சந்திப்பு: தளவாய் சுந்தரம்.
``ஐரோப்பிய கதை சொல்லல் முறைக்கு மாற்றான கதை சொல்லல் முறையை உருவாக்கவேண்டும் என்பதற்கான எத்தனிப்புதான் உப பாண்டவம்’’ - எஸ். ராமகிருஷ்ணன்
பலராலும் சிறந்த பத்து தமிழ் நாவல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படும் உப பாண்டவம் மகாபாரதத்தையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களில் மிக முக்கியமானது. தமிழில் மட்டுமல்லாமல் உலகின் மற்ற மொழிகளில் வெளிவந்திருக்கும் மகாபாரதத்தைப் பற்றிய புத்தகங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது உப பாண்டவத்தின் முக்கியவத்துவம் இன்னும் அதிகமாகத்-தான் செய்கிறது. உப பாண்டவம் வெளிவந்த போது தீராநதிக்காக எஸ். ராமகிருஷ்ணனுடன் அப்புத்தகம் பற்றிய ஒரு உரையாடலுக்கு திட்டமிட்டோம். ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்விட்ட அத்திட்டம் இப்போது சாத்தியமாகியிருக்கிறது. உப பாண்டவம் ஒரு இந்துத்துவா பிரதி, அது கிட்டத்தட்ட நாவலுக்கு பக்கத்திலிருக்கும் ஒரு வடிவம்; நாவல் அல்ல, ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்துவிட்ட ஒரு கதையில் வேலை செய்வதில் ஒரு நவீன எழுத்தாளருக்கு என்ன சவால் இருக்கிறது போன்றப் பல்வேறு விமர்சனங்களுக்கு ராமகிருஷ்ணன் இந்த நேர்காணலில் பதில் சொல்கிறார்.
கேள்வி: உப பாண்டவம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முடிவடைந்துவிட்டது. எனவே, நாம் முதலில் இந்தப் புத்தகம் தொடர்பாக உங்களுக்கு வந்திருக்கும் எதிர்வினைகளிலிருந்து தொடங்கலாம்.
எஸ். ராமகிருஷ்ணன்: இலக்கியவாதிகளிடமிருந்து, சக படைப்பாளிகளிடமிருந்து, முன்பின் தெரியாத வாசகர்களிடமிருந்து, வைதீகமான மகாபாரத பிரசங்கிகளிடமிருந்து, சில குறிப்பிட்ட மத அமைப்புகளிடமிருந்து என்று இந்தப் புத்தகத்திற்குப் பல்வேறு தரப்பான எதிர்வினைகள் வந்திருக்கின்றன. இந்த எதிர்வினைகளை இரண்டு வகையாக நான் பிரித்துப் பார்க்கிறேன். ஒன்று : மகாபாரதம் என்கிற கதையைப் பற்றியது. மற்றொன்று : நவீன எழுத்துமுறைகளைப் பற்றியது. இரண்டாவதைப் பற்றி மிகவும் குறைவானவர்களும், மகாபாரதம் பற்றி அதிகமானவர்களும் எழுதியிருக்கிறார்கள். மகாபாரதம் ஒரு முடிவடைந்துவிட்ட புத்தகம் இல்லையென்பதால் எல்லா எதிர்வினைகளுக்கும் அது இடம்கொடுத்துக்-கொண்டேயிருக்கக்கூடியது. ஒவ்வொருவரும் மகாபாரதத்தை வெவ்வேறு விதமாக உள்வாங்கி-யிருப்பதால் புத்தகம் சார்ந்து பதில் சொல்றாங்களா? அல்லது அவர்களின் ஆதங்கத்திலிருந்து பேசுகிறாங்களா என்று தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. பல்வேறுவிதமான ஆட்களிடமிருந்து எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள், கோபங்கள் மகாபாரதக் கதாபாத்திரங்களைப் பற்றியது. மகாபாரதம் குறித்த எதிர்வினைகள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனாலும் அந்தக் கருத்துக்களை அவர்கள் முன்வைப்பதற்கு என்னுடைய புத்தகம் ஒரு தூண்டுகோலாக இருந்தது என்கிற வகையில் அவற்றை என்னுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக பார்க்கிறேன்.
எழுத்தாளர்களிடமிருந்து வந்த எதிர்வினைகள் ஒரு நுட்பமான வாசிப்பு மகாபாரதத்தில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது; ஒரு காவியம் என்கிற முறையில் அதன் முக்கியத்துவம் என்ன என்பதாக இருந்தது. எதிர்வினைகளில் மிகக்குறைவாகத்தான் நவீன மொழி பற்றிய அல்லது நவீன கதை சொல்லல் முறை பற்றிய வரவேற்புகளைப் பார்க்கிறேன்.
தமிழ்மனம் இந்தப் புத்தகத்தைத் எப்படி எதிர்கொண்டிருக்கிறது என்பதை நான் முக்கிய-மானதாக நினைக்கிறேன். மகாபாரத புத்தகமோ, பிரதியோ இல்லை; தோற்றுவிக்கப்பட்ட ஒரு கலாச்சாரப் பிரதிபலிப்புகள் அல்லது கலாச்சார கூறுகள்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் மகாபாரதம் ஒரு கலாச்சார வடிவத்தில்தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. தனது ஊரின் ஒரு பாறையை ஒருவன் இந்தப்பாறை குந்தியுடைய பாறை என்று பார்க்கிறான். பாறைக்குப் பக்கத்திலிருக்கும் சுனை பீமன் வந்து தண்ணீர் குடித்த சுனை என்கிறார். இதுபோன்ற ஒரு நிலப்பரப்பு அல்லது கலாச்சாரம் வழியாக மகாபாரதத்தைத் தெரிந்துகொள்வதுதான் தமிழ்-நாட்டிற்குள் அதிகமாக இருக்கிறது. உப பாண்டவத்-திற்கு வந்த எதிர்வினைகளில் இந்த கலாச்சார மனங்களின் கூறுகள்தான் அதிகம். இந்தக் கலாச்சார-மனம் உள்வாங்கிக்கொண்ட மகாபாரதத்திற்கும் தொன்றுதொட்டு வரும் மகாபாரதம் என்கிற இதிகாசத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது. என் வரையில் மகாபாரதம் ஒருவிதமான கதைப்பின்னல், ஒரு பொம்மலாட்டம் மாதிரி; ஒரு பாவைக்கூத்து மாதிரி. அது கதையின் எண்ணிக்கையற்ற சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கான ஒரு பெரிய மாயவேலை. நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை ஒரு நிமிடத்தில் மாற்றி எழுதக்கூடிய ஒரு அரூபவிரல் மகாபாரதத்திற்குள் தொடர்ந்து தன்னை நகர்த்திக் கொண்டே இருக்கிறது.
எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அல்லது வெளிவந்திருக்கும் விமர்சனங்களில் யாருமே வியாசர் தொடர்பான கேள்விகளை முன்வைக்கவேயில்லை. நான் குறிப்பாக இந்தப் புத்தகம் தொடர்பான எதிர்வினைகளில் வியாசர் சம்பந்தமானதுதான் முக்கியமானதாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் வியாசர் என்கிற ஆளை நான் முழுக்க வேறுவிதமான ஒரு ஆளாக உருவகப்படுத்திப் பார்த்திருக்கிறேன். 90 சதவிதமான எதிர்வினைகள் வியாசரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. ஒன்றிரண்டு பேர்தான் அவர் எப்படி இந்த புத்தகத்தினுடைய மையமாக இருக்கிறார் என்பதை பார்த்திருக்கிறார்கள். எழுத்து, படைப்பாளி என்ற ரீதியில் வியாசனின் இருப்பும், பங்கேற்பும், செயல்பாடும் மிக நவீனமாக இருக்கின்றது.
கேள்வி: உப பாண்டவம் ஒரு இந்துத்துவா பிரதி என்கிற விதமான எதிர்வினைகள் குறித்து?
எஸ். ராமகிருஷ்ணன்: இதுபோன்ற இந்தப் புத்தகத்தைப் பற்றிய மிகவும் மலினப்படுத்தப்பட்ட எதிர்வினைகளை நான் முக்கியமானதாக நினைக்க-வில்லை. அவற்றில் இந்தப் புத்தகம் சாராத விமர்சனங்கள்தான் அதிகமாக இருக்கிறது. முதலில் மகாபாரதமே இந்துத்துவாவுடைய புத்தகம் கிடையாது.
ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியை ஒரு மதம் கைப்பற்றிவிட்டது என்பதனாலேயே அந்தப் புத்தகம் அந்த மதத்தினுடைய புத்தகமாக ஆகிவிடாது. அந்தப் புத்தகத்திலிருக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இந்துத்துவாவில் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத விஷயங்கள். அதிலிருக்கும் தொல் சடங்குகள் சமஸ்கிருத மயமாக்கப்படாதவை இந்துத்துவா அந்தப் புத்தகத்திற்குள் ஒரு புத்தகத்தை உருவாக்கி அதை தனக்கானதாக எடுத்துக் கொள்ள பார்க்கிறது. எனவே, அதனை இந்துத்துவாவிடம் இருந்து மீட்கக்கூடிய வேலையைத்தான் தொடர்ந்து எழுத்தாளர்கள் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.
நான் அந்த வகையில் குறிப்பாக மகாபாரதத்திற்கும் மதத்திற்கும் இருக்கும் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இதை இந்துத்துவாவால் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது, மகாபாரதத்திற்குள் இருந்து இவ்வளவு சுலபமாக பகவத் கீதையை வெளியில் எடுத்துவிட முடியும் என்பதும். உப பாண்டவத்தில் கிருஷ்ணனைப் பற்றி நான் எழுதியிருக்கும் எந்தப் பகுதியும் எந்த மதவாதிக்கும் உவப்பானதில்லை. சகுனி எந்த அளவுக்கு இதுவரை மோசமான ஆளாக சித்திரிக்கப்பட்டானோ, அப்படியில்லை என்று இந்தப் புத்தகத்திற்குள்ளிருந்து ஒரு பார்வை உருவாகிறது. கிருஷ்ணன் ஒரு சாதாரண ஆளாகத்தான் இருந்திருப்பார் என்கிற பார்வையும் உருவாகிறது. நியாய தர்மங்ளைவிட ரத்த உறவே முக்கியமானதாகபடுகிறது.
ஒரு வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்த அம்மா; அவங்களுக்குக் கண் பார்வை குறைவு. கணவர் வாசித்து கேட்டு உப பாண்டவத்தை அவங்க படித்திருக்காங்க. அவங்க கூப்பிட்டு நான் போயிருந்தப்ப அந்த அம்மா கேட்டாங்க, ```கிருஷ்ணரும் நம்மளைப் போன்ற சாதாரணமான ஆள்தானோ’’. இந்த முடிவுக்கு அவங்க எப்படி வந்தாங்க. கிட்டத்தட்ட 50 வருடமாக கிருஷ்ணரின் தீவிர பக்தரா இருந்த ஒரு ஆளுக்குள், கிருஷ்ணரின் நீல நிறத்தையும் மயிலிறகு கையையும் எடுத்துவிட்டு ஒரு சாதாரணமான ஆளாக அவரை நடமாடவிட முடியும் என்பது முக்கியமானதில்லையா? கிருஷ்ணர் மேல் எந்தக் குரோதத்தையும் உருவாக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கமல்ல. அவர் உங்களுக்கு மிக நெருக்கமானவர், வசீகரமான ஒரு மனிதர் அவ்வளவுதான். அவருக்கும் தெய்வாம்சத்திற்கும் தொடர்பில்லை என்கிறேன். இது இந்துத்துவாவால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது இல்லை.
இந்தப் புத்தகத்தில் அதனுடைய ஆதாரமான பெண்ணாக வரும் மச்சகந்தி ஒரு மீனவப் பெண். நாட்டினுடைய அரசியாக வரும் அவளிடமிருந்துதான் இந்த மொத்த சரித்திரமும் தொடங்குகிறது. பராசுர முனிவர் மச்சகந்தியைத் கூடும்போதும், அவள் பரிமளம் ஆகிவிடுகிறாள். ஆனால், அந்த மச்ச வாசனை எங்குப் போய்விட்டது. நான் அது பராசுர ரிஷியிடம் திரும்பிவிட்டது என்று சொல்கிறேன். ரிஷி ஒரு மச்ச வாசனை உள்ள ஆளாக ஆகிவிடுகிறான். முனிவர் மீது மீன்வாடை அடிப்பதை எந்த இந்துத்துவா ரசிக்கும் ?
மேலும் இந்தப் புத்தகம் முழுவதுமே கால அடுக்கு கலைத்து போடப்பட்டிருக்கிறது. எப்பவுமே மதம் எல்லாவற்றையும் ஒன்று சேர்ப்பதன் வழியாக மட்டுமே தன்னுடைய கதையைக் கட்டும். கலைத்துப் போடப்பட்டதன் மூலமாக முழு மகாபாரதமுமே ஆங்காங்கே மிதந்துகொண்டிருக்கிறது. இது எந்த மதத்திற்கு விருப்பமானதாக இருக்கமுடியும். இதுபோன்ற ஒரு விமர்சனத்தைச் சொல்லக்கூடியவரி-டம் இருக்கக்கூடிய பரிகாசத்திற்குக் காரணம் அவர் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் படிக்காதவர் என்பதால்தான். இந்தப் புத்தகத்தைப் படிக்காதவராக இருப்பது மட்டுமல்லாமல் அவர் மகாபாரதத்தைப் படிக்காதவராகவும் இருக்கிறார். அவர் படித்த ராஜாஜி மகாபாரதம், பார்த்த சிவாஜிகணேசன் நடித்த கர்ணன், என்.டி. ராமாராவ் நடித்த கிருஷ்ணன் படங்கள் ஆகியவற்றிற்கும் என்னுடைய புத்தகத்திற்கும் தொடர்பில்லை.
