மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.
நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர்.
-வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.
“ஹேய்.... பஸ் இஸ் கம்மிங்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.
வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த ‘டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.
”பை... பை”
“ஸீ யூ!”
“சீரியோ!”
-கண்டக்டரின் விசில் சப்தம்.
அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.
பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.
மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.
வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.
அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.
பஸ்ஸைக் காணோம்!
அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.
எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.
பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.
“ஹேய்.. இட் இஸ்மை பஸ்!...” அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கறாள்.
“பை... பை....”
”டாடா!”
கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து ‘பிரஸ் பட்டன்’ வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... ‘ இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்...
அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்...
“பஸ் வரலியே; மணி என்ன?” என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.
“ஸிக்ஸ் ஆகப் போறதுடீ” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின். “அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்” என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.
“ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்” என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி...
“சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ” என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.
பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன். முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.
“பை.. பை!”
“தாங்க் யூ! என் பஸ்ஸும் வந்துடுத்து” என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.
அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.
அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஓட்டி ஓரு ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.
அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கின்றான்.
“ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் ப்ளேஸ்” என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.
அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; “நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு.. மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..”
”ஓ! இட் இஸ் ஆல் ரைட்.. கெட் இன்” என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...
அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப்போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழகச் சிரிக்கிறான்.
இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே..
“ம்... கெட் இன்.”
இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...
அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.
அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.
’ஸீட்டெல்லம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளுக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.
“இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?.. ஹை, இது என்ன நடுவிலே?... ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இது மேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!”
-”அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்” அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.
அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்து பார்க்கிறாள். பின்னர் ‘பவரைஇ வேஸ்ட் பண்ணப்படாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.
பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.
‘ஹ்ம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - ‘டப்’ என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - ‘அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே’ - ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.
“தாங்ஸ்” - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - ‘அப்பா, என்ன வாசனை!’ - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.
ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் “அம்மா” என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களும் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவ சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸும் ஒரு பக்கம் உருள்கிறது.
“ஸாரி” என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.
ஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.
தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...!
“இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது?”
“ஓ! எங்க வீடு அங்கே இருக்கு” என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன்.
“இருக்கட்டுமே, யாரு இல்லைன்னா” என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.
”என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும் அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.
கார் போய்க்கொண்டே இருக்கிறது.
நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.
சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.
தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளும் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: “சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.”
’நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே! இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே.. நாளைக்கு ஜூவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணனுமே! வேலை நிறைய இருக்கு.’
”இப்ப நாம எங்கே போறோம்” - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.
“எங்கேயுமில்ல; சும்மா ஒரு டிரைவ்..”
“நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா...”
“ஓ எஸ் திரும்பிடலாம்”
-கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.
காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: “ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டௌனா?”
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.
அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.
அப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ’உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.
ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு ‘காட்பரீஸ்’ சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருர்ந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக்கொண்டு ஹாய்யாக உட்காந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.
அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்ரன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.
“ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!” சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.
காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.
“எங்கே?” என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. “எங்கே போறீங்க?”
“எங்கேயும் போகலே.. இங்கேதான் வரேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.
அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.
“என்ன அது?”
“சூயிங்கம்.”
“ஐயே, எனக்கு வேண்டாம்!”
”ட்ரை.. யூ வில் லைக் இட்.”
அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.
“நோ!” - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.
அவளுக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறாள்: “தாங்க் யூ!”
அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.
அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.
“டூ யூ லைக் திஸ் கார்?” - இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ! இட் இஸ் நைஸ்.”
அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: “உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்?” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.
“ரியலி..?”
“ரியலி!”
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. “டூ யூ லைக் மீ?” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’
”ம்” விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.
“ரொம்ப நல்லா இருக்கு இல்லே?” - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.
“நல்லா இருக்கு.. ஆனா பயம்மா இருக்கே...”
“பயமா? எதுக்கு.. எதுக்குப் பயப்படணு?” அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: “எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு...”
“எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்? “ என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.
“மே ஐ கிஸ் யூ?”
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டத்தைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி... அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பது போல இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.
வெளியே...
வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!
ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.
“நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா...”
காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷூஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது ‘சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.
உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.
முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு ‘சூயிங்கம்’மை மென்று கொண்டிருக்கிறான்.
இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’ வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.
அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளுக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட- அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே....
நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெளியேறிப் பிளிறுகிறதே...
அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். “ என்னை வீட்டிலே கொண்டு போய் விடப்போறீங்களா, இல்லையா?”
அவனது கை “டப்” என்று ரேடியோவை நிறுத்துகிறது.
“டோண்ட் ஷவ்ட் லைக் தட்!” அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே!”
அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். “எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று வெளியே கூறினாலும் மனதிற்குள் “என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே” என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.
“ப்ளீஸ்... டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்” என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்...
அந்த இருண்ட சாலையில் கண்களை கூசவைக்கும் ஒளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.
“சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!” அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். “ஐ ஆம் ஸாரி.. உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்துக் கொள்.”
...அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.
இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுகலான தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
‘இஞ்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். “வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு.... ம்” அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்றுக் கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.
அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் அருகே குள்ளமாய் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.
“ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!” என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: “ஐ ஆம் ஸாரி!”
அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்... ஓ! அந்தப் பார்வை!
அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. “என்ன..” என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.
“ஒண்ணுமில்லே” என்று கூறி அவள் நகர்கிறாள்.
அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.
கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.
மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: “என்னடி இது, அலங்கோலம்?”
அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். “அம்மா!” என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்!
அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.
”என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு” தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரனம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: “ஏண்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு”
தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.
அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். “மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்.... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து... ஐயோ! அம்மா...அவன் என்னெ....”
-அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.
“அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..” என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.
அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.
“என்னடி, என்ன விஷயம்?” என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.
“ஒண்ணுமில்லை. இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிருப்பான்” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.
”சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?” பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.
வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக்குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா.
‘இவளை என்ன செய்யலாம்?... ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?... தெய்வமே! நான் என்ன செய்வேன்?” என்று திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்றுக் கொண்டிருந்தன....
‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.
-அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நெளிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.
‘அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?’
‘ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?’ அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.
நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு “ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்” என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்....
“அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்” என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். ‘என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக் கொண்டு அரிக்கேன் விளக்குக்டன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.
‘இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?..... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!’ என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது!
பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.
குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.
கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி இருக்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: “உனக்கு அவனைத் தெரியுமோ?...”
“ம்ஹூம்...”
“அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!”
- பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.
’ம்.... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ - என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பது போல் இன்னும் ஒரு கை சீயக்காயை ஆவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.
ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். ‘அவர் மட்டும் இருந்தாரென்றால் - மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?’
“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”
கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.
“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’ன்னு மெல்லறே?’
“சூயிங்கம்.”
“கருமத்தைத் துப்பு... சீ! துபுடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா” என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.
சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை “கொழந்தே, ‘எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு’ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வய்சுக்கு அந்த பொண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்? இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்: ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: “சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்...”
“பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆகியிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ” என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.
அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல. அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.
அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ர பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கிறன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.
-----------------
*(எழுதப்பட்ட காலம்: 1966)
நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994 மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1)*
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
9 கருத்துகள்:
பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த கதையை நாற்பது ஆண்டுகட்கு முன் படித்தபோது ஏற்பட்ட மன நெகிழ்வை இப்போது மீண்டும் படிக்கும்போதும் உணரமுடிகிறது. ஜெயகாந்தனின் எழுத்துக்களில் உள்ள மனித நேயம் மறுக்க முடியாத்து மட்டுமின்றி மறக்கவும் முடியாது.
This story long back created a sensation in Tamil short story writing and became a trend setter ; When Mr.Jayakanthan came to our college campus to give a talk in our Tamil forum, he was asked so many questions in the session by students and patiently he was answering all the questions and we , the students were thrilled by his repertoire and spectrum of reach on various issues and his spell bound oratory . Oh my God he is such a rare blend of intelligence, intellect and craftsmanship of writing with emotions and pathos in its correct proportions.When again we will see such a writer in the present generation .May God bless him for long life .
கதையில் வரும் பிராமண பாஷையை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம். ஒரு சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன.
எதுவாக இருந்தாலும், ஜெயகாந்தன் ஜெயகாந்தன் தான்!
நன்றி.
Thanks to share... such a wonderful story .... http://www.rishvan.com
அருமையான இலக்கியம். எத்தனையாவது தடவை படிக்கிறேனோ தெரியவில்லை. இந்த எழுத்தின் வசீகரம் இன்னுமப்படியே இருக்கிறது. மிக நன்றி.
அருமையான கதை
ஜெயகாந்தனின் படைப்புகள் தனித்துவமிக்கது...இக்கதையை பகிர்ந்த நண்பருக்கு நன்றி
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.