என்னடாது?”
பிள்ளையின் முகத்தில் அருவருப்பும் கோபமும் முண்டி நின்றன. “நிறுத்து!” என்று கையை உயர்த்தினார்.
நாகஸ்வர ஓசை நின்றது.
“என்னடாது ரோதனை! விசிஞ்சதும் விடியாததுமா! இதையெல்லாம் ராத்திரியிலே வச்சுக்கிட்டிருந்தே ; சரி, தொலையுதுன்னு நெனச்சா, காலமேயும் ஆரமிச்சிட்டியே. ஏண்டா கோடாலிக்காம்பு, என்னடா இதெல்லாம்? காலமே பிலஹரியும் கேதாரமும் பாடி ஆகாசம் முழுக்கப் பூப்பூவாக உலுக்க வேண்டிய வேளையிலே, இதென்னடா ஒப்பாரி! உனக்கென்ன, பைத்யம் கிய்த்யம் பிடிச்சிருக்கா!”
பிள்ளையாண்டன் நாகஸ்வரத்தைத் தடவிக்கொண்டே உட்கார்ந்திருந்தான், பேசவில்லை.
“கண்ணைப் புட்டிகிறதுக்கு முன்னாடி இந்த ஒப்பாரி வச்சு அழுவவா, உனக்கு வித்தை சொல்லிக் குடுத்தது? இதுக்கு ஆத்தங்கரைத் தெருவிலே ஒரு கசாப்புக் கடை வச்சுக்கிட்டு, கறி கொத்திக்கிட்டு உக்காந்திருக்கலாமே. நாயனம் எதுக்கு? ஒத்து எதுக்கு? ஏன் மூஞ்சியைச் சிணுக்குறே? நான் சொல்றது கசக்குதா?… சொல்லேண்டா! வாயைத் தொறந்து பதில் சொல்லு!”
“இன்னிக்குக் கச்சேரின்னீங்களே. அதுக்குத்தான் சாதகம் பண்ணிக்கிட்டிருந்தேன்” என்று வாயைத் திறந்தான் பிள்ளையாண்டன். ரொம்ப சாவதானமாகப் பதில் சொன்னான்.
“சாதகமா? … ஹ்ம்!” என்று கிண்டலாக ஒரு ஹூம்காரம். பளார் என்று ஓர் அறைவிட வேண்டும்போல அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அடுத்த கணம் ஒரு சந்தேகம் வந்தது.
புத்தி ஸ்வாதீனம் இல்லையோ இவனுக்கு என்று நினைத்தார்.
“கச்சேரி பண்ணப்போவது யாரு தெரியுமில்லே?”
”…”
“யாரு தெரியுமான்னேன்?”
”…”
“தொறவேண்டா வாயை!”
“நீங்கதான்.”
“நான்தானே! அப்ப உன்னைக்கூட உக்காத்தி வச்சுக்கிட்டு இந்த ஒப்பாரி, நவதான்ய கோத்ரம், இந்த சினிமாப் பாட்டு எல்லாத்தையும் வாசிக்க உடுவேன்னு நெனச்சியா? பெருச்சாளி அஞ்சறைப் பெட்டியைக் கவுத்த மாதிரி, இந்தச் சத்தம் எல்லாம் அங்க வந்து ஊதலாம்னு நெனச்சியா?”
“கச்சேரி கேக்கறவங்க வெள்ளைக்காரங்கப்பா…”
“ஆமாம், அதுக்காக?”
“அவங்களுக்குப் புரியும்படியா ஏதாவது வாசிச்சாத்தானே தேவலாம்.”
”நீ இப்ப என்ன சொல்றே! நான் வாசிக்கிறது அவங்களுக்குப் புரியப் போவதில்லை. என் பேரைக் காப்பாத்தறதுக்காக நீ புரியும்படியா இந்த மாதிரி ரண்டு வாசிச்சு, நம்ம ஊருக்கு வந்தது வீணாப்போயிடலேன்னு நெனச்சுக்கும்படியா அவங்களையும் செஞ்சுடப்போறேன்னு சொல்லு!”