சாதியம் தொடர்பான எதிர்வினைகளிலும்கூட அடிப்படையே இல்லை. ஏகலைவன் ஒரு வனக்குடியினுடைய தலைவனுடைய பையன். எப்படி ஒரு வனக்குடியினுடைய பையன் இன்று சொல்லப்படக்கூடிய அடிநிலை ஆளாக இருப்பான் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு வனவாசி; அவ்வளவுதான். ஒரு வனவாசியை நீங்கள் உங்கள் சொந்த கருதுகோள்களுக்காக யாராக வேண்டு-மானாலும் உருமாற்ற முடியாது. அன்று வனவாசிகளுக்-கிடையே மேல்கீழ் என்ற சாதிய பேதங்கள் உண்டாகியிருக்கவில்லை. ஒரு இனக்குழுவுக்கும் இன்னொரு இனக்குழுவுக்குமான பிரச்சினைதான் இருந்திருக்கிறது.
கேள்வி:உண்மையில் உங்களுக்கு இந்துத்துவாவுக்கு எதிரான ஆர்வமிருந்தால் எதுஎதெல்லாம் இந்துத்துவாவினு-டைய புத்தகங்களாக இருக்கிறதோ, எந்தப் புத்தகங்களையெல்லாம் இந்துத்துவா கையில் வைத்திருக்கிறதோ அந்தப் புத்தகங்கள் சார்ந்து ஒரு எதிர்வினையைச் செய்யலாம்தானே?
இந்துத்துவா தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு தினமும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மதபிரச்சார புத்தகங்கள் பற்றிச் சொல்ல இவர்களுக்கு ஒரு துளி விஷயம் இல்லை. நாடெங்கும் பகவத்கீதையை வண்டியில் ஏற்றிக்கொண்டுபோய் ஊர் ஊராக வித்துக் கொண்டிருக்காங்க. அது தொடர்பாக சொல்ல இவர்களுக்கு என்ன இருக்கிறது.
கேள்வி: ஒரு எழுத்தாளரின் படைப்புகளில் இந்துத்துவாவின் கூறுகள் இருக்கிறது என்கிற கண்டுபிடிப்புகள் சார்ந்த விமர்சனங்கள் இப்போது அதிகமாக வருகின்றன. பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
எஸ். ராமகிருஷ்ணன்: இந்துத்துவாவை எதிர்க்க வேண்டும் என்பது இன்று ஒரு எழுத்தாளரின் நிலை என்று உருவாகிவிட்டது. மத எதிர்ப்பு, சமூக அக்கறை போன்றவைகளெல்லாம் ஒரு எழுத்தாளரின் குரலாக அமைந்துவிட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பலர் `இந்துத்துவா’ என்கிற பெயரில் பல்வேறு புத்தகங்களுக்கு முத்திரையிடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே இந்த முத்திரைகளைப் பதித்துவிட முடியும் என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. புதுமைப்-பித்தனுடைய புத்தகத்திலிருந்து பல்வேறு வரிகளை உருவுகிற மாதிரி எந்த ஆகச் சிறந்த தமிழ் எழுத்தாளருடைய படைப்புகளிலிருந்தும் என்னால் இதுபோன்று வரிகளை உருவி அவர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவானவர்கள் என்று காட்ட முடியும். ரவீந்திரநாத் தாகூரில் இருந்து 100 வரிகளைச் சொல்ல முடியும். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலிருந்து 150 வரிகளை கிறிஸ்துவ பிரசங்கத்திற்கு ஆதரவாக எடுத்துக்காட்ட முடியும். எந்த எழுத்தாளரிடமும் அவர் என்ன கருதுகோள்கள் வைத்திருக்கிறாரோ அதற்கு எதிரான தனி வரிகள் மிதந்துகொண்டேதான் இருக்கும். ஒரு எழுத்தாளரின் எல்லா வரிகளும் அந்த எழுத்தாளரின் கருத்துக்கள்தான் என்று நினைப்பதே மிகப் பிற்போக்கான விஷயம். இப்போது புதுமைப்பித்தனுக்கு நேர்ந்திருக்கும் அபாயம் எந்த எழுத்தாளருக்கும் நேரக்கூடியதுதான் _ இந்தவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கும்கூட.
ஒரு எழுத்தாளன், அவன் சார்ந்த கலாச்சாரங்களிலிருந்து சுத்தமாக துண்டித்துக் கொண்டு எழுதுவது கிடையாது. தன்னுடைய கலாச்சார பின்னணிகளை அவனும் மற்ற மனிதர்களைப் போலவே நிஜம் என்று நம்பக்கூடிய-வனாகத்தான் இருக்கிறான். அவனுடைய படைப்புகளில் எதெதல்லாம் வலியுறுத்தப்படுகிறது; எவை வலியுறுத்தப்படவில்லை என்பதுதான் முக்கியம்.
கேள்வி: மீண்டும் உப பாண்டவத்திற்கு வருவோம். உப பாண்டவத்தில் வியாசர் ஒரு படகோட்டியாக மட்டுமே வருகிறார்.
எஸ். ராமகிருஷ்ணன்: படகோட்டி என்பது ஒரு முக்கியமான படிமம். ஒரு நதியின் இரண்டு கரைகளுக்கு இடையே தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருப்பதுதான் அவனுடைய வேலை. குறுக்காக கடப்பது, ஒரு நதியைக் கடப்பதற்கான சுலபமான வழி. நான் நதியைக் கடக்க இன்னொரு வழி இருக்கிறது, அதை நாம் மறந்து விடுகிறோம் என்கிறேன். நதியினுடைய பாதையிலேயே போவது என்பது நான் சொல்லும் இரண்டாவது வழி. இந்தப் புத்தகம் அந்த இன்னொரு சாத்தியத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதால் எழுதப்பட்டது. இதில் குறிப்பிடப்படும் படகோட்டுபவன் திரும்பி கரையேறுவதே கிடையாது. அவன் நதியிலேதான் இருக்கிறான். அவன் சொல்கிறான்: ``அந்தப் பக்கம் இருக்கும் எல்லோரையும் நான்தான் கொண்டுபோய் விட்டேன். யாருமே இதுவரை திரும்பி வந்ததில்லை.’’ அப்படியானால் எதற்கு வெளியே இந்த நதி ஓடுகிறது. கதையில் படகோட்டி அதிகமாக ஒரு வார்த்தைகூட பேசுவது கிடையாது. எனில் இந்தக் கதை யாரால் யாருக்கு சொல்லப்பட்டது. கேட்டுக் கொண்டே-யிருக்கும் பயணிக்கு அவன் பதில் சொல்லவேயில்லை. கடைசியில் அந்தப் பயணி கேட்கிறான்: ``இப்போது நாம் எங்கே போகிறோம்’’. படகோட்டி சொல்கிறான்: ``நதியினுடைய துவக்கத்திற்கு’’.
