Oct 10, 2021

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம்

 சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் இந்த வளத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலே, எது வளம், எது வளமின்மை, என்று பார்ப்பதிலே, நமக்குள்ளே பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை வைத்துக்கொண்டு, ராஜாஜி, சாமிநாதய்யர் போன்றவர்களையும், கல்கி, கி. வா. ஜகந்நாதன் போன்றவர்களையும், புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி போன்ற சிறுகதை ஆசிரியர்களுக்குச் சமானமானவர்களாக மதிப்பிட்டுச் சொல்லும் பழக்கம் இன்று நமக்கு இருக்கிறது. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே ஒரு ‘தரத்தொகுப்பு’ நூலான ‘சிறுகதை மஞ்சரி’யிலே, கதைகளும் சிறுகதைகளும் (சோமு, சங்கர், அகிலன், ஜகந்நாதன், தூரன் முதலியவர்களுடையவை வெறும் கதைகள், புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, ஜானகிராமன் இவர்களுடையவை சிறுகதைகள்) இடம்பெற்றிருக்கின்றன. தொகுப்பாசிரியருக்கு கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள தாரதம்மியம் தெரியவில்லை என்பது வெளிப்படை.

கதை என்பது எத்தனையோ காலமாக, வழிவழி வந்த ஒரு சொத்து. (ஆனால்


அதற்கு இலக்கிய அந்தஸ்து சிறுகதையான பிறகுதான் ஏற்படும்). மஹாபாரதத்துக்கும், ராமாயணத்துக்கும் கதைதான் அடிப்படை. ஷேக்ஸ்பியரின் கவிதை நாடகங்களுக்கும் கதைதான் அடிப்படை. புறநானூறிலுள்ள பல செய்யுள்களுக்கும் கதைகள்தான் அடிப்படை. இது தவிர புத்தர் ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் இவையெல்லாம் கதைகள். இந்தக் கதைகளில் பலவும் ஆரம்பத்தில், ஆதி காலத்தில், இந்தியாவிலே தோன்றித்தான் உலகெங்கும் பரவின என்று சொல்லிப் பெருமைப்படுபவர்கள் உண்டு.

கதை என்பது ‘பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு சித்திரம் - அல்லது பல சித்திரங்கள்’ என்று சொல்லலாம். பொய்யே கலக்காத கதைகளும் இருக்கலாம்தான். ஆனால் உலகத்தில் எந்த ஆதி இலக்கியத்திலும் பொய் சிறிதும் கலவாத கதை இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியத்தை நிலைநிறுத்தத் தோன்றிய அரிச்சந்திரன் கதையும்கூடப் பொய்யை அடிப்படையில் அடக்கிய கதைதான். தொல்காப்பியத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிக் கூறுகிற ஆதாரம் இருப்பதாகக் கூறிப் பெருமைப்படுகிற (படுத்துகிற) பண்டிதர்களும்கூட இந்தப் ‘பொய்ச்’ சூத்திரத்தைத்தான் சொல்லுகிறார்கள். அது கதையின் இலக்கணம்; இலக்கிய அந்தஸ்தை எட்டாத எல்லாக் கதைகளுக்கும் லக்ஷணம் அது.

கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனித்துறையல்ல என்பது வெளிப்படை. அது எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு அம்சம். அதிலே இலக்கியத்தரம், மனிதத்தன்மைத்தரம் இரண்டும் சொல்ல இயலாது. நீதிக்கதை, உபயோகமானது, அசுவாரசியமானது, சுவாரசியமானது என்று பிரிவுகள் வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இலக்கியபூர்வமான தராதரம் சொல்ல இயலாது. கதை என்பது பொதுப்பட கவிதை, நாடகம், காவியம், வசன நூல்கள் பல, இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இயங்குகிற ஒரு அடிப்படைக் கோப்பு. ஆனால் சிறுகதை என்பதோவெனில் இலக்கியத்தில் ஒரு தனித்துறை - அதாவது பரணி போல, உலா போல, குறவஞ்சி போல, காவியம் போல, நாவல் போல ஒரு தனித்துறை. இந்தச் சிறுகதை என்கிற இலக்கியத் தனித்துறை உலக இலக்கியத்திலேயே தலையெடுத்துச் சுமார் நூற்றிமுப்பது வருஷங்கள்தான் ஆகின்றன. எட்கார் ஆலன் போ என்கிற அமெரிக்க இலக்கியாசிரியர் தோற்றுவித்த இலக்கியத் தனித்துறை இது. (ஆனால் ஆங்கில, மேலை நாட்டுப் பண்டிதர்களில் சிலரும்கூட இதை இவ்வளவு தெளிவாக ஏற்றுக்கொண்டுவிடுவது கிடையாது. பைபிளில் இருக்கிறது சிறுகதை, கிரேக்க இலக்கியத்தில் உண்டு என்று பண்டிதர்களுக்கே உரிய பாணியில் அங்கும் சண்டைகள் உண்டு). இத்துறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ப்ரெட் ஹார்ட்டி, ஹாதார்ண் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ப்ரான்ஸ்வா காப்பி, மெண்டெஸ், மோபாஸான் போன்ற பிரெஞ்சு ஆசிரியர்களும் செக்காவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும் போற்றி வளர்த்து வளம் செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலே ஆம்பிரோஸ் பியர்ஸ், ஷெர்வுட் ஆண்டர்ஸன், ஹெமிங்வே, பாக்னர், வில்லியம் ஸரோயன் போன்ற அமெரிக்கர்களும் லாகர்லெவ், வான் ஹெய்டன்ஸ்டாம், டாபெர் ஹால்ஸ்டிராம் போன்ற ஸ்வீடிஷ்காரர்களும் பிராண்டெல் லோ, பாலஸெக்கி போன்ற இத்தாலியர்களும், கார்க்கி, ப்யூனின் போன்ற ருஷ்யர்களும், ஜாய்ஸ், ஓகானர் போன்ற ஐரிஷ்காரர்களும், காப்கா, தாமஸ் மான் போன்ற ஜர்மானியர்களும் அந்டோல் பிரான்ஸ் போன்ற பிரஞ்சுக்காரர்களும் இலக்கிய அடிப்படையில் வளர்த்து வந்திருக்கிறார்கள். மேலை நாட்டு அவசர யுகத்தின் தேவைகள் பலவற்றால் ஆங்கிலத்திலும், வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பத்திரிகைகள் யுகமும் அவசர யுகமும் தோன்றிய பின், கதை, சிறுகதை என்கிற இலக்கிய உருவம் பெற்றுப் பின்னர் பத்திரிகைக் கதை என்று ஒரு தேய்வும் பெற்றது. இந்தப் பத்திரிகைக் கதைகளுக்குச் சிறந்த உதாரணங்களாக, ஸாமர்ஸெட் மாம், ஏ. இ. கோப்பார்டு, இர்வின் ஷா முதலியவர்களைச் சொல்லலாம்.

மேலை நாட்டில் தோன்றிய இச்சிறுகதை இலக்கிய வளம் இருபதாம் நூற்றாண்டிலே, இந்தியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் புது இலக்கியத்தில் இந்திய உருவமும், சீன உருவமும், ஜப்பானிய உருவமும் எடுத்தது. சென்ற முப்பது வருஷங்களில் ஜப்பானியச் சிறுகதை பிரமாதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சீனத்துச் சிறுகதை ஆரம்பத்தில் பிரமாதமான வளர்ச்சி பெற்று, அரசியல் காரணங்களினால், சோஷலிஸ யதார்த்தவாதம் என்கிற குட்டையிலே (இலக்கிய உத்தியிலே) வந்து தேங்கிவிட்டது. சிறுகதைக்கு இந்திய உருவம் தருகிற முயற்சியை ரவீந்திரநாத தாகுர் சிறப்பாகச் செய்தார்.

தாகுரின் சிறுகதை முயற்சியை வ. வே. சு. ஐயரும், கவி சுப்ரமணிய பாரதியாரும் பின்பற்றினார்கள். வ. வே. சு. ஐயர் ‘குளத்தங்கரை அரசமர’த்தில் தாகுர் செய்த காரியத்தையே ஓரளவு தமிழில் வெற்றியுடன் திரும்பவும் செய்து பார்த்தார். அவர் எழுதிய மற்ற கதைகளிலும் அவர் ஓரளவுக்குப் பிறர் செய்ததையே பின்பற்றினார் - எனினும் ஓரளவு வெற்றிபெற்றார் என்பதனால் தமிழில் சிறுகதைக்கு வ. வெ. சு. ஐயரைத்தான் தந்தையென்று சொல்லுவது வழக்கமாகிவிட்டது. கவி பாரதியாரின் கதைகளைச் சிறுகதைகள் என்று சொல்லமுடியாது. வெறும் கதைகளாகவே சொன்னார் அவர். ஆங்கில, பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளையும், தாகுர் சிறுகதைகளையும் அறிந்தேதான் பாரதியார் தன் கதைகளை எழுதினார். ஆனாலும் உருவத்தைவிட அவருக்குச் சீர்திருத்தக் கருத்திலே மோகம் அதிகமான படியினாலே, அவர் கதைகள் சிறுகதைகளாக அமையவில்லை. பல கதைகள் கதைகளாகவும்கூட அமைதி பெறவில்லை. உதாரணமாக பாரதியாரின் ‘பூலோகரம்பை’யைச் சொல்லலாம். அற்புதமான ஒரு கதையை உருவம், அல்லது ஒரு உருவமல்லாத பிரக்ஞையுடன் செய்யாமல் வழிந்தோட விட்டுவிடுகிறார் பாரதியார். இந்தக் குறை மாதவையாவின் ‘குசிகர் குட்டிக் கதைக’ளிலும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.