தங்கவேலு மெளனம் சாதித்தான். ஏதோ அவர் சொல்லுவது சரிதான் என்று ஆமோதிப்பதுபோல. தகப்பனார் கிண்டல் சாட்டை சாட்டையாக அவன்மீது விழுந்தாலும், உண்மை என்னவோ தன் பக்கந்தான் என்று தியாகிபோல மெளனம் சாதித்துக்கொண்டிருந்தான் அவன்.
“ஐயரு என்ன சொன்னாரு தெரியுமில்லே? அப்பட்டமாக நம்ம சங்கீதம்னா வேணும்னு கேட்டாரு. வந்திருக்கிறவங்க அதைத்தான் கேட்டாங்களாம். அவங்களுக்குப் புடிக்குதோ புடிக்கலையோ இப்ப என்னாத்தைத் தெரியும். புடிக்காதுன்னு நீயே இப்பவே சமாதி கட்டிப்பிட்டியா என்ன? புரியக்கூடியதாக் கேக்குணும்னு வரலை அவங்க. நம்ம சங்கீதம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமாம். வாசிச்சாத்தானே புரியுதா இல்லையான்னு தெரியும். நீ இந்த ‘டபக்குடபா’வை வாசிச்சு, ‘இதான் எங்கள் சங்கீதம்னு’ கொடி கட்டலாம்னு பாக்கறே…!
ஆகாகா! நம்ம சங்கீதத்து மானத்தை காப்பாத்தணும்னு எவ்வளவு அக்கறை! எவ்வளவு கவலை…!”
பையன் புன்சிரிப்புச் சிரித்தான். பிள்ளைக்கும் சிரிப்பு வந்தது.
“சிரிடா சிரி… சீச்சீ போ… வாத்தியத்தை எடுத்து அலம்பி வை!”
வாத்தியத்தை உறையில் போட்டுக் கட்டி, ஆணியில் மாட்டிவிட்டு அப்பால் போனான் தங்கவேலு. பிள்ளை, அங்கேயே ஜன்னலோரமாக இருந்த பெஞ்சின்மீது உட்கார்ந்து, தாழம் பெட்டியை உருவிக் கொட்டைப் பாக்கைச் சீவ ஆரம்பித்தார்.
அந்த இடத்தில்தான் பரம்பரையாக வாத்தியங்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. பிள்ளையாண்டன் இப்போது ஊதுகிற வாத்யம், அவர் தந்தை வாசித்து, அமிருதமாகப் பொழிந்த வாத்யம். திருச்சேறைக் கோயிலில் அவர் வாசித்த உசேனி ராகத்தை நினைத்தால் இப்போதுகூட உடல் சிலிர்க்கிறது. எவ்வளவு உருக்கம்! எவ்வளவு ஜீவன்! எவ்வளவு ஸ்வானுபூதி!
நாதத்தின் உயிரைக் கவ்வும் குழைவு! அதே வாத்யத்தில்தான் இப்போது தங்கவேலு கில்லாடி அபஸ்வரங்களை ஊதித் தள்ளிக்கொண்டிருக்கிறான்.
ஒரு வருஷமாக அந்தக் கவலைதான் அவருக்கு. கல்யாணங்களில் எட்டுத் திக்குக்கும் ஓலமிடும் சினிமாப் பாட்டுகளை நாகஸ்வரத்தில் சாதகம் செய்துகொண்டு வந்தான் தங்கவேலு.
மக்களை ரஞ்ஜகம் செய்யச் சக்தியில்லை என்று அவரை அதிலிருந்தே உலகம் ஒதுக்கிவிட்டது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆதீனத்துக் கோயில் மான்யம் அளிக்கிறவரையில் சங்கீதம் உயிரிழக்காமல் நடமாடிக் கொண்டிருக்கும் என்று அவருக்குத் தைரியந்தான். வயிற்றுக்கு இருக்கிறது. சோறு துன்னது போக இரண்டு ஜதை வேஷ்டி, மேலுக்கு இரண்டு துணுக்கு, அவளுக்கு நாலு சேலை, அவனுக்கு நாலு வேஷ்டி - இவ்வளவுக்கும் காணும். மனிதனுக்கு இதைவிட வேறு என்ன தேவை? இதுதான் புரியவில்லை. தோடாவும் பெயரும் பத்திரிகையில் படமும் வேண்டாம். தலையெடுத்து இருபத்தைந்து வருஷமாக இப்படி ஒரு பயலைச் சட்டை செய்யாமல் காலம் ஓடிவிட்டது. இனிமேல். இந்தத் தங்கவேலுக்கும் ஞானத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை, அவரும் மனித சரீரம் ஏதோ எப்படியோ என்று, தெரிந்தவற்றையெல்லாம் அவசர அவசரமாக அவனுக்கு உருவேற்றிக்கொண்டுதான் வந்தார். ஆனால் இந்த அசத்து, ‘அமமாசிப் பீடை’க்குத் தத்தாரிகளை, ஞான சூன்யங்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்று எப்படித்தான் தோன்றிற்றோ?