இதுபோல் தொடர்ந்து நதியில் அலைந்துகொண்டிருக்கும் ஒரு படகோட்டியின் படிமம் இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரைக்கும் முதன்மையானது. தண்ணீரில் பிரதிபலித்து அலைந்து கொண்டிருக்கும் ஒரு மலைபோல் தான் மகாபாரதம், உப பாண்டவத்தில் நீந்துகீறது.
கேள்வி: மகாபாரத மொழிபெயர்ப்புகளில் நீங்க படித்த எவற்றையெல்லாம் முக்கியமானதாக நினைக்கிறீர்கள்.
எஸ். ராமகிருஷ்ணன்: கும்பகோணம் ராமானுஜாச்சாரியாருடைய மொழி பெயர்ப்புதான் சமஸ்கிருதத்திலிருந்து மிக நெருக்கமாக இருக்கிறது. மேலும், மூல பாடங்களைச் சரியாகக் கொடுத்திருக்கிறார். ஆங்கிலத்தில் கங்குலி பதிப்பு என்று வங்காளத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. அது சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்குப் போன ஒரு நல்ல மொழிபெயர்ப்பு. அப்புறம் மராத்தியிலிருந்து வந்திருக்கும் கங்காதர் பதிப்பு, இந்தியிலிருந்து வந்திருக்கும் கோரக்பூர் பதிப்பு.
கேள்வி: ஐராவதி கார்வேயின் யுகாந்தா?
எஸ். ராமகிருஷ்ணன்: யுகாந்தா, மகாபாரதம் பற்றி எழுதப்பட்ட ஒரு முக்கியமான புத்தகம். குறிப்பாக விதுரனுக்கும் யுதிர்ஷ்டனுக்கும் இடையிலிருந்தது அப்பா பையன் போன்ற ஒரு உறவுதான் என்று அவங்க சொல்வது குறிப்பிட வேண்டியதுமகாபாரதம் பற்றிய மிகத் தீவிரமான ஒரு கணிப்பு. ஐராவதி கார்வே யுகந்தா வழியாக ஒரு சமூகப் பின்புலத்தைத்தான் முன்வைக்கிறாங்க. கதை சம்பந்தமான தேடுதலை முன் வைக்கவில்லை. அது அவங்களோட நோக்கமும் இல்லை. இது தவிர்த்து ஆங்கிலத்தில் பல்வேறு ஆட்கள் மகாபாரதம் பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்காங்க. குறிப்பாக ஒவ்வொரு மொழியிலிருந்தும் மகாபாரதம் தொடர்பான நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நீள்கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வகையில் மிகவும் சுவராஸ்யம் தரக்கூடிய நாவலாக இருந்தபோதும்கூட காண்டேகருடைய யயாதி ஒரு முக்கியமான நாவல். எம்.டி. வாசுதேவன்நாயருடைய `இரண்டாம்படி,’ பி.கே. பாலகிருஷ்ணனுடைய `இனி நான் உறங்கட்டே’, கன்னடத்தில் வெளிவந்த எஸ்.எல். பைரப்பாவுடைய `பர்வா’ வங்காளத்தில் ஸக்ஞசேனி, கர்ணன் போன்றவை முக்கியமானவை. மகாபாரதப் பிரதியில் உடாடிய ஜீன் கிளாடே காரியர் என்ற நாடகாசிரியரையும் முக்கியமானவராக கருதுகிறேன்.
கேள்வி: பீட்டர் ப்ரூக்கினுடைய நாடகம் பற்றி?
எஸ். ராமகிருஷ்ணன்: பீட்டர் ப்ரூக் பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றாக மகாபாரதத்தைப் பார்க்கிறார். இப்படிப் பல்வேறு இனக்குழுவினுடைய ஒரு கதைதான் பீட்டர் ப்ரூக்கினுடைய மகாபாரதம். அதில் ஒரு நீக்ரோ வருவான், ஒரு ஐரோப்பியன் வருவான், ஒரு சைனிஸ் வருவான். பீமனாக ஒரு கருப்பன் வருவான். அந்த மகாபாரதம் நாம் பார்க்கிற மகாபாரதம் இல்லை. அவரால் மகாபாரதத்தை ஒரு உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றாக பார்க்க முடிகிறது. அப்படிப் பல்வேறு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிற ஒன்றாகத்தான் மகாபாரதம் இருக்கிறது. பீட்டர் ப்ரூக் நிறைய இடங்களைத் தனக்கேற்றபடி மாற்றி அமைத்திருக்கிறார். ஒரு கலைஞன் வேலை செய்வதற்கான நிறைய சாத்தியப்பாடுகள் மகாபாரதத்தில் இருக்கிறது என்பதை அவர் தெரியப்படுத்துகிறார். ஆனால், மேற்கத்திய மனத்தால் பார்க்கப்படும்போது ஒரு துல்லியம் இருக்கும் என்றபோதிலும்கூட, நான் அவர் பார்க்கிற மாதிரி ஒரு மேற்கத்திய மனத்தின்வழி மகாபாரதத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
கே: உப பாண்டவத்தில் நகரம் பற்றிய அவதானிப்புகள் மிகவும் வித்தியாசமானவை. ஒரு நகரத்திற்குள் பல்வேறு நகரங்கள் இருக்கிறது. என்றும் அஸ்தினாபுரத்திற்குள் நுழைய எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறீர்கள்.
எஸ். ராமகிருஷ்ணன்: நகரமென்பதும் கிராமமென்பதும் எங்கு வேறுபடுகிறது. வடிவம்தான். கிராமத்திற்கு பொதுவாக இரண்டு பாதைகள் மட்டும்தான் உண்டு. ஒரு ஊருக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரு பாதையோ அல்லது இரண்டு பாதையோதான் இருக்கும். இதனால் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து வெளியே வரும்போது நீங்கள் எல்லாருடைய கண்களிலும் பட்டுதான் வெளியே வரமுடியும். எண்ணிக்கையற்ற பாதைகள் ஒரு ஊருக்கு எப்போதெல்லாம் உருவாகிறதோ அப்போதெல்லாம் ஒரு நகரம் உருவாகிவிடுகிறது.