சிறுகதை என்பதற்கு அடிப்படையாக அதை எழுதுகிறவனுடைய இலக்கிய உருவப் பிரக்ஞை அமைய வேண்டும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, அல்லது அதிகமாக ஆழ்ந்து பார்க்கும்போதும்கூட, இவ்விஷயம் ஒரு உருவமல்லாத உருவமாகவே இருக்கலாம். ஆனால் அந்த உருவமல்லாத உருவத்தையும்கூட, குணத்தையும் விசேஷத்தையும்கூட, உணர்ந்தே, இலக்கியப் பிரக்ஞையுடன் செய்திருக்கிறான் ஆசிரியன் என்பதுதான் அதைச் சிறுகதையாக்குகிறது. சிறுகதையின் ஆரம்பம், நடு, முடிவு என்பதைப் பற்றிச் சொல்வது இப்போது விளையாட்டுக்கும் கேலிக்கும் இடமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் சிறுகதை என்கிற இலக்கியத் துறையில் அடிப்படையான விஷயம். இந்த ஆரம்பம், இந்த நடு, இந்த முடிவுதான் வேண்டும் என்பது முன்கூட்டி நிச்சயமானதல்ல - ஆனால் அது ஏற்பட்ட பின், அது தவிர்க்கமுடியாதது என்கிற உணர்வு விமர்சகர்களுக்கும் வாசகனுக்கும் ஏற்பட வேண்டும். இந்த உணர்வை ஏற்படச் செய்பவனைத்தான் இலக்கியத்தில் சிறுகதாசிரியன் என்று நாம் கொண்டாட முடியும். நடை அழகு, விஷயத்தெளிவு, அமைதி முதலியனவெல்லாம் இலக்கியப் பரப்பில் எல்லாத் துறைகளுக்குமே பொதுவானவை. ஆனால் சிறுகதை உருவமும், உருவ அமைதியும், தவிர்க்கமுடியாத தன்மையும் (inevitability), ஒருமைப்பாடும் சிறுகதைக்கு மட்டும் உரியது. இதை எப்படி விமர்சகன் முதலில் தேர்ந்து புரிந்துகொள்ளுகிறான் என்பதும், வாசகர்கள் எப்படித் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வகையாக இனங்கண்டு கொள்ளுகிறார்கள் என்பதும், இலக்கிய விமர்சனம் சரியாக வளராத இக்காலத்தில், தமிழில் தெளிவாக்குவது சற்று சிரமமான காரியம்தான்.

இலக்கிய விமர்சகன் என்று, என்னைப்போல் சொல்லிக்கொண்டு வருபவன், இதைத் தன் படிப்பையும், பிறமொழிச் சிறுகதை அறிவையும் வைத்துக் கணித்துக்கொள்ளுகிறான் என்று மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு உதாரணமாக இன்று பழக்கமான ஆசிரியர்கள் சிலருடைய சிறுகதை உருவங்கள் பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கு தர முயலுகிறேன். உருவமேயல்லாத பலவித சிறுகதை உருவங்களை நமக்குச் சமைத்துத் தந்திருப்பவர் என்று வில்லியம் ஸரோயனைச் சொல்லலாம்; பாதரஸத்தைப் போலக் கைக்கடியிலிருந்து நழுவிவிடும் உருவம் பெற்றவை அவர் கதைகள். உருவமில்லாதது போன்ற, ஆனால் அலசிப் பார்த்தால் நல்முத்துப் போன்ற உருவம் படைத்த சிறுகதைகள் செக்காவினுடையவை. மழமழவென்று பூசி மெழுகிய களிமண் உருண்டைகள் மோபாஸானின் சிறுகதைகள். ஓ ஹென்ரியின் சிறுகதைகள் அழுத்தி விட்டுவிட்டால் மேலெழும்பி நம் கையையே பின்பற்றும் விசை spring போன்றவை. குதித்துக் கொம்மாளமிட்டுக்கொண்டு நம்மை முட்டித் தாக்க வரும் காளைகள் போன்ற சிறுகதைகள் ஹெமிங்வேயினுடையவை. ராக்ஷஸ எட்டுக்கால் பூச்சி போல் நின்று நிலைத்து நம்மை மயக்கி அருவருப்பையும் கவர்ச்சியையும் ஒருங்கே தந்து வலை வீசும் உருவம் படைத்தவை வில்லியம் பாக்னரின் சிறுகதைகள். நகாசு வேலையை அதிஅற்புதமாகச் செய்த பொன் அணிகள் அந்டோல் பிரான்சின் கதைகள். கார்க்கியின் கதைகளோ கனமான காட்டு மரத்தால் செய்யப்பட்ட உபயோகமான சாமான்கள்...