சங்கீதத்துக்குத்தான் விநாச காலம் வந்துவிட்டதோ? கடவுளே அழிந்துகொண்டிருக்கும்போது, அவருடைய பெயர் அழிய எத்தனை நாளாகப்போகிறது?
நாகஸ்வரம் அதே உறையில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அவர் தந்தை காலத்திலேயே போட்ட முரட்டுப் பட்டு உறை. ஆனால் நாகஸ்வரம், வேறு எதற்கோ உறையாகி விட்டது!
‘நாம் செய்வதுதான் தவறா! ஜனங்களுக்குப் புரியாத சங்கீதம் சங்கீதமா? புரியாத ஒரு கலை கலையாக இருக்குமா?”
‘நம் வாத்தியத்தைக் கேட்டு, நாலு பேர் சந்தோஷப்பட வேண்டுமென்றுதானே கூப்பிடுகிறார்கள்? அவர்களை விட்டு விட்டு நாம்பாட்டுக்கு எங்கோ ஒரு உலகத்தில் திரிந்து கொண்டிருப்பது முறைதானா?’
எத்தனையோ வருஷமாகக் கேட்டுக்கொண்டிருக்கிற கேள்விதான். ஒரு வருஷமாகத் தினம் தினம் இந்தக் கேள்வி வர ஆரம்பித்துவிட்டது. மலயமாருதத்தை ஒரு சஞ்சாரம் செய்துவிட்டு, திடீரென்று ஒரு கூத்தாடி மெட்டை வாசித்தான் தங்கவேலு. விடியற்காலை… என்ன அபஸ்வரம்! குரங்குக்கு லோலக்கும் சட்டையும் போட்டு ஆட்டுகிறார் போல ஒரு தோற்றம் அந்தப் பாட்டைக் கேட்கும் போது அவர் முன் எழுந்தது. ஏதோ ஆவல் தூண்ட, பிள்ளை அவசர அவசரமாக உறையை அவிழ்த்து, நாயனத்தை உதட்டில் வைத்தார். அந்த அபஸ்வரம் அவருக்கு வரவில்லை. எந்த ஸ்வரத்திலும் சேராமல், ஒரு பிடி ஒன்று அவரைத் திணற அடித்தது. வாய் நிறையத் தண்ணீரை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்தவாறே நீளமாகத் துப்பினால் நுனியில் போய் வளைந்து விழுமே அந்த மாதிரி ஒரு பிடி. ‘என்ன ஸ்வரமடா இது?’ யோசித்தால் ஆதார ச்ருதியில்கூட உதைத்துவிட்டுத் துண்டாக நின்றது அது!
‘அட இப்படி ஒரு சங்கீதமா? சுருதியை விட்டுவிட்டு ஒரு ஸ்வரமா? சீ…’
சீ என்று சொன்னாரே ஒழிய அதுவும் ஒரு வித்தைதானே என்று மறுபடியும் அதைப் பிடித்துப் பார்த்தார் அவர். அந்தப் பிடி அவர் பிடியில் அகப்படவில்லை. அவர் பிடிவாதமும் பிடியின் பிடிவாதமும் சேர்ந்து போரைத் தொடங்கின. திணறி ஒரு சிரிப்புச் சிரித்தார் பிள்ளை.
“அப்படியில்லேப்பா… இதைப் பாருங்க” என்று குரல் கேட்டது.
பிள்ளையாண்டான் தோப்பன்சாமி மாதிரி நிலையண்டை வந்து பிடியைக் கற்றுக் கொடுப்பதற்காக நின்றான்.
“பலே!”
“அது”
”எங்கே வாசி பார்ப்பம்!”
