கதைகளில் பார்க்க முடியவில்லை. புற உலகச் சிக்கல்கள் குறித்த ஆழமான விசாரனையின் விளைவான தரிசனங்களின் பிரதிபலிப்புகள் கதைப் பரப்பில் புற உலகாக உருப்பெறுகின்றன. இந்தச் சித்திரம் நாம் வழக்கமாகக் காணும் புற உலகைப் போல இருக்க எந்த முகாந்தரமும் இல்லை. தோற்றத்தில் தெரியும் மாறுபாடு தோற்றம் சார்ந்ததல்ல. அக தரிசனங்களின் வெளிப்பாடு. இவற்றின் வடிவங்கள் சாரத்தின் புற அடையாளங்கள். இந்த வடிவம் தவிர்த்து அதன் சாரத்திற்கு இருப்பு இல்லை என்னும் அளவுக்குப் பரஸ்பரச் சார்புள்ளவை. வெவ்வேறு விதமான வாசிப்புகளுக்கும் பொருள் விரிவுக்குமான சாத்தியங்களைக்கொண்ட நுட்பமான படைப்புகள் இவை.

போதிய கவனம் பெறாமல்போன முக்கியமான கதைகளில் ஒன்று கோலம். சு.ரா.வின் சிறந்த கதைகளில் ஒன்று எனத் தயக்கமில்லாமல் சொல்லிவிடக்கூடிய கதை. இதில் வரும் கிழவருக்கும் கிழவிக்கும் இடையிலான அன்னியோன்யம், இயற்கைக்கும் அவர்களுக்குமான உறவு, இதர மனிதர்களுக்கும் அவர்களுக்குமான உறவு, புற உலகின் கொடுமைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதம், ஒரு சிறுமியிடம் அவர்கள் பெறும் ஆசுவாசம், அவர்களது பயணங்கள், பகல்பொழுதுகள் என்று பல்வேறு அம்சங்கள் மிக ஆழமாக, நேர்த்தியாக, நிதானமாக, இறுக்கம் தவிர்த்த கூர்மையோடு பதிவாகியிருக்கும் பாங்கு இக்கதையைப் படிக்கும்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது. கதையின் முடிவு மிக இயல்பானதாகவும் சோகமான கவித்துவ நாடகத்தின் முடிவாகவும் அமைந்து வாசகரின் மனத்தில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகிறது. புதுமைப்பித்தனின் பெரும் அபிமானியான சு.ரா., பு.பி.யின் செல்லம்மாள் கதையை மிகவும் சிறப்பான கதைகளில் ஒன்றாக அடையாளப்படுத்துகிறார். சு.ரா.வின் சிறந்த கதைகள் என்று எவ்வளவு கறாரான ஒரு பட்டியலைப் போட்டாலும் அதில் கோலத்திற்கு ஓர் இடம் இருக்கும்.

இந்தக் கதைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் சு.ரா.வின் மொழி. இலக்கிய வடிவம், எழுதுவதற்கான பொருள் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் மொழி விஷயத்திலும் சு.ரா. முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருந்ததை இக்கதைகள் காட்டுகின்றன. சு.ரா.வுக்குத் தொடக்கத்திலிருந்தே அழகான மொழிநடை கைவரப்பெற்றிருந்ததைப் பிரசாதம், சன்னல் முதலான கதைகளிலேயே பார்க்க முடிந்தது. ஆனால் தீவிரமும் செறிவும் கவித்துவமும் நுட்பமும் நிறைந்த மொழிநடையாக அது இருக்கவில்லை. 1977க்கு முன்பு அவரது செறிவான மொழி நடையை அவரது கட்டுரைகளில் மட்டுமே காண முடிந்தது. 1977க்குப் பிறகு எழுதப்பட்ட கதைகளில் தீவிரமான படைப்பு மொழியாக அது பரிணாமம் பெற்றது. அதன் பிறகு அது தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டபடி இருக்கிறது. ஜே.ஜே: சில குறிப்புகளை சு.ரா.வின் உச்சபட்ச மொழி சார்ந்த சாதனையாகச் சிலர் குறிப்பிடுவார்கள். ஆனால் ஜே.ஜே.வுக்குப் பிறகு எழுதப்பட்ட வழி, கோலம், காகங்கள் ஆகிய கதைகளில் அவரது மொழி அடுத்த கட்டத்திற்குப் போயிருப்பதை உணர முடிகிறது. பழைய சாதனைகளைத் திரும்ப நிகழ்த்தி, ஏற்கனவே பெற்ற வெற்றிகளை மறுபடியும் பெற்று அதன் மூலம் கிடைக்கும் திருப்தியை அற்பத் திருப்தியாகக் கருதும் கலைஞர்கள் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். சு.ரா.வும் இத்தகையதொரு கலைஞன் என்பதை அவரது எழுத்தின் பல்வேறு அம்சங்களிலும் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் உணர்த்துகின்றன.

