Sep 18, 2010

மேபல் - தஞ்சை பிரகாஷ்

மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம். அவளுக்கு அப்பா மட்டும்தான் மிச்சம். அம்மா மோனத்திலிருக்கிறாள். கர்த்தரின் மடியில் அம்மா இருக்கிறதை மேபல் பல தடவையும் கனவில்thanjaiprakasah பார்த்திருக்கிறாள். அம்மா ரொம்ப அழகு. சிவப்பு வெள்ளப் பட்டுடுத்தி சம்மனசு மாதிரி கர்த்தரோட மடியில் உட்கார்ந்திருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்பா கறுப்பு! முரடு. திமுசு மாதிரி, புளியமரத்து அடி மரம் மாதிரி கண்டு முண்டா இருக்கிற அப்பாவெ மேபல் குட்டிக்கு எப்படிப் பிடிக்குமாம்? கொஞ்சம்கூடச் சிரிக்காத மனுஷன் உண்டா? மேபலுக்குத் தெரியுமே அப்பா சிரித்துப் பார்த்ததேயில்லை. சர்ச்சுக்குப் போய் வரும்போது எல்லார் முகமும் திருப்தியாக இருக்கும். அப்பக்கூட அவள் அப்பாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல்தான் வருவாள். அப்பா அம்மாவை அடிப்பதைப் பார்த்திருக்கிறாள். மேபல், அண்ணனை, அக்காளை, பெரிய அத்தையைக் கூட அப்பா அடிப்பார். எல்லோருமே ரொம்பப் பயப்படுவார்கள். மேபல் கடைக்குட்டி. இயேசுநாதர் கையில் இருக்கும் ஆட்டுக்குட்டி மாதிரி. ஏதாவது தப்பு செய்துவிட்டால், அவளை அள்ளிக்கொண்டு மறைக்கும் அம்மா. திட்டு வாங்கிக் கொள்ள அப்பாவிடம் போகும் அண்ணன் ஃப்ரெடி. ஏதாவது தள்ளி உடைத்துவிட்டால் பாய்ந்து ஒளித்து வைத்து மேபலுக்குப் பதிலாக அப்பாவின் பலிபீடம் போகும் அக்கா நான்ஸினி. மேபலை இத்தனை பேரும் சேர்ந்து காப்பாற்றினாலும் அப்பாவின் அடி உதை நிச்சயம்.
ஞாயிற்றுக்கிழமை மேபலுக்கு நரகம். அப்பா ஆபிஸ் போகாத நாள். குடிப்பார். யாரும் சத்தம் போடக்கூடாது. மூச்சு விடக்கூடாது. காலையிலேயே குளித்து ஸூட் போட்டு டை கட்டி கோவிலுக்குப் புறப்பட்டுவிடுவார். அம்மா ஜோரான ஆப்பம் சுடுகிறாள். மேபலுக்கு ஆப்பம்ன்னா ரொம்ப இஷ்டம். கள் நுரை போல உப்பிய பஞ்சு பஞ்சாய் மெதுமெதுக்கும் ஆப்பம். அதையும் ஒரு நாளும் நிம்மதியாய்ச் சாப்பிட விடமாட்டார் அப்பா.
மேபலுக்கு அப்பா இஷ்டம் நிறைய, தஞ்சாவூர் மிஷன் மேட்டுத்தெருவில் வேறு யாருமே அப்பா மாதிரி ஆம்பிளை கிடையாது. பெண்கள் பார்த்தால் கண்களை எடுக்காமல் அப்பாவைப் பார்ப்பதை மேபல் வியப்பாகப் பார்த்திருக்கிறாள். ரொம்ப நாளாய் ஆப்பம் சாப்பிட எல்லாருடன் டைனிங் டேபிளில் உட்காரமாட்டாள். மேபலுக்கு நாலு ஆப்பம் வேணும். நிறைய தேங்காய்ப் பால் வேண்டும். நாக்கைத் தட்டிச் சப்புக் கொட்டி ருசித்து நக்கிச் சாப்பிட வேணுமே. அப்ப கொலுவீற்றிருக்கும் சாப்பாட்டு மேஜையில் எல்லாருடன் உட்கார்ந்தால் அப்பா கத்துவார். நக்கக் கூடாது; நாக்கைத் தட்டக்கூடாது. அசிங்கம்! டேபிளில் சாப்பிட ‘மானர்ஸ்’ வேண்டும். மிருகம் மாதிரி நாக்கைச் சொடுக்கி லப் லப் என்று விழுங்கிச் சப்தம் எழுப்பக் கூடாதாம். இதற்காக மேபல் குளிக்கிற அறையிலேயோ உடுத்துகிற சாக்கிலோ லெட்ரினிலோ நேரத்தைக் கடத்தி எல்லாருக்கும் பின்னால் லேட்டாக டேபிளுக்கு வருவாள். அப்பாவை ரொம்பப் பிடிக்கும். கட்டிப்பிடித்து அப்பாவை முத்தங்கொஞ்சி சிரிப்புத் தரவேண்டும் என்று மேபலுக்கு ஆசைதான். கூடாதாம் எச்சில் தப்பாம். கிறிஸ்தவர்கள் கிட்டதான் இந்த அசிங்கம் இருக்காம். வெள்ளைக்காரர்கள் வழியா இந்திய கிறிஸ்தவர்கள் படித்த கெட்ட வழக்கமாம். அப்பா அகராதி தனி. அவர் மட்டும் ராத்திரியில் பெட்ரூமுக்குப் போகும்போது எல்லாருக்கும் முன்னாலே கூட அம்மாவையும் அண்ணனையும் முத்தி விடுவது எதில் சேர்த்தி? அக்காவுக்கும் சின்னக்காவுக்கும் முத்தா தருவதில்லை! என்ன யோக்யதை இது. சர்ச் பக்கத்தில் இருந்ததால் இரண்டாம் மணி அடித்த பின்னர்தான் வீட்டைவிட்டுக் கிளம்ப வேண்டும். எரிச்சலுடன் கத்திக்கொண்டேயிருப்பார். ஒன்று அம்மா, இல்லை மேபல், இல்லாவிட்டால் அண்னன் ஃப்ரெடி. சின்னக்கா எப்போதும் பதுங்கிக்கொண்டே பின்னால் வருவாள். ஆனி எப்போதும் திட்டு வாங்கி உதை வாங்குகிறதில் புலி மூத்தவள். நேர் எதிர் சின்னக்கா மாகி! பதுங்கல் புலி! மேபல் தூரத்தில் வருவாள். ஆப்பம் ருசித்துச் சாப்பிடும்போதே வாசலில் அப்பா கூப்பாடு “மூணாம் மணியடிச்சாச்சு! ஏ கழுதெ! சீக்கிரம் உடுத்திட்டு வாடீ! நாங்க முன்னாலே போறோம்!” அப்பாவின் விஸ்கி மூச்சு ரூமுக்குள் வீசுகிற மாதிரி இருக்கும். கோவிலில் “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” ஞானப்பாட்டின் கோரஸ் கொயர் பாடகர்களுடைய கூட்டமான குரலில் இங்கு கேட்கும். திண்ணைக்கு ஓடிவந்து பார்க்கும் போதே அப்பாவுடன் குடும்பமே புதுச்சலவை உடுத்தி கோவிலை நோக்கி போகும் காட்சி மேபலுக்கு இனந்தெரியாத இன்பமாய் இருக்கும். அம்மா பட்டுப்புடவையில் தான் என்ன அழகாயிருக்கிறார்கள். குரலே எழுப்பாமல் அப்பாவுடன் குடும்பம் நடத்தும் ஆச்சர்யம் மேபலுக்குப் புரியாது. ஃப்ரெடி அண்ணனின் வெள்ளை பாண்ட் ஸூட் எத்தனை அருமையாய் இருக்கிறது. அம்மா சாயல் சிவப்பு பிள்ளை அண்ணன். அக்கா ஆனிரோஸ் அம்மாவை உரித்தெடுத்த வடிவு. சின்னக்கா மாக்னஸ் கூட அம்மா பிள்ளைதான். அதெப்படி? அவர்கள் எல்லாரும் அழகாய் அம்மா மாதிரி - மேபல் குட்டி மட்டும் எப்படி அம்மாவும் அப்பாவும் சேர்ந்த மாதிரி மங்கலானாள்? மேபல் கறுப்பில்லை - அப்பா சிவப்பா? புது நிறம்! சிவப்பும் கறுப்புமல்லாத பொன்னிறம், கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் கறுப்பு மாதிரி இருக்கும் வருத்தமாக. அம்மா திட்டுவார்கள் எப்போதும் கண்ணாடி பாத்துக்கிட்டே இருக்கப்டாதாம். மேபலை வீட்டில் கருப்பு குட்டீன்னுதான் கூப்பிடுவார்கள். அப்பா மட்டும்தான் மேபல்! அம்மா சாவு எதிர்பாராமல் நடந்தது. மேபலுக்குத் தெரியாது. தூங்கிப்போன நேரம். கண்விழித்துப் பார்த்தபோது அம்மா தூங்குவதுபோல் சம்மனசாகியிருந்தார்கள். பயந்து பயந்து பயந்தே ஹார்ட் அட்டாக் வந்திருக்க வேணும். அப்போது மேபலுக்கு வயசு பதினைந்து. இப்போது பத்து வருஷம் ஆகிவிட்டது. அம்மா இல்லாத பத்து வருடங்கள். பெரியக்கா ஆனி ரோஸ் கல்யாணம் ஆகி டெல்லி போய்விட்டாள். சின்னக்கா மாக்னஸ் ஆலமரத் தெருவிலிருந்த தாஸில்தார் மகன் ரூபனை லவ் பண்ணிவிட்டாள். மேபலுக்குக் கூட ரூபனைப் பிடிக்காது. கோவிலில் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் போது புளிய மரத்தடியில் சின்னக்காவை நிறுத்தி பேசிக்கொண்டிருப்பான். அப்பாவுக்குத் தெரிந்தால் பயத்தில் உடல் நடுங்கும். ரூபனுக்கும் மாக்னஸுக்கும் நல்ல பொருத்தம். ஏனோ மேபலுக்கு அவனைப் பிடிக்கவில்லை.  அப்பா மாதிரி ரூபன் காலிப் பயலாம். வேலை வெட்டியில்லாத ராஸ்கலாம். அப்பா சொல்வார். மேபலுக்கு அடிவயிற்றை கலக்கும். சின்னக்கா மாக்னஸ் கொடி மாதிரி இருப்பாள். குளிக்கும்போதெல்லாம் மாக்னஸோட உடம்பு மேபலுக்கு ஆச்சர்யமாயிருக்கும். அம்மா,  அம்மா! அப்படியே அம்மா மாதிரி. ஆனா வலுவா செழிப்பா எடுப்பா இருப்பா, மாக்னஸ் ரூபனோட பேசும்போது பூத்துப்போன மல்லிகை மரம் மாதிரி ஆச்சர்யமான அழகோட மாக்னஸைப் பார்த்தாலே தேவதை மாதிரியிருப்பா. இந்த உடம்பை அப்பா துவைத்து எடுத்து ரத்தவிளாராக்கி வீட்டுக்குள் அடைத்தபோது இரவெல்லாம் முனகிக் கிடந்தது மாக்னஸ் மட்டுமில்லை, மேபலும்தான். மாக்னஸை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த போது இடையில் மேபலையும் பிடித்து நாலு அறை வைத்தார் அப்பா, ரொம்ப திருப்தியாய் இருந்தது மேபலுக்கு. ரூபன் தேடித்தேடி வந்தான். ஒருநாள் வீட்டு வாசலிலேயே லாவிப் பிடித்து விட்டார் அப்பா. ரூபன் ரொம்ப தைரியம். அவனையும் அப்பா அடித்து நொறுக்கியதைத் தெருவே வேடிக்கை பார்த்தது. யாரும் தடுக்கவில்லை. அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருந்தார்களாம். ரூபன் பொறுக்கியாம். மாக்னஸ் மயிரைப் பிடித்துச் சுழற்றி அடித்தது போலவே ரூபனின் சுருள் முடியைப் பிடித்து அடிக்க அப்பாவுக்குக் கூச்சமேயில்லை. அம்மா இல்லை இதெல்லாம் பார்க்க. மேபல் கன்றிச் சிவந்த அடிபட்ட கன்னத்துடன் புளித்த நாக்குடன் கண்ணாடியில் பார்த்தபோது உதடு கிழிந்திருந்தது தெரிந்தது. ரூபன் செய்த தப்பு அப்பா அடித்தபோது விடாமல் திருப்பியடித்ததுதான். அப்பாவின் உக்கிரப்பிடியில் என்ன செய்ய முடியும்? மேபல் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பளார் பளாரென்று அறை விழும் சப்தம். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு மாதம் வீட்டுக்குள் யாரும் பேச முடியவில்லை. மாக்னஸ் ரூமிலிருந்து வெளியே வரவேமாட்டாள். அப்பா விஸ்கி பாட்டிலும் சோடாவுடனும் காமிரா அறையில் அல்லது ஹாலில் உட்கார்ந்திருப்பார். அண்ணன் பெரும்பாலும் வெளியில் கத்திக் கொண்டிருக்கும். ராத்திரி பத்து மணிக்கு மேல்தான் வருகிறதே. விடிந்தால் எழுந்து எங்கோ போய்விடும். சின்னத்தை மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வரும்போது வழியில் அண்ணனைப் பார்த்து அழுது.... பேசி... “உங்கப்பன் தாயழி இப்ப ஊட்டையே ரெண்டு படுத்தீட்டான்டா பாவீ.. நீயாவது ஒழுங்கா வேலை கண்ணிக்கிப் போயி உருப்பட்டா நானு ஏண்டா இவங்கிட்ட கெடந்து நெக்கிழயிறேன்”னு ஆரம்பித்து அப்பாவை நேரில் திட்ட முடியாத கூப்பாட்டையெல்லாம் ரோட்டில் அண்ணன் ஃப்ரெடியிடம் கொட்டி அழுது மூக்கைச் சிந்தி எறிந்துவிட்டு வீட்டுக்குள் வரும் சின்னத்தை. மேபலைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி “ங்கொப்பன் ஆபீஸ் போய்ட்டானா இருக்கானம்மா?” “போகல்லெத்தை. உள்ளதான் இருக்காங்க அப்பா!” என்று மேபல் சொன்னால் போதும். பதுங்கி வாசல் வழியாகப் போகாமல் காம்பவுண்டைச் சுற்றிக் கொல்லைப்பக்கமாகப் போவாள் சின்னத்தை. மேபல் ரகசியமாய்க் கொல்லைக் கதவைத் திறந்துவிட வேண்டும்.
அக்கா ஆனிரோஸ் கல்யாணமும் ரகளையாகத்தான் நடந்தது. சொன்ன டௌரிப்பணம் தரலை. இருபத்தைந்தாயிரம். வாழைப்படம்  மட்டும் வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து இருபதாயிரம் ரூபாய் மட்டும் வைத்தார் அப்பா. மாப்பிள்ளை விட்டுக்காரங்க, “ஜேவியரு, பேசினது இருவத்தஞ்சி. தட்ல இருக்கிறது இருவது. பொண்ணு ரெயிலேறனுமா ஊட்லியே வெச்சிக்கிறாயா பொட்டணம் கட்டி” கேவலமா பேசி அப்பா கம்பை எடுத்துக்கிட்டு பாய பந்தல்லியே ஏக கலாட்டா. அப்பவே ரூபன் அதே பந்தல்ல நின்னவன்தான். அப்பவே மாக்னஸ் குட்டியோட பேச்சு ஆரமிச்சாச்சு. மூணு மாசம் கல்யாணப்பொண்ணு ஆனிரோஸ் புருஷன் வீட்டுக்குப் போகலெ. மூணு மாசமும் அப்பாகிட்ட அப்பப்ப அந்த எரிச்சல் கூட அடிவாங்கினா. அத்தைதான் காப்பாத்துவாங்க. அப்பாலே எல்லாரும் திட்டுவாங்க நேர இல்ல பின்னால. நேர யாருமே பேச முடியாது. அவன் கெடக்கான் முசுறு. வாய் கொழுத்தவன் அப்டீன்னு மிஷன் தெருவு பூராவும் சொல்வாங்க. ஆறுமாசம் ஆனப்புறம்தான் ஆனிரோஸெ ஹஸ்பெண்ட் வீட்டுக்கு அனுப்பி வெச்சார். செலவு பத்தாயிரம் சமாதானமெல்லாம் கெடையாது. ஐயாயிரம் குடுக்க வேண்டிய எடத்ல பத்தாயிரமா விட்டெறிஞ்சுட்டு “இவ இனிமே அங்க வரப்படாது இதோட சரி” என்று கத்திவிட்டு வந்தார். கூடப்போன மேபலுக்குத்தான் நடுக்கல். எங்கே திரும்பியும் அக்கா ‘வாழ’ மாட்டாளோ என்று. ஆனிரோஸ் வரவேயில்லை. அக்கா பேருதான் மேபலுக்குப் பத்து வருஷம் ஞாபகம்.
மேபல் வளர்ந்தது யாருக்கும் தெரியாமல் போச்சு. கடக்குட்டியா பொறந்தாலே கஷ்டம். எல்லாருக்கும் ஏவல், எல்லாருக்கும் எளப்பம், ஏ குட்டி தண்ணி கொண்டா, காலெப்புடி, ஏய்... எல்லாருக்கும் ஏதாவது உபதேசம். நிறம் செத்த கொறச்சல்தான். இல்லன்னு சொல்ல முடியுமா? ஆளு உடம்பு அப்பம் மாதிரி கைகால் எல்லாம் அளவா வலுவா செதுக்கி எடுத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பூசிப்பூசிப் பண்ணின மெழுகுப் பொம்மை மாதிரி. திடீர்னு எப்படி ‘பளிச்சினு” ஆகிப்போய்ட்டா? எல்லாருக்குமே அது ஞாபகமில்லே. அப்பாகூட இப்ப ஏதோ கூப்பிட்டு நிறுத்திப் பேசுறார். தெருவு பெரிய மனுஷங்க குட்டீன்னு கூப்புட்றதில்லெ. அப்பா அதிகமா திட்ற வேலெ வெச்சுக்கிறதில்லை. ஆனா சின்னத்தை மட்டும் கெட்ட வார்த்தை சொல்லித் திட்றாங்க. மேபலுக்கு உடம்பு பெரிய ஆச்சர்யமா இருக்கு. அண்ணன் பார்வெ கூட மாறிப் போயிருக்கு. மாசா மாசம் உடம்பே வற்றி, திரும்பியும் பூக்கிற மாதிரி வியர்வை கூட ஒரு நெடி, சுயமாவே மணக்கிற மாதிரி. ராத்திரியெல்லாம் உடம்புக்குள்ளே தேனீ ஒண்ணு குடைஞ்சு தேன் உறியிற மாதிரி உள்ளுக்குள்ளே அனல் படர்ற சுகம். யாருகிட்ட சொல்ல முடியும். புதுசு புதுசா பாவாடை தாவணி எல்லாம் போயி பெரிசு பெரிசா பட்டு ஜரின், கோட்டா வாயில், விமல், அமெரிக்கன் டிஷ்யூ, ஜப்பான் என்று புதுப்புது சேலைகள் வந்து சுற்றிக் கொண்டன. மேபல் கேட்காமலேயே அப்பாவின் நெருக்கம் ஜாஸ்தி. பணம் கொண்டு வந்து கொடுப்பதே அவள்கிட்டெதான். ஏதும் வேணுமா? அப்பாவுக்கு மேபல்தான் வேணும். காலையில எழுப்புறப்பக்கூட சின்னத்தை அப்பா கிட்ட வரப்படாது. வீட்டுக்குள் நுழையும்போதே ‘மேபல்’ங்கிற அப்பா அழைப்பு இனிக்கும். இதே மாதிரிதான் ஆனி அக்காவையும் மாக்னஸ் சின்னக்காவையும் இனிக் கடிச்சிருப்பாரோ இந்த அப்பா. மேபலுக்கு இந்த இனிப்பும் பயமாய்த்தான் இருக்கும். சின்னக்குட்டியாய் இருந்தப்போ இந்த அப்பா நெருக்கம் பிடித்தால் கூட கிடைத்ததில்லை. மேபலுக்கு வயசு பதினெட்டு ஆனப்போதான் அப்பா நெருக்கமும் அத்தையின் கெட்ட வார்த்தைகளும் கிடைக்க ஆரம்பித்தது. ஆச்சர்யம், “வாசல்லியே போயி ஏண்டி நிக்கிறே தேவுடியா? ஒன்னெ குளியில வக்ய. என்னடி பேசிட்டிருப்பே இருட்ல? உங்கப்பனாத்தான் இருக்கட்டுமேடி. ஆம்பளெல்லெ அவன். ஏந் தம்பித்தான் பெருசாய்டே, நெருப்புமாறி இருக்கணும்டீ. மாரெ நிமித்திட்டு நடக்காதே, ஆனிமுண்டெயும் அந்தத் தத்தாரி நாயி மாக்னஸும் இப்படிதான் அலஞ்சு குட்டிச் செவுரு ஆனாவள்டீ! நீயும் அழிஞ்சு  போய்டாதே!” என்பாள் சின்னத்தே. அப்பா கூப்பிடும்போது அவர் ரூமுக்குள் போகும்போது விஸ்கி நெடி ரொம்ப இன்பமாயிருக்கும். சின்னத்தெ கிட்ட சொல்ல முடியாது. திட்டுவாங்க! பொட்டெச்சிக்கி இது எல்லாம் சந்தோஷம் வரப்படாதுடீ நாயெம்பாங்க. அப்பா கோல்ட் ஃப்ளேக் சிகரெட் குடிக்கும்போதும் ரம்யமான புகை மணம்.
ரூம் முழுசும் புஸ்தகங்கள், அப்பா படிச்சது. சுவரில் தொங்கும் மான் தலைகள் கொம்போடு பயமா இருக்கும். கோட் ஸ்டாண்ட் ஒன்றில் கோட்டுகள் தொங்கும். நரையும் கறுப்புமாய் அளவில் கலந்த முரட்டு முடிச்சுருள்கள் பளபளக்க அற்புதமாய் இளமை சொல்லும். இதுவரைக்கும் அப்பனைப் பார்க்காத செருக்கி அப்பா அப்பான்னு கொழைறாளே என்பார்கள் சின்னத்தை. மேபலுக்கும் இப்போது அதே சந்தேகம் உண்டு. அண்ணன் உட்பட எல்லா ஆம்பளையும் தேவையில்லாமெ கொழையிறது ஏன்? “ஏம்பா குடிக்கறீங்க?”ன்னு கேக்கனும்ன்னு ஆசைதான். கேக்க முடியாது. “மேபல்குட்டி அந்த பீர் கிளாஸ்ல பாதிக்கி கொஞ்சம் அதிகமா விஸ்க்கி ஊத்து” - “சோடாவும் வேணுமா?” - ஒரு ரவுண்ட் ஆனது - அப்பா ஆள் வேறயாகிக் கொண்டிருந்தார். பயம் அடிவயிற்றில், நகங்கள் பிறாண்ட புலி உலுக்கியது மேபலுக்கு. அப்பா ஆம்பளைன்னு சொன்னாங்களே சின்னத்தை - ஆம்பளையா? மேபல் பயத்தில் நடுங்கினாள். வியர்த்து பளபளத்த பயில்வான் உடம்போட விஸ்கி நெடியோடே சிகரெட் வாசனை மீறி அப்பாவை அந்த மங்கல் வெளிச்சத்தில் பயந்தாள் மேபல். “உங்கண்ணன் வீட்டுக்கு வர்றானா? இல்லெ ராத்திரிலேயும் ஊர்தான் சுத்தீட்டிருக்கானா? ஏம்மா மேபல்? வந்தா நான் பாக்கணும்ன்னு சொன்னேன்னு சொல்றியா?” அதே கரகரத்த குரல்.  குடியில் நெறிந்த மனசு! ஏன் இது? இவரையா ஆம்பளைன்னாங்க சின்னத்தை! ச்சீ! மேபலுக்கு இன்னும் புரியத்தான் இல்லை. அப்பா ஏன் இப்படி இருக்கணும்? ஆனாலும் அப்பாவெ ரொம்பப் பிடிக்கிறது. அவர் முரட்டுத்தனம் இப்ப இப்ப ஆச்சரியமா ஆனந்தமாயிருக்கு. இப்போவெல்லாம் அப்பா குளிச்சிட்டு வந்தா மேபல்தான் தலை துவட்டிவிடணும். பவுடர் கூட போட்டுவிடணும்! அண்ணன் ஃப்ரெடி எம்மெஸ்ஸி முடிச்சாச்சு. கிளாஸ் வாங்காததுனால வேலெ கிடைக்க மாட்டேங்குது! பாவம். அப்பா எப்போதும் போலத் திட்டித் தீக்கணும்! மேபல் சொல்லலே! கலெக்டர் ஆபிஸ்ல ஒரு ஸெக்‌ஷன் ஆபீஸ் அப்பா! ஜீப் தனிய்யா உண்டு. கலெக்டரோடயே சுத்தி அலையிற வேலை. ராத்திரிதான் வருவார். வந்ததும் மேபல்தான் வேணும் சாப்பாடு பரிமாற! சங்கதி பேச!
