என் அறையில் இருந்தேன். அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது. அதன் தாய்மொழி மலையாளம். அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது. கறுப்பிலும் கறுப்பு. அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.
கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும். விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது.
நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று. அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி’ யின் ‘கிங்கிணிக் கவிதைகள்’ என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன். குழந்தை ஒரு கிராமத்தில் L.P. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.
மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன். “படித்தேன்” என்றது. இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன். அது அதிலிருந்து ‘ஸைக்கிள்’ என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும்’ வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்ததும் எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது. அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன். குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.
1. ஜன்ம காரணி
பாரதம்
ஆஹா ஆஹா ஆஹா
கர்ம மேதினி பாரதம்
நம்மளாம் ஜனகோடிதன்
அம்மையாகிய பாரதம்
ஆஹா ஆஹா ஆஹா
2. பல பல நாளுகள்
ஞானொரு புழுவாய்
பவிழக் கூட்டில் உறங்கி
இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே
நாள்கள் நீங்கி
அரளிச் செடியுடே
இலைதன் அடியில்
அருமக் கிங்கிணி போலே
வீசுங் காற்றத்தில் இளகி விழாதே
அங்கனே நின்னு
ஒருநாள் சூரியன்
உதிச்சு வரும்போள்
விடரும் சிறகுகள்வீசி
புறத்து வந்து அழகு துடிக்கும்
பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)
தளிராய் விடர்த்து வீசும்
பனிநீர்ப்பூவில்
படர்ந்து பற்றியிருந்தது.
பூவில் துள்ளும் பூவதுபோலே
பூத்தேன் உண்டு களிச்சு.
அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.
எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு. அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு. வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள்’ என்றே சொல்ல வேண்டும்.
மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது. ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன். ”அதற்கென்ன எழுதலாமே” என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது. ஒரு இசைவெட்டு.
ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி” என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அதன் ’அம்மூம்மா’ (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு” என்று சொல்லிச் சிரித்தது.
மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்”
குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
சிமி
குமி
உமிக்கரி
நஞ்சு
குஞ்சு
மத்தைங்காய்
மணிக்குட்டன்
குணிக்குட்டன்
கொடுவாளை
குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.
மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.
அறை மாத்திரம் இருந்தது.
****
கணையாழி-1992
நன்றி: நகுலன் சிறுகதைகள் காவ்யா பதிப்பகம், தேர்வும், தட்டச்சும்: ஜ்யோவ்ராம் சுந்தர்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
2 கருத்துகள்:
Nagulan = Trance
சுயம் என்பது விஸ்வரூபம் எடுக்கிறது..
நான்கு வரிகளுக்குள் சுயத்தை அழித்துவிடுகிறார்...
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.