பிள்ளையாண்டான் வாசித்தான்.
“அந்த அவஸ்வரத்தை - அப்பன் பேர் தெரியாத மாதிரி ஒரு ஸ்வரம் வருதே - அதை எப்படிடாலே பிடிக்கறே? எனக்கு வரமாட்டேங்குதே!”
மறுபடியும் முயன்று பார்த்தார். வரவில்லை.
“இப்படிப் புடிச்சார்?”
“வேறு ஒரு பிடி.”
“அது நம்மடவங்க சங்கீதமால்ல போயிடுது?”
“இது யாருது?”
“இது வேறே.”
“எந்தத் தேசம்?”
“அது என்னமோ!”
பிள்ளை இடுப்புல் சோமனைக் கட்டுக்கொண்டு எட்டு அங்கமும் தரையில்பட, ஒரு நமஸ்காரம் செய்து எழுந்தார்.
“யாருக்குத் தெரியுமுல்ல இது? இந்த அபஸ்வரத்துக்கு. இனிமே அந்தப் பக்கமே நான் பாக்கமாட்டேன்.”
“என்னாங்க இது?” ஒரு காபியைக் கொண்டு வந்த அவர் சம்சாரம் கண்ணை அகல விழித்தாள்.
“நம்ஸ்காரம்”
“யாருக்கு?”
“நீ பத்து மாசம் சுமந்து பெத்திருக்கயே, அவரு பாடற சங்கீதத்துக்கு”
“சும்மா ஒரு சினிமாப் பாட்டும்மா” என்றான் தங்கவேலு.
”ஏன் உங்களுக்கு வரல்லியா?”
“நூறு ஜன்மம் பாலாபிஷேகம் செய்தாத்தான் வரும் போல் இருக்கு!” என்று பிள்ளை சிரித்தார்.
ஓர் ஒப்பந்தம் மாதிரி, சொல்லாமல் செய்துகொண்டார்கள், தந்தையும் பிள்ளையும் கல்யாண ஊர்வலங்கள் முடிகிற தருவாயில் சினிமாப் பாட்டுக்குச் சீட்டோ, உத்தரவோ வந்தால் அதைத் தங்கவேலு நிர்வாகம் செய்யவேண்டியது. பிள்ளை எங்கேயாவது திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டுவிடுவார்
-o00o-
இரவு வேளைகளில் புதிது புதிதாக இந்தப் பாட்டுகளைச் சாதகம் செய்துவந்தார் பிள்ளை. திடீரென்று காலையில் இதைக் கேட்டதுந்தான் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.
பிள்ளை நாயனத்தைப் பார்த்தார்.
வெள்ளைக்காரர்களாம்! சங்கீத கோஷ்டியாம்! சுத்தமான தெற்கத்திச் சங்கீதம் கேட்க வேண்டும் என்று ஆசையாம்.
‘எந்தச் சங்கீதம், கேட்டு வெகுகாலத்திற்குப் பிறகும் கூடக் கண்டா நாதத்தின் ஊசலைப் போல, ஹ்ருதயத்தில் ஒலிக்குமோ, மறையாமல் ஒலித்துக்கொண்டிருக்குமோ, அந்த மாதிரி சங்கீதம் கேட்க வேண்டுமாம்’ என்று வக்கீல் மணிஐயர் முந்தாநாள் காலையில் வந்து சொன்னார்.
“எதுக்குய்யா அவங்களுக்கு இந்த வம்பெல்லாம்?” என்று ஆரம்பித்தார் பிள்ளை. “கருவேப்பிலைக்கு, வெட்டிவேருக்கு, பாலுக்கு எல்லாத்துக்குந்தான் இமிடேசன் வந்திடுச்சு. சுத்தமாவது சங்கீதமாவது? என்னங்க பைத்தியம் இது?”
“உலகம் இன்னும் அப்படிச் சீரழிஞ்சு போயிடலை. உங்களுக்கு என்ன அதெல்லாம்? நான் சொல்றேன். நீங்க வாசிக்க வேண்டியதுதானே.”