இப்ப பயம் ஜாஸ்த்தி மேபலுக்கு! சின்னத்தையோட நோட்டம் ஜாஸ்த்தியாப் போச்சு! ரூபன் வந்து காம்பவுண்ட் அந்தப் பக்கம் நின்னு கூப்புட்றதும் ஜாஸ்த்தியாத்தான் போச்சு. ரூபன் பழக்கம் பதினைஞ்சு வருஷம். அப்பா அடிச்சு நொறுக்கி அள்ளினாரே பத்து வருஷம். அப்பா பத்து வருஷம் ஓடிப்போச்சு! அதுக்கப்புறம் மாக்னஸ்ஸெ வலுக்கட்டாயமா அமுக்கி நிறுத்தி ஸ்டேட்ஸ் மாப்பிளை, ஒரு அமெரிக்கன் கிராஜ்வெட் - ‘லாஸ்ஸரஸ் மாணிக்கம்’ சொந்தமா அமெரிக்காவுல எலக்ட்ரானிக்ஸ் பார்ட் கம்பனி இருக்கு! பணம்! தடபுடலா கல்யாணமும் பண்ணி - ஊருக்குப் போகும்போது உள் அறையில கதறி அழுதாளே அவள் மாக்னஸ் சின்னக்கா! நெனைச்சாலே பயமும் எரிச்சலும் இப்பக்கூட மேபலுக்குத் தொண்டையடைக்கும். ரூபன் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்த சங்கதி அப்பறம்தான் வெளிய தெரிஞ்சது! அதுகூட அப்பா பண்ணின வேலைன்னுதான் சொன்னாங்க. மேபலுக்கும் கேட்கப் பயம். ரூபன் மேபலைச் சந்திக்க ஆரமிச்சது பீட்டர் ஸ்கூல் க்ரவுண்டுல.
காலை நேரம் இப்பவெல்லாம் மேபல் தினமும் சர்ச் போறா! அழ நல்ல இடம் அதானே! யாரும் கேட்க மாட்டாங்க! ஜீஸஸ்! இதெல்லாம் ஏன் நடக்குது? அப்பா ஏன் இப்படி கல்நெஞ்சா இருக்கணும்? எங்களுக்கு மோட்சமேயில்லையா? கதறி அழமுடியாது. ஆனா அழுது கொட்டலாம். கிறிஸ்த்தவப் பொண்ணுக்கு இது ஒரு வசதி. ஜெபம் பண்றேன்னு அழுது கொட்டினா யாரும் கண்டுக்க மாட்டாங்க. பெரிய்ய ப்ளே க்ரவுண்ட குறுக்க கடந்து சர்ச்சுக்கு போக முடியும். ஏழுமணி சர்வீசுக்கு யாரும் வரமாட்டாங்க! இப்போ சர்ச்சுக்கே யாரும் அதிகமா வர்றதில்லே. வசதிதானே! மேபல்! அவளுக்கு இப்ப யார்? பயங்கரம்! அவளுக்கே புரியல. எப்படிப் புரியும். மாக்னஸ் சின்னக்காவுக்குப் புரிஞ்சுதா? பணிஞ்சு போயே குனிஞ்சு போன ஆனி அக்காவுக்கு தெர்ஞ்சுதா? வேலையில்லாமெத் திரிஞ்சு கஞ்சா நெடியோட ராத்திரித் திருடன் மாதிரி வர்றானே அண்ணன் ஃப்ரெட்ரிக்! அவனுக்குத்தான் புரியுமா? எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு ஏதாவது துணை இருக்கு. அப்பா குடிக்கிறார். என்ன தப்பு? சின்னத்தைக்குத் தெரியுமா? சொந்தத் தம்பியெ கீழபோட்டு மிதிச்சு அவர் நிழல்ல இருந்துகிட்டு அவர் உசிரை வாங்குறாங்க! மேபல் மட்டும் கோவில்ல அழுது தீக்குறது எதுக்கு? அவளுக்கே தெரியாதே! அதுக்குப் பேர்தான் ஜெபம்! அவளுக்குத் துணை ரூபன்! எப்போதும் இது சாத்தியமில்லேன்னு அவளுக்குத் தெரியும். ரூபன் அப்பாவுக்குப் பகைன்னு தெரியாதா? தெரியும். ஆனா ரூபன் யார்ன்னு மேபலுக்கு இப்பதான் தெரியும். ரூபன் அவளோட சின்னக்கா மாக்னஸ்ஸின் லவ்வர். ஆரம்பம் என்னமோ இதுதான். ஆனா... இப்ப மேபல் அவனோட லவ்! இதுதான் மேபலோட பயம்! ரூபன் மாக்னஸ் கல்யாணம் தடைப்பட்டதே, மேபல் ரூபன் கிட்ட விழுந்து போனதுக்கான காரணம்! காலை ஏழு மணி திருவிருந்து ஆராதனை நற்கருணையில் சேர்ந்து தினமும் அழுது புலம்பி விட்டு வருவதற்குமே இதுதான் காரணம். மேபலுக்கு ஆல்ட்டரியில் முழங்கால் படியிட்டு, “யேசுவே! இந்தப் பாத்திரத்தை என்னிடமிருந்து நீக்கி என்னை உம்மிடம் ஏத்துக் கொள்ளும் கர்த்தாவே! ரூபனை என் கண்களிலிருந்து மறையும் தேவனே! நான் ரூபனிடமிருந்து தப்ப வழி காட்டும் ஆண்டவரே!” என்று கதறி அழுது ஜெபம் செய்வாள் மேபல். டாண்டாண்டாண் என்ற மணியோசையுடன் தேவ சமூகத்து அப்பத்தை திருவிருந்தாய் அவள் கையில் இடுவார் பாதிரியார். ஏசுவின் ரத்தமாய் திராட்சை ரசமும் வெள்ளிக்கிண்ணத்தில் அவள் உதடுகளருகே பாதிரியார் கொண்டு வந்து வைக்க - கண்களில் நீர்வழிய அதனை அருந்தி சுத்தியும் சுகமும்  ஆவாள் மேபல். கோவில் ஆராதனை முடிந்து அவள் வெளியே வரும் போது மைதானம் முழுவதும் பனியால் நனைந்திருக்கும். புல் நுனியெல்லாம் பனித்துளி காலை வெயிலில் மினுக்கும். மைதானத்தில் ஏறத்தாழ ஒரு பர்லாங்கு தூரம் தள்ளிக் குட்டைச்சுவர் ஒன்று. பழைய காலத்துக் கைப்பிடிச் சுவர். அதன் மேல் உட்கார்ந்திருப்பது யார்? ரூபன்! திரும்பிச் சுற்றிப் போகும் தார்ரோடு வழி நடக்கலாமா முடியாது. ரூபனுக்கு வயசு முப்பத்தேழு. ஒரு காலத்தில் நன்றாகப் படித்து ஓடியாடி விளையாடி அற்புதமான இளமை கொண்டிருந்தவன். மிஷன் தெருவிலேயே அவனைக் கண்டு மயங்காத பெண் யாரும் இல்லை. மாக்னஸ்ஸை அவளது சந்தோஷமாய் ரூபனைத் தரிசித்தவள் மேபல். துள்ளித்திரிந்தாள். அப்போதெல்லாம் மாக்னஸ் ரூபனைப் பார்க்கப் போவது எல்லாவற்றையும் அப்பாவிடம் காட்டிக் கொடுக்கிற வேலையைப் பதிமூணு வயதுக் குட்டி மேபல்தான் செய்வாள். அப்பாவின் பிடியில் மாக்னஸ் சிக்கியதே மேபலால்தான். நிஜமாகவே அக்காவை இந்தக் காலிப்பயல் கெடுத்து விடுவானாமே! ரூபன் வந்து கோவிலில் மாக்னஸ் சின்னக்காவுக்காக நின்றதும் உடனே மேபல் ஓடிப்போய் அப்பாவிடம் சொல்வாள். அக்காவையும் திட்டுவாள். சின்னத்தையிடமும் காட்டிக் கொடுப்பாள். ரூபனும் மாக்னஸும் அகப்படுவார்கள். மின்னல் வேகத்தில் ரூபன் தப்பி மறைவான்.
அப்படியிருந்தும் அப்பாவிடம் அடி வாங்கிச் சுருளும் மாக்னஸ் சின்னக்கா கண்ணீர் ததும்ப,  “இல்லெப்பா இல்லெ! அவனோட எனக்கென்ன பேச்சு! ஒண்ணுமில்லே. பேசவேயில்லெ. அவன் தான் டைம் கேட்டான். நான் ஒண்ணும் பேசவேயில்லெப்பா!” என்று புரண்டு அழுதாள். ஆனா அப்பா விடவில்லை. மாக்னஸ் குட்டி உன்னே இஷ்டம் போல விடமாட்டேன் என்று கத்தியது ஞாபகம் இருக்கிறது. மாக்னஸ்ஸுக்கு அப்போதெல்லாம் என்ன நடந்தது, இந்தக் குடும்பத்துக்குள் என்ன நடந்து கொண்டிருந்தது என்பது அப்போது மேபலுக்குப் புரியாது. புரிய முடியாது. இப்போது ரூபனை முழுதாகப் புரிந்தது. மாக்னஸ் குட்டி அக்காவுக்கு நேர்ந்த அதே கோளாறு அதே கோணல் அதே ரூபனுடன் இப்போது நேர்ந்திருப்பதை எப்படி யாரிடம் என்னவென்று சொல்வாள் மேபல்! அதோ கட்டைச் சுவரிலிருந்து குதித்து அருகே வருகிறான் ரூபன். மைதானத்தில் யாருமே இல்லை. ஒன்றிரண்டு கான்வெண்ட் பெண்கள் சுமந்த புத்தகங்களோடு முன் தள்ளி நடந்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவன் என்ன செய்யப் போகிறான்? படபடப்பும் பரிதவிப்பும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வித விருப்பமும் மகிழ்ச்சியும் மேபலாம் தாங்க முடியவில்லை. தொடப்போகிறான் ரூபன்! கலங்கல் சட்டை, பதினைந்து நாள் தாடி, அழுக்குப் பாண்ட், ஊத்தைப் பற்கள். கலைந்துபோய் காதோரம் நரையோடிய சுருண்ட முடி. இவனை மாக்னஸ் சின்னக்காவுடன் பார்த்தபோது இப்படியா இருந்தான். நாளுக்கொரு ஜீன்ஸ்! வேளைக்கொரு பார்லல் பாண்ட்ஸ். கட்டம் கட்டம் போட்ட டெர்லீன் சட்டை, ஸூட் கோட்! தூரத்திலிருந்தே வீசும் இன்பமான பாரீஸ் ஸெண்ட்! அப்போதும் இவனைப் போக்கிரி என்றார்கள் மிஷன் தெரு கிறிஸ்தவர்கள்! இன்றும் ரௌடிப்பயல் என்கிறார்கள்! மாக்னஸ் சின்னக்கா மயங்கினாள். ஆனால் பயம்! அப்பா பயம்! கிட்டே வந்து நின்றான் ரூபன்! என்ன தைரியம்! அவள் கையைக் கோர்த்துப் பிடித்தான். என்ன வலு! மார்பில் வெறுமையாகச் சுருண்ட முடிகளிடையே கறுப்புக்கயிறு ஒன்று வெறுமையாய்க் கிடந்தது. கையை விடுவிக்கவில்லை மேபல்! அவன் ஸ்பரிசம் அவளுக்கு வேண்டும். அவன் வேர்வை மணம். அவன் குடித்திருந்த விஸ்க்கியின் மணம், காலைப்பனியிலும் அவளுக்கு வந்து நாசியை மலர்த்தியது. அப்பாவின் அதே விஸ்கி! சிகரெட்! ரூபன்!
”தப்பிச்சுகிட்டு போலாம்ன்னு பாத்தியா மேபல்! விடமாட்டேன்!”
“யாராவது பாத்தா அப்பாகிட்ட சொல்லீடுவாங்க. உயிரெ எடுக்காம விடமாட்டாங்க அப்பா! என்னே உட்டுடுங்க...”
“அடெ! உன்னெ நானா புடிச்சு வெச்சிருக்கேன்!”
“பின்னெல்லியா? தினமும் யாரு வீட்டுக்காம்பவுண்ட் கொல்லையில் வந்து நிக்கிறதாம்?”
“நின்னா? உனக்காகவாக்கும்?”
“இல்லியா பின்னே? சுத்திச்சுத்தி வர்றீங்களே எதுக்காகவாம்?”
"வராம இருந்துட்றேனே! உன்னக்காவே நெனைச்சு....”
“என்னெச் சுத்தணுமாக்கும்.”
“ச்சீ”
“என்ன ச்சீ? ஏம் பொய் சொல்றீங்க! என்னெத் தொரத்தினா அப்பா விட்டுடுவாங்களா?”
“உங்கப்பா ஒரு அய்யோக்கிய ராஸ்க்கல்.”
”உங்களை மாதிரியா?”
“என்ன சொன்னே?”