o o o

எழுத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாழ்வு குறித்த விசாரணையைக் கூர்மைப்படுத்திக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் செல்லும்போது கதையின் மூலம் வாசகர் பெறும் ஒட்டுமொத்த அனுபவம் ஒருபுறம் இருக்க, கதையின் பல்வேறு அம்சங்கள் தரும் உதிரியான அனுபவங்களும் முக்கியமானவை. கதைகளினூடே மின்னும் படிமங்களும் வர்ணனைகளும் தரிசனங்களும் வாசகரின் கூரிய கவனிப்புக்கு உரியவை.

அழுத்தமான சில அனுபவங்கள் மொழிவழி வெளிப்படும் பாங்கு அந்த அனுபவங்களின் இயல்பையும் வலுவையும் வாசகரைத் தன்னுடையதேபோல உணரச்செய்வதாக இருக்கிறது. உதாரணமாக, அழைப்பு கதையில் காட்டருவியின் கீழ் நிற்கும் அனுபவம், "செத்த எருமைகள் முதுகில் விழுவது போலிருந்தது" என்று பதிவாகியிருக்கிறது. புறக்காட்சி சார்ந்த வர்ணனைகள் சில சமயம் வித்தியாசமான சித்திரங்களாக உருக்கொள்கின்றன: "கடலின் ஆழத்திலிருந்து ராக்ஷஸத் தடி உருண்டைகளை மேலே தள்ளுவது போல் நீரோட்டம் திமிறியெழும்" (அலைகள்). பள்ளம் கதையில் சாலைகள் மற்றும் மனித நடமாட்டங்கள் பற்றிய வர்ணனை, தேர்ந்த ஓவியரின் சித்திரமாக உருப்பெறுகிறது. வழி கதையில் அடர்த்தியான வனப்பகுதியைப் பற்றிய சித்திரம் உயிர்த் துடிப்புடன் தீட்டப்பட்டிருக்கிறது ("மரங்கள் விட்டெறிந்த வானத்தின் துண்டு துணுக்குகள்" என்பது போன்ற வித்தியாசமான கோடுகளும் இந்தச் சித்திரத்தில் உள்ளன). "நரைத்துவரும் இருள்" என்பனபோன்ற வர்ணனைகள் (காகங்கள்), மரங்களை "அம்மண ஸ்தூலிகளாக"க் காணும் படிமங்கள் (வழி) என்று அடுக்கிக்கொண்டேபோகலாம். புற உலகம் மாறுபட்ட தோற்றம் கொள்ளும் பல்லக்குத் தூக்கிகள் கதையிலும் புற உலகப்பொருள்களின் சித்தரிப்பில் கூரிய அவதானிப்பின் துல்லிய வெளிப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. ("கட்டைகளின் தொலியைச் சில இடங்களில் பூச்சி அரித்திருந்தது. அது சட்டையின் நூலைப் பிரித்த இடம் மாதிரி இருக்கிறது. உளுத்திருக்கவில்லை. சேர்மானங்கள் நல்ல நெருக்கம். ஊதுவத்தி குத்த முடியாது".)

