Feb 26, 2010

கலையின் பிறப்பு - க. நா. சு.

ka-na-su

க. நா. சு.

கவிதை

எனக்கும்
கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே

போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்

துறைகள்
தோன்றின - நாடகமும் நாவலும் நீள்
கதையும் கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!

அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்திதராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்
தரும். கலையின்

பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

“எளிய பதங்கள், எளிய சந்தம்” என்றும் “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்” என்றும் சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய பாரதியார் புதுக்கவிதைக்குரிய லக்ஷணங்களை எடுத்துச் சொன்னார். எளிமை, தெளிவு என்கிற இரண்டு லக்ஷணங்களையும் பின்பற்றிப் பின்னர் கவிகள் சிலர் எழுதினார்கள். செய்யுள் சிறப்பாக அமைந்த இவற்றிலும் கூடப் புதுக்கவிதை பிறந்துவிடவில்லை. “பாரதிக்குப் பின் இவர்தான் மேலான கவி, உயர்ந்த கவி” என்று அழுத்தமாகச் சுட்டிக்காட்டும்படியாக ஒரு கவியும் தோன்றிவிடவில்லை. தமிழ்க் கவிதை ஊற்றே வறண்டு போய்விட்டதோ என்று சொல்லும்படியாக இருந்தது. சிறந்தது என்பதெல்லாம் பழசை அப்படியே நகல் எடுப்பதாக, பாரதியாரின் அடியையொற்றியே வந்ததாக இருந்தது. இன்றைய சமூக, ஆன்மீகச் சூழ்நிலையைச் சித்தரிக்க முயன்ற கவிகளும்கூட இன்றைக்கென்று உண்மையாகி, நாளைக்கும் நிலைக்கக்கூடிய கவிகளைச் செய்து தரவில்லை. தோன்றிய கவிதைகளில் பெரும்பாலானவை ஊமையாகவும் குருடாகவும் நொண்டி முடமாகவும் இருந்தது என்று சொல்வது மிகையேயாகாது.

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும் மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போது தான் உயர் கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி, வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பதுதான் கலை ரகசியம். எப்படியோ வந்தது - பாரதியார் உயர்ந்த கவியானார். இப்படித் தோன்றிய வேதத்தால்தான் கம்பனும் இளங்கோவடிகளும் காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் மாணிக்க வாசகரும் பட்டினத்தடிகளும் ஜெயங்கொண்டாரும் கோபால கிருஷ்ணபாரதியாரும் தாயுமானவரும் அவரவர் அளவில் உயர்கவிகள் ஆகிறார்கள். இந்தக் கவிதை உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது - ஆனால் சூக்ஷமமாக இது இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர் கவிதையின் உயிர்இது.

இந்தக் கவிதை உண்மைக்கு, இன்றைய வாரிசாக, புதுக்கவியும் புதுக்கவிதையும் தோன்ற வேண்டும். பாரதியார் காலத்தில் பொது வாழ்க்கை சிக்கலானதாகி விட்டது என்று சொன்னால் சுலபமாக ஏற்றுக்கொண்டு விடலாம்போலத் தோன்றும். பாரதியார் மக்களிடையே பொதுவாகவும் தனித்தனியாகவும் கண்ட குறைகளுக்கு எல்லாம் சுதந்திரமின்மையே காரணம் என்று நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டால் அக்குறைகள் தானாகவே நீங்கிவிடும் என்றும் நம்பினார். சுதந்திரம் வந்துவிட்டது, ஆனால் தனிமனிதர்களின் குறைகள் பன்மடங்காக அதிகரித்துவிட்டதுபோல் இருக்கிறது. பொதுவாழ்வு, சமுதாயம் பற்றியோ கேட்கவே வேண்டாம். பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் மட்டுமல்ல; நல்லது தீயது அடிப்படையிலும் ஆன்மீகப் பாமார்த்திகத் துறைகளிலும் போலிகளும் மோசடிகளும் மலிந்துவிட்டன. குறைகள் நிறைந்து நிற்கின்றன.

