Jun 13, 2010

கோப்பம்மாள் - கோணங்கி

 

  அஞ்சாம் வகுப்பு கோப்பம்மாளுக்கு பச்சைக்கலர் பாவாடைதான் இருக்கிறது. பாவாடை தான் பச்சை என்றால் பெயரைக் கூட பச்சையென்று கூப்பிட்டார்கள். 'பள்ளிக்கூடம் வரும் போது தம்பிய தூக்கிட்டு வராதே...' என்று அஞ்சாப்பு வாத்தியார் சொன்னார். பிள்ளை தூக்கப் போட்டுருவாக சார். எங்கைய்யா பள்ளிக்கூடத்துக்கு வுடரது சார் என்றாள்.

கோப்பாம்மாவுக்கு பள்ளியை விட்டு வெளியேறினால் அனேக வேலைகள் இருந்தன. ஊர்க்கஞ்சி எடுக்க போகணும். அதற்கெல்லாம் எப்பொழுதோ பழகிவிட்டாள். வீடுவீடாய் போய் விழுந்த உருப்படிகளை எடுத்து பொதியில் சேர்த்தாள். konangi

வீட்டில் கழுதைகள் நிற்காது. ஒவ்வொரு கழுதையும் ஒவ்வொரு திக்கில் நிற்கும். அவற்றை வீடு சேர்க்க வேண்டும். குட்டிக் கழுதை தரியில் நிற்காது. குட்டிக் கழுதை அவளைக் கண்டு ஓடும். மேட்டு நிலத்தில் நின்று பார்க்கும். கிட்டவராது. கன்னுக்குட்டி என்று பெயர் வைத்திருந்தாள், குட்டி கழுதைக்கு. உன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டது, ஓடையில் நிக்காதே... என்று செல்லம் கொஞ்சினாள். கோப்பம்மாள் கன்னுக்குட்டியிடம் போய் நின்றாள். சின்ன மூஞ்சில் அழகு வடிந்தது. திடீரென்று ஒடியது. அவளும் விரட்டினாள். வண்ணாக்குடியில் உள்ள கழுதை மேல் எல்லாம் அதிசயங்கள் இருந்தன. குட்டிக் கழுதை துள்ளியது.

வண்ணாப்புள்ளை பள்ளிக்கூடம் போவது வண்ணாத்திக்குப் பெருமை. பள்ளிக்கூடம் போனால் தம்பி அழுவான். குரங்குகுட்டி மாதிரி சவளைப்பிள்ளை அது. அண்டி தள்ளி வீசும். அவன்கிட்டத்தில் யாரும் ஒட்டவில்லை. தம்பி ஆயிருந்து விடுவான், பள்ளிக்கூடத்தில். முகம் சுழித்து வகுப்பறையே ஒடியது.

வண்ணாத்தியை அடிப்பதை என்று நிறுத்துகிறோமோ அன்றே உலகம் பாழ் என்ற பிரம்புக் கொள்கை வைத்திருந்தார், அஞ்சாப்பு வாத்தியார். வகுப்பறையைக் கழுவிவிட்டு சுத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். கோப்பம்மாள் அழுது கொண்டே சுத்தம் செய்தாள். எல்லாப் பிள்ளைகள் மூஞ்சிலும் சுழிப்பு இருந்தது. அவளுக்கு அவமானமாய் போய்விட்டது.

கோப்பம்மாளைக் கண்டு முகம் சுழிக்காதவர் ஒருசிலர் இல்லாமலில்லை. வண்ணாத்திப்பூச்சி என்பான் மாரியப்பன். மாரியப்பனின் மண்டை முன்னும் பின்னும் சப்பளிந்து இருந்தது. பிளசர் மண்டை என்றார்கள் அவனை. கிள்ளி வைப்பான் பிள்ளைகளை. பிளசர் மண்டையில் வாத்தியாரின் குட்டுகள் விழும்.