நம் வளர்ச்சி

பொதுவாக இத்தனையும் சொன்ன பிறகு தமிழில் சிறந்த சிறுகதைகள் என்கிற விஷயத்துக்கு வருவோம்.

வ. வெ. சு. ஐயருக்குப் பிறகு தமிழில் சிறுகதை வளர்ந்த சரித்திரம் அநேகமாக நம்மில் எல்லோருக்குமே தெரியும். மூன்று பிரிவுகளாகத் தற்காலத்திய கதை வளர்ச்சியை நாம் கணிக்கலாம். (ஒன்று) இலக்கியத்துறை என்று எதிலும் அடங்காத கதை முயற்சிகள். இம்முயற்சியில் தலைசிறந்தவர்கள் என்று அ. மாதவையா, டாக்டர் சாமிநாதய்யர் (நினைவுக் கதைகள்), எஸ். வி. வி., ராஜாஜி முதலியவர்களைச் சொல்லாம். இந்தக் கதைகளில் கருத்தால், விஷயத்தால், அவரவர்கள் மனோதர்மப்படி முக்கியத்துவம் தந்துகொள்ளலாம். இலக்கிய ரீதியாக முக்கியத்துவம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது உதாரணமாக விதவைகளை உயர்த்துவதற்காகப் பயன்படக்கூடியன மாதவையாவின் கதைகள்; கள் குடிப்பதை ஒழிக்க உபயோகப்படக்கூடியவை ராஜாஜி கதைகள் என்றும், பழைய தலைமுறை சரித்திரங்களை அறிந்துகொள்ள உ . வெ. சாமிநாதய்யரின் கதைகள் உதவும் என்றும், வெறும் பொழுதுபோக்காக எஸ். வி. வி.யின் கதைகள் உதவும் என்றும் பொதுவாகச் சொல்லலாம். இவற்றிலே இலக்கியத்தரம் ஏற்றிவைப்பதற்கில்லை. இந்தப் பழைய கதாசிரியர்களுக்கு வாரிசுகளாக இன்று கதைகள் எழுதுபவர்களில் கி. வா. ஜகந்நாதனையும், பெ. தூரனையும் சொல்லலாம். சந்தர்ப்ப விசேஷத்தால் மணிக்கொடி கோஷ்டியினருக்குத் தலைவராக ஒருசிலரால் கருதப்படும் பி. எஸ். ராமையாவின் கதைகளும் (பொதுவாக) இந்த ரகத்தைச் சேர்ந்தவையே என்பது எனது அபிப்பிராயம்.

இரண்டாவதாகச் சொல்லவேண்டியது பத்திரிகைக் கதைகள், 1930-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தமிழில் பத்திரிகைகள் யுகம் தொடங்கியது என்றும், இன்று பத்திரிகை யுகம் அதன் உச்சியை எட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படிச் சொல்லுகிறபோது பத்திரிகை அவசரம், நெருக்கடி, எல்லாமாகச் சேர்ந்து அமைந்த கதைகளைச் சொல்லலாம். கல்கி இத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். இந்தப் பத்திரிகைக் கதைகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தவரும் கல்கிதான். கல்கியின் கதைகளில் அநேகமாக எல்லாமே பிறர் கதை அஸ்திவாரத்தில் தோன்றியவைதான். சற்றே மாற்றியோ திருத்தியோ, தமிழில் உருவம் என்று அவருக்கு எட்டாததொன்றைக் கற்பனை செய்துகொண்டு உருமாற்றி வைக்கப்பட்டவைதான். அவரைப் பின்பற்றிப் பலரும் பத்திரிகைக் கதை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது கதைக்கும் சிறுகதைக்கும் இடையில் ஒரு உருவம் இது. இலக்கிய ரீதியில் கவனித்தால் ஒருவிதமான குண விசேஷமும் இல்லாதது. எத்தனையோ பேர் சாதாரணமாகக் கையாண்ட விஷயங்களை மறுபடியும் ஒருதரம் படிக்கக்கூடிய பாஷையிலே, சிரமப்படுத்தாத வகையிலே எழுதியிருக்கிறார்கள். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கான இன்றைய ஆசிரியர்களைச் சொல்லலாம். வாசகர்களை நினைவில் வைத்துக்கொண்டு கதைகள் எழுதுபவர்கள் இவர்கள்; பத்திரிகைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே எழுதுபவர்கள். தமிழ்நாட்டில் சிறுகதைப் பரிசுகள் பலவற்றையும் தட்டிக்கொண்டு போகிறவர்கள் இவர்களாகத்தான் இருக்கமுடியும்; குறிப்பிட்ட பஞ்சாயத்தார் ஐந்து பேரைத் திருப்தி செய்யக்கூடியவர்கள் இவர்கள். இங்கு பட்டியல் தருவதென்று ஆரம்பித்தால் இடம் போதாது. ஆனால் இந்தப் பத்திரிகை ரகத்திலே, குறிப்பாக வெற்றிபெற்றவர்கள் என்று அகிலன், பூவாளூர் சுந்தரராமன், சிரஞ்சீவி முதலியவர்களைச் சொல்லவேண்டும். இந்தப் பட்டியலில் இடம்பெறுபவர்கள் என்று சுகி, ரஸவாதி, ரா. கி. ரங்கராஜன், எல்லார்வி, மாயாவி போன்ற பலரைச் சொல்லலாம்.