“நாலு கீர்த்தனம் வாசியுங்கோ போதும். தவுல்கூட வாண்டாம். ஆத்மார்த்தமா, எப்படித் தனியா உட்கார்ந்திண்டு வாசிப்பேளோ, அந்த மாதிரி வாசிச்சா போதும், எதிரே இருக்கிறவன் சட்டையையும் நடையையும் உடையையும் பார்க்கக்கூட வாண்டாம். நீங்க பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு, ரெண்டு கீர்த்தனம் வாசிச்சாப் போதும்.”
“ஓய், நீங்க பொல்லாத ஆளுய்யா….!” என்று சிரித்தார் பிள்ளை.
“சட்டை கிட்டை போட்டுக்கணுமோ?”
“உங்க இஷ்டம். வந்திருக்கிறவன் நிறைகுடமாக இருக்கிறான். பேசிண்டிருந்தேன். அப்படித்தான் தோணித்து. நீங்க சட்டை போட்டுண்டா என்ன? போட்டுக்காட்டா என்ன?”
இரவு ஆறு மணிக்குக் கச்சேரி. என்ன வாசிக்கலாம் என்று கண்விழிக்கும்போதே திட்டமிடத் தொடங்கினார் அவர். நாராசம்போல் தங்கவேலுவின் புதுச் சாதகம் நினைவக் கலைத்துவிட்டது.
மீண்டும் கசப்பையும் அலுப்பையும் ஒதுக்குவிட்டு அமைதியைத் தேடுவதற்காக ஒரு ராகத்தைப் படித்துக் கொண்டு மனதிற்குள்ளேயே அதன் வடிவைக் கண்டு, திகைத்துப் போய் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன, அவருடைய மனம், ஆத்மா எல்லாம். அப்படியே சுவரில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டார் அவர்.
-o00o-
ஒற்றை மாட்டு வண்டியிலிருந்து இறங்கி, பிள்ளை வக்கீல் ஐயர் வீட்டில் நுழைந்தார். தங்கவேலுவும், வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு ஒத்துக்காரரும் பின்னால் வந்தார்கள்.
பெரிய ஹால். வாசலிலிருந்தே அவரைக் கையைப் பிடித்து அழைத்துப்போன வக்கீல் உள்ளே குழுமியிருந்த கோஷ்டியை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார்.
“இவர்தான் பிலிப் போல்ஸ்கா, இந்த சங்கீத கோஷ்டியின் தலைவர்.”
பிலிப் போல்ஸ்கா மகரிஷி மாதிரி இருந்தான். வயது எழுபது இருக்கும்போல் இருந்தது. தலையில் வழுக்கை இல்லை. பொல்லென்று வெளுத்துப்போன மயிர் தலையில் பறந்துகொண்டிருந்தது. சற்று நடுத்தர உடலம். கண் பெரிய கண். மேலும்கீழும் தொட்டும் தொடாததுமாக விழிகள் அமைந்திருந்தன. பார்த்தும் பார்க்காதவை போன்ற விழிகள்; நீலவிழிகள். ஆள் தூங்குகிறானோ, அல்லது வேறு எங்காவது நினைத்துக்கொண்டிருக்கிறானோ என்று சந்தேகம் எழுப்பும் விழிகள். அந்தக் கண்களை ஒரு விநாடி பார்த்தார் பிள்ளை. சுருக்குப் போட்டு இதயத்தை இழுப்பது போன்ற ஓர் உணர்ச்சி. அவர் உள்ளம் போல்ஸ்காவிடம் ஒரு தாவாகத் தாவிற்று.
“நிறைகுடம்னு சொன்னீங்கள்ள, ஞாபகமிருக்கா?” என்று வக்கீலைப் பார்த்தார்.
“இருக்கு.”
“சரியான வார்த்தை! கண்ணைப்பாருங்க. முகம் எவ்வளவு அழகாயிருக்கு, பாத்தீங்களா?”
“நானும் அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன். நீங்க சொன்னதைச் சொல்லட்டுமா?”
“வாண்டாம். முகஸ்துதி எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும். தேசம் விட்டுத் தேசம் வாணாம். என்ன சொன்னேன்னு கேட்டான்னா, ரொம்பச் சந்தோசம் அவரைப் பார்த்ததிலேன்னு சொன்னான்னு சொல்லுங்க.”
போல்ஸ்காவுக்குப் பிறகு கூட வந்திருந்த இருபது இருபத்தைந்து பேருக்கும் வக்கீல், பிள்ளையை அறிமுகப்படுத்தினார்.