கவிதை மனிதனின் குறைகளைப் பற்றி மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம். குறையைச் சொல்வதும் நிறையைச் சொல்வதும் ஒன்றுதான். ஒன்றைச் சொல்லி ஒன்றைவிட முடியாது. இலக்கியத் துறைகள் எல்லாமே சமுதாயம், தனிமனிதன் என்கிற இரண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளையும் சொல்லியும் சொல்லாமலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்ப முடியாத நியதி.

இந்தக் காலத்துக்கான கவிதை உண்மையை இந்தக் காலத்துக்கேற்ற சிக்கலான வார்த்தைச் சேர்க்கைகளில், நிரந்தரமாக்குவதற்கு, அழியாத இலக்கிய உண்மையாக்குவதற்கு, புதுக்கவிதை தேவை. அப்போதுதான் சங்க காலத்தின் சிறந்த கவிதைச் சிருஷ்டிகளையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் தனித்தன்மையை நாமும் இன்று எட்ட முடியும். (இலக்கியரீதியாகத்தான் சொல்லுகிறேன்) இன்றும் ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்ப ராமாயணமும் தோன்ற முடியும். (அது கவிதை ரூபத்தில் இருக்கக் கூடாது என்று விதி ஒன்றும் கிடையாது. நச்சுப்போன, நைந்து நொந்த செய்யுள் உருவத்தில் புதுக்கவிதை இருக்க முடியாது என்பது தெளிவு. இது சாத்தியமாவதற்கு நம்மிடையே புதுக்கவிதைக்கானதோர் இலக்கணம் வேண்டும்.)

இலக்கியத்தில் இது கவிதை யுகம் அல்ல - கவிதை யுகம் கடந்துவிட்டது - என்றுதான் பெருவாரியான மொழிகளில் கருதப்படுகிறது. காவியங்களும் சிறுகவிதைகளும் ஒரு காலத்தில் சாதித்து வந்த கலைச் சாதனையைச் சிறுகதைகளும் நாவல்களும் வசனத்தில் சாதித்துவிட முடியும் என்று சென்ற நூறு ஆண்டுகளில் உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. எனினும் கவிதை அநாவசியம் என்றோ, இனி அதற்கு ஒரு காலம் தோன்றாது என்றோ யாரும் கருதுவதில்லை. மீண்டும் இலக்கியத்தில் கவிதை யுகம் தோன்றலாம். இதற்கு அரணாக ஜெர்மன் மொழியில் ரில்கேயின் கவிதைகளும் ப்ரெஞ்சு மொழியில் பாதலெர், ரிம்போ, மல்லார்மே, வாலேரி இவர்களின் கவிதைகளும் ஆங்கில மொழியில் யேட்ஸ், எலியட், டைலன் தாமஸ், எஸ்ரா பவுண்டு இவர்களின் கவிதைகளும் சுட்டிக்காட்ட உபயோகிக்கப்படும்.

தமிழைப் பற்றியவரையில், தமிழ்க் கவிதை செத்துவிட்டது என்று நிச்சயமாகவே சொல்லிவிடலாம். செய்யுளியற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம் என்றாலும், செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம், அணி என்றும் அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனை, சீர், தளை என்றெல்லாம் நைந்துபோன செய்யுள் வார்த்தைகளுக்கு மீண்டும் மீண்டும் உயிர் தந்து, நைந்துபோன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க் கவிதைக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந்தார்கள். கவிதையொடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள். பக்தி விசேஷம், இசை முதலியவற்றினால் முந்திய பாரதியாரும் சமூக வெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழ்க் கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசை நயமும் ஓரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனால் சங்க நூல் சிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு ஒன்றும் தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்! தமிழில் புதுக்கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகள் ஒழிந்து மிகப் பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம்.