கேள்வி: அதுபோல் ஒரே நகரம் பல காலங்களிலும் இருக்கிறது என்கிற மாதிரியான பிரயோகம் இருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணன்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நடந்துபோகும் ஒருவர் நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் போகிறேன் என்று சொல்கிறார். நான் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குள் அவர் நடந்து போகிறார் என்று சொல்கிறேன். அங்கு ஐந்தாம் நூற்றாண்டையோ அல்லது ஏழாம் நூற்றாண்டையோ சேர்ந்த ஒரு இசை வடிவம் இருக்கிறது; ஒன்றாம் நூற்றாண்டிலோ அல்லது இரண்டாம் நூற்றாண்டிலோ வடிவமைக்கப்பட்ட ஒரு கல் விளக்கை போன்ற ஒன்றை பார்க்கிறார். அங்கு கீச்சிடும் கிளிகள் கானக காலத்திலும் தண்ணீரும், வானமும் அநாதி காலத்திலும் இருக்கிறது. நீங்கள் பறிக்கும் ஒரு தாமரை பூத்தமலரைப் போல காலசுருளின் மொக்காக இருப்பதை அறியாமல் மௌனமாக வெளிவாசல் வந்தீர்கள். நான் சொல்கிறேன், நீங்க கோயிலுக்-குள்ளேயே போகலை. காலத்தினுடைய இத்தனை அடுக்குகளுக்குள் போய்விட்டு வருகிறீங்க ஒருவர் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று சொல்வதை மறுக்கவேயில்லை. ஆனால், அவர் சொல்வது எந்த அளவு நிஜமோ அந்த அளவு நிஜம் நான் சொல்வதும். நிகழ்காலத்திற்குள்ளேயே முன்னும் பின்னுமாக பல பிரகாரங்கள் இருக்கிறது. பல அடுக்குகள் இருக்கிறது. காலம் என்பது ஒரு உறைந்த நிலையில் இல்லை. ஒரு கோயிலுக்குள் 2001ஆம் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட தேதியில் நுழையும் ஒருவன் அந்த நாளின் சித்திரங்களை அந்தக் கோயிலுக்குள் பார்ப்பதில்லையே. அங்கு ஒரு கம்ப்யூட்டர் இல்லை, ஒரு தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருப்பதில்லை. அது உங்களை, நீங்கள் அறியாமலே ஒரு வெத்திலையை மடிப்பது மாதிரி காலத்தில் மெல்ல பின்னோக்கி மடிக்கிறது.
கேள்வி: இடாலோ கால்வினோவோட ‘மிஸீஸ்வீsவீதீறீமீ சிவீtவீமீs’ நகரம் குறித்த உங்களுடைய பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததா?
எஸ். ராமகிருஷ்ணன்: ஐரோப்பாவில் நகரத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருமே நகரத்தை அதனளவில் தனியான ஒரு வடிவம் என்று நினைக்கிறாங்க. ஐரோப்பாவில் ஒரு நகரத்தைத் தனியாக மன அளவில் துண்டித்துவிட முடியும். அங்கு ஒரு நகரத்திற்குள் நகரம் சாராத எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இங்கு சென்னையில் காலையில் எழுந்து வயலுக்குப் போகும் ஒரு ஆளும் இருந்து கொண்டுதானே இருக்கிறான். இது ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ சாத்திய-மில்லாதது. ‘மிஸீஸ்வீsவீதீறீமீ சிவீtவீமீs’_ல் முழுக்க ஒவ்வொரு நகரமும் தனித்துவமான நகரம் என்பதை காட்டத்தான் இவ்வளவு நகரங்கள் பற்றி கால்வினோ சொல்கிறார். அவர் தெளிவை முக்கியத்துவப்-படுத்தணும்னு நினைக்கிறார். நான் மயக்கத்தைத்தான் முக்கியத்துவப்படுத்துகிறேன். ஒவ்வொரு நகரமும் அதனுடைய வெளிவடிவங்களைக் கடந்து அதன் ஆழங்களுக்குள் வேறு ஒன்றாக இருக்கிறது என்பதையும் எனக்கு கால்வினோதான் கற்றுத் தருகிறார். ஆனால், எனக்கு நகரங்கள் குறித்த அவதானிப்புகள் முன்னாடியே அராபிய கதைகளைப் படிக்கும்போதே துவங்கிவிட்டிருந்தது. அராபிய கதைகளில் வரும் அத்தனை நகரங்களும் எங்கேயிருக்கிறது. மேப்பில் இல்லை. அப்படியானால் ஒரு நகரத்தைக் புனைவால் கட்ட முடியும் என்பதை ஒரு கதை கற்றுக் கொடுக்கிறது. மகாபாரதம் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு தோன்றியது: `இதில் வரும் நகரங்களுக்கிடையே ஒரு இணைப்பு இருக்கிறது. அதனால்தான் அது ஒருவரை ஒருவர் ஊடுகலக்கிறது, விடமாட்டேன் என்கிறது.’
கேள்வி: மகாபாரதம் ஒரு மிகப் பழைய காவியம். ஆனால், உப பாண்டவத்தில் ஒரு நிகழ்கால அல்லது சமகாலத் தன்மை இருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணன்: புனைவுக்கென்று ஒரு கடந்த காலம் இல்லை. பொதுவாக கதைகளுக்குள் வந்திருக்கும் எல்லாமே காலமற்றதாகத்தான் இருக்கிறது. இந்த முழு புத்தகமும் ஒரு நிகழ்காலத்திற்கு உட்படுத்தப்படனும் என்பதற்காகப் புனையப்பட்டது இல்லை. பதிலாக நிகழ்காலம் என்று நமக்குத் தெரியும் ஒன்றை எப்படி புரிந்துகொள்வது என்பதற்கான எத்தனிப்பை இதிலிருந்து துவங்கலாமென்று நினைக்கிறேன். ஒரு குழந்தையைக் கையில் அணைத்துக்கொண்டு ஒரு பெண் நதி நோக்கி போய்கொண்டேயிருக்கிறாள். போகாதே என்று சொல்லமுடியாமல் ஒருவன் பின்னாடியே போய்க் கொண்டேயிருக்கிறான் சந்தனு. முன். இறந்துபோன ஏழு குழந்தைகளின், ஞாபகம் உள்ளமாக அவன். அவன் ஒரே ஒரு கேள்வி கேட்கிறான்: ``ஏன் குழந்தையை கொண்டு செல்கிறாய்?’’. அந்த ஒரு கேள்வி ஒரு பீஷ்மரை உயிர்ப்பித்துவிடுகிறது. இதைத்தான் நான் சமகாலத்தன்மை என்று நினைக்கிறேன். தொடர்ந்து கேள்வி கேட்க முடியாத ஒரு மௌனமும், கேள்வி கேட்பதன் வழியாக மட்டுமே ஒரு உயிரைக் காப்பாற்றிவிட முடியும் என்பதும், அப்படி உயிர்ப்பித்துவிட்ட பின்னும் இன்னொன்றை இழந்துவிடுவீங்க என்கிற துக்கமும் என்று மூன்றும் கலந்து இருக்கிறது.
நவீனத்துவத்தை நாம் உருவாக்க வேண்டியதில்லை. மிகப் பழைய ஒன்றை நம்முடைய ஆழ்ந்த பார்வைக்கு உட்படுத்தப்படும்போதே அது நவீனத்துவத்தை அடைந்துவிடுகிறது.
கேள்வி: வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் தான் வழக்கமாக ஒரு கதையை உருவாக்குகிறாங்க. நீங்க ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட இன்னொரு கதையிலிருந்து புதிய ஒரு கதையை உருவாக்குகிறீங்க.