பளீரென்று அறை விழுந்தது எதிர்பாராத இடத்திலிருந்து. கன்னம் சிவந்தது. அப்படியே நின்றாள் மேபல். அவளும் பேசியது எல்லாம் பொய்தானே. அவனுடன் பேசும்போதெல்லாம் இப்படித் தர்க்கம்தான் வருகிறது. அவன் மேல் எப்போது ஆசை வந்தது என்று இனம் தெரியவில்லை. அவனும் ஒப்புக் கொள்வதில்லை. தினமும் மாலை மயங்கும் வேளையில் வீட்டுக்காம்பவுண்ட் கொல்லைப்புறம் வெளியே காத்திருப்பதும் மேபல் ஓடி ஒவ்வொரு நாளும்... அவன் என்ன செய்து விட்டான்?! வெறும் பேச்சு! அவன் மௌனமாய் கேட்டுக் கேட்டு... மேபலுக்கு ரூபன், அவன் விஸ்க்கி வாசனை வியர்வை, முடி அடர்ந்த மார்பு, அவன் அடாவடித்தனம்  அதே முரட்டுத்தனம்.... எல்லாமே வேண்டியதாகிவிட்டது. ரூபன்! பைத்தியமாய் அடித்தான். எப்படி என்றுதான் அவளுக்கே புரியவில்லை. புரியாததுதான் சந்தோஷமே. அவள் அப்பாவை அவளுக்குள் இணைத்திருக்கும் அதே புதிர்! நிச்சயம் ரெண்டு புதிரும் விடுவிக்கப்படப் போவதில்லை. மேபலின் பயம் தொடர்ந்தது. அப்பாவிடம் பயந்தாள். ரூபனிடம் சிக்கினாள். பயப்படுத்திக் கொண்டேயிருக்கிறான் ரூபன். அக்காவைத் தொடர்ந்தது. அப்பா மிஷன் தெரு பார்க்க அடித்து நொறுக்கியது. எல்லாம் கண் முன்னே பார்த்தும் எப்படி இந்த அபத்தம் தெரிந்தே எரியும் குப்பை! ஆ! இவனை அக்கா மாக்னஸ் நேசித்தாளா? இன்னுமா? மாக்னஸ் கல்யாணம் ஆனபோது லாரியில் அடிபடாமல் இருந்தால்... கல்யாணத்தில் கலாட்டா செய்து.. கல்யாணம் நின்று... அப்பா அவமானப்பட்டு... ஜீஸஸ்! இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும் ஆண்டவரே... இவன் பாவம் ஸ்வாமி! அக்கா மாக்னஸோட ஆத்மாவைக் காப்பாத்தியருளும் பிதாவே! என் உடம்பிலிருந்து வாலிபத்தின் முள்ளை எடுத்துப்போடும் ஜீவனுள்ள கர்த்தாவே!... உதடு முணுமுணுக்க அவன் முன்னிலையிலேயே மனசுக்குள் ஜெபம் செய்தாள் மேபல். கண்களில் கண்ணீர்.
அவன் கேலியாய்ச் சிரித்தான்.
“என்னடி ஜெபம் பண்றியா? நான் வேண்டாம்ன்னு? ராஸ்க்கல்!”
“எனக்கு இதெல்லாம் வேண்டாம் ரூபன்.”
“உங்கக்கா என்னெ நடுத்தெருவுல அலையவெச்சா... நீ என்னெ கால்ல போட்டு மிதிக்கிறெ. உங்கப்பன் என்னெ கொன்னு தீர்க்கலாம்னு அலையறான். இதுல பேசீட்டுருக்கும் போதே ஜெபம் வேற ஜெபம்.. நேரா மோஷத்துக்கு போறவள்கள்லெ?”
”ரூபன் டியர்! நான் நரகத்துக்குத்தாம் போவேன். அக்காவுக்கும் அப்பாவுக்கும் நான் செய்யிறது துரோகம் இல்லையா? சண்டாளி உங்களையா நானும் நேசிக்கணும்! ஆண்டவரே ஸ்வாமீ!”
“யேய்! அழுகையெ நிறுத்தடி பசப்பி! எனக்காக இதுவரைக்கும் என்ன பண்ணீருக்கே நீ! உங்கக்கா மாக்னஸ் மாதிரியே நீயும் இருக்கேன்னு என்னெ ஆட்டி வெக்யலாம்ன்னு பாக்றியா? உங்கக்கா அப்பா அப்பான்னு பயந்த மாதிரி நீயும் என்னெ ஏமாத்தி குழியில எறக்கலாம்ன்னு நெனைச்சே.. படவா ராஸ்க்கல் தேவுடியா ஒன்னெ குத்திக் கொன்னுட்டு உங்கொப்பனையும் என்னை மாறியே நடூ ரோட்ல திரிய உடாமெ நான் சாகமாட்டேன்டீ தெரிஞ்சுக்கோ!”
கண்களில் நீருடன் சிரித்தாள் மேபல்.
“இந்தத் திமிர் பேச்சு பேசியே என்னெ மயக்கீட்டிங்க!”
“உங்கப்பங்கிட்ட என்னடீ வெச்சிருக்கே?”
”அப்பாவெ உங்களுக்குத் தெரியாது!”
“களிமண்ல என்ன தெரிஞ்சுக்கணும்! களிமண் தான்!”
“எங்கப்பாவெ கேவலமா பேசுனா எனக்கும் பிடிக்காது. மாக்னஸ் சின்னக்காவுக்கும் பிடிக்காது தெரியுமா?”
”சரி! எப்பதான் வருவெ?”
“எஞ்ச?”
“என்னோட!”
“அதான் எஞ்சன்னு கேட்டேன்!”
”எங்கியாவது. உங்கப்பன் இல்லாத எடத்துக்கு!”
“எங்கப்பா இல்லென்னா நானும் வரமாட்டேன்! என்னெ உட்ருங்க!”
“யேய்! நிறுத்துடி உங்கொப்பம் புராணத்தெ!”
“எங்கப்பாவே உட்டுட்டு வர்றது இந்த ஜென்மத்ல இல்லே!”
“இப்டிப் பேசியேதாண்டி உங்கக்காவும் என்னெத் தெருவுல நிக்க வெச்சிட்டு அவ ஜாலியாப் போனா.... நீயும்....”
”வாய மூடுங்க!”
அவள் நடந்தாள். அவன் பின்னிட்டு நின்றான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மைதானத்தில் குறுக்கே நடந்து ரோட்டில் இறங்கும்வரை இடுப்பில் கை வைத்துக் கால்களை அகட்டி பார்த்தபடியே மிஷன் மேட்டுத் தெருவில் நடந்தாள் மேபல்! யாரும் பார்க்கும் முன் கண்களைத் துடைத்துக் கொண்டு படியேறினாள். அப்பா கட்டிய வீடு. புதுசாக கட்டியது. அப்பா ப்ளான். எல்லாருக்கும் தனித் தனி ரூம். கல்யாணமாகிப்போன ஆனி ரோஸ்க்கும் தனி வீட்டெ இந்த வீட்டில் இணைச்ச மாதிரி! மாக்னஸ் திரும்பி வந்தா அவளுக்கும் ஒரு தனி வீடு. அத்தைக்கும், அண்ணனுக்கும், மேபலுக்கும் கூட தனித்தனி வீடு. எல்லாம் ஒரு நடுக்கூடம் ஒன்றில் இணைந்து அற்புதமாய் அபூர்வமாய்ச் செய்திருந்தார். ஆனால் யாரையும் அண்டவிடவில்லை. அண்ணன் ஃப்ரெடி யாரிடமும் அண்டுவதில்லை. வரத்தும் போக்கும் எங்கேயென்று மேபலுக்கு மட்டும்தான் தெரியும். அத்தை அப்பாவுடன் பேசறதேயில்லை. மாக்னஸ் கல்யாணம் எல்லார் வாயையும் அடைச்சுப் போட்டுவிட்டது. எல்லாருக்கும் மேபல் மட்டும் வேணும். கல்யாணம் ஆகிப்போன பத்து வருஷத்தில் பத்துத் தட்வை மாக்னஸ் சின்னக்கா வந்து போயிருக்கா. அமெரிக்காவிலிருந்து வரணும்னு யாரும் கூப்பிட்டதில்ல. அப்பா இந்த பத்து வருஷத்துல மாக்னஸ் புருஷன் லாசரஸ் அமெரிக்கன் பேச்சு அப்பாகிட்ட மட்டும். மேபல் கிட்ட சிரிக்கிறதோட சரி. மாக்னஸ் வரும்போதெல்லாம் ரூபன் வீட்டுக்குத் தனியாப் போயி பேசீட்டு வருவா. என்ன பேசுவாளோ... என்ன சொல்வாளோ? கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் மேபலுக்கு. ரெண்டு குழந்தையும் பெத்திருந்தா! ஒரு ஆண் ஒரு பெண். வெரி ஸ்வீட் சில்ரன். நடுக்கூடத்திலிருந்து நாலு ஐந்து வீட்டுப் போர்ஷனிலும் ஓடிக் கூச்சலிடும் குழந்தைகள் ரெண்டும். ஒருத்தன் ஸ்சடோன் லாஸரஸ், பெண் ஹனி! ஸ்டேட்ஸ் போகப் புறப்பட்டபோது உள் அறைக்குள் மேபலை இழுத்துக்கொண்டு போய் மாக்னஸ் சொன்னாள், “த பார் மேபல்குட்டி! அப்பாவெச் சுத்திகிட்டெயிருக்காதே. உனக்குக் கல்யாணம் நடக்காது தெரியிதா? ரூபனோட புறப்பட்டு ஸ்டேட்ஸ் வந்துடுங்க. ரூபனுக்கு வேலை ஒண்ணு அவுங்கிட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணீடலாம். பணம் நான் அனுப்புறேன். உங்கப்பன் உனக்கு கல்றயிலதான் கல்யாணம் வெப்பான்! இஞ்சியே இருந்தீன்னா அதான் நடக்கும்!”
“ஏங்கா அப்டீச் சொல்றே. அப்பா இப்ப ரொம்ப மாறீட்டாஅரு..>!”
“ஆம்மா மாறீட்டான்! இந்த உத்யோகமும் பணமும் இல்லேன்னா இந்தக் குடிகாரனெ யாரு மதிப்பா.”
“அப்பாவெ ஒண்ணும் சொல்லாதேக்கா! அப்பா பாவம்!”
“பாவமா? அவம் பண்ண பாவத்துக்கு இன்னும் என்னன்ன பாடுபடப் போறாம் பாரு நீயே.”
“இப்ப என்ன பாடு பட்றாருங்கிறே நீ?”
”என்னெ இந்த நரகத்ல தள்னத்துக்கு ... அவன்...” மாக்னஸ் அழ ஆரம்பித்தாள். குமுறல் பகை அவள் கண்களில் எரிந்தது. ஆத்திரம் கத்தலில் முடிந்தது....
“நீயும் இஞ்ச இருக்காதெ! அழிச்சு ஒழிச்சுடுவாம் பாவி!”
’நான் எஞ்சியும் வல்லக்கா!”
”அடீப்பாவி! உனக்கு நல்லது தாண்டீ சொல்றேன்”
“இந்த நெனப்போட இஞ்ச வர்றதுன்னா நீ வரவே வாண்டாம்! அப்பாவெ உட்டுட்டு நான் எஞ்சியும் வல்லெ.”
“அப்ப ரூபனே நீ லவ் பண்ணல்லியா?” கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டாள்.
”சின்னக்கா நீயும் ரூபனெ எப்பமும் ‘லவ்’ பண்ணவேல்லெ...!”
“என்னெ சொன்னியாடீ பாவி நாயே! உனக்கு வந்து உதவி பண்ணனும்ன்னு நெனைச்ச என்னே!”
“கத்தாத சின்னக்கா! அப்பா காதுல உளுந்தா கொன்னுடுவாரு!”
“சின்னத்தெ சொன்னப்ப நான் நம்பல்லெ. இப்பல்லெ தெரியிது!”
“என்ன தெரியிது? எப்ப உனக்கு என்ன தெரிஞ்சுது. ரூபனே உட்டுட்டு லாஸரஸத்தானெ கல்யாணம் பண்ணிக் கிட்டப்ப இந்த ஞாயம்ல்லாம் தெரியாமெப் போச்சா?”
”என்னப் பேச்சுடீ பேசுறே பட்டி நாயே? தேவுடியா!”
கூச்சல் அதிகமானபோது கெட்ட வார்த்தைகள் சுழன்று எழும்பின. சின்னத்தை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் யாரோடும் அவளும் பேச்சில் அழுத்தம்தான். அவள் வீடும் அந்த வீட்டுக்குள் தனியே கட்டியிருந்தார் அப்பா.
மறுநாளே புறப்பட்டு விட்டாள் மாக்னஸ் ஸ்டேட்ஸ்க்கு!
****
வீட்டைப் பெரிசாக்கிக் கட்ட ஆரம்பித்தபோது மேபல் வீட்டை ரிப்பேர் செய்யப் போவதாகத்தான் நினைத்தாள். அப்பா ஆபிஸிலிருந்து ஆட்கள் வந்து அளந்து சுற்றிலும் ஆறு வீடுகள். நடுவில் கூடம், வாசலில் போர்ட்டிக்கோ என்று சுற்றுக் கட்டாக் கட்டி வந்தபோது இத்தனை பெரிய வீடுஎதுக்கு என்று மிஷன் தெருவில் எல்லாருக்கும் யோசனை. தைர்யமாய் எவன்போய் இவங்கிட்ட கேக்கிறது! உனக்கென்னம்பான்! என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
வீட்டின் முன் போர்ஷன் மேபலுடையைது. எட்டு ஜன்னல். அழகான சின்ன வீடு அது! பக்கத்து வீடு அப்பாவுக்கு.
மேபல் அப்பா போர்ஷனில் நுழைந்தாள். மேஜை மேல் ஏகப்பட்ட ஃபைல்கள். ஏதோ ஒரு பைலில் தலையை நட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் சுவர்களில் மான் தலைகள் விழித்தன. தரையில் புலித்தோல். சுற்றிலும் கருங்காலி ஃபர்னிச்சர்கள். பீரோக்கள். தலையைத் தூக்கி “யாரது?” என்றார் அப்பா.