தமிழை விட்டுவிட்டு, வேறு மொழியில் புதுக்கவிதை செய்தவர்களின் நிலைமையைச் சற்று நோக்கினால், விஷயம் புரியும். பல ஐரோப்பிய மொழிகளில் கவிதையைச் சாகவிட்டுவிடுவதில்லை என்று பல புதுக்கவிகள் பிடிவாத மாகவே புதுக்கவிதை செய்துவருகிறார்கள். இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலும் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும் இன்றைய புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சுநடை அடிப்படைச் செய்யுள் வேகமும் எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக் கிடக்கின்றன.

உதாரணமாகப் பார்த்தால் - டி.எஸ். எலியட் என்பவர் புதுக்கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றால், அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு கோணத்தில் நின்று இன்றைய வசன - கவிதை நடையை மேற்கொண்டு, அதற்கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு பேச்சுச் சந்தத்துக்கிசைய கவிதை செய்கிறார். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்துவிடுகிறார். ஆனால் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள்வதும் இல்லை. இன்றையப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல் என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிறார். அதேபோல எஸ்ரா பவுண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரோவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிகளையும் ஜப்பானிய ஹெய்க்குகளையும் தன் மரபாக்கிக்கொண்டு புதுக்கவிதை செய்கிறார். அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி, வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றிபெற்றார். இன்றைய மொழிகள் பலவற்றிலுள்ள புதுக்கவிதைக்குப் பொதலெர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும் வால்ட் விட்மனையும்தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர்களையெல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர, விவாதிக்கவில்லை. ஏனென்றால் தமிழில் புதுக்கவிதை என்கிற விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆனால் இவர்கள் செய்திருப்பது என்னவென்றால், அன்று ஆட்சி செலுத்திய மரபைத் தகர்த்தெறிந்துவிட்டு ஒரு மிகப் பழைய கவிதை மரபை ஆதாரமாகவைத்து, இன்றைய பேச்சு வள அடிப்படையிலே புதுக்கவிதை செய்ய முயன்றிருக்கிறார்கள். அவரவர்கள் மொழியிலே அவர்களுடைய புதுக்கவிதை முயற்சிகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலே இப்போது புதுக்கவிதை திடமான ஒரு இலக்கியக் குழந்தையாகக் காட்சி தருகிறது.

தமிழில் புதுக்கவிதையின் அவசியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்துவிட்டது. (அல்லது செத்துக்கொண்டிருக்கிறது. இன்று கவிகள் எழுத வருகிறவர்கள் சொல்லடுக்குப் பாடை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்) புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக்கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்வம் பெற்று விமரிசனத்தைத் தாங்கள் கூறிய விஷயமாக முடியும். தேவையை உணர்ந்து பலரும் சமீபகாலத்தில் இந்தப் புதுக்கவிதைச் சோதனையைச் செய்து பார்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவும் வேண்டும். அகவலுக்கே ஒரு புதுவேகம் தந்து இசைக்கவி சுப்பிரமணிய பாரதியார், வசன கவிதை என்று பெயரைக் காட்டிக் குற்றம் சாட்டி ஒதுக்கிவிடச் சிலர் முயலுகிற முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தார் பாரதியார். கவிதை மரபை ஒடித்து வெளியேற வேண்டிய அவசியத்தை அவரும் உணர்ந்திருந்தார் என்பதற்கு அவருடைய வசன கவிதைகளே போதுமான சான்று. பாரதியாரைப் பின்பற்றி இரண்டொருவர் -முக்கியமாகக் காலஞ்சென்ற கு. ப. ராஜகோபாலன் - வசனகவிதை செய்து பார்த்தார்கள். புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்றே அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம். ரகுநாதன் புதுமைப்பித்தனின் முயற்சியைப் பின்பற்றி சிறிதளவு வெற்றிபெற்றிருக்கிறார். நாட்டுப்புறத்தான் மெட்டிலே நாகரிகக் கவிதை செய்யப் பார்த்த, இன்றையப் புகழேந்தி கொத்தமங்கலம் சுப்பு. இவருடைய கவிதை முயற்சிகளும் ஓரளவுக்கு வெற்றிபெற்றன. இன்னும் சிலரும் புதுக்கவிதை முயற்சிகள் செய்திருக்க லாம். அவை என் கண்ணில் பட்டதில்லை என்பது அவர்கள் குற்றமாகாது. என் படிப்புக்கெட்டிய வரையில் இவைதான் புதுக்கவிதை நோக்கி இன்றுவரை செய்யப்பட்டிருக்கும் புது முயற்சிகள்.