வர்ணனைகள், படிமங்கள், சித்திரங்கள் ஆகியவை ஒருபுறம் இருக்க, கதைகளினூடே வந்துவிழும் சில அற்புதமான வரிகள் கதையின் ஆழத்தைக் கூட்டுவதோடு, தம்மளவில் ஒரு தரிசனமாகவும் விளங்குகின்றன. வாசகரின் அனுபவ உலகுடன் உறவுகொண்டு அவர்களது வாழ்க்கைப் பார்வையைப் பாதிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. சில உதாரணங்கள்:

n நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம். (அழைப்பு)

n அழுந்த மறுத்துக் கரையேற நான் அடித்த நீச்சல் உலகின் எந்த சக்தியையும் ஓய்வு கொள்ளவிடாது. (அழைப்பு)

n மனதின் பாழ்பட்ட குகைகளிலிருந்து ஒவ்வொரு பேயாகப் புறப்பட்டு என்னைக் கிளறி துவம்சம் பண்ணுவதற்குள் அடுத்தாற்போல் எங்கேயாவது என்னைச் சொருகிக்கொண்டுவிட வேண்டும் . . . (போதை)

n கயிற்றிலிருந்து விடுபட்ட பம்பரத்தின் துக்கத்தை நான் சொல்ல முற்படும்போது, சொல்லச் சொல்ல பம்பரத்திற்கும் கயிறுக்குமான உறவைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன். (கொந்தளிப்பு)

n சுதந்திரம் இல்லை எனில் பொன் கொண்டு, பெண் கொண்டு, பெற்றெடுக்கும் குழந்தைகள் கொண்டு ஏதும் புண்ணியமில்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது. இந்த எளிய உண்மையை இவர்களுக்குக் கற்றுத்தரும் முயற்சியில் கோடானு கோடி வருஷங்கள் தோல்வி கண்ட சரித்திரம் இப்போது வெற்றி கண்டுவிட்டது. அவர்களுடைய சகல இருப்பிடங்களையும் இனி வன விலங்குகள் எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் உடல் வருந்திச் செழிக்க வைத்த பயிர்கள் எல்லாவற்றையும் கொடிய மிருகங்கள் மேயட்டும். அவர்கள் காலங்காலமாகக் கட்டியெழுப்பிய வீடுகள்மீதும், பண்புகள்மீதும், ஊர்வனவோ இழைவனவோ புகுந்து புறப்படட்டும். அவர்களுடைய குழந்தைகளின் தொட்டில்களில் இனி பாம்புகள் குஞ்சு பொரிக்கட்டும். மரணங்களுக்குப் பயந்து அவர்கள் இதுகாறும் சகித்துக்கொண்டுவந்திருக்கிறார்கள். இனியும் சகிப்பது சாத்தியமில்லை. எந்த மரணத்துக்கு அவர்கள் இதுகாறும் பயந்துவந்தார்களோ, அந்த மரணத்தைக் கொடியாகப் பிடித்துக்கொண்டு இவர்கள் இப்போது புறப்பட்டுவிட்டார்கள். இனி, கத்தியைக் காட்டியோ, அம்பைக் காட்டியோ, வேலைக் காட்டியோ அவர்களைப் பயமுறுத்த முடியாது. (கொந்தளிப்பு)

n காலமே, ஒரு மோசமான தாக்குதலை என் மீது நிகழ்த்து. என்னை உருக்குலை. சின்னாபின்னப்படுத்து. நீ஢ பார்த்து வெட்கப்படும் அளவுக்கு உனக்குக் கவிதையில் பதில் சொல்கிறேன். (ஆத்மாராம் சோயித்ராம்)

n நான், காலொடிந்து சேற்றில் புரளும் ஜீவன்களுக்கு அவர்களுடைய சிறகுகளைக் காட்ட வந்தவன். இப்போது பதுங்கிக்கொண்டிருக்கிறேன். (ஆத்மாராம் சோயித்ராம்)