எஸ். ராமகிருஷ்ணன்: புனைவுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு மிகவும் துல்லியமாக இல்லை. முன்பு வாழ்வை தீர்மானிக்கிற காரணங்களில் வாழ்தல் என்பது மிக முக்கியமானதாக இருந்தது. உனக்கு இந்த அனுபவங்கள் நேர்ந்து, நீ வாழ்க்கையை அனுபவித்து, உன்னுடைய சந்ததிகள் வழியாக உன்னுடைய கஷ்ட நஷ்டங்கள் வழியாக இந்த வாழ்வினுடைய ஒவ்வொரு சிறுசிறு கிளைகளும் விரிந்துதான் உன் மரம் வெளிப்படும். இன்று அது பாதி வாழ்க்கையாலும் பாதி புனைவாலும் சாத்தியப்பட்டிருக்கிறது. எக்கச்சக்கமான புனைவுகள் என்னுடைய வாழ்வை மிக எளிமையாக்கவும், சிக்கலாக்கவும் செய்திருக்கிறது. முன்பு ஒரு மனிதனுடைய ஆளுமையைத் தீர்மானிக்கக்கூடியது, வாழ்தல் என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், நான் வாழ்தல் மட்டுமல்ல அந்த வாழ்தலைத் தீர்மானிக்கக்கூடியது புனைவுகளும்தான் என்கிறேன். தாத்தா, பாட்டி, போன்றவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களோ அந்த அளவுக்கு புனைவுசார் மனிதர்களும் முக்கியமானவர்கள். எனக்குப் பரிச்சயமில்லாத என்னுடைய தாத்தாவுக்கு தாத்தாவை எனக்கு எவ்வளவு தெரியாதோ அதே அளவுக்குத்தானே தாந்தேவையும் எனக்குத் தெரியாது. அல்லது அவரை தெரிந்து கொள்வதற்கான சாத்தியம் எவ்வளவோ அவ்வளவுதானே என் தாத்தாவையும் தெரிந்து கொள்வதற்கான சாத்தியம். என்னுடைய தாத்தாவை தெரிந்துகொள்வது ரத்த உறவால் நிகழ்வதாகவும் தாந்தோவுடன் அது இல்லாதது என்பதாகவும் உள்ளது. ஒரு கற்பனை. அதனாலேதான் சொல்கிறேன்; வாழ்க்கையில் இருந்து கதைகள் எழுதுவது என்பதும் புத்தகங்களில் இருந்து கதைகள் எழுதுவது என்பதும் வேறு வேறானது இல்லை. வாழ்க்கைக்கும் புனைவுக்கும் இடையிலிருந்த துல்லியமான கோடு அல்லது சுவர் இப்போது இடிந்துபோய்விட்டது. கதைகளை வாழ்க்கை வழியாக சந்திப்பது போல் புத்தகங்கள் வழியாகவும் சந்திக்க முடியும். எந்த எந்த சம்பவங்கள் வாழ்க்கையில் ஒருவனுக்கு சாத்தியமில்லாமல் போகிறதோ அவை புனைவின் வழி அவனுக்கு சாத்தியமாகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு இருஉயிரி போல்தான் எனக்குப் படுகிறான். அவனுக்கு ஒரு வாழ்வு நடப்பிலும் இன்னொரு வாழ்வு புனைவிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. எப்படியெல்லாம் புனைவுக்கும் வாழ்வதலுக்கும் இடையில் ஊடாட்டம் நடைபெறுகிறது என்பதுதான் முக்கியம். ஒரு சிறு பையனுக்கு அவன் பெரியவனாக ஆகுவதற்கு முன்னாடியே ஒரு பெரிய பையனின் சகலவிஷயங்களும் தெரிந்துவிடுகிறதே அது எப்படி? வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அதற்கென்று புனைவைக் கொண்டாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வாழ்வை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை எப்படி நீங்கள் பூடகமாகப் பேசுகிறீர்களோ அதே அளவுக்கு புனைவையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பூடகமாகப் பேசலாம் என்கிறேன்.
கேள்வி: அனுபவத்தின் சாரத்திலிருந்து படைக்கப்-படும் படைப்புதான் வீரியமானதாக இருக்கமுடியும் என்று சுந்தர ராமசாமி தொடர்ந்து சொல்லிவருகிறார். நீங்கள் சொல்வது அதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணன்: அனுபவம் என்பது நாம் பங்கெடுத்துக்கொள்வது. நாம் பங்கெடுத்துக்கொள்ளாத அனுபவங்கள் நம்முடைய அனுபவங்கள் இல்லை என்று சுந்தர ராமசாமி சொல்கிறார். நான் சொல்கிறேன், நாம் பங்கெடுத்துக்கொள்ளாத அனுபவங்களும் நம்முடைய அனுபவங்கள்தான் என்று. நான் உங்களுடன் பேசிக் கொண்டிருப்பது நான் பங்கெடுத்துக் கொள்ளும் அனுபவம். இப்போது வீட்டில் என்னைத் தேடிவரும் ஒரு நண்பன், நான் இல்லாமல் காத்திருப்பது நான் பங்கெடுத்துக்-கொள்ளாத அனுபவம். ஆனால், அந்த அனுபவத்தில் நான் பங்குபெறவில்லையா என்ன. இருப்பின் வழியாக இங்கு என் பங்குபெறுதல் நிகழ்ந்துகொண்டிருக்கிற மாதிரி, இன்மை வழியாகவும் என் பங்குபெறுதல் தொடர்ந்து நடந்துகொண்டே-யிருக்கிறது. என் அனுபவத்திற்கே உட்படாத அனேக விஷயங்கள் எனக்கு மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் தெரிகிறது. உதாரணமாக மரணத்தைப்-பற்றிய நமது அறிதல் யாவும் அப்படித்தானே, இதுபோல் ஒரு சிறிய முன்உதாரணம் ராணுவம். எனக்கும் ராணுவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தூரத்தில் அவர்கள் போகும்போது கேட்ட பூட்ஸ் சப்தம் மட்டும்தான் எனக்கும் அவர்களுக்குமான தொடர்பு. ஆனால், ராணுவம் முழுக்க எனக்குப் பழகியிருக்கே. அதனுடைய சகல விஷயங்களும் எனக்குத் தெரிகிறதே. சுய அனுபவங்களுக்குள் அடங்காத, உங்களுடைய காலத்தில் நடக்காத விஷயங்களை நீங்கள் எப்படி கணக்கில் எடுத்துக்-கொள்வீங்க. சுயஅனுபவம் என்பது முற்றானதல்ல. அது சார்பு நிலையானதுதான். உங்களுடைய தேர்ந்தெடுப்பு-களின்படிதானே உங்கள் அனுபவங்கள் வரிசைப்படுத்தப்-படுகின்றன என்றால் அது புனைவுதானே. அனுபவத்துனுடைய சாரத்தைதான் சொல்லணும் என்பதை இலக்கியத்தினுடைய விவாதமாகவே நான் நினைக்கவில்லை.