அவன் பள்ளிக்கூடம் வரும் போது ஊதா சட்டை போட்டு வந்தான். ஊதா பிளசர் என்றார்கள் அவனை. ஒருவர் மாற்றி ஒருவர் பட்டங்கள் கொடுத்தது பற்றிப் பெரியவர்கள் கவனிப்பதில்லை.

மாரியப்பன் வீட்டுக்கு அழுக்கு எடுக்கப் போனாள் கோப்பம்மாள். ஊதாச் சட்டைகள் 3 இருந்தன மாரியப்பனுக்கு. என்றோ செத்துப் போன அய்யாவின் சட்டைகளே அவை. மாரியப்பன் அய்யா விறகு வெட்டி. ஊதாசட்டையும் பெல்ட்டும் போட்டிருந்தார். அய்யா இருக்கும் போதே அவன் வீட்டில் 3 சட்டைகள் இருந்தன. டவுசர் மட்டும் போட்டிருந்தான் மாரியப்பன். அவனுக்கு ஊதா சட்டைகளை விட்டுவிட்டு அய்யா மண்ணுக்குள் போய்விட்டார்.

மாரியப்பனின் பஞ்சர் ஒட்டிய டவுசர்கள் நிறமிழந்துவிட்டன. பையில் வெல்லக்கட்டி போட்டு வைப்பதால் எலிகள் கொரித்தன. மாரியப்பன் வீட்டில் வட்டு திருடி வெல்லக்கட்டி தான் வாங்குவான். அடே மாரியப்பா வெல்லக்கட்டி திங்காதேடா. பல் சொத்தையாகிவிடும் என்றாள் அம்மா. இன்னிமே திங்க மாட்டம்மா என்றான் சமத்து.

டெயிலர் பொன்னுசாமி மாமா அவன் டவுசருக்கும் சட்டைக்கும் கலர்கலர் பீஸ்களில் தபால் பெட்டிகளை இணைத்தார். ஓசியில் அவனுக்கு மணிப்பர்ஸ் செய்து கொடுத்தார். பள்ளிக் கூடத்திலேயே மாரியப்பனிடம் தான் குட்டி மணிப்பர்ஸ் இருந்தது. அமுக்கு பட்டன் வைத்த மணிப்பர்சு. மணிப்பர்சுக்குள் ரூவா தாள்கள் வைத்திருந்தான்.
நோட்டுப் புத்தகத்தில் நடு நடுவில் ரூவா படம் போட்டான். அதை பிளேடால் வெட்டி ரூவா சேர்த்தான். எல்லா பிள்ளைகளும் பார்க்கும் சமயத்தில், போஸ்ட் பாக்ஸை திறந்து குட்டி மணிப்பர்ஸை எடுத்தான். தலைகள் தொங்கின. டேய்டேய்... எனக்குடா, எனக்குடா என்று பிள்ளைகள் கைநீட்டி சூழ்ந்தன.

ஒவ்வொருவருக்கும் ரூவா தாள் கொடுத்துப் பெருமை பட்டான். அப்போது மாரியப்பன் கண்கள் சாகஸம் புரிந்தன. பெரிய சீமான் மாதிரி பென்சிலை வைத்து சீரேட் குடித்தான். வண்ணாத்திப்பூச்சி இந்தப்பக்கம் வரமாட்டாள். தம்பியோடு பலகையில் ஒதுங்கி நின்றாள். மாரியப்பன் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு மட்டும் ரூவா நோட்டு கொடுத்தான். அவளும் சுற்றி நோட்டம் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

அஞ்சாப்பு வாத்தியார் பிரம்பு, புஸ்தகத்துடன் வேட்டியைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தார். வகுப்பறையில் நடப்பதைப் பார்த்த மாத்திரம் தெரிந்து விடும் அவருக்கு. பள்ளிக்கூடத்தில் மிஷின் வைத்திருந்தார். அந்த மிஷின் டிராயருக்குள் வைத்திருந்தார். யார் யார் என்ன சேட்டை செய்தார்களோ அதையெல்லாம் பதிந்து விடும். வாத்தியார் வரவும் சொல்லிக் கொடுத்துவிடும்.