மேலே ஏறி உட்கார்ந்து ஒத்துக்காரன் ஆரம்பித்ததும், ஓலையைச் சரிபண்ணிக்கொண்டார் பிள்ளை. தங்கவேலு மேடைக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டான்.
நாட்டையைக் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனத்தைத் தொடங்கினார்.
போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. விழி மேலே செருகியிருந்தது. அமிருத தாரையாகப் பெருக்கெடுத்த நாதப் பொழிவில் அவன் தன்னை இழந்துவிட்டான் போல் தோன்றிற்று. நாதம் அவனுடைய ஆத்மாவை, காணாத லோகங்களுக்கும் அநுபவங்களுக்கும் இழுத்துச் சென்றது போல் தோன்றிற்று. சளைத்துப்போய் ஆற்றோடு போகிறவனைப் போல், இஷ்டப்படி வெள்ளம் தன்னை அடித்துப்போகும்படி விட்டுவிட்டான் அவன்.
சட்டென்று நாதம் நின்றது. போல்ஸ்காவின் கண் இன்னும் அந்த அநுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தது. மேலே செருகிய விழிகள் கீழே இறங்கிப் பிள்ளையைப் பார்க்க ஒரு நிமிஷம் ஆயிற்று.
டையும் கால் சட்டையுமாகச் சப்பணம் கட்டு அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“ஐயா, ஒரு சின்னச் சோதனை வைக்கப்போறேன்” என்றார் பிள்ளை, வக்கீலைப் பார்த்து.
“என்ன?”
“பாருங்களேன்.”
வக்கீல் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார். பிள்ளையின் முகத்தைப் பார்த்த அவருக்கு ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.
“தஸ்ரிமா…மா” என்று ஆரம்பித்தார் பிள்ளை.
சாமா ராகம் என்றூ அடையாளம் கண்ட வக்கீல், பிள்ளையை வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். ராகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்துகொண்டிருந்தது. நடுநிசியில் தோட்டத்தில் மலர்ந்து மணத்தைப் பெருக்கும் - அமைதியான மணத்தை வீசும் - பவழமல்லியின் நினைவு அவருள்ளத்தில் தோய்ந்தது. அவர் சிரம் அங்கும் இங்கும் விட்டுவிட்டு வரும் அந்த மணத்திற்கு இசைவாக அசைந்துகொண்டிருந்தது. ராகம் வளர்ந்துகொண்டிருந்தது.
யாரோ கையாட்டுகிற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தார் வக்கீல். போல்ஸ்காதான். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்துகொண்டிருந்தது. இரண்டு கைகளையும் எதையோ வாங்கிக் கொள்வதுபோல் நீட்டிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புன்சிரிப்பு. சன்னதம் வந்தவன் மாதிரி அந்த முகம் நினைவிழந்து எங்கேயோ ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.
திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்துவிட்டான். கையை நீட்டியபடியே நின்று கொண்டு, மெல்லிய காற்றில் அடையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். ராகம் இன்னும் வளர்ந்தது.
நின்று கொண்டிருந்தவன் அடியெடுத்து வைத்தான். கைகளை நீட்டி ஏந்திக்கொண்டே அடியெடுத்து வைத்தான். கைகளை நீட்டு ஏந்திக்கொண்டே அடியெடுத்து வைத்தான். நடந்து நடந்து மேடைமுன் வந்ததும், மெதுவாக முழந்தாளிட்டு உட்கார்ந்துகொண்டேன். கையை மேடையோரத்தில்வைத்து முகத்தைப் புதைத்துகொண்டான்.
வக்கீலும் போல்ஸ்கா கோஷ்டியும் போல்ஸ்காவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். போல்ஸ்கா எந்த உலகத்தில் அலைகிறானோ? எந்த வானில் திரிகிறானோ?
அவன் தவத்தைக் கலைத்துவிடப் போகிறோமே என்றூ பயந்தாரோ என்னவோ பிள்ளை. ராக ஆலாபனத்தைக்கூட ஓர் இடத்தில் நிறுத்தாமல் அப்படியே கீர்த்தனையைத் தொடங்கிவிட்டார்.