n நினைவுக் கிடங்குகளில் கசப்புப் பழங்களையே மிதித்துப் பழக்கப்பட்டவன். (எதிர்கொள்ளல்)

o o o

மிகவும் கவனமாக எழுதுகிறார் என்ற ஒரு 'குற்றச்சாட்டு' சு.ரா. மீது சுமத்தப்படுகிறது. அதாவது, கலை உணர்வின் தன்னியல்பான, திட்டமிடப்படாத, கட்டற்ற பாய்ச்சலுக்கு வழிபட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் அவரது பகுத்தறிவு சார்ந்த மூளையாலும் தனது ஆளுமை குறித்த படிமம் குறித்த எச்சரிக்கை உணர்வாலும் கலை வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறார் என்ற பொருளில் சிலர் அப்படிக் கூறுகிறார்கள். பிசிரற்ற, நேர்த்தியான மொழிநடையும் வெளிப்பாட்டு முறையும் பெரிய பாவமாகக் கணிக்கப்படுகிறது. மொழி என்பது இலக்கிய வெளிப்பாட்டுக்கான தவிர்க்க முடியாத கருவி என்றால் மொழியைப் பிழையின்றியும் பிசிரின்றியும் எழுத முயற்சிப்பது அந்தக் கருவியின் மூலம் நாம் சாதிக்க நினைக்கும் லட்சியத்தை எய்துவதற்கான தவிர்க்க இயலாத முயற்சி. மொழி சார்ந்த கவனம் கலை ஆவேசத்தின் இயல்பான வெளிப்பாட்டுக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை. செவ்விலக்கியப் படைப்புகள் முதல் பின்நவீனத்துவப் படைப்புகள்வரை பல எழுத்துக்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். பிழையின்றி எழுதத் தெரியாதவர்களும் மொழி சார்ந்த கவனத்தை மேற்கொள்ளும் உழைப்பைச் செலுத்தாதவர்களும் மொழியைப் பொறுப்பின்றிக் கையாள்வது மொழிக்கு இழைக்கும் அநீதி என்பது பற்றிய பிரக்ஞை அற்றவர்களும் முன்வைக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர்களது பலவீனங்களையே அம்பலப்படுத்துகின்றன. பிழைபட்ட மொழி என்னும் முகத் தழும்புகளைக் கலை ஆவேசம் என்னும் முகமூடி போட்டு மறைக்கும் முயற்சிகளின் வெற்றி நீடித்திருப்பதில்லை என்பதற்குச் சாட்சியாகக் குவிந்துள்ள பிரதிகளின் மலை ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

மொழி சார்ந்து எடுத்துக்கொள்ளும் கவனம் கலையைப் பாதிப்பதில்லை என்பது மட்டுமல்ல; அதை மேலும் செழுமைப்படுத்துகிறது என்பதை அழைப்பு, ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள், கோலம், வழி போன்ற கதைகளின் மூலம் உணரலாம்.

தனது படிமம் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்த கவனம் சு.ரா.வின் கதைகளின் இயல்பான பாய்ச்சலை மட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டும் இத்தகையதுதான். அழைப்பு, போதை, வழி, பள்ளம் போன்ற கதைகளில் உள்ள பல வரிகளை முன்வைத்து இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியும். சு.ரா.வின் தலைமுறையைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் எழுதத் தயங்கும் எத்தனையோ வார்த்தைகளையும் அந்தரங்க உணர்வுகளையும் அவர் தேவை சார்ந்து வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அதிர்ச்சி மதிப்புக்காகவோ 'துணிச்ச'லைக் காட்டிக் கொள்வதற்காகவோ 'அந்தரங்க'த்தைக் கடை பரப்புபவர்களின் படைப்புகளோடு ஒப்பிட்டால் சு.ரா.வின் எழுத்து 'சுத்தபத்த'மான எழுத்தாகத் தெரியலாம். ஆனால், ஒரு படைப்பாளி தனது கலைத் தேவைக்கு நியாயம் செய்வதற்கான வெளிப்பாட்டு முறையைத் தேர்வுசெய்வதில் எந்தத் தயக்கத்துக்கும் ஆட்படாமல் இருக்கிறாரா என்று பார்க்கையில் சு.ரா.வின் வெளிப்பாட்டு முறை குறித்து நாம் உடன்பாடான முடிவுக்கே வர முடியும்.