கேள்வி: எம்.வி. வெங்கட்ராமின் நித்பகன்னியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எஸ். ராமகிருஷ்ணன்: கன்வ மகரிஷி ஆயிரம் குதிரைகள் ஒரே நிறத்தில் யாகத்திற்காக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு குதிரைக்காகவும் தன் மகளைத் தானமாகக் கொடுப்பார். குதிரை கிடைத்தவுடனேயே அவனுடைய மகள் மீண்டும் கன்னியாகிவிடுவாள். இதுவே நித்பகன்னி; அதை வாசித்ததன்வழி மகாபாரதத்தின் ஊடே இதுபோல் முழு புத்தகத்திலும் கன்னிமை என்பது பற்றிப் பல்வேறுவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிந்தேன். நமக்கு கன்னிமை என்பது ஒரு உடல்சார்ந்த ஒன்றாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆணின் பரிச்சயத்திற்கு அப்புறம் ஒரு பெண் கன்னிமையை இழந்துவிடுகிறாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கன்னிமைக்கும் இந்த நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று மகாபாரதத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பராசுர முனிவர் வரும்போது மச்சகந்தி படகோட்டிக் கொண்டிருக்கிறாள். பராசுர முனிவர் அவளை குழந்தையும் பெற வைத்துவிட்டு கன்னியாகவும் ஆக்கிவிடுகிறார். அங்கிருந்தே கன்னிமைக்குத் திரும்புவதென்பது தொடர்ந்து இருந்துகொண்டே-யிருக்கிறது. திரௌபதி ஐந்து பேருக்கு மனைவியாக இருந்தபோதும் ஒவ்வொருவரிடமும் செல்லும்போதும் கன்னியாகவே இருக்கிறாள். என்றால் நினைவுகள்தான் கன்னிமையுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று தோன்றுகிறது. நினைவு உங்களுக்குள் சேகரமாகாவிட்டால் நீங்கள் தொடர்ந்து கன்னிமையில்தான் இருக்கீங்க. நினைவு எவையெவைகளுக்கெல்லாம் தங்குவதில்லை என்று யோசிக்கும்போது இயற்கையினுடைய எந்த நிகழ்வுகளுக்குமே நினைவு தங்குவதில்லை என்பது ஞாபகம் வருகிறது. உதாரணத்திற்கு, இன்று பெய்யும் மழை நான் நேற்று கொஞ்சம் வேகமாகப் பெய்தேனே என்று நினைவு படுத்திக் கொள்வதில்லை. நினைவு என்பது ஒரு சிருஷ்டி. சிருஷ்டி என்பது மனிதனால் மட்டுமே தொடர்ந்து இயக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை மனிதன் கைப்பற்றி சிருஷ்டி வழியாக ஒரு வடிவம் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இயற்கையில் இருத்தல் என்பது மட்டும்தான் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. நான் இருத்தலுக்குத் திரும்புவதைத்தான் கன்னிமைக்குத் திரும்பிவிடுதல் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு முறையும் மகாபாரதத்தில் பெண்கள் இயற்கைக்குத் திரும்பிவிடுகிறாங்க. குழந்தையைப் பெற்ற ஒரு பெண் குழந்தையைப் பெறாத பெண்ணாகத் திரும்பி விடுகிறாள்.
கேள்வி : உப பாண்டவத்தில் ஒரு செயலைப்பற்றி எழுதும்போது அது நடந்து கொண்டேயிருப்பதாய் எழுதுகிறீர்கள். அதாவது ஒரு செயல் முடிவற்று நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. இதனால் இப்படிக் செய்கிறீர்கள்.
எஸ். ராமகிருஷ்ணன்: அதில் ஒருவிதமான காலநீட்சி இருக்கிறது. அந்தக் காலஓட்டத்தை நீங்கள் எப்படித்தான் தெரியப்படுத்துவீர்கள். நிகழ்ச்சிகள் வழியாகத் தெரியப்படுத்தலாம். ஆனால், நிகழ்ச்சிகளைத்-தான் எடுத்து விடுகிறேனே. ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கு. நீங்க பிரவேசிக்கிறீங்க வெளியில் போய்விடுறீங்க. நீங்கள் விலகி போய்விட்ட பின்னாடியும் தொடர்ந்து நிகழும் அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஒரு பகுதிதான். ஒரு வரி இருக்கிறது. ``அந்த நகரத்திலிருந்து எல்லோரும் போய்விட்ட பின்னரும் நட்சத்திரங்கள் மட்டும் அந்நகரத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன’’ என்று. அந்த நிகழ்ச்சிகளிலிருந்து இவர்கள் விடுபட்ட பின்னரும் நிகழ்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருவகையில் ஒரு துண்டித்-தலை மேற்கொள்ளாமல் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருப்பது ஒரு கவித்துவத்தையும் அந்த வரிக்குக் கொடுக்கிறது.
கேள்வி: முன்பு தேவதச்சனுடன் பேசிக்கொண்-டிருக்கும்போது அவர் சொன்னார்: ராமகிருஷ்ணன், கோணங்கி இரண்டு பேருமே சிறுகதை அல்லது நாவலுக்குள் கவிதையை முயற்சிக்கிறாங்க. ஆனால், சிறுகதையும், நாவலும் உரைநடையின் வடிவங்கள் என்று. இதை எப்படி எதிர்கொள்வீர்கள்.
எஸ். ராமகிருஷ்ணன்: கவிதை எதை தனக்குரிய மூலமாக வைத்திருக்கிறதோ அது கவிதைக்குரியது மட்டும் கிடையாது. கவித்துவமான பார்வை, அல்லது கவித்துவமான புரிதல் என்பது இருக்கிறது. இதுதான் முக்கியம். இது கவிதையில் இடம் பெறுவது போலவே எல்லாவிதமான கலைவடிவங்களிலும் இடம்பெறுகிறது. கவிதை என்கிற வடிவம் சார்ந்து எனக்கு சில தயக்கங்கள் இருப்பதால் அதே விஷயத்தை நான் இன்னொரு வடிவத்தில் உருவாக்குகிறேன்
கதை என்பது ஒரு ஆதி சொல்முறையாக இருக்கிறது. முன்பு கதையினுடைய ஏதோ ஒரு சின்ன முத்திரையாகத்-தான் கவிதை இருந்தது. ஒரு கதை எங்கெல்லாம் முறுகி இன்னொரு இடத்தை அடைகிறதோ அங்கெல்லாம் கவிதை சாத்தியமாகிறது. இப்போது கதைக்கும் கவிதைக்குமிடையிலான மீள்உறவை கொண்டு வரவேண்டியதிருக்கிறது. கதையில் சொல்லுதல் என்பதை கிட்டத்தட்ட ஒரு இசைத்தன்மையுள்ளதாக மாற்றவேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். கோணங்கி இசையையே மொழியாக அல்லது படிமமாக மாற்ற வேண்டுமென்று நினைக்கிறார். எனக்கு ஒரு வாக்கியத்தை எங்கே முடிப்பது, எந்த இடம்வரைக்கும் கொண்டு போவது, இன்னொரு வாக்கியத்துடன் எப்படித் தொடர்பு-கொள்ள வைப்பது போன்ற ஒவ்வொரு சிறு விஷயமும்கூட முக்கியத்துவம் உடையதாகிறது. அதனால்தான் அதில் ஒரு கவிதைத்தன்மை தெரிகிறது. ஏனென்றால் கவிதைதான் இந்த வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்திருக்கிறது.