நரையோடிய சுருள் மீசையை நாக்கால் நக்கிவிட்டுக் கொண்டார் அவளைப் பார்த்தபடி “என்னம்மா” “அக்கா ஆனியே வரச்சொல்லி எழுதுங்கப்பா! ஞாபகப்படுத்தீட்டு போலாம்ன்னு வந்தேன்...!”
“அவ ஏம்மா இஞ்ச? வாண்டாம்!”
”எனக்கு பாக்கணும் போல இருக்குப்பா.”
அப்பா ஒண்ணுமே சொல்லல்லெ. கொஞ்ச நேரம் கழிச்சு “நீயே எழுதி வரச் சொல்லு மேபல்!” என்றார்.
"தாங்க்ஸ்ப்பா!” என்றாள் மேபல். அப்பா வசத்தில் இல்லை என்பது தெரிந்தது. எப்போதும் வசமில்லைதான்..!
“அந்த நாயி வரட்டும், ஆனால் ரெண்டு நாள்ல போயீறணும்! ஆமா!”
“பின்னே ஏம்பா ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடுகட்டி எல்லாத்தையும் ஒரே வீடாக்கினீங்க?”
“அதெல்லாம் பன்னிக் கூட்டம்மா! என்னெ யாரும் மதிச்சதில்லே! உங்கம்மா உள்பட எல்லாரும் ஏங்கிட்ட பயந்தாங்கம்மா யாரும் நேசிச்சதில்லை. பீ தின்றதுக்கு வர்ற பன்னிக் குட்டி எல்லாம் தின்னட்டும். என் ப்ராயாசையோட பலனெ அனுபவிச்சாங்க. பயந்துக்கிட்டே இஷ்ட்டம்போல ஆடுனாங்க. இன்னும் எத்தனை நாளம்மா மேபல்? அன்பில்லாத வீடு அட பெரிசாத்தான் இருக்கட்டுமே எனக்கென்ன? இன்னைக்கு நாளையோ நான் ஏன் விஸ்க்கியிலேயே ஊறிக்கிட்டு இருக்கேம்மா! நீ ஒருத்திதாண்டா என்னை மாதிரி! ஏங்கண்ணு உங்கம்மா பயந்துகிட்டேதான் ஏங்கிட்ட பெத்தா எல்லாத்தையும். எல்லாரும் ஏங்கிட்ட பயப்புட்றாங்களாம். நான் நம்பவேனா ராஸ்கல்ஸ்” உறுமினார்.
“நீங்க பேசுறது தப்புப்பா! எல்லாரும் உங்களை நேசிச்சாங்க. அம்மாவுக்கு உங்க மேல் உயிர்!”
“அட போடி கறுப்பி. உனக்கு யாரையும் தெரியாது. எல்லோருக்கும் பயம். அவ்வுளதான். என் ஆபிஸ்ல வேலக்காரங்க மாறி வீட்ல எம்பெண்டாட்டி எல்லாருக்கும் பயம். நடுக்கம் பயம்போனா எல்லாருக்கும் நான் அல்ப்பம்! இல்லியா? உங்கம்மா கல்யாணம் ஆன மறுநாள் வாய மூடினவதான், சாகும்போது கூட வாயெத் தொறக்கில்லெ. நீ ஒர்த்திதான் என்னோட நின்னுகேட்டு எதுத்து சண்டை போட்டு என் பொண்ணா எனக்காக நிக்கிறேம்மா.”
இல்லப்பா எனக்கும் பயந்தான்! நடுக்கந்தான்.
எதிரேயிருந்த விஸ்க்கி பாட்டிலெத் திறந்து நுரைக்க அப்படியே சோடா கலக்காமல்... “என்னப்பா ஆச்சு? இன்னைக்கு இப்படிக் குடிக்கிறீங்க?”
“என்னமா புதுச்சு? எப்போதும்தான் இது வேண்டியிருக்கு உனக்கு ஏது புதுசு!”
”இல்லெ அப்படியே ராவா கடகடன்னு..”
“எனக்கு உங்கிட்ட பேசணும்மா! பயம்மாயிருக்கு எனக்குப் பேச்சு வழக்கமில்லெ.”
“பயமா? உங்களுக்கா? என்னப்பாது?”
“என்னெ மொரடன்ங்கறாங்க? உங்கம்மாவும்கூட முசுடும்பா என்னெ! யாரு கிட்டியும் பேசறதில்லெ! ஏந் தெரியுமா? நிஜமாவே நான் முரடன். எல்லாரையும் அடிச்சு நொறுக்கி அசிங்கமான பேர் வாங்கிட்டேன். ஏன் தெரியுமா? யாரவது என்னெ நேசிக்கிறாங்களான்னு சந்தேகம்தான்!”
“எல்லாரும் வெலகி வெலகிப் போய்ட்டாங்க உன்னெத் தவிர. உங்கம்மாகூட பயந்துகிட்டே காலத்தெத் தள்ளீட்டுப் போய்ச் சேந்துட்டா. பாவம் ஏம்மா அவ என்னெ ஏங் கோபத்தெ எதுத்து என் மொரட்டுத்தனத்தெ எதுத்துப் போராடல்லெ? அவ பொய்ம்மா பொய். நீ மட்டும்தான் என்னெ எதுத்துப் போராடிட்டிருக்கே. எனக்குத் தெரியும். அவங்களுக்கெல்லாம் நான் வாண்டாம். இந்த தொரட்டுத் தாயழி வாண்டாம். போய்ட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவங்களே போது. அப்பன் வாண்டாம். ஆனிமுண்டெயக் கூப்படணுமிங்கிறியே அவளுக்கே ஏன் வரணும்ன்னு இல்லெ?”
“நானல்ல இருக்கே! இஞ்ச? வீடு கட்டினேன். அதனால்தான் யாரும் வரமாட்டாங்க. வர வேண்டாம். வரும்போது நான் இருக்க மாட்டேன். வீடு இருக்கும். ஆனா ஒரே வீடு ஆறுவீடானாலும் ஒரே வீடுதான். உடைக்கப் பிரிக்க முடியாது. உயில் அப்படி எழுதியிருக்கேன். இந்த கெழவன் சாகும்போது, குடிச்சு எரியும்போது நீ ஏம்பக்கம் இருப்பேடா கண்ணு. இருப்பே. ரூபன் வந்து கூப்பிட்டாலும் ஓடமாட்டேம்மா ராஜாத்தீ. தெரியும் எனக்கு. உன்னே யாரும் வளைக்க முடியாது. வாண்டாம்ன்னாலும் இந்தக் கெழவன் காலடீலயே நீ கெடப்பேம்மா. இந்தச் சிலுவெயெச் சொமந்துட்டே கடைசீ வரைக்கும் நடந்துடுவோம்மா கண்ணுமணீ. இந்தக் கழுதே மாக்னஸ் ரூபனெ கட்டிக்கணும்ன்னு ஏங்கிட்ட எப்பவாவது வந்து ஒருநாள் வந்து கேட்டாளா? ரூபன் நாயாவது அவளெ இழுத்துட்டுப் போயி கல்யாணம் பண்ணிக்கிற துணிச்சல் உண்டாயிருந்தானா? நான் சொன்னப்போ முடியாது லாஸரஸ் கட்டிக்க மாட்டேன் ரூபனத்தான் பண்ணிக்குவேன்னு சண்டைபோட்டு அப்பாவெச் சம்மதிக்க வெக்க அப்பம் மேலே பிரியம் இருந்ததா? இல்லியேம்மா. இல்லே அப்பங்கிட்ட பயமாம்! உன்னப்பங்கிட்ட சண்டைபோட, கேட்டு வாங்க எதுக்காவுது வந்தியா? நீயும் லாஸரஸ்ஸெக் காட்டினதும் ஓடிப்போயி கட்டிக்கிட்டே. எனக்கென்ன உன் தலையெழுத்து. காசு! உத்தியோகம்! ஸ்டேட்ஸ்ல பெரிய வியாபாரம். அந்தஸ்து! ரூபன் வாண்டாம்! அப்பன்தானா காரணம்? ஏண்டி நாய்ங்களா? கேட்டு முட்டி மோதி வாங்கியிருக்க முடியாதா?”
”என்னப்பா நீங்க! இப்டி இருமி கக்கிகிட்டு பேசணுமா?”
“போதும் அப்புறம் நாளைக்குச் சொல்லுங்க.”
“மேபல்! கண்ணம்மா, நான் இனிமே பேச முடியாதும்மா. நான் காலமெல்லாம் பேசினவனுமில்லே. தஞ்சாவூர் பாரிஷ்ல என்னெ மதிச்சவனுமில்லெ. நான் மதிச்சவனுமில்லெ. உன்னெயும் நான் விட்டுட்டு ஒதுங்க முடியாது. என்னெ நீயும் பயந்து பயந்து ஒதுங்கிப்போயி கிட்டத்துல வந்து கட்டிப் பிடிச்சுகிட்டே. எங்கிட்ட எல்லாத்தையும் ஒடச்சு வெக்யிற. ரூபன் கோபிச்சுகிட்டு இருக்கான். பாவம்! அவனெ வந்து நேரா ஏங்கிட்ட பொண்ணு கேக்கச் சொல்லுவா! பாப்போம். நானா தூக்கி இந்தான்னு என் கண்ணுமணியெத் தர முடியுமா? ரூபன் கோழைப் பயல். அதுனாலதான் இன்னிக்கு வரைக்கும் உன்னையோ இதுக்கு முந்தி மாக்னஸையோ பொண்ணு கேக்க வர்லெ! இழுத்திட்டு ஓடலாம்ன்னு பாத்தா.. விடுவேனா? இது என்ன எல்லாருமே பயப்படுறோம் பயப்படுறோம்னு தாறுமாறா நடக்க முடியும்? ஜேவியரு பொண்ணுன்னா சாதாரணா? உனக்கு ஆசைன்னா நீ வேணும்ன்னா ரூபன் பயலோட ஓடு! ஆனா திருட்டுத்தனமா ஓடாதெ! அப்பா, நான் இவனோட போறேன்னு சொல்லீட்டு ஓடு! உங்கப்பன் வேட்டைக்காரம்மா! புலியையும் தெரியும் இந்த நரிகளையும் புரியும்....”
“என்னெ மன்னிச்சிருங்கப்பா! நான் ரூபனோட பேசித் திரியிறதெல்லாம் தப்புதாம்ப்பா!”
”தப்புன்னா என்னன்னே தெரியாதேடீம்மா மேபல் உனக்கு! ரூபன் பயலுக்கு மாக்னஸெ நான் ஏன் குடுக்கல? அவங்க ரெண்டு பேரும் ‘லவ்’ பண்ணலெ, ஏம் மேலே பழியப் போட்டா மாக்னஸ்! என்னெ யாரு வகை வெச்சான்ங்க? உண்மையிலேயே மாக்னஸ் ரூபனெ நேசிச்சது நிஜம்னா அவ என்னோட போராடி சம்மதம் வாங்கி ஜெயிச்சிருக்கணும். உங்கம்மாவெ நாப்பது வருஷம் முந்தி நானும் லவ் பண்ணுனேம்மா மேபல். தெரியுமா உனக்கு? இந்த மாக்னஸ்குட்டி மாதிரியே உங்கம்மா அவ அப்பன் மெரட்னதும் ஊட்டுக்குள்ற நாய்க்குட்டி மாதிரியே அவவூட்டுக்காரங்களுக்காகப் பயந்து வாலைச் சுழட்டிக்கிட்டுப் பதுங்கீட்டா! எனக்குத் தெரியும் அவ்வளவுதான்னு.  உட்டேனா? பட்டப்பகல்ல அவ வூட்டுக்குள்ள போயி அவுங்கப்பனுக்கெதுர்க்கவே உங்கம்மாவெ இழுத்துக்கிட்டு வந்து பீட்டர்ஸ் சர்ச் ஆல்ட்டர்ல ஐயர் கூட இல்லாமெ நானே தாலியெ கட்டினேன். அப்றம்ல எல்லாருமா வந்து அழுது கெஞ்சி மொறையவும் திருப்பியும் அதே சர்ச்ல லாம்ப் ஐயர் தாலி குடுத்து நான் வாங்கிக் கட்டினேன். கல்யாணம் ஆச்சி! நாந்தாம்மா உங்கம்மாவெ ‘லவ்’ பண்ணினேன். அவ பொண்டாட்டியா இருந்தா, புள்ள பெத்தா, வளத்தா! எல்லாம் சரி, ஏங்கிட்ட பயம் எப்போதும்! நான் அடிப்பேனாம் உதைப்பேனாம் கொடுரமானவனாம்! நான் கோலியாத் மாதிரி ராட்சசனாப் போனேன்...”
“அப்டீல்லாம் நீங்க இருந்தீங்கதானேப்பா! அது உண்மையில்லையா அடிச்சுத் தொவைக்கலியா?”
“நாலஞ்சு புள்ளை பெத்தாளேம்மா உங்கம்மா! அதுமட்டும் ஐயமில்லாம எப்டி நடந்துதாம்? பயம் பயம்ங்கிறது அப்ப வல்லியா? ஏம் புருஷன் மொரடன்ங்கிறது ஒரு வசதி! யாரும் கிட்ட வராம ஒரு வழி. எங்கப்பா ஒரு கோலியாத் ராட்சசங்கிறது ஒரு தெம்பு! பண்ற தப்பு தெரியாம மத்தவங்ககிட்ட தப்பிச்சு தலையில சுமத்த ஒரு லாபம்! இல்லியா? அப்பன் எதுக்கும் விடமாட்டான்! அடாவடி புடிச்சவன்னா யாருகிட்ட வந்து பேசுவான். ஜேவியர் ரொம்ப கண்டிப்புன்னு ஆபீஸ்ல எல்லாப்பயலும் பேசியே ஒதுக்கிட்டா.. தப்பிகிட்டே ஒழுங்கீனம் பண்ணலாம்ல! அதான் பெத்த பொண்ணுங்க கூட, ஏன் கட்டின பொண்டாட்டி கூட ஒதுங்கியே தூரத்ல இருந்தே போய்ட்டாங்க... பெத்த பய தெருப் பொறுக்கி மாதிரி சுத்துகிறான். அவனுக்கும் அப்பன் வாண்டாம்!”