வந்ததும், வாரத்தில் முதல் நாள் சீருடை அணியாதவர்களைப் பள்ளியை விட்டு விரட்டினார். சார்... சார்.. மாரியப்பன் டவுசர் போடலை சார்... என்றான் கெசவால் ராமசாமி. வாத்தியார் மாரியப்பனை பிரம்புடன் அணைத்துக் கேட்டார். சார்... சார்... டவுசர் போட்டிருக்கேன் சார் என்றான். வேதக்கோயில் பாதிரியார் மாதிரி கால்களை மூடிய ஊதா சட்டையைப் பிடித்துக் கொண்டான். யாரும் சட்டையை தூக்கிவிடுவார்கள் என்று பயந்து நடுங்கினான்.

உடனே பிரம்பு சட்டம் அமலானது. மாரியப்பனை வகுப்பறையை விட்டு விரட்டினார். மேலும் சீருடை இல்லாத கோப்பம்மாவுடன் பிரம்பு பேசியது. மாரியப்பனும் வண்ணாத்திபூச்சியும் வகுப்பறையிலிருந்து வெளியேறினார்கள். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வெயில். பூட்டிக்கிடந்த வீடுகளைக் கடந்து போனார்கள். தெருமுனையில் வகுப்பறைச் சத்தம் கேட்டது. அவர்கள் மனபோக்கின் சுதந்திரத்தைப் போல் வெயிலும் மாறியது. கோப்பம்மாள் இடுப்பில் தம்பி இருந்தான். தெருக்கடைசியில் விளையாட்டுப் பள்ளிக்கூடம் இருந்தது. நிழல் விளையாட்டு. அங்கு தான் ஒன்னாப்பு கோபால் வாத்தியார் இருந்தார்.

அஞ்சாப்பு பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டு கிடைக்காது. அஞ்சாப்பு வாத்தியார் ஆங்கிலம், தமிழ்ப்பாடம், கணக்கு அறிவியல் என்ற தான் பாடங்கள் நடத்துவார். அஞ்சாப்பு வாத்தியார் விளையாட்டின் எதிரி. அவரோடு பெற்றோர்களும் குதியாளம் போடுவதை எதிர்த்து வந்தார்கள்.

எல்லோரும் கோபால் வாத்தியாரிடம் நிழல் விளையாட்டு கற்றுக் கொண்டவர்கள் தான். கோப்பம்மாளும் விளையாடினாள். தம்பியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டால் விளையாட்டில் சேர்க்க மாட்டார்கள். ஆகவே வாத்தியாருக்கு அருகில் நின்றாள். குட்டித்தம்பி அக்காளின் அசட்டுச் சடையைப் பிடித்து விளையாடுகிறான். அக்கா முகத்தில் பிஞ்சுக்கைகளை அலைத்துச் சிரித்தான்.

விளையாட்டில் சேர்ந்து கொண்ட பிள்ளைகள் குட்டித்தம்பிக்கும் கோப்பம்மாளுக்கும் காய் விட்டார்கள். மாரியப்பன் ஒன்னாப்பு பிள்ளைகளோடு விளையாடினான். வேம்பு எப்போது பூத்தது, பூத்ததை உதிர்த்தது, பிஞ்சும் பூவுமானது எப்போது என்றெல்லாம் கோவாலு வாத்தியார் பார்த்துக் கொண்டிருந்தார்.

நெ.மேட்டுப்பட்டி பிள்ளைகள் எப்பொழுதெல்லாம் வேம்புடன் விளையாடினார்கள். கோவாலு வாத்தியார் சின்னப் பிள்ளையாக இருந்த போது அவருக்கு நிழல் விளையாட்டு சொல்லி கொடுத்தவர்களைப் பற்றியெல்லாம் தாத்தாவுக்கு முந்திய காலத்து வேம்பு மறக்கவே இல்லை.