o o o

என் பார்வை சார்ந்து வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கும் சு.ரா.வின் கதைகளை ஒட்டுமொத்தமாக அசைபோடும்போது சில அம்சங்கள் அழுத்தம் பெறுகின்றன. முதலாவதாக, சு.ரா.வின் இடையறாத பயணம். எத்தனையோ முக்கியமான எழுத்தாளர்கள் தாங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் மிகச் சிறந்த கதைகளை எழுதிவிட்டு, பிறகு மிகச் சாதாரணமான கதைகளையோ அல்லது தங்கள் பழைய கதைகளின் பலவீனமான பிரதிகளையோ உற்பத்திசெய்து தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பலவீனத்திற்கு சு.ரா. இரையாகவில்லை என்பதை அவரது கதைகளை மேலோட்டமாகப் படிக்கும்போது கூட உணர முடியும். பழைய சாதனைகளில் திருப்தியடைய மறுக்கும் மனமும் இடையறாத தேடலும்கொண்ட கலைஞனின் கலைப் பயணம் தேக்கமடைய முடியாது என்பதையே இது காட்டுகிறது.

அடுத்தபடியாக வாழ்வு குறித்த அவரது பார்வையையும் தேடலையும் கலாபூர்வமாகப் பதிவு செய்யும் தன்மை. தமிழில் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கும் யதார்த்தக் கதை மரபுக்கு இன்றுவரையிலும் பல வாரிசுகள் உருவாகியிருக்கிறார்கள். சு.ரா.வும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்பதைக் கலைநயத்துடன் காட்டுவதோடு சு.ரா.வின் கதைகள் நின்றுவிடுவதில்லை. வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது எனபது குறித்த தேடலை மேற்கொள்கின்றன. வாசகரிடத்திலும் இந்தத் தேடலைத் தூண்டிவிடுகின்றன. வாழ்வின் பல்வேறு முரண்பாடுகளுக்கிடையே காணக் கிடைக்கும் இசைவையும் இசைவுகளுக்கிடையே ஊடாடும் முரண்பாடுகளையும் பதிவுசெய்கின்றன. வெறும் பதிவு என்பதை அவர் கதைகளில் பெரும்பாலும் காண முடியாது. இருப்பின் பல்வேறு கோலங்களைக் காட்டுவதோடு, அவற்றின் மூலங்களைத் தேடிச் செல்லும் பயணமும் காணப்படுகிறது. தமிழில் மிக அபூர்வமான அம்சம் இது. அவர் கதைகளின் ஆழத்தைக் கூட்டும் அம்சம்.

கொள்கை சார்ந்தோ வடிவம் சார்ந்தோ ஒரு குறிப்பிட்ட வகைக்குள் சு.ரா. முடங்கிவிடவில்லை என்பதையும் அவரது சிறுகதைகள் காட்டுகின்றன. ஆரம்ப காலங்களில் முற்போக்குச் சாயலுள்ள கதைகளை எழுதி வந்த அவர் அதிலிருந்து விடுபட்டது போலவே பிற்காலத்தில் தீவிரமான கதைகளை எழுதிய பிறகும் அந்த பாணியில் தன்னை முடக்கிக் கொள்ளவில்லை. அழைப்பு, போதை போன்ற இறுக்கமும் தீவிரமும் கொண்ட கதைகளை எழுதிய பிறகும் அவரால் ஆரம்ப காலத்தில் எழுதிய பிரசாதம் போன்ற எளிமையான கதைகளை எழுத முடிகிறது. (உதாரணம்: விகாசம், பக்கத்தில் வந்த அப்பா). தேடலுக்கும் சிந்தனையின் தீவிரத்திற்கும் இணையாக, நெகிழ்ச்சி, மனித நேயம், ரசனை ஆகியவற்றுக்கும் அவர் கதைகளில் முக்கியத்துவம் இருக்கிறது. குறியீட்டுத் தன்மைகொண்ட கதைகளும் தம்மளவில் முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருபவையாக உள்ளன. (உம்: வழி, குரங்குகள்)