“நான் மட்டும் என்னப்பா ஒஸத்தி? நானும்தான் ரூபனெத் தேடீட்டு போய்க்கிட்டு இருக்கேன்!”
மேஜையில் இருந்த இன்னொரு கிளாஸ் திரவமஞ்சளும் ஜேவியர் தொண்டையை எரித்து உள்ளே கடந்தது. நிதானமாக மகளை உற்றுப் பார்த்தார். உடல் முழுவதும் ஆறாத வியர்வை. நீண்ட நேரம் பேசியதால் வந்த பதைபதைப்பு. மகள் அருகில் கண்ணீர் ததும்ப நிற்பதைப் பார்த்ததும் கலங்காது ஒரு கடுமை பறந்தது முகத்தில்...
“மேபல்! நீ உன்னெ மட்டும் நேசிக்கல்லெம்மா.. நீ இல்லாவிட்டால் ப்ரெட்ரிக் இந்த ஊரெ விட்டே எங்கியோ ஓடிப்போயிருப்பாம்மா. இஞ்ச நீதான் எனக்கும் அவனுக்கும் எடையில் இணைச்சுப் பிடிச்சுட்டு நிற்கிற. உங்கக்காமார் என்னெப் புழுதியா நெனைச்சுப் போய்ட்டாலும், அவங்களோட அப்பனை ஞாபகம் பண்ணி அவங்ககிட்ட எணைச்சிகிட்டு நிக்கிறது யாரும்மா? நீதானே எனக்கு மகன், மகள் எல்லாம் இல்லாமல் போய்டாமெ ஆவியோட சேத்து அப்பனை அவங்ககிட்ட விடாமெ உயிர் குடுத்துகிட்டு நிக்கிறது யாரும்மா? அட உங்க சின்னம்மா சின்னத்தை கூட யாரெ நெனச்சுகிட்டு இங்க வர்றாகடீ? பொண்ணே எங்கக்கா என்னெ இன்னும் நெனச்சி இஞ்சயே நிக்கிறாளே உங்களோட இந்த வூட்ல, ஏன்? உன்னாலம்மா உன்னால். நீ இல்லென்னா நான் கட்டின இந்த வூட்டெ பிரிச்சு வேண்டியதை எம்ப்பரயாசையோட பலனெயெல்லாம் அள்ளிகிட்டு போய்டுவாங்க. இஞ்ச ஒரு ஈ காக்கா இருக்காது. என்னெப்போல யாரும் இருக்கக்கூடாது. எனக்கு யாரும் இல்லெ. தெரியும் எனக்கு நாம் பொறந்ததுல இருந்தே, நானே வளந்து, மேபல் இதுல இனிமே நானே எப்டி மாறி, நானே எப்டி மத்தவங்களோட ஆசைக்கேத்தபடி மாறி திரும்பியும் வாழபோறம்மா? முடியாது. என்னைக்காவது அவங்க எல்லாரும் திரும்பி வரும்போது நானும் இருக்க மாட்டேன். இருக்கவும் கூடாது. ஆனா இந்தப் பெரியவீடும் நீயும் இருப்பீங்க. தேடி வரணும். நீ படிச்சவ. எல்லா க்ளாஸ்லியும் காலேஜிலியும் என்னெப் போலவே அபாரமா மார்க் எடுத்து டிஸ்டிங்ஷன்ல பாசானவ. சொத்தும் உனக்காக நான் நிறைய சேத்து வெச்சிருக்கேன். உன்னெ அவனுக்கு இல்லெ. எவனுக்குமே கொடுக்க ஏம்மனசு ஒப்பாதுதான். எனக்கு நீ மட்டும்தான் மிச்சம். என்னோட எல்லாமே மேபல் கண்ணுதான். ஆனா உனக்கு நான் ரூபனெத் தரத்தயார். ஏன் தெரியுமா! எனக்கு நீ தந்திருக்கிறது உன்னையேயல்ல. ஆனா ரூபனைப் போயி நீ கேக்கக்கூடாது? என்னெக் கல்யாணம் வந்து கேளுன்னு கூப்டக் கூடாது. நான் உங்கிட்ட சொன்ன எதையும் யாருகிட்டயும் - உங்க சின்னத்தைக்கிட்டக் கூட சொல்லக் கூடாது. உங்கப்பன் உங்கப்பன் தான்னு நீதான் நிரூபிக்கணும். ரூபனா வந்து பொண்ணு கேட்டு இந்த ஒலகமே எதுத்தாலும் என்னோட போராடி உன்னெ ஜெயிக்கணும்மா. உங்கப்பனெ இந்த உலகம் புரிஞ்சுக்காட்டி பரவால்லெ. நீ புரிஞ்சுக்கணும். உன்னோட வாழ்க்கைக்கு மட்டுமில்ல. உங்கம்மா, உங்கக்காமார், யாரோட வாழ்க்கைக்கும் உங்கப்பன் என்னைக்கும் தடையாயிருந்ததில்லே! அவங்களேதான் தடையாயிருந்தாங்க என்னோட வாழ்க்கைக்கும்.” இருமல் ஆரம்பித்த ஜேவியரு தொடர்ந்து இருமினார். மேலும் குடித்தார். மேபல் அழுதாள். இரண்டு பேரும் தழுவிக் கொண்டார்கள். மேபலை உச்சி முகர்ந்து முத்தமிட்டார். மேபல் பொருமிப் பொருமி அழுதாள். உதடுகளில் அப்பனின் முத்தங்கள். அவரது விஸ்க்கியின் சீற்றமும் அதிகப் பேச்சின் உக்ரமும் கொஞ்சமாய்த் தணிந்தன. அப்பாவின் அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டபோது மேபலுக்கு நெஞ்சுபூராவும் நிரம்பியிருந்தது ரூபன் மட்டுமே. இதை ரூபன் தர வேணும். தருவானா? உலகம் தராவிட்டாலும் ரூபன் தரவேண்டும். அப்பா கேட்டதை அவன் அவளுக்கு தராவிட்டாள். பயங்கரமாய் இருந்தது. இது யாருக்கும் புரியப்போகிறதில்லை. அவள் இப்போது அப்பா சொத்தல்ல. ஆனாலும் ரூபனுக்கு அவள் வேண்டுமா வேண்டாமா? அவன் அவளை அப்பாவிடமிருந்து எடுத்துக் கொள்வானா?
காலம் முழுவதும் ரூபன் தேடியது, அப்பா தேடியது. அக்காமார், சின்னத்தை எல்லாம் தேடியதும் மேபல் வியந்து கண்ணீர் வடித்தாள். குழந்தைப் பருவமெல்லாம் அவள் ஏங்கியது கிடைத்துப் புரிந்துவிட்டது. இந்தப் புதையல் இத்தனை காலம் கண் முன்னேதான் இருந்தது. கனவாய் மயங்கியது. நிஜமாய்ச் சுட்டது. ரூபன் இது உனக்கு முடியுமா? அப்பா சொன்னதுபோல் மேபல் கேட்கமாட்டாள். உன்னிடம் மட்டுமில்லை எந்த ஆணிடமும் கேட்க மாட்டாள். மேபல் அப்பாவின் பெண். வாட்டசாட்டமாய் வளர்ந்துவிட்ட பெண். அவளது ஆகிருதி உயரம் எல்லாமே ஜேவியரதுதான். எம்.ஏ. பாஸ் செய்தாயிற்று. அப்பா தடுத்துக் கொண்டிருப்பதால் வேலைக்குப் போகவில்லை. மிஷன் சர்ச்சில் வேலை கிடைத்தும் தடுத்துவிட்டார். காரணம் பெரிய திட்டம்!
ஒரு முழு அலுவலகத்தைத் தாங்குகிற வேலை வருகிறதாம். பலத்த திட்டம் உட்பட அலுவலர்கள் குவார்ட்டஸ் எல்லாவற்றோடும் சீக்கிரமே வந்துவிடும். அப்பா ஏற்பாடு எல்லாம் சரி! ரூபன்? தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் கோவில் மைதானத்தில் நிற்பான். நாட்கள் ஓட ஓட ரூபனும் திரைந்து கொண்டிருந்தான். பெரிய்ய வீட்டில் அத்தையுடன் சமையல் செய்த நேரம் போக அண்ணன் ஃப்ரெட்ரிக்கை எதிர்பார்ப்பதும் கடிந்து கொள்வதும் காசு கொடுப்பதும் தவிர மேபலுக்கு வீட்டில் வேலை? அப்பாவின் புத்தகங்கள்தாம் துணை.
காலை ஆறு மணிக்கே கோவிலுக்குப் போகிறதில் நற்கருணை ஆராதனையில் கலந்து கொள்வதில் தவறுவதேயில்லை. அப்பாவின் ஆபிஸ் ஜீப் வாசலில் வருகிற சப்தம் போர்ட்டிக்கோவில் ஜீப் வந்து நிற்கும் சப்தம் போதும். மேபல் வாசலுக்கு ஓடி வந்தால் அப்புறம் இரவு வெகு நேரம் வரை அப்பாவுடன் தான் நேரம் கழியும். அப்பாவுக்கு எது பிடிக்கும் அதுதான் சமையல். அப்பா வேட்டைக்குப் போனால் இப்போது மேபலும் கூடப் போகிறாள். தடுமாற்றமில்லாமல் இப்போதும் துப்பாக்கி பிடிக்கிறார் ஜேவியர். அவளும் சுடக் கற்றுக் கொண்டிருக்கிறாள். வேதாரண்யம் காட்டுக்குள் ஞாயிறுகள் கழியும். மூன்று ஜீப்புகள், அப்பாவின் ஆடர்லிகள் வேட்டைக்காரர்களுடனும் மேபலும் வியர்வையில் ஊறி ஆவி பறக்கத் திரிந்து தஞ்சாவூர் திரும்பும்போது ஜீப்பில் மான்கள் உயிரற்றுக் கிடக்கும். அப்பாவுடன் சீட்டு விளையாடுவது, அப்பாவுடன் குளிப்பது, காலையில் பனி மூட்டத்தில் வீட்டு மொட்டை மாடியில் எக்ஸர்ஸைஸ் செய்வது. வியர்த்து வடியவடிய டம்பல்ஸ், ஸ்கிப்பிங் பயிற்சி, பனியன் ஹாஃப் டிராயர்ஸ் வியர்வையில் ஊறிவிடும். பேய் மாதிரி கொட்டும் அருவிகளில் காட்டில் தலை கொடுத்து அப்பனின் எல்லா ஆட்ட பாட்டங்களுக்கும் துணை நிற்பது. இப்போதெல்லாம் மேபலுக்கு நேரமேயில்லை. கண்ணாடியில் பாத்ரூமில் உடம்பைப் பார்க்க ஆச்சர்யமாயிருக்கும். இப்போதெல்லாம் ரூபனைப் பார்க்க மறப்பதேயில்லை. முன்பெல்லாம் அவனிடம் தப்பினால் போதும் என்றிருக்கும். அவன் தொடும்போதெல்லாம் பயமாய் இருக்கும். காலையில் அவனைத் தாண்டுவது ஒரு பிரச்சனை. இப்போதோ ரூபன் ஒரு சுகம். அவனை எங்கு பார்த்தாலும் கூப்பிட்டு நிறுத்திப் பேசுகிறாள் மேபல். பேச்சின் தோரணையே தனி!
“என்ன மிஸ்டர் ரூபன்! எப்படியிருக்கீங்க. என்ன பண்ணிட்டிருக்கீங்க?”
”ம்! சும்மாதான் இருக்கேன்.. வந்து....”
“சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க!... இப்படியே திரிஞ்சிட்டிருந்தா எப்படி? உங்கம்மாவெக்கூட மானிங்ஸர்வீஸ்ல பாத்தேன். அழுதாங்க! சீக்கிரமா ஏதாவது வேலையில சேந்தா சந்தோஷப்படுவாங்க!”
“அழட்டுண்டி! உனக்கென்ன! உன் வேலையப் பாத்திட்டுப் போடீ”
“டீஸண்டாப் பேசக் கத்துக்குங்க ரூபன்”
“ஆமா! இனிமேத்தான்! உங்கிட்ட டீஸன்ஸி கத்துக்கப் போறேன்! அதுசரி நீ பெரிய வேலைக்கிப் போப்போறியாமே!”
”ஆமா! ஆமா!”
“எப்போ கல்யாணம்?”
“யாருக்கு?”
“ஏய் உனக்குத்தான்டீ!”
”ஏன் கேக்கிறீங்க?”
”ல்லெ... உனக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்ன்னுதான் கேக்கிறேன்!”
“ஜீஸஸ்! அப்பா! ரொம்ப நல்லதாப் போச்சு. இனிமே ஏம்பின்னாடி சுத்தமாட்டீங்கள்ல?”
”ஏங் கொப்பனோட போட்ற ஆட்டம் போதலையா? தொலைச்சுடுவேன் ஆமா!”
“ச்சீ உங்க அசிங்கம் இவ்வளவுதானா இன்னும் இருக்கா?”
