Feb 27, 2010

தலித் இலக்கியம் பற்றி... - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

தலித் இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவில்லை. தமிழில் மாதிரி படைப்புகள் - முக்கியமாக ஒரு நாவல் - தென்படவில்லை.படைப்பு மொழி சார்ந்து நிற்கிறது; மொழி தாண்டிப் பேசுகிறது. ஆக, தலித் இலக்கியம் பற்றி அனுபவம் பெற, உணர்வுகள் பெற எனக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. ஆங்கிலம் வழி சிறிய அளவில் தலித் ஆக்கங்கள் என்று கருதப்படுபவை படிக்கக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் தார்மீகக் கோபம் வலுவாகவும் கதை வலு பலவீனமாகவும் இருந்தன. படைப்பு பட்டென்று பல விஷயங்களைத் தெளிவுபடுத்தக் கூடியது. முழு வாழ்க்கையில் அரசியலுக்கு அகப்படுபவற்றை மட்டுமே பார்ப்பவர்கள், இப்போது படைப்புகள் அற்ற நிலையில், படைப்புகளுக்குரிய விதிகளைப் பொருட்படுத்தாது தலித் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டு போகலாம். தலித் கலைஞன் இந்த வாய் வீச்சுக்களை அப்படியே ஏற்றுக் கொள்பவனாக இருக்க மாட்டான்.

sura 17ஆழமான அனுபவங்கள் ஆழமான படைப்புகளுக்கு வழிகோலும் உத்தரவாதமில்லை.  ஆனால் படைப்புக்குள் ஆழங்கள் இருக்குமென்றால் அவற்றின் பின் ஆழமான அனுபவங்களும் இருந்தாக வேண்டும். இந்த அனுபவ ஆழம் இல்லையென்றால் கற்பனை பயன் இல்லை. அனுபவ ஆழம் இருக்கும்போது சாராம்சத்தை கண்டடைய உபயோகப்படும் கற்பனை, அனுபவ ஆழம் இல்லாத நிலையில் மேலோட்டமான பரப்பில் பரந்து தத்தளிக்கிறது.

மேல்தட்டு வாழ்க்கையைப் பற்றி பல்வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளிக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சாவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கையில் ஒன்றாகவே இருக்கிறது. படைப்பாளி தன் ஜாதியையும் தன் மதத்தையும் தன் வளர்ப்புப் பின்னணிகளையும் தன் தேசத்தையும் மொழியையும் தாண்டிச் சென்று வெற்றி பெற்றிருக்கிறான், தன்னுடைய அனுபவத்தைப் பிறருடைய அனுபவமாக மாற்றும் ஆற்றலையே வெற்றி என்கிறேன். இலக்கிய வரலாறு இந்தத் தடையங்களைத் தந்த பின்பும் இன்றைய மேல்தட்டுப் படைப்பாளிகளால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்வைத்துப் படைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உறுதிப்பட்டுக் கிடக்கின்றன. சமத்துவம் அற்ற நிலையில் வாழ்க்கையில் பிணைந்து கிடக்கும் விதி ஒன்றே இங்கு சமத்துவமாக இருக்கிறது. மேல்தட்டு மக்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் அடித்தட்டு மக்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடையே மிகப்பெரிய கருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. ஜாதியின் இருள் இது. இந்த இருளின் இரு பக்கங்களிலும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை கிளர்ந்தெழுந்திருக்கிறது. ஒரு பக்கம் உழைத்து நாகரிகத்தை உருவாக்கியவர்கள். மறுபக்கம் அவர்கள் உருவாக்கிய நாகரிகத்தின் மேல் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்பி, அவர்களுடைய உழைப்பைச் சுரண்டி தங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் வளர்த்துக் கொண்ட ஆளுமைகள் உழைப்பாளிகளின் நாகரிகத்தை அவமதிப்பது என்பது எண்ணெயைச் சுடர் இழிவுபடுத்துவது போல் ஆகும். சுடரின் பிரகாசம் எண்ணெயின் சக்தியே அன்றி வேறு அல்ல. ஜாதியின் பிளவைத் தாண்டி மேல்தட்டுப் படைப்பாளியால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதுகாறும் அவர்களைப் புறக்கணித்துச் சுரண்டியதுபோல இனி அவர்களைப் பொருட்படுத்திப் பேசிச் சுரண்ட சிலர் முன்வரலாம். பேச்சின் தளங்களில் இருந்து பெரிய படைப்புகள் உருவாவதில்லை.