என் பார்வையில் சு.ரா.வின் சிறந்த கதைகளில் பெரும்பாலானவை பல்லக்குத் தூக்கிகள், பள்ளம் ஆகிய தொகுப்புகளில் இடம்பெற்ற கதைகளில் உள்ளன. சு.ரா.வின் இலக்கிய ஆளுமையையும் பங்களிப்பையும் எடைபோட இந்தக் கதைகள் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். தங்களது பழைய சாதனைகளையும் வெற்றிகளையும் திரும்பத் திரும்ப நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள் நிறைந்த ஒரு சூழலில் புதிய சவால்களை நாடிச்செல்லும் ஒரு கலைஞனின் மேல் நோக்கிய பயணத்தின் பதிவுகளாக இவற்றை அடையாளப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

o o o

சு.ரா.வின் மொழியைப் பற்றிச் சொல்லாமல் அவரது படைப்புகளைப் பற்றிய பேச்சு முழுமை பெற முடியாது. தமிழில் தனக்கென்று தனி மொழியை உருவாக்கிக்கொண்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய மிகச் சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர். மொழியின் நேர்த்தி கெடாமலேயே அதில் தீவிரத்தன்மையை ஏற்ற முடியும்; மிகைப்படுத்தாமலேயே கம்பீரத்தைக் கூட்ட முடியும்; மொழியைச் சிடுக்காக்காமலேயே சிக்கல்களை அதில் பதிவுசெய்ய முடியும் என்பதை இவரது படைப்பு மொழி காட்டுகிறது. வர்ணனைகளில் காட்சித் தன்மையும் கவித்துவமும் இணைந்துள்ளன. சிந்தனையின் வெளிப்பாடுகள் தீவிரத் தன்மைகொண்டவையாக இருக்க, மன அவசத்திற்கு மொழி வடிவம் தரும் போது உணர்ச்சி வேகம் கொப்பளிக்கிறது. வாழ்வை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதால் பிறக்கும் நகைச் சுவை வெளிப்படும்போது மொழி உற்சாகமாகத் துள்ளுகிறது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, சு.ரா. தனது படைப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்துகிறார் என்பதுதான். அவருடைய வெற்றி பெறாத கதைகளில்கூட இந்த அம்சத்தைப் பார்க்க முடியும். தனது வாசகர் தன் கதைகளைப் படிக்கச் செலவிடும் நேரத்தையும் அவரது முதிர்ச்சியையும் மதித்து எழுதும் ஒரு படைப்பாளியால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.