கதாபாத்திரங்கள் கொண்ட கதை, நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கதை, தொடர்ந்து திருப்பங்களாலும் முடிவுகளை நோக்கியும் போகும் கதைகள் என்றுதான் நாம் பரிச்சியமாகியிருக்கிறோம். நான் இவைதான் கதை என்று சொல்லவில்லை ஒரு சொல்லினுடைய துவக்கத்திலிருந்து இரண்டாவது சொல்லுக்குப் போவதற்கு உள்ளேயே ஒரு கதை பிறந்துவிடுகிறது என்கிறேன். ஒரு கவிதையிலும் இதுதானே நடக்கிறது. தொடர்ந்து அடுத்த அடுத்த வாக்கியம் என்று பின்னிக்கொண்டு போகவேண்டு-மென்று இல்லை. ஒரு வரியிலேயே ஒரு கதையைச் சொல்லிவிட முடியும். அப்படியானால் கவிதையையும், கதையையும் துல்லியமாகப் பிரிக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. பிரிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. `நானே உலகிற்கு முதலும் முடிவுமாக இருக்கிறேன்’ என்று ஒரு வாக்கியம் பைபிளில் இருக்கிறது. இந்த வாக்கியம் எப்படி ஒரு கவிதையினுடைய வாக்கிய-மாகவும் இருக்கிறது. புத்தர் கேட்கிறார் ``நீங்கள் திரும்புகிற எல்லா பக்கமும் நெருப்பு எரிந்துகொண்டே-யிருக்கிறது. அது உங்கள் கண்ணில் படவில்லையா?’’ இது ஒரு கவித்துவமான கற்பனைதானே. கவிதையில்போல் இங்கு ஒரு தத்துவவாதியிடம் மொழி செயல்பட்டிருக்கிறது. கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் விஷயம் இன்னொரு வடிவத்தால் தேர்ந்தெடுக்கப்படும்-போது அது என்னவாக ஆகிறது என்பதுதான் முக்கியம்.
கவிதைக்கு நம்மிடம் பாரம்பரியம் இருக்கிறது. கதைக்கு இல்லை, என்று ஒரு பார்வை இருக்கிறது. ஐரோப்பிய கதைசொல்லும் முறைக்குத்தான் 150 வருட பாரம்பரியம் இருக்கே தவிர, நம்மிடம் கதை சொல்லும் முறை கவிதையைவிட பாரம்பரியமானது. ஒரு சிறுகதை சிறியதாக இருக்க வேண்டும். ஒரே ஒரு கரு இருக்க வேண்டும் என்பது ஒரு இடத்தில் தொடங்கி முடிந்துவிட-வேண்டும். ஐரோப்பாவுக்கு முக்கியம். நம்மிடமிருந்து காலனியாதிக்கம் போனபின்னாடி அவர்களுடைய கதைகளையும் ஏன் நாம் கையில் வைத்துக்கொண்டிருக்கவேண்டும். நாம் கவனமாக அவற்றிலிருந்து விடுபடவேண்டிய எத்தனிப்புகளை மேற்கொள்ளவேண்டும். புராணங்கள், நம்பிக்கைகள், வம்சாவளிகள், வாழ்வியல் சார்ந்து, நிலப்பகுதிகள் சார்ந்து நம்மிடம் பலமான கதைசொல்முறை இருக்கிறது. பிறகு ஏன் நாம் போய் ஐரோப்பிய கதை சொல்லல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஒரு வகையில் எதிர் ஐரோப்பிய கதை வடிவங்களை உருவாக்கவேண்டிய தேவை நமக்கு இருக்கு என்று தான் நினைக்கிறேன். மேலும் வெளி விஷயங்களின் வருகையால் நமக்குள் எது எதெல்லாம் ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றையெல்லாம் கழட்டிவிடவேண்டிய-திருக்கிறது. கிழக்கத்திய மற்றும் அராபிய நாடுகளில் இருந்துபோன கதைகள்தானே உலகம் முழுவதும் கதை சொல்லும் முறையை உருவாக்கியிருக்கிறது. நாம் நமக்கான கதையியலை உருவாக்கவேண்டும். இப்போதே அதற்கான எத்தனிப்புகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஒரு நாவல் என்கிற வடிவத்தில் இதுவரை சொல்லப்பட்டு-வந்த நாவல்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்கான எத்தனிப்பு உப பாண்டவத்தில் நிகழ்ந்திருக்கிறது.
கேள்வி: உப பாண்டவம் ஒரு நாவல் இல்லை, கிட்டத்தட்ட நாவலுக்குப் பக்கத்திலிருக்கிற ஒரு வடிவம் என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே.
எஸ். ராமகிருஷ்ணன்: இது நாவல் இல்லை என்று சொல்லப்படுவதுதான் இதனுடைய வெற்றி. ஐரோப்பிய நேர்கோட்டு கதைசொல்முறை நாவல்களிலிருந்து இது வேறுபட்டது. இதில் முதல் அத்தியாயத்திற்கும் எட்டாவது அத்தியாயத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது. கால அடுக்கு எவ்வளவு சிதறப்பட்டிருக்கிறது. நாவல் என்பது தொடர்பான நம்முடைய மன அமைப்பை நாம் விரிவுபடுத்திக்-கொள்ள வேண்டும். திரைப்படம் மேற்கத்தியர் கண்டுபிடித்த சாதனமாக இருக்கும்-போதும் அகிரா குரோசாவுடைய படங்கள் ஐரோப்பிய படங்களாக இல்லாமல் ஜப்பான் படங்களாகத்தானே இருக்கிறது. தொழில்நுட்ப இயந்திரங்களை மட்டும் எடுத்துக்-கொண்டு அவர் ஒரு ஜப்பானிய திரைப்படத்தை உருவாக்குகிறார். ஜென் மாதிரி அவர் திரைப்-படங்களை மாற்றுகிறார். அப்படியானால் கதையில் ஏன் நம்மால் அதை செய்ய முடியாது.
நன்றி: தீராநதி படம்: சித்ரம் மத்தியாஸ்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
3 கருத்துகள்:
சுவராசியமாக இருந்தது.. எந்த வருஷம் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்
எஸ்.ராவின் மற்ற படைப்புகளைப் போல உபபாண்டவம் என்னை ஈர்க்கவில்லை. ஒருவேளை எனது வாசிப்பனுபவம் சார்ந்த குறைபாடாக இருக்கலாம்.
பகிர்விற்கு நன்றி நண்பரே.. உபபாண்டவம் எனக்கு மிகப்பிடித்தமான ஒரு புத்தகம்.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.