”மேபல் இனிமேயும் உன்னெச் சும்மா விடமாட்டேன் ஆமா உன்னெ... உன்னெ...”
காலை நேரத்தில் அந்த மைதானத்தில் ரூபன் மேபலை இழுத்துத் தடவி.. வெட்ட வெளியில்.. மேபல் பதட்டமேயில்லாமல் அவனை விலக்கித் துரத்துவாள். லேசாக வரும் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு ரூபனைப் பார்த்து “ரூபன் என்ன இது? சும்மாயிருக்கமாட்டீங்களா? யாராவது பாத்தா என்ன ஆகும்? இப்டி முரட்டுத்தனம் பண்ணினா என்ன ஆகும்? நீங்க என்ன ஆம்பளை? ஸ்பரிசம் பட்டதும் மயங்கி ஒங்க கைல விழ எனக்கு உங்க ஸ்பர்சமும் புதுசு இல்ல வயசும் பதினாறு இல்லெ. நான் அரைக்கிழவி நீங்க முக்காகெழவன். இனிமே உங்களாலெ என்ன முடியும்? வேலையா ஒண்ணுமில்லெ. சம்பாத்யமும் இல்லெ. சுயமா ஒண்ணும் செய்ய முடியாது... ஒண்ணு பண்ணுவீங்க விட்டா.. ஒரு புள்ளே பெத்துக்குவீங்க. இல்லெ? என்ன முறைப்பு இது? உங்க சிரிப்பப்பாத்து மயங்கிட்டிருந்த மாக்னஸ் இல்ல நான். மூஞ்சியெல்லாம் தாடி அழுக்குப் பாட்டமா ஜீன்ஸ்பாண்ட் தொள தொளன்னு வியர்வை நாத்தம் பிடிச்ச ஜிப்ப.. பத்து பதினைஞ்சு வருஷமா என்னமும் மிச்சம் இருக்கா? அக்கால்லாம் போயாச்சு என்னெப் பிடிச்சீங்க இப்ப? தாடி கிருதா தலைமுடி எல்லாம் வளந்து ஒண்ணாப் போச்சு. வெட்டிப் பேச்சு இன்டீஸண்டா பிஹேவ் பண்றது கெட்டவார்த்தை பேசறது கஞ்சா அடிக்கிறது தெருச் சுத்தி வர்றது கேக்க ஆளு இல்லன்னா என்னெச் சுத்துறது. இதுக்குப் பேரு லவ்வா? மிஸ்டர் ரூபன் வேண்ணா சொல்லுங்க. அக்கா மாக்னஸ் உங்களெ லவ் பண்ணா நான் பண்ணலை.”
“ஒவ் அப்பனை லவ் பண்றியாக்கும்!”
“ஆம்மா! அப்பனை லவ் பண்ணத்தாம் பண்றேன். ஆனா உங்க மாக்னஸ்ஸெ பண்ணின மாதிரி லவ் இல்லெ. இது அப்பனை நேசிக்கிற லவ். உங்களுக்கெல்லாம் புரியிற லவ் இல்லெ!”
“தேவுடியா!”
“உங்ககிட்டருந்து வேற எனக்கு என்ன பட்டம் கிடைச்சிடும்! நிஜமா இதுதான் சரி! உங்களுக்கெல்லாம் உங்க மேலதான் லவ்! நிச்சயம் எங்க மேல இல்ல!”
மேபல் நடந்தாள். எப்போதும் போல மோனத்தில் நிற்கும் செய்ன்பீட்டர்ஸ் சர்ச்! கோழி முட்டை வடிவ கோபுரம் காலை வெயிலில் கோணலான நிழலை விழுத்தியது. மெல்லென நடந்தாள். ரூபன் பின்னால் வெறியுடன் அவளைப் பார்த்து நின்றான். அப்பா சொல்வது நிஜம். இவர்கள் எல்லாம் தன்னையே நேசித்து தன்னையே வளர்க்கிற கூட்டம். அம்மான்னும் அண்ணன்னும் அக்கான்னும் தங்கைன்னும் உறவு சொல்லி அதையே சொல்லி ஏமாத்தி காதல்ன்னும் பாசம்ன்னும் வார்த்தையவெச்சு வியாபாரம் பண்ற தன்னல கும்பல்! மைதானம் முழுவதும் இன்னும் பனி விலகல்லெ... எதிரே வர்றது யார்?
வெய்யிலும் பனியும் கலந்து ஒரு மாதிரி சாம்பல் நீலப்புகை மாதிரி எங்கும் படர்ந்து... எதிரில் வந்தது அண்ணன் ஃப்ரெட்ரிக். அட இவரும் காலையிலியே வர்ராறே என்ன கஷ்டமோ. வர்றதெல்லாம் பணம் வாங்கத்தானே?
”வாங்கண்ணே என்னது காலைல? கோயில் பக்கமா?.... ஆச்சர்யமாயிருக்கே...”
“உன்னெப் பாக்கத்தான்.. வந்த.. இது கல்யாண விஷயம்.. அதாவது?”
“கல்யாணமா? யாருக்குன்னே?”
“எனக்கும் ஒரு பொண்ணுக்கும்”
“யாரு அந்தப் பொண்ணு?”
“நீதான் அப்பாட்ட சொல்லி... எனக்கு பயம்.. நீயே சொல்லி.. எப்டியாவது....”
”நோ! நான் மாட்டேன்!... ஏண்ணே உங்களுக்கு இப்படி புத்திபோவுது? நீயே அப்பாட்ட கேளேன்.”
“முடியாதும்மா பதினைஞ்சு வருஷமாவுது அவர்ட்டெ பேசியே. அவரு நெனைச்சிருந்தா எனக்கு வேலையும் வாங்கி வைச்சு எங்கியோ கொண்டு போய் வெச்சு எப்படியோ உசத்தியிருக்கலாம். தன்னலம் புடிச்ச மனுஷன் செய்ய மாட்டார் தெரியும். நான் வாழ்றதே புடிக்காத மனுஷன். நீ இல்லென்னா நான் இருந்த எடத்ல புல்லுல்ல மொளைச்சிருக்கும்? ஆங்காரம் புடிச்ச அயோக்யன்....”
“அப்பாவெ நீ என்னைக்கி அப்பாவா நெனச்சிருக்கே? நீதான் இருக்கியே அப்பா பொண்ணா நான் இல்லெங்கறியே நான் அப்பா பொண்ணு மட்டுமில்ல உனக்கும் தங்கச்சிதான். அதான் கேக்கிறேன் ஒரு கல்யாணம் பண்ணி வெய்யின்னு.. ஏண்ணே இப்படி அப்பாவெ ஒதுக்கி வெக்கிறீங்க? உங்களுக்கெல்லாம் என்ன செய்யல்லெ அவரு? உங்களுக்கு எடையில நான் ஏண்ணே இப்டி அவதிப்படணும்? வீட்டுக்கு வரமாட்டெ.. பத்து வருஷமாச்சு.. ஒனக்கு ஒரு வீடே கட்டி வெச்சிருக்காங்க அப்பா...”
“ஏய் சும்மா அப்பனெப் பத்தி பேசாதே எனக்காக வீடு கட்டியிருக்கான் ராஸ்க்கல் உயிலெப் பாத்தேன். செத்தாக் கூட நான் எடுத்து விக்ய முடியாது தெரியும்ல்ல?”
“நீ விக்யறதிலியும் சுட்டு எரிக்கிறதிலியுமே இரு... பதினைஞ்சு வருஷமா நீ எம்மெஸ்ஸி பாஸ் போனதிலிருந்தே நீ என்னதாண்ணே பண்ணீட்டிருக்கியாம்? இந்த கஞ்சா அடிக்கறிதெத் தவிர தெனம் தெனம் ராத்ரி வந்து செலவுக்குப் பணம் வாங்கிட்டுப் போறியே அதெல்லாம் மட்டும் அப்பாவுக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறியா? இல்லெ ரொம்ப ஞாயம்ங்கிறியா?”
“அவனுக்குத் தெரிஞ்சா எனக்கென்ன தெரியாட்டி எனக்கென்னடீ. எனக்கு வேணும்ங்கும்போது வருவேன். இப்ப எனக்கும் ஒருத்தன் பொண்ணு தர்றேங்கிறான். பண்ணி வெக்யச் சொல்லு அவ்வளவுதான்.”
“முடியாது”
“ஏம் முடியாதுங்கிறே”
”என்னால முடியாது நீயே போயி கேளு”
“ஓஹா சின்னத்தெ சொன்னது சரிதான். உன்னெ வெச்சிட்டிருக்க வரைக்கும் நாங்க தெருவுலதான் நிக்கணும். வர்றேன் ஒரு நாளைக்கி உங்கப்பனெ கண்டமாவெட்டி....”
அவன் வாயிலிருந்து அசிங்கங்களாய்ப் புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது. வழக்கம்தான் இதுவும். மேபல் நடந்தாள். இவுங்க யாரும் மாறமாட்டாங்க. ஏன் மாறணுமாம் இடையில நீ இருக்க வரைக்கும்.. இடையில இருந்தது இருக்கிறது எல்லாம் அவள். மேபல்தானே.. ஒருத்தன் அண்ணன்... ஒருத்தன் ஆசைப்பட்டவன்... ஒருத்தன்... அப்பன் ஜீஸஸ்.... இது என்ன சிலுவை  இது எனக்கு ஏன், கண்ணீர் வழிய மேட்டுத்தெருவில் திரும்பினாள் மேபல். அவளுக்கும் தெரியும் இதெல்லாம் இப்படியே.. இப்படியே...
வாசலில் ஜீப் நின்றிருந்தது... ஆடர்லிகள் நின்று கொண்டிருந்தார்கள்.. ரெண்டு வேலைக்காரர்கள் துப்பாக்கிகளைத் துடைத்து க்ளீன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அடுப்பங்கரையிலிருந்து சின்னத்தை தாளிக்கும் மணம் வீடு முழுவதும் கமழ்ந்தது. சின்னத்தை இருக்கிற வரைக்கும்... எதுவும்.. மாறாமல் எப்படியோ ரூபன் அவனும் அப்படியே. ப்ரெடி... அவனும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா.. வாம்மா வேட்டைக்கிப் பெறப்பட்டுகிட்டு இருக்கேன்! வர்றியா நீயும்...? போலாம்ப்பா அதுதான் சரி... வேட்டை மனுஷனுக்கும் மிருகத்துக்கும் பேதமில்லாத காடு வேதாரண்யம் காடு... சிங்கம் புலியெல்லாம் கிடையாது. ஆடு மான் முயல் காட்டுப் பன்றி கடுவா எல்லாம் உண்டு.... ஒண்ணை ஒண்ணு சாப்டும் ஆளு மனுஷனைக் கண்டா பதுங்கும். ஒளியும். பயம். பறவைக் கூட்டம் கொளம் குட்டை எல்லாம் உண்டு. மேடுகள் புகையிலைச் செடிகள் வளர்ந்து புதர்புதராய் சிட்டுக்கள் வலியன் குருவிகள் இடையில் கழுகுகள் செத்த மிருகங்களைத் தின்னும் நரிகள்.
ஜீப் பறந்து கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் செம்மண் மேடுகள் கள்ளிக் குப்பல்கள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆறாய் நனைப்பது போலிருந்தது மேபலுக்கு. முகத்தைத் துடைத்துக் கொள்ள முயன்றபோது கண்ணீரேயில்லை. அழுவது நன்றாய்ப் புரிந்தது. அவளுக்கு விம்மவேயில்லை. குரலே எழும்பவில்லை. கண்களிலிருந்து எதுவும் வடியவில்லை. அழுகை இல்லை. கண்ணீரில்லை. பக்கத்தில் அப்பாதான் ஜீப் ஓட்டினார். வேட்டை ஒன்றுதான் குறி. கடம்பைமான்கள் நான்காவது சுட்டுத் தள்ள வேண்டும். விடமாட்டார். மேபலுக்கும் அதே பரபரப்பு. எங்காவது மானின் கண்கள் தெரிகிறதா. உச்சிவேளை கடந்தும் ஜீப் காட்டுக்குள் பாய்ந்து போய்க் கொண்டேயிருந்தது.
மேபல் கதறியழ முனைந்து பார்க்கிறாள். இனி அது முடியாது. கோவிலில் கூட முடியாதுதான். எப்போதும் இனி அப்பாவுடன் வேட்டைதான். இருட்டும் போது மிருகங்கள் வரும் எங்கும் பயம் பதிவிருக்கிறது. அப்பாவுடன் இருக்கும் வரை எந்த மிருகமும் வராது. முடியாது. மேபல் தப்ப முடியாது. அவள் இனி எங்கும் பறந்து போக முடியாது.
அப்பா இருக்கும் வரை மட்டுமல்ல அப்பாவுக்கு அப்புறமும். மேபலுக்கு மேபல் மட்டும் போதும்!
-கணையாழி, ஜனவரி 1988
தட்டச்சு : சென்ஷி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