நெ.மேட்டுபட்டியில் ரொம்ப வயசான வேம்பாகையால் தான் தோன்றிய காலத்தையும் நிழல் விளையாட்டுகள் தோன்றிய காலத்தையும் ஒரு வேளை மறந்து போயிருக்கலாம்.

கோப்பம்மாளை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வேம்பு அவளை பார்த்தது. அவள் பச்சைப் பாவாடையிலிருந்து தொங்கும் நாடாவை எடுத்து கடித்துக் கொண்டிருந்தாள்.

கோபால் வாத்தியாரின் பார்வை மரக்கிளைகளின் ஆராய்ச்சியிலிருந்து கீழிறங்கி விளையாட்டீனூடே பிள்ளைகளை நோட்டம் பார்த்தது. திரும்பவும் விட்ட கிளை தாவி ஏறியது கோபால் வாத்தியாரின் கவனம்.

ஒடிசலான கோபால் வாத்தியார் பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டின் மீது வரும் ஆர்வத்தை தூண்டி வருகிறார் ஒவ்வொரு காலமும்.

நெ.மேட்டுபட்டி தெற்குத் தெருவில் தேய்ந்து கிடந்த நீண்டகாலப் புழுதிக்கூட இந்த வழியே போன காற்றால் அடித்துச் செல்லப்படும். தெருவே கரடு தட்டுப் போன வண்டிப் பாதையாய்க் கிடக்கும். இந்த வழியில் இப்போது வண்டிகள் செல்வதில்லை. ஆள் நடமாட்டமில்லாது போய்விட்டது. இதே வரிசையான வீடுகளில் வண்ணாக்குடிகளும் மாறிவிட்டன. ரேழிக்கதவின் உள்ளே பறந்து கிடக்கும் வீடு. உள்ளே கோப்பம்மாள் குமர் இருந்து கொண்டிருந்தாள்.

தன் பள்ளிக்காலம் ஓடியபின் தெருவழியே நடப்பது கூட இல்லை. வண்டிப் பாதை வழியாக ஓரமாய் நடந்து போய்க் காட்டில் மேயும் கழுதைகளைப் பத்தியபடி முள்ளு விறகுடன் திரும்பி வந்தாள். மாரியப்பன் வேணாத வெயிலோடு பண்ணை ஆடுகளுக்குப் பின்னால் காடே கிடையாகக் கிடந்து காய்ந்த வாடக்கரடுகளை ஆடுகள் தின்னும் சத்தத்தைக் கேட்டபடி தொரட்டியை நிலையாக ஊன்றியபடி கல்தூணாகி நிற்பான். ஆடு யார் பொலியில் தின்னாலும் மேஞ்சாலும் கண்ணுக்கு தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பான்.

பனையேறி சேருமுக நாடாரிடம் குடித்த கள்ளு முட்டி உச்சிவெயிலில் தலைக்கேறும். ரத்தச் சிவப்பாக கண்ணு முழி பிதுங்கி நிற்கும். கண்ணில் ரத்தம் சொட்ட காத்துவாக்கில் மேற்காமல் திரும்பி நின்றபடி காட்டு கூப்பாடும் பாட்டுமாய் காடே தாங்காது. கட்டாந்தரை மாதிரி செம்பட்டையும் வங்கு வங்காய் பயல் உடம்பெல்லாம் சொரி உப்பரிஞ்சு போய் கிடப்பான் ஓடக் காட்டில்.

ஊதாச்சட்டை வெயிலில் அசைவதை பார்த்து சுற்றி சுற்றி முள்ளு சேகரிப்பாள் கோப்பம்மாள். அன்று ராத்திரி கோப்பம்மாள் சோறெடுக்க வந்தாள். எல்லோர் வீட்டிலும் வாங்கி கொண்டு மாரியப்பன் வீட்டிற்கு வந்தாள். மாரியப்பன் இருட்டில் நின்றுக் கொண்டு கோப்பம்மாள் என்றான். அவனிடம் வந்தாள். கோப்பம்மாளின் சோத்துப்பானைக்குள் கையைவிட்டு ஒரு கை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். நல்லா இருக்கு என்றான்.

