கலாப்ரியா
கறுப்பேறிப் போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.
காலேஜ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறள்,
பொன்மொழிகள்
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் - என
எழுதியெழுதி அழிப்பான்
எழுதுவான்.
படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விளம்பரம் ஒட்டிய
வெட்டும்புலி தீப்பெட்டியும்
உத்திரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.
அப்பா வெறுமனே
பத்திரப்படுத்தி வந்த
தாத்தாவின் - பல
தல புராணங்கள்
சிவஞானபோதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவர் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில், பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விளக்கு மாடத்தில் அடைத்ததுபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.
முதல்ப்பிள்ளையை
பெற்றெடுத்துப் போனபின்
வரவே வராத அக்கா
வந்தால்-
தொட்டில் கட்ட
தோதுவாய் - அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள். . . . . . . . . . . . .
நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து -
இதில் தூக்கு மாட்டித்தான்
செத்துப்போனார்
சினேகிதனின்
அப்பா.
* * * * *
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
4 கருத்துகள்:
wow excellent poem
thanks for sharing
உத்திரத்தை சுமந்த கவிதை...
உத்திரத்தின் உதிரத்தையும் சுமக்கிறது.
Thanks for the new template Boss!
வனம் புகுதல் தொகுப்பில் உள்ள கவிதை என்று நினைக்கிறேன். சுகுமாரன் அதன் முன்னுரையில் கலாப்ரியாவின் கவிதைகளை புரிந்து கொள்ள இரு சாவிகளைக் தருகிறார், ஒன்று "சாதாரணனின் கலகம்" மற்றும் "பார்வையாளனின் பதற்றம்". எவ்வளவு அற்புதமாக பொருந்துகிறது பாருங்கள், அன்றாட சித்திரங்களை அடுக்கிச் செல்லும் போக்கின் இறுதியில் நம்மை திடுக்கிடச் செய்யும் காட்சியில் முடிக்கிறார். அருமை!
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.