13 கருத்துகள்:

சென்ஷி on September 18, 2010 at 8:56 AM said...

எனக்கு மிகப்பிடித்த கதை..

Shruthi Vijayaraghavan on November 20, 2010 at 8:30 PM said...

அருமையான கதை.. இயல்பான வசனங்கள்.. சில எழுத்தாளர்கள் எழுதும்பொழுது எல்லா கதாபாத்திரங்களின் பேச்சு விதமும் (way of talking or the way of delivering a dialogue) ஒரே மாதிரி இருக்கும். அந்த பேச்சு விதம் வேறுபட்டிருந்தால் தான் அது இயல்பு. இக்கதையில் அதைக் காணலாம். தஞ்சை பிரகாஷ் அவர்கள் மிகவும் எதார்த்தமாக இக்கதையைச் சித்தரித்துள்ளார்.

Guru.Radhakrishnan on April 28, 2011 at 8:55 PM said...

Late Mr,Prakash alias G.M.L.Prakash is a very wonderful storyteller. He was gem against all litterary writers of Tanjore soil after T,Janakiraman.Ku.paa.Raa and karichamkunju (Subramanian).HE WAS suddenly demised due to kidney failure.Tamilliterary world is having great loss of good story teller.

வித்யாஷ‌ங்கர் on December 5, 2011 at 7:51 PM said...

என்னவொரு அன்பான மனுசனை இழந்து விட்டோம். மறக்கவே முடியாது மேபலை

Anonymous said...

மிகவும் நன்றாக இருந்தந்து கதை. இத்தகைய கதையினை படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள்

Anonymous said...
This comment has been removed by the author.
Unknown on September 14, 2013 at 4:30 PM said...

We are missing Thanjai Prakash. Very good and emotional story

KUMAR S on April 1, 2014 at 12:13 AM said...

இறந்தாலும், நம்மோடுதான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்,, நம் தஞ்சைப் ப்ரகாஷ்!!!!!!!!!!!!!!!

Unknown on July 21, 2014 at 5:39 PM said...

prakashin padaipugal kidaikuma sollungal

KUMAR S on July 11, 2016 at 9:08 PM said...

இந்த 2016 ஜூன் 5இல் சென்னை புத்தக கண்காட்சியில், "கரமுண்டார் வூட்டை" கையில் தொட்டவுடனே கண்ணில் குமுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது, தஞ்சை-பிரகாஷ் நம்மிடையே இல்லையென்று,,
ஏனென்றால் நான் அவரின் "மேப்பலை"த் தான் முதலில் படித்தேன்.
ஆனால் "கரமுண்டார் வூடு" அன்னை அடித்து புரட்டி துவைத்துப்போட்டுவிட்டது, நானும் காத்யம்ப்பா கூடவே பேசினேன், அழுதேன், அவளது அப்பாவி பேச்சில் சொக்கினேன் "எங்கே சித்தப்பா கேனிப்பட்டறையை எடுத்துக்கிட்டு கிளெம்பெற. நீ வாற வரைக்கும் சித்தி அழுதுகிட்டே புலம்புது ,,, ஏன் அப்பாயி கரமுண்டான் கரமுண்டான்னு கருவுறே???
முகநூலில் இப்படி பதிந்தேன்

Kumar S
June 16 at 11:16am ·
லா.ச.ரா, தி.ஜானகிராமன். பாலகுமாரனின் படைப்புகளை படித்தால், நம்மை அந்த கதைக்கள தளத்திற்கு அழைத்து செல்லும்... அது போல, தஞ்சை பிரகாசின் "கரமுண்டார் வூடு" தூங்கவிடாமல் அடிக்கிறது. நம்மை கதை மாந்தரோடும், கதைகளத்திலும் உலவ வைக்கிறது..
1000 வேலி நிலங்கள், 500 ஆனதும், பின்னர் தேய்ந்து தேய்ந்து 100, 50 வேலி நிலங்கள் ஆனதும், கரமுண்டாத்திகள் அதை தூக்கி நிறுத்துவதற்குமான போராடும் ஆளுமைகள் .
புணர்ச்சி-மனித உற்பத்தி இதை பிறவித் தொழில் என்கிறார் திருமூலர்....இந்த பிறவித்தொழிலுக்குத் தான் அத்தனை ஆளுமை போட்டிகளும்....
காத்யாயம்பாவும் சாதாரண மனுஷிதான்
எத்தனை எத்தனை மனித பலிகள்???
இன்னும் 10000 ஆண்டுகள் ஆனாலும் இந்த தேசம் இப்படித் தான் இருக்கும். கதை சொல்லிகளான காத்யாயம்பா, அப்பாயி கிழவிகள், இவர்களோடு சேர்ந்து தஞ்சை-பிரகாசும் இதை உறுதிப் படுத்துகிறார்.

S.Kumar research writer cum Trust Manager, Tirumular Trust / cell; 09092755532

vazhkaipriya on April 27, 2018 at 12:43 PM said...

மேபெல் தகப்பன் மேல் காதல் கொள்ளும் மகள்களின் வாழும் உதாரணம். நுண்ணிய மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களை கையாண்டிருக்கும் விதம் சன்னத்தம் மேலேறியுள்ள ஒருவனின் பிரங்ஞை அற்ற பொழிச்சளில் வாசகனைத் தழுவி மூர்ச்சித்துப் போக வைக்கிறது.

vazhkaipriya on April 27, 2018 at 12:45 PM said...

மேபெல் தகப்பன் மேல் காதல் கொள்ளும் மகள்களின் வாழும் உதாரணம். நுண்ணிய மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களை கையாண்டிருக்கும் விதம் சன்னத்தம் மேலேறியுள்ள ஒருவனின் பிரங்ஞை அற்ற பொழிச்சளில் வாசகனைத் தழுவி மூர்ச்சித்துப் போக வைக்கிறது.

Rupan on March 26, 2019 at 12:45 AM said...

ஒரு நீண்ட பயணத்தின் அனுபவம்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்