தமிழில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு என்று ஒன்று வெளியிட வேண்டும் என்று எனக்குப் பணியளிக்கப்பட்டால் இவர்களையும், இவர்களுக்கு முந்திய வகுப்பில் சேர்ந்தவர்களாகச் சொல்லிய கதாசிரியர்களையும் நான் சேர்க்கமாட்டேன் என்பது தெளிவு. இப்போது அப்படிப்பட்ட தொகுப்பு நூலில் யார் யாரைச் சேர்க்கலாம் என்பது பற்றி இலக்கிய விமர்சன ரீதியில் பார்க்கலாம்.

இலக்கிய ரீதியில் சிறுகதைக்கு இலக்கியப் பிரக்ஞையுடன் அமைந்த உருவம் வேண்டும். அதுதான் ஒரு குறிப்பிட்ட சிறுகதையை, கதை, பத்திரிகைக் கதை என்கிற தரத்திலிருந்து உயர்த்தி இலக்கியப்பூர்வமான சிறுகதையாக்குகிறது என்று சொன்னேன். தமிழுக்கு மட்டுமல்ல. உலக இலக்கியப் பரப்புக்கே சிறுகதைத்துறை புதுத்துறைதான். ஆகவே பெரும்பாலும் நல்ல சிறுகதாசிரியர்கள் என்று உலக இலக்கியத்தில் இடம்பெறுபவர்கள் எல்லோருமே இலக்கிய சோதனைக்காரர்கள்தான். சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக்கொண்டு, இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சாதனைக்காரர்கள் என்று சொல்லலாம். இதிலே ஓரளவேணும் வெற்றி பெற்றவர்களைத்தான் சிறந்த சிறுகதாசிரியர்கள் என்று சொல்ல வேண்டும். இப்படி வெற்றி பெற்ற முதல் தமிழ்ச் சிறுகதாசிரியர்களில் பலர், அந்தக் காலத்தில் ‘மணிக்கொடி’ என்கிற அல்பாயுஸுப் பத்திரிகையில் தங்கள் சிரஞ்சீவிக் கதைகளை எழுதினார்கள். அதற்கு மணிக்கொடிக்குச் சிறிதும் பொறுப்பில்லை என்றாலும்கூட, ‘மணிக்கொடி கோஷ்டி’ என்கிற ஒரு பெயர் நிலைத்துவிட்டது. அதனால் நஷ்டம் ஒன்றுமில்லையே!

மணிக்கொடியில் எழுதிய நல்ல சிறுகதாசிரியர்கள் இருவர் இன்று நம்மிடையே இல்லை. ஒருவர் புதுமைப்பித்தன். மற்றவர் கு. ப. ராஜகோபாலன். இவர்கள் இருவருமே இலக்கியத்தில், குறிப்பாகச் சிறுகதைத் துறையில், சோதனைகள் செய்து பார்க்கும் திறனும், செய்த சோதனைகள் சிலவற்றில் இலக்கிய வெற்றியும் பெற்றவர்கள். புதுமைப்பித்தன் செய்த சோதனைகள் அதிகம்; வெற்றி தோல்விகளும் அதிகம். ஆனால் பெற்ற வெற்றிகள் கணிசமானவை. கு.ப.ரா. செய்த சோதனைகள் குறைவு. அந்த அளவில் வெற்றி அதிகம். எண்ணிக்கையளவில் கணக்கெடுத்தால் கு. ப. ரா.வின் வெற்றி பெற்ற சிறுகதைகள் புதுமைப்பித்தனுடைய வெற்றி பெற்ற சிறுகதை எண்ணிக்கையைவிட அதிகமானாலும்கூட, புதுமைப்பித்தனுடைய சோதனை ஆழம், பரப்பு இரண்டும் அதிகம் என்பதனால் அது தமிழில் சிறுகதை வளத்தை அதிகமாக்கியது. பிற்காலச் சோதனையாளருக்குச் சிறப்பான வழிகாட்டியது என்றும் சொல்ல வேண்டும்.