கோப்பம்மா உனக்கு... என்று இன்னொரு கவளம் அள்ளி அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிச் சாப்பிடாமல் பானையில் சேர்த்துக் கொண்டாள்.

அந்த இரவோடு அவள் சோறெடுக்க வரவில்லை. அவள் ஆத்தா தான் அழுக்கெடுக்க வந்தாள். கோப்பம்மாள் இப்பொழுதெல்லாம் வெளியில் வருவது கூட இல்லை. தண்ணிக் கிணத்தில் நின்ற போது கரை வழியாக ஆடுகளோடு புழுதிக் கிளப்பிப் போய்கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் இருந்த பக்கம் திரும்பி பாராமல் உர்... ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தான். அவள் அருகில் சப்தநாடி எல்லாம் அடங்கி நடந்து கொண்டிருந்ததே தெரியாமல் காட்டுக்குப் போனான்.

அவள் இருந்த பக்கம் எட்டி பார்க்காத நாளில் கோப்பம்மாளை பெண் கேட்டு வந்துவிட்டார்கள். தெற்கே வெகு தொலைவான விருந்தாளிகள். ராத்திரியோடு பெண்ணழைத்து போக இருந்தது.

கிணத்தங்கரை பக்கம் குடத்துடன் போய் காத்திருந்தாள். காட்டிலிருந்து வரவே இல்லை அவன்.

வீட்டுக்கு வந்த போது வாசலில் கிடந்த அழுக்குப் பொதியில் அது துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது.

இற்று உருக்குலைந்து போன ஊதாசட்டை தான். அதை யாருக்கும் தெரியாமல் உருவி எடுத்துக் கொண்டு போனாள்.

கந்தல் கந்தலாய் சிதிலமடைந்து போன ஊதாச் சட்டையில் எல்லா இடமும் பொத்தலும் ஒட்டுமாய் இருந்தது.

நெஞ்சுத் தூரத்தில் வெக்கை திரண்டு தீக்கங்கு போல் பழுத்து எரிந்தது.

உப்பரித்து வீசும் ஊதாச் சட்டையை மார்போடு புதைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஆறுதல் அடைய மறுத்த தீக்கணு எரிந்து கொண்டிருந்தது. கோப்பம்மாள் ஊதாச் சட்டையை ஊருக்குக் கொண்டு போக வேண்டிய மஞ்சள் பையில் தன் சேலையுடன் எடுத்து வைத்தாள்.

பின் வாசல் சுருக்கிருட்டில் இருட்டுப் பூச்சிகள் சத்தத்துடன் இருளைப் பெருக்கியடி இரைந்து கொண்டிருந்தன.

****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

6 கருத்துகள்:

geethappriyan on June 13, 2010 at 4:36 PM said...

மிக அருமையான கோணங்கியின் படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி

சென்ஷி on June 13, 2010 at 7:11 PM said...

கோணங்கியோடப் பிடிச்ச கதைகள்ல ஒண்ணு. வாசிக்க குறிச்சி வச்சிருந்த ஒரு குறிப்பிடத்தக்க கதை.. இயல்பான கதையோட்டம் கோணங்கியின் பலமாக இருந்த தருணங்கள்..

நன்றி ராம்.

Unknown on June 13, 2010 at 7:18 PM said...

நன்றி ராம்.

Kaarthik on March 25, 2011 at 1:28 AM said...

'புரியாததுபோல் எழுதுகிறார்' என்று கூறப்படும் கோணங்கியின் கதைகளில் நான் முதலில் படித்தது இது. நன்றாக இருந்தது.மேலும் படிக்க வேண்டும்.

Unknown on July 21, 2018 at 3:00 PM said...

மிக அருமையான படைப்பு..

துரை. அறிவழகன் on June 14, 2020 at 8:42 PM said...

கவித்துவமான எழுத்து....

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்