நான் தமிழில் எழுத ஆரம்பிக்கத் தொடங்கிய நாட்களிலேயே, அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் புதுக்கவிதை பற்றிய சோதனைகளில் ஈடுபட்டு செய்து பார்க்க முற்பட்டதுண்டு. புதுமைப்பித்தன் நடத்திய மலர்களில் ஒன்றிரண்டில் என் கவிதைச் சோதனைகள் வெளியாகியும் இருக்கின்றன. ‘சூறாவளி’யிலும் ஏதோ கொஞ்சம் செய்து பார்த்தேன். ஆனால் தொடர்ந்து முறையாகச் செய்து பார்க்கவும் செய்து முடித்ததை வெளியிடவும் சமீபக்காலத்தில் ‘சரஸ்வதி’ மூலம்தான் முடிந்தது. ‘மயன்’ என்கிற புனைபெயரில் என் புதுக்கவிதை முயற்சிகள் சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன். இந்தக் கவிதை முயற்சிக்கு இலக்கணத்தை முன்கூட்டியே தீர்மானித்துவைத்துக்கொண்டு அவ்விலக்கணத்துக்கு ஒப்ப நான் கவிதை எழுதவில்லை. என் புதுக்கவிதைக்கு ஒரு இலக்கணம் உண்டானால் இலக்கணம் இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அதை இலக்கியமாக உணர்ந்தே நான் எழுத முற்படுகிறேன் - அதைப் பின்னர் நிர்ணயித்துக்கொள்ளலாம். இப்போது கவிதையில் நான் செய்ய முயற்சித்ததெல்லாம் விஷயத்தையும் வார்த்தைகளையும் உள்ளத்து உண்மையிலே குழைத்து, காதும் நாக்கும் சொல்லுகிற கட்டுபாடுகளுக்கும் கண் தருகிற கட்டுபாடுகளுக்கும், உட்பட்டு எழுதுவது என்கிற காரியம்தான் இன்றைய உண்மையை நிரந்தரமாக்குகிற காரியம்தான் என் முயற்சி. இன்றைய என் அனுபவத்தை வார்த்தைகளால், பேச்சு வழக்கு வார்த்தைகளால் பேசும் சத்தத்தில் இலக்கியமாக்க, கவிதையாக்க முயலுகிறேன். பயன் கழுதையா குதிரையா வசனமா கவிதையா இலக்கியமா பிதற்றலா என்று சிலர் கேலிசெய்பவர் இருக்கலாம். சோதனை என்று சொல்லும்போது இதற்கெல்லாம் பயப்பட்டுக் கட்டாது. இலக்கியச் சோதனைகள் பலவும் ஆரம்பத்தில் கேலிக்கிடமாகவேதான் காட்சியளித்தன. புதுக்கவிதை தோன்றுகிறதா என்பதுதான் தீர்மானமாக வேண்டிய விஷயம். தோன்றாவிட்டால் முயற்சியையே மறந்துவிடலாம். தோன்றிவிட்டால் நல்லதுதான். புதுத்தமிழ் இலக்கியம் மேலும் வளம்பெறும்.