இன்னும் நம்மிடையே இருந்தும், அதிகமாக எழுதாமல் மணிக்கொடியில் மட்டும் சிறப்பாக எழுதிய ஆசிரியர்களிலே மௌனி என்பவரைத் தனியாகச் சொல்லவேண்டும். இவருடைய பதினைந்து பதினாறு சிறுகதைகளிலே, சிறப்பாக ‘அழியாச்சுடர்’, ‘பிரபஞ்சகானம்’ என்கிற சிறுகதைகளில் இதுவரை தமிழில் காணக்கிடைக்காத ஆழம் காணப்படுகிறது. சொல்வதற்கு மிகவும் சிரமமான பல விஷயங்களை, ஒரு லக்ஷியக் காதல் நோக்கிலிருந்து, romantic melancholy என்கிற ரீதியில், அழுத்தம் தந்து அற்புதமான சிறுகதை உருவம் படைத்திருக்கிறார் மௌனி. தமிழில் இன்றுவரை வெளிவந்துள்ள சிறுகதைகளிலே மௌனியின் இந்த இரண்டு சிறுகதைகளும் ஒரு சிகரம் என்பது என் அபிப்பிராயம்.

ந. பிச்சமூர்த்தி ஆரம்ப காலத்தில் கவிதை நிரம்பிய பல சோதனைகள் நடத்தினார். அவற்றிலே வானம்பாடி, மோஹினி, தாய் முதலியவை சிறப்பான வெற்றிகள். ஒரு இருபது வருஷ மௌனத்துக்குப் பிறகு அவர் மறுபடியும் சிறுகதைகள் எழுத இரண்டொரு வருஷமாகத் தொடங்கியிருக்கிறார். அந்தக் கதைகள் அற்புத உருவம் பெற்று, ஆழமும் அர்த்தமும் கூடித் திகழ்கின்றன.

ந. சிதம்பர சுப்ரமணியன் என்பவருக்குச் சிறுகதையில் உருவம் என்கிறதில் நம்பிக்கை கிடையாது. ஆகவே அவருடைய சிறுகதைகளைச் சோதனைகளாகக் கருதமுடியாது. ஆனால் அவற்றிலே ஒரு அற்புதமான உருவம், ஆரம்பமும் நடுவும் முடிவும் அமைகின்றன என்பது படிப்பவர்களுக்குத் தெரியும். இதுபோல சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெறக்கூடிய ஆசிரியர்கள் என்று மணிக்கொடி கோஷ்டியினரில் வேறு பலரையும் சொல்லலாம். அவரவர்கள் திறமைக்கேற்ப சோதனைகள் செய்து பார்த்தவர்கள். சி. சு. செல்லப்பா, க. நா. சுப்ரமண்யம், சுந்தா, கி.ரா., எம். வி. வெங்கடராமன், முதலானோர். செல்லப்பாவின் ஆரம்ப காலக் கதைகள் ஒருவிதமானவை, பிற்காலத்தில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளில் கொஞ்சம் கனமான பகைப்புலமும் லேசான விஷயமும் அடங்கியிருக்கின்றன என்று சொல்லவேண்டும். கி.ரா.வின் சிறுகதைகளைப் பாட புஸ்தகச் சிறுகதைகள் என்றே சொல்லலாம். அவற்றில் ஆழமோ கனமோ அதிகம் கிடையாது; ஆனால் உருவம் உண்டு. சற்றேறக்குறைய பத்திரிகைத் தரத்தைத் தொடுகிற மாதிரிக் கதைகள் அவருடையவை என்றாலும் இலக்கிய முயற்சிகள்தான். சுந்தா மணிக்கொடி கோஷ்டியில் இலக்கியாசிரியராகத் தொடங்கி பத்தரிகை எழுத்தாளராக முடிந்தவர். இவருடைய ஆரம்ப காலக் கதைகளில் சில நல்ல சோதனைகள். க. நா. சுப்ரமண்யத்தின் மணிக்கொடிக் கதைகளில் உருவப் பிரக்ஞையுடன், ஆழந்தெரியச் செய்யப்படும் முயற்சிகள் அதிகம். வெற்றி பெற்ற ஒரே கதை என்று ‘சாவித்திரி’ என்பதைச் சொல்லலாம். இவருடைய பிற்காலத்துச் சிறுகதைகளில் சோதனை அம்சம் அதிகம். எம். வி. வெங்கடராமன் பல பழங்கதைகளை அற்புதமான புதுமெருகுடன் எழுதியிருக்கிறார். சிறுகதைகளாக அவற்றிற்கு ஒரு இலக்கியத்தரம் உண்டென்றாலும்கூட, அவை பழங்கதைகளின் புதுமெருகுதான்.