அடுத்ததாகக் காலம் என்ற அம்சம் சு.ரா.வின் கதைகளில் இடம் பெறும் விதத்தைக் குறிப்பிட வேண்டும். சு.ரா.வின் கதைகளில் அவர் வாழ்ந்த, காலத்தின் பதிவுகள் அவ்வளவாகக் காணக் கிடைப்பதில்லை. புற உலகத் தோற்றங்களையும் மாற்றங்களையும் கச்சிதமாகச் சித்தரிக்கும் சு.ரா., புற உலக நிகழ்வுகளை அவ்வளவாகப் பதிவுசெய்வதில்லை. அவர் காட்டும் காட்சிகளைக் கொண்டுதான் காலத்தை நாம் ஒருவாறு அனுமானிக்க முடிகிறது, நிகழ்வுகளைக் கொண்டு அல்ல. அவரது கதைகளை வைத்து அவற்றின் காலகட்டங்களை உணர முயன்றால் அது பிடிகொடுக்காமல் நழுவுகிறது. ஆனால் காலம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பலவிதமான தடங்கள் காணக் கிடக்கின்றன. தனி நபர்களிடமிருந்து தொடங்கி குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் கலாச்சார வாழ்வு வரையிலும் காலம் ஏற்படுத்தும் நம்ப முடியாத மாற்றங்களைத் துல்லியமாக நம் கண் முன் நிறுத்திவிடுகிறார் சு.ரா. வாழ்வும் வசந்தமும், கோலம், கொந்தளிப்பு என்று பல கதைகளில் காலம் என்பது ஒரு சூட்சுமமான பாத்திரமாகவே இடம்பெறுகிறது. ஆனால் இந்தக் காலம் நமது அன்றாட நிகழ்வுகள், நமது அனுபவத்திற்கு வசப்படும் வெளி ஆகியவற்றைத் தாண்டிய ஒன்றாக அமைகிறது.

o o o

ஒரு படைப்பாளியின் வலுவான அம்சமே அவனது பலவீனத்திற்கும் காரணமாக அமைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. சு.ரா.வும் இதற்கு விலக்கல்ல. சு.ரா.வின் வலுவான அம்சங்களில் ஒன்றான அவரது பிரத்யேகமான மொழியே சில சமயம் இலக்கிய அனுபவத்திற்குத் தடையாக அமைந்துவிடுகிறது. மிகுந்த நேர்த்தியுடனும் கவனத்துடனும் சு.ரா. கட்டமைக்கும் மொழி, படைப்பு மொழியின் சாத்தியப்பாடுகளை விரிவுபடுத்துகிறது என்பதில் சந்தேமில்லை. அதே சமயம் வாசகரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு இறுக்கமாகவும் அது சில சமயம் அமைகிறது. இவரது மொழியின் கவித்துவ அம்சம் எவ்வளவுதான் நம்மைக் கவர்ந்தாலும் ஒருசில கதைகளில் அடுக்கடுக்காகக் குவிக்கப்படும் கவித்துவமான படிமங்களைச் சிக்கெடுத்துக்கொண்டு கதையைப் பின்தொடர வேண்டிய சிரமத்திற்கும் ஆயாசத்திற்கும் வாசகர்கள் ஆளாக வேண்டியிருக்கிறது. கொந்தளிப்பு, பட்டுவாடா ஆகிய கதைகளை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். அதேசமயம் அழைப்பு, போதை போன்ற சில கதைகளில் கவித்துவமான படிமங்களும் இறுக்கமான மொழியும் வாசகனை ஆயாசப்படுத்தாத வகையில் இருப்பதையும் குறிப்பிடவேண்டும். அதுபோலவே பள்ளம், ரத்னாபாயின் ஆங்கிலம், ஆத்மாராம் சோயித்ராம் போன்ற கதைகளில் மொழிசார்ந்த அம்சங்கள் சற்றும் உறுத்தாமல் முழுக்க முழுக்கக் கதைக்கு அனுசரணையாகவும் அழகைக் கூட்டுவதாகவும் இருக்கின்றன.

வடிவ ரீதியான பரிசோதனை என்ற அம்சத்திலும் சில பாதகமான அம்சங்கள் சு.ரா.வின் கதைகளில் உள்ளன. பல்லக்குத் தூக்கிகள், எதிர்கொள்ளல் போன்ற கதைகளின் பரிசோதனைகள் வெற்றிகரமான முயற்சிகளாக இருக்கின்றன. இதுவே சற்று எல்லை மீறிச் சென்று கொந்தளிப்பு, பட்டுவாடா, நெருக்கடி போன்ற கதைகளை அன்னியமாக்கிவிடுகின்றன.