“சாந்தமுலேகா…” குழந்தையைக் கொஞ்சுகிறது போல அந்த அடி கொஞ்சிற்று. சத்யத்தைக் கண்டு இறைஞ்சுவது போல் கெஞ்சிற்று.
போல்ஸ்காவின் மெய் சிலிர்த்தது. முதுகு ஒரு சொடுக்குடன் உலுக்கியதில் தெரிந்தது.
கீர்த்தனம் முடிந்தது. வாத்தியம் நின்றது.
மேடையில் கைவைத்து, முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த போல்ஸ்கா ஓர் எட்டு எட்டிப் பிள்ளையின் கையைப் பிடித்தான். கெஞ்சுகிறாற்போல் ஒரு பார்வை.
பிள்ளை திருதிருவென்று விழித்தார். தைரியத்தைத் தருவித்துக்கொண்டு குழந்தையைப் பார்த்துச் சிரிப்பது போல ஒரு சிரிப்புச் சிரித்தார்.
“மிஸ்டர் பிள்ளை, மிஸ்டர் பிள்ளை” என்று கையைப் பிடித்துக்கொண்டே கெஞ்சினான் போல்ஸ்கா. குரல் நடுங்கித் தழுதழுத்தது.
“மிஸ்டர் பிள்ளை! வேறு ஒன்றையும் வாசிக்காதீர்கள். என் உயிர் போய்விடும் போல் இருக்கிறது. வேறு வேண்டாம்”
பிள்ளை பாஷை தெரியாமல் விழித்தார்; வக்கீலைப் பார்த்தார்.
”மிஸ்டர் பிள்ளை! இதையே வாசியுங்கள்-இல்லாவிட்டால், என்…என் உயிர் போய்விடும்.”
“பிள்ளைவாள், சாந்தமுலேகாவையே திரும்பி வாசிக்கச் சொல்றார்” என்று நிசப்தத்தைக் கலைக்கத் துணிவில்லாமல் மெதுவாகச் சொன்னார் வக்கீல்.
மீண்டும், “சாந்தமுலேகா!”
“எஸ், எஸ்” என்றார் போல்ஸ்கா.
தலை அசைந்துகொண்டிருந்தது. கீர்த்தனம் முடிந்தது.
“நிறுத்த வேண்டாம்” என்று கெஞ்சினான் போல்ஸ்கா.
“நிறுத்தாதிங்கோ பிள்ளைவாள். ஆவேசம் வந்தவன் மாதிரி இருக்கான். பேசாமே வாசியுங்கோ.”
மீண்டும் அதே நாதம் பொழிந்தது.
ஐந்து ஆறு தடவை திருப்பித் திருப்பிக் கீர்த்தனத்தை வாசித்து முடித்தார் பிள்ளை. கடைசியில் நாதம் மெளனத்தில் போய் லயித்ததுபோல, இசை நின்றது.
போல்ஸ்கா அப்படியே தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். கோயில் மணியின் கார்வையைப் போல அந்த நிசப்தத்தில் அவன் சிரமும் உள்ளமும் ஆத்மாவும் அசைந்தது ஊசலிட்டுக்கொண்டிருந்தன. மூன்று நிமிஷம் ஆயிற்று.
வக்கீல் ஒரு பெருமூச்சு விட்டார். தொண்டையில் வந்த கரகரப்பைப் பயந்துபயந்து கனைத்தார்.
திரும்பிப் பார்த்தான் போல்ஸ்கா.
“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது!”
குழந்தையப் போல் சிரித்துக்கொண்டே நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினார்.
“புரிகிறதா?” என்று கேட்டான்.
“புரிகிறாற்போல் இருக்கிறது” என்றார் வக்கீல்.
“எனக்கு நன்றாகப் புரிகிறது. அது செய்தி. உலகத்திலேயே எந்தச் சங்கீதமும் இந்தச் செய்தியை எனக்கு அளிக்கவில்லை. இரண்டு கைகளையும் நீட்டி அதை நான் ஏந்தி வாங்கிக் கொண்டுவிட்டேன். ஒருவரும், ஒரு கலையும், ஒரு சங்கீதமும் கொடுக்காத செய்தியை நான் இப்போது பெற்றுக்கொண்டுவிட்டேன். நீங்கள் இப்போது என்னை உடலை விட்டுவிடச் சொன்னால், நான் விட்டுவிடத் தயார்” என்றான்.