மணிக்கொடி கோஷ்டியைச் சேராத சிறுகதாசிரியர்களும் சிலர் அந்தக் காலத்தில் எழுதத்தான் எழுதினார்கள். இவர்களில் தி. ஜ. ரங்கநாதனையும், த. நா. குமாரஸ்வாமியையும், சங்கரராமையும் சிறப்பாகச் சொல்லலாம். முன்னிருவர் சிறுகதைகளிலும் சோதனை அம்சங்கள் மிகக் குறைவு. ஒரு சாதாரண நிலையில் நின்று கதை சொல்வதை, இலக்கிய அந்தஸ்தைத் தொட்டும் தொடாமலும் செய்பவர் தி.ஜ.ர.. குமாரஸ்வாமியின் சிறுகதைகளிலே ஒரு romantic melancholy யும் காதல் கட்டமும் சிறப்புகள். சங்கரராம் வேட்டைக் கதைகள், மாட்டுக் கதைகள், நாட்டுக் கதைகள் பல எழுதியுள்ளார். இவை பத்திரிகைக் கதைகளின் அம்சங்கள் பூராவும் பொருந்தி, ஓரளவு இலக்கிய நயமும் உள்ளவை.

1940க்குப் பிறகு தோன்றிய சிறுகதாசிரியர்களிலே சிறப்பாக மூன்று பேர்களைச் சொல்லவேண்டும். இலக்கிய ரீதியில் லா. ச. ராமாம்ருதம் ஒரு சோதனைச் சிறுகதாசிரியர். அவர் ஒரே மாதிரியான சோதனைதான் செய்கிறார். சோதனைகளைப் புதுமைப்பித்தன் மாதிரி மாற்றாமல், மௌனி மாதிரி, ஒரே ரீதியில் செய்பவர். இதில் அவர் நல்ல வெற்றி பெற்றிருக்கிறார் - கொட்டு மேளம், இதழ்கள் போன்ற கதைகளில். இரண்டாவதாகச் சொல்லவேண்டியவர் தி. ஜானகிராமன். இவருடைய சிறுகதைகளிலும் சோதனைப் பரப்பு குறைவு. ஆனால் இவர் சிறுகதைகளிலே தனித்வமும், ஒரு கிண்டலும், பேச்சு நடையும், உருவமற்ற ஒரு உருவமும் தெரிகின்றன. மூன்றாவதாகச் சொல்லவேண்டிய கு. அழகிரிசாமி குரலை உயர்த்தாமல் தன் சிறுகதைகளில் பலவிதமான விந்தைகளைச் செய்து காட்டுகிறார். நடை வேகத்தை முடுக்காமல் அவர் செய்துள்ள சோதனைகளில் பல சிறப்பானவை என்றும், பல சோதனைகளை வெற்றிகரமாக அவர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

1948க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளிலே சோதனை வேகமும் இலக்கிய நோக்கமும் தேய்ந்துவிட்ட மாதிரித் தோன்றுகிறது. சமீப காலத்தில் அதாவது இப்போது இரண்டொரு வருஷங்களாகத்தான் மீண்டும் உயிர் வந்த மாதிரி இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமாக அதுவரை செய்யப்பட்ட இலக்கிய முயற்சிகளைச் சரிவரத் தராதரம் அறிந்து கணிக்க யாரும் முயற்சி செய்யாததையும், பத்திரிகை ஆதிக்கம் எழுத்திலே அதிகமாகிவிட்டதையும் சொல்லலாம். இந்தப் பத்து வருஷங்களில் நூற்றுக்கணக்கான கதாசிரியர்கள் தோன்றினாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திரிகைக் கதைகள் எழுதத்தான் முற்பட்டார்கள். அதுதான் லாபகரமாக இருந்தது. இந்த மோசமான நிலையிலே பழைய மணிக்கொடி கோஷ்டியினர் சிலரும், பின் வந்த மூவரும் தவிர வேறு யாரும் சிறப்பான சிறுகதைகள் என்று சொல்லும்படி எதுவும் எழுதவில்லை. ஆனால் சென்ற நாலைந்து வருஷங்களில் வந்த எழுத்துகளில் பலவற்றைச் சலித்துப் பார்க்கும்போது இரண்டு புதுப் பெயர்கள் கிடைக்கின்றன. ஒன்று சுந்தர ராமஸ்வாமி - இவருடைய சிறுகதைகளில் ஒரு லேசான கிண்டலும் கேலியும், ஒரு தனித்துவ நோக்கும் காணக் கிடக்கின்றன. அவர் கடைசியில் எழுதியுள்ள நாலைந்து கதைகளில் அதிஅற்புதமான உருவம் அமைந்திருக்கிறது. அதேபோல ஜெயகாந்தன் என்ற ஒரு இளைஞர் எழுதுகிற சிறுகதைகளிலே சில நன்றாகவும் பல சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றன என்று சொல்லலாம். கிழவன் கிழவி பிணக்குக் கதை ஒன்றும், நந்தவனத்திலோராண்டி என்கிற சிறுகதையையும் நல்ல சிறுகதைகளாகச் சொல்லலாம்.