தலித் மக்கள் தங்கள் மொழியில் தங்களை முன்வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் மேல்தட்டு அறிஞர்கள் சொல்லியிருப்பவையே அவர்களைப் பற்றி அறிய நமக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. தலித் மக்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முற்படும்போது இந்த அடிப்படைகள் தகர்ந்து போகலாம். மேல்தட்டுக் கற்பனைகளின் அபத்தங்கள் இனி வெளிப்படலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் வித்தியாசமான மக்கள் மட்டுமல்ல, முற்றிலும் வேறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய நீதிகள், ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் நாகரிகங்கள் மேல்தட்டினர் பிடித்து வைத்திருப்பதை ஆமோதிப்பவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. தாங்கள் அனுசரித்து வரும் நாகரிகத்தை ஒடுக்கப்பட்டவர்களும் அனுசரிக்கும் சமூகத்தை உருவாக்குவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்று கற்பனை செய்து கொள்ள மேலதட்டு சிந்தனையாளர்களுக்கு இனி உரிமை இல்லை.

சமூகப் பாகுபாடுகளைப் புரிந்துகொள்ளப் பிரிவுகள் உபயோகப்படுகின்றன. ஜாதி மதம் கலாச்சாரம் சார்ந்த பிரிவுகளைப் படைப்பு பிரதிபலிக்கிறது. வேற்றுமைகளை முன் நிறுத்துகிறது. தாழ்வின் கொடுமைகளைப் பதிவு செய்கிறது. மிகப் பெரிய வெப்பங்கள் தலித் இலக்கியத்தின் உள்ளுரையாக அமையலாம். அது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் தலித் கலைஞன் தன் கலையை படைத்தாக வேண்டும். தன்னிடமே பேசிக் கொள்வதைத் தாண்டி, தன் அயலானிடம் பேசிக் கொள்வதைத் தாண்டி, மனித குலத்துடன் அவன் பேசியாக வேண்டும். அபோது மட்டுமே அவன் கலைஞன். தன் துக்கம், தன் ஜாதியின் துக்கங்கள், தன் மதத்தினரின் துக்கங்கள், தன் இழிவுகளின் அவலங்கள் இவை எந்தப் பின்னணியில் இருந்து கிளம்பினாலும் சரி, என்ன என்ன கோலங்கள் கொண்டாலும் சரி, மனித துக்கம் என்ற பெரிய தடாகத்தில் அவை வந்து கலந்தாக வேண்டும். வேற்றுமைகளின் அவலத்திலிருந்து ஒற்றுமைகளின் அழகுகளுக்கு அவை வந்தாக வேண்டும். இவை படைப்பின் நியதிகள், தன் வாழ்க்கையைச் சார்ந்து அவன் படைக்காமல், தன் வாழ்க்கையை வைத்து அவன் ஜோடனை செய்தால் காலத்தின் முன் அந்த னோடனைகள் உதிரும்.

வாழ்க்கையைப் பற்றி அறிய முழு வாழ்க்கையை உள்ளடக்கும் படைப்புகள் தேவை. இதுகாறும் நாம் அறிந்திருக்கும் வாழ்க்கை பெரிதும் மேல்தட்டு வாழ்க்கையே. விடுபட்டுப் போன மிகப்பெரிய பகுதி ஒன்று அதன் சுவடுகளைப் படைப்பில் பதிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படைப்புகள் முன் வைக்கும் பார்வை வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய பார்வையை விரிவு படுத்தி நம் அடிப்படைகளையே மறு பரிசீலனை செய்ய நம்மை வற்புறுத்தலாம்.

தலித் மக்களிடையே எழுத்துக் கலைஞர்கள் தோன்றி அவர்கள் கலை வெற்றியை சாத்தியமாக்கும் போது, தலித் கலை என்ற அடை மொழிகள் உதிர்ந்து, அவர்கள் உருவாக்கும் படைப்புகள் பேரிலக்கியங்களுடன் இணைந்து காலத்தை தாண்ட முன்னும். காலத்துடன் இணைய வலுவற்றவை தலித் வாழ்க்கையை அரசியல் நோக்கில் எந்திர ரீதியாகப் பிரதிபலித்து, பிரச்சாரத் தளத்தில் மூழ்கி, மேடைப் பேச்சுகளில் அடிபட்டுக் காலத்தின் முன் உதிரும். சாராம்சத்தைக் கண்டடைவதுதான் கலை என்ற நியதியிலிருந்து படைப்பாளி ஒருபோதும் தாண்டிப் போக முடியாது.

சிலேட், 1992

*********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Unknown on March 10, 2010 at 5:50 PM said...

Very good comment, SU.RAA is a genius in tamil writing.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்