“என்னாங்க?” என்று கேட்டார் பிள்ளை.
வக்கீல் மொழிபெயர்த்துச் சொன்னார் கேள்வியை.
“என்ன தோன்றிற்று என்று கேட்கிறாரா? மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை! உலகம் முழுவதும் பிணக் காடாகக் கிடக்கிறது. ஒரே இரைச்சல், ஒரே கூட்டல், ஒரே அடிதடி. புயல் வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. கட்டிடம் இடிந்துவிழுகிறது. எங்கே பார்த்தாலும் ஒரே இரைச்சல்… இந்தப் போர்க்களத்தில், இந்த இரைச்சலில், நான் மட்டும் அமைதி காண்கிறேன். மெதுவாக இந்த இரைச்சல் தேய்ந்து, இந்தப் பிரளயக் கூச்சலும் இரைச்சலும் மெதுவாக அடங்கித் தேய்கிறது. ஓர் அமைதி என் உள்ளத்தில் எழுகிறது. இனிமேல் இந்த இரைச்சலும் சத்தமும் யுத்தமும் என்னைத் தொடாது. நான் எழுந்துவிட்டேன். அரவமே கேட்காத உயரத்திற்கு, மேகங்களுக்கும் புயலுக்கும் அப்பாலுள்ள உயர்விற்கு, எழுந்து, அங்கே அமைதியை, அழியாத அமைதியைக் கண்டுவிட்டேன். இந்த அமைதி எனக்குப் போதும். இப்போதே நான் மரணத்தை வரவேற்று, இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன்.”
அமைதியுடன்தான் பேசினான் போல்ஸ்கா. வக்கீல் மொழிபெயர்த்துச் சொன்னார்.
பிள்ளை திகைத்துப்போனார்.
“அமைதியா, அப்படியா தோணித்து இவருக்கு!”
“ஆமாம்.”
“நிஜமாவா?…அப்படீன்னா, நம்ம தியாகராஜ ஸ்வாமியும் அமைதி வேணும்தானே, சாந்தம் வேணும்னு தானே இந்தக் கீர்த்தனத்திலே பாடியிருக்கிறாரு. எவ்வளவு ஏக்கத்தோடு கேட்டிருக்காரு… அதேயா இவருக்கும் தோணிச்சாம்?”
“அப்படித்தானே சொல்கிறார் இவர்.”
“வார்த்தைகூடச் சொல்லையே நான். எப்படி இவருக்குத் தெரிஞ்சுது?”
திகைத்துப்போய் உட்கார்ந்தார் பிள்ளை.
“மிஸ்டர் போல்ஸ்கா, இந்தப் பாட்டும் அமைதி வேண்டும் என்றுதான் அலறுகிறது. நீங்கள் சொன்ன புயல், இடி என்ற மாதிரியில் சொல்லாவிட்டாலும், அமைதி, அமைதி என்று
அமைதியைத்தான் கடைசி லஷ்யமாக இந்தப் பாட்டு இறைஞ்சுகிறது.”
“அப்படியா!” என்று போல்ஸ்காவும் சமைந்துபோய் விட்டான்.
“செய்திதான் இது. நாதத்துக்குச் சொல்லவா வேண்டும்! எந்த வரம்பையும் கடந்து செய்தியை அது கொடுத்துவிடும்” என்றான் அவன்.
“இந்தக் கையை கொடுங்கள். வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்” என்று பிள்ளையின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டான் போல்ஸ்கா.
பிள்ளைக்கும் ஒரு செய்தி கிடைத்துவிட்டது!
******
நன்றி: சொல்வனம்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
5 கருத்துகள்:
எத்தனை தடவை படித்தாலும் இந்த மனிதரின் எழுத்து உயிரைத் தொடாமல் விடுவதில்லை. மிகவும் நன்றி.
thank u.
ti.ja. has no parellel.
miga miga arumai.. ulukkipodum ezhutthu..
பிள்ளையின் சங்கீதத்தைப் போலவே, நமது உயிரையும் கவ்வும் கதையிது! ஏதும் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கராகவே என்னை மாற்றி விட்டார், தி.ஜா.!
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.