பழைய சிறுகதை ஆசிரியர்களில் ந. பிச்சமூர்த்தியின் சமீப காலத்திய சிறுகதைகள் பலவற்றில் உருவமும் அழகும் கூடியுள்ளன. செல்லப்பாவின் சிறுகதைகளிலே பகைப்புலம், பின்னனி அதிகமாகவும், விஷயத் தெளிவு குறைந்தும் காணப்படுகிறது. க. நா. சு.வின் சிறுகதைகளிலே சோதனை அம்சங்களும் தத்துவ அம்சங்களும் அதிகரித்துள்ளன. லா.ச.ரா.வின் கதைகளில் ஒரு உருவ அமைதி காணக்கிடைக்கிறது. சமீப காலத்திய தி. ஜானகிராமனின் சிறுகதைகளில் உருவம் தேய்ந்து பழங்கதைகளின் விஷயத்தின் நிழல்தான் ஆடுகிறது. கு. அழகிரிசாமி இந்த ஐந்தாறு வருஷங்களில் ஒரு சிறுகதைகூட எழுதியதாகத் தெரியவில்லை. சிறுகதை என்கிற இலக்கிய அந்தஸ்தை எட்டாத பத்திரிகைக் கதைகள்கூட பெரும்பாலும் இந்தக் காலத்தில் தரம் மிகக் குறைந்து 1948-க்கு முன் பத்திரிகைக் கதை எட்டிய தரத்தை எட்டவில்லை.

என் கண்ணில் படாத நல்ல சிறுகதைகள் தமிழில் இருக்கலாம் என்பதை நான் விவாத அளவில் ஒப்புக்கொண்டாலும்கூட, கூடிய வரையில் யாராவது நன்றாயிருக்கிறது என்று சொன்னாலும் கதையைத் தேடிப் படிக்கிறேன் என்பதனால், அப்படிப்பட்ட ஒரு கதாசிரியன் பெயரையும் நான் விட்டுவிடவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் இந்த இருபத்தைந்து முப்பது வருஷங்களில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைத் துறையில் ஒரு வளம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வளத்தைச் சொல்லுகிற அளவில் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளியிடுவதானால் அதில் கட்டாயமாக புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சிதம்பரசுப்ரமணியன், லா. ச. ராமாம்ருதம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி இந்த எட்டுப் பேருடைய சிறுகதைகளும் சேரும். இவை தவிர சி. சு. செல்லப்பா, க. நா. சுப்ரமண்யம், தி. ஜ. ரங்கநாதன், கி.ரா., த. நா. குமாரஸ்வாமி, சங்கரராம் முதலியவர்களுடைய சிறுகதைகள் இரண்டாம் பக்ஷமாக இடம்பெறலாம். இதிலே சுந்தர ராமஸ்வாமி, ஜெயகாந்தன் இருவருடைய சிறுகதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ்ச் சிறுகதையில் இலக்கிய வளத்தைக் காட்ட இப்படிப்பட்ட ஒரு தொகுப்பு பிரயோசனப்படலாம்.

குறிப்பிட்ட ஆசிரியர்களுடைய எந்தெந்தக் கதைகளைச் சேர்த்துக்கொள்வது என்பது பற்றி விசாரிக்க வேண்டியது அவசியம். அதையும் பின்னர் செய்து பார்க்கலாம்.

எழுத்து, ஜனவரி 1959

அனுப்பியவர்: "அழிசி" ஸ்ரீனி


flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Unknown on October 21, 2021 at 2:27 PM said...

Aha what a wonderful analysis can we find such honest criticism now nam ippozuthu Enge yo pokirom all maymalam ramaswamy aged 81 years

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்