சு.ரா.வின் கதைகளில் காலம் என்ற அம்சத்தைப் போலவே பாத்திரங்களின் அடையாளங்களும் பிடிகொடுக்காமல் நழுகின்றன. ஆரம்ப காலக் கதைகளில் வரும் பாத்திரங்களை நாம் தெளிவாக உணரும் அளவுக்குப் பிற்காலக் கதைகளில் - அழைப்பு, போதை, அலைகள், கொந்தளிப்பு, எதிர்கொள்ளல், வழி போன்ற கதைகளில் - பாத்திரங்களின் அடையாளங்களை உணர முடிவதில்லை. இந்தக் கதைகளில் வரும் பலரும் ஒரே நபரின் வெவ்வேறு முகங்களாகக் காட்சியளிக்கிறார்கள். அந்த முகங்களும் தெளிவாகத் துலங்கவில்லை. மிக அந்தரங்கமான தொனியில் பேசும் இவர்களது குரல் நமது மனத்தில் சட்டென்று இடம் பிடித்தாலும் இவர்களது தனி அடையாளங்கள் நமக்குத் தெரிவதில்லை. இவர்கள் அனைவரையும் மனித இனத்தின் ஆதாரமான சில அவஸ்தைகளைப் பிரதிபலிக்கும் பொது மனிதனின் வெவ்வேறு முகங்களாகக் கற்பித்துக் கொள்ளத்தான் நம்மால் முடிகிறது. இது சாதகமான அம்சமா பாதகமான அம்சமா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்த விஷயம். என்னைப் பொறுத்தவரையில் தனி அடையாளங்களை அழித்துவிட்டு அல்லது அடையாளம் தெரியாத அளவுக்குப் புகைமூட்டமாக்கிவிட்டு மனித இயல்பின், இருப்பின் ஆதாரமான அவஸ்தைகளைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். காலம், இடம், பிரத்யேக அடையாளங்கள் தாண்டிய பொதுவான தளத்தில் மானுட உணர்வுகளையும் அவஸ்தைகளையும் வைத்துப் பார்க்க இந்த அம்சம் உதவுகிறது. இது இதிலுள்ள மிக முக்கியமான சாதகம். ஆனால் தனி அடையாளங்களை அல்லது அவை சார்ந்த சமிக்ஞைகளையேனும் அவை கொண்டிருந்தால் அந்தப் பாத்திரங்களுக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமாகக்கூடும்.

o o o

சு.ரா.வின் சிறுகதைகள் தரும் ஒட்டுமொத்த அனுபவத்தை இப்படிச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்க்கலாம்: அவை வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. காலம், வெளி ஆகியவற்றைத் தாண்டிய தளத்தில் மானுட வாழ்வின் மர்மங்கள் குறித்த விசாரணையைச் சாத்தியமாக்குகின்றன. மனித துக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவு செய்கின்றன.

வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன.

o o o

குறிப்பு

l காகங்கள் தொகுப்புக்கு இந்தியா டுடேயில் எழுதிய மதிப்புரை.

l அதே தொகுப்பைப் பற்றி தீராநதி இணைய இதழில் எழுதிய விரிவான விமர்சனக் கட்டுரை.

l இல்லாத ஒன்று (சு.ரா.) தொகுப்புக்கு எழுதிய முன்னுரை.

l அழைப்பு (சு.ரா.) தொகுப்புக்கு எழுதிய முன்னுரை.

நெய்தல் இலக்கிய அமைப்பு 2005 டிசம்பரில் நாகர்கோவிலில் நடத்திய சு.ரா. நினைவரங்கில் மேற்கண்ட கட்டுரைகளைத் தொகுத்து எழுதி வாசித்த கட்டுரை சில மாற்றங்களுடன் இங்கு வெளியாகியுள்ளன. மேற்படி கட்டுரைகளை எழுத வாய்ப்பளித்த இதழ்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் கட்டுரை வாசிக்கக் கேட்டுக்கொண்ட நெய்தல் கிருஷ்ணனுக்கும் நன்றி.

அரவிந்தன்

நன்றி: காலச்சுவடு  இதழ் 82, அக்டோபர் 2006

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்