என் புதுக்கவிதை முயற்சிகள் கவிதையாகவும் இலக்கணமாகவும் உருவெடுக்க, வாசகர்கள் ரசிகர்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பலன் தரப் பல காலமாகலாம் என்பதையும் அறிந்தேதான் நான் இந்தக் கவிதைச் சோதனையைச் செய்து பார்க்கிறேன். நம்முடைய இன்றைய தினசரி வாழ்விலே இடம்பெறுகிற விஷயங்கள் எல்லாமே உவமைகள், உருவகங்கள், ஏக்கங்கள், ஆசைகள், வார்த்தைகள், மௌனம் எல்லாமே என் கவிதைக்கு விஷயம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக இருப்பது போலவே என் கவிதையும் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லைபோல இருக்க வேண்டும். அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க ஒரு தரம் படிப்பவருக்கும் ஒரு வேகம் ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக்கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும். இந்தப் புதுக்கவிதையிலே என்றுதான் எண்ணுகிறேன். இலக்கணம் என்று எதையும் சொல்லிக் கட்டுப்படுத்தப்படக் கூடாதது கவிதை - அது தூர விலகிப் போய்விட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம். இலக்கண அமைதிகள் பற்றி சிருஷ்டி சமயத்திலே இலக்கணத்துக்கோ அதன் இடர்ப்பாடுகளுக்கோ இடமே கிடையாது.

பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம் - புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக -எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்துக் கவிதை - நல்ல கவிதை -அந்தக் காலத்துச் சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி. இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாததுபோல இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை - உயர்கவிதை என்று நாம் முடிவுகட்டிவிடலாம். சிலப்பதிகாரத்தில் இந்த அடிக்கு இன்னார் இன்ன உரை எழுதினார் என்பதோ கம்பராமாயணத்தில் எந்தப் பாடபேதம் சரியானது என்பதோ குறளில் இந்த வார்த்தைக்கு அன்று அந்த அர்த்தம், இன்று வேறு அர்த்தம் என்ன என்பதோ புலமைக்குச் சான்றாகலாம். கவிதையை ரசித்ததற்குச் சான்றாகாது. கவிதைக்கு உரை அவசியமே இல்லை; எந்தக் கவிதையையுமே அர்த்தப்படுத்திக்கொண்டாக வேண்டும் என்பதில்லை. அனுபவித்தால் போதுமானது. ஆம், ஆம், ஆம், ஆம் என்று மேலே குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் கூறிக் கொள்வதுதான் நல்ல கவிதை. ரசிகன் தன் கவிதை அனுபவத்துக்கு ஆதாரமாகக்கொள்ள வேண்டிய காரியம்.

‘புதுக்கவிதை’ மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று நான் வாசித்து அனுபவிக்கும்போது புதுக்கவிதைதான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி உண்டு என்பது எல்லா மொழி இலக்கியங்களிலுமே நிதரிசனமாகக் காணக்கிடக்கிற உண்மை. சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல; இன்றும் புதுக்கவிதை தான். அத்தோடு ஒப்பிடக்கூடிய கவிதை இன்று தோன்ற வேண்டுமானால் புதுக்கவிதை முயற்சிகள் மிகமிக அவசியம். அவை வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டும்.

இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

(சரஸ்வதி ஆண்டுமலர் 1959இல் வெளிவந்த கட்டுரை)

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

மதுரை சரவணன் on February 28, 2010 at 10:26 PM said...

கவிதைகள் பற்றி தெளிவான விளக்க கட்டுரை. நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) on December 19, 2011 at 11:13 PM said...

நல்லதொரு கட்டுரையை எமக்கு பரிசளித்து மகிழ்வித்தீர்கள். இந்தப் பதிவை நான் எனது வலைச்சரத்தில் கோர்த்து பெருமைப் பட்டிருக்கிறேன். மிக்க நன்றி. :)

கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் பதிவை நான் பகிர்ந்த சுட்டி.

http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html

K. on June 19, 2013 at 11:29 AM said...

thanks to your good work
I would not have read this.where will i search for 1959 Saraswati issue,sitting in Ahmadabad where there are none to accept my Tamil books even if given free! I enjoyed reading thsi and got an idea what are